Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
பேரறிவாளன் திரு
- ஹரி கிருஷ்ணன்|செப்டம்பர் 2012||(1 Comment)
Share:
ஒப்புரவு அதிகாரத்தில் மூன்று குறட்பாக்கள் ஒன்றையொன்று தொடர்ந்து, ஒரே பொருளில் திரும்பத் திரும்பச் சொல்லப்படுவதைப் பற்றி என்னை ஆசிரியர் கேட்டதைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். அவருடைய இந்த அணுகுமுறைக்கு என் மனத்துக்குள் நான் வைத்துக்கொண்ட செல்லப்பெயர் 'சில்லுண்டித்தனம்'! அப்படித்தான் எடக்குமுடக்காகக் கேட்பார். கேள்வியின் மூலமாகவே ஆர்வத்தை ஏற்படுத்துவார். அவரே விளக்கம் கூறியதும் உண்டு. 'நீயே கண்டுபிடிச்சுக்கோயேன்' என்பதுபோல் ஒரு அவசர ஸ்கெட்ச் மட்டும் இட்டுக் காட்டிவிட்டு நிறுத்திவிடுவதும் உண்டு. கேட்பவனுடைய சிந்தனைக்கும் வேலை வேண்டும். அவனும் சிந்திக்க வேண்டும் என்பதே இப்படிப்பட்ட இரண்டாவது அணுகுமுறையின் நோக்கம். இப்படித்தான் கேள்விகேட்டு அவுட்லைன் கொடுத்து நிறுத்திவிட்டார். 1972ம் ஆண்டு நடந்தது இது. அப்போது, புதிதாக ஒன்றைக் கேட்டுக்கொள்ளும் பரபரப்பில் இருந்ததால், அவர் சொன்ன ஸ்கெட்ச்கூட மனத்தில் சரியாகப் பதியவில்லை. 'என்னவோ சொன்னாரே, என்னவோ சொன்னாரே' என்று சுமார் இருபதாண்டு காலம் கேள்விகளோடே வாழ்ந்திருக்கிறேன். பின்னர் அண்மையில் நண்பனுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது, இந்தக் கேள்விக்கான விடை, மிக இயல்பாக மனத்தில் கிளர்ந்தது. குறளின் உவமைகளிலேயே இருக்கிறது குறிப்பு; அந்தந்தக் குறளில் அவர் குறிப்பிடும் நபர்களைப் பற்றிய வர்ணனையில் இருக்கிறது வள்ளுவரின் இதயத்துக்கான சாவி என்ற பாடத்தைக் கற்றிருந்த காரணத்தாலோ என்னவோ, இந்த விளக்கங்கள் வெகு இயல்பாக, இவற்றைப் பற்றித் தீவிரமாகச் சிந்தித்த போதுகளில் கண்ணாமூச்சி ஆடிக்கொண்டே இருந்த பொருள் விளக்கங்கள், பளிச்சென்றும் ஆற்றொழுக்காகவும் வெளிப்பட்டது எனக்கே வியப்பை ஏற்படுத்தியது. இருபதாண்டு கால சிந்தனையின் பயன்!

'கூறியது கூறல்' என்ற குற்றத்தை ஓரிடத்திலும் செய்திராத எங்காவது செய்திருப்பதுபோல் தோன்றினால், திரும்ப வாசியுங்கள், அவ்வாறு தோன்றும் ஒவ்வோரிடத்திலும் ஒவ்வொரு வேறுபாடு இருக்கும்) வள்ளுவர், ஒரே அதிகாரத்தில், அடுத்தடுத்து மூன்று குறட்பாக்களில் பேசியிருப்பது ஒரே அம்சத்தைப் பற்றிதானே! மூன்றையும் பார்ப்போம்:

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. (215)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின். (216)

மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின். (217)

முதலில் அதிகாரத் தலைப்பான 'ஒப்புரவு' என்றால் என்ன என்பதைப் பார்த்துவிடுவோம். 'கொடுப்பது; பிறர் நலம் கருதிக் கொடுப்பது' என்ற அம்சத்தை மட்டும் எடுத்துக் கொண்டால், ஈகையும், ஒப்புரவும் மேலோட்டப் பார்வையில் ஒன்றேபோல் காட்சியளிக்கின்றன. ஆனால். 'வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை' என்ற வள்ளுவ வரையறையைக் கருத்தில் கொண்டால், ஈகைக்கும் ஒப்புரவுக்கும் ஏதோ வேறுபாடு இருப்பது புலனாகிறது. 'உலக நடையினை அறிந்து செய்தல்' என்று பரிமேலழகர் தன்னுடைய அவதாரிகையில் குறிப்பிடுவார். இதைக் காட்டிலும் சற்றே எளிதாகச் சொல்லவேண்டுமானால், 'ஒத்த புரவே ஒப்புரவு'. இன்னும் கொஞ்சம் சுருக்குவோம். சொல்வதை எடுத்துக்காட்டு என்ற அளவில் மட்டும் கொள்ளவும். தெருவோடு போகும் ஒருவருக்கு ஒரு தம்ளர் தண்ணீர் தருவதைப் போன்றது ஈகை. (தண்ணி குடுக்கறதெல்லாம் ஈகையாகுமா என்று கேட்காதீர்கள்! இது 'உவமை என்னும் தவலருங் கூத்தி'தான்! ஓரளவுக்கே விரிக்க முடியும்!) மண்ணில் ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று எந்த இன, மொழி, நிற பேதமும் இல்லாமல், விண்ணிலிருந்து அனைவருக்கும் ஒன்றேபோல் கொட்டுகிறதே மழை, அது ஒப்புரவைப் போன்றது. (எந்த அளவுகோலாலும் மழையை ஒப்புரவு என்று வரையறுக்க முடியாது என்பது வேறுகதை. இப்போது சொல்வது வெறும் எடுத்துக்காட்டுதான்.) வீட்டுத் தோட்டத்தில் மாஞ்செடி நடுவது, தன் குடும்பத்துக்கும், ஒருவேளை நல்ல குணம் இருப்பவனாக இருந்தால் அண்டை அயலாருடைய பயன்பாட்டுக்கும் மட்டுமே பயன்படும். அதுவே சாலை ஓரத்தில் நாற்பது ஐம்பது புளியமரங்களை நடுவது ஒப்புரவு. அனைவருக்கும் பயன்தரும். குளம் வெட்டுதல் ஒப்புரவு; கோவில் கட்டுதல் ஒப்புரவு; (வயித்துல பல் முளைக்காத, மருந்தால் காப்பாற்றிய உயிரை ஃபீஸால் வாங்காத) மருத்துவமனை கட்டுவது ஒப்புரவு. பேருந்து நிலையத்தில் நிழற்குடை அமைப்பது ஒப்புரவு. சுருக்கமாக, ஒருவனுடைய வறுமையைக் குறுகிய அல்லது நீண்ட காலத்துக்கு நீங்குமாறு கொடுப்பது ஈகை. சமூகத்தில் அனைவருக்கும், ஏற்றத் தாழ்வுகளைக் கடந்து, ஒன்றேபோல் பயன்படுமாறு ஒரு நல்ல காரியத்தைச் செய்வது ஒப்புரவு.

சரி. அப்படியானால், ஊருணி, பயன்மரம், மருந்தாகித் தப்பா மரம் மூன்றுமே ஒத்த புரவைத்தான் குறிக்கின்றன என்பதும்; இவற்றால் சமூகம் முழுக்கவுமே ஒன்றேபோல் பயன்பெறுகிறது என்பதும் தெளிவாகிறது. ஆயின், ஆசிரியர் கேட்டதைப்போல், எதற்காக இந்த ஒரே ஒரு பொருளை விளக்க மூன்று குறட்பாக்கள்? சற்று சவிஸ்தாரமாகச் சொல்லவேண்டிய விளக்கம் என்பதால், தவணைக்கு ஒன்றாகவோ, ஒன்றரைத் தவணைக்கு ஒன்றாகவோ சொல்லி முடித்துவிட முயல்கிறேன்.
இப்போது ஊருணிக்கு வருவோம். குளம் என்பது வேறு; ஊருணி என்பது வேறு. இரண்டுமே நீர்நிலைகள் என்றபோதிலும், குளிப்பதற்காக அமைந்தது குளம். ஊர், உண்பதற்காக அமைந்தது ஊருணி. அதனால்தான் அதற்கே ஊர் உணி--ஊரால் உண்ணப்படுவது--பருகப்படுவது--என்ற பெயர் அமைந்தது. இந்த ஊருணி இருக்கே ஊருணி, இது நிறைந்ததைப் போலவாம் பேரறிவாளன் திரு. என்ன புரிகிறதா? மூன்று குறட்பாக்களிலும் ஒப்புரவை ஆற்றுபவன் மூன்று வேறுபட்ட அடைமொழிகளால் குறிக்கப்படுகிறான் என்பது முதல் கவனத்துக்கு உரியது. இந்த மூன்று வேறுபட்ட அடைமொழிகளே அந்தந்தக் குறளுக்கான சாவிச் சொற்கள். வள்ளுவர் பூட்டி வைத்திருக்கும் புதையலைத் திறப்பதற்கான சாவிச் சொற்கள் இவைதாம். இந்த உவமைகளுக்குள்தான் ஐயா 'நமுட்டுச் சிரிப்போடு' பெரிய விஷயங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்.

இங்கே விளக்கப்படப்போகும் சொற்கள் மூன்று. ஊருணி, உலகவாம், பேரறிவாளன். நன்றாக மனத்தில் அழுந்த வாங்கிக்கொள்ள வேண்டிய சொற்கள். ஊருணியை ஒத்தது 'பேரறிவாளனின்' செல்வம்; உள்ளூரில் பழுத்த பயன் மரத்தைப் போன்றது 'நயன் உடையானுடைய' செல்வம்; 'பெருந்தகையாளனுடைய' செல்வமோ, 'மருந்தாகித் தப்பா மர'த்தைப் போன்றது.

இப்போது, லேசாக, மிக லேசாக வேறுபாடுகளின் புறக்கோடுகள், சித்திரம் தீட்டுவதற்கு முன்பான பென்சில் கீற்றுகள், தென்படுகின்றனவா?

ஊர் உண்ணத்தக்க, குடிநீரை வழங்கும் நீர்நிலைக்குப் போவோம். குளத்தைச் சுற்றி, நீராடுபவர்களுக்கு மறைப்புச் சுவர்கள் எழுப்பப்பட்டிருக்கும். நீராடுபவர்களின் பாதுகாப்புக்காக. குளத்தின் பாதுகாப்புக்காக அன்று. அல்லவா? ஆனால் குடிநீரைத் தரும் ஊருணியில்? சென்னையில் புழலேரியைப் பார்த்திருக்கிறீர்களா? அல்லது உங்கள் ஊர்களில், குடிநீருக்காகச் சேமித்து வைக்கப்பட்டுள்ள மிகப்பெரிய தடாகங்களைக் கண்டிருக்கிறீர்களா? நான்குபுறமும் சுவர் எழுப்பப்பட்டிருக்கும். மின்வேலி கூட அமைத்திருப்பார்கள். காவலுக்கு ஆட்கள் நாலாபுறங்களிலும் பாரா வந்தபடி இருப்பார்கள். எல்லாம் எதற்காக? இந்த நீர் குடிக்கப் பயன்படும் நீர். இதில் யாராவது கை, கால் அலம்பியோ, அல்லது, காலைக்கடன் கழித்துக் கழுவியோ செய்துவிடக்கூடாது என்பதற்கான முன்னெச்சரிக்கை. அல்லவா?

அதற்கு மேல் ஒன்றும் இருக்கிறது. இந்த ஊருணியிலோ நீர் ஊறிக்கொண்டே இருக்கிறது. இந்த நீரை அவ்வப்போது பயன்படுத்தியோ அல்லது வேறு வகையிலோ வெளியேற்றாவிட்டால், அதிவிரைவில் இந்த நீர்நிலை, பாசி அடைந்து போகும்; முடைநாற்றம் வீசத் தொடங்கும். அருகிலுள்ள மரங்களிலிருந்து பழங்கள் விழுந்து அழுகியபடி கிடக்கும். சிலநாட்கள் பயன்படுத்தப்படாவிட்டால், 'ஊர் உண்ணும் நீர்' என்று அவ்வளவு மரியாதையாகக் கட்டுக்காவல் போட்டுப் பராமரிக்கப்பட்ட நீர் கெட்டுப் போகும். அதை முற்ற முழுக்க இறைத்துக் கொட்டிவிட்டு, மீண்டும் நீர் சுரந்து ஊருணி நிறையும் வரையில் காத்திருந்தால் மட்டுமே அந்த நீரை மறுபடிப் பயன்படுத்தலாகும். அல்லவா?

அதாவது, ஊருணி, சமூகத்துக்கு அத்தியாவசியமான ஒன்றை, மொழி, இன, நிற, நட்பு, பகை பாகுபாடுகள் இல்லாமல் அளித்தவாறு இருக்கிறது. எவ்வளவு நாளுக்கு அந்த நீர், எப்போதும் அடியிலிருந்து ஊறிக்கொண்டிருக்கிற நீர், சமூகத்தினால் பயன்படுத்தப்பட்டு, மீண்டும் மீண்டும், நிரம்பத் தொடங்கும் அந்த நீர்நிலையில் நீர் தொடர்ந்து முகக்கப் பட்டால்தான் தண்ணீர் கெட்டுப் போகாமல் இருக்கிறது. அதுமட்டுமல்ல. அப்படி ஊருக்கு அந்த நீர்நிலை வாரி வழங்குவதால்தான், அது சுத்தமாக இருக்கிறது. தண்ணீர் கெட்டுப் போகாமல் இருக்கிறது. இதுவே, ஊருணி, ஊருக்குள் இல்லாமல் எங்கோ காட்டுக்குள் இருந்தால், கண்ணன்--என் தோழனில் பாரதி சொல்வான் பாருங்கள், 'சிறு பள்ளத்திலே நெடுநாள் அழுகிடும் கெட்ட பாசியை எற்றிவிடும் - பெரு வெள்ளத்தைப் போல்...' என்று, அப்படி, இந்தக் காட்டு நீர் நிலையில் நெடுநாள் அழுகிக் கிடக்கின்ற கெட்ட பாசியை எற்றிவிட, ஒரு பெரிய வெள்ளம் வந்தாலொழியச் சுத்தமாகுமா?

ஆக, ஊருணி, சமூகத்தைப் பாதுகாக்கிறது. சமூகம் ஊருணியைப் பாதுகாக்கிறது. If you are useful to the society, the society will protect you என்பது அடிப்படை விதி. எனவே, சமூக நன்மைக்காக ஊருணியைப் போலக் கொடுப்பவனை, 'பேரறிவாளன்' என்றார். 'அவன் விஷயம் தெரிந்தவன்டா. கெட்டிக்காரன். எந்த நீர்நிலையாவது தன்னைத்தானே பராமரி்த்துக் கொண்டு, சுத்தமாக இருக்க முடியுமா? அவனுக்குத் தெரியும் அது. அவனிடம் செல்வம் பெருகிக் கொண்டிருக்கிறது. அது அப்படியே செலவில்லாமல், சமூகத்துக்குப் பயனில்லாமல் கிடந்தால், 'ஆரே அனுபவிப்பார், பாவிகாள், அந்தப் பணம்' என்று ஔவை பாடுகிறாளே, அப்படி, கூடுவிட்டு ஆவி போனால், கூடவே வருவதென்ன என்பதை அறிந்துகொண்ட கெட்டிக்காரன், மற்றவர்களுக்குப் பயன்படும்படி, பொதுக்காரியங்களுக்காகத் தன் செல்வத்தைப் பயன்படுத்துகிறான். அப்படிப் பயன்படுத்துகிற காரணத்தால், அவன் கவனிக்கப்படாமல் விடப்படுவதில்லை. சமூகம் அவனுக்குப் பாதுகாப்பாக நின்று, அவனைப் பராமரிக்கிறது; வேலிபோடுகிறது; காவல் நிற்கிறது; அவனிடம் உள்ளது அசுத்தமாகிவிடாமல் கவனத்தையும் அக்கறையையும் எடுத்துக் கொள்கிறது. அதனால்தான் 'உலகவாம்' என்று பேரறிவாளனுக்கு அடைமொழி போட்டார். உலகம் அவாவுகின்ற என்றும் இது விரியும் அல்லது, உலகத்தால் அவாவப்படுகிற என்றும் விரியும். பொருள் பொருத்தத்தைப் பார்க்கும்போதே இது செயப்பாட்டுவினை (ஐயையோ... இலக்கணத்தால பயமுறுத்தல... மத்தவங்க விரும்பும் செயலைச் செய்யும்னு அர்த்தம்னு வச்சுக்குங்க!) என்று புரிந்துவிடுகிறது.

உவமையை விரிச்சா என்ன ஆவுது பாத்தீங்களா? மொத ரகசியத்தை, 'பேரறிவாளன்' அப்படிங்கற சாவியப் போட்டு, உவமையை விரித்துப் பொருளை அடைந்துவிட்டோம். அதாவது, இந்தப் 'பேரறிவாளன்' கொடுப்பது, உலகத்துக்காக மட்டுமல்லாமல், அதே நேரத்தில் உலகத்தால் தான் பாதுகாக்கப்படுவதையும் உறுதிப்படுத்துகிறது; நன்மை குடிநீரைப் பயன்படுத்தும் சமூகத்துக்கு மட்டுமல்ல. குடிநீரை வழங்கும் ஊருணிக்கும்தான். தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்கிறது ஊருணி. அதனால்தான், 'பேரறிவாளன்' என்று இப்படிப்பட்டவனைச் சொன்னார். He is really clever. இந்த 'கெட்டிக்காரனில்' தென்படுவது கேலியில்லை; கிண்டலில்லை. உண்மையான அட்மிரேஷன். 'செஞ்சாலும் செஞ்சான்யா, ஒரே சமயத்துல ஊரையும் காப்பத்தாறான்; அதே சமயத்துல இடையூறு வராமல், சமூகத்தைக் கொண்டு தன்னையும் பாதுகாத்துக் கொள்கிறான். இவன் கெட்டிக்காரன். இது வள்ளுவருடைய assessment.

இவனிடமிருந்து ஒரு மாற்று வித்தியாசப்படுபவன் 'பயன்மரம் உள்ளூர்ப் பழுத்ததைப்' போலச் சமூகத்துக்குப் பயன்படும் ஒப்புரவாளன். அவன் நயனுடையான். அது என்ன பயன்மரம் பழுத்தல், அப்படிப்பட்டவன் 'நயனுடையான்' என்று ஏன் சொல்லப்படுகிறான்?

சற்றே விரிவாகச் சொன்னால்தான் இந்த நயங்கள் பிடிபடும் என்பதால் சற்று நிதானமாகப் பயணிக்கிறேன். நயனுடையானை அடுத்த முறை பார்ப்போம். பிறகு 'பெருந்தகையானைப்' பார்க்கும்போதுதான், அவனை வள்ளுவர் எழுந்து நின்று இரு கரங்களையும் கூப்பி வணங்குவதைப் பார்ப்போம். பார்ப்போமா?

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline