Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்
- பா.சு. ரமணன்|அக்டோபர் 2022|
Share:
இந்து ஞானமரபில் சதா பிரம்ம நிலையிலேயே ஒன்றி வாழ்க்கை நடத்தியவர்கள் பிரம்மஞானிகள் என அழைக்கப்பட்டனர். சுகப்பிரம்ம மகரிஷி, ஜனக மகரிஷி, சதாசிவ பிரம்மேந்திரர் போன்ற அவதூத ஞானிகளின் வரிசையில் குறிப்பிடத் தகுந்த ஒருவர் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள்.

தோற்றம்
இவர் ஆந்திரத்தின் த்ரைலிங்க தேசத்தில் 1607ம் ஆண்டில் பிறந்தார். தந்தை நரசிங்க ராவ். தாய் வித்யாவதி. சுவாமிகளது இயற்பெயர் சிவராமன். வேத புராணங்களை குருகுலத்தில் கற்றுத் தேர்ந்தார். இளவயது முதலே ஆன்மீக நாட்டம் அதிகம் இருந்தது. அதனால் இடுகாடுகளுக்குச் சென்று தியானித்தார். அது ஊரார் மத்தியில் பலத்த எதிர்ப்பைத் தோற்றுவித்தது. திருமணம் செய்து வைத்தால் எல்லாம் சரியாகி விடும் என்று உறவினர்கள் வலியுறுத்தினர். ஆனால் சுவாமிகள் அதனை மறுத்துவிட்டார். பிரம்மச்சாரியாகவே வாழ்க்கை நடத்தினார்.

தல யாத்திரை
தாய், தந்தையர் இறந்தபின், நாற்பதாம் வயதில் ஊரைவிட்டு வெளியேறினார். கால்போன போக்கில் அலைந்தார். பல திருத்தலங்களுக்குச் சென்றார். பல ஜீவ சமாதிகளை தரிசித்தார். பல சாதுக்களின் தரிசனம் பெற்றார். இறுதியில் காசித் தலத்திற்குச் சென்றவர், அதையே வசிப்பிடமாகத் தேர்ந்தெடுத்தார். தனித்திருந்து தவம் செய்தார். ஞானியாக மலர்ந்தார்.

காசி வாழ்க்கை
முக்காலத்தையும் அறிந்தவர் சுவாமிகள். ஆனால் ஏதுமறியாப் பித்தர் போலக் காசி நகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருப்பார். அவரது முதுகில் மூன்று லிங்க வடிவிலான குழிகள் காணப்பட்டதால் பக்தர்கள் அவரை த்ரைலிங்க சுவாமிகள் என்று அழைத்தனர். குள்ளமான உருவம். நீண்ட கைகள். உருண்டையான முகம். பெரிய வயிறு என்று சுவாமிகளின் தோற்றம் மிக வித்தியாசமாக இருந்தது. சுவாமிகள் யாருடனும் பேசமாட்டார். உணவு உண்பது கூட எப்போதாவது ஒருமுறைதான். பல நாட்கள் பட்டினியாக இருப்பார். சமயத்தில் அன்பர்கள் கொண்டு வரும் தயிரைச் சளைக்காமல் குடம் குடமாகக் குடிப்பார். மணிகர்ணிகா படித்துறையில் உச்சி வெயிலில் சுடும் பாறைமீது அமர்ந்திருப்பார். அவதூதர் என்பதால் உடலில் ஒட்டுத்துணி இருக்காது. அதைப்பற்றி எந்தவித அக்கறையுமின்றி கடும்வெயிலில் அமர்ந்திருப்பார். தான், எனது, என் உடல் என்ற உணர்வுகள் அற்றவராக, கீதை குறிப்பிடும் 'ஸ்திதப்ரக்ஞ' நிலையில் அவர் இருந்தார்.

சமயங்களில் கடுங்குளிரில் தண்ணீருக்குள் இறங்குவார். நீருக்குள்ளே மூச்சடக்கி அமர்ந்திருப்பார். இல்லாவிட்டால் தண்ணீரின் மீது சப்பணமிட்டு அமர்ந்துகொண்டோ அல்லது தண்ணீரில் படுத்தவாக்கில் மிதந்து கொண்டோ இருப்பார். சில சமயம் உச்சி வெயிலில் அவதூதராய் காசி மாநகரத்துத் தெருக்களைச் சுற்றி வந்து கொண்டிருப்பார். காலத்தை, இயற்கை விதிகளை வென்ற மகாபுருஷராக இவர் இருந்தார்.ராமகிருஷ்ண பரமஹம்சரும் த்ரைலிங்க சுவாமிகளும்
இறையனுபூதி பெற்ற இம்மகானை பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் தரிசனம் செய்திருக்கிறார். காசி, பிருந்தாவனம் போன்ற பல புண்ணியத் தலங்களுக்கு யாத்திரையை மேற்கொண்ட ராமகிருஷ்ணர், காசியில் ஒரு மடத்தில் தங்கியிருந்த ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளைச் சென்று சந்தித்தார். தகிக்கும் மணலில் அவதூதராக சுவாமிகள் தியானம் செய்து கொண்டிருந்த பொழுது அவரை ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் தம் சீடர்களுடன் வந்து சந்தித்தார். மௌனத் தவத்தில் இருந்த த்ரைலிங்க சுவாமிகள் ராமகிருஷ்ணரிடம் முதலில் இரண்டு விரல்களைக் காட்டி பின்னர் ஒரு விரலைக் காட்டினார். அதாவது ஜீவாத்மா, பரமாத்மா இரண்டும் வேறு வேறாக, இரண்டாகத் தோன்றினாலும் இரண்டும் வேறல்ல; ஒன்றே என்ற அத்வைத தத்துவத்தை பரமஹம்சருக்கு அவர் விளக்கினார். பின் கொல்கத்தா திரும்பிய ராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தரிடம் 'ஒரு மிகப்பெரிய மகானைச் சந்தித்தேன்' என்று சொல்லி அந்தச் சந்திப்பை விளக்கினார். பிற்காலத்தில் சுவாமி விவேகானந்தரும் மகான் ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகளைச் சந்தித்து ஆசி பெற்றார்.

லாஹிரி மஹாசயரும் த்ரைலிங்க சுவாமிகளும்
மஹாவதார் பாபாஜியின் நேர் சீடரான மகான் ஸ்ரீ லாஹிரி மஹாசயர், த்ரைலிங்க சுவாமிகளின் உற்ற நண்பராகத் திகழ்ந்தார். பரமஹம்ச யோகானந்தர் தனது 'ஒரு யோகியின் சுயசரிதம்' நூலில் த்ரைலிங்க சுவாமிகள் கிட்டத்தட்ட 300 வருடங்களுக்கு மேல் வாழ்ந்தவர் என்று குறிப்பிட்டிருக்கிறார். பகவான் ஸ்ரீ ராமகிருஷ்ணர் த்ரைலிங்கரை 'காசியில் நடமாடிக் கொண்டிருக்கும் சிவன்' என்று குறிப்பிட்டுள்ளார். மகேந்திரநாத் குப்த மகாசாயர், சுவாமி அபேதானந்தா, சுவாமி பாஸ்கரானந்தா, விஜய் கிருஷ்ண கோஸ்வாமி, விசுத்தானந்த சரஸ்வதி உட்படப் பலர் இவரது பெருமைகளை தங்கள் நூல்களில் விவரித்துள்ளனர். சுவாமிகளின் அத்யந்த சீடர்களுள் ஒருவரான உமாசரண் முகோபாத்யாய, சுவாமிகளது வாழ்க்கையைப் பதிவு செய்திருப்பதுடன், அவர் அவ்வப்போது கூறிய போதனைகளையும் தொகுத்து வைத்துள்ளார்.

சுவாமிகள் நிகழ்த்திய அற்புதங்கள்
பல்வேறு பெருமைகளையுடைய ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள் பல அற்புதங்களையும் நிகழ்த்தியிருக்கிறார்.

சுவாமிகள் அதிகம் உண்ண மாட்டார். அதிகம் பேசவும் மாட்டார். சதா பிரம்மத்தில் லயித்த நிலையிலேயே இருப்பார். காற்றையே உணவாக உண்ணும் மிகச்சிறந்த யோகியாக விளங்கியதால், அவருக்கு மற்ற மானிடர்களுக்கான உணவுத் தேவைகள் இருக்கவில்லை.

ஒரு சமயம் நீண்ட நாட்களாக அவர் உண்ணாநோன்பு மேற்கொண்டிருந்தார். வழக்கம்போலத் தயிரை உண்டு விரதத்தை முடிக்க நினைத்திருந்தார். அப்போது ஒரு பெரிய பாத்திரத்தைக் கொண்டு வந்தான் போக்கிரி ஒருவன். தயிரோடு தயிராய் சுண்ணாம்பையும் அதில் கலந்து வைத்திருந்தான். மகானை ஒரு போலி, சோம்பேறி, ஏமாற்றுக்காரர் என நினைத்த அவனுக்கு, மகான் செய்யும் அற்புதங்கள் எல்லாம் கண்கட்டு வித்தை என்பது எண்ணம். சுவாமிகளைப் போலி என்று உலகுக்கு நிரூபிப்பதற்காக தயிரோடு சுண்ணாம்புக் கலவை கொண்ட பானையை வைத்திருந்தான்.

வழக்கம்போல தயிர்ப்பானைகளில் இருந்து தயிரைக் குடித்துக் கொண்டிருந்த சுவாமிகள்முன் சென்று நின்ற அவன், தான் கொண்டு வந்திருந்த தயிரைக் குடிக்குமாறு வேண்டிக் கொண்டான். சுவாமிகளும் மறுபேச்சுப் பேசாது அதை வாங்கிக் கடகடவென்று குடித்து முடித்தார். சிறிது நேரத்தில் வயிற்றுவலி தாளாமல் அவர் அலறுவார், அதன்மூலம் அவர் ஒரு போலி என்பதை நிரூபிக்கலாம் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தான் அந்த மனிதன்.

சற்று நேரம் சென்றது. திடீரென்று அந்த மனிதன் கீழே விழுந்து புரள ஆரம்பித்தான். 'அய்யோ, அம்மா' என்று வயிற்றைப் பிடித்துக்கொண்டு அலறினான். "சுவாமி, உங்களைச் சோதித்துப் பார்க்க நினைத்த என்னை மன்னித்து விடுங்கள். என் உடல் எரிகிறது, வயிறு தகிக்கிறது! என்னால் தாங்க முடியவில்லை. என்னைக் காப்பாற்றுங்கள்!" என்று கண்ணீர் விட்டுக் கதறினான்.எப்போதும் மௌனத்தில் இருக்கும் மகான் அப்போது மௌனம் கலைந்தார். "முட்டாளே! நீ எனக்கு விஷத்தைக் கொடுத்ததன் மூலம் உனக்கு நீயே விஷத்தைக் கொடுத்துக் கொண்டிருக்கிறாய். தன்வினை தன்னைச் சுடும் என்பதால் அது உன்னை வாட்டுகிறது. இறைவன் எங்கும் நிறைந்திருப்பது போல என் உயிர் என்பது என் உடலில் மட்டுமல்ல; அது உன் உடலிலும் இருக்கிறது. ஒவ்வோர் அணுவிலும் இருக்கிறது. இதை மறவாதே! இனிமேல் இதுபோன்ற தவறுகளைச் செய்யாமல் வாழ்க்கை நடத்து" என்று கூறி அவனை மன்னித்தார். அவன் தன் உடல் வேதனை நீங்கிச் சுவாமிகளைத் தொழுதுவிட்டுச் சென்றான்.

சிறையில் த்ரைலிங்க சுவாமிகள்
காசியில் பிராம்லி என்ற வெள்ளைக்காரர் அப்போது சப்கலெக்டராக இருந்தார். ஆடையின்றி அவதூத கோலத்தில் காசிநகரத் தெருக்களில் சுற்றிக் கொண்டிருந்த த்ரைலிங்க சுவாமிகளைப் பார்த்ததும் அவருக்குக் கோபம் பொங்கியது. தன்னிடமிருந்த சவுக்கால் சுவாமிகளை அடித்தார். ஆனால் அந்த அடி சுவாமிகளின் மேல் விழவில்லை. மாறாக பிராம்லியின் கூட வந்து கொண்டிருந்த அவரது மனைவிமீது விழுந்தது. அந்தப் பெண்மணி வலி தாளாமல் அலறினார்.

சுவாமிகளை ஒரு மாயாவி என்று நினைத்த பிராம்லி, தன் வீட்டிற்கு அவரை இழுத்துச் செல்லுமாறு சேவகர்களுக்கு உத்தரவிட்டார். கலெக்டரின் வீட்டில் அவரது உறவினர்கள் அனைவரது உடலிலும் சாட்டையடி பட்டு ரத்தம் கசிந்து கொண்டிருந்தது. அது கண்டு மிகவும் சீற்றமுற்ற பிராம்லி துரை 'இந்த மாயாவியை இருட்டறையில் அடையுங்கள்' என்று தனது சேவகர்களுக்குக் கட்டளையிட்டு விட்டு, அந்த அறையைப் பூட்டிச் சாவியைத் தானே வைத்துக் கொண்டார். பணி நிமித்தமாக வெளியே புறப்பட்டுச் சென்றார்.

தெருவில் அவர் கண்ட காட்சி அவரைத் திடுக்கிடச் செய்தது. த்ரைலிங்க சுவாமிகள் வழக்கம் போல் அவதூதராய் கலெக்டரின் முன்னால் சாவதானமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ஆச்சரியம் மேலிட அருகிலுள்ளோரிடம் சுவாமிகளைப் பற்றி விசாரித்தார் கலெக்டர். அப்போதுதான் மகானின் மகிமை அவருக்குத் தெரியவந்தது. சுவாமிகளைப் பணிந்து வணங்கிய பிராம்லி, தான் செய்த அவச்செயலுக்காக தன்னை மன்னிக்குமாறு வேண்டினார். சுவாமிகளும் அவரை மன்னித்தார். தனது அஞ்ஞானம் நீங்கிய அன்றைய தினம் முதல் வருடம் தோறும் சுவாமிகளுக்கு ஆராதனை நடத்திக் கொண்டாட ஒரு கட்டளையையும் பிராம்லி ஏற்படுத்தினார். அது 'பிராம்லி கட்டளை' என்ற பெயரில் இன்றறளவும் காசியில் நடந்து வருவதாகக் கூறப்படுகிறது.

மகாசமாதி
இவ்வாறு நான், எனது ஆகிய பேதங்களற்று, சதா பிரம்ம நிலையிலேயே வாழ்ந்த ஸ்ரீ த்ரைலிங்க சுவாமிகள் டிசம்பர் 26, 1887ல் மறைந்தார். காசியில், பஞ்சகங்கா காட்டில் அமைந்திருக்கும் அவரது மடம் இன்றளவும் புகழ்பெற்று விளங்கி வருகின்றது.
பா.சு. ரமணன்
Share: 
© Copyright 2020 Tamilonline