Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
October 2022 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | சின்னக்கதை | சமயம் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | அலமாரி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | Events Calendar | பொது | சிறுகதை | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
நேர்காணல்
ஓவியர் தெய்வா
- அரவிந்த்|அக்டோபர் 2022|
Share:
வாளேந்திய கரங்களும், தினவெடுத்த தோள்களுமாகக் காட்சியளிக்கும் மன்னர்களின் படங்கள் நமக்குப் பிரமிப்பூட்டுகின்றன; தெய்வத் திருவுருவங்களைப் பாதுகாப்பாக எடுத்துச் செல்லும் வீரர்களின் முகபாவங்கள் வியப்பூட்டுகின்றன. அந்த கர்ப்பிணிப் பெண்ணின் கையைப் பிடித்து நாடி பார்க்கும் மருத்துவச்சி... அடடா, என்ன சொல்வது! அத்தனை அற்புதம்! இவற்றை எல்லாம் தனது தூரிகையால் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஓவியர் தெய்வா. ஓவிய ஆசிரியராகப் பணியாற்றும் தெய்வா, பணி நேரம் போக எஞ்சிய நேரங்களில் ஓவியம் வரைகிறார். ஓவியம்தான் என் சுவாசம். எனக்கு ஓய்வு என்பதே ஓவியம் வரைவதுதான் என்கிறார். இதோ, ஓவியர் தெய்வா பேசுகிறார், செவி கொடுப்போமா?

★★★★★


காந்தியை பாரதி வாழ்த்துதல்



கே: உங்களது இளமைப் பருவத்தைப் பற்றிச் சொல்லுங்கள்.
ப: தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி தாலுகாவில் இருக்கும் துரைசாமிபுரம் புதூர் என்பது எனது கிராமம். ஐந்தாம் வகுப்புவரை உள்ளூரில் படித்தேன். பின்னர் 12 கிலோமீட்டர் தூரம் தொலைவில் இருக்கும் உசிலம்பட்டியில் 12ம் வகுப்புவரை படித்தேன். கிராமத்தை விட்டுத் தனியாக எங்கள் வீடு இருந்ததால் எனக்குப் பொழுதுபோக்கு என்று எதுவும் இருக்கவில்லை. ஆகவே நானாக ஒரு பொழுதுபோக்கை ஏற்படுத்திக் கொண்டேன். களிமண்ணில் பொம்மைகள் செய்வேன். ஓடைகளில் கிடைக்கும் பலநிறக் கற்களை எடுத்துவந்து கரிக்கட்டை, இலைகள் போன்றவற்றை வைத்துச் செய்த சிலைக்கு வண்ணம் தீட்டுவேன். பன்னிரண்டாம் வகுப்புக்குப் பின் ஓவிய ஆசிரியர் பயிற்சியை முடித்தேன்.

அடடா என்ன அழகு!



கே: ஒவியக்கலை மீது உங்களுக்கு ஆர்வம் வரக் காரணம் என்ன?
ப: நான் ஒன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் பொழுது, என் ஆசிரியா் கரும்பலகையில் அழகாகப் படம் வரைவதைப் பார்த்தேன். அதுமுதல் எனக்கும் வரைவதற்கான ஆர்வம் ஏற்பட்டது.



கே: உங்கள் முதல் ஓவிய முயற்சி பற்றி...
ப: எனது முதல் ஓவிய அனுபவம் என் வீட்டில்தான் ஏற்பட்டது. என் சகோதரிக்குத் திருமணம் நடக்கவிருந்தது. நான் சுவரில் கோலம் போடுவதற்குப் பதிலாகப் படம் வரைந்தேன். அதுதான் முதல் முயற்சி.



கே: ஓவியம்தான் வாழ்க்கை என்று நீங்கள் தீர்மானித்தது எப்போது?
ப: நான் பன்னிரண்டாம் வகுப்பு முடித்து, ஓவிய ஆசிரியருக்கான பயிற்சியையும் முடித்தேன். பின் அரசு வேலை கிடைக்கும் என நினைத்துக் காத்திருந்தேன். வேலை கிடைக்கவில்லை. குடும்பத்தில் வறுமை. மேலே படிக்க முடியவில்லை. அப்போதுதான் ஓவியத்தையே வாழ்க்கையாக, தொழிலாகக் கொள்ள முடிவெடுத்தேன்



கே: பத்திரிகைகளுக்குப் பணியற்றிய அனுபவம் குறித்து...
ப: என் ஓவியங்களை முகநூலில் பதிந்து வந்தேன். அப்பொழுது கல்கி இதழின் ஆசிரியர் என்னைத் தொடர்பு கொண்டு, எங்கள் பத்திரிக்கைக்கு ஓவியம் வரைய முