Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | அஞ்சலி | நலம் வாழ | சினிமா சினிமா
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சிறப்புப் பார்வை | வாசகர் கடிதம் | பொது | பயணம் | கவிதைப்பந்தல் | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
மகதி
மனுஷ்யபுத்திரன்
- அரவிந்த் சுவாமிநாதன்|செப்டம்பர் 2012||(2 Comments)
Share:
'என் படுக்கையறையில் யாரோ ஒளிந்திருக்கிறார்கள்' கவிதைத் தொகுப்பு அப்துல் ஹமீது என்னும் மனுஷ்யபுத்திரனை உலகுக்கு ஒரு கவிஞராக இனம் காட்டியது. எழுத்தாளர், பதிப்பாளர், பத்திரிகையாசிரியர், பாடலாசிரியர், அரசியல்-சமூக விமர்சகர் என்று இவருக்குப் பிற முகங்களும் உண்டு. 'நீராலானது', 'இடமும் இருப்பும்', 'மணலின் கதை', 'கடவுளிடம் பிரார்த்தித்தல்', 'அதீதத்தின் ருசி' 'பசித்த பொழுது' என்று பல செறிவான கவிதைத் தொகுப்புகளைத் தந்தவர். சுஜாதாவை இன்னொரு முறை உலகுக்குத் தந்த 'உயிர்மை' பதிப்பக நிறுவனர். உயிர்மை இலக்கிய இதழின் (www.uyirmmai.com) ஆசிரியர். இளம் படைப்பாளிகளுக்குத் தேசிய அளவில் தரப்படும் 'சன்ஸ்கிருதி சம்மான்' விருதை ஜெயமோகனுக்குப் பிறகு தமிழில் பெற்ற ஒரே படைப்பாளி. அமெரிக்க இலக்கிய நண்பர்கள் குழு வழங்கிய 'இலக்கியச் சிற்பி' விருது பெற்றிருப்பவர். ரம்ஜானை அடுத்த ஒரு மதிய நேரத்தில் அவரைச் சந்தித்தோம். அந்தச் சந்திப்பிலிருந்து...

கே: உங்கள் முதல் கவிதைத் தொகுப்பு உங்களின் மிக இளவயதிலேயே வெளியாகி விட்டது. அது எப்படிச் சாத்தியமானது?
ப: இரண்டாம் வகுப்பு படிக்கும்போதே தமிழைச் சரளமாக வாசிப்பேன். அதற்கு எனது ஆசிரியைகள் ஒரு காரணம். என் தந்தை நிறைய வாசிப்பார். வீட்டில் நிறையப் பத்திரிகைகள், புத்தகங்கள் இருக்கும். அவற்றைப் படித்து ஒரு கனவுலகத்தை உருவாக்கிக் கொண்டு அதில் வாழ ஆரம்பித்தேன். காமிக்ஸ், மாயாஜாலக் கதாநாயகர்களுடன் கற்பனையில் பேசுவேன். அது கனவுகளும் கற்பனைகளும் கூடிய ஒரு பிரமாண்ட உலகமாக என்னுள் விரிந்தது. எனக்கும் எழுத வேண்டும் என்ற ஆர்வம் துளிர்த்தது. ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது என் முதல் கதையை எழுதினேன். பள்ளிப் படிப்பைக்கூடத் துறந்து விட்டு மிகத் தீவிரமாக வாசிக்க ஆரம்பித்தேன். ஆனால் வளர வளர என்னுடைய மனமும், உணர்வுத் தளமும் கவிதையை நோக்கிப் பயணித்தன. முதல் கவிதைத் தொகுப்பான 'மனுஷ்யபுத்திரன் கவிதைகள்' எனது 16ம் வயதில் மணிமேகலை பிரசுரம் மூலம் வெளியானது.

கே: உங்கள் கவிமொழி மிக வித்தியாசமானது. உரையாடல் சார்ந்தது என்றும் சொல்லலாம். அது எப்படிக் கைவந்தது?
ப: என்னுடைய கவிதையின் மொழி மிக இயல்பானது. சாதாரணமானது. சிக்கலான, குழப்பமான வாசகங்களை நான் பயன்படுத்துவதில்லை. அன்றாடம் புழங்கும் சொற்களைக் கொண்டே கவித்துவமான மொழியை எப்படி உருவாக்குவது என்று யோசிப்பேன். கவிதைக்கென்று கவித்துவமான சொற்கள் தேவையில்லை. சக மனிதர்களுடன் உரையாடும் போது, அன்பு செலுத்தும் போது, வெறுக்கும் போது பயன்படுத்தும் மொழியையே, வானொலியில், பத்திரிகைகளில் பயன்படுத்தும் மொழியையே கவிதைக்கும் பயன்படுத்தத் தீர்மானித்தேன். அதனால்தான் உரைநடைக்கு மிக நெருக்கமாக என் கவிதைகள் இருக்கின்றன. அலங்காரங்களையும், பாசாங்குகளையும், ஜோடனைகளையும் மறுத்துவிட்டு நேரடி வாழ்க்கையின் இயல்பான மொழியால், சாதாரணச் சொற்களால், எண்ணங்களின் உக்கிரத்தால் கவிதையை எப்படி உருவாக்குவது என்பதைச் சவாலாக எடுத்துக் கொண்டேன். அதன் விளைவுதான் என் கவிதைகள்.

கே: கவிதை என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்?
ப: ஒரு கவிதை தன்னளவில் வாசகனுடன் நேரடியாக, அந்தரங்கமாக உரையாட வேண்டும் என்பதுதான் என் பார்வை. கவிதைகளைச் சூத்திரமாக அல்லது ஒரு மர்மக் குகைப் பாதையாக மாற்றுவதைவிட மனதின் மிக அந்தரங்கமான ஓரிடத்தைத் தொட்டுத் திறப்பதுதான் கவிதையின் பணி. ஆனால் நவீன கவிதைகள் இருட்டையும், திகைப்பையும் என்னுள் உண்டு பண்ணின. அதே சமயம் பாரதி உருவாக்கிய உக்கிரமான கவிதை மரபு என்னுள் ஆழமான கவித்துவம் சார்ந்த ஓர் அடித்தளத்தை உருவாக்கியது. நகுலன், பிரமிள், ஆத்மாநாம், கலாப்ரியா போன்றவர்களின் கவிதைகளில் உள்ள உக்கிரம் என்னுள் படிய ஆரம்பித்தது. இந்த உலகின் ஒவ்வொரு சின்னஞ்சிறு விஷயமும் கவிதைக்கான சாத்தியத்தைத் தன்னுள் ஒளித்து வைத்துக் கொண்டிருக்கிறது. ஒரு கவிஞன் அதைப் பார்ப்பதற்கான இதயமும், கண்களும் கொண்டிருக்க வேண்டும்.

அந்த வகையில் என்னுடைய கவிதைக்கான எல்லா வாசல்களையும் நான் திறந்து விட்டேன், அதற்குள் காற்றும், வெளிச்சமும், இருளும், மழையும், வெயிலும், தூசும், பனியும், எதுவானாலும் உள்ளே வந்து நிரம்பட்டும் என. நான் என்னை எந்த ஒரு மையத்திலும் முனையிலும் கட்டுப்படுத்திக் கொள்ளவில்லை. ஒரு கவிதையில் ஒரு சொல்லைத் திரும்பத் திரும்பச் சொல்வேன். ஒவ்வொரு முறையும் அதன் அர்த்தம் மாறிக்கொண்டே வரும். உதாரணமாக, “வெயில் வந்து விட்டது” என்ற சொல்லைக் கையாண்டால், அந்த வெயிலை, அதன் உஷ்ணத்தை, அதன் ஆழத்தை உணரும்வரை அதைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்துவேன். ஒரு சொல் என்பது ஒரு சொல் அல்ல. அதற்குள் பல அர்த்தங்கள் பதுங்கி இருக்கின்றன. நாம் சொற்களின் அர்த்தங்களைக் கொலை செய்துவிட்டு, அவற்றைப் புறந்தள்ளி விட்டு, மேம்போக்காக, வெறும் கூடாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். யோசித்துப் பாருங்கள், இன்று 'புரட்சி', 'காதல்', 'வசந்தம்' என்ற சொற்கள் எவ்வளவு அர்த்தம் இழந்து போய்விட்டன என்று. நான் இதுபோன்ற சொற்களை மீட்டுருவாக்கம் செய்து, வெவ்வேறு தொனியில், பொருளில், ஆழத்தில் கவிதைக்குள் பயன்படுத்திப் பார்க்கிறேன். சொற்களைச் சுரண்டி அதன்மேல் படிந்துவிட்ட களிமண்ணையும் தூசையும் நீக்கி அதன் பிரகாசத்தை வெளிக் கொண்டுவருவதுதான் ஒரு கவிஞனாக என்முன் இருக்கும் சவால்.

கே: சுந்தரராமசாமி உங்களைப் பாதித்த மிகப்பெரிய ஆளுமை, அல்லவா?
ப: ஆம். நவீன தமிழ் இலக்கியத்தின் மகத்தான ஆளுமையான சுந்தரராமசாமியுடன் நெருங்கிப் பழகக் கிடைத்த வாய்ப்பு என் வாழ்க்கையின் மிகப்பெரிய பேறு. சிற்றிதழ் மற்றும் தீவிர இலக்கியம் சார்ந்ததோர் இலக்கிய இயக்கத்திற்கு முகமாக இருந்தவர் அவர். இலக்கியம் சார்ந்த பல தார்மீக நெறிமுறைகளை தன் வாழ்நாளெல்லாம் மிகப் பிடிவாதமாக வலியுறுத்தி வந்தவர். அற்புதமான எழுத்தாளர்; மிக அற்புதமான மனிதர். அவருடன் பத்தாண்டுகள் நெருங்கிப் பழகும் சந்தர்ப்பம் எனக்கு வாய்த்தது. அவருடைய ஜே.ஜே. சில குறிப்புகளைப் படித்து விட்டு ஒரு வாசகனாக அவரை நான் தேடிச் சென்றேன். என்னுடைய வாழ்க்கையை ஜே.ஜே.வைப் படிப்பதற்கு முன், ஜே.ஜே.வைப் படித்ததற்குப் பின் என இரண்டாகப் பகுத்து விடலாம். அந்த முதல் சந்திப்பு முதலே அவர் எனக்கு மிகவும் அந்தரங்கமானவராக, நேசத்துக்குரியவராக மாறிவிட்டார். என் வாழ்க்கையின் பல அடிப்படையான விஷயங்களில் தெளிவு ஏற்படுவதற்கு அவருடனான உரையாடல் பயன்பட்டது. தனது உரையாடல் வழியாக நமது எண்ணங்களின் பல கதவுகளை அவர் திறந்து கொண்டே இருப்பார். அவருடனான பழக்கம் இலக்கியத்தில் ஆழமான பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்ளத் தூண்டுதலாக இருந்தது. அவரும் என்மீது எல்லையற்ற ஒரு பிரியத்தைக் கொண்டிருந்தார். பிற்காலத்தில் சில கசப்புகள், முரண்பாடுகள் வந்தாலுமே கூட, நான் யோசிக்க நேர்ந்த பல விஷயங்களுக்கு அடித்தளமாகச் சுந்தர ராமசாமியின் எழுத்துகளும், அவருடன் பழகிய காலங்களும் இருந்திருக்கின்றன என்பது உறுதி.

கே: பல இளம் எழுத்தாளர்களை, இளம் கவிஞர்களை உயிர்மை மூலம் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். அதுகுறித்துச் சொல்லுங்கள்...
ப: நான் ஒரு பத்திரிகை ஆசிரியன், பதிப்பாளன் என்பதைவிட ஒரு வாசகன் என்றே சொல்லிக் கொள்ள விரும்புவேன். உண்மையான புரிதலுடனும், அக்கறையுடனும் கவிதை எழுத வருகிற யாரானாலும், அவருக்கு ஓர் இடத்தைத் தர வேண்டும் என்பது என் எண்ணம். என் முதல் புத்தகத்தைப் பதிப்பித்த லேனா தமிழ்வாணன், பின்னர் சுஜாதா போன்ற எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பதிப்பாளர்கள், நண்பர்கள் எனப் பலர் என்னை இன்றைய இடத்தை நோக்கி நகர்த்தியிருக்கிறார்கள். நானும் அதுபோலவே ஆர்வமும், திறனும், அக்கறையும் கூடிய அடுத்த தலைமுறைப் படைப்பாளிகளுக்கு, உத்வேகமான எழுத்தாளர்களுக்கு ஒரு வெளியை உருவாக்கித் தர வேண்டும், பிரசுரம் சார்ந்த கவலையிலிருந்து விடுபட்டுச் சுதந்திரமாக அவர்கள் இயங்க எனது சக்தியைத் தர வேண்டும் என்ற எண்ணம் எனக்கு எப்போதும் உண்டு.. அதனால்தான் நான் எப்போதுமே புதிய எழுத்தாளர்களைத் தேடித்தேடிச் செல்கிறேன். ஒரு பத்திரிகையாளனாக இருப்பதின் மிகப் பெரிய சுவாரஸ்யமாகவும், சவாலாகவும் நான் கருதுவது அதைத்தான். பாரதிமணி, ஷாஜி, எஸ்.வி.ராமகிருஷ்ணன் என்று யாரானாலும், எங்கோ நான் படித்த இவர்களது ஒரு சிறிய பத்தியைக் கொண்டு, இவர்களைத் தேடிச் சென்று, எனது பத்திரிக்கைக்கு எழுதுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறேன். அது ஒரு மோப்பசக்தி. எனக்குக் கிடைத்த மிகப் பெரிய சந்தோஷம் இது. புத்தகம் விற்குமா, எழுதுபவர் பிரபலமானவரா என்றெல்லாம் நான் யோசிப்பதே இல்லை. அந்தப் படைப்பு படிக்கத் தகுதியானதா, நூலாகும் தகுதி பெற்றதா என்றுதான் ஒரு வாசகனாக நான் பார்ப்பேன்.
கே: அப்படிப் பார்த்தால் ஒரு பதிப்பாளராக பாதிப்பு ஏற்படுமே?
ப: ஏற்படும். ஆனால் இலக்கியம் எப்போதுமே தமிழில் வியாபாரமாக இருந்ததில்லை. இருக்கவும் முடியாது. வியாபார நோக்கில் மட்டுமே இருந்திருந்தால் இன்றைக்குத் தமிழில் பல நல்ல நூல்கள் வெளிவந்தே இருக்காது. இது ஒரு போராட்டம். வெகுஜன கலாசாரத்துக்கு எதிராக எழுத்தாளர்களும், கலைஞர்களும் தொடர்ந்து நடத்தும் போராட்டம். இதில் பலர் தங்கள் ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்திருக்கிறார்கள். அவர்களால்தான் இன்றைக்குத் தமிழ் வாழ்கிறது. இன்றைக்கு வாழ்கிற தமிழ் என்று நாம் எதைச் சொல்கிறோம் என்றால் எது நமது வாழ்க்கையைப் பிரதிபலிக்கிறதோ, எது நமது கலாசாரத்தைப் பிரதிபலிக்கிறதோ, அதைத்தான். அந்த நவீனத் தமிழை உருவாக்கியவர்களுக்குத்தான் மொழிசார்ந்த அத்தனை உரிமைகளும் இருக்கின்றன என்பதை நான் உறுதியாகச் சொல்ல விரும்புகிறேன்.

கே: திரைப்படப் பாடல்கள் எழுதுகிறீர்கள் அல்லவா?
ப: அது நான் நட்பு கருதிச் செய்யும் விஷயம். என்னைத் 'திரைப்படப் பாடலாசரியன்' என்று அழைக்க முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை. என்மீது அன்புகொண்ட நண்பர்கள் சினிமாவுக்கு ஒரு பாடல் தாருங்களேன் என்று கேட்கும்போது, நான் செய்வது இது. புதிய ஊடகங்களில், புதிய களங்களில் பணியாற்றுவதில் எனக்கு மிக விருப்பம். நான் திரைப் பாடல் ரசிகன். சினிமாப் பாடல்களில் பலவற்றுக்கு இலக்கிய அந்தஸ்து இருப்பதாக நான் நினைக்கிறேன். அவ்வளவு சிறந்த பாடல்கள் தமிழில் இருக்கின்றன. எனக்கும் சில பாடல்களை எழுதக் கிடைத்த அனுபவம் மகிழ்ச்சியைத் தருகிறது. ஒரு எழுத்தாளன் மொழிசார்ந்த எல்லா வடிவங்களிலும் வேலை செய்யும் சவாலை விரும்புவான். நானும் பத்திகள் எழுதுகிறேன், தொலைக்காட்சி விவாதங்களில் கலந்து கொள்கிறேன். அப்படித்தான் திரைப்படப் பாடல் எழுதுவதும்.

கே: ஒரு படைப்பாளியான நீங்கள் பத்திரிகை ஆசிரியராகவும் இருப்பது பலமா, பலவீனமா?
ப: இதில் பாரதியை நான் முன்னோடியாகச் சொல்வேன். அவன் பத்திரிகைத் துறையிலும், தேசியப் போராட்டத்திலும் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருந்த காலத்தில்தான் மகத்தான பல கவிதைகளைப் படைத்தான். இது நம்முடைய திறனைப் பொறுத்தது. அது குறைவாக இருந்தால் சில பணிகளை மட்டுமே நம்மால் செய்ய முடியும். ஒரு வேலை செய்யும் போது மற்றொரு வேலையைச் சுமையாக நினைக்கத் தோன்றும். ஆனால் ஆற்றல் அதிகமாக இருந்தால் பல தளங்களில் சிறப்பாகச் செய்ய இயலும். படைப்பு என்பது நான் சிறுவயதிலிருந்தே கனவுகண்ட ஒரு துறை. சில சமயங்களில் வேலை அதிகமாக, கடினமாக, இருக்கலாம். ஆனால் அது எனக்கு மிக இணக்கமானது. மகிழ்ச்சியை, நிறைவைத் தருவது. கடினமான வேலைக்கு இடையில் என்னால் ஒரு கவிதையை எழுதி விட முடியும். எழுதும் மனநிலையில் இருக்கும்போது என்னைச் சுற்றிப் பல நூறு பேர் நின்றாலும் அது என் எழுத்தைப் பாதிக்காது. புற உலகிலிருந்து என்னை விலக்கிக் கொள்வதற்கான தளம்தான் மொழி, கற்பனை ஊறும் மனம். சொல்லப் போனால் அதுதான் கவித்துவ வளம். அதனால் மற்ற பணிகள் என் படைப்பாற்றலுக்கு இடையூறாக இருப்பதில்லை.

கே: தற்போது பத்திரிகைகளில் அதிகம் சிறுகதைகளைக் காண முடியவில்லை. இது கால மாற்றமா? அல்லது கதை எழுதுபவர்கள் குறைந்து போய்விட்டார்களா?
ப: கதைகள் எழுதுவோர் குறைந்து போய்விட்டார்கள் என்று சொல்ல முடியாது. இன்றைக்கு வாசக நுகர்வு மாறி இருக்கிறது. அதனால்தான் செய்திக் கட்டுரைகளும், பிரச்சனைகளும் அதிகம் எழுதப்படுகின்றன. இலக்கியம் என்பது உடனடியாகப் படிக்கப்பட்டாலும் நீடித்த மதிப்பைக் கொண்டது. ஆனால் நீடித்த மதிப்புக் கொண்ட எதுவுமே தேவையில்லை என்ற எண்ணம் பரவலாகிவிட்டதோ என்று எனக்குத் தோன்றுகிறது. முன்பெல்லாம் வெகுஜனப் பத்திரிகைகள் மூலம் பல எழுத்தாளர்கள் உருவாக்கப்பட்டார்கள். நிறையத் தொடர்கதைகள் வெளிவந்தன. ஆனால் இன்றைக்குப் பத்திரிகைகளில் தொடர்கதைகளே வருவதில்லை. ஏன்? வாசகர்கள் மாறுகிறார்கள் என்பதைவிட, பத்திரிகைகள் இந்த மாற்றத்தை ஊக்குவித்து விரைவுபடுத்தி விட்டன என்றுதான் சொல்ல வேண்டும்.

சாவி, எஸ்.ஏ.பி. எல்லாம் பல எழுத்தாளர்களை உருவாக்கினர். இன்றைக்கு எந்த வெகுஜனப் பத்திரிகையாவது எழுத்தாளர்களை உருவாக்குகிறதா? இல்லை. ஏன் இல்லை என்றால் அவர்களுக்கு எழுத்தாளர்கள் தேவையில்லை. அவர்களுக்கு செய்தியும், புகைப்படமும், துணுக்குத் தோரணமும் போதுமானதாக இருக்கிறது. உடனடி நுகர்வாளர்கள் என்ற தளத்தில் வாசகர்களை நிறுத்துவதன் மூலமாக அவர்கள் மிகப்பெரிய தீங்கை வாசக ரசனைக்குச் செய்கிறார்கள். சொல்லப்போனால் நினைவுகளே தேவைப்படாத, நீடித்த ரசனை தேவைப்படாத ஒரு சமூகத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நினைவுகளற்ற, கலைகளற்ற, கலைகளின் ரகசியங்கள் அற்ற ஒரு சமூகம் என்பது ஒரு வறண்ட சமூகமாக மாறிவிடும். நம் தமிழ்ச் சமூகம் அப்படிப்பட்ட சமூகமாக மாறிக்கொண்டிருப்பது மிகவும் கவலை தருகிறது.

கே: புத்தகச் சந்தைகள் பற்றி உங்கள் கருத்தென்ன?
ப: புத்தகச் சந்தைக்கு வருபவர்களின் எண்ணிக்கையை வைத்து வாசிக்கும் பழக்கத்தை அளவிட முடியாது. புத்தகச்சந்தைக்கு மக்கள் பல காரணங்களுக்காக வருகிறார்கள். சமையல் குறிப்பு, ஜோதிடம், தொழில்நுட்பம் சார்ந்த கையேடுகளை வாங்கக் கூட அவர்கள் வரக்கூடும். அவையெல்லாம் புத்தகமாகா. அப்பொழுது, எதுதான் புத்தகம்? எது ஓர் இலக்கியத்தைச் சிந்தனையோடும், மொழியோடும் காத்திரமாக நம்முன் வைக்கின்றதோ அதுவே புத்தகம். அத்தகைய புத்தகங்களைப் படிக்கும் வாசகர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே உள்ளது. ஆனால் இரண்டு மாற்றங்கள் தமிழில் நடந்திருக்கின்றன. ஒன்று, கல்வி வளர்ச்சியின் காரணமாக ஒரு சிறு சதவிகிதத்தினர் கூடுதலாகப் புத்தகங்களை வாசிக்க ஆரம்பித்துள்ளனர். பல சமூகப் பிரிவுகளில் முதல் தலைமுறை வாசகர்கள் உருவாகியிருக்கிறார்கள். இரண்டாவதாக, இணைய தளங்களிலிருந்து நிறைய இளம் வாசகர்கள் வாசிப்பிற்கு வந்திருப்பதைப் பார்க்கிறேன். ஒரு படைப்பையோ, எழுத்தாளனையோ அறிந்து கொண்டு, அவற்றை புத்தகச் சந்தைக்கு வருவதைப் பார்க்கிறேன். இந்தப் புதிய ஊடகங்கள் வேறு தளத்தில் உள்ள வாசகர்களை அறிமுகப்படுத்தியிருக்கின்றன. இருந்தாலும், தமிழில் புத்தகச்சந்தை என்பது பலவீனமான ஒன்றுதான்.

இதை ஒரு மாற்றத்திற்கான துவக்கம் என்று சொல்லலாம். ஆனால் இதையே ஒரு மாற்றம் என்று சொல்ல முடியாது. இந்த நிலை மாற வேண்டும், நம்முடைய மொழி வாழ வேண்டும் என்றால் நாம் குழந்தைகளிடம் தமிழ்சார்ந்த ஓர் மனப்பான்மையை நாம் உருவாக்க வேண்டும். மொழியறிவையும், இலக்கிய அறிவையும் ஆழமாகச் சிறுவயதிலிருந்தே பயிற்றுவிக்க வேண்டும். அது வெறும் நவீன இலக்கியமாக மட்டுமல்லாமல் மரபிலக்கியம், பக்தி இலக்கியம், சங்க இலக்கியம் என எல்லாத் தளங்களிலும் கொண்டு போய்ச் சேர்த்தால் நிச்சயம் நல்ல வளமான, சிறப்பான எதிர்காலம் இருக்கும். பலருக்கு இந்த முக்கியத்துவம் தெரியவில்லை. இது நிச்சயமாக ஒரு தலைமுறையின் கலாசாரத்தை இழக்கடிக்கும் விஷயமாக இருக்கும். நம் மொழி, இலக்கியம் வளர வேண்டும், வாழ வேண்டும் என்றால் இவற்றை ஒரு வேள்வியாகப் பயில வேண்டும். பயில்விக்க வேண்டும்.

கே: எழுத்தாளர்களுக்குச் சரியாக ராயல்டி தொகை வழங்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு பற்றி ஒரு பதிப்பாளராக உங்கள் கருத்து என்ன?
ப: பல பதிப்பாளர்கள் அதைச் செய்வதால்தான் அப்படிச் சொல்லப்படுகிறது. உயிர்மை 12.5 சதவிகித ராயல்டியை எழுத்தாளர்களுக்கு வழங்குகிறது. சில இளம் எழுத்தாளர்களின் நூல்கள், கவிதைத் தொகுப்புகள் 300, 400 பிரதிகள் மட்டுமே அச்சிடப்படும். அதில் 100 பிரதிகளுக்கு மேல் அவர்களே வாங்கிச் சென்று விடுவார்கள். ராயல்டி தொகைக்கு இணையாக அவர்கள் அச்சுப் பிரதிகளாகவே வாங்கிச் சென்றிருப்பார்கள். அவர்கள் புத்தக விற்பனையும் குறைவாகவே இருக்கும். ஆனால் பிரபலமான, நன்கு விற்பனையாகும் படைப்பாளிகளின் நூல்களுக்குப் பெரிய தொகையை ராயல்டியாக வழங்கி வருகிறோம். இது தார்மீக அடிப்படையிலான விஷயம். எழுத்தாளனை ஏமாற்றுவது அந்த மொழிக்குச் செய்யும் துரோகம். காரணம், எழுத்தாளனுக்குப் பெரிதாகப் புகழோ, பணமோ, ஏன், குடும்பத்தின் ஆதரவோகூடக் கிடைப்பதில்லை.

ஆனால் பல இளம் எழுத்தாளர்கள் ஒரு புத்தகம் வெளிவந்த உடனேயே சமூகம் தன்னைப்பற்றிப் பேசத் துவங்கி விடுவதாக நினைக்கிறார்கள். இந்தச் சமூகத்துக்குப் புத்தகங்கள் மீது பெரிய அக்கறை எதுவும் கிடையாது. கிட்டத்தட்ட 8 கோடிப் பேர் வாழும் தமிழ்ச் சமூகத்தில், ஒரு நூலின் 600 பிரதிகள் அச்சிடப்பட்டு, அதை 200, 300 பேர் வாங்கி, அதில் சிலபேர் மட்டுமே வாசிப்பதுதான் உண்மையில் நிகழ்கிறது. புத்தகங்கள் வாங்கிச் செல்லும் பலர், பின்னால் படித்துக் கொள்ளலாம் என்று அடுக்கி வைத்துவிடுகிறார்கள். இதுதான் யதார்த்தம். இப்படியிருக்கையில் இந்தச் சமூகத்தில் எழுத்தாளன் தனது இடம் என்பது குறித்து என்ன நினைத்துக் கொண்டாலும் அது கற்பனையானதே.

கே: எழுத்தாளன் யார்?
ப: தொடர்ந்து எழுதுபவன்தான் எழுத்தாளன். எப்போதோ ஒரு கவிதையோ, கதையோ எழுதி விட்டு, தான் ஒரு எழுத்தாளன் என்ற நம்பிக்கையில் வாழ்ந்து கொண்டிருப்பவன் எழுத்தாளன் அல்ல. ஒரு எழுத்தாளன் தினமும் சில பக்கங்களாவது எழுத வேண்டும். பல பக்கங்களாவது வாசிக்க வேண்டும். தொடர்ந்து எழுதிக்கொண்டே இருக்க வேண்டும். ஆண்டுக்கொரு நூலாவது வெளிவர வேண்டும். இன்றைக்கு எழுத்து ஒரு 'ஹாபி'யாக மாறி வருகிறதோ என எனக்கு அச்சமாக இருக்கிறது. ஒரு புத்தகத்தை எழுதி முடித்து, அது வெளியானதும் இந்தச் சமூகம் ஏன் என்னை அங்கீகரிக்கவில்லை என்று சிலர் கேள்வி கேட்கிறார்கள். அங்கீகாரம் என்பது சுலபமாகக் கிடைத்துவிடக் கூடியது என்று நினைக்கிறார்கள். இன்றைய ஊடகச் சூழலில் அந்த எதிர்பார்ப்பு இயல்பானதுதான். ஆனால் ஒரு எழுத்தாளனாக இருப்பதற்கு அங்கீகாரங்களை விட, ஊடக வெளிச்சத்தைவிட அவனுடைய உள்ளொளியின் வெளிச்சம் வேண்டும். அந்த வெளிச்சத்தின் மூலம் இதுவரை சொல்லப்படாத ஒன்றை அவன் சமூகத்துக்குச் சொல்ல வேண்டும்; தர வேண்டும். படைப்பின் நெருப்பைத் தொடர்ந்து எரியச் செய்பவன்தான் எழுத்தாளன். ஆனால் முந்தைய தலைமுறை எழுத்தாளர்களோடு ஒப்பிட்டால் இந்தத் தலைமுறை எழுத்தாளர்களிடம் அந்த உத்வேகம் குறைவுதான். நிறையப் பேர் எழுதினாலும், தனித்துவமான ஆளுமை குறைவாகவே இருக்கிறது. படைப்பு ஆளுமையாகத் தன்னை உருவாக்கிக் கொள்வதற்கான படிப்பு, உழைப்பு இரண்டும் கொண்டவர்கள் மிகக் குறைவாகவே இருக்கிறார்கள்.

கே உங்களைக் கவர்ந்த எழுத்தாளர்கள்....
ப: புதுமைப் பித்தன், மௌனி, லா.ச.ரா., தி.ஜா.ரா., அசோகமித்திரன், சுஜாதா, சுந்தர ராமசாமி, ஆதவன், ஜெயகாந்தன், கு.அழகிரிசாமி, பின்னால் வந்த எஸ்.ரா., ஜெயமோகன் எனப் பலரது எழுத்து என்னுள் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கவிஞர்களில் பிரமிள், நகுலன், ஞானக்கூத்தன், சுகுமாரன், கலாப்ரியா, வண்ணநிலவன், வண்ணதாசன், ஆத்மாநாம் எனப் பலர் ஈர்ப்பையும், திறப்பையும் தந்தவர்கள். எழுத்துலக ஆசான்கள் என்றுகூட சொல்லலாம். இவர்கள் எல்லோருமே மொழியின் புதிய சாத்தியங்களைச் சொல்லித் தந்திருக்கிறார்கள்.

கே: நம்பிக்கை தரும் இளம் கவிஞர்கள் குறித்துச் சொல்லுங்கள்...
ப: இன்றைக்கு நிறையக் கவிஞர்கள் எழுதுகிறார்கள். எனக்குப் பின்னால் வந்த பலரது கவிதைகளில் எனக்கு ஆழ்ந்த ஈடுபாடு இருக்கிறது. குறிப்பாக முகுந்த் நாகராஜன். வாழ்க்கையின் எளிமையும், கவித்துவமும் கூடிய ஓர் அழகை அவர் கவிதைகளில் பார்க்கிறேன். சங்கர ராம சுப்ரமணியன், யூமா வாசுகி, குட்டி ரேவதி, மாலதி மைத்ரி போன்றோர் வீச்சுள்ள கவிதைகளைத் தொடர்ந்து எழுதுகிறார்கள். ஈழத்திலிருந்து தீபச்செல்வன் போன்றோர் ஆழமான கவிதைகளை எழுதி வருகிறார்கள். ஆனால் தமிழில் மிகப்பெரும் அளவில் சிறந்த கவிஞர்கள் இருக்கிறார்கள் என்று சொல்ல இயலாது. ஏராளமான நல்ல கவிதைகள் எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால் சில நல்ல கவிஞர்கள் மட்டுமே இருக்கின்றனர்.

கே: எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன?
ப: எனது இன்றைய வாழ்வு, நேற்றைய திட்டமல்ல; என் வாழ்க்கையில் எனக்குப் பிடித்த விஷயங்களை நான் தொடர்ந்து செய்து கொண்டே இருக்கிறேன். பிடிக்காததைச் செய்வதில்லை. எனது நம்பிக்கை, ரசனை, விருப்பம் இவற்றுக்காகப் பிடிவாதமாகச் செய்த காரியங்கள் இன்றைக்குச் சில விஷயங்களை உருவாக்கி இருக்கின்றன. இதே பிடிவாதத்தோடு நான் தொடர்ந்து செயல்படும்போது நாளை அது வேறு சில விஷயங்களை உருவாக்கும், சாதகமாகவோ, பாதகமாகவோ. ஆகவே நேற்றைக்கு, இன்றைக்கு மட்டுமல்ல; நாளைக்குக்கூட எனக்கு ஏதும் திட்டங்களோ, கனவுகளோ கிடையாது. இந்த நாள் எனக்கு வாழ்வதற்கு அளிக்கப்பட்ட ஒரு கொடை. இதில் என் விருப்பங்களின்படி என் வேலைகளை நான் செய்து கொண்டே இருப்பேன். அவ்வளவுதான்.

ஒரு ஊழி வந்து குலைய வைக்கும்
என்று நாம் காத்திருப்போம்.
புரட்டிப் போடுமே நம்மை
நம் காலடி மண்ணில்
பூகம்பங்கள்


என்று ஒரு கவிதையில் சொல்லியிருப்பேன். நம்மை அழிப்பதற்கு, மாற்றுவதற்கு பெரிய ஊழி வர வேண்டும் என்பதில்லை. நம் காலடி மண்ணில் ஏற்படும் சிறு பூகம்பம் போதும். ஆக, இன்றைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வதுதான் நாளைக்கான எனது திட்டம்.

ஆணித்தரமான பதில்கள் வருகின்றன மனுஷ்யபுத்திரனிடமிருந்து, அனுபவத்தின் தெளிவினால். பேசுவதே கவிதையாக இருக்கிறது. சிலசமயங்களில், அவர் எழுதுவது போல் உக்கிரமான கவிதையாக. தென்றலுக்கு நேர்காணல் அளித்தமைக்கு நன்றி கூறி விடைபெற்றோம்.

சந்திப்பு: அரவிந்த் சுவாமிநாதன்

*****


சுஜாதா
இன்றைக்கு நான் யாராக இருக்கின்றேனோ அதில் பெரும்பாலானது சுஜாதாவால் உருவானது. ஒரு கவிஞனாக, எழுத்தாளனாக, பதிப்பாளனாக இன்றைக்கு ஓரளவு நான் அறியப்பட்டிருக்கிறேன் என்றால், அதற்கு சுஜாதாதான் பெரும் காரணம். கிட்டத்தட்ட 1992ல் இருந்து, நான் யாரென்றே பலருக்கும் தெரியாத காலகட்டத்தில், என்னுடைய ஒரு கவிதையைப் படித்துவிட்டு, தொடர்ந்து என்னுடைய கவிதைகளை தேடித்தேடிப் படித்து, அதை ஒவ்வொரு பத்திரிகையிலும், ஊடகத்திலும் அறிமுகப்படுத்தி, அதைப்பற்றிப் பேசி, விவாதித்து, இப்படி ஒரு இளம் கவிஞன் இருக்கின்றான் என்று என்னை அடையாளப்படுத்தியது அவர்தான். ஒரு புகழ்வாய்ந்த எழுத்தாளர் அவ்வாறு செய்தது தமிழில் அதுவரை நடந்திராத செயல். அதன்மூலம் தமிழ் இலக்கிய உலகில் எனக்கென்று ஓர் இடம் உருவானது. 'இந்தக் கவிதையை நீங்கள் வாசித்துத்தான் ஆக வேண்டும்' என்று சொல்லும் இடமாக அது இருந்தது. இது முதல் கட்டம். பின்னர் நான் சென்னைக்கு வந்தபின் சுஜாதாவுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு வந்தபோது ஒரு மனிதராக, ஆத்ம நண்பராக, வழிகாட்டியாக, எனக்கு மிகப்பெரிய ஆதார சக்தியாக இருந்தார். நான் வேலை பார்த்து வந்த ஓர் இதழிலிருந்து வெளியே வந்தபோது, அவர் தன்னுடைய புத்தகங்களைக் கொடுத்து 'இதை நீ பதிப்பிக்கலாமே' என்று சொல்லி ஊக்குவித்தார். அப்படி ஆரம்பித்ததுதான் உயிர்மை பதிப்பகம். அதனால் ஒரு பெரிய வெற்றியை நான் உடனடியாகப் பெற முடிந்தது. தொடர்ந்து நான் எழுதுவதற்கும் அவர் பெரிய உத்வேகமாக இருந்திருக்கிறார்.

இவை எல்லாவற்றையும் தாண்டி ஒரு வாசகனாக சுஜாதாவின் மீது எல்லையற்ற பிரமிப்பை நான் கொண்டிருக்கிறேன். தமிழை அவர் நவீனப்படுத்தியது போல யாரும் செய்ததில்லை. தமிழை சுஜாதாவிற்கு முந்தைய தமிழாகவும், சுஜாதாவிற்குப் பிந்தைய தமிழாகவும் நாம் பிரிக்க முடியும். உரைநடையில் ஒரு மகத்தான மாற்றத்தை அவர் கொண்டு வந்தார். தமிழை லகுவாகவும், பாய்ச்சலுடனும், வீரியத்துடனும் பயன்படுத்த முடியும் என்பதற்கு சுஜாதா உருவாக்கிய உரைநடை பெரிதும் காரணமாக இருந்தது. அவருக்குப் பின் எழுத வந்த எழுத்தாளர்கள், இதழியலாளர்கள், ஊடகவியலாளர்கள் என எல்லோரிடமும் மிகப் பெரிய பாதிப்பை அது ஏற்படுத்தியது. கலை, இலக்கியம், ஓவியம், இசை, தத்துவம் என்று பலவற்றை ரசிப்பவராக அவர் இருந்தார். கவிதையின் மீது எல்லையற்ற காதல் கொண்டவராக - அது நாட்டுப்புறக் கவிதையாகவோ, நவீன கவிதையாகவோ, சங்க இலக்கியமோ எதுவாக இருந்தாலும் - அதனை நேசிப்பவராக இருந்தார். எங்கெல்லாம் கவித்துவத்தின் வாசனை முகிழ்க்கிறதோ அங்கெல்லாம் சுஜாதாவின் கால் தடம் படாமல் இருந்ததில்லை. அவருடைய இழப்பு என்பது என் வாழ்க்கையில் தீர்க்கவே முடியாத ஒரு மிகப் பெரிய வெற்றிடத்தை ஏற்படுத்தி விட்டது.

சுஜாதா இளம் படைப்பாளிகளைக் கண்டறிந்து அவர்களை உலகுக்கு அடையாளம் காட்டி வந்தார். அவர் விட்டுச் சென்ற பணியை நாமும் செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் 'சுஜாதா விருதுகள்' என்பதை நிறுவினோம். அடுத்த தலைமுறை வாசகர்களுக்கு சுஜாதாவை அறிமுகம் செய்வதும் இதனால் சாத்தியமாகிறது.

- மனுஷ்யபுத்திரன்

*****


உறவும் நட்பும்
என் இலக்கியம் சார்ந்த நண்பர்களுடன் கசப்புகள், பிரிவுகள் நேரத்தான் செய்கின்றன. நான் அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. வாழ்க்கையில் அதெல்லாம் சகஜம்தான். ஆனால் பல சமயங்களில் பிரிவுக்கான காரணங்கள் தெரிவதில்லை. ஒருவர் உறவை முறித்துக் கொள்கிறார் என்றால் அவருக்கு எளிய காரணங்கள் அல்லது கற்பனைகள் போதுமானவையாக இருக்கின்றன. இது தனிமனிதனின் பிரச்சனை அல்ல, இன்றைய காலகட்டத்தின் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன். இன்றைக்கு எந்த உறவும் முக்கியமல்ல, எந்த நேரத்திலும் எந்த உறவையும் விட்டுவிடலாம் என்ற முடிவிற்கு வந்திருக்கிறோம். இது காலத்தின் பெரிய வீழ்ச்சி, மிகப் பெரிய அவலம். எல்லா உறவுகளுமே கத்தி முனையில் இருக்கின்றன. ஆத்மாநாம் ஒரு கவிதையில் சொல்வார்,

சிகரெட்டின் புகை
சிகரெட்டிலேயே
தங்கியிருக்க வேண்டும்
என்று நான்
கூறவில்லை.
அது
சிகரெட்டை விட்டுப்
போகும்போது
ஒரு சிறு புன்னகை
ஒரு சிறு கையசைப்பு
அதைத் தவிர
வேறு எதையும் நான்
கேட்கவில்லை

- என்பார். ஏன்? நீண்டகால உறவுகளைக் கூடச் சிறிய விஷயங்களுக்காக மனிதர்கள் முறித்துக் கொள்கிறார்கள் என்றால் உறவுகளை நீண்டகாலம் தக்கவைத்துக் கொள்வது மனிதர்களுக்குச் சுமையாக இருக்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றுகிறது. நட்பு, அன்பு இவை தேவைப்படாத காலகட்டத்தில் நாம் வாழ்கிறோமோ? சொல்லப்போனால் உறவை முறித்துக் கொள்பவர்களுக்கு அப்படி இருப்பது சௌகர்யமாக இருக்கிறதோ என்று நான் நினைக்கிறேன். ஒவ்வொரு உறவு முறியும்போதும் இது வேறெப்படி நடக்க முடியும் என்று என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்கிறேன்.

- மனுஷ்யபுத்திரன்

*****


புத்தக உலகம்
இன்றைய வணிகக் கலாசாரத்தில் நமக்குப் பயன்படுகிறதோ இல்லையோ ஈர்ப்பின் காரணமாகப் பொருள்களை வாங்கிக் குவிக்கிறோமே, அந்த நிலை புத்தகங்களுக்கும் வந்து விட்டதோ என்று நான் அஞ்சுகிறேன். புத்தகங்கள் அதிகம் விற்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதைவிட முக்கியமானது அவை படிக்கப்பட வேண்டும், விவாதிக்கப்பட வேண்டும், நம்முடைய வாழ்க்கையின் சாரமாக அது மாற வேண்டும் என்பது. ஆனால் அது நடப்பதில்லை. எதைப் படிக்க வேண்டும் என்ற அறிவு, பார்வை பல வாசகர்களிடம் இல்லை. அவற்றை உருவாக்க நாம் தவறி விட்டோம்.

ஒரு நடிகரின் முதல் படத்துக்கு வரவேற்புத் தரும் ஊடகங்கள், ஒரு எழுத்தாளனின் பத்து நூல்கள் ஒரே சமயத்தில் வெளியானால்கூட அது பற்றிப் பேசுவதில்லை. புத்தக வெளியீட்டு விழாவைப் பற்றி விரிவான செய்தி வருவதில்லை. ஆனால் வெளிநாடுகளில் அதற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுத்துச் செய்தி வெளியிடுகிறார்கள். தற்காலத்தில் வர்த்தக ரீதியான லாபம் பதிப்பாளருக்குக் கிடைக்கிறது என்றும் சொல்ல முடியாது. 1000 பிரதிகள் மட்டுமே அச்சிட முடியும், அது விற்றுத் தீர இரண்டு, மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆகும் என்ற சூழ்நிலை இருக்கும்வரை ஒரு சிறந்த இலக்கியச் சூழல் அல்லது மறுமலர்ச்சி ஏற்படும் என்று சொல்ல முடியாது. இந்த நிலைமை மாற வேண்டும்.

- மனுஷ்யபுத்திரன்

*****
மேலும் படங்களுக்கு
More

மகதி
Share: 
© Copyright 2020 Tamilonline