Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2008 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சிரிக்க, சிந்திக்க
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சாதனையாளர் | யார் இவர்? | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நேர்காணல்
மொழியை விலங்காகப் பூட்டிக் கொள்ளாமல், விளக்காகப் பயன்படுத்த வேண்டும்: டாக்டர் வ.வே.சு.
- அரவிந்த் சுவாமிநாதன்|ஜூலை 2008|
Share:
Click Here Enlargeகவிஞர், எழுத்தாளர், இசைப்பாடல் வல்லுநர், நாடக வசனகர்த்தா, வானொலி/தொலைக்காட்சி நிகழ்ச்சித் தயாரிப்பாளர், பட்டிமன்றப் பேச்சாளர், சுயமேம்பாட்டுப் பயிற்சியாளர் எனப் பல முகங்கள் கொண்டவர் டாக்டர் வ.வே.சு என்றழைக்கப்படும் வ.வே.சுப்ரமணியன். சென்னை விவேகானந்தா கல்லூரியின் முதல்வராக இருந்து ஓய்வு பெற்றவர். 'வானவில் பண்பாட்டு மைய'த்தின் தலைவர். கவிமாமணி விருது, திருப்புகழ் விருது, பாரதி விருது போன்ற பல விருதுகளைப் பெற்றவர். அனிதா ரத்னம், ஊர்மிளா சத்யநாராயணா போன்றவர்களுக்காக இசைநாடகங்களை எழுதியவர். ஓர் இனிய மாலைப் பொழுதில் அவரைச் சந்தித்தபோது...

கே: உங்களது பின்னணியைச் சற்றுக் கூறுங்களேன்...

ப: பிறந்தது சென்னையில். பள்ளிப்பருவம் ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியில். பின்னர் விவேகானந்தா கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்தேன். பாட்னா பல்கலைக்கழகம், பெனாரஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் முதுகலைக் கல்வி தொடர்ந்தது. 1973-ல் விவேகானந்தா கல்லூரியில் ஆசிரியராகச் சேர்ந்தேன். பின் மதுரையில் எனது முதுகலை தாண்டிய ஆய்வு தொடர்ந்தது. அப்போதுதான் தமிழறிஞரும் தற்போதைய மென்பொருள் அறிஞருமான நா. கண்ணனின் தொடர்பு ஏற்பட்டது. இலக்கியம், கவிதை, நாடகம் என இலக்கிய ஆர்வங்கள் விரிவடைந்தது.

ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பயணம் மேற்கொள்வதன் மூலம் பல்வேறான பழக்க வழக்கங்களை, நாகரிகங்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தமிழனும் பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது.
கல்வியின் பொருட்டு வட இந்தியாவில் வசித்த பொழுது பல மொழிகளின் பரிச்சயம் ஏற்பட்டது. ஹிந்தி மட்டுமல்லாமல் அதன் பிரிவுகளான போஜ்புரி, மைதிலி எனப் பலவற்றைக் கற்றுக்கொள்ள நேர்ந்தது. நான் வட இந்தியா சென்றபொழுது எனக்கு ஹிந்தி தெரியாது. அங்கு போய்த்தான் கற்றுக் கொண்டேன். அதன் மூலம் ஹிந்தி இலக்கியங்களின் பரிச்சயமும் ஏற்பட்டது. பொதுவாக ஒவ்வொரு இந்தியக் குடிமகனும் பயணம் மேற்கொள்வதன் மூலம் பல்வேறான பழக்க வழக்கங்களை, நாகரிகங்களை அறிந்து கொள்ள முடியும். ஒவ்வொரு தமிழனும் பிற மொழிகளைக் கற்றுக் கொள்வது நல்லது.

கே: நீங்கள் தாவரவியல் துறை பயின்றவர். தமிழ் இலக்கிய ஆர்வம் எப்படி ஏற்பட்டது?

ப: துறை வேறு ஆர்வம் வேறு என்பதில்லை. கணிதத்தின் மீது மிகவும் ஆர்வம் கொண்ட கணிதமேதை ராமானுஜன் ஒரு மிகச் சிறந்த மிருதங்க வித்வான். இதுபோன்று பலதுறை அறிஞர்கள் தமிழ் இலக்கிய ஆர்வமும் உள்ளவர்களாக இருக்கிறார்கள். சான்றாக, டாக்டர் வா.செ. குழந்தைசாமி ஒரு விஞ்ஞானி, பொறியியலாளர் என்றாலும் தமிழில் அழகாக இலக்கியங்கள் படைத்து வருகிறார். குலோத்துங்கன் என்ற பெயரில் பல கவிதைகளை இயற்றியிருக்கிறார். 'மானுட யாத்திரை' என்ற அற்புதமான நூலை எழுதியிருக்கிறார்.

சிறு வயதிலேயே எனக்கு இலக்கிய ஆர்வம் இருந்தது. நான் படித்த தி.நகர் ராமகிருஷ்ணா பள்ளி எனது ஆர்வத்துக்கு உறுதுணையாக இருந்தது. நாடகம், பேச்சுப்போட்டிகள், கட்டுரைப் போட்டிகள் எனப் பலவற்றில் பங்கு கொண்டிருக்கிறேன். பின் கவிதை, நாடகம், பேச்சு என இலக்கிய ஆர்வம் விரிவடைந்தது. அக்காலத்தில் பாலகுமாரனின் கதையும் எனது கவிதையும் 'நடை' பத்திரிகையில் ஒன்றாக வெளிவந்தன.

கே: கல்லூரி முதல்வராகப் பல ஆண்டுகாலம் பணியாற்றியிருக்கிறீர்கள். அந்தப் பணி அனுபவங்கள் சிலவற்றைச் சொல்லுங்கள்...

ப: 1973-ல் நான் விவேகானந்தா கல்லூரியில் டெமன்ஸ்ட்ரெட்டர் ஆக பணியில் சேர்ந்தேன். பின்னர் உதவிப்பேராசிரியர், பேராசிரியர், துறைத்தலைவர் என பல பதவிகள் வகித்து, கல்லூரியின் முதல்வர் ஆனேன். விவேகா இன்ஸ்டிட்யூட் ஆஃப் அல்கல் டெக்னாலஜி என்ற துறையை ஆரம்பித்து அதன் வளர்ச்சிப் பணிகளில் கவனம் செலுத்தினேன்.

அதே சமயம் எனது துறை சார்ந்த விஷயங்களில் மட்டுமல்லாமல் கல்லூரியில் கலைத்துறை முயற்சிகளை ஊக்குவித்தேன். நல்ல மாணவர்களை உருவாக்குவது மட்டும் ஆசிரியரின் வேலையல்ல. மாணவர்களது ஈடுபாட்டைக் கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்துவதும் ஆசிரியரின் கடமைதான். இறுதியாண்டு மாணவர்களுக்கும் எனக்கும் வயது வித்தியாசம் குறைவு என்பதால் அவர்களுடன் பழகுவது எளிதாக இருந்தது. மாணவர்களுடனான இந்த நெருக்கமும், அவர்களது அன்பும் நான் தாவரவியல் ஆசிரியர் மட்டுமல்ல; விவேகானந்தா கல்லூரியின் ஆசிரியர் என்ற பெருமிதத்தை எனக்குத் தந்தது. ஆசிரியர்கள் மாணவர்களை எப்படி நெறிப்படுத்துகிறார்களோ அதேபோன்று மாணவர்களும் ஆசிரியர்களை நெறிப்படுத்துகின்றார்கள். அது வெளியே தெரிவதில்லை.

இன்றைய பிரபல பாடகர்களில் பலரும் விவேகானந்தா கல்லூரியைச் சேர்ந்தவர்கள். டி.வி. சங்கர நாராயணன், விஜய் சிவா, சஞ்சய் சுப்ரமண்யம், உன்னிகிருஷ்ணன், டி.எம். கிருஷ்ணா, ஹரீஷ் ராகவேந்திரா, சிக்கில் குருசரண், கடம் கார்த்திக் எனப் பலரை உதாரணமாகக் கூறலாம். இன்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் இருக்கும் மாணவர்கள் என்னைத் தொடர்பு கொள்கிறார்கள். என்னுடன் பேசுகிறார்கள். அவர்களது குடும்பப் புகைப்படங்களை எனக்கு அனுப்பி வைக்கிறார்கள். இதெல்லாம் மகிழ்ச்சியான, நெகிழ்ச்சியான அனுபவங்கள்.

கே: பாரதி கலைக்கழகத்துடன் நீங்கள் நெடுங்காலத் தொடர்பு கொண்டவர் அல்லவா?

பா: ஆமாம். பாரதி கலைக்கழகம் என்பது ஒரு வேள்வி. அதை ஆரம்பித்தது பாரதி சுராஜ், பாலகிருஷ்ணன் என்னும் இளங்கார் வண்ணன், நா.இராமச்சந்திரன், விக்கிரமன், ஐயாறப்பன் போன்ற பல இலக்கிய ஆர்வலர்கள். 1968ல், சைதாப்பேட்டையை தலைமையிடமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது. பாரதி வழியில் நின்று நல்ல தமிழ் இலக்கியத்தை வளர்ப்பது இதன் நோக்கம். மாதம் ஒரு கவியரங்கம் நடத்தப்பெறும். இதுவரை 502 கவியரங்கங்கள் நடந்து முடிந்திருக்கின்றன. நான் 6-வது கவியரங்கக் கூட்டத்திலிருந்து கலந்துகொண்டு வருகிறேன். அன்றைய கூட்டத்துக்குத் தலைமை வகித்தவர் 'வாகீசகலாநிதி' கி.வா.ஜகன்னாதன் அவர்கள்.

பாரதி கலைக்கழகத்தின் கீழ் நான், மதிவண்ணன், இலந்தை ராமசாமி, நா.சீ. வரதராஜன் எனப் பலர் பல கவியரங்கங்களை நடத்தியிருக்கிறோம். தமிழகம் முழுவதும் சென்று கவியரங்குகள், கவிதைப் பட்டி மன்றங்கள் நடத்தியிருக்கிறோம். நா. பார்த்தசாரதி, கி.வா.ஜ, குன்றக்குடி அடிகளார், நாரண. துரைக்கண்ணன்(ஜீவா) போன்றோர் தலைமையில் அந்நிகழ்ச்சிகள் நடைபெற்றிருக்கின்றன.

முதுபெரும் அறிஞரான தமிழ்க்கடல் தி.வே. கோபாலய்யர், மதுரபாரதி, ஹரிகிருஷ்ணன், ரவி, ரமணன் போன்ற பல இலக்கிய நண்பர்களின் தொடர்பு இதன்மூலம்தான் ஏற்பட்டது. பாரதி கலைக்கழகம் நல்ல பல கவிஞர்களை உருவாக்கி இருக்கிறது. தமிழ்க்கவிதை வளர்ச்சிக்கு உதவியிருக்கிறது. இதில் சிறப்பு என்னவென்றால் எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் கவிஞர்கள் அவரவர்கள் தோன்றும் தலைப்பில் சுதந்திரமாகப் பேசலாம் என்பதே! இக் கவியரங்குகளில் தேவநாராயணன், இளந்தேவன், அமரசிகாமணி உட்படப் பல பிரபல கவிஞர்கள் கலந்து கொண்டிருக்கின்றார்கள்.

கே: 'கவிமாமணி விருது' பெற்றிருக்கிறீர்கள் அல்லவா?

ப: 1987-ல் பாரதி கலைக்கழகம் எனக்கு 'கவிமாமணி பட்டம்' கொடுத்து கௌரவித்தது. கி.வா.ஜ, சிலம்புச் செல்வர் ம.பொ. சிவஞான கிராமணியார், சௌந்தரா கைலாசம், நாரண. துரைக்கண்ணன் (ஜீவா) போன்றோர் அந்நிகழ்ச்சியின் முக்கிய விருந்தினர்களாக இருந்தனர். அவர்கள் அந்த விருதை எனக்கு அளித்ததை மிகவும் பெருமைக்குரியதாகக் கருதுகிறேன்.

பாரதி கலைக்கழகத்தின் வளர்ச்சியில் மிக முக்கியமான பங்கு பாரதி சுராஜ் அவர்களுக்கு உரியது. நானும் இக்கழகத்தில் பல முக்கிய பொறுப்புகள் வகித்திருக்கிறேன். இன்னமும் வகித்து வருகிறேன்.
Click Here Enlargeகே: நீங்கள் தலைமைப் பொறுப்பு ஏற்றிருக்கும் 'வானவில் பண்பாட்டு மையம்' ஆற்றும் பணி என்ன?

ப: தேசீயக் கவிஞன் பாரதியின் புகழையும் தமிழையும் பரப்புவதற்காக நானும் எனது நண்பர் வழக்கறிஞர் க. ரவியும் சேர்ந்து ஆரம்பித்தது வானவில் பண்பாட்டு மையம். 12 வருடத்திற்கு முன்னால் தொடங்கப் பெற்றது. வெவ்வேறு விதமான வண்ணங்கள் கொண்டது வானவில். அது போன்று வெவ்வேறு விதமான எண்ணங்கள் கொண்டவரும் இங்கு வர வேண்டும் என்ற எண்ணத்தில் இம்மையம் ஆரம்பிக்கப்பட்டது. இதில் இலக்கிய ஆர்வலர்கள் யார் வேண்டுமானாலும் உறுப்பினராகலாம். கட்டணம் இல்லை.

எங்களது மையத்தின் மூலம் பாரதிவழி நடக்கும் அன்பர்களுக்கு விருதுகள் வழங்கி கௌரவிக்கிறோம். முதல் விருது பாரதியின் பாடல்களைப் பட்டிதொட்டி எங்கும் பரப்பிய இசையரசி டி.கே. பட்டம்மாளுக்கு வழங்கப்பட்டது. தொடர்ந்து பாரதி புகழ் பரப்பிய பாரதி சுராஜ், 'சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்' என்ற பாரதி வாக்குக்கேற்பச் செயல்பட்ட எக்ஸ்னோரா நிர்மல், 'சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்' என்பதற்கேற்பச் செயல்பட்ட அணுவிஞ்ஞானி அப்துல் கலாம், டி.என். சேஷன், விவசாய விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன், ஜெயகாந்தன் என இப்படிப் பலருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்திருக்கிறோம். அப்துல் கலாம் அவர்கள் குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன்னமேயே நாங்கள் விருது வழங்கி கௌரவித்தோம் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழறிஞர்கள் மட்டுமல்லாது கதக் நடனக் கலைஞர்கள், பாரதியின் வாழ்க்கை வரலாற்றை மலையாளத்தில் எழுதியவர் உட்படப் பலருக்கும் விருது வழங்கி கௌரவித்து வருகிறோம்.

இசை என்பது பாடலின் பொருளையும், பொருளின் நுட்பத்தையும், அந்த வார்த்தைக்களுக்கிடையே உள்ள மௌனத்தையும், அதைத் தாண்டி உள்ள அனுபவத்தையும் கொடுக்கக் கூடியது. அழகானதொரு குழந்தையை ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது போல, சொல்லொணாப் பரவசத்தைத் தரக்கூடியது.
பாரதியின் நூற்றி இருபத்தைந்தாவது பிறந்த தினத்தை ஒட்டி பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் பாரதி தமிழியல் புலத்துடன் இணைந்து பாரதி 125 என்ற பன்னாட்டுக் கருத்தரங்கம் ஒன்றை சென்ற ஆண்டு நடத்தினோம். இது மூன்று நாள்கள் தொடர்ந்து நடந்தது. இறுதி நாள் விழாவில் பாண்டிச்சேரி முதல்வரும் கலந்து கொண்டார். மாநாட்டில் வாசிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை பாரதி 125 என்ற நூலாக வெளியிட்டிருக்கிறோம். திருக்குறள் ஆய்வுகளை நடத்த உத்தேசித்திருக்கிறோம். வானொலியுடன் இணைந்தும் பல நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம்.

தமிழார்வத்தை வளர்க்க, பிழையின்றி தமிழில் பேச, எழுத தகுதி வாய்ந்த சான்றோர் குழுவை அமைத்து அவர்கள் மூலம் ஆர்வமுள்ள அனைவருக்கும் தமிழ்ப் பயிற்சியளிக்கும் திட்டம் ஒன்று உள்ளது. அதில் தகுதி பெறுபவர்களுக்கு சான்றிதழ் அளித்து ஊக்கப்படுத்துவோம். வானவில்லின் உறுப்பினர்களான கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், பாரதி கலைக்கழக அன்பர்கள் எனப் பலர் எமது நிகழ்ச்சிகளுக்கு உறுதுணையாக இருக்கிறார்கள்.

கே: தொலைக்காட்சியிலும், வானொலியிலும் பல ஆண்டுகளாக நிகழ்ச்சிகளை அளித்திருக்கிறீர்கள். அந்த அனுபவங்கள் குறித்துச் சொல்லுங்கள்...

ப: வ.வே.சு. என்ற பெயரை மிகப் பிரபலமாக்கியது சென்னை தொலைக்காட்சி நிலையம்தான். கிட்டத்தட்ட 600 தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டிருக்கிறேன். எதிரும் புதிரும் என்ற தொலைக்காட்சித் தொடரைத் தந்திருக்கிறேன். வினாடி-வினா நிகழ்ச்சியை நடத்தினேன். அதில் பல புதுமைகளைச் செய்தேன். சொல் புதிர், வார்த்தை விளையாட்டு எனப் பல உத்திகளைப் பயன்படுத்தினேன். பலவிதமான ரசிகர்களிடமிருந்து பாராட்டுக் கடிதங்கள் வந்தன. நடுவில் அலுவலகப் பணிகளின் காரணமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் ஈடுபட இயலவில்லை. தற்போது பணியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டதால், கிடைக்கின்ற நேரத்தில் மீண்டும் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் நன்கு ஈடுபட முடியும் என எண்ணுகிறேன்.

கே: இசைப்பாடல்கள் எழுதியிருக்கிறீர்கள் அல்லவா?

ப: கவியரங்குகளில் இசைப்பாடல்களை நான்தான் முதலில் அதிகம் பாட ஆரம்பித்தேன். நான் மதுரை ஜி.எஸ். மணி அவர்களிடம் கர்நாடக இசை பயின்றவன். எனவே பாடல்களை எழுதும் போதே இசையோடு இயற்றும் திறன் எனக்கு இயல்பாகவே வாய்த்திருந்தது. பி.சுசீலா, கே.ஜே. ஏசுதாஸ், எஸ்.பி. பாலசுப்ரமணியம், சித்ரா, நித்யஸ்ரீ உட்படப் பலர் எனது பாடல்களைப் பாடியிருக்கின்றனர்.

சமீபத்தில் சென்னை வானொலி நிலைய நிகழ்ச்சிக்கான சிக்னேச்சர் பாடலை என்னிடம் கேட்டுள்ளனர். அதற்கு இசை குன்னக்குடி வைத்தியநாதன். என்னைப் பொறுத்தவரை இசை என்பது பாடலின் பொருளையும், பொருளின் நுட்பத்தையும், அந்த வார்த்தைக்களுக்கிடையே உள்ள மௌனத்தையும், அதைத் தாண்டி உள்ள அனுபவத்தையும் கொடுக்கக் கூடியது. அழகானதொரு குழந்தையை ஆடைகள் அணிவித்து அழகு பார்ப்பது போல, சொல்லொணாப் பரவசத்தைத் தரக்கூடியது. பாடல்களுக்கும் இசை அமைக்கலாம். இசைக்கும் பாடல்கள் எழுதலாம். ஆனால் கவிதைக்கு-பாடலுக்கு இசை அமைக்கும் போது அதன் நுட்பமும் அழகும் கெடாமல் இசை அமைக்க வேண்டும். இசை அந்தக் கவிதையின் அழகைச் சொல்வதாக அமைய வேண்டும் என்பதும் மிக முக்கியம்.

கே: நாட்டிய நாடகங்கள் குறித்த அனுபவங்களைச் சொல்லுங்கள்...

ப: இதுவரை 25 நாட்டிய நாடகங்கள் எழுதியிருக்கிறேன். பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தை அடியொற்றி பாஞ்சாலி சபதம் என்ற நாட்டிய நாடகத்தை அரங்கேற்றியிருக்கிறோம். இசைமேதை லால்குடி ஜெயராமன் இதற்கு இசையமைத்தார். ஊர்மிளா சத்தியநாராயணா முக்கியப் பாத்திரம் ஏற்றார். அமெரிக்கா உட்பட உலக அளவில் 100 முறைக்கு மேல் நடத்தப்பெற்றிருக்கிறது. இலங்கையிலுள்ள ஐந்து சிவன் கோவில்களைப் பற்றிய எனது நாடகத்துக்கும் இசை லால்குடி அவர்கள் தான். கலாஷேத்ரா இயக்குநர் டாக்டர் ராஜாரமன் உட்படப் பல அறிஞர்களின் பங்களிப்பில் எனது பாடல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக, இசைமேதை எல். கிருஷ்ணன் அவர்களது இசையில் நிறையப் பாடல்கள் அரங்கேறியுள்ளன. ரேவதி ராமச்சந்திரனுக்காக 'ஞானப்பரம்பரை' என்னும் தலைப்பில் ஞானசம்பந்தரின் வாழ்க்கை வரலாற்றை 60 பாடல்களாக நான் இயற்றிய பாடல்களைப் பென்டமீடியா வெளியிட்டிருக்கிறது. சமீபத்தில் 'ஐங்கரன்' என்னும் தலைப்பில் எழுதிய விநாயகர் மீதான பாடல்களை காயத்ரி பாலகுருநாதன் சிங்கப்பூரில் அரங்கேற்றம் செய்தார். தொலைக்காட்சியில் வெளியான 'வைகறை' என்ற என் படைப்பில் இசை கிடையாது. எனது கவிதை வரிகளை நான் கவிதை நடையில் படிக்க அதற்கேற்றவாறு நடனம் ஆடி, அந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. அனிதா ரத்னம், ஓ.எஸ். அருண் நடித்த 'கண்ணகி' நாட்டிய நாடகமும் நான் எழுதியதுதான். சுதாராணி ரகுபதி, பத்மா சுப்ரமண்யம், சித்ரா விஸ்வேஸ்வரன் என பலருடன் இணைந்து பணியாற்றியிருக்கிறேன்.

கே: மூன்றாந்தரக் கேளிக்கைகளே முக்கிய இடத்தைப் பிடித்துவிடும் நகரச் சூழ்நிலைகளில் சொற்பொழிவு, இசை நாடகங்கள், கவியரங்குகள் போன்றவற்றுக்கு இளைஞர்களின் மத்தியில் வரவேற்பு இருக்கிறதா?

ப: நிச்சயம் வரவேற்பு இருக்கிறது. இளைஞர்கள் நிறையக் கலந்து கொள்கிறார்கள். அதே சமயம் இன்றைய இளைஞர்கள் வித்தியாசமாகச் சிந்திக்கக் கூடியவர்கள். புதுமை விரும்பிகள். அவர்களுக்கு ஏற்றவாறு நிகழ்ச்சிகளை அமைக்க வேண்டும். டி.வி., மீடியா என்று எல்லாவற்றிலும் ஒரே மாதிரியான நிகழ்ச்சிகள்தாம் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. ஒரு 25 வயது இளைஞன் பல ஆண்டுகளாக இதையே கேட்டுக்கொண்டும், பார்த்துக் கொண்டும் இருக்கிறான். சலிப்படைந்த அவனுக்கு உற்சாகமூட்டுவதாக நிகழ்ச்சிகள் அமைந்தால் நிச்சயம் அவன் அதை கவனிப்பான். மொழியை விலங்காகப் பூட்டிக் கொள்ளாமல், விளக்காகப் பயன்படுத்த வேண்டும்.

கே: நீங்கள் நடத்திவரும் சுயமேம்பாட்டுப் பயிற்சிகளைப் பற்றிக் கூறுங்கள்.

ப: மாணவர்களுக்கான 'personality devlopment', ஆசிரியர்களுக்கு அவர்களது தொழில்குறித்த ஆரம்பநிலைப் பயிற்சி, மறுபயிற்சி ஆகியவற்றை நடத்துகிறேன். அவர்களது திறமை எங்களால் மதிப்பிடவும் படுகிறது. அது போன்றே மாணவர்களுக்கும் மென் திறன்கள், செய்தித்தொடர்பு, பகுத்தறியும் திறன் (reasoning ability) எனப் பல பயிற்சிகளை வழங்குகிறேன். பிருஹத்வனி என்ற இசை நிறுவனத்தில் நான் இயக்குநராகப் பணிபுரிந்தபோது இசையை எளிமையாகக் கற்றுக் கொள்ள சில பயிற்சிகளை ஏற்பாடு செய்தேன். அனைத்துப் பயிற்சிகளுக்கும் மாணவர்கள் மத்தியிலும், ஆசிரியர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு உள்ளது.

கே: ஒரு கல்லூரி ஆசிரியர் என்ற முறையில் மாணவர்களுக்கான உங்கள் அறிவுரைகள் என்ன?

ப: பணியும் படிப்பும் நேரத்தை மகிழ்ச்சியோடு செலவழிக்க வைப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான் அந்தத் துறையில் முன்னேற முடியும். பாரதி சொன்ன 'புதியன விரும்பு' என்பதேற்ப புதிய துறைகளில் ஆர்வம் செலுத்துவது நல்லது. பாரதி எழுதிய 'புதிய ஆத்திசூடி'யில் அனைத்துமே மாணவர்களுக்குப் பொருந்தும். அதனைப் பின்பற்றி நடந்தாலே போதும்.

கே: உங்களது வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்தவர்கள் குறித்து...

ப: முதலில் எனது குடும்பத்தார், குறிப்பாக என் மனைவி. பகல் கல்லூரி மற்றும் மாலைநேரக் கல்லூரி அனைத்துக்கும் நான்தான் முதல்வர். ஆதலால் காலை எட்டு மணிக்குச் சென்றால் இரவு ஒன்பது மணிக்குத்தான் வீடு திரும்ப முடியும். இதைத் தவிர சொற்பொழிவுகள், கவியரங்கங்கள், வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வேறு. என் மனைவிதான் குடும்ப பாரம் முழுவதையும் சுமந்தார். அவரும் ஒரு கல்லூரியில் வேதியியல் பேராசிரியராகப் பணியாற்றியவர்தான். பேரா.தி.வேணுகோபாலன் என்னும் நாகநந்தி அவர்களும் தமிழ் இலக்கியம் குறித்து எனது நிகழ்ச்சிகளுக்குக் குறிப்புகள் தந்து உதவியிருக்கிறார். இதில் மனைவியும் மிக உதவிகரமாக இருந்தார். 'நல்ல தமிழுக்கு நெல்லை' என்று சொல்வார்கள். நானும் என் மனைவியும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தாம். அதனால் இயல்பாகவே எங்களுக்குத் தமிழார்வம் இருந்தது. மதுரை ஜி.எஸ். மணி அய்யர், மற்றும் இசைத்துறை நண்பர்களிடமிருந்து தகவல்களைக் கேட்டுப் பெறுவதுண்டு. திருக்குறள் வினாடி-வினா நிகழ்ச்சியைக் கேட்டுவிட்டு திருக்குறளார் முனுசாமி அவர்களே நேரில் வந்திருந்து என்னைப் பாராட்டியிருக்கிறார்.

முதுபெரும் அறிஞர்களான வா.செ.குழந்தைசாமி, தேவநாராயணன், ஔவை நடராசன் முதல் தற்காலக் கவிஞர் நா. முத்துக்குமார் வரை பலருடன் எனக்கு நட்பு உண்டு. நல்ல கவிஞனாக, நல்ல பேச்சாளனாக, நல்ல எழுத்தாளனாக விளங்குவதைவிட நல்ல மனிதனாக, நல்ல நண்பனாக நான் இருக்க வேண்டும் என்பதுதான் எனது எண்ணம். எனக்கு எப்படி எனது ஆசான்களும், நண்பர்களும் உதவினார்களோ அது போன்றே நான் மற்றவர்களுக்கும் உதவிகரமாக இருக்க வேண்டும் என்றே விரும்புகிறேன். அவ்வாறே எனது மாணவர்கள், நண்பர்கள் தொடர்பு கொள்ளும்போது நான் உதவியும் செய்து வருகிறேன். அதுவே எனக்கு மிகுந்த மன நிம்மதியையும் அமைதியையும் தருகிறது. Be helpful, be cheerful' என்பதுதான் எனது லட்சியம்.

கே: கவிஞர், எழுத்தாளர், சொற்பொழிவாளர், இலக்கியவாதி, இசை விற்பன்னர் என்ற பல்வேறு முகங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த முகம் எது?

ப: இசைதான். சிறு வயதிலேயே இருந்த இசை ஈடுபாடு ஒரு காரணம். ஆசான் மதுரை ஜி.எஸ். மணி இதற்கு முக்கியக் காரணம்.

கே: உங்களுக்கு ஆன்மீக ஈடுபாடு உண்டல்லவா?

ப: நிச்சயமாக. ஆன்மீகம் இலக்கியத்துக்கு மிக நல்ல பங்களிப்பைக் கொடுத்திருக்கின்றது. சான்றாக பக்தி இலக்கியங்கள். அதேசமயம் ஆன்மீகம் என்பது இலக்கியம் அல்லாமலும் செயல்படக்கூடிய மிக உயர்வான ஒன்று. ஒரு குரு மௌன மொழியிலும் உபதேசிக்கலாம். இலக்கியமும் ஆன்மீகத்துக்குப் பயன்படுகிறது என்பதுதான் உண்மை. ஆன்மீகம் என்பது தனி மனிதனுடைய வளர்ச்சியின் வெளிப்பாடு. 'ஒவ்வோர் ஆத்மாவும் தெய்வத்தன்மை கொண்டது' என்பது சுவாமி விவேகானந்தரின் கூற்று. ஆனால் பலரும் இதனை அறிவதில்லை. உணர்வதும் இல்லை.

கே: தென்றல் வாசகர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது என்ன?

ப: தமிழை வாசியுங்கள். தமிழை நேசியுங்கள். தென்றல் போன்ற தமிழ் வளர்ச்சிக்கு உதவும் இதழ்களுக்கு உறுதுணையாக இருங்கள். சங்கத்தமிழை ரசிப்பது போல் இன்றைய தமிழையும் ரசியுங்கள். தலைமுறை இடைவெளி இல்லாமல் இலக்கியத்தை ரசியுங்கள். நன்றி.

*****


பொலிவு பெற்ற பாரதியார் வீடு

வானவில் பண்பாட்டு மையத்தின் மூலம் ஆண்டுதோறும் பாரதி பிறந்த நாளை சிறப்பாகக்கொண்டாடுகிறோம். முதலில் பிலிம் சேம்பரில், மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகள் நடத்திக் கொண்டிருந்தோம். பின்னர் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதி இல்லத்தில் நடத்தினால் என்ன என்ற எண்ணம் தோன்றியது. ஆனால் அதற்கு அரசு அனுமதி தரவில்லை. பின்னர் அமைச்சரை அணுகி, நிகழ்ச்சியை விளக்கி உத்தரவு பெற்றோம். அப்போது பாரதி இல்லம் மிகச் சாதாரணமான நிலையில் இருந்தது. மேடை கூட இல்லை. நாங்களே அனைத்தையும் தயார் செய்து நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினோம். அன்று நாங்கள் ஆரம்பித்த அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு தொடர்ந்து பல இசை, இலக்கிய நிகழ்ச்சிகள் பாரதி இல்லத்தில் நடக்க ஆரம்பித்தன. பாரதி இல்லம் பொலிவு பெற்றது.

சந்திப்பு, புகைப்படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
Share: 
© Copyright 2020 Tamilonline