Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2009 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | நலம்வாழ | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | எனக்குப் பிடிச்சது | எங்கள் வீட்டில் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா! | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | சாதனையாளர்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
ஒரு பெரிய விபத்து...
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஜூன் 2009||(3 Comments)
Share:

ஒலி வடிவத்தில் கேட்க
- Audio Readings by Vijayalakshmi Raja, Texas


அன்புள்ள சிநேகிதிக்கு

எவ்வளவு சமாதானம் செய்து கொண்டாலும் மனசு சில நேரம் கொதித்துப் போகிறது; துக்கமும் வேதனையும் பொங்கிக் கொண்டு வருகிறது. ஏன் இந்தச் சோதனையைக் கடவுள் கொடுக்கிறார் என்று தெரியவில்லை. ஒரே பெண். ரொம்ப புத்திசாலி. நன்றாக வளர்த்தோம். படிக்க வைத்தோம். ஆடம்பரமாகக் கல்யாணம் செய்து கொடுத்தோம். ஒரு வருடம் கூட ஆகவில்லை. அதற்குள் வாக்குவாதம், சண்டை என்று எல்லாமே அடங்கி முடிந்து போய்விட்டது. பையன் நேராக இருந்தால் கூட, இந்தப் பெற்றோர்கள் தலையீட்டினால் தான் இத்தனை விபரீதம். பிள்ளையைப் பெற்றவர்கள் தங்களுக்குக் கொம்பு முளைத்திருக்கிறது என்று நினைத்த காலம் எல்லாம் போய்விட்டது. அந்தக் காலம் போல மருமகள் எழுந்து நின்று மரியாதை செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். தங்கள் பிள்ளைக்கு தினம் விதவிதமாகச் சமைத்துப் போடவேண்டும் என்று நினைக்கிறார்கள். 'மெட்டி போட்டுக் கொள்ளவில்லை, தாலியைச் சின்னதாகச் செய்து போட்டுக் கொண்டிருக்கிறாள். பொட்டு கண்ணுக்கே தெரிவதில்லை. கணவனை, ‘வாடா, போடா' என்று எங்கள் எதிரிலேயே அவமரியாதையாகக் கூப்பிடுகிறாள். நாள், கிழமைகளில் கூட பழையதைப் போட்டுத் திணிக்கிறாள்' - என்று எத்தனை குற்றச்சாட்டு இருக்கிறதோ, அத்தனையும் கேட்டு எங்களுக்கு அலுத்துவிட்டது.

நாலு இடத்திற்கு தாங்களே போய் வருவதால், பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். பிறர் அவர்கள் விஷயத்தில் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை.
நானும் அந்தச் சம்பிரதாயங்களைக் கடைப்பிடித்தவள் தான். அந்தக் காலத்தில் எங்களை வீட்டிலிருந்தே கல்லூரிக்குப் போக விட்டார்களே ஒழிய, எஞ்ஜினியரிங் டிகிரிக்கு அனுப்பவில்லை. கல்யாணம் செய்து கொள்ளாமல் வெளிநாட்டுக்குத் தனியாக அனுப்பவில்லை. ஒரு பெண் வெளியில் சென்று வேலை பார்த்தாலே பெண் எடுக்கப் பயந்தார்கள். இப்போது, பெண், தன் பிள்ளையைப் போல Professional ஆக இருக்க வேண்டும், அழகாக இருக்க வேண்டும், நன்றாகச் சம்பாதிக்க வேண்டும் என்று ஆயிரத்தெட்டு எதிர்பார்ப்புகள். வரதட்சணை என்று கேட்டு வாங்காவிட்டாலும், கல்யாணச் செலவு, நகை, சீர் என்று எத்தனை லட்சம் பெண்ணைப் பெற்றவர்களுக்குச் செலவு! இவ்வளவும் ஆசை ஆசையாக நம் பெண் சந்தோஷமாக இருக்கத்தானே செய்கிறோம்? அப்படியும் பொங்கலுக்கு, ஆடிக்கு நாம் கண்டு கொள்ளவில்லை என்று புகார். நாலு இடத்திற்கு தாங்களே போய் வருவதால், பெண் குழந்தைகள் சுதந்திரமாக இருக்கக் கற்றுக் கொண்டுவிட்டார்கள். பிறர் அவர்கள் விஷயத்தில் தலையிடுவதை அவர்கள் விரும்புவதில்லை. அப்படியிருக்கக் கல்யாணம் ஆனப் புதிதில் adjustment problems இருக்கத்தான் செய்யும். ஏதோ முட்டிக்கொண்டு, புரண்டெழுந்து அவர்கள் சீர்படுத்திக் கொள்ளட்டுமே! இவர்கள் ஏன் தலையிட வேண்டும்? எங்களிடம் கூடத்தான் எங்கள் பெண் குறை சொன்னாள். நாங்கள் மனசுக்குள் சங்கடப்பட்டோமே ஒழிய, அதிகம் மத்தியஸ்தத்திற்குப் போகவில்லை. இவர்கள் இருவரும், 'நாங்கள் சரி செய்கிறோம்' என்று இங்கே வந்து ‘டேரா' போட்டுக் கொண்டு, இன்னும் பிள்ளையை ஏற்றிவிட்டு, இருந்த கொஞ்சநஞ்ச உறவையும் முறித்துவிட்டுப் போய் விட்டார்கள். நாங்கள் எதிர்த்துக் கேட்டதற்கு, ‘உங்கள் பெண்ணிற்கு வாய் நீளம். அவளை அடக்கி வைத்திருந்தால் இந்த நிலைமை வந்திருக்காது. நாங்கள் ஒரு சொடுக்குப் போட்டால் என் பிள்ளைக்கு இப்போதும் பெண் கொடுக்கத் தயாராயிருக்கிறார்கள்' என்று எங்கள் மனசை ரத்தக் காயப்படுத்தி விட்டுப் போய்விட்டார் அந்தப் பெண்மணி. எங்கள் பெண்ணைச் சரியாகத் தான் வளர்த்திருக்கிறோம். அவளுக்கு உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசத் தெரியாது. பாசமாக இருப்பாள். வெளிப்படையாகப் பேசுவாள். நியாயமாகத்தான் செயல்படுவாள். இப்படி அவள் வாழ்க்கையைப் பாழடித்து விட்டார்களே என்று நானும் இவரும் குமுறிப் போகிறோம். இந்தப் பெண்ணிற்கு எதைச் சொல்லி சமாதானப்படுத்துவது, என்ன வழி காட்டுவது, இனிமேல் யார், என்ன செய்ய முடியும்? உங்களிடம் சொல்வதால் பாரத்தைக் குறைக்க முடியுமா என்று தான் பார்க்கிறேன்.

