| 
											
											
											
												| 
                                                    
                                                    
                                                    
												 | 
                                            
                                            
											
											
												 இன்று தமிழ்ச் சிறுகதையின் வளர்ச்சி பன்னாட்டுக் தரத்தோடு ஒப்பிடுமளவுக்கு வளர்ந்துள்ளது. புதுமைப்பித்தன், கு.ப.ரா, மௌனி, பிச்சமூர்த்தி, லா.ச.ரா போன்றவர்கள் தமிழ்ச் சிறுகதையின் விரிவுக்கும் ஆழத்துக்கும் காரணமாக இருந்தார்கள். இவர்களுக்குப் பின்னால் வந்த ஜானகி ராமன், அழகிரிசாமி, ஜெயகாந்தன், சுந்தரராமசாமி போன்றவர்கள் மேலும் சிறுகதை மரபை மடைமாற்றங்களுக்கு உட்படுத்தி வளம் சேர்த்தார்கள். இந்த மரபு 1960களுக்குப் பின்னர் செழுமையுடன் அதிவேகம் கண்டது.
  வண்ணநிலவன், வண்ணதாசன், பூமணி  போன்ற தலைமுறை எழுத்தாளர்களின் தமிழ்ச் சிறுகதையில் வாழ்வியலின் பல்வேறு கூறுகளும் நுட்பமாகவும் ஆழமாகவும் வெளிப்பட்டது. நவீன இலக்கியம் வேறுபட்ட தன்மைகளையும் களங்களையும் உள் வாங்கியது. இந்த ரீதியில் கவனிப்புப் பெறுபவர் வண்ணதாசன்.
  "என் சிறுகதைகள் எல்லாமே என்னைச் சுற்றி நடந்த விஷயங்களை வைத்தே எழுதியிருக்கின்றேன். 99 சதவீதம் உண்மைக் கதை தான். சிலசமயம் நிஜப் பேரு போடாம, சிலசமயம் போட்டு எழுதியிருக்கிறேன்" என்று ஒரு முறை ஒரு பேட்டியில் வண்ணதாசன் குறிப்பிட்டிருப்பது அவர் எழுத்தைப் புரிந்து கொள்வதற்கான சாட்சியமாக நமக்கு உள்ளது.
  1962-ல் 'புதுமை' எனும் பத்திரிகையில் 'ஏழையின் கண்ணீர்' என்ற முதல் சிறுகதை பிரசுரமானது. தொடர்ந்து கதை எழுதுவதில் ஆர்வம் கொண்டு எழுதத் தொடங்கினார். 1964, 65களில் தீபம் இதழில் கதைகள் பிரசுரமாயின.
  வண்ணதாசனின் கதைக்களம் நமக்கு மிகவும் நெருக்கமானது. நம்முன் சதா காணப்படும் சாதாரண உலகம். வாழ்க்கையை அதன் போக்கில் எதிர்கொள்ளும் மனிதர்கள், அவர்களுக்கிடையிலான உறவுகள், முரண்கள் மோதல்கள், அவை ஏற்படுத்தும் அதிர்வுகள், சோகங்கள் என வட்டச் சூழலில் சிக்குண்ட மனிதப்பாடுகளை, அதன் இயல்பு இயக்கத்தில் கோர்த்துப் புனையும் பண்புதான் வண்ணதாசனின் படைப்பாளுமை.
  "என் கதைகளில் குடும்பம் என்ற விஷயமே திரும்பத் திரும்ப வந்துகிட்டிருக்கு. என்னுடைய பழக்க வழக்கம் எல்லாமே குடும்பம் சார்ந்த விஷயமாகவே போச்சு. அதிகமாக வெளிப்பழக்கம் இல்லாம, ரொம்ப நெருக்கமாக இருக்கவங்ககிட்ட மட்டும் பழகிறது வைக்கிறது, மத்தபடி வீட்டுக்குள்ள இருக்கிறது, அவங்க சொல்கிற விஷயங்கள் தான் நான் அவங்களிடம் தெரிஞ்சுக்கிற விசயம். அதுதான் நமக்குத் தோணற விஷயம். அப்படித்தான் நான் செஞ்சுக்கிட்டிருக்கிறேன்."
  இவ்வாறு வண்ணதாசன் குறிப்பிடுவதில் உள்ள இயல்பு, நேர்மை, அவரது படைப்புலகம் சார்ந்து நோக்கும்போது எவ்வளவு தெளிவானது என்பது நன்கு புலப்படும். குடும்பம் சார்ந்த புற ஆழ்நோக்கு வயப்பட்ட ஆத்ம தரிசனத்தின் அடையாளம் ஆகின்றது. இது வாழ்க்கையின், சமூக மதிப்பீடுகளின் வெடிப்புகளாக, உராய்வுகளாக, கீறல்களாக மெல்ல மெல்ல மேற்கிளம்புகின்றன. இந்த உதைப்புக் காட்டும் மனித உணர்வுநிலைக் கோலமாகவே இவரது படைப்புகள் உள்ளன.
  வாழ்க்கை பற்றிய கனிவான தேடல் வாழ்வு குறித்த நேசிப்பாக விரியும் அனுபவங்களின் எதார்த்தம், புனைவுத் தன்மையையும் மீறி உயிர்ப்பாகவே உள்ளது. அன்பு பாராட்டும் மனம் எந்த மயக்க நிலைகளுக்கும் கட்டுப்படாது. பெண் கதாபாத்திரங்கள் மீது இவர் கொண்டுள்ள அக்கறை, தீவிரம், உறவு, வாழ்வின் மறை இடுக்குகளில் பொதிந்துள்ள அன்பை மீட்டுப் பார்ப்பதாக உள்ளது. | 
											
											
												| 
 | 
											
											
											
												பிரகாசிக்கும் அன்பில் வெறுப்பு எங்கேனும் வந்தமர்ந்து தொந்தரவு செய்யாத உலகு பற்றிய எதார்த்தத்தை நோக்கிப் பயணிக்க விரும்புகின்றார். வாசகரையும் அந்த விருப்பின் எல்லை வரை கொண்டு செல்கிறார். ஆனால் வாசகரின் அனுபவ அறிவு தான் வண்ணதாசனின் படைப்பு-அனுபவ வெளிக்குள் கரைந்து எழுந்து வர அரணாக முடியும்.
  'கலைக்க முடியாத ஒப்பனைகள், 'சமவெளி', 'தோட்டத்திற்கு வெளியேயும் சில பூக்கள்', 'கனிவு', 'மனுஷா மனுஷா', 'நடுகை', 'உயரப்பறத்தல்' போன்ற சிறுகதைத் தொகுப்புகள் வெளிவந்துள்ளன. ஆனால் பரபரப்பு விடயங்களில் மூழ்காமல், குழுமோதல்களில், இலக்கிய அரசியல்களில் குதிக்காமல் அடக்கமாக இயங்கி வரும் பண்பு இவருடையது. தாம் அதிகம் பேசுவது என்பதை விடத் தமது படைப்புக்கள் பேசட்டும் என்ற மனநிலையில் இயங்குபவர்.
  வண்ணதாசனின் நடை மிகவும் வித்தியாசமானது. அதுவே தனித்தன்மையாகவும் உள்ளது. வண்ணநிலவன், வண்ணதாசன் ஆகியோரின் நோக்கம் அன்பைப் பிரகடனம் செய்தலாகவே உள்ளது. வாழ்க்கையில் உள்ளீடாக இழையோடும் மனிதநேயம்தான் படைப்பியல் ஆளுமையின் சிறப்பாகக் கருத முடியும்.
  தி.க.சி. என்று அழைக்கப்பட்ட தி.க.சிவசங்கரனின் மகன் வண்ணதாசன். சிறுவயது முதலே பலதரப்பட்ட நூல்கள் மற்றும் இதழ்களுடன் பரிச்சயம் ஏற்படுத்திக் கொள்வதற்கான சாதகமான வீட்டுச்சூழல் இவருக்கு அமைந்திருந்தது. தி.க.சி. சுட்டிய நூல்கள் இவருக்கு இலக்கியத்தை அடையாளம் காட்டின. தொடர்ந்து தமது தேடலால் தமக்கான இலக்கியம் எது என்பது குறித்த தெளிவான புரிதலில் இயங்குவதற்கான தடத்தை அமைத்துக் கொண்டார்.
  சிறுகதையில் மட்டுமன்றி கவிதைத் துறையிலும் வண்ணதாசன் குறிப்பிடத்தக்க தனித்தன்மையுடன் திகழ்கிறார்.
  தெ. மதுசூதனன் | 
											
											
												 | 
											
											
											
												 | 
											
											
											
												 | 
											
                                            
												| 
												
												
												 | 
											
                                            
											
											
                                            
												 | 
											
											
												| 
													
													
																											
												 | 
											
											
												| 
													
												 |