Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
May 2011 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | முன்னோடி | ஹரிமொழி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | அஞ்சலி | ஜோக்ஸ்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | நினைவலைகள் | நலம் வாழ | சினிமா சினிமா | Events Calendar | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
அதுக்காக, எல்லாம் அதுக்காக!
550 டாலர் மிளகாய்!
நோன்பு
- எல்லே சுவாமிநாதன்|மே 2011|
Share:
"வெள்ளிக்கிழமை வரலக்ஷ்மி நோன்பு. சாவித்ரி மாமி இருந்திருந்தா அவங்க வீட்டில போய் நோன்பு பண்ணியிருக்கலாம். அவங்க தங்கை பெண் கல்யாணத்துக்குச் சென்னைக்குப் போயிட்டாங்க. இந்தத் தடவை நானேதான் தனியா செய்யணும்போல இருக்கு" என்றாள் உமா.

"எப்படி செய்யப் போறே?" என்றான் மாதவன்.

"மாமி போறதுக்கு முன்னால பூஜை காசெட்டும், புத்தகமும் கொடுத்திருக்காங்க. அதைப் பார்த்துப் பண்ணிடலாம். உங்க ஹெல்ப் வேணும் எனக்கு"

"தாராளமா. ஒரு நாள் ஆபீசுக்கு லீவு போட்டுடறேன்"

"ஓ. ஓ. மறந்திட்டேன். ஒரு கன்னிப் பொண்ணு வேணுமே. அவளை அம்பாளா பாவிச்சு மரியாதை பண்ணணும். வழக்கமா மாமியோட சின்னப் பேத்தி மாலா வருவா. அவளும் கல்யாணத்துக்கு இந்தியா போயாச்சு"

மாதவன் திடீரென்று சிரித்தான்.

"என்னங்க. சீரியசா பேசிட்டிருக்கேன்? எதுக்கு சிரிப்பு?"

"ஒண்ணுமில்ல. படிச்ச விசயம் ஒண்ணு நெனவுக்கு வந்துது"

"என்னவாம்?"

"கிராமத்தில ஒரு மரத்தடி பள்ளிக்கூடம். வாத்தியார் பாடம் நடத்தராரு. பசங்க தரையில் உட்கார்ந்து கேட்கிறாங்க. அப்ப ஒரு நாய் குறுக்க ஓடிச்சாம். பசங்க கவனம் நாய் மேல போயிட்டது. வெரட்டுரா நாயைன்னு கத்தினாரு. பசங்க வெரட்ட நாய் கொஞ்ச தூரம் போயிட்டு மறுபடியும் உள்ள வந்துடுத்து. வாத்தியாருக்கு கடுப்பாயிடிச்சி. "கட்டுடா நாயை மரத்தில"ன்னு கத்தினாரு. நாயை மரத்தில கட்டிட்டு வகுப்பு முடிஞ்சதும் அவுத்து விட்டாங்க. ஒரு மாணவனை அழைத்து "நாளையிலேருந்து வகுப்பு தொடங்கறதுக்கு முன்னால நீதான் நாயைக் கட்டிடணும்"னாரு. அவனும் அப்படியே செஞ்சான்.

கொஞ்ச காலம் கழிச்சு அந்த வாத்தியாரு செத்துப் பூட்டாரு. அந்தப் பள்ளிக்கூடத்தில படிச்ச மாணவன் ஒத்தன் இப்ப வாத்தியாரா வந்துட்டான். வகுப்புக்கு வந்து உடனே அவனுக்குப் பாடம் நடத்த முடியல. பசங்கல்லாம் "என்ன சார். உடம்பு சரியில்லயா"ன்னாங்க.

"உடம்பு சரியாத்தான் இருக்கு. ஆனா ஏன் யாரும் நாயைக் கட்டல"ன்னான்.

"சார் இங்க நாயே இல்லையே"ன்னாங்க.

"அதெப்படியோ எனக்குத் தெரியாது. பாடம் நடத்தரதுக்கு முன்னால் நாயைப் பிடிச்சுக் கட்டணும். அதான் எங்க காலத்து வழக்கம். இங்க நாய் இல்லாட்டி ஒண்ணை தேடிப் பிடிச்சுக் கட்டுங்கடான்னார். பசங்க ஓடிப்போய் ஒரு நாயைப் பிடிச்சுக் கட்ட பாடம் தொடங்கிச்சாம். அப்பத்திலேருந்து வகுப்பு நடக்கறச்ச நாயைப் பிடிச்சுக் கட்டறதுங்கறது ஒரு சடங்காகவே ஆயிடுச்சாம்."

"எதுக்கு இப்ப இந்தக் கதை?"

"இல்ல சில சமயம் ஏன் செய்யறோம்னு தெரியாமலே சில விசயங்களை ஒரு சடங்கா செய்யிறோம். வரலக்ஷ்மி நோன்புக்கு ஒரு கன்னிப் பெண்ணு வேணும்னு நீ கேட்டல்ல. ஏதொ ஒரு வீட்ல சின்னப் பெண்ணுங்க விஷமம் செய்யாம இருக்க பூஜையில உட்கார்த்தி வைக்கப் போக அதுவே இப்ப சடங்காயிடுத்தோ?"

"போதும் நிறுத்துங்க" என்று சீறினாள் உமா. மாதவன் குறிப்பறிந்து பேச்சை மாற்றினான்.

"சான் டியேகோலே உங்க அத்தை பெண்ணு ஒண்ணு இருக்கே. அவளைக் கூப்பிட்டா என்ன?"

"அவ பெரிய பொண்ணு. இதுக்கு சரியா வராது. தவிர அவளுக்கு காலேஜ் இருக்கு"

"ஆமாம் உன் சினேகிதி பொண்ணு புவனா?"

"அது பிசாசுபோல தலையப் பிரிச்சுப் போட்டுணு சூயிங்கம் மென்னுகிட்டு தாம்தூம்னு இருக்கும். பூஜைக்கு உட்கார்த்தி வெக்க லாயக்கில்ல."

"ஆகா. எனக்கு ஒரு ஐடியா. கீழ் போர்ஷன்ல இருக்கே, குட்டிப்பெண் மரியா. அதைக் கூப்பிட்டா என்ன?

"சீ... அது மெக்சிகப் பொண்ணு. அதையெல்லாம் உள்ள விடவே கூடாது"

"உமா. அப்படிச் சொல்லாத. பாவம் ஏழைப்பொண்ணு. அப்பா அம்மா வயித்துப் பிழைப்புக்குனு வெளியில தோட்டவேலை செய்யப் போயிடராங்க. இன்னும் அதுக்கு பள்ளிக்கூடம் போற வயசாகல. வீட்டோட அடைஞ்சு கிடக்கு. அதை ஒரு மணி நேரம் பூஜைக்கு கூப்பிட்டு வடை, பாயசம், பழம்னு கொடுத்தா புண்ணியம்தான். அம்பாள் மெக்சிகப் பொண்ணு ரூபத்தில இருக்க மாட்டானள்னு சொல்லமுடியுமா உன்னால?"

உமா யோசித்தாள்.

"சரி வந்துட்டுப் போகட்டும். அவங்க அப்பா அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அடுத்த வாரம் பூஜை அன்னிக்கி கொஞ்ச நேரம் அழைச்சிட்டுப் போறேன்னு சொல்லி வையுங்க"

*****
காசெட்டில் புரோகிதர் சொல்லும் வேகத்துக்கு உமாவால் பூஜை பண்ண முடியாததால் மாதவனே புத்தகத்தைப் பார்த்துத் தட்டுத் தடுமாறிப் படிக்க உமா பூஜையை ஒருவழியாக முடித்தாள். நிவேதனம் செய்து அம்மனுக்குக் கற்பூரம் காட்டுவதை அந்தப் பெண் வியப்போடு பார்த்துக் கொண்டிருந்தது.

"ஒரு நிமிசம் இருங்க. புடவை மாத்திட்டு வரேன்" என்று உமா மாடிக்குப் போகவும், மாதவன் கீழே போய் தன் அபார்ட்மெண்டுக்குரிய தபால் பெட்டியிலிருந்து அன்றைக்கு வந்திருந்த கடிதங்களை எடுத்து வந்தான்.

உமா ஒரு பையில் வடை, ஆப்பிள் பழங்கள் போட்டு அந்தப் பெண்ணிடம் கொடுத்து, ஒரு தட்டில் குங்குமம், வெத்திலையில் இரண்டு டாலர் காசுகளுடன் நீட்டி, "டேக் இட். இட்ஸ் ஃபார் யூ" என்று கொடுத்தாள். "கிராசியாஸ்" என்று சொல்லிப் பணத்தை வாங்கிக் கொண்டாள். மாதவன் அந்தப் பெண்ணைக் கீழே அழைத்துக்கொண்டு போய் அவள் அபார்ட்மெண்டில் விட்டுவிட்டுத் திரும்பினான்.

உமா பூஜை செய்த இடத்தில் தரையில் சிதறியிருந்த பூக்களைக் குவித்துக் கொண்டிருந்தாள். திடீரென்று "இங்க வாங்க" என்றாள் உரக்க.

"என்னம்மா" என்றான் மாதவன்.

"முத்துமாலை எங்க போச்சு?"

"அய்யோ நான் எடுக்கலயே."

"அம்மனுக்குப் போட்டிருந்தது இப்ப எங்க போச்சு?"

"தெரியாதும்மா. மெதுவா, பதறாம பாரு"

அவனும் சேர்ந்து தேடினான். எங்கும் இல்லை.

"நான் மாடிக்கு டிரஸ் மாத்தப் போறச்ச நீங்க இங்கதானே இருந்தீங்க?"

"ஆமா. ஆனா ரெண்டு நிமிஷம் கீழ போயி தபால் எடுத்துட்டு வந்தேன்"

"அப்ப அந்தப் பொண்ணு இங்க தனியாத்தானே இருந்துது?"

"ஆமாம்."

"அப்ப அதுதான் திருடிருக்கு. நாம இல்லாதபோது சட்டுனு எடுத்து மடியில செருகிட்டு இருக்கும்"

"சேச்சே. அது சின்னப் பெண்ணு. குழந்தை. அதுக்கு திருட்டுப் பட்டம் கட்டாதே."

"குழந்தையாவது கோட்டானாவது. அப்பவே சொன்னேன். இதுகள் உள்ள வரப்படாதுன்னு"

"நீ பதட்டப்படாதே. மறுபடியும் தேடலாம்."

"தேடியாச்சு. இப்பவே போலீசுக்கு போன் பண்ணி அந்தப்பெண்ணை உள்ளே தள்ள...."

"அசிங்கமாயிரும். நானே போயி கேட்டுப் பார்க்கிறேன். தெரியாம எடுத்திருக்கலாம். பசிக்குது. முதல்ல சாப்பிடலாமா?"

"இருநூறு டாலர் மாலையைக் காணோம். உங்களுக்குச் சாப்பாடு கேக்குதா இப்ப? வாங்க போயி அதை மண்டையில ரெண்டு தட்டி...."

"வேணாம் உமா. நீ வந்தா நல்லாயிருக்காது. நான் போயி பக்குவமாக் கேட்டு...."

"இப்பவே போங்க" என்று உமா விரட்ட, கீழே போனான்.

தன் அபார்ட்மெண்ட் வாசலில் ஒரு நாற்காலியில் அமர்ந்திருந்தாள் அந்தச் சிறுமி. அருகில் பேப்பர் பையும், ஒரு பொம்மையும். மாதவன் மிகுந்த தயக்கத்துடன், குழைவான குரலில், "மரியா, ஐ வாண்ட் டு ஆஸ்க் யு சம்திங். டூ யு ஹாவ் த செயின் வித் யு?"

அவள் ஆம் என்று தலையாட்டினாள். கவுனுக்குள் கைவிட்டு கழுத்திலிருந்து ஒரு மெல்லிய வெள்ளிச் சங்கிலியை எடுத்துக் காட்டினாள். "மை மாம்ஸ் கிஃப்ட்" என்றாள் பெருமையாக.

"நாட் திஸ் செயின் மரியா. ஒயிட் பேர்ல் செயின்."

அவள் இல்லையென்று தலையாட்டினாள்.

ஒரு வேளை அந்தப் பையில் வெச்சிருக்கோ?

"வாட் டூ யு ஹாவ் இன் தட் பாக்?"

"திஸ் ஈஸ் வாட் யு கேவ் மி," என்று பையைப் பிரித்துக் காட்டினாள். அதில் ஒரு வடையும் இரண்டு பழங்களும், இரு டாலர் காசுகளும் இருந்தன. அவள் வடையை எடுத்துக் காட்டி, "திஸ் ஈஸ் குட். ஐ லைக் இட். ஐ ஏட் ஒன். திஸ் ஒன் ஈஸ் ஃபார் மை மாம்மி. ஷி வில் லைக் இட். ஐ ஆம் சேவிங் இட் ஃபார் ஹர்," என்றாள்.

ஒருவேளை வேற எங்காவது வீட்டுக்குள் ஒளிச்சிருக்குமோ? இவள் எடுத்திருக்கமாட்டாள் என்றும் தோன்றியது. இதை உமா நம்பமாட்டாள்.

இது போலீசு கேசாகக் கூடாது. அந்தப்பெண்ணின் பெற்றோர்களுக்கு கோபம் வரும். எதுக்கு பூஜை என்று அழைத்துப் போய்விட்டு திருட்டுப்பட்டம் கட்டுகிறீர்கள் என்று கேட்பார்கள்.

பொறுமையாக உமாவிடம் பேசிவிட்டு இன்றேக்கே புதிதாக ஒரு மாலை வாங்கி வந்து கொடுத்து, அந்தப் பெண் திருப்பிக் கொடுத்து விட்டது என்று சொல்லிவிடத் தீர்மானித்துத் தன் அபார்ட்மெண்டுக்குப் போனான்.

மேஜையில் தட்டுகள் போடப்பட்டு உணவு பறிமாறப்பட்டு இருந்தது. உமா அமைதியாகச் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

"உமா. அந்தப் பெண்ணை மிரட்டிவிட்டு வந்தேன். எடுத்து எங்கியோ தவறுதலா உள்ள வெச்சிட்டது போல. முழிக்கிறது. தேடித்தான்னு சொல்லிட்டு வந்தேன். சாயங்காலத்துக்குள்ள வந்திடும். கவலைப் படாதே"

"உட்கார்ந்து முதல்ல சாப்பிடுங்க. மாலை கெடச்சிடுத்து."

"அப்படியா, எங்க இருந்தது?"

"எங்க இருக்கும்! சொம்பில இருந்துது. அது தொலையப்படாதுன்னு சொம்பில போன வருசம் பூஜை முடிச்சப்பறம் எடுத்து வெச்சிருந்தேன். நான் குளிச்சிட்டு வரதுக்குள்ள சொம்பில அரிசியக் கொட்டி தேங்காயை மேல வைங்கன்னு சொன்னப்ப, சொம்பில என்ன இருக்குன்னு நீங்க பார்க்க வேண்டாம். பார்க்காம அரிசியக் கொட்டினதுல மாலை மறைஞ்சிடுத்து. நீங்க அலங்காரம் பண்றச்சே மாலை போட்டிருப்பீங்கன்னு செக் பண்ணாம இருந்துட்டேன். உங்களுக்கு ஒரு சின்னக் காரியம் பண்ணத் துப்பில்ல. உதவி செய்யறேன்னு உபத்திரவம் பண்ணத்தான் தெரியுது."

மாதவன் சட்டென்று எழுந்தான்

"எங்க வெளிய கிளம்பிட்டீங்க? கோவமா? பொண்டாட்டி ஒரு வார்த்தை சொன்னாப் பொறுக்காதாக்கும்? போனாப்போறது. மாலைதான் கெடச்சிடுத்தே? சாப்பிடுங்க."

"மரியாவுக்கு வடை ரொம்பப் பிடிச்சிருக்காம். இன்னம் நாலு வடை கொடுத்துட்டு வரப் போறேன்"

எல்லே சுவாமிநாதன்
More

அதுக்காக, எல்லாம் அதுக்காக!
550 டாலர் மிளகாய்!
Share: 




© Copyright 2020 Tamilonline