இப்படிக்கு
-----------
அன்புள்ள சிநேகிதியே,

உங்கள் வேதனைக் குரல் இந்தப் பகுதியைப் படிப்பவர் அனைவருக்கும் கேட்கிறது. அதுவும் பெண்ணைப் பெற்றவர்களுக்கு இன்னும் கொஞ்சம் பிசையும். நீங்கள் எழுதிய விதத்தைப் பார்க்கும்போது சட்டரீதியாக முடிவுத் தீர்மானம் ஆகியிருக்கிறது என நினைக்கிறேன். இது ஒரு பெரிய விபத்து. மரணத்தைப் போல உடம்பையும், மனதையும் உலுக்கி, உலுக்கித் தளர வைத்து விடும். ஒரே இனம், ஒரே ஜாதி என்று இருந்தாலும், குடும்பத்துக்குக் குடும்பம் கலாசார வேற்றுமைகளும், எதிர்பார்ப்புகளும், அவரவர் அனுபவங்களுக்கேற்ப வேறாகத்தான் இருக்கின்றன. நமக்குச் சரி என்று தோன்றுவது, பிறருக்குப் புரிபடாமல் போகிறது. பிள்ளையைப் பெற்றவர்கள் எல்லோருமே இப்படி இருப்பதில்லை. மாமியாரும், மருமகளும் தோள்மேல் கை போட்டுக் கொண்டு தோழமையுடன் பழகும் குடும்பங்களையும் நான் பார்த்திருக்கிறேன்.

ஒரே இனம், ஒரே ஜாதி என்று இருந்தாலும், குடும்பத்துக்குக் குடும்பம் கலாசார வேற்றுமைகளும், எதிர்பார்ப்புகளும், அவரவர் அனுபவங்களுக்கேற்ப வேறாகத்தான் இருக்கின்றன.
உங்கள் விஷயத்தில் நேர்மாறாக அமைந்தது ஒரு துர்பாக்கியம் தான். உங்கள் மனக்குமுறலை கொட்டித் தீர்த்துக் கொள்ள இந்தப் பகுதி உபயோகமாக இருந்ததைத் தவிர்த்து, வேறு எந்த வழியிலும் உங்கள் வேதனையை எப்படித் தீர்ப்பது என்று சொல்ல இப்போது இயலாது. 'மனதைத் தேற்றிக் கொள்ளுங்கள். உங்கள் பெண்ணிற்கு ஆதரவாக இருங்கள்' என்று நான் எழுதப் போவதில்லை. உங்கள் பெண்ணும் யாருடைய ஆலோசனையையும் இப்போது கேட்கும் நிலையில் இருக்க மாட்டார். வெளிப்படையாகப் பேசும் சுபாவம் இருப்பவர்கள், நீங்கள் ஏதேனும் சொன்னால், உங்களிடம்தான் தங்களுடைய கோபத்தையும், அநீதி உணர்வையும் வெளிப்படுத்துவார்கள். இரண்டு குடும்பங்களுக்குள் நடந்த வார்த்தைப் போர்களும், இரண்டு இளவயதினருக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமைகளும் என்ன என்று புரிபடாத நிலையில், எனக்கும் ஒன்றும் எழுதமுடியாது.

ஒன்று மட்டும் அடிக்கடி யோசிக்கிறேன். முதன்முறையாக அமெரிக்க விஜயம் செய்பவர்களுக்கு அதுவும் மகன்/மகள் மணம் புரிந்து புதுக்குடித்தனத்திற்குச் செல்லும் பெற்றோர்களுக்கு, என்னென்ன கலாசார அதிர்ச்சிகளை (அதாவது மருமகள்/மருமகன் வாழ்க்கையைப் பொறுத்தவரையில்) எதிர்பார்த்து, ஏன் சகித்துக் கொள்ள வேண்டும் என்று ஒரு கையேடு (Manual) வெளியிடலாம் என்று தோன்றுகிறது. அது, அடுத்த பகுதியில்.

ஒரே ஒரு வேண்டுகோள். நடந்தது, நடந்து விட்டது. வாழ்க்கையிலோ, மனிதர்களிடமோ நீங்கள் வழிபடும் தெய்வத்திடமோ நம்பிக்கை இழக்காதீர்கள். உங்கள் பெண்ணுக்கு, நீங்கள் எண்ண முடிந்ததைவிட, பிரகாசமான எதிர்காலம் காத்திருக்கலாம்.

வாழ்த்துக்கள்
சித்ரா வைத்தீஸ்வரன்
Share: 




© Copyright 2020 Tamilonline