Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
December 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | சிறப்புப் பார்வை | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | சிறுகதை | வாசகர்கடிதம் | ஹரிமொழி
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சித்தயோகி ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்
- பா.சு. ரமணன்|டிசம்பர் 2022|
Share:
மக்கள் வழிபட்டுத் தங்கள் குறைகளை நீக்கிக் கொள்ளவும், ஆன்ம ஒருமைப்பாட்டுக்கும், மனச்சாந்திக்கும் உறைவிடமாக அமைந்தவை திருக்கோயில்கள். தம்மை நாடி வருவோரின் துயர்தீர்க்கும் அருட் கூடங்களாக ஆலயங்கள் விளங்குகின்றன. பல ஆலயங்களில் வாழ்வாங்கு வாழ்ந்த சித்தர்கள் பலரும் ஜீவசமாதி கொண்டு அருள் பாலித்து வருகின்றனர். சான்றாக, பழனி - போகர்; மதுரை - சுந்தரானந்தர்; தஞ்சை -கருவூரார்; சீர்காழி - சட்டமுனி; திருவண்ணாமலை - இடைக்காடர் ஆகியவற்றைக் கூறலாம். அதுபோல, தான் வழிபட்ட ஆலயத்தின் அருகிலேயே ஜீவசமாதி கொண்டு, தம்மை நாடி வருவோருக்குப் பல்வேறு நலங்களை அளித்து வருகின்ற மகான்தான் ஸ்ரீ சிதம்பர பெரிய சுவாமிகள்.

தம்பதிகளின் தவம்
ஆரியம்பாக்கத்தில் வாழ்ந்து வந்த பிரபல வணிகர் முனியப்பர். மனைவி பெரியநாயகி. தான தர்மங்கள் செய்வதிலும், பெரியோரைப் பேணுவதிலும், ஆலயப் பணிகள் புரிவதிலும் இருவருக்கும் மிகுந்த ஈடுபாடு. அவர்களுக்கு இருந்த ஒரே குறை புத்திர பாக்கியம் இன்மை என்பதுதான். அது நீங்க இருவரும் பல ஆலயங்களுக்குச் சென்றனர். விரதமிருந்து தவம் செய்தனர். புண்ணிய நதிகளில் நீராடினர். ஆயினும் குறை தீரவில்லை.

சிவனடியாரின் அருள்
ஒருநாள்... வீட்டுக்குச் சிவனடியார் ஒருவர் வந்தார். "பசிக்கிறது. உணவு வேண்டும்" என்று யாசித்தார். கணவன், மனைவி இருவரும் அவரை வரவேற்றனர். பாதபூஜை செய்தனர். திருவமுது படைத்து உண்ணுமாறு வேண்டினர். வெகு நாட்களாகச் சாப்பிடாதவர் போல ஆவலுடன் உணவை உண்டார் அவர். பின் திண்ணைக்குச் சென்று சற்றுநேரம் ஓய்வெடுத்துக் கொண்டார். விடைபெறும் நேரத்தில் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் திருநீறு அளித்து ஆசி கூறுவது அடியார்களின் அக்கால வழக்கம். அந்தச் சிவனடியாரும் அது போலவே திருநீறு அளித்து ஆசிகூற விழைந்தார். கணவன்-மனைவி இருவருக்கும் திருநீறு அளித்தவர், "எங்கே அம்மா உங்கள் குழந்தைகள்? அவர்களையும் வரச் சொல்லுங்கள்" என்றார்.

