Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2007 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | ஹரிமொழி | நினைவலைகள் | சிறப்புப் பார்வை | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சமயம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | வார்த்தை சிறகினிலே | அஞ்சலி | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | இதோ பார், இந்தியா!
Tamil Unicode / English Search
நினைவலைகள்
ஓர் ஐ.ஏ.எஸ். அதிகாரியின் நாட்குறிப்பு
- சி.கே. கரியாலி, திருவைகாவூர் கோ. பிச்சை|டிசம்பர் 2007|
Share:
Click Here Enlargeஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை

சி.கே.கரியாலி மாவட்ட ஆட்சியர் உட்படப் பல்வேறு பொறுப்புகளை வகித்த மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி. தற்போது தமிழக ஆளுநரின் செயலகத்தில் முதன்மைச் செயலராக இருக்கிறார். தமிழின் மீது கொண்ட பற்று காரணமாக அதனைக் கற்றுக் கொண்டு, ஒரு தமிழ்ப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்தி வருபவர். அவர் தமது அனுபவங்களைத் தொடர்ந்து சென்னை ஆன்லைனில் எழுதி வருகிறார். அதிலிருந்து சில பகுதி களைத் தென்றல் தருகிறது...

கிறிஸ்தவ சகோதரர்கள்

எப்போதுமே கிறிஸ்தவ மதபோதகர்களின் சேவை என்னைக் கவர்ந்துள்ளது. ஆயினும், பொதுவாக அவர்கள் நேர்த்தியான மாளிகைகளிலும் கன்னியர் மடத்திலும் தங்கிப் பணியாற்றுகிறவர்கள். அங்கு மேஜையின் மீது சுவையான உணவு வைக்கப்பட்டிருக்கும். வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு உயர் ரகத் தேநீர் பரிமாறப்படும். ஆனால் 1983ல் தென்னாற்காடு மாவட்டத்தில் நான் பணியாற்றிய போது, இதற்கு மாறாக ஏசுவின் சேவகராக செஞ்சியில் பணியாற்றும் சகோதரர் சாமிதாசுடன் எனக்கு ஒரு அபூர்வ சந்திப்பு ஏற்பட்டது. செஞ்சி ஒரு வறண்ட பகுதி. எரிமலை போன்ற பாறைகளால் அமைந்த விந்தையான நிலப்பரப்பு. ஆனால் இயற்கை எழில் வாய்ந்தது.

அங்கு நான் ஒரு மேல்நிலை நீர்த் தொட்டியைப் பார்வையிட்டுக் கொண்டிருந்த போது வெள்ளை வேஷ்டியும், கதர்ச் சட்டையும் அணிந்த, 45 வயதிருக்கும் அயல் நாட்டவர் ஒருவர் சைக்கிளில் என்னை நோக்கி வருவதைக் கண்டேன். இந்த வெள்ளைக்காரர் யாராக இருக்கும் என்று நான் ஆச்சரியம் அடைந்தேன். அவர் ஏன் இங்கு இருக்கிறார்? ஏன் ஓர் இந்திய கிராமவாசியைப் போல உடை அணிந்திருக்கிறார்? எங்கே போய்க்கொண்டிருக்கிறார்? சைக்கிளின் பின் இருக்கையில் உள்ள பெட்டியில் இருப்பது என்ன? என்ற சிந்தனைகள் எனக்கு ஏற்பட்டன. நான் அவரோடு பேசவும், அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் விரும்பினேன். அவரே சைக்கிளை நிறுத்திவிட்டு இயல்பாக என் அருகே வந்து 'ஹலோ' என்றார். இதுதான் எங்கள் ஆழ்ந்த நட்புறவின் ஆரம்பம். பிறகு நான் அவருடைய குடிலுக்குப் பலமுறை சென்று வந்தேன். சகோதரர் சாமிதாஸ் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர். இன்னும் இரு சகோதர ஊழியர்களுடன் வசிக்கிறார். அவர்களில் ஒருவர் பிரெஞ்சுக்காரர். இன்னொருவர் கேரளத்துக்காரர். ஒரு சிறிய குடிசையில் அவர்கள் வசித்தனர். தரையில் பாய் விரிக்கப்பட்டிருந்தது. கேரளச் சகோதரரால் மிக நேர்த்தியாகச் செதுக்கப்பட்ட மர ஸ்டூல் அங்கே பலி பீடமாகப் பயன்படுத்தப்பட்டு வந்தது. இம்மூவரும் கிறிஸ்தவ மதத்தின் ஒரு குழுவான 'ஏசுநாதரின் இளைய சகோதரர் கள்' என்று அழைக்கப்படும் ஒரு மதப் பிரிவைச் சேர்ந்தவர்கள். இவர்கள் ஏழைமையோடு, கடையர்களிலும் கடையர் களான மக்களுடன் சமூகத்தின் தேவைக்காக உழைத்து வாழச் சபதம் எடுத்துக் கொண்டுள்ளனர். செஞ்சியில் சக்தியற்றவர்கள், அங்கஹீனர்கள், வயோதிகர்கள், கைவிடப்பட்டவர்கள், தொழுநோயாளிகள் ஆகியோர்களின் நலனுக்காக இவர்கள் உழைக்கிறார்கள். அரசு தொழுநோய்த் திட்டத்தின் தொண்டர்களாகவும் உள்ளனர். தொழுநோயாளிகளுக்குக் கொடுக்க மருந்துகளை எடுத்துச் சென்ற போதுதான் சாமிதாஸை நான் முதன்முறையாகச் சந்தித்தேன். நோயாளிகள் ஒழுங்காக மருந்து உட்கொண்டு வருகிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள அவர் தினமும் இருபது கிலோமீட்டர்கள் சைக்கிளில் சுற்றி வருகிறார்.

எனது குழந்தைகள் கல்வியில் உலகின் மிகச் சிறந்தவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நிச்சயம் மனிதநேயம் மிக்கவர்களாகவும், நயத்தக்க நாகரீகம் உடையவர்களாகவும் மனித சுபாவம் உள்ளவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
அவர்களது சிறு குடிலுக்குப் பக்கத்திலேயே கைவிடப்பட்டவர்களுக்காக ஓர் இடம் உள்ளது. அங்கு அவர்களுக்குப் பாய், துணி நெய்யவும் பயனுள்ள தொழில்களும் கற்பிக்கப்படுகின்றன. அவர்கள் தங்கள் நேரத்தில் பெரும்பகுதியை இந்த பரிதாபத்திற்குரிய மக்களுக்காகச் செலவிடுகிறார்கள். தங்கள் மாலை நேரத்தை பிரார்த்தனையிலும் தியானத்திலும் செலவிடுகிறார்கள். அவர் களது சமூக சேவையைக் கண்டு நான் லயித்துப் போனதால் அரசாங்க கிராம அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு 25,000 ரூபாய் அளிப்பதாக அறிவித்தேன். அவர்கள் அதை ஏற்றுக் கொள்ளவில்லை. நான் மிகவும் வற்புறுத்திய பிறகு உள்ளூரிலுள்ள ஏழைப் பெண்களுக்கு நெசவுத் தொழில் கற்பிக்கவும், தறிகள் வாங்கவும் ரூபாய் 12,000 மட்டும் பெற்றுக் கொண்டார்கள். நான் வழங்குவதாக அறிவித்த தொகையை விடக் குறைவான தொகையே போதும் என்று சொன்னவர்களை என் வாழ்நாளில் இந்த ஒரே ஒருமுறைதான் கண்டேன். அந்தச் சகோதரர்கள் தங்களுக்கென முரட்டு நூலினாலான இரண்டே இரண்டு மாற்று உடைகள்தாம் வைத்திருந்தனர். ஒன்றை அணிந்திருக்கும் போது மற்றொன்றைத் துவைத்துக் காய வைத்து விடுவர். தங்களுக்கென்று தனியாகச் சமையல் கருவிகள் எதுவும் அவர்கள் வைத்துக் கொள்ளவில்லை. சூரிய அடுப்பில் கொஞ்சம் அரிசியையும் கீரையையும் வைத்துச் சமைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு நாள் சகோதரர் சாமிதாஸ் என்னைத் தேநீர் பருக அழைத்தார். நான் மிகுந்த தாகத்துடன் இருந்ததால் அவருடன் தேநீர் அருந்தச் சென்றேன். பதினைந்து நிமிடங்களுக்கு மேல் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தும் தேநீர் வந்தபாடில்லை. கடலூரில் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்ள நான் செல்ல வேண்டி இருந்ததால், தேநீர் பருகிவிட்டுக் கிளம்பலாமா என்று கேட்டேன். அவர் ஒரு மரக்கிளையில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு அலுமினியக் குப்பியைத் தொட்டுப் பார்த்துவிட்டு, வானம் மேக மூட்டமாக இருப்பதால் தேநீர் தயாராகவில்லை என்றார். பிறகுதான் தேநீரைக் கூட அவர்கள் சூரிய வெப்பத்தில் கொதிக்க வைத்துத்தான் தயார் செய்து கொள்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். அதை அருந்துவதற்கு மேலும் ஒரு மணி நேரம் ஆகும் என்பதாலும், நான் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததாலும் தேநீரை மறுத்துவிட்டு, சகோதரரிடம் விடைபெற்றுக் கொண்டு கிளம்பிவிட்டேன். வாழ்க்கையை எவ்வளவு எளிமையாக வாழ்கிறார்கள் என்பதை வழி நெடுகிலும் என் மனம் சிந்தித்துக் கொண்டே இருந்தது. என் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது.

மரத்தின் கிளையில் தேநீர் தயாரிக்கப்படுகிறது.
சூரிய அடுப்பில் உணவு சமைக்கப்படுகிறது.
அணிவதற்கு இரண்டு உடைகள் மட்டுமே உள்ளன.
பயணம் செய்ய ஒரே ஒரு சைக்கிள் தான்.
இருந்தும் அவர்களிடம் பிறருக்கு கொடுக்க நிறையவே உள்ளது
ஏசுவின் எனது இளைய சகோதரர்களே!
உங்கள் வாழ்க்கையில் ஏழைமைதான்.
ஆனால் இதயத்தில் வளமை கொழிக்கிறது.
நீங்கள் எங்கிருப்பினும் உங்களை என் நெஞ்சில் இருத்தி
என்றென்றும் வாயார வாழ்த்திக் கொண்டே இருப்பேன்.

தத்துவஞானி ஜே.கே.யுடன்...

கனடாவில் விக்டோரியா நகரிலுள்ள கட்டிடக் கலைஞரான என் தம்பி சிவா கரியாலியும் அவர் மனைவியும் ஆரம்ப காலம் முதலே தத்துவஞானி ஜே. கிருஷ்ண மூர்த்தியுடன் தொடர்பு கொண்டிருந்தனர். நான் கோயம்புத்தூரில் உதவி ஆட்சியாளர் பயிற்சியில் இருந்த போது எனது பிறந்த நாள் பரிசாக கிருஷ்ணாஜியைப் பற்றிய ஒரு கட்டுப் புத்தகங்களையும் சில கட்டுரைகளையும் என் தம்பி எனக்கு அனுப்பி வைத்தான். அன்றைய தினம் நான் உதக மண்டலத்துக்குப் புறப்பட்டுக் கொண்டிருந் தேன். தாவரவியல் பூங்காவில் படுத்துக் கொண்டே அவரைப் பற்றிய சில நூல்களையும், ஏரிக்கரையில் அமர்ந்து மற்ற நூல்களையும் படித்தேன். மீதி இருந்தவற்றை முதுமலைக் காட்டின் ஆற்றங்கரையில் அமர்ந்து படித்து முடித்தேன். தத்துவஞானி என்ன சொல்கிறார் என்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள அந்த நூல்கள் சாலச் சிறந்தவைகளாகும். அவர் வாழ்க்கையையும், அவரது சேவைகளையும் கல்வி பற்றிய அவரது கருத்துக்களையும் படித்து நான் மனம் நெகிழ்ந்து போனேன்.

எனது சகோதரனும் அவனது மனைவியும் கிருஷ்ணாஜி எங்கெல்லாம் சொற்பொழி வாற்றுகிறாரோ அங்கெல்லாம் அதைக் கேட்க வந்துவிடுவர். அதன்படி அந்த ஆண்டும் சென்னை வந்து சேர்ந்தனர். சென்னை வசந்தவிஹாரில் (இது கிருஷ் ணாஜியின் இருப்பிடம்) வருடாந்திரச் சொற்பொழிவு நடக்க இருந்தது. அவருடைய முதல் நாள் சொற்பொழிவைக் கேட்க, நானும் சென்னை சென்று சேர்ந்தேன். அப்போது நான் தென்னாற்காடு மாவட்ட ஆட்சியாள ராக இருந்தேன். சொற்பொழிவுக்குப் பிறகு என்னைக் கிருஷ்ணாஜிக்கு அறிமுகம் செய்து வைத்தனர். அதற்குள் மதிய உணவிற்கு அறிவிப்பு வந்தது. கிருஷ்ணாஜி என்னையும் தன்னுடன் உணவு அருந்த அழைத்தார். அந்த சமயம் வசந்தவிஹாரை கவனித்துக்கொள்ளும் பொறுப்பில் இருந்த திரு. பட்டவர்த்தன் ஒரு சிறிய அறையில் உணவு அருந்த ஏற்பாடு செய்திருந்தார். அங்கு பாபுல், அவரது மகள் ராதிகா, எனது சகோதரன், அவனது மனைவி, ராதா பர்னியர் மற்றும் சில விருந்தாளிகள் இருந்தனர். சில காரணங்களுக்காகத் தன் பக்கத்தில் அமரும்படி கிருஷ்ணாஜி என்னிடம் சொன்னார். இது நான் என்றென்றும் மறக்க முடியாத பெரும்பேறு. அடுத்த மூன்று மணிநேரம் அவருடன் நீண்ட உரையாடல் நிகழ்ந்தது. என்னிடம் கேட்க அவரிடம் நிறைய விஷயங்கள் இருந்தன. அவைகளைக் கேட்டு விவாதங்கள் செய்தார்.

சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தில் இந்திய ஆட்சிப் பணியில் தனக்கு நிறைய நண்பர்கள் இருந்ததைச் சொல்லி அவர் என்னுடன் பேச்சை ஆரம்பித்தார். சுதந்திரத் துக்குப் பிறகு ஆட்சி நிர்வாகத்துடன் உள்ள தொடர்பை முற்றிலும் இழந்துவிட்டதாகச் சொன்னார். இந்தியாவில் மக்களுக்காக என்ன நடக்கிறது, குறிப்பாகத் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்பதை அவர் அறிந்து கொள்ள விரும்பினார். (கிருஷ்ணாஜி ஒருபோதும் செய்தித்தாள்கள் படிப்பது மில்லை; செய்திகளைக் கேட்பதுமில்லை. அதனால் இப்போது அவர் அனைத்தையும் அறிந்து கொள்ள விரும்பினார்) இந்த மூன்று மணி நேரத்திலும் 1947 முதல் 1984 வரையில் அரசியல், சமூக ரீதியாக நடந்தவைகளை அவருக்கு விளக்கினேன். அரசியல்வாதிகள் லஞ்சம் வாங்குகிறார்களா? பிராமணர்கள் அவமரியாதையாக நடத்தப்படுகிறார்களா? அரிஜனங்கள் மீது வன்கொடுமை தொடர்கிறதா? இதுபோன்ற கேள்விகளைத் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். அவர் கலிபோர்னியாவிலோ அல்லது வேறிடத்திலோ எங்கிருந்தாலும் இந்திய மக்கள் பற்றி ஆழ்ந்த கவலை கொண்டிருந்தார் என்பதை நான் தெளிவாகப் புரிந்து கொண்டேன். அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி. ராமச் சந்திரன், பிரதமர் இந்திரா காந்தி ஆகியோர் பற்றியும் தெரிந்து கொள்ள விரும்பினார். கல்வி முறை, மதிய உணவுத் திட்டம், கிராம அபிவிருத்தித் திட்டங்கள் பற்றியும் என்னிடம் விசாரித்தார்.

அவருடைய சொற்பொழிவுகளின் மீது ஆர்வம் கொண்டு நான், 1984 முதல் 1986 வரை அவருடைய வருடாந்திரச் சொற் பொழிவுகள் அனைத்திலும் கலந்து கொண்டேன். இதன் பயனாகச் சென்னையில் கிருஷ்ணமூர்த்தி அறக்கட்டளையினர் அமைத்து நிர்வகிக்கும் பள்ளியில் எனது இரு குழந்தைகளையும் சேர்த்து படிக்க வைக்க முடிந்தது. இந்த அறக்கட்டளையினர் இதே போல், பெங்களூர், ராஜ்கட், ரிஷிவேலி மற்றும் கலிபோர்னியாவில் ஓஜை வேலி, பிரிட்டனில் புரூக்வுட் பார்க் ஆகிய பல இடங்களில் பள்ளிகள் அமைத்து, கிருஷ்ணாஜியின் கருத்துக்கிணங்கக் கல்வியைப் பரப்ப முயற்சி செய்து வருகின்றனர். என் மகளும் தன் இறுதிப் படிப்பை பூர்த்தி செய்ய புரூக்வுட் பார்க் சென்றாள்.

கிருஷ்ணாஜியைச் சந்தித்ததில் கல்வி பற்றிய எனது கொள்கை அடியோடு மாறி விட்டது. இது, எனது குழந்தைகளின் பள்ளியை மாற்றுவதில் கொண்டுபோய் விட்டது. இந்த முடிவுக்காக நான் ஒருபோதும் வருத்தம் அடையவில்லை. எனது குழந்தைகள் கல்வியில் உலகின் மிகச் சிறந்தவர்களாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர்கள் நிச்சயம் மனிதநேயம் மிக்கவர்களாகவும், நயத்தக்க நாகரீகம் உடையவர்களாகவும் மனித சுபாவம் உள்ளவர்களாகவும், பொறுப்புள்ளவர்களாகவும் இருக்கிறார்கள் என்பதில் எனக்கு எவ்வித ஐயமுமில்லை.
கிருஷ்ணாஜியுடன் இறுதிச் சந்திப்பு

அவர் எழுந்த வினாடியே ஜனங்கள் அழுது கொண்டே தரையில் மயங்கி விழுந்தனர். இதுதான் தங்கள் குருநாதரின் இறுதி யாத்திரை என்று எண்ணி மக்கள் தங்களை மறந்த நிலையில் இருந்தனர். தத்துவஞானி கிருஷ்ணாஜி கட்டடத்துக்குள் நுழைந்து கதவு மூடப்படும் வரை கூட்டம் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.
86 டிசம்பரில் சென்னையில் தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி சொற் பொழிவாற்ற இருந்தார். ஆனால் அவரது உடல்நிலை சரியில்லாமலிருந்தது. புற்று நோயினால் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தார். சென்னை வந்ததும் அவரது உடல்நிலை மேலும் மோசமானது. அவர் நிகழ்த்த இருந்த சொற்பொழிவுகளின் எண்ணிக்கை நான்காகக் குறைக்கப்பட்டது. மேலும், அவர் இந்தியாவின் மற்ற இடங்களுக்குச் சென்று சொற்பொழிவாற்ற இருந்த நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டன. இது தான் அவரது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என்ற எண்ணத்தில், நான்கு சொற்பொழிவுகளிலும் கலந்து கொள்வதற்கு அன்பர்களிடையே பலத்த போட்டி இருந்தது. தன் வாழ்நாள் முழுவதும் அவர் சொல்லியவற்றை இந்த நான்கு நாட்களில் ஒட்டுமொத்தமாக விளக்குவார் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது.

நான் இந்த நான்கு சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டேன். கடைசி நாளன்று சூழ்நிலை ஒருவிதமான மனக்கிளர்ச்சியில் இருந்தது. கூடியிருந்தவர்கள் அனைவருமே துயரம் தோய்ந்த மனநிலையில் இருந்தனர். அவர்களில் பலரும், நான் உட்பட, இனி கிருஷ்ணாஜியை மீண்டும் காணமுடியாது என்று கருதி வருந்தினோம். அவரும் அன்று மரணம் பற்றியே பேசினார். ஒருவழியில் மறைமுகமாக அவர் எங்களிடமும், வசந்த விஹாரிடமும் இந்தியாவிடமும் மற்றும் உலகத்திடமும் பிரியாவிடை பெறுவதையே சொல்லிக் கொண்டிருந்தார். நாங்கள் அமர்ந்தபடியே கிருஷ்ணாஜியின் சொற்பொழிவைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, ஒரு வயோதிகர் உள்ளே விரைவாக நுழைந்தார். என் அருகில் அமர்ந்தவர், 'நான் பேச்சைக் கேட்க முடியாமல் போய் விட்டேனோ? நான் திருச்சியிலிருந்து வருகிறேன். எனது பேருந்து தாமதமாக வந்து தொலைத்தது' என்று கூறிவிட்டுத் தேம்பித் தேம்பி அழத் தொடங்கினார். பேச்சு ஆரம்பித்து அதிகநேரம் ஆகிவிடவில்லை என்றும், இதற்கு முன் கிருஷ்ணாஜி பேசியது பற்றி நான் பின்னர் விளக்குவதாகவும் கூறி அவரைத் தேற்றினேன்.

'மரணம்' என்பதைப் பற்றி மிக இனிமையாகப் பேசினார் கிருஷ்ணாஜி. அவர் பேச்சை முடித்தபோது பரிபூரண அமைதி நிலவியது. யாரும் நகரவில்லை. வெளியே செல்ல யாரும் எழுந்திருக்கவில்லை. வசந்தவிஹாரின் மைதானத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான பெருங்கூட்டம் அசையாது அமர்ந்திருந்தது. மக்களின் மனோநிலையைப் புரிந்து கொண்ட கிருஷ்ணாஜி, 'நாம் எல்லோரும் சேர்ந்து சிறிது நேரம் இங்கு உட்கார்ந்திருக்க வேண்டும்' என்றார். கூட்டம் தலையை ஆட்டியது. அடுத்த சில நிமிடங்களில், அவர் கூறிய வார்த்தைகளை ஆழமாக சிந்தித்துக் கொண்டும், அவரைச் சுற்றியிருந்த ஒளிவட்டத்தில் குளிர்காய்ந்து கொண்டும் கூட்டம் ஆடாது அசையாது மோன நிலையில் ஆழ்ந்து விட்டது.

கிருஷ்ணாஜி என்ன செய்கிறார் என்று நான் கவனித்தேன். தன் கண்களை உயர்த்தி வசந்தவிஹாரின் ஒவ்வொரு மூலையையும் அவர் உற்றுப் பார்க்க ஆரம்பித்தார். அங்குள்ள ஒவ்வொரு கட்டடத்தையும், மரத்தையும், இலையையும், செடியையும் உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தார். அவருக்கு வசந்தவிஹார் மீது ஆழ்ந்த பாசம் இருப்பதை அதன் மூலம் என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது. அவர் எழுந்த வினாடியே ஜனங்கள் அழுது கொண்டே தரையில் மயங்கி விழுந்தனர். இதுதான் தங்கள் குருநாதரின் இறுதி யாத்திரை என்று எண்ணி மக்கள் தங்களை மறந்த நிலையில் இருந்தனர். ரிஷிவேலி பள்ளியின் இயக்குநர் ராதிகா குழந்தையைப் போலக் கதறி அழுததைக் கண்டேன். தத்துவஞானி கிருஷ்ணாஜி கட்டடத்துக்குள் நுழைந்து கதவு மூடப்படும் வரை கூட்டம் அவரைத் தொடர்ந்து கொண்டிருந்தது.

(தொடரும்)

ஆங்கிலத்தில்: சி.கே. கரியாலி
தமிழாக்கம்: திருவைகாவூர் கோ. பிச்சை
Share: 
© Copyright 2020 Tamilonline