Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2013 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | நலம் வாழ | சினிமா சினிமா | பொது | அமெரிக்க அனுபவம்
அன்புள்ள சிநேகிதியே | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | சமயம் | வாசகர் கடிதம் | கவிதைப்பந்தல் | Events Calendar | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்
- பா.சு. ரமணன்|ஜூலை 2013|
Share:
தமிழுக்கு அருந்தொண்டாற்றிய சான்றோர்களில் வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார் குறிப்பிடத் தகுந்த ஒருவர். இவர் ஆகஸ்ட் 14, 1857ல் ஆழ்வார்குறிச்சியில் பழனியப்ப முதலியார்–உலகண்ணி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். ஐந்து வயதுவரை பெற்றோருடன் சொந்த ஊரான வெள்ளக்காலில் வசித்த பின், திருநெல்வேலியில் தனது மாமா தளவாய் குமாரசாமி முதலியார் அரண்மனையில் வளர்ந்தார். அக்காலத்தில் புகழ்பெற்றிருந்த கணபதிப்பிள்ளை திண்ணைப் பள்ளிக்கூடத்தில் ஆரம்பக்கல்வி பயின்றார். பின்னர் நெல்லை அரசரடி மிஷன் பள்ளியில் இடைநிலைக் கல்வியை முடித்தார். அரண்மனையில் வசித்த காலத்தில் அங்கிருந்த புலவர்கள் மூலம் ராமாயணம், மகாபாரதம், திருவிளையாடற் புராணம் போன்ற பலவற்றைக் கற்றுத் தேர்ந்தார். தவிர அம்மானை, தூது, மாலை, மடல் போன்ற சிற்றிலக்கிய வகைகளையும் கற்றறிந்தார். உயர்நிலைக் கல்வி ம.தி.தா. இந்து கல்லூரியில். ஓய்வு நேரங்களில் அருணாசலக் கவிராயர், வேம்பத்தூர் பிச்சாவையர், புன்னைவனக் கவிராயர், சென்னிகுளம் அண்ணாமலை ரெட்டியார் ஆகியோர் இணைந்து நடத்திய தமிழ் இலக்கியக் கூட்டங்களுக்குச் சென்று இலக்கிய அறிவை வளர்த்துக் கொண்டார்.

படிப்பு முடிந்த பின் சிலகாலம் வீட்டிலிருந்து உழவுத் தொழிலை கவனித்தார். நண்பர்களின் வற்புறுத்தலால் சென்னை கிறித்துவக் கல்லூரிக்கு இண்டர்மீடியட் பயிலச் சென்றார். இயல்பாகவே தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்றிருந்த முதலியார், கல்லூரியில் படித்துக்கொண்டே, பிற மாணவர்களுக்கும் தமிழ் கற்றுத் தந்தார். அவர்களுக்கு விளக்க ஏதுவாகக் கம்ப ராமாயணம், நன்னூல், இலக்கணக்கொத்து, தொல்காப்பியம் ஆகியவற்றை ஆழ்ந்து கற்றார். படிப்பை முடித்த பின் திருநெல்வேலிக்குத் திரும்பினார். அங்கே வேலம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. சிறிதுகாலம் திருநெல்வேலி தாலுகா அலுவலகத்தில் தற்காலிக எழுத்தராகப் பணியாற்றினார். பின் சைதாப்பேட்டையில் உள்ள அரசு வேளாண்மைக் கல்லூரியில் பயின்று 1884 ஆம் ஆண்டில் பட்டம் பெற்றார். அதன்பின் கால்நடைப் பிணி ஆய்வாளர், கணக்கெடுப்பு ஆய்வாளர், வருவாய்த் துறை ஆய்வாளர் என்று பல பொறுப்புகளை வகித்தார்.

அக்காலத்தில் அறிவியல், தொழில்நுட்பம் என உயர்கல்வி நூல்கள் அனைத்துமே ஆங்கிலத்தில் இருந்தன. அதனால் தமிழ்வழி மாணவர்கள் மேற்கல்விக்குச் செல்லும்போது பெரும் அவதிக்குள்ளாகினர். பலர் கல்வியையே அதனால் கைவிட்டனர். இந்தச் சிக்கலைக் களைவதற்காகப் பாட நூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கத் தொடங்கினார் சுப்பிரமணிய முதலியார். லிட் கால் ஜேம்ஸ் மில்ஸ் என்பார் எழுதிய 'Indian Stock Owner's Manual' என்ற நூலை 'இந்து தேசத்துக் கால்நடைக்காரர் புத்தகம்' என்ற பெயரில் 1885ல் மொழிபெயர்த்து வெளியிட்டார். கால்நடை மருத்துவத்தைப் பற்றி முதலில் தமிழில் வெளிவந்த நூல் இதுதான். தொடர்ந்து 'Cattle Diseses in India' என்ற நூலைத் தமிழில் பெயர்த்து வெளியிட்டார். தவிர அம்மை குத்தலின் பயன் குறித்து ஒரு நூலை எழுதி வெளியிட்டார். பின் மும்பை சென்று அங்குள்ள கால்நடைக் கல்லூரியில் படித்து GVBC பட்டம் பெற்றார்.

திரும்பி வந்து தமிழக அரசின் கால்நடை மருத்துவத் துணைவராகப் பணியாற்றினார். இந்தச் சமயத்தில் மனைவி வேலம்மாள் காலமானார். உறவினர்கள் வற்புறுத்தவே ஓராண்டுக்குப் பின் வடிவம்மாளை மணம் செய்துகொண்டார். கால்நடைத் துறையின் இணைக் கண்காணிப்பாளாரக 1914ல் பொறுப்பேற்ற சுப்பிரமணிய முதலியார், 1915ல் பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் தமிழ்ப்பணியோடு சமூகப் பணிகளை மேற்கொண்டார். 1916ல் முதலியார் திருநெல்வேலி தாலுகா போர்டு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1919ல் அதன் துணைத் தலைவரானார். அடுத்த ஆண்டில் தலைவராகப் பொறுப்பேற்று பல பணிகளைச் செய்தார். அவரது நிர்வாகத் திறனைக் கண்டு வியந்த அரசு அவரை 1922ம் ஆண்டு தென்காசி நீதிமன்ற இருக்கையின் தலைவராக நியமித்தது. இவரது அரும்பணிகளுக்காக ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் 1926ல் 'ராவ் சாகிப்' பட்டம் வழங்கினார். இவரது கல்விச் சிறப்புக்காக 'கில்லத்' என்ற பட்டத்தை ஆங்கிலேய அரசு அளித்தது. சென்னை மாகாணத் தமிழ்ச் சங்கம் இவருக்கு 'முதுபெரும் புலவர்' என்னும் பட்டத்தை அளித்தது.
அ. மாதவையா, உ.வே.சா., மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை, அருணாசலக் கவிராயர், சொக்கநாதப் பிள்ளை, பூண்டி அரங்கநாத முதலியார், ரசிகமணி டி.கே.சி. போன்றோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார் முதலியார். இவரது நூல்களுக்கு மேற்கண்ட சான்றோர்கள் வாழ்த்துரை வழங்கியுள்ளனர். 'பஞ்சாமிர்தம்', 'செந்தமிழ்', 'செந்தமிழ்ச் செல்வி' போன்ற இதழ்களில் இவர் எழுதிய கட்டுரைகள் பின்னர் நூலாக்கம் பெற்றன. அண்ணாமலை ரெட்டியார், அழகிய சொக்கநாதப் பிள்ளை, மீனாட்சி சுந்தரக் கவிராயர் உள்ளிட்ட பலரது வாழ்க்கை வரலாறுகளை எழுதியிருக்கிறார். இவர் எழுதிய நூல்களில் 'அகலிகை வெண்பா' குறிப்பிடத் தகுந்தது. மூன்று காண்டங்களும் 293 வெண்பாக்களும் கொண்டது. "அகலிகை வெண்பாவில் காணும் வெண்பாக்களைப் படித்துப் பார்த்தேன். அவை சொல்வளமும், பொருள் வளமும் அமைந்து நிரம்ப நன்றாக இருக்கின்றன. இந்நூலிற் காணும் செய்யுட்கள் விரைவிற் பொருள்படுவதாக இருந்தும் ஒவ்வொரு செய்யுளும் இரண்டு முறைக்குக் குறையாமல் படிக்கும்படிச் செய்கின்றன. தமிழ் பாஷையை நன்றாகக் கற்றவர்கள் இதுவரை எதிர்பாராத ஓர் ஆனந்தத்தை இதனால் அடைவார்கள் என்று நிச்சயிக்கிறேன்" என்கிறார் உ.வே.சா.

தமிழ் இலக்கியத் துறைக்கு வளம் சேர்க்கும் வகையில் ஆங்கிலக் கவிஞர் மில்டனின் Paradise Lost முதற்காண்டத்தைச் சுவர்க்க நீக்கம் என்னும் பெயரில் மொழியாக்கம் செய்துள்ளார் முதலியார். அந்நூல் பற்றி ஜி.யூ. போப், "It is a strange thing that the great English Christian epic should be reproduced, in this end of the century, in Tamil for the use principally of non-Christians and that the translator himself should be a non-Christian. One of the readers of the book in India has called it a Christian Puranam and this in fact it is" என்று வியந்து பாராட்டுகிறார். மற்றுமொரு குறிப்பிடத்தகுந்த நூல் சிலேடை, யமகம், திரிபு போன்ற அலங்காரங்கள் கொண்ட நெல்லைச் சிலேடை வெண்பா ஆகும். திருநெல்வேலியின் பெருமையைப் புகழ்ந்து கூறும் அந்நூல் முதலியாரின் தமிழ்த் திறனுக்கு ஓர் எடுத்துக்காட்டாகும். முதலியாரின் தமிழ்த் திறன் பற்றி பி.ஸ்ரீ. ஆச்சார்யா, "தாம் இயற்றியது சிலேடை வெண்பாவாயினும், வேறு புதுமுறைச் சில்லறைப் பிரபந்தமாயினும், மில்டன் மகாகவியின் காவியமான சுவர்க்க நீக்கத்தின் மொழிபெயர்ப்பாயினும் எல்லாம் இவர் அனுபவித்து வந்த தமிழின்பத்தின் விளைவுதான்" என்கிறார்.

சித்திரக்கவியில் தேர்ந்த முதலியார் தமது தனிக்கவித் திரட்டு என்னும் தொகுப்பில் கோவை, உலா, வெண்பா, அந்தாதி என பல்வேறு யாப்புகளில் நூற்றுக்கணக்கான பாடல்களைப் பாடியுள்ளார். சான்றாக,

மாசங்க ராசிவசி வாவிமலி கூடற் பூ
மாசங்கரா சிவசிவா விமலி மாசங்க
மத்தையன் மாலகன்வான் வாய்மணிற் தேடும்பரவா
மத்தையன் மாலகன்வா வா


என்ற பாடலைக் கூறலாம். வண்டுகளும் (மா) சங்கராசிகளும் வசிக்கின்ற வாவி (ஆறு/அருவி) மலிந்த கூடலில் வாழும் பூமா, சங்கரா, சிவ சிவா, சரஸ்வதி (விமலி), மா (இலக்குமி) ஆகிய இருவர் சங்கமத்து வாழும் அயனும், மாலும், அகல் வானிலும் மண்ணிலும் தேடும் பரனே! அழகுடைய (வாம) தையலின் மயக்கத்தை அகல்வான் வேண்டி, அவளிடம் வந்தருள்வாயாக என்பது பொருளாம். எலி விருத்தம், நரி விருத்தம் போல் "கோம்பி விருத்தம்" எழுதியுள்ளார். கோம்பி என்பது பச்சோந்தி எனப்படும் ஒருவகை ஓணான் ஆகும். இந்நூல் பற்றி, சென்னைப் பல்கலையின் முதல் பட்டதாரியான சி.வை. தாமோதரம் பிள்ளை, "இந்நூல் நரி விருத்தத்தையும், எலி விருத்தத்தையும் காடுகளிலும் வளைகளிலும் மறைவிடம் தேடியோடச் செய்தது" என்பார்.

முதலியார் எழுதிய 'கம்பராமாயண சாரம்' குறிப்பிடத் தகுந்த ஒன்று. மிகவும் ஆய்ந்து இவர் எழுதிய 'ராமாயண உள்ளுறைப் பொருளும் தென்னிந்திய சாதி வரலாறும்' நூலும் முக்கியமானது. இந்நூலை மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களோடு நிகழ்த்திய உரையாடலின் அடிப்படையிலும், அவர் சொன்ன விஷயங்களை அடிப்படையாகக் கொண்டும் 'சுரோதா' என்ற புனைபெயரில் எழுதி வெளியிட்டார். 'கல்வி விளக்கம்', 'சருவசன செபம்', 'ஜான் மில்டன் சரித்திரம்' போன்றவை இவர் எழுதிய பிற நூல்களாகும். பதிமூன்றுக்கு மேற்பட்ட நூல்களை முதலியார் எழுதியிருக்கிறார். இவருடைய நூல்கள் பல அக்காலத்தில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் பாடமாக வைக்கப்பட்டிருந்தன.

பண்டிதமணி மு.கதிரேசஞ் செட்டியார், டி.கே.சி, மு. அருணாசலக் கவுண்டர், இருதாலய மருதப்ப தேவர் எனப் பலர் முதலியாரின் சொல்லாற்றலில் மனம் பறிகொடுத்தவர்கள். சென்னை மாகாணத் தமிழ்ச்சங்கம் உருவாக்கிய 'கலைச்சொற்கள் அகராதி' நூல் தயாரிப்புக் குழுவிலும் வெள்ளக்கால் சுப்பிரமணிய முதலியார் உறுப்பினராக இருந்து திறம்பட செயல்பட்டிருக்கிறார். அதுபோல வேளாண்மைத் துறைக்கான கலைச்சொல்லாக்கம் இவரது பெரு முயற்சியாலே நடந்தது. இவர் வாழ்நாள் முழுவதும் சேர்த்த நூல்கள் தொகுக்கப்பட்டு 'வெ.ப. சுப்பிரமணிய முதலியார் நூல் நிலையம்' என்னும் பெயரில் திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இயங்கி வருகிறது. தமிழின் மூத்த முன்னோடியான வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார், 80ம் வயதில் அக்டோபர் 12, 1946 அன்று காலமானார்.

(தகவல் உதவி : உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட 'வெள்ளக்கால் ப. சுப்பிரமணிய முதலியார்')

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline