Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
என்பும் உரியர் பிறர்க்கு
லேபர் டே
- ஜி. சுஜாதா|செப்டம்பர் 2012|
Share:
வாசலில் "உயங், உயங்" என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.

"இதென்னடிது, கார்த்தால அஞ்சு மணிலேந்து உனக்கு வலி வந்துண்டு இருக்கு. இப்ப மணி சாயங்காலம் நாலு ஆச்சு. இன்னும் ஹாஸ்பிடல் போக வேண்டாம்னு சொல்லிண்டு இருக்க?" என்றாள் அம்மா. கசங்கிப் போன துணிகளை அழகாக மடித்துக் கொண்டிருந்தாள்.

"அம்மா, எத்தனை தடவை சொல்றது, ஏழு நிமிஷத்துக்கு ஒரு தடவை வலி வந்தாதான் வரச் சொல்லி இருக்கானு," என்றேன் நாற்காலியில் சாய்ந்தபடியே.

"என்ன ஊரோ இந்த அமெரிக்கா? இதுவே மெட்ராசா இருந்தா இத்தனை நேரம் நீ ஹாஸ்பிடல்ல இருந்திருப்ப. டாக்டர் வந்து உன்னை அப்பப்ப செக் பண்ணிண்டு இருப்பா. இந்த அமெரிக்கால ஒண்ணுத்துக்கும் வழி இல்லை," சலித்துக்கொண்டாள் அம்மா.

மீண்டும் ஒருமுறை வலி. "அப்பா" என்று முனகினேன். "ரகுராமா, குழந்தை வலில ரொம்ப கஷ்டப்படறா, டாக்டர் திட்டினாலும் பரவால்லை, ஹாஸ்பிடலுக்கு கிளம்பிப் போங்கோ," என்றார் அப்பா, என் கணவரிடம். எனக்குக் குழந்தை பிறந்தாலும், நான் கிழவி ஆனாலும் அப்பாவுக்கு நான் என்றுமே குழந்தைதான்.

"மாமா, ஹாஸ்பிடலுக்கு இருவது நிமிஷத்துல போயிடலாம், கவலைப் படாதேங்கோ. சாப்டுட்டுப் போயிடலாம், டெலிவரி ஆனா சாப்டமுடியாது," என்றார் என் அத்தை மகனாகிய கணவர். அந்தக் காலக் கூட்டுக் குடும்பத்தில், என்னை வளர்ப்பதற்கு முன்னர் என் கணவரை வளர்த்தவர்கள் என் அப்பாவும் அம்மாவும்தான்.

"கரெக்ட். குழந்தை, எதாவது சாப்ட்டுட்டு போமா," என்றார் அப்பா.

"என்னது, குழந்தையா? மாமா, நான் என்னப் பத்தி பேசிண்டு இருக்கேன். டெலிவரி ஆனா இங்கயும் அங்கயும் அலையணும், அதனால..." என்று என் கணவர் முடிப்பதற்குள் மீண்டும் ஒருமுறை வலி வந்துவிட்டது.

"ரகு, இதுக்கு மேல தாங்க முடியாது, கிளம்பலாம். டாக்டருக்கு போன் பண்ணிடு," என்றேன் மூச்சிரைக்க. நாற்காலியில் இருந்து எழுந்து முடிப்பதற்குள் குழந்தையே பிறந்துவிடும் போல இருந்தது.

"அப்பாடா," என்று சொல்லிக்கொண்டே தயாராக இருந்த பையை தோளில் மாட்டிக் கொண்டாள் அம்மா. "பெருமாள் சேவிச்சுட்டு வா. நம்ம ஊரா இருந்தா ஒரு வேப்பலையை தலைல வச்சு அனுப்புவா, இங்க வேப்பலைக்கு எங்க போறது!"

"மாமி, வேப்பலை இல்லாட்டா என்ன, கருவேப்பலையை வைங்கோ தலைல" என்றார் கணவர்.

"புறப்படுங்கோ சீக்கிரம்" என்று பரபரத்தார் அப்பா.

"ஹாஸ்பிடல் போனப்புறம் போன் பண்றோம். கதவப் பூட்டிண்டு பத்ரமா இருங்கோ" என்று சொல்லிக்கொண்டே காரில் ஏறினாள் அம்மா. காரில் முன்புறம் ஏற நினைத்து மனம் மாறி, பின் இருக்கையில் அம்மாவுடன் அமர்ந்தேன்.

"அட, இன்னிக்கு அமெரிக்காலயும் லேபர் டே ,உனக்கும் லேபர் டே" என்று கடித்துக்கொண்டே காரை உயிர்ப்பித்தார் கணவர். ஹைவேக்குள் கார் நுழையவும், "அடடா…..இன்னிக்கு லேபர் டே" என்றார் மறுபடியும்.

"கடவுளே...எனக்கு இருக்கற வலி போறாது, நீ வேற சும்மா சும்மா கடிக்காத" கோவத்துடன் கூறினேன். என்னை திரும்பிப் பார்த்துவிட்டு எதோ சொல்ல வாயெடுத்து ஒன்றும் சொல்லாமல் திரும்பிக் கொண்டார்.

"கொஞ்சம் வேகமா போறயா, வலி உயிர் போறது" என்றேன்.

"எங்க போறது. லேபர் டே டிராபிக்கப் பாரு" என்றார்.

பின்னாலிருந்து நானும் அம்மாவும் சாலையை எட்டிப் பார்த்தோம். எனக்கு மயக்கமே வந்து விட்டது. மூன்று லேன்களிலும் கோடு கிழித்தது போல் ஒன்றன்பின் ஒன்றாகக் கார்கள். ஆமாம், நகராமல் நின்று கொண்டிருந்தன. இந்த டிராபிக்கில் எப்படி நான் ஹாஸ்பிடல் போகப் போகிறேனோ! மனம் பக்பக் என்று அடித்தது. உடம்பு ஏதோ செய்தது. கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பார்த்தது.

"இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்பா?" என்றாள் அம்மா.
"தெரியலையே" என்றார் கணவர். கவலையுடன் அம்மா என்னைப் பார்த்தாள். "பெருமாளே, இவளுக்கு நல்லபடியா குழந்தை பொறக்கணுமே" என்று கை கூப்பினாள்.

பத்து நிமிடம் போயிற்று. நின்றுகொண்டிருந்த கார்கள் இப்போது ஊர்ந்து கொண்டிருந்தன. விட்டு விட்டு வந்த வலி அப்படியே தங்கிவிட்டது.

"ரகு, இந்த டிராபிக்கைப் பாத்தா எனக்கு ரொம்ப பயமாஇருக்கு, என்னால உக்காரவே முடியலை. ப்ளீஸ் எதாவது பண்ணு" என்று மூச்சிரைக்கக் கூறினேன்.

என்னைத் திரும்பி பார்த்தார் என் கணவர். பின்பு ஃபோனை எடுத்து யாரிடமோ ஆங்கிலத்தில் எங்கள் நிலைமையை விரிவாகச் சொன்னார். "அஞ்சு நிமிஷம் பொறுத்துக்கோ, எல்லாம் சரியாயிடும்," என்று சொல்லிக்கொண்டே காரை ஷோல்டரில் நிறுத்தினார்.

காரை நிறுத்திய சில நிமிடங்களில் "உயங், உயங்" என்ற சத்தத்துடன் ஆம்புலன்ஸ் ஒன்று எங்கள் காரின் பின்னே வந்து நின்றது. ஆம்புலன்சிலிருந்து ஒரு பெண்ணும் ஆணும் ஓடி வந்தனர். என்னை நொடிப் பொழுதில் காரிலிருந்து ஆம்புலன்சுக்கு ஸ்ட்ரெச்சரில் மாற்றினார்கள். அந்த ஆண் இறங்கிவிட, அந்தப் பெண் என்னைச் சோதனை செய்தனர். இருவரும் paramedics. கணவர் 911ஐக் கூப்பிட்டதால் வந்தார்களாம்.

அந்தப் பெண் கீழே இறங்கி அம்மாவிடமும், கணவரிடமும் எதோ சொல்லிவிட்டு அம்மாவை மட்டும் ஆம்புலன்சில் ஏறச் சொன்னாள்.

"என்னமா சொன்னா?" என்று முனகினேன்.

"ஒண்ணும் இல்லை, இதோ போயிடலாம்" என்றாள்.

"உயங், உயங்" சத்தத்துடன் கிளம்பிய எங்கள் ஆம்புலன்ஸ் சில நிமிடங்களில் நின்றது. கதவு திறந்து என் ஸ்ட்ரெச்சர் கீழே இறங்கியது. அதற்குள் ஹாஸ்பிடல் வந்துவிட்டோமா என்று அதிசயப்பட்டேன். என் ஸ்ட்ரெச்சர் வெளியே வரவும், உயரமான இரண்டு ஆண்கள் முகத்தில் மாஸ்க்குடனும், உடம்பில் ஏப்ரனுடனும், கையில் உறைகளுடனும் ஓடி வந்தார்கள். என்னை நலம் விசாரித்துக்கொண்டே என் ஸ்ட்ரெச்ச்சரை ஒருவர் தள்ள, அந்தப் பெண்ணும் வேறு ஒருவரும் முன்னே நடந்து சென்றார்கள். என் அம்மா என் ஸ்ட்ரெச்சர் கூடவே நடந்து வர, என் கணவர் எங்கே போனார் தெரியவில்…..ஆ….… இரண்டு fire truck தெரிகிறதே இது என்ன தீயணைப்பு நிலையமா என்று நான் மலைக்க, என்னை அவர்கள் ஒரு அறைக்குள் செலுத்தினார்கள்.

பின்னர் அந்தப் பெண் என்னைத் தயார் செய்துகொண்டே ஏதேதோ சொன்னாள். வலியில் எனக்குப் புரிந்ததெல்லாம் அது மேரிலேண்டில் ஒரு தீயணைப்பு நிலையம், அந்த உயரமான ஆண்கள் தீயணைப்பாளர்கள் என்றும், ஹாஸ்பிடல் செல்லும்வரை என் குழந்தைக்குப் பொறுமை இல்லை, இன்னும் சில நிமிடங்களில் குழந்தை பிறந்துவிடும் என்பதும்தான். இது கனவா நிஜமா, என்று எனக்குச் சந்தேகமே வந்துவிட்டது.

அம்மாவின் ராம ஜபமும், கணவரின் ஓயாத கிண்டலும், அந்த மூவர் அணியின் உற்சாக ஒத்துழைப்பும் எனக்கு வேண்டிய பலத்தைக் கொடுக்க, சில நிமிடங்களில் "குவாங், குவாங்" என்று குழந்தையின் அழுகுரல்! எல்லோரும் ஆர்ப்பரிக்க, என் கண்கள் சமுத்திரம் ஆயின. குழந்தையை என் நெஞ்சின்மீது வைத்தனர். கண்ணீருக்கு நடுவே என் பெண் குழந்தை மசமசவென்று தெரிந்தது.

எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்துவிட்டு, ஒன்றுமே செய்யாதது போல் அந்த மூவரும் குழந்தையின் அழகைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருந்தனர். இவர்களுக்கு எப்படி எந்த விதமாக நன்றி சொல்வது என்று தெரியாமல் குழம்பிக் கொண்டிருந்தேன்.

அம்மா அந்தப் பெண்ணின் கையைப் பிடித்துக் கொண்டு, "உங்க மூணு பேருக்கும் ரொம்பத் தேங்க்ஸ். அந்தப் பெருமாளா பாத்துதான் உங்களை அனுப்பி வச்சிருக்கார். கூட்ட குரலுக்கு உடனே ஓடி வந்து, எனக்கு ஆறுதல் சொல்லி, அவளுக்கு தைர்யம் சொல்லி எல்லாம் நல்லபடியா நடத்தி வச்சுட்டேங்கோ. வந்த அன்னிலேந்து, என்ன ஊருடா இந்த அமெரிக்கான்னு கரிச்சுக் கொட்டிண்டிருந்தேன். ஆனா, இன்னிக்கு இந்த அரை மணில, இந்த ஊர் என் மனசுல கிடுகிடுன்னு உயர்ந்துடுத்து. இந்த அமெரிக்கா எல்லாப் ப்ரச்சனைலேந்தும் விடுபட்டு நன்னா இருக்கணும், நீங்க எல்லாரும் நன்னா இருக்கணும்," என்றாள்.

என் கணவர் அம்மாவின் வார்த்தைகளை மொழி பெயர்க்க முயல அவரை நிறுத்தி, "We can understand" என்றாள் அந்தப் பெண். அந்த ஃபயர் ஃபைட்டரில் ஒருவர் அவர்கள் வாழ்க்கையிலும் இது மறக்க முடியாத நாள் என்றும், அந்த தீயணைப்பு நிலையத்தில் ஒரு உயிர் ஜனித்ததற்காக அவர்கள் மிகவும் சந்தோஷம் அடைந்ததாகவும் கூறினார்.

பிறந்த குழந்தைகளுக்கான விசேஷ ஆம்புலன்ஸில், சுத்தம் செய்யப்பட்ட குழந்தையுடனும், அம்மா, கணவர் சகிதம் ஏற்றப்பட்டேன். ஆம்புலன்ஸ் கதவு மூடியது.

"மாமி, சூப்பரா டயலாக்லாம் பேசறேங்கோ. தமிழ் சீரியல் டைரக்டர் உங்களைப் பாத்தா…" என்று என் கணவர் சொல்லிக்கொண்டு இருக்கும்போதே அவருடைய ஃபோன் அடித்தது. "உன் அப்பாதான்" என்று கூறியபடியே ஃபோனை ஸ்பீக்கரில் போட்டார்.

"ஹலோ, நான் தான்பா பேசறேன். உங்க கிட்டேந்து ஒண்ணும் தகவலே இல்லையே, குழந்தை எப்படி இருக்கா?" என்றார் அப்பா.

"அவளுக்கென்ன மாமா, ஜாம்ஜாம்னு அப்படியே எங்கம்மா…. சாரி … உங்க தங்கை மாதிரி இருக்கா" என்று பீற்றித் தள்ளினார் என் கணவர்.

"என்னப்பா சொல்ற?" என்று புரியாமல் கேட்டார் அப்பா.

"ஒ… நீங்க உங்க குழந்தையைப் பத்தி கேட்டேங்களா? நான் என் குழந்தையைப் பத்திச் சொல்லிண்டு இருக்கேன்…" என்று வழிய, எங்கள் ஆம்புலன்ஸ் "உயங் உயங்" என்ற சத்தத்துடன் ஹாஸ்பிடலை நோக்கி விரைந்தது.

ஜி. சுஜாதா,
மேரிலேண்ட்
More

என்பும் உரியர் பிறர்க்கு
Share: 
© Copyright 2020 Tamilonline