Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
திவாகர்
- அரவிந்த்|ஏப்ரல் 2012||(2 Comments)
Share:
தமிழ்ப் படைப்புலகில் வரலாற்று நாவல் எழுத்தாளர் வரிசையில் இடம்பெறுபவர் திவாகர். இவர் 1956ல் சென்னையில் பிறந்தார். தந்தை வெங்கடராமன் பள்ளி ஆசிரியர். இளமைப்பருவம் மற்றும் கல்வி சென்னையிலும், சீர்காழியை அடுத்த திருநகரிலும் கழிந்தது. பின்னர் வேலை நிமித்தமாக விஜயவாடாவிற்குச் சென்றார். எழுத்தார்வத்தால் சிறுசிறு நாடகங்களை எழுத ஆரம்பித்தார். இவரது முதல் நாடகம் 'சாமியாருக்குக் கல்யாணம்' 1978ல் மேடையேறியது. தொடர்ந்து நண்பர் தேவாவுடன் இணைந்து திவா-தேவா என்ற பெயரில் சில நாடகங்களை அரங்கேற்றினார். விஜயவாடாவில் உள்ள தமிழ் இளைஞர்களை ஒன்றுபடுத்தி 'நண்பர்கள் மன்றம்' ஒன்றை உருவாக்கி, இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். கையெழுத்துப் பத்திரிகை ஒன்றையும் சில காலம் நடத்தினார். 'ஆந்திர பத்திரிகா' என்னும் செய்தி இதழில் இவரது முதல் கட்டுரை (ஆங்கிலத்தில் இருந்து தெலுங்குக்கு மொழிபெயர்க்கப்பட்டு) வெளியானது. அதுமுதல், தொடர்ந்து பல செய்தி இதழ்களுக்குக் கட்டுரைகளை எழுத ஆரம்பித்தார். பல ஆங்கிலப் பத்திரிகைகளில் இவரது கட்டுரைகளும் செய்திகளும் வெளியாகி இவரைப் பிரபலப்படுத்தின. 'சிங்கப்பூர் சிங்காரி', 'காதல் கடிதம்', 'மாப்பிள்ளையே உன் விலை என்ன?', 'அச்சமில்லை அச்சமில்லை', 'மலேசியா மாப்பிள்ளை', 'டாக்டர் டாக்டர்' போன்ற நாடகங்கள் இவருக்கு நல்ல புகழைத் தந்தன. சிறுகதைகள், கட்டுரைகள் குமுதம், கல்கி போன்ற இதழ்களில் வெளியாகி வரவேற்பைப் பெற்றன என்றாலும் இலக்கிய உலகில் இவர் பரவலாக அறியப்பட்டது 2003ல் வெளியான 'வம்சதாரா' என்ற வரலாற்று நாவலின் மூலம்தான்.

விசாகப்பட்டினம் சிம்ஹாத்ரி வராகநரசிம்மர் ஆலயத்தில் கிடைத்த இரண்டு தமிழ்க் கல்வெட்டுக்கள் இவருக்கு ஆராய்ச்சி ஆர்வத்தைத் தூண்டின. தொடர்ந்து ஆராய்ந்ததில் சோழ சேனாதிபதி வராக நரசிம்மருக்கு அளித்த காணிக்கைகள்; வணிகர் ஒருவர் அந்தக் கோயிலுக்கு அளித்த மிகப்பெரிய நந்தவனங்கள்; தமிழர்கள் மிகப் பெரிய அளவில் வாணிகம் செய்து நிலங்களை ஆண்டது; கடல் வாணிகம் மூலமாக வரும் பண்டங்கள் அங்கு சேமித்து வைக்கப்பட்டு பிற நாடுகளுக்கு அனுப்பப்பட்டது போன்ற விவரங்கள் தெரிய வந்தன. விசாகப்பட்டினத்தின் அக்காலப் பெயர் 'குலோத்துங்க சோழப்பட்டினம்' என்பதும், ராஜமுந்திரி (ராஜமகேந்திரபுரம்), திராட்சாராமம் (இடர்க்கரம்பை) போன்ற பகுதிகள் தமிழர்கள் வாழ்ந்த பகுதிகள் என்பதும் தெரிய வந்தது. இப்பகுதிகளோடு கலிங்கத்துப்பரணி போன்ற இலக்கியங்களுக்கு உள்ள தொடர்பையும் அறிந்து கொண்டார். நான்கு ஆண்டுகள் ஆய்வு செய்தபின் உண்மையோடு புனைவையும் கலந்து 'வம்சதாரா'வை எழுதினார். அந்நூல் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றது. எழுத்தாளரும், விமர்சகருமான டாக்டர் பிரேமா நந்தகுமார், "இந்தப் புதினம் காலத்தை வென்று நிற்கும் அணுச்சேர்க்கைகளால் கட்டப்பட்டிருக்கிறது" என்றும், "இருபத்தோராம் நூற்றாண்டின் விடிவெள்ளி இந்தப் புதினம்" என்றும் விமர்சித்திருந்தார். எழுத்தாளர் சுஜாதா இந்நூலைப் பாராட்டி எழுதியதுடன், "இந்த புதினத்தை திவாகர் தெலுங்கிலும் கொண்டுவரவேண்டும்" என்றும் வேண்டுகோள் விடுத்தார்.

தொடர்ந்து வரலாற்று நாவல்களின் மீது தன் கவனத்தைச் செலுத்தத் தொடங்கினார் திவாகர். "திருமலையில் கோயில் கொண்டுள்ள திருவேங்கடத்தான் சிவனா, திருமாலா?" என்ற சர்ச்சையை மையமாக வைத்து, பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு 'திருமலைத் திருடன்' எனும் புதினத்தை எழுதினார். சிற்பி பாலசுப்பிரமணியத்தின் அணிந்துரையோடு வெளியான அந்நாவலை எழுதும் காலத்தில் தனக்குக் கிடைத்த அனுபவங்களை வெளியில் சொன்னால் யாராலும் அதை நம்பமுடியாது என்கிறார் திவாகர். இவரது அடுத்த நாவலும் வரலாற்றுப் பின்புலத்தைக் கொண்டதே! இதுபற்றி திவாகர், "மகேந்திரவர்ம பல்லவன் ஆரம்பகாலத்தில் சமணனாக இருந்து அப்பர் சுவாமிகளால் சைவத்துக்கு மாற்றப்பட்டான் என்று சரித்திரங்கள் சொல்கின்றன. ஆனால் திருச்சி மலைக்கோட்டைக் கல்வெட்டில் இதே மகேந்திரன் 'லிங்கத்தால் மாறுபட்ட நெறியிலிருந்து தான் திருத்தப்பட்டதாக 'கன்ஃபெஷன்' செய்திருக்கிறான். இந்த ஒரு கல்வெட்டை அடிப்படையாகவும் வேறு பல தென் ஆந்திரத்துச் செப்பேடுகளை ஆராய்ந்தும் அவன் எப்படி மதம் மாறியிருக்கவேண்டும் என்று கற்பனை கலந்து எழுதப்பட்டதுதான் 'விசித்திர சித்தன்' புதினம். இப்புத்தக ஆராய்ச்சிக்கு மட்டுமே ஓராண்டு செலவிட்டேன்." என்கிறார். திருச்சி தமிழ்ச்சங்கத்தில் இந்நூலை வெளியிட்ட தமிழ்ப் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேரா. சுந்தரமூர்த்தி, "இந்தப் புத்தகத்தை மூன்று முறைக்கு மேலே படித்து பல அடிக்கோடுகள் போட்டு வைத்துள்ளேன், இருட்டிலிருந்து வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ள விஷயங்கள் பல உள்ளன" என்று புகழ்ந்துரைத்தார். பாரதிதாசன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை மேனாள் தலைவர் பேரா. எழில்முதல்வன், இந்நூலின் அணிந்துரையில் "தனித்திருந்து படித்தேன்; உணர்வு பெற்று விழித்தேன்; புத்துலகை உருவாக்கத் துடித்தேன் என்று படிப்போர் சொல்லும் நிலையில்தான் இந்த நாவல் எழுதப்பட்டுள்ளது" என்று பாராட்டியிருக்கிறார்.

திவாகரின் அடுத்த புதினமான 'எஸ்.எம்.எஸ். எம்டன் 22-09-1914', முதலாம் உலகப் போரின் ஆரம்பத்தில் எம்டன் என்னும் ஜெர்மன் போர்க்கப்பல் சென்னைமீது குண்டு வீசியதை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதாகும். இதன் அணிந்துரையில் நரசய்யா, "திவாகர், சரித்திரத்தைத் தனக்கு சாதகமாக்கிக் கொண்டு, அதே மாத்திரத்தில் சரித்திரத்தினின்றும் சிறிதும் பிரியாது, உண்மையே மையமாகக் கொண்டு சிறந்த புதினங்களை ஏற்கனவே படைத்து வெற்றி கண்டவர்" என்று பாராட்டியுள்ளார். இந்தப் புதினம் பற்றி திவாகர், "இந்நூலுக்காக இரண்டு வெவ்வேறு காலகட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து இணைக்கவேண்டிய சூழ்நிலை. கடலில் ஓடும் எம்டனையும் அதற்கேற்றாற்போல கரையில் எம்டனைப் பற்றிய நிகழ்ச்சிகளையும் ருசிகரமாகவும், ஆதாரபூர்வமாகவும், முற்றிலும் ஏற்கத் தகுந்ததாகவும் வைத்து எழுதவேண்டிய சூழல். நண்பர்கள் தாமாகவே முன்வந்து உதவினர். மயிலையைச் சேர்ந்த சரித்திர ஆர்வலரும் ஆராய்ச்சியாளருமான சுந்தர் பரத்வாஜ்; சிங்கையில் பணிபுரியும் சிற்பசாத்திர வித்தகர் திரு விஜயகுமார்; இன்னும் எங்கெங்கு என்னென்ன கிடைக்கிறதோ அத்தனையும் தேடி அலைந்த பிறகு அவை சீராக்கப்பட்டு எழுதப்பட்ட நூல் இந்த எம்டன் புத்தகம்," என்கிறார். மலேசிய எழுத்தாளர் ரெ.கார்த்திகேசு அவர்களும் 'திண்ணை'யில் இந்நூலை மிகவும் பாராட்டி எழுதியுள்ளார்.
இவை தவிர 'நான் என்றால் அது நானல்ல' என்ற சிறுகதைத் தொகுப்பையும், 'நம்மாழ்வார் நம்ம ஆழ்வார்' என்ற ஆன்மீக நூலையும் எழுதியிருக்கிறார் திவாகர். ஆந்திராவில் உள்ள நாகார்ஜுனா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்து ஓய்வு பெற்ற பேரா. பாலமோகன்தாஸ் 'அனந்த விநாயகர்' எனும் பெயரில் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் எழுதியுள்ள நூலை தற்போது தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். மேலும் குலோத்துங்க சோழனின் காலகட்டத்தைப் பின்னணியாகக் கொண்டு 'அம்ருதா' எனும் வரலாற்று நாவலையும் எழுதி வருகிறார். "என் எழுத்துக்கு முன்னோடி என்று சொன்னால் அது எழுத்தாளர் தேவன்தான். தேவன் கதையான மிஸ் ஜானகி என்னைப் போன்ற எழுத்தாளர்களுக்கு ஒரு ஆத்திசூடி. உவமைகள் கொடுத்து எழுத தேவனை விட்டால் வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியாது. அடுத்து கல்கி, சுஜாதா, நா.பா., எஸ்.வி.எஸ்., லக்ஷ்மி, குமுதினி, சாண்டில்யன் எனப் பலர் என் கண்முன்னே நிற்கின்றனர். இவர்களையெல்லாம் நினைக்கும்போது தமிழ் படைப்புலகம் மிகப்பெரிய பேறு பெற்றிருப்பதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. தற்கால எழுத்தாளர்கள் பலரும் என் நண்பர்கள். எல்லாருமே ஒவ்வொரு விதத்தில் நன்றாகவே எழுதுகிறார்கள்," என்கிறார்.

இலக்கியம் குறித்து திவாகர், "இலக்கியத்துடன் ஆன்மீகம் கலந்தால் அது அமிர்தம். பக்தி இலக்கியங்கள் அதுவும் நம் செந்தமிழில் எழுதப்பட்ட பக்தி இலக்கியங்களுக்கு ஈடாக எந்த மொழியிலும் வந்துள்ளதா என்பது சந்தேகமே! வடமொழி பக்தி இலக்கியங்கள்கூட இந்த வகையில் என் தனிப்பட்ட கருத்தில் இரண்டாம் பட்சம்தான். இலக்கியங்கள் போற்றப்படவேண்டும். பாதுகாக்கப்படவேண்டும். தமிழின் பக்தி இலக்கியங்கள் பல மொழிகளுக்கு மொழிமாற்றம் செய்யப்பட வேண்டும். இன்றுள்ள மேம்பட்ட கணினித் துறை நமக்கு மிகச் சாதகமாக உள்ளது. இதை நாம் மிகப்பெரிய அளவில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதே என் விருப்பம்" என்கிறார். மேலும் அவர், "தமிழ்மக்கள் தமிழ்மொழியைப் பிற மாநிலங்களில் பரவலாகப் பயில இயலவில்லை. தமிழ்ச் சங்கங்களுக்கிடையே ஒரு ஒருங்கிணைப்புக் குழு உருவாக்க முயற்சி எடுத்துள்ளோம். கர்நாடகத்தில் மைசூரில் இப்படி ஒரு ஒருங்கிணைப்பு அமைப்பு இருக்கிறது. அதுபோல ஆந்திரத்திலும் அடுத்தடுத்து எல்லா மாநிலங்களிலும் ஒருங்கிணப்பு அமைப்பு உருவாகவேண்டும் என்பதே என் அவா," என்கிறார்.

தமிழ் மரபு அறக்கட்டளையின் மரபுச் செல்வர் விருது, பொன்னியின் செல்வன் வரலாற்றுப் பேரவை வழங்கிய விருது உட்படப் பல்வேறு கௌரவங்கள் பெற்றுள்ள திவாகர், பத்திரிகைகளில் ஏற்றுமதி, இறக்குமதி, கப்பல் போக்குவரத்து சம்பந்தமான ஆங்கிலக் கட்டுரைகளை எழுதிவருகிறார். விசாகப்பட்டினத்தில் தமிழ்ச்சங்கம் சீரமைத்து 16 ஆண்டுகள் அதன் செயலாளராகப் பணி புரிந்திருக்கிறார். தற்போது ஷிப்பிங் டைம்ஸ் இதழின் இணையாசிரியராகப் பொறுப்பு வகித்து வருகிறார். ஈழத்துப் பேரறிஞர் சிவத்திரு மறவன்புலவு சச்சிதானந்தம் அவர்கள் தலைமையில் தேவாரம், திருவாசகம் போன்ற தமிழ்த் தெய்வத் திருமுறைகளின் 18000 பாடல்களையும் தெலுங்கு மொழியில் மொழிபெயர்க்கும் திருமலை-திருப்பதி தேவஸ்தான திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராக உள்ளார். திருப்பதியில் உள்ள வேங்கடேஸ்வரா பல்கலைக்கழகப் பேராசிரியர், திராவிடப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மூலமாக இந்த நற்பணி தொடர்ந்து கொண்டிருக்கிறது.

முதல் மூன்று திருமுறைகளான திருஞானசம்பந்தரின் தேவாரப்பாடல்களை தெலுங்கில் புலமை பெற்ற இவரது மனைவி சசிகலா மொழிமாற்றம் செய்து வருகிறார். அவர் 'பென்' பள்ளியில் உதவித் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து விருப்ப-ஓய்வு பெற்று, தற்போது எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளார். திவாகரின் முதல் புதினமான வம்சதாராவையும் தெலுங்கில் எழுதி வருகிறார். மகன், மகள் இருவருமே மென்பொருள் பொறியாளர்கள். மகன் சிவகுமார் சமீபத்தில் 'Dark Confession' எனும் பெயரில் மென்பொருள் வாழ்க்கைச் சூழலைப் பின்புலமாக வைத்து ஆங்கிலப் புதினம் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ளார். லண்டனில் சினிமா தொழில்நுட்பப் பயிற்சியும் பெற்றுள்ளார். மகள் சியாமளி எழுத்தில் ஆர்வமுடையவர்; விமர்சகரும் கூட.

"ஹிந்து பத்திரிகையின் ஆசிரியர்குழு தலைவராக இருந்து ஓய்வு பெற்ற சம்பத் என்னுடைய வழிகாட்டி. இவர் என்னுடைய எல்லா எழுத்துகளையும் ஆரம்ப காலத்திலிருந்தே படித்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார். என்னை எழுதுமாறு ஊக்குவித்துவரும் நரசய்யா இருபதாண்டு கால நண்பர். இப்படிப் பல நண்பர்கள் எனக்கும், என் எழுத்துக்கும் உறுதுணையாக உள்ளனர். இன்னமும் நான் சரியான வகையில் புத்தகம் எழுதவில்லை என்பதுதான் என் தற்போதைய எண்ணம். ஓரளவுக்கு இதை எதிர்காலத்தில் ஈடுசெய்ய வேண்டும். இளைஞர்களும், குழந்தைகளும், பெரியோர்களும், பெண்மணிகளும் என எல்லோரையும் கவரும் வகையில் எழுதவேண்டும் என்பதை எப்போதுமே நான் என் லட்சியமாகக் கொண்டிருக்கிறேன்" என்கிறார் திவாகர். தனது கருத்துக்களை vamsadhara.blogspot.in என்ற வலைப்பூவில் பகிர்ந்து வருகிறார்.

அரவிந்த்
Share: 
© Copyright 2020 Tamilonline