Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
April 2012 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சமயம் | குறுநாவல் | பொது
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம் வாழ | சினிமா சினிமா | வாசகர் கடிதம் | Events Calendar | சாதனையாளர் | கவிதைப்பந்தல்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நூல் அறிமுகம் | ஜோக்ஸ்
Tamil Unicode / English Search
குறுநாவல்
சில மாற்றங்கள் (பகுதி- 11)
- சந்திரமௌலி|ஏப்ரல் 2012|
Share:
Click Here Enlargeஇதுவரை: பிரபல மருந்துக் கம்பெனி நிர்வாகியான ஸ்ரீ என்கிற ஸ்ரீனிவாசன் வேலை நிமித்தமாகச் சென்னையிலிருந்து நியூயார்க் வருகிறான். வழியில் தன் நண்பன் தினேஷ் வீட்டில் நியூ ஜெர்ஸியில் ஓர் இரவு தங்கும்போது, தினேஷ் வேலையிழந்து தவிக்கும் தன் மற்றொரு அமெரிக்க நண்பன் ராஜுக்கு வேலை கேட்கிறான். ராஜின் தகுதிகளில் திருப்தியுறும் ஸ்ரீ அவனுக்கு வேலை தருவதாக வாக்களிக்கிறான். ஆனால் மேலும் ராஜின் விவரங்களைப் பார்க்கும்போது அவன் தன்னோடு சிறு வயதில் ஒன்றாகப் படித்துத் தன் வாழ்வில் ஆறாத தழும்பை ஏற்படுத்திய ரங்கராஜ் என்பதை அறிந்துகொண்டு தன் எண்ணத்தை மாற்றிக் கொள்கிறான். பழிவாங்கும் எண்ணத்தோடு தன் பள்ளி நாட்களையும் ரங்கராஜோடு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களையும் அசை போடுகிறான்.

இது எதையும் அறியாத ரங்கராஜ், தன் மனைவி கவிதாவை வேலையிடத்தில் விட்டுவிட்டு, குழந்தை நித்யாவோடு தினேஷ் வீட்டுக்கு, ஸ்ரீயை சந்திக்கக் கிளம்புகிறான். நடுவழியில் மழையில் மாட்டிக் கொள்கிறான். ராஜை அழைத்து வர தினேஷ், ஸ்ரீயுடன் கிளம்புகிறான். ஸ்ரீ தனக்கு ஏற்பட்ட காயத்தை மேலும் நினைவு கூர்ந்தவாறே ராஜைப் பழிதீர்க்கும் எண்ணத்தில் காரை செலுத்திகிறான். ஸ்ரீ பழிதீர்த்தானா? ராஜுக்கு வேலை கிடைத்ததா? அவன் கஷ்டம் தீர்ந்ததா?

*****


இருட்டாக இருந்தது, வழி காரின் பிரகாசமான தலை வெளிச்சத்திலும் சரியாகத் தெரியவில்லை. மழைவேறு நசநசவென்று அனத்திக் கொண்டிருந்தது. ஸ்ரீயின் மனம் ஒரு நிலையில் இல்லையென்றாலும், சாலை சீராக இருந்ததால் கார் நிதானமாகத் தன் இலக்கை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.

ராஜ் சங்கடத்தில் இன்னும் ஸ்ரீயின் கேள்விக்கு பதில் அளிக்கத் தெரியாமல் மவுனமாயிருந்தான். அந்த சில வினாடிகள் அவனுக்குச் சில யுகங்களாக நீள்வது போலிருந்தது. அப்படியே ஏதாவது நடந்து மண்ணுக்குள் மறைந்து போய் இந்தச் சங்கடங்களை சந்திப்பதிலிருந்து விடுதலை பெற்றுவிட மாட்டோமா என்று அவன் மனம் ஏங்கியது. படு பாதாளக் குழிக்குள் விழுந்து கொண்டிருக்கும் போது ஒரு கொழு, கொம்பு போல தினேஷின் சிபாரிசும், ஒரு நல்ல வேலை கிடைக்கும்போல் ஒரு நம்பிக்கையும் கிடைத்தது. அது இந்த சில நிமிடப் பேச்சில் தூள் தூளாகியது மட்டுமல்ல, இன்னும் மனசாட்சியைக் குத்துவது போல துளைத்தும் எடுக்கிறது. விழாமல் பற்றியது கொழு கொம்பல்ல, மலைப் பாம்பு என்று கொஞ்சம் கொஞ்சமாகப் புரியத் தொடங்கியது.

யாரோ ஒரு தெரியாத மனிதனிடம் இப்படிக் குழைந்து கூழைக் கும்பிடு போட்டு வேளை கெட்ட வேளையில் குழந்தையையும் எடுத்துக்கொண்டு அலைந்து, மானம் மரியாதையைத் தொலைத்த பிழைப்பு தேவையா என்று மனசாட்சி உலுக்கியது. வருவது வரட்டும், எனக்குத் தகுதியிருந்தால் வேலை தரட்டும் இல்லாவிட்டால் கெஞ்ச வேண்டிய அவசியம் இல்லை. அனாவசியமான கேள்விகளுக்கு பதில் சொல்லவேண்டிய தேவையில்லை என்று தீர்மானம் செய்துகொண்டு ஸ்ரீயின் கேள்விக்கு பதில் தர எத்தனித்தான். அப்போது அந்த அடர்ந்த மவுனத்தைக் கலைப்பது போல் ராஜின் செல் ஃபோன் அடித்தது.

கவிதா… கவிதாவிடமிருந்து வரும் அழைப்பு என்பதைத் தனித்துக் காட்டும் மணி ஓசை. ராஜுக்கும், கவிதாவுக்கும் மிகவும் பிடித்த ட்யூன். சட்டைப் பையிலிருந்து செல்ஃபோனை எடுப்பதற்குள் மணி இன்னும் சில முறை ஒலித்தது. குழந்தை நித்யா பின் சீட்டில் விழித்துக்கொண்டு மலங்க மலங்கப் பார்த்தது. அதற்கு மிகவும் பிடித்த மணி செல்ஃபோனில் ஒலிக்கவே, கால்களைச் செல்லமாக உதைத்துக் கொண்டு இரு கைகளையும் மேலே தூக்கி அங்கே இல்லாத அம்மாவோடு காற்றில் மானசீகமாக விளையாடத் தொடங்கியது.

"எக்ஸ்க்யூஸ்மி ஸ்ரீ சார், என் வைஃப் கிட்டேயிருந்து ஃபோன்," என்று ஸ்ரீயிடம் மன்னிப்பு கேட்டவாறே அந்த அழைப்பை எடுத்தான் ராஜ். திரும்பவும் ராஜ் தன்னை ஸ்ரீ என்று அழைக்காமல் ஸ்ரீ சார் என்று சொன்னது ஸ்ரீக்கு மிகவும் திருப்தியாக இருந்தது. உரிமை எடுத்துக் கொண்டு பெயர் சொல்லி அழைத்தவனைத் தன் பேச்சால் அன்னியப்படுத்தி, கூடுதல் மரியாதையோடு "சார்" என்று கூப்பிட வைத்தது ஸ்ரீக்கு அல்பத்தனமான சந்தோஷத்தைத் தந்தது. இந்தக் கேள்விக்கு பதில் தருவதற்கு ரங்கன் எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்கிறானோ அவ்வளவு நேரம் அவனுக்கு மனதுக்குள் பெரும் போராட்டம் நடக்கும் என்பதை நன்றாக உணரந்து, "டேக் யுவர் டைம் ரங்கன். பேசிட்டு எனக்கு பதில் சொல்லுங்க" என்று சொன்னான் ஸ்ரீ.

"ஹலோ கவி. என்ன இந்த நேரத்துலே?" ஏதாவது சங்கடத்தில் இருக்கும் போது கவிதாவின் குரலைக் கேட்பது ராஜுக்கு பெரும் ஆறுதலாக இருக்கும். ஆனால் இப்போது ஏனோ அவள் இப்போது கூப்பிட்டிருக்க வேண்டாம் என்று தோன்றியது. கவிதாவையும், குழந்தை நித்யாவையும் நினைக்கும்போது ஒரு குற்ற உணர்வும், பச்சாத்தாபமும் ஏற்பட்டுதான் இன்னும் பலமிழப்பது போல உணர்ந்தான். எல்லாம் ஒரு வினாடி நேரம்தான். "ஹலோ ராஜ்" என்று மறுமுனையில் கவிதாவின் குரலைக் கேட்டதும் அந்த எண்ணமெல்லாம் போய் அவளை உடனே பார்க்க மாட்டோமா, மடியில் முகத்தைப் புதைத்துக் கொண்டு அழுது ஆறுதல் தேட மாட்டோமா, என்று ஏங்கத் தொடங்கினான். கவிதாவின் குரல் சற்றே பதட்டமாக ஒலித்தது. "என்ன ஆச்சு ராஜ்? நிறைய முறை உங்களுக்கு ஃபோன் டிரை பண்ணி லைன் கிடைக்கவேயில்லை. ஃபோனை ஆஃப் பண்ணியிருந்தீங்களா?"

"இல்லை, இங்க வழியில் ஒரே மழை. வண்டி வேறே மக்கர் பண்ணி நடுவழியில் நின்னிடுச்சு. செல்ஃபோன் சிக்னல் போயிடுச்சு. அதனாலேதான் உன்னாலே என்னை ரீச் பண்ணமுடியலை. என்ன விஷயம் சொல்லு."

"உங்க இன்டர்வியூ என்ன ஆச்சு. தினேஷோட ஃப்ரெண்டை பாத்தீங்களா? வேலை கிடைச்சிருச்சா?" வழக்கமான, அமைதியான கவிதாவின் விசாரிப்பு இல்லை இது. அவள் படபடப்பாகக் கேட்டது ராஜுக்கு வித்தியாசமாகத் தெரிந்தது. என்னவோ மோசமான ஒன்றைக் கேட்க மனம் தயார்படுத்தத் தொடங்கியது. "இன்னும் இல்லை, இப்பதான் தினேஷ் கார்ல போயிட்டிருக்கோம். தினேஷ் ஃப்ரெண்டோடதான் இருக்கேன். விவரமா அப்புறம் பேசறேன்" மேலே வேலை விஷயமாக அவளிடம் விவரமாக எதுவும் சொல்லமுடியவில்லை. ஸ்ரீ கவனித்து வண்டி ஓட்டுவதுபோல இருந்தாலும், அவனது கவனம் எல்லாம் ராஜின் உரையாடலில் இருந்தது. அதை உணர்ந்தோ என்னவோ ராஜ் கவிதாவுக்கு விவரமாக பதில் சொல்வதைத் தவிர்த்தான்.

"ஏன் உங்க குரல் சோர்ந்து இருக்கு. இந்த வேலை கிடைச்சிரும் இல்லை?"

"இப்பதான் பேசிகிட்டிருக்கேன். விவரமா அப்புறம் பேசறேன்னு சொன்னேன் இல்லை. நீ எதுக்கு ஃபோன் செய்தேன்னு சொல்லு கவி" சற்றே சலிப்பாக அவள் கேள்வியை எதிர்கொண்டான் ராஜ்.

"நான் சொல்றதை கவனமாக் கேளுங்க, என் பதட்டத்துக்கு காரணம் புரியும். நான் இங்க வேலை செய்யறவங்க வீட்டு வாசலில்தான் வந்ததிலிருந்து உட்கார்ந்திருக்கேன். இங்க வந்ததுமே உங்களுக்கு ஃபோன் பண்ணலாமானு யோசிச்சேன், ஆனால் உங்க இன்டர்வியூ முடிஞ்சதும் கூப்பிடுறது தான் சரினு தோணுச்சு. அதான் வெயிட் பண்ணி கூப்பிட்டேன். ஆனால் உங்களை ரீச் பண்ணமுடியலை."

"என்ன இவ்வளவு நேரம் அந்த பேஷண்ட் வீட்டு வாசலில் இருந்தியா? இப்பவும் அங்கதான் இருக்கியா. இந்த ராத்திரி நேரத்துல தனியா? என்ன ஆச்சு!" – கவிதாவை நினைத்துக் கவலையாக இருந்தது.
இங்கே நான் வந்தபோது வீடு அமைதியா இருந்தது. என்ன செய்யறதுனு தெரியாமல் அரைமணி நேரம் வெயிட் பண்ணினேன். கொஞ்ச நேரத்துலே அந்த வீட்டு வயசான அம்மா கேத்தரினும், அவங்க பொண்ணும் காரில் வந்து இறங்கினாங்க. அந்த வீட்டு பெரியவர், நான் யாரைப் பார்த்துக்க போயிருந்தேனோ அவர் இன்னைக்கு அதிகாலையிலே தூக்கத்திலேயே இறந்துட்டார்னு சொன்னாங்க. அவர் உடம்பை ஃப்யூனரல் ஹோமுக்கு அனுப்பிட்டு, வேண்டிய ஏற்பாடுகளை நாள் முழுக்க செய்துட்டிருந்ததுலே எனக்கு தகவல் சொல்ல மறந்துட்டாங்க. அந்த வருத்தத்திலும் ரொம்ப சாரி கேட்டுக்கிட்டாங்க."

"சரி நீ ஏன் அப்ப வீட்டுக்குப் போகாமல் இவ்வளவு நேரம் தனியா அவங்க வீட்டு வாசலில் காத்திருக்கே?" அப்ப உனக்கு வேலை போயிடுச்சா? இந்த வருமானமும் நின்னுடுச்சா என்று பேசாமல் இவ்வளவு கஷ்டத்திலும் முதலில் ஏன் தனியா வீட்டு வாசலில் நிற்கிறாய் என்று ராஜ் கேட்டது, தன்மீது அவன் வைத்திருந்த அக்கறையை வெளிப்படுத்தியது, கவிதாவுக்கு நிரம்பப் பிடித்தது. இந்த உறவுக்கு, அக்கறைக்கு இன்னும் எவ்வளவு கஷ்டம் வேண்டுமானாலும் தாங்கலாம் என்று அவள் மனது சொன்னது. மீண்டும் பேச்சைத் தொடர்ந்தாள்.

அதுக்குத்தான் உங்களுக்கு ஃபோன் பண்ணிட்டேயிருந்தேன். இங்கிருந்து நான் வீட்டுக்கு டாக்ஸி பிடிச்சு போகிறதை விட, தினேஷ் வீட்டுக்கு வந்தால் அங்கிருந்து நாம சேர்ந்து வீட்டுக்குப் போகலாம். இங்கிருந்து தினேஷ் வீட்டுக்கு டாக்ஸி சார்ஜ் கம்மி."

கவிதா தினேஷ் வீட்டுக்கு இந்த சூழ் நிலையில் வருவதை ராஜ் விரும்பவில்லை என்றாலும், எண்ணி எண்ணிச் செலவு செய்யவேண்டிய கட்டாயத்தில் இருந்ததால், கவிதா தனியாக அந்த இரவில் இனியும் காத்திருப்பது சரியில்லை என்பதாலும், "சரி நீ உடனே டாக்ஸி பிடிச்சு வா. நாம இங்கிருந்து சேந்து வீட்டுக்குப் போகலாம்" என்றான்.

"நித்யாகுட்டி எப்படி இருக்கு? தூங்கறாளா? தூங்கி எழுந்ததும் பால் கரைச்சுக் கொடுக்கணும். கொஞ்சம் என்ன பண்றான்னு அப்பப்ப உங்க வேலைக்கு நடுவிலே பாத்துக்கங்க," தாய்மை பொங்க கவிதா பேசினாள். கால்களை உதைத்து விளையாடிக்கொண்டிருந்த நித்யாவை இலேசாகத் தலையை வளைத்துப் பார்த்தவாறே "எல்லாம் நல்லாயிருக்கா. இப்பதான் முழிச்சிக்கிட்டா. நான் பார்த்துக்கறேன். ஆமா உனக்கு டாக்ஸிக்குக் குடுக்க பணம் இருக்கா?" என்று கேட்டான்.

"இருக்குங்க. எவ்வளவோ வேணாம்னு சொல்லியும், இந்த வீட்டு அம்மா எனக்கு 100 டாலர் குடுத்தாங்க. நம்ம கையிலே இப்ப சில்லறை காசைத் தவிர, அந்தப் பணம் மட்டும்தான் இருக்கு, சரி நான் ஃபோனை வெக்கிறேன். இன்டர்வியூ நல்லா பண்ணுங்க. டேக் கேர்," சோகம் கப்பியவாறு அந்த வார்த்தைகளை முடித்தாள் கவிதா.

செல்ஃபோனை சட்டைப் பைக்குள் போட்டான். பிரச்சனைகளை இதேபோல ஒரு பைக்குள் அடக்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கவிதாவின் படபடப்புக்குக் காரணம் புரிந்துவிட்டது ராஜுக்கு. இதன் மொத்த சாராம்சம், கவிதாவுக்கும் வேலை இல்லை. ஏதோ வருமானத்துக்கு வழி இருந்தது என்று பெயருக்கு இருந்த ஒன்றும் போய்விட்டது. சாண் ஏறினால் முழம் சறுக்கும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். இங்கே மைல் கணக்கில் சறுக்குகிறது. இனி நம் பிரயத்தனத்தில் எதுவுமில்லை. இனி நம்மால் போராடமுடியாது என்ற நிலை மனிதர்களுக்கு வரும்போது இரண்டு நிலைகள் அவர்களுக்கு சாத்தியம். ஒன்று எதன் மீதாவது முழு நம்பிக்கை வைத்து மொத்தமாகச் சரணாகதி அடைவது. கடவுளோ, நண்பனோ, டாஸ்மாக்கோ.... யாரிடமாவது, எதனிடமாவது தன்னை முழுதாக ஒப்புவித்துக் கொள்வது. அந்த நம்பிக்கை பிரச்சனை தீர ஏதாவது வழிகாட்டும், அல்லது மன பாரத்தைக் குறைக்கும் என்று நம்புவது.

இரண்டாவது "கட்டுண்டோம், பொறுத்திருபோம்" என்பதுபோலப் பிரச்சனையை அப்படியே ஏற்றுக்கொள்வது. இதுதான் வாழ்க்கை. பிரச்சனை இருந்தால் என்ன, அப்படியே எதிர்கொள்வோம். ஏற்றுக்கொள்வோம். வருவது வரட்டும் என்ற தீர்மானம். ராஜுக்கு இந்த இரண்டு நிலைகளும் பழக்கம்தான். தனி ஆளாக இருந்தபோது இரண்டாவது நிலையை எடுப்பதில் சிரமம் ஏற்பட்டதில்லை. ஆனால் தன்னை நம்பி ஒரு குடும்பம் இருக்கும்போது அவர்களையும் கஷ்டத்தை முடிவில்லாமல் தாங்கிக்கொண்டிருக்க வைக்க அவனது மனம் இடம் தரவில்லை.. அவனுக்கு இப்போது இருப்பது ஒரே வழி. சரணாகதி. ஒட்டு மொத்த சரணாகதி. டோட்டல் சரண்டர்.

கடவுள்.... சிறுவயதிலிருந்தே ரொம்ப ஆத்திகமெல்லாம் இல்லை. விசேஷ நாட்களில் பூஜை, வீட்டில் சடங்கு இவற்றை ஒட்டியே கடவுள் பரிச்சயம். பரீட்சை நாட்களில் கொஞ்சம் பயத்தில் அதிகம் கூப்பிட்டிருக்கிறான். நாத்திக எண்ணமெல்லாம் இல்லாவிட்டாலும், உறுத்தாமல் கடவுள் மனதின் ஓரத்தில் எங்கோ இருப்பார் அவ்வளவே. இந்தியாவில் இருந்தவரை, சாலை ஓரத்தைத் திரும்பும்போது சிறிய கோவிலைக் காணும் போதோ, அல்லது கோவில் கோபுரத்தைக் காண நேரிட்டாலோ கை தன்னை அறியாமல் கன்னத்தில் போட்டுக்கொள்ளும். பெரிய அதிகாரியைக் காணும்போது பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ குட் மார்னிங் சொல்வதைப் போல. ஆகவே கடவுளை சரணாகதி அடைவது மனதுக்கு அன்னியமாகப் பட்டது.

நண்பன்.... போதையில் பின் சீட்டில் கிடக்கிறான். இப்போது இவனை எழுப்பி நினைவுக்குக் கொண்டுவந்து இருக்கும் நேரத்துக்குள் எனக்கு உதவச்சொல்லி இன்னும் மன்றாடுவது பிரயோசனப்படப் போவதில்லை. தவிர, தினேஷ் தன்னால் ஆனதை ஏற்கனவே செய்துவிட்டான். அவனை இனி வற்புறுத்துவதில் பயனில்லை.

டாஸ்மாக்…. அது ஒரு எஸ்கேபிஸம். அதற்குக் குடும்பத்தோடு தற்கொலை செய்துகொள்வதே மேல்.

ஸ்ரீ…. இவனிடம் சரணாகதி அடைந்தால் என்ன? இவனைப் பார்ப்பதற்கு முன் கண்காணாத கடவுள் என் பிரச்சனையைத் தீர்க்க வந்த தெய்வம் என்று நினைத்தோமே? இவனைப் பார்த்து, இவனுடைய குத்தலான சில கேள்விகளைக் கேட்டபின் ஏன் ரோஷம் வந்தது? இவனை அன்னியமாக ஏன் நினைக்கவேண்டும்? இப்போது இருக்கும் ஒரே வழி எந்த ஈகோவும் இல்லாமல் என் ப்ரச்சனைகளைச் சொல்லி இவனிடம் சரணாகதி அடைய வேண்டியதுதான்.

கவிதாவிடம் பேசிய பிறகு ராஜுக்கு இந்த மனமாற்றம் ஏற்பட்டது. இப்போது ஸ்ரீயின் கேள்விக்கு தீர்மானமாக பதில் சொல்லத்தொடங்கினான். "ஸ்ரீ.... சாரி உங்க கேள்விக்கு பதில் சொல்றதுக்குள்ளே என் வைஃபோட கால் அடெண்ட் பண்ணவேண்டியதாயிடுச்சு. பாவம். ரொம்ப நேரம் ட்ரை பண்ணி பார்த்திருக்கா."

"தட்ஸ் ஓகே. ஐ ஆம் ஸ்டில் வையிட்டிங் ஃபார் யுவர் ஆன்ஸர். உங்களைவிடத் தகுதியான ஒருத்தரை விட்டுட்டு எப்படி உங்களுக்கு நான் வேலை தர்ரது?" ராஜ் தன்னை சார் என்று கூப்பிடாமல் மறுபடி உரிமையோடு பெயர் சொல்லி அழைத்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. எனவே சற்றுக் கடுமையான குரலில் கேள்வியைக் கேட்டான்.

அது ராஜைத் துளியும் பாதிக்கவில்லை. "ஸ்ரீ எனக்குத்தான் இந்த வேலையை நீங்க கொடுக்கணும். உங்களை முழுக்க நம்பி நான் இதைக் கேட்கிறேன். இந்த வேலையை நீங்க எனக்கு குடுத்தீங்கனா உங்களுடைய எதிர்பார்ப்புகளை, நம்பிக்கையை நான் வீணாக்கிற மாதிரி நடந்துக்க மாட்டேன். நீங்க என்னைவிடத் தகுதியானவர்னு ஒருத்தரை சொல்றீங்க. அவரைப் பத்தி எனக்குத் தெரியாது. அவர் உண்மையிலேயே என்னைவிடத் தகுதியானவரா இருக்கலாம். ஆனால், ஒண்ணு கண்டிப்பா என்னாலே சொல்லமுடியும். அவரைவிட இந்த வேலை எனக்குத்தான் ரொம்பத் தேவை. அதனாலே, இந்த வேலையை அவரைவிட நான்தான் அதிகம் மதிப்பேன். நான் உங்க மேலே நம்பிக்கை வெச்சு கேட்கிறேன், என் மேலேயும் என் திறமை மேலேயும் நம்பிக்கை வையுங்கள். கொஞ்சம் வெளிப்படையாவே சொல்றேன். எனக்கு எந்த அளவுக்கு இந்த வேலை தேவை அப்படினா…என் குடும்பத்துக்கு அடுத்த வேளை சாப்பாட்டுக்கு நான் இதை நம்பற நிலைமையில் இருக்கேன். கொஞ்ச நேரம் முன்னே என் வைஃப் கவிதாவுக்கும் அவளோட பார்ட் டைம் வேலை போயிடுச்சு. உங்ககிட்ட பச்சாத்தாபத்தையோ, அனுதாபத்தையோ எதிர்பார்த்து இதை நான் சொல்லலே. இந்த வேலை கிடைச்சா எவ்வளவு அதை நான் பொக்கிஷமா நேசிப்பேன். சின்ஸியரா இருப்பேனு தெரியப்படுத்தத்தான் இதைச் சொன்னேன். தவிர இந்த வேலைக்கான எல்லா அடிப்படைத் தகுதிகளைவிட அதிகமாவே எனக்கு இருக்குனு உங்களுக்குத் தெரியும். ப்ளீஸ். ஐ நீட் திஸ் ஜாப்!"

பாறையில் பெய்த மழைபோல, எந்த பாதிப்பும் இந்தக் கெஞ்சலுக்கு இல்லாமல், ஸ்ரீ முகத்தைச் சலனமுமில்லாமல் வைத்துக்கொண்டு "ஓகே. தகுதி, குவாலிஃபிகேஷன் பத்தி பேசவேணாம். ஆனா நம்பிக்கை வைங்கன்னு சொன்னீங்க. அது ரொம்ப முக்கியம். டு பீ ஃப்ராங்க் வித் யூ… எனக்கு உங்களைப் பார்த்தால் நம்பிக்கையே வரலை. உங்க சுயநலத்துக்காக நீங்க யாரை வேணும்னாலும் ஏமாத்துவீங்க, கவுத்துட்டு மேலே போகப் பார்ப்பீங்கன்னு தோணுது. ஏன்னு தெரியலை. ஒரு.... ஒரு மாதிரி.... இன்ட்யூஷன். மே பீ உங்களாலே அது ஏன்னு விளக்கமுடியலாம்."

மீண்டும் அதேபோல் குத்தலான கேள்வி, ராஜை உலுக்கியது. அவனுக்கு இப்போது சந்தேகம் வரத்தொடங்கியது. யார் இந்த ஸ்ரீ…. எனக்குப் பரிச்சயமானவன் போலவே தெரிகிறான். யாரென்று ஊகிக்க முடியவில்லை. பூடகமாகவே பேசுகிறான். ராஜ் தன் இருட்டான நினைவறைகளில் பழைய முகங்களை நினைவுபடுத்தித் தேடத் தொடங்கினான். அப்போது கார் தினேஷ் வீட்டு டிரைவ் வேயில் நுழைந்தது. கராஜின் வெளி விளக்குகள் சென்ஸார் உபயத்தில், உயிர் ஊட்டப்பட்டு ஒளியைத் தானாகவே உமிழ்ந்தன. இப்போது ராஜ், ஸ்ரீயின் முகத்தை வெளிச்சத்தில் பார்க்கமுயன்றான்.

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 




© Copyright 2020 Tamilonline