Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
முன்னோடி
அ.ச. ஞானசம்பந்தன்
- பா.சு. ரமணன்|மே 2011|
Share:
'தமிழ் மூதறிஞர், 'தமிழ்ச் செம்மல்', 'இயற்றமிழ்ச் செல்வர்', 'செந்தமிழ் வித்தகர்', 'கம்பன் மாமணி' போன்ற பல பட்டங்களையும், சாகித்திய அகாதமி, ராஜா சர். அண்ணாமலைச் செட்டியார் விருது, திரு.வி.க. விருது, குறள் பீட விருது, கலைமாமணி விருது, தருமபுர ஆதீன விருது, கபிலர் விருது உட்படப் பல விருதுகளையும் பாராட்டுக்களையும் பெற்றவர் அரசங்குடி சரவணன் ஞானசம்பந்தன் என்னும் அ.ச.ஞா. இவர், நவம்பர் 10, 1916 அன்று திருச்சி, லால்குடியை அடுத்த அரசங்குடியில் பெருஞ்சொல் விளக்கனார் அ.மு. சரவண முதலியாருக்கும், சிவகாமி அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். தந்தை சிறந்த தமிழ்ப் பண்டிதர். இலக்கண, இலக்கியங்களிலும் பெரிய புராணத்திலும் தேர்ந்தவர். கம்பராமாயணத்தை முழுமையாகக் கற்றவர். அவர் ஆரம்பத்தில் ஒரு சிறிய துணிக்கடையை நடத்தி வந்தார். அந்தக் காலகட்டத்தில் சிறந்த தமிழறிஞரான நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டாரின் நட்புக் கிடைத்தது. நாவலருடன் இணைந்து திருவிளையாடற் புராணத்துக்கு உரை எழுதினார். பின்னர் லால்குடி போர்டு உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. பிற்காலத்தில் அதே பள்ளியில் அ.ச.ஞா. சேர்க்கப்பட்டார். தந்தையே தமிழாசிரியர்.

பெருஞ்சொல் விளக்கனார் இலக்கியவாதி மட்டுமல்ல, சிறந்த ஆன்மீகச் சொற்பொழிவாளரும் ஆவார். நல்ல சிவபக்தரும் கூட. தந்தையின் ஆர்வங்கள் தனயனுக்கும் இயல்பானது. தனது ஒன்பதாம் வயதில் துறையூரில் நடந்த ஒரு சைவ மாநாட்டில் கலந்து கொண்டு சிறப்புறப் பேசிப் பாராட்டைப் பெற்றார். பதினோராம் வயதில் தூத்துக்குடி சைவ சித்தாந்த மகாசபையில் இவர் பேசியதைக் கேட்ட வ.உ.சி., ரா.பி. சேதுப்பிள்ளை இருவரும் ஞானசம்பந்தனைப் பாராட்டினர். தொடர்ந்து பல சொற்பொழிவுகளை வழங்கினார். ஒருமுறை எஸ். வையாபுரிப் பிள்ளை, சச்சிதானந்த பிள்ளை, திரு.வி.க. போன்றோர் கலந்துகொண்ட சைவ சித்தாந்த மகாசமாஜத்தில் இவர் பேச, அதனால் கவரப்பட்ட திரு.வி.க. அ.ச.ஞாவின் முக்கிய வழிகாட்டி ஆனார். தன்னுடைய நண்பரான வித்வான் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையை அ.ச.ஞா.வுக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். தெ.பொ.மீ.யையே தனது குருநாதராக ஏற்றுக் கொண்டார் அ.ச.ஞா.

உரையைப் படிக்காமல் மூலத்தைப் படித்து, தானே சிந்தித்து, பாடலின் பொருளை உணர்தலே சிறந்தது என்று அறிவுறுத்தினார் தந்தை. தந்தையின் அறிவுரையை ஏற்ற அ.ச.ஞா. அதன்படியே ஒழுகினார். 1935ம் ஆண்டில் பள்ளி இறுதி வகுப்பை நிறைவு செய்தார். தொடர்ந்து மேற்படிப்புக்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். தமிழின் பெரும்பகுதி இலக்கண, இலக்கியங்களை வீட்டிலிருந்தவாறு அவர் ஏற்கனவே பயின்றிருந்ததால் இயற்பியல் துறையில் சேர்ந்து பயின்றார். ஆனால் அப்போது தமிழ்த்துறைத் தலைவராக இருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார், அ.ச.ஞா.வின் தமிழ்ப் புலமையையும், திறமையையும் நன்கு அறிந்தவராதலால், அ.ச.ஞா. தமிழ்த் துறையில் படிக்க வழி செய்தார். அக்காலத்தில் ந.மு. வேங்கடசாமி நாட்டார், பண்டிதமணியார், ரா. ராகவையங்கார், தெ.பொ.மீ. போன்ற இலக்கிய மேதைகள் பேராசிரியர்களாகப் பணிபுரிந்தனர். அவர்களது அறிவின் ஆழத்தால் அ.ச.ஞா.வின் மேதைமை மேலும் சுடர்விட்டது. ஆங்கிலப் பேராசிரியராகவும், அத்துறைத் தலைவராகவும் விளங்கிய மகாகனம் ரைட் ஆனரபிள் சீனிவாச சாஸ்திரியார் அ.ச.ஞா.வின் ஆங்கிலப் புலமை சிறந்து விளங்கக் காரணமானார். இசைமேதை எஸ்.ராமநாதன், க. அன்பழகன், இரா. நெடுஞ்செழியன், பாலதண்டாயுதம் போன்றோர் அக்காலத்தில் அ.ச.ஞா.வின் சக மாணவர்கள்.

1940ம் ஆண்டு அ.ச.ஞா.வுக்குத் திருமணம் நிகழ்ந்தது. உடன் பயின்ற இராஜம்மாள் என்பவரைக் காதலித்து, பல எதிர்ப்புகளை மீறி, சென்னையில் டாக்டர் தர்மாம்பாள் தலைமையில் திருமணம் புரிந்து கொண்டார். 1942ல் பச்சையப்பன் கல்லூரியில் தமிழாசிரியர் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அதை ஏற்று மாணவர்களின் திறனறிந்து போதித்து அவர்களது நன்மதிப்பைப் பெற்றார். மாணவர்களை பலவிதங்களில் ஊக்குவித்ததுடன், பலர் முனைவர் பட்ட்ம் பெறவும் வழிவகை செய்தார். ந. சஞ்சீவி, ப. இராமன், சித்தலிங்கையா, ம.ரா.போ. குருசாமி போன்ற, பிற்காலத்தில் புகழ்பெற்ற தமிழறிஞர்கள் அ.ச.ஞா.வின் மாணவர்களே! 'இலக்கியத் திறனாய்வு' என்பதைத் தமிழில் முதன்முதலில் உருவாக்கியது அ.ச.ஞா.தான். தம்முடைய ஓய்வு நேரத்தில் இலக்கிய, ஆன்மீகச் சொற்பொழிவுகளை வழங்கினார். பட்டிமன்றம் என்ற சொல்லாடல் வகை தமிழ் இலக்கிய வழக்கில் வேர்விட்டுப் பரவ அ.ச.ஞா. பெரிதும் காரணமாக அமைந்தார்.

ஆய்வு செய்து அரிய நூல்கள் பலவற்றை எழுதி வெளியிட்டார். 'இராவணனன் மாட்சியும் வீழ்ச்சியும்' என்ற ஆய்வுநூலை 1942ல் வெளியிட்டார். 1950ல் 'கம்பன் கலை' என்ற நூல் வெளியாகி அவரது மேதைமையைப் பறைசாற்றியது. "எதையும் சுயமாகச் செய்; சுயமாகச் சிந்தனை செய்" என்று தந்தை வழிகாட்ட அதன் அடிப்படையிலேயே தன்னால் ஓர் ஆய்வாளனாக வளர முடிந்தது என்று கூறும் அ.ச.ஞா., பத்திரிகைகளில் தன்னை எழுத வைத்தது கி.வா.ஜ.தான் என்று குறிப்பிட்டுள்ளார். கலைமகள் மட்டுமல்லாது பல இலக்கிய இதழ்களிலும் கட்டுரைகள் எழுதினார். சொற்பொழிவுக் கலையிலும் தேர்ந்தவராக இருந்தார். இவருடைய பேச்சைக் கேட்டால் கேட்போர் உள்ளம் கசிந்து விடும். சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டதாரியான சி.வை. தாமோதரம் பிள்ளையின் மகனான அருட்தந்தை கிங்க்ஸ்பரி தாம் இறக்கும் தறுவாயில், அ.ச.ஞா.வின் திருவாசகச் சொற்பொழிவைக் கேட்டவாறே உயிர் துறந்தார் என்பதிலிருந்தே இவரது சொற்பொழிவுத் திறனை உணர்ந்து கொள்ளலாம். அவரது சொற்பொழிவுகள் பலவும் பின்னர் நூலாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றன.

கிட்டத்தட்ட 16 ஆண்டுகள், 1956வரை பேராசிரியராகப் பணியாற்றிய அ.ச.ஞா. பின்னர் சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தில் நாடகத் தயாரிப்பாளராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். மூன்று ஆண்டுகள் பொறுப்பில் இருந்து பல்வேறு புதுமைகளைச் செய்தார். ஏ.பி. கோமளா திருப்பாவை, திருவெம்பாவைப் பாடல்களைப் பாட அதற்குத் தாமே விளக்கமளித்தார். இசைமேதை டாக்டர் எஸ். ராமநாதனின் இசையமைப்பில் ஆய்ச்சியர் குரவையை ஒலிபரப்பினார். தமிழிசை வளர்வதற்கு முக்கியப் பங்காற்றிய அ.ச.ஞா., சிலப்பதிகாரம், மணிமேகலை, கம்பராமாயணம், கலிங்கத்துப் பரணி போன்றவற்றை வானொலி நாடகங்களாக்கி அளித்தார். குறிப்பாக அக்காலத்தில் பிரபலமாக இருந்த எம்.எம். தண்டபாணி தேசிகரைப் பாடவைத்துச் சில்ம்பு நாடகத்தை அரங்கேற்றியது குறிப்பிடத்தக்கது. இந்நாடகம் அகில இந்திய வானொலியின் மத்தியத் தலைமை இயக்குநரால் சிறந்த நாடகமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டதுடன், இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பானது.
1959ல் தமிழக அரசின் செய்தித் துறையில் மொழிபெயர்ப்புப் பிரிவின் இணை இயக்குநர் பணிக்கு அ.ச.ஞா. தேர்வானார். பின்னர் தமிழ் வெளியீட்டுத் துறையின் பொதுத்துறைச் செயலாளராகவும், தமிழ் வளர்ச்சித் துறையின் இணை இயக்குநராகவும் பணிபுரிந்தார். 1967 முதல் 1970 வரை மீண்டும் அதே தமிழ் வெளியீட்டுத் துறையின் இயக்குநர் பொறுப்பேற்றார். அக்காலத்தில் 350க்கும் மேற்பட்ட அறிவியல் நூல்களை இவர் தமிழில் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மதுரைப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகப் பொறுப்பேற்ற தெ.பொ.மீ., அ.ச.ஞா.வைத் தமிழ்த்துறைத் தலைவராகப் பொறுப்பேற்க அழைத்தார். அவ்வேண்டுகோளை ஏற்ற அ.ச.ஞா. 1973வரை அங்கு பணியாற்றிப் பின்னர் ஓய்வு பெற்றார். ஓய்வுக்குப் பின் முன்னிலும் சுறுசுறுப்பாக ஆராய்ச்சி நூல்கள், கட்டுரைகள் எழுதுவதிலும், சொற்பொழிவிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். தமிழையும் சைவத்தையும் இரு கண்களாகப் போற்றிய அவருக்கு ஆன்மீகவாதிகளின் ஆசிகளும் பக்கபலமாக அமைந்தது.

1955ல் ஒருமுறை யாழ்ப்பாணத்துக்கு பத்துநாள் சொற்பொழிவுக்காகச் சென்றிருந்தார் அ.ச.ஞா. முதல் நாள் சொற்பொழிவைச் சிறப்பாக முடித்தவருக்கு மறுநாள் காலை பேசமுடியாமல் போய்விட்டது. குரல் எழும்பவில்லை. மருத்துவரிடம் காண்பித்தபோது அவர் குரல்நாண் முற்றிலுமாகச் செயலிழந்துவிட்டது என்றும், இனி பேசவே இயலாது என்றும் கூறிவிட்டார். அதிர்ச்சியடைந்த அ.ச.ஞா., மனதைத் தேற்றிக் கொண்டு தன் குருநாதர்களுள் ஒருவரான யாழ்ப்பாணம் யோகர் சுவாமிகளைத் தரிசிக்கச் சென்றார்.
சுவாமிகள் சில அறிவுரைகள் சொன்னார். ஆனால் அ.ச.ஞாவுக்கு எதுவுமே மனதிற் பதியவில்லை. அரைமணி நேரம் சென்றது. பின் யோகர் சுவாமிகள், அ.ச.ஞா.விடம், "பொடியா! வழக்கம்போல் மாலையில் பிரசங்கம் செய்துவிட்டு இங்கே வா." என்றார். "உத்தரவுப்படியே செய்கின்றேன்" என்றார் அ.ச.ஞா. அன்றைய தினம் அவருடைய வாயிலிருந்து முதன்முதலாக வெளிவந்த வார்ததைகள் அவைதான். தொடர்ந்து யோகர் சுவாமிகள் "பொடியா! சேக்கிழாரையும் கம்பனையும் நாங்கள்தானே வெட்டிப் புதைக்கணும். கவலையில்லாமல் போய் வா பூ." என்றார். அவற்றின் அர்த்தம் என்ன என்பது அப்போது அ.ச.ஞா.வுக்குத் தெரியவில்லை. ஆனால் அதன் பின்னர்தான் அவர் கம்ப ராமாயணம் பற்றி மிகப்பெரிய ஆய்வுநூலைச் செய்ததும், சேக்கிழாரின் பெரிய புராணம் பற்றி மிக விரிவான ஆய்வைப் படைத்ததும் நடந்தேறியது. அது மட்டுமல்லாமல், அதன்பின்னர் அவர் எழுதிய நூல்களில் பெரும்பாலானவை கம்பன், சேக்கிழார் பற்றியவையே.

"அரசங்குடி சரவண முதலியாருக்கு 1916ல் மகனாகப் பிறந்து நான் பெற்றிருந்த குரல் யாழ்ப்பாணத்தில் 1955ல் இழக்கப்பட்டது. அந்தச் சித்த புருஷரைச் சந்தித்த பிறகு இன்றுவரை நான் பேசும் குரல் அப்பெருமகனார் இட்ட பிச்சையாகும். இதில் ஆச்சரியப்படுவதற்கோ பெருமை அடைவதற்கோ ஒன்றுமில்லை. இத்தகைய மகான்களின் திருவருள் எத்தகையவர்களையும் காக்கும் திறன் உடையது என்பதற்கு இது ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும்" என்கிறார் அ.ச.ஞா. தனது 'நான் கண்ட பெரியவர்கள்' நூலில்.

1940ல் கம்பனடிப்பொடி சா. கணேசனால் கம்பன் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. அதுமுதல் 1985வரை ஒவ்வோர் ஆண்டும் அதில் சிறப்புரையாற்றுவதை அ.ச.ஞா. வழக்கமாக வைத்திருந்தார். எஸ். ராஜம் வெளியிட்ட கம்பராமாயண மூலத்திற்கு ஆசிரியர் குழுவில் ஒருவராகப் பணியாற்றினார், சென்னை கம்பன் கழகம் வெளியிட்ட 'கம்ப இராமாயணம்' பதிப்புக்குப் பல்கலைச் செல்வர் தொ. பொ.மீ. தலைமையில், தெ. ஞானசுந்தரத்துடன் இணைந்து பணியாற்றினார். கோவை கம்பன் கழகம் வெளியிட்ட இராமாயண நூல்களையும் பிறரின் வேண்டுகோளுக்கிணங்க எழுதி வெளியிட்டார். தஞ்சைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த வி.ஐ. சுப்ரமணியம் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெரிய புராணம் பற்றி மிக விரிவாக ஆய்வு செய்து 'பெரிய புராணம் ஒரு ஆய்வு' என்ற நூலைப் படைத்தார். தொடர்ந்து 'சேக்கிழார் தந்த செல்வம்' என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். தொல்காப்பியப் பொருளதிகாரத்திலுள்ள மெய்ப்பாட்டியல், உவமையியல் இரண்டுக்கும் புதிய முறையில் உரை எழுத முயன்றார். ஆனால் அது கைகூடவில்லை. திரு.வி.க. அவர்களின் வேண்டுகோளை ஏற்று திருவாசகத்துக்கு உரை எழுத முயன்றார். ஆனால் அதுவும் நிறைவேறவில்லை. கம்பன் மற்றும் பெரிய புராணம், பக்தி பற்றியே மிகுதியான நூல்கள் எழுதினார். "என்ன காரணத்தாலோ, சென்ற நாற்பது ஆண்டுகளாக இவ்விருவரையும் தாண்டி வெளியே செல்ல முடியவில்லை. அடுத்தடுத்து இரண்டு பெரிய நூல்களை எழுதி வெளியிட முடிந்ததென்றால் அதன் உண்மையான காரணம் அ.ச.ஞா. என்ற தனி மனிதனுடைய முயற்சியோ, விருப்பமோ காரணமல்ல. எந்த விநாடி அந்த மகான் வாயைத் திறந்து "அந்த இருவரையும் வெட்டிப் புதைக்க வேண்டும்' என்று சொன்னார்களோ, அந்த விநாடியிலிருந்து அதே பணி என்னையும் அறியாமல் நடந்து கொண்டிருக்கிறது" எனத் தனது 'நான் கண்ட பெரியவர்கள்' நூலில் குறிப்பிட்டுள்ளார் அ.ச.ஞா.

திரு.வி.க.வைத் தனது சிறிய தந்தையாக மதித்தார் அ.ச.ஞா. திரு.வி.க.வும் அவர்மீது மிகுந்த அன்பு பூண்டிருந்தார். தனது மணிவிழாவுக்கு அ.ச.ஞா.வின் துணைவியாரான இராஜம்மாளைத் தலைமை தாங்கச் செய்தார். தனது மரணத்துக்குப் பிறகான சடங்குகளைச் செய்ய அ.ச.ஞாவுக்கும் டாக்டர் மு.வரதராசனுக்கும் மட்டுமே திரு.வி.க. அனுமதி அளித்திருந்தார்.

35 ஆய்வு நூல்கள், எண்ணிலடங்காத இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி சொற்பொழிவுகள் என அ.ச.ஞா. தமிழுக்கு ஆற்றியிருக்கும் அரும்பணி அளவிட ஒண்ணாதது. எல்லோருக்கும் புரியும் வண்ணம் எளிய நடையில் இவர் ஆனந்த விகடனில் எழுதிய 'குறள் கண்ட வாழ்வு' மிகுந்த வரவேற்பைப் பெற்ற ஒன்று. தாகூர், ஜான் டெவி, தொரோ போன்றோரது நூல்களைத் தமிழில் பெயர்த்துள்ளார். தெள்ளாறு நந்தி உட்படப் பதினைந்துக்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். தம்பியர் இருவர், இலக்கியக் கலை, கிழக்கும் மேற்கும், மணிவாசகர், தத்துவமும் பக்தியும், தேவார திருப்பதிகங்கள் போன்ற பல நூல்கள் இவரது நுண்மாண் நுழைபுலத்தைப் பறை சாற்றுவன. 1985ல், ஏவி.எம். அறக்கட்டளைக்காக பன்னிரண்டே நாட்களில் இவர் எழுதிய 'கம்பன் ஒரு புதிய பார்வை' என்ற திறனாய்வு நூலுக்கு சாகித்திய அகாதமி விருது கிடைத்தது. நண்பர், இசைமேதை எஸ். ராமநாதனின் உதவியுடன் தேவாரத் திருமுறைப் பாடல்களை ஓதுவார்களைக் கொண்டு பாடச் செய்து இசைத் தட்டுக்களாக வெளியிட்டது ஒரு சாதனை.

1992ல் அ.ச.ஞா. அமெரிக்காவுக்குச் சென்றார். அப்போது பெரியபுராணத்திற்கு ஏதாவது செய்ய வேண்டுமென்ற எண்ணம் வலுப்பட்டது. சென்னை திரும்பியதும் 1993ல் டி.எஸ். தியாகராஜனின் வேண்டுகோளை ஏற்று, சேக்கிழார் ஆய்வு மையத்தைத் தோற்றுவித்து அதன் முதல் கூட்டத்தைக் கூட்டினார். பெரிய புராணத்தை ஒரே நூலாக திரு.வி.க. உரையுடன் வெளியிட வேண்டும் என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதற்குப் பெருந்துணையாக இருந்த தமிழறிஞர் எம்.வி. ஜெயராமன் திடீரெனக் காலமாகி விடவே, அதனை எப்படி நிறைவு செய்வது என அ.ச.ஞா. கலங்கினார். பின்னர் சில நண்பர்களுடன் சென்று காஞ்சி மகா பெரியவரைச் சந்தித்தார். 99 வயதான மகா பெரியவர் அப்போது ஒரு சாய்வு நாற்காலியில் வீற்றிருந்தார். அவருக்கு இவர்களது வருகையின் நோக்கம் பற்றிச் சொல்லப்பட்டது. உடனே மகா பெரியவர் கண்களால் அடியவர் ஒருவருக்குக் கட்டளையிட அவரது ஆக்ஞைக்கேற்ப அந்த அடியவர் பட்டு சால்வையை, உச்சிமுதல் பாதம்வரை பெரியவர் மீது படும்படியாக முழுவதுமாகப் போர்த்தி, பின்னர் சில நிமிடங்கள் கழித்து அதை அ.ச.ஞா.வுக்குப் போர்த்தினார். பெரியவரின் ஆசி கிடைத்த மகிழ்ச்சியில் வணங்கி விடை பெற்றார் அ.ச.ஞா.

சில மாதங்களில் பெரிய புராணம் நூல் வெளியானது. சேக்கிழார் விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகா பெரியவர் திடீரென காலமானார். பெரிய புராணம் நூல் பிரதிகளை எடுத்துக் கொண்டு காஞ்சி மடம் சென்றார் அ.ச.ஞா. அப்போது அங்கே அவரைச் சந்தித்த பாலபெரியவர், "அ.ச. அன்று உங்களுக்கு மகாபெரியவர் ஆசி அளித்தார்களே அதன் பொருள் என்ன என்று தெரியுமா? அதுதான் பூரண ஆசிர்வாதம். அதற்கு மேல் அவர்களால் தரக்கூடியது எதுவுமில்லை. அப்படியொரு ஆசியை உங்களுக்கு வழங்கியிருக்கிறார்" என்று கூறினார். அதே வகை ஆசியைப் பெற்ற மற்றொருவர் பி.வி. நரசிம்ம ராவ். இவர்கள் இருவரையும் தவிர மகாபெரியவர் தன் வாழ்நாளில் வேறு யாருக்கும் இவ்வித பூரண ஆசிர்வாதத்தை அளிக்கவில்லை. "மகானின் அந்தப் பூரண ஆசிர்வாதமே, இன்றுவரை என்னைக் காத்து நிற்பதோடு, இரண்டாயிரம் பக்கங்களில் திருவாசகத்துக்கு உரை எழுதும் வாய்ப்பையும் தந்துள்ளது" என்று குறிப்பிட்டிருக்கிறார் அ.ச.ஞா.

இலக்கியச் செறிவும், ஆய்வு நுட்பமும் வாய்ந்தவை அ.ச.ஞா.வின் நூல்கள். இளங்கோவடிகளும், கோவலனும் சமணர் அல்லர் என்பதை 'இளங்கோவடிகளின் சமயம்' என்ற நூலில் நிறுவியுள்ளார். 'பன்முக நோக்கில் ராமன்' என்ற நூல் அ.ச.ஞா.வின் ஆய்வுத் திறனைக் காட்டும் நூல். கம்பராமாயணம் பற்றிய இவரது நூல் ஓர் ஆய்வுப் பொக்கிஷம் என்றால் மிகையில்லை. அதில் கைகேயியின் தியாகம், வாலி வதத்தின்போது இராமன் நடந்துகொண்ட விதம், இராமன்-சூர்ப்பனகை விவாதம், சீதையை தீக்குளிக்கச் சொன்னது போன்ற பல விஷயங்களை ஆய்வுக்குட்படுத்தி கம்பன் உண்மையில் சொல்ல வருவது என்ன, அந்தந்த பாத்திரப் படைப்பின் தன்மை என்ன என்பதையெல்லாம் மிக விரிவாகப் பதிவு செய்திருக்கிறார். ராமன் நிலை தவறிய இடங்கள், அதற்கான காரணங்கள், அது பற்றிய தனது கருத்து போன்றவற்றையெல்லாம் அவர் அந்நூலில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். அதுபோல பெரிய புராணம் பற்றிய நூலில் சர்ச்சைக்குரிய சமணர்கள் கழுவேற்றப்பட்ட செய்தி குறித்து விரிவாக ஆராய்ந்து அது உண்மையல்ல என்பதை நிறுவியுள்ளார்.

இவரது பெரிய புராண ஆய்வு நூல் சைவ அறிஞர்களால் ஒரு மாபெரும் பொக்கிஷமாகக் கருதப்படுகிறது. சைவத் தொண்டர்களான நாயன்மார்களது வரலாற்றை மட்டுமே கூறும் நூல் அல்ல இது. பெரிய புராணம் ஏன் தோன்றியது, அதனுடைய காலப் பின்புலம், சேக்கிழாரின் நூல் நோக்கம், பெரிய புராணம் மூலம் அவர் கூறவந்த கருத்து போன்ற தகவல்களையும், வேதத்திற்கும் சைவத்திற்கும் உள்ள தொடர்பு, ருத்திரன் ருத்திர சிவனாகி, சிவ வழிபாடுக்கு முக்கியத்துவம் வருவது, சங்க காலம் முதல் காப்பியக் காலம்வரை தமிழகத்தில் சிவன் வழிபாடு, தேவார காலத்திற்கு முன்னும் பின்னுமான சிவ வழிபாட்டு நிலை போன்றவற்றை அவர் அதில் விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும், சேக்கிழாரின் படைப்பாற்றல் திறன், அவரது மொழி ஆளுமை, சொல்லாட்சி, புலமை நயங்கள், காப்பிய நோக்கம், புதுமைகள் என பலவற்றை அந்நூலில் அவர் விரித்துரைத்துள்ளார். அந்நூலின் பிற்சேர்க்கையாக இணைக்கப்பட்டிருக்கும் ஸ்ரீ ருத்திரம் பற்றிய விளக்கம் மிகச் சிறந்த ஒன்று. யஜூர் வேதம், வேதங்களின் பிரிவுகள், ஞான பாகம், யாக முறைகள், ஹோம மந்திரங்கள், அவதாரிகை என பல விஷயங்களைப் பற்றி மிக விரிவாக ஆராய்ந்து எழுதியிருக்கிறார். இதில் அவருக்கு உதவியது வேதங்களைப் பற்றிய விளக்கங்களை எழுதிய அறிஞர் நஞ்சுண்டன் அவர்கள். அ.ச.ஞா. மேற்கொண்ட வேதம் பற்றிய இவ்வாய்வே பின்னாளில் 'மந்திரங்கள்' என்ற நூல் உருவாவதற்குக் காரணமானது.

அ.ச.ஞா.விற்கு மெய்கண்டான், சரவணன் என்ற ஆண்மகவுகளும், சிவகாம சுந்தரி, பங்கயச் செல்வி, அன்புச் செல்வி, மீரா ஆகிய பெண் மகவுகளும் உண்டு. மனைவி தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றிருந்தார். ஓயா உழைப்பாலும், முதுமையின் தளர்ச்சியாலும், நீரிழிவு நோயினாலும் அ.ச.ஞா.வின் கண் பார்வை பழுதுபட்டது. ஆனாலும்கூடச் சோர்வுறாமல் தனது எழுத்துப் பணியைத் தொடர்ந்தார். ஏதேனும் நூல் தேவையாக இருந்தால் கூட, இல்லத்தில் வைக்கப்பட்டிருக்கும் அதன் இடம், நூலின் தலைப்பு, அதன் அட்டையின் நிறம் என எல்லாவற்றையும் குறிப்பிட்டு தெளிவாகக் கூறும் அளவிற்கு நிகரற்ற நினைவாற்றல் படைத்திருந்தார். உதவியாளர் ஒருவரைக் கொண்டு தான் சொல்லச் சொல்ல கட்டுரைகளை எழுத வைத்தார். அவ்வாறு கண் பார்வை இழந்த அந்த நிலையில் எழுதி முடிக்கப்பட்டதுதான் 'திருவாசகம் சில சிந்தனைகள்' என்ற ஐந்து பாகங்கள் கொண்ட, இரண்டாயிரம் பக்கங்களுக்கும் மேற்பட்ட நூல்.

அ.ச.ஞா. உடல் நலிவுற்று ஆகஸ்டு 27, 2002 அன்று 86ம் வயதில் காலமானார். தமிழுக்கும் சைவத்திற்கும் சீரிய தொண்டாற்றிய அ.ச.ஞானசம்பந்தன், தமிழர்கள் என்றும் நினைந்து போற்றத் தக்க மிக முக்கிய முன்னோடி.

(தகவல் உதவி: அருந்தமிழ் அறிஞர் அ.ச.ஞா., உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், நான் கண்ட பெரியவர்கள், அ.ச.ஞா)

பா.சு.ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline