Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2006 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | நலம்வாழ | பயணம்
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | புதுமைத்தொடர் | தகவல்.காம் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | அமெரிக்க அனுபவம் | வார்த்தை சிறகினிலே | விளையாட்டு விசயம் | தமிழக அரசியல்
Tamil Unicode / English Search
முன்னோடி
இசைமணி சீர்காழி கோவிந்தராஜன்
- மதுசூதனன் தெ.|மார்ச் 2006|
Share:
Click Here Enlargeஇசை உலகில் அரியக்குடி, செம்மங்குடி, திருவாவடுதுறை என்று சொன்னால் அவ்வூரைச் சேர்ந்த இசைமேதைகளின் நினைவு வரும். அவ்வகையில் 'சீர்காழி' என்றால் எஸ். கோவிந்தராஜன் நினைவுக்கு வருவார். சீர்காழி என்றாலே அது கோவிந்தராஜனையே முழுமையாகச் சுட்டி நிற்கும் மரபு, இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதிக்குப் பின்னர் தமிழ்நாட்டில் வலுவாக நிலைபெற்றது.

இசையியல் வரலாற்றில் கர்நாடக, தமிழிசை மூவர், சங்கீத மும்மூர்த்திகள் என்று வகைப்படுத்தும் மரபு உண்டு. முத்துத்தாண்டவர் (1525-1625), அருணாசலக் கவிராயர் (1711-1779) மாரிமுத்தாப் பிள்ளை (1712-1787) ஆகியோர் கர்நாடகத் தமிழிசையை உருவாக்கியவர்கள். இவர்களை 'ஆதி மூம்மூர்த்திகள்', 'சீர்காழி மூவர்' என்று அழைக்கும் வழமையும் உண்டு.

இத்தகைய இசை வளம் நிரம்பிய சீர்காழியில் பிறந்து இசை உலகில் தன்னிகரற்று விளங்கித் தமிழிசை வளர்ச்சியில் தனியாக அடையாளப்படுத்தக் கூடியவராக இருந்தவர் சீர்காழி எஸ். கோவிந்தராஜன் (1933-1988).

ஜனவரி 19, 1933-ல் பிறந்த சீர்காழிக்குச் சிறுவயதிலேயே இசை ஆர்வமும் கலைப்பற்றும் அதிகம். கோயில் சார்ந்த இசையனுபவத்தில் லயித்து நிற்பார். இறைபக்தியும் அவரிடம் இயல்பாக இருந்தது. மகனின் இசை ஆர்வத்தைக் கண்ட தந்தை மகனுக்கு இசைப்பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்தார். இவரே தான் கற்ற இசையைப் பலவிதமாகப் பாடிக் கூடியிருப்போரை மகிழ்விப்பார். பாடும்பொழுது அதில் தனது சொந்த ஆலாபனையையும் சேர்த்துக் கொள்வார். கல்வியிலும் மிகுந்த அக்கறை காட்டினார். ஆசிரியர்களின் பாராட்டுக்கும் உரித்தானவராக இருந்தார். பள்ளியில் கற்ற கல்வியும் வீட்டில் பெற்ற இசைப் பயிற்சியும் இவருடைய எதிர்கால வாழ்வுக்கு அடித்தளமிட்டன. அந்தக் காலத்தில் இளைஞர்களின் மனதைக் கொள்ளை கொண்ட எம். கே. தியாகராஜபாகவதர், டி. ஆர். மகாலிங்கம் போன்றோரின் பாட்டுகளை சீர்காழி அற்புதமாகக் பாடிவந்தார்.

சீர்காழியின் தாய்மாமனான எஸ். பி. கிருஷ்ணன் என்பவர் ஒரு நாடகக் குழு அமைத்து நாடகங்கள் போட்டு வந்தார். இந்தக் குழுவில் சீர்காழியும் நடித்து வந்தார். நாடகத்தில் இவர் பாட்டு தனிச்சிறப்பாகப் பலரது பாராட்டையும் பெற்றது. வெண்கலக் குரலால் கணீரென்று பாடியும் பேசியும் சபையோரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி வந்தார். படிப்பை விட்டு நடிப்பில் முழுக்கவனம் செலுத்தினார். நாடகத்தில் நடிக்க இசைப் பயிற்சி அவசியம். இதனால் குருசாமி நாயனகாரர் என்பவரிடம் சீர்காழி இசைப் பயிற்சி பெற்றார். தொடர்ந்து தேவி நாடக சபாவில் சுமார் ஓராண்டு காலம் நடித்து வந்தார்.

நாடகத்தைக் காட்டிலும் சினிமாவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்பதை உணர்த்திச் சீர்காழியின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படக் காரணமாக இருந்தவர் பண்டிதர் பி. எஸ். செட்டியார். இவர்தான் 'சினிமா உலகம்' என்ற பெயரில் திரைப்படத் துறைக்கென்றே முதன்முதலாகப் பத்திரிகையைத் தொடங்கியவர். செட்டியார் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்துக்குச் சீர்காழியை அழைத்துச் சென்று துணைநடிகராகச் சேர்த்தார். சேலத்து வாழ்க்கை பிரபல நடிகர்கள், பாடகர்கள், இசைமேதைகள் ஆகியோரை நேரில் சந்திக்கும் வாய்ப்பைச் சீர்காழிக்குத் தந்தது. தனது கலை ஆர்வத்தை மேலும் வளர்த்துக் கொண்டார். இசைமீது கொண்ட நாட்டத்தால் காலையில் சாதகப் பயிற்சியை விடாது மேற்கொண்டார். ஒரு சமயம் ஸ்டுடியோவுக்கு வந்து தங்கியிருந்த இசைமேதை ஜி. இராமநாதன் காதில் சீர்காழியின் இசை விழுத்தது. ஓர் இசைக் கலைஞரை அடையாளம் கண்டார். "முறையாக இசைப்பயிற்சி பெற வேண்டும். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது" என்று வாழ்த்தினார். அதன்படி சென்னை சென்று இசைப்பயிற்சி பெறச் சீர்காழி திட்டமிட்டார். பி. எஸ். செட்டியார் வீட்டில் தங்கியிருந்து படிக்கத் தொடங்கினார்.

1949-ல் சென்னை தமிழிசைக் கல்லூரியில் சேர்ந்து இசை பயின்றார். 'இசைமணி' என்னும் பட்டத்தையும் பெற்றார். சங்கீதத்தில் மேலும் பயிற்சிபெற விரும்பி சென்னை மத்திய கர்நாடக இசைக் கல்லூரியில் (இப்போது தமிழ்நாடு அரசு இசைச் கல்லூரி) மேற்படிப்பு படித்தார். 1951-ல் 'சங்கீத வித்துவான்' எனும் பட்டத்தைப் பெற்றார். இசையியல் நுட்பங்களை ஆழமாகக் கற்றுக்கொள்ள திருப்பாம்புரம் டி. என். சுவாமிநாதபிள்ளையிடம் குருகுலவாசம் மேற்கொண்டு கற்றுவந்தார்.

மியூசிக் அகாடமி சார்பில் பி. எஸ். உயர்நிலைப்பள்ளியில் சங்கீதமேதை ஜி. என். பாலசுப்பிரமணியம் தலைமையில் ஒரு இசைப்போட்டி நடந்தது. அப் போட்டியில் பல மாணவர்கள் கலந்து கொண்டார்கள் இதில் சீர்காழியும் கலந்து கொண்டார். ஒவ்வொரு மாணவரும் ஒரு கீர்த்தனம் பாடிவிட்டு இறங்கி விட்டனர். சீர்காழியும் தன்பங்குக்குப் பாடிவிட்டு இறங்கினார். சிறிது நேரம் கழித்து ஜி. என். பி. எழுந்து "தனியாகச் சிறிதுநேரம் ராக ஆலாபனை செய்யக் கூடியவர்கள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். எல்லோரும் மௌனமாக இருந்தனர். அப்பொழுது சீர்காழி எழுந்து பத்து நிமிடம் ஆலாபனை செய்தார். ஒரே கைதட்டல். ஜி. என். பி. சீர்காழியை அணைத்துக் கொண்டு வெகுவாகப் பாராட்டினார்.

தொடர்ந்து இதுபோல் பல போட்டிகளில் கலந்து கொண்டு பரிசுகள் பெற்று வந்தார். கோவிந்தராஜன் சிறு பையனாக இருந்தாலும் தரமான உயர்ந்த சங்கீத ஞானம் உடையவர் என்ற தகுதிக்கும் பராட்டுக்கும் உரியவராக இருந்தார். அப்பொழுது பத்திரிகைகளும் அவரைப் பாராட்டி எழுதின. இருப்பினும் சுவாமிநாதபிள்ளையிடம் பெற்ற இசைப்பயிற்சியின் அணுகுமுறையால் பல நுட்பங்கள் கைவரப் பெற்றார்.

இவர் எல்லா மொழிக் கீர்த்தனத்திலும் மரபுமுறை வழுவாமல் பொருளுணர்ந்து உச்சரித்துப் பாடும் பயிற்சியை வரன்முறையாக வளர்த்துக் கொண்டார். தமிழ்க்கீர்த்தனங்கள் சீர்காழியின் குரலில் புதிய கோலங்கள் பூண்டன. எடுப்பான குரல், சுருதி சுத்தம், தெளிவான உச்சரிப்பு-இது தான் 'சீர்காழி' என்று அடையாளம் காட்டுமளவிற்குத் தனித்தன்மை மிக்கவராக இருந்தார். இசைக் கச்சேரிகளுக்கான வாய்ப்புகள் பெருகின. தமிழிசை இயக்கம் தொடர்ந்து வலுப்பெற்று இருப்பதற்கு சீர்காழியில் இசைக்கோலங்களும் தக்க பின்புலமாகவே இருந்தன.

"அப்பா தாம் பாடத்தேர்ந்தெடுக்கும் பாடல்களைத் தாமே பலமுறை படித்துப் பார்த்து, மங்களச் சொற்களால் அவை ஆக்கப்பட்டுள்ளதா என்று கவனித்துத் தேர்ந்தெடுப்பது வழக்கம். கவிதை, இயக்கம், பொருள்நயம் பொதிந்ததாக அவை இருக்க வேண்டும். பாடல் எழுதிய ஆசிரியரின் பெயரை பாடல் அரங்கில் கூறி, அவரை அறிமுகப்படுத்தி, பெருமைப்படுத்துவதை அப்பா ஒரு மரபாகக் கொண்டிருந்தார். தமிழ்க் கவிஞர்களுக்குத் தம் கைப்படக் கடிதம் எழுதி அவர்களை உற்சாகப்படுத்துவது அப்பாவின் வழக்கம். பாடலில் மாற்றம் ஏதேனும் இசைகருதிச் செய்ய வேண்டியிருந்தால் அதை அவர்களுடைய சம்மதம் பெற்றே செய்வார்" என்று சீர்காழியின் மகன் டாக்டர் சிவசிதம்பரம் கூறுவது இங்கு நோக்கத்தக்கது. இதன் மூலம் சீர்காழியின் பண்புகள் எத்தகையன என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.
சாதாரணமாக மூன்றுமணி நேரம் நடத்தும் கச்சேரியை மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்வார். அதாவது முதல் ஒருமணி நேரம் சாஸ்திரிய சங்கீதம். இரண்டாவது ஒருமணி நேரம் பக்திப் பாடல்கள். கடைசி ஒரு மணி நேரம் திரைப்பட இசை. இந்தப் பகுப்பு சாதாரண இசை ஆர்வலர்கள்வரை அனைவரையும் இசை அனுபவத்தில் மூழ்க வைக்கும் சிறப்புக் கொண்டது.

பக்திப்பாடல் இசைத் தொகுப்பில் சீர்காழியின் குரல் தனித்தொலிக்கும். சீர்காழி பாடிய கந்தர் அலங்காரம், கந்தர் சஷ்டி கவசம், அபிராமி அந்தாதி, திருப்புகழ், திருமந்திரம், சகலகலாவல்லி மாலை போன்றவற்றுக்கு டி. ஆர். பாப்பா இசையமைத்துள்ளார். "ஒவ்வொரு பாடகருக்கும் ஒரு தனிமுத்திரை உண்டு. ஆனால் எல்லா முத்திரைகளும் கோவிந்தராஜனிடம் அடக்கம். அவரைப் போல் இனிமேல்தான் ஒருவர் பிறக்கவேண்டும். அவர் ஒரு சகாப்தம்" என்கிறார் பாப்பா.

சீர்காழி திரையிசை, இறையிசை, நிறையிசை (பண்ணிசை) ஆகிய மூன்றிலும் முத்திரை பதித்தவர். 1953-ல் 'பொன்வயல்' எனும் திரைப்படத்தில் 'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற பாடலைப் பாடி அறிமுகமானார். அன்று முதல் திரை இசையில் சீர்காழியின் பாடல்கள் தனித்துவம் மிக்கவையாகவே விளங்கின. தொடர்ந்து அவர் பாடிய பாடல்கள் அவரது குரலால் தனிச்சிறப்புப் பெற்றன. இவர் பலரது இசையமைப்பிலும் பாடல்கள் பாடத் தொடங்கினார். தன் இசைவாழ்வுக்கு முதன்முதல் ஆலோசனை கூறி வழிகாட்டிய மேதை ஜி. இராமநாதன் இசையிலும் பல பாட்டுக்களைப் பாடியுள்ளார்.

'பட்டணம் தான் போகலாமடி' (எங்க வீட்டு மகாலட்சுமி - இசை எம்.வேணு), 'அமுதும் தேனும் எதற்கு' (தைபிறந்தால் வழி பிறக்கும் - இசை கே.வி.மகாதேவன்), 'மாட்டுக்கார வேலா' (வண்ணக் கிளி - இசை கே.வி.மகாதேவன்), 'வில் எங்கே கணை எங்கே' (மாலையிட்ட மங்கை - இசை விஸ்வநாதன்-இராமமூர்த்தி) என்று பல்வேறு பாடல்கள் பாடினார். பட்டிதொட்டியெங்கும் சீர்காழியின் குரல் ஒலித்தது. சீர்காழியின் வெண்கல நாதம் இசையியல் வரலாற்றில் தனித்தன்மை மிக்கதாகவே இருந்தது.

பக்திக்குத் தமிழ்மொழியின் சிறப்பு ஆழமானது, அழகானது. இதனால்தான் பக்தியிசை தமிழ் சார்ந்த அழகியல் தத்துவத்தின் பின்னணியில் வெளிப்படும்போது அது ஏற்படுத்தும் தாக்கம் உணர்வு பூர்வமானது. சீர்காழியின் பக்திப்பாடல்கள் ஆத்மார்த்த தரிசனத்தின் நிகழ்காலச் சாட்சி ஆகும். மனித மனங்களை மனித நிலைப்பட்ட இறைவனுடன் தொடர்புபடுத்தும் ஒரு கருவியாகவே பக்தி இசை விளங்குகிறது.

தமிழ்த் திரையிசை கூடத் தமிழர் வாழ்புலத்தின் கடத்துகையின் ஒருவித மோதல் நிலை என்றே கூறலாம். ஆனால் அது சுகமானது. ஆடி அடங்கும் வாழ்க்கையடா (நீர்க்குமிழி), உள்ளத்தில் நல்ல உள்ளம் (கர்ணன்), வெற்றி வேண்டுமா (எதிர்நீச்சல்) போன்ற பாடல்கள் ஏற்படுத்தும் பதிவுகள் ஆழமானவை. இதற்குப் பாடல் வரிகள் மட்டுமல்ல அந்த வரிகள் எந்த குரலில் ஒலிக்கின்றன என்பதும் முக்கியம். இதுபோல் எத்தனையோ பாடல்களைக் குறிப்பிட முடியும். பாரதி, பாரதிதாசன் பாடல்களைச் சீர்காழியின் குரலில் கேட்கும்பொழுது ஏற்படும் சுகம் சொல்லிமாளாது.

சீர்காழி பாடி நடித்த படங்களும் உண்டு. அப்படங்களில் அவர் பாடிய பாடல்கள் அவருக்கு பெரும்புகழைப் பெற்றுக் கொடுத்துள்ளன. திரைஇசையிலும் நடிப்பிலும் அவரளவிற்கு தனித்துவம் பேணக் கூடியவர்கள் வெகுசிலரே. அவர்களுள் ஒருவர் சீர்காழி.

இசையரசு, இசைப்புலவர், இசைப்பேரறிஞர் போன்ற பட்டங்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டார். தமிழகம் மட்டும் அல்ல தமிழ்பேசும் நாடுகளிலும் சீர்காழியின் குரல் ஓங்கியொலித்தது அவரது பாடல் இன்றுகூட புதிய அனுபவங்களைத் தரும் வகையிலேயே உள்ளது. அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் இசைத்துறைத் தலைவராகவும் இவர் பணிபுரிந்ததுண்டு. அத்துடன் இசையியல் பற்றிய நுட்பமான, ஆழமான கருத்துக்களையும் கொண்டிருந்தார்.

கௌரவ டாக்டர் பட்டம் பெற்றதோடு மேலும் பல கௌரவங்களுக்கு உரியவராகவே விளங்கிவந்தார். இவர் மார்ச் 24, 1988-ல் மறைந்தாலும் இவர் பாடிய பாடல்கள் மூலம் அவரது குரல் உயிர்கொண்டு வாழ்கிறது. இசை உலகில் சீர்காழி ஓர் சகாப்தம்தான்.

தெ.மதுசூதனன்
Share: 
© Copyright 2020 Tamilonline