Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | வாசகர் கடிதம் | பொது | நூல் அறிமுகம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
ரங்கதாசி
மனச்சாட்சி
மண்ணின் மணம்
- ராஜேஸ்வரி ஜெயராமன்|ஆகஸ்டு 2012|
Share:
ஓமாம்புலியூர் சிதம்பரத்திலிருந்து 32 கி.மீ. தொலைவில் உள்ள அழகான கிராமம். கொள்ளிடத்தின் வடகரையில் உள்ளது.

பாக்யாவும் ராமனும் இரண்டாவது குழந்தை விக்னேஷுக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் மொட்டை அடித்துப் பிரார்த்தனை நிறைவேற்றிய பின்னால் ராமனின் சித்தப்பா வீடு இருக்கும் ஓமாம்புலியூருக்குக் காரில் போனார்கள். முதல் குழந்தை ஈஷாவுக்கு ஏழு வயது. விக்னேஷுக்கு ஒன்றரை. ராமனின் பெற்றோர் சென்னையில் இருந்ததால், ராமன் குடும்பத்தினர் அமெரிக்காவிலிருந்து முதலில் சென்னைக்கு வந்தனர். சென்னையிலிருந்து கிளம்பி மாயவரம், வைத்தீஸ்வரன் கோவில் சென்றுவிட்டு இப்போது சித்தப்பா வீட்டுக்குப் பயணம்.

மாலைநேரத் தென்றலும், லேசாகப் பெய்த மழையும் ஒரு வாசனையைக் கிளப்பி விட்டது. அமெரிக்காவிலிருந்து வந்து 2 நாட்கள்தான் ஆகியிருந்ததால் குழந்தைகள் களைத்திருந்தனர்.

"Daddy... I smell something good!" என்றாள் ஈஷா. ராமன் ஈஷாவிடம், "This is the smell of the soil, அதான் 'மண் வாசனை' என்றான். ராமன்தான் சின்ன வயதில் கோடை விடுமுறையில் இங்கு வந்ததையும், கொள்ளிடத்தில் குளித்ததையும், சித்தப்பா மாடு பிடித்து பால் கரக்கச் சொல்லி கொடுத்ததையும் கதைபோலச் சொல்லிக்கொண்டு வந்தான். சித்தி, சித்தப்பா, பாட்டி (ஈஷாவின் கொள்ளுப் பாட்டி), சித்தப்பாவின் பிள்ளைகள் மற்றும் சித்தப்பாவின் பேரன், பேத்திகள் பற்றியும் விவரித்தான். மொட்டை போட்டுக் கொண்ட களைப்பு, நேர வித்யாசம் மற்றும் காரின் குலுங்கலால் விக்னேஷ் அயர்ந்து தூங்கி விட்டது.

காற்றில் கலந்த இருவாட்சி மல்லிகையின் வாசனை, அரிசி கொதிக்கும் வாசனை, தாழம்பூவின் மணம் எல்லாம் சேர்ந்து பாக்யாவின் மனதில் இளையராஜாவின் மெட்டில் "பொத்தி வச்ச மல்லிகை மொட்டு" பாடல் ஓடியது.

ஈஷா "கொள்ளுப் பாட்டிக்கு என்னைத் தெரியுமா டாடி?" என்றாள். கொள்ளுப் பாட்டிக்கு 95 வயது. ஆறு பையன்கள், மூன்று பெண்கள். இவர்கள் வழியே பதினெட்டுப் பேரன் பேத்திகள், இருபத்தேழு கொள்ளுப் பேரன், பேத்திகள் (ஈஷா, விக்னேஷைச் சேர்த்து)! கொள்ளுப்பாட்டி ஒவ்வொருவரின் பிறந்த நாளையும், நட்சத்திரத்தையும் ஞாபகம் வைத்திருப்பது பற்றி ராமன் சொல்ல, ஈஷா ஆச்சரியப்பட்டுப் போனாள்.

ஈஷா இங்கு முன்பு இரண்டு வயதில் வந்ததையும், குழந்தைகளுடன் விளையாடியதையும் ராமன் நினைவு படுத்தினான். இப்போது கோடை விடுமுறை என்பதால் சித்தப்பாவின் பேரன் பேத்திகளுடன் விளையாடலாம் எனவும் சொன்னான்.

பாக்யா, "டச் வுட்... பாட்டி 95 வயசுல இவ்வளவு ஞாபக சக்தியோட ஆரோக்யமாக இருப்பது பெரிய விஷயம்" என்றாள்.

அதற்கு ராமன் "இதுக்கு மெயின் ரீசன் பாட்டியின் மிதமான இனிய பேச்சு, அளவான ஆகாரம், நல்லதே நினைப்பது, எப்போதும் துருதுருன்னு ஏதாவது வேலை செய்வது தான். பாட்டி கோவப்பட்டு நான் பார்த்ததே இல்லை," என்றான். பாக்யாவும் ஆமோதித்தாள். ராமன் டிரைவரிடம் "அதோ அந்தத் திண்ணை வைத்த வீடுதாங்க" என்று காட்டினான்.

கார் சித்தப்பா வீட்டில் நின்றது. சித்தப்பா வாசலுக்கு ஓடி வந்தார். ராமனைத் தழுவிக் கொண்டார். சித்தப்பாவின் பெண்களும், பேரக் குழந்தைகளும் வாசலுக்கு வந்து வரவேற்றனர். ராமனும், பாக்யாவும் பாட்டியின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினார்கள். பாட்டி "ராமா, குழந்தையை இப்படி மடியில் போடுப்பா" என்றார். குழந்தையைத் தடவிப் பார்த்து உச்சி முகர்ந்தாள்.

எல்லோருக்கும் சித்தி கைமுறுக்கும், காபியும் கொடுத்தாள். குழந்தைகள் வீட்டில் கறந்து, காய்ச்சிய பால் குடித்தனர்.

பாட்டி "பாக்யா, திருச்சியில் அம்மா, அப்பா, பாட்டி எல்லோரும் சௌக்கியமா?" என்று கேட்டார். "எல்லோரும் நல்லா இருக்காங்க பாட்டி" என்று சொல்லிப் பாட்டியுடன் பேசிக்கொண்டிருந்தாள். பாட்டி "பாக்யா, கார் டிரைவரை உள்ளே கூப்பிட்டுக் காபி கொடும்மா" என்றார்.

பாக்யா "இதோ கூப்பிடுகிறேன் பாட்டி" என்றாள். எல்லோரையும் பார்த்த சந்தோஷத்தில் டிரைவரை மறந்ததை நினைத்து பாக்யா வருந்தினாள். பாட்டி எப்போதுமே எல்லோரையும் ஞாபகம் வைத்துக்கொண்டு கவனித்துக் கொள்வார் என்று ராமன் சொன்னது பாக்யாவுக்கு நினைவுக்கு வந்தது.
எல்லோரும் கோவிலுக்கு கிளம்பினார்கள். சித்தியும், சித்தி பெண்களும் சமையல் செய்யத் தொடங்கினார்கள். சின்னத் தாத்தாவுடனும் நிறையக் குழந்தைகளுடனும் பேசிக்கொண்டு கூட்டமாகக் கோவிலுக்கு நடந்து போவது ஈஷாவுக்கு மிகவும் பிடித்தது.

கோவிலில் அர்ச்சகர் "சுவாமி ப்ரணவ வியாக்ரபுரீஸ்வரர், அம்பாள் புஷ்பலதாம்பிகை. அம்பாள் பார்வதி ப்ரணவ மந்திர உபதேசம் அருளுமாறு சிவனிடம் வேண்டினாள். சிவன் தட்சிணாமூர்த்தி வடிவில் வந்து அம்பாளுக்கு இங்கு உபதேசம் செய்தார். வியாக்ர என்றால் புலி. வியாக்ரபாத ரிஷி இங்கு வந்து நடராஜரை வழிபட்டதாலும் இந்த ஊருக்கு ஓமாம்புலியூர் எனப் பெயர் வந்தது" என்று அழகாக விவரித்தார்.

கோவிலில் அர்ச்சனை செய்து பிரகாரத்தைச் சுற்றிவிட்டு வீடு வந்தனர். சித்தியின் சமையல் மூக்கை துளைத்தது. தரையில் உட்கார்ந்து இலை போட்டு விருந்து களை கட்டியது. சித்தப்பா பெண் மங்களம் குழந்தைகளுக்காக ஒரு பெரிய பாத்திரத்தில் சாதத்தைப் போட்டு நன்றாகப் பிசைந்து ரசம் ஊற்றி நெய்யுடன் கலந்தாள். குழந்தைகளை வரிசையாக உட்கார வைத்து கையில் சாதத்தைப் போட்டு அதன்மேல் ஒரு ஸ்பூன் கீரைக்கூட்டை கிரீடம் போல வைத்தாள். ஈஷாவும் குழந்தைகளுடன் அதை ருசித்துச் சாப்பிட்டாள்.

ஈஷா "சித்திப்பாட்டி, ஸ்பினாச் ரொம்ப நல்லா இருக்கு" என்றாள். சித்திக்கு ரொம்ப சந்தோஷம். பாக்யாவுக்கு ஒரு பக்கம் மகிழ்ச்சி. ஒரு பக்கம் ஆச்சரியம். அமெரிக்காவில் ஈஷாவுக்குக் கீரை பிடிக்காது. சாப்பிட மிகவும் பாக்யாவைப் படுத்துவாள்..ஒரு மணி நேரம் பாக்யா ஈஷா பின்னாடி ஓடி ஊட்ட வேண்டும். இன்று 20 நிமிடத்தில் எல்லா குழந்தைகளும் சாப்பிட்டு முடித்துவிட்டனர்.

பாக்யாவுக்கு ஒரு பழக்கம். எங்கேயாவது நல்ல சமையலை விரும்பிச் சாப்பிட்டால் சமைத்தவர்களை வாழ்த்திவிட்டு ரெசிபி கேட்பாள். சித்தியுடன் சமையலறையில் சுத்தம் செய்துகொண்டே பாக்யா "சித்தி, சமையல் ரொம்ப நல்லா இருந்தது. ஈஷா விரும்பிச் சாப்பிட்டாள். ரெசிபி சொல்லுங்க" என்று கேட்டாள்.

"ஒண்ணுமில்லம்மா. நம்ம வீட்டில் செய்யறதுதான். கீரையைக் கொதிக்கவிட்டு, உப்புப் போட்டு கடையணும். வெந்த பருப்பைப் போட்டு, சீரகத்தை உடைத்துப் போடணும். கடுகு, மிளகாய், பெருங்காயம் தாளிக்கணும்" என்றார் சித்தி.

"சித்தி. இதையேதான் நானும் செய்றேன். ஆனால் ஈஷா யூ.எஸ்ல இருக்கும்போது கீரைக் கூட்டு சாப்பிடவே மாட்டாள்" என்று ஆதங்கப்பட்டாள். இதை கவனித்துக் கொண்டிருந்த பாட்டி, "பாக்யா இங்கே வாம்மா..இங்க வந்து உட்கார்" என்றார். "பாக்யா... ஒவ்வொரு மண்ணுக்கும் ஒரு வாசனை உண்டு. நாம சமைக்கறது ஒரே மாதிரியா இருந்தாலும், காய்கறிகள் அந்தந்த மண்ணின் ருசியையும், தண்ணியோட ருசியையும் சேர்த்துக் கொடுக்குது. கல்லுச் சட்டியில வைத்து மண் அடுப்பில சமைக்கிறதால இன்னும் ருசி கூடுது. எல்லாக் குழந்தைகளுமே மற்றக் குழந்தைகளுடன் சேர்ந்து சாப்பிடும்போது விரும்பித்தான் சாப்பிடுவார்கள்" என்றார். பாக்யாவுக்கும் அது சரியாகப் பட்டது.

மறுநாள் மதியம் திருச்சி போவதாகத் திட்டம். சித்தப்பா கேட்டார், "ராமா, இந்த தடவை பாம்பே போறியா?". சித்தப்பாவின் மூத்த பெண் ராதாவும், இன்னொரு சித்தப்பாவும் பாம்பேயில் இருக்கிறார்கள். "இல்ல சித்தப்பா. எங்க ரெண்டு பேருக்குமே மூணு வாரம்தான் லீவு. திருச்சியில் பாக்யாவையும் குழந்தைகளையும் பாக்யாவின் பெற்றோர் வீட்டில விட்டுட்டு, நான் சென்னைக்குப் போறேன். அங்க அம்மா அப்பாவோட இருந்துட்டுத் திரும்ப திருச்சிக்குப் போறேன். விக்னேஷுக்கு அதுக்குள்ள கொஞ்சம் முடி வளர்ந்துடும். திருச்சியிலேருந்து சுவாமிமலை போய், அவனுக்கு ரெண்டாவது மொட்டை போடணும்" என்றான்.

எல்லோரும் அரட்டை அடித்துவிட்டு லேட்டாகத் தூங்கினார்கள். மறுநாள் எழுந்தவுடன் பெண்கள் குளித்துவிட்டுச் சமையல் செய்யத் தயாரானார்கள். குழந்தை ஈஷா "சித்திப்பாட்டி, இன்னிக்கும் எனக்கு ஸ்பினாச் பண்ணித் தரீங்களா? என்றாள்.

"ஈஷாக் குட்டி சாப்பிடும்னா நிறையப் பண்றேன் தங்கம்மா" என்றார். ஈஷா குழந்தைகளுடன் விளையாடச் சென்றது. குழந்தை விக்னேஷ் மாடு, ஆடுகளைப் பார்த்து பரவசப்பட்டது.

சித்தி, பாக்யாவிடம் "நீயே இன்னிக்குக் கீரைக்கூட்டு செய்யம்மா" என்று சொல்லிவிட்டுக் கீரையை நறுக்க ஆரம்பித்தாள். சித்தி பெண்கள் ஆளுக்கொரு ஐட்டம் செய்து அசத்தினர். ஆண்கள் எல்லோரும் ஆற்றில் குளித்துவிட்டு வந்தனர். ராமனுக்கு ரொம்ப நாளுக்குப் பின் ஆற்றில் குளித்தது புத்துணர்ச்சி அளித்தது. எல்லோருக்கும் உணவு பரிமாறப்பட்டது.

ராமன், "சித்தி, எத்தனைமுறை கீரை சாப்பிட்டாலும் அலுக்காது. உங்க கைப்பக்குவம் அப்படி" என்றான்.

சித்தி, "ராமா, இன்னிக்கு கீரை செய்தது உன் பெண்டாட்டி பாக்யாதான். பாட்டி சொல்றமாதிரி இது மண்ணோட வாசனைதான்" என்றாள்.

இதைக் கவனித்துக் கொண்டிருந்த ஈஷா "This is the smell of the soil!" என்றாள்.

ராஜேஸ்வரி ஜெயராமன்,
சாந்தா கிளரா, கலிபோர்னியா
More

ரங்கதாசி
மனச்சாட்சி
Share: 
© Copyright 2020 Tamilonline