அதைக் கேட்ட இருவரும் கண்கலங்கினர். தங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லாத குறையைச் சொல்லி வேண்டினர். சிறிது நேரம் கண்மூடி தியானித்த சிவனடியார், அவர்களிடம், "ஐயா, கவலைப்படாதீர்கள். வெகு சீக்கிரமே உங்கள் குறை தீர்ந்துவிடும். இந்த இல்லத்தில் குழந்தை துள்ளி விளையாடும். உங்கள் உணவால் எப்படி என் உள்ளமும் உடலும் குளிர்ந்ததோ அதுபோல், உங்களையும் இந்த உலகத்தையும் குளிர்விக்க ஒரு அவதாரக் குழந்தை விரைவில் இந்த இல்லத்தில் ஜனிக்கப் போகிறது. கவலை வேண்டாம்!" என்று கூறி ஆசிர்வதித்துச் சென்றார்.ஞானக் குழந்தை
அது கேட்ட இருவரும் மனம் மகிழ்ந்தனர். அருகில் உள்ள சிவாலயத்திற்குச் சென்று வழிபட்டனர். ஞானவானாகிய ஒரு குழந்தை வேண்டும் என்று வேண்டிக் கொண்டனர். பிரார்த்தனை பலித்தது. விரைவிலேயே கருவுற்றார் பெரியநாயகி அம்மை. ஈரைந்து மாதங்களில் அழகிய குழந்தையையும் ஈன்றார். தவத்தின் விளைவாகப் பிறந்த அந்தக் குழந்தைக்கு 'வீராசுவாமி' என்று பெயர் சூட்டினர்.

குழந்தையும் அறிவுத் திறனோடு சிறப்பாய் வளர்ந்தது. தனது மழலை மொழிகளாலும், குறும்புச் செயல்களாலும், ஊரார் அனைவருக்கும் செல்லப் பிள்ளை ஆனான் வீராசுவாமி. தக்க வயதில் அருகில் உள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் அவனைச் சேர்த்தனர். அங்கு ஆசிரியரின் அன்பிற்கு உரியவனாகவும், அளவற்ற அறிவாற்றல் மற்றும் பக்தி உடையவனாகவும் இருந்தான். மைந்தனின் அறிவுத் திறத்தையும் பக்தியையும் கண்டு பெற்றோருக்கு மிகுந்த மகிழ்ச்சி.

வீராசுவாமி, வளர்ந்தார். இளவயதிலேயே இறைவன்மீது பல்வேறு பாடல்களைப் புனைந்து ஆராதித்தார். அவருக்கு நல்ல பெண்ணாகப் பார்த்து திருமணம் செய்விக்கப் பெற்றோர் விரும்பினர். அதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.

ஞான வேட்கை
ஆனால், இளமையிலேயே ஞான வேட்கை கொண்ட சுவாமிகளுக்குத் திருமணத்தில் நாட்டமில்லை. துறவறம் பூண விரும்பினார். ஆகவே தன் எண்ணத்தைப் பெற்றோரிடம் தெரிவித்துவிட்டு, இல்வாழ்வைத் துறந்து சந்யாசம் மேற்கொண்டார். பல ஆலயங்களுக்குச் சென்றார். இறை தரிசனம் செய்தார். இயற்கை எழில் வாய்ந்த குகைப் பகுதிகளில் தங்கி தியானம் செய்தார். பின் குழந்தைவேல் சுவாமிகள் என்ற மகானைச் சந்தித்தார். முருக பக்தரான அவரிடம் 'குரு தீட்சை' பெற்றார். அதுமுதல் 'சிதம்பர பெரிய சுவாமிகள்' என்று அழைக்கப்பட்டார். குருவுடனேயே இருந்து மெய்ஞானத் தத்துவங்களைக் கற்றுத் தேர்ந்தார். குருவின் ஆசியுடன் பல்வேறு திருத்தலங்களுக்குத் தல யாத்திரை கிளம்பினார். இறுதியில் சென்னை வந்த சுவாமிகள் திருவான்மியூர், திருமயிலை, திருவல்லிக்கேணி போன்ற தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்தார். பின் வேளச்சேரியை அடைந்தார்.

வேத சிரேணி
வேளச்சேரி என்று தற்பொழுது அழைக்கப்படும் பகுதி அக்காலத்தில் 'வேதசிரேணி' என்றழைக்கப்பட்டது. சென்னை நகரின் மிகப் பழமையான பகுதிகளுள் இதுவும் ஒன்று. இங்குள்ள யோக நரசிம்மர் ஆலயம் மிகவும் பழமையான சிறப்புப் பெற்ற, ஒன்றாகும். சுவாமிகள் வேளச்சேரியில் வசித்து வந்த காலத்தில், அங்குள்ள சிவாலயம் சிதிலமடைந்து கவனிப்பாரற்று இருந்தது. அது கண்டு மனம் வருந்திய சுவாமிகள், அந்த ஆலயத்தைச் சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டார். அருகில் உள்ள தண்டபாணி ஆலயத்தையும் புதுப்பிக்க உழைத்தார். மண்டபம் அமைத்தார். ஆலயம் ஒழுங்குபடுத்தப்பட்டு அதில் தவறாது நித்ய ஆராதனைகள் தொடர்ந்து நடக்க ஏற்பாடு செய்தார். தேரைச் சீர்திருத்தி அமைத்து, ரதோற்சவம் நடக்க ஏற்பாடு செய்தார். அருகில் மிகவும் சிதிலமடைந்து, பயன்பாடற்றுக் கிடந்த குளத்தையும் சீர்திருத்தினார். யோக நரசிம்மர் ஆலயத் திருப்பணியிலும் ஈடுபட்டார். இவ்வாறு பற்பல ஆன்மிகப் பணிகளை சுவாமிகள் மேற்கொண்டார். அங்கிருந்த போது பல்வேறு சித்து விளையாடல்களையும் ஸ்ரீ சுவாமிகள் நிகழ்த்தினார்.

சுவாமிகளின் ஜீவசமாதிக் கோவில்சித்து விளையாட்டுகள்
ஒருமுறை திருடர்கள் சிலர் கோயிலுக்குச் சொந்தமான தோப்பில் தேங்காய்களைத் திருடிக் கொண்டிருந்தனர். அவ்வழியே ஸ்ரீ சுவாமிகள் வந்து கொண்டிருந்தார். சுவாமிகளைப் பார்த்த அவர்கள், யாரோ பரதேசி என்று நினைத்து, மரத்தில் இருந்தபடியே கிண்டல் செய்தனர். உடனே அவர்களை ஸ்ரீ சுவாமிகள் உற்றுப் பார்த்தார். அவ்வளவுதான். அவர்களால் பேச முடியாமல் போனது. அதுமட்டுமல்ல; கை, கால்களை அசைக்க முடியாமல், மரத்தின் மேலேயே வெகுநேரம் அட்டைபோல் ஒட்டிக் கொண்டிருக்க நேரிட்டது. அறியாமல் செய்த தவறுக்காக அவர்கள் மனம்வருந்தி, ஸ்ரீ சுவாமிகளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்க, சுவாமிகளும் அவர்களை மன்னித்து, தன் வலக்கையை அசைத்தார். அதன் பின்தான் அவர்களால் மரத்திலிருந்து இறங்க முடிந்தது.

வழக்கமாக சுவாமிகளுக்கு உணவிட்டு வந்தார் ஒரு பெண்மணி. இரவு நேரம். ஒருநாள் சுவாமிகளுக்கு மிகுந்த பசியாக இருந்தது. உணவிற்காக அந்தப் பெண்ணின் வீட்டிற்கு வந்து யாசித்து நின்றார். அந்தப் பெண்ணோ சோம்பல் காரணமாகப் படுத்துக் கொண்டிருந்தார். எழுந்திருக்க மனமின்றி, "சோறு இன்று இல்லை. காலியாகி விட்டது. ஆகவே நாளை வாருங்கள்" என்று படுத்தபடியே பதில் சொன்னார். ஸ்ரீ சுவாமிகளும் ஏதும் சொல்லாமல், தான் வழக்கமாகப் படுத்துக் கொள்ளும் இடத்திற்குச் சென்று பசியுடனேயே படுத்து உறங்கிவிட்டார்.

சிறிது நேரம் சென்ற பிறகு, தன் குழந்தைகளுக்கு உணவிடுவதற்காக, அந்தப் பெண் உணவுப் பாத்திரத்தைத் திறந்து பார்த்தார். பாத்திரம் காலியாகக் கிடந்தது. சுவாமிகளிடம் இல்லை என்று பொய் கூறியதால்தான், எல்லா உணவும் மாயமாக மறைந்து விட்டது. மகானுக்கு மிகப்பெரிய அபச்சாரம் செய்துவிட்டோம் என்பதை உடனே உணந்து கொண்ட அந்தப் பெண், சுவாமிகள் படுத்திருக்கும் இடத்திற்குச் சென்று, தவறுக்கு மன்னிக்குமாறு வேண்டி அழுதார். ஸ்ரீ சுவாமிகள் தன் வயிற்றைத் தடவி 'ஏவ்' என்று ஏப்பம் விட்டார். பின் கையைத் தூக்கி ஆசிர்வதித்தார். அந்தப் பெண் வீட்டிற்குச் சென்று பார்க்க, பானையில் உணவு நிரம்பி இருந்தது.

ஒருமுறை ஆலயப் பணியாளர்கள் செய்த வேலைக்குக் கூலி கொடுக்கப் பணமில்லாது போயிற்று. மிகவும் கஷ்டமாகி விட்டது. முருகனைத் தியானித்த சுவாமிகள், அனைவருக்கும், விபூதியைக் கொடுக்க, அவர்கள் அனைவரும் வீட்டிற்குச் சென்று பார்த்தபோது அந்த விபூதி பணமாக மாறியிருந்தது. இவ்வாறு சுவாமிகள் தான் வாழ்ந்த காலத்தில் பல்வேறு அற்புதங்கள் செய்து மக்களை நல்வழிப்படுத்தினார். பலருக்குத் திருநீறு அளித்து நோய்களைக் குணமாக்கினார்.

வெறும் சித்து விளையாடலோடு நின்று விடாது, பல்வேறு ஆன்மிக, சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டிருந்த மகான், தான் வாழ்ந்த காலத்தில் பலவிதமான நன்மைகளை மக்களுக்குச் செய்து, 1858ம் ஆண்டு ஜீவசமாதி அடைந்தார். இவர் உடல் அவர் வாழ்ந்த கோயிலுக்கு அருகே உள்ள இடத்தில் அன்பர்களால் சமாதி செய்விக்கப்பெற்று, சிவலிங்கப் பிரதிஷ்டை செய்யப்பட்டது. இவருடைய குருபூஜை வருடா வருடம் டிசம்பர் மாதத்தில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சுவாமிகள் உரைத்த தத்துவம்ஸ்ரீ சுவாமிகளின் உபதேசங்கள்
ஸ்ரீ சுவாமிகள் அன்பர்களுக்கு வாழ்க்கைத் தத்துவங்களை உபதேசித்துள்ளார். அவற்றை உபதேச உண்மை, உபதேச உண்மைக் கட்டளை, தண்டபாணியார் பதிகம், பூங்குயிற் கண்ணி, ஆனந்தக் களிப்பு, தோத்திரமாலை, எந்நாட்கண்ணி போன்ற பாடல்களின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.

அவற்றில் சுவாமிகள், மானிடத்தார் சிவத்தைப் பற்றி அறியுமுன், ஜீவனைப் பற்றி முதற்கண் அறிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

"தன்னை அறிவது தானறிவு
பின்னை எல்லாம் பேயறிவு"


என்பது சுவாமிகளின் மிக முக்கிய உபதேசமாகும்.

சுவாமிகள் மிகச் சிறந்த முருக பக்தர். மூவேளையிலும் முருகனையே தொழுதுவந்தவர். தன் அன்பிற்குரிய வேளச்சேரி வாழும் தண்டபாணியை, தனது தண்டபாணிப் பதிகத்தில்,

"நன் மதியருள் வேத சிரேணி வாழ் பரனே
வரதனே தண்ட பாணியனே"


என்று பலவாறாகப் புகழ்ந்து பாடியுள்ளார்.

வேளச்சேரி என அழைக்கப்படும் பகுதியின் அக்காலத்திய பெயர் 'வேதசிரேணி' என்பதை இப்பாடலால் அறியமுடிகிறது.

சென்னை சைதாப்பேட்டை-வேளச்சேரி சாலையில், காந்தி சிலை திருப்பம் அருகில், ஸ்ரீ சுவாமிகளின் சமாதி ஆலயம் அமைந்துள்ளது.

ஸ்ரீ சுவாமிகளின் ஜீவசமாதியைத் தொடர்ந்து வழிபடுவதன் மூலம் மனநோய், கல்வி, வியாபாரத் தடைகள், திருமண தோஷங்கள், பெருநோய் போன்ற வியாதிகள், புத்திர பாக்கியமின்மை என அனைத்துக் குறைகளும் நீங்குவதாக அன்பர்கள் உணர்கின்றனர்.
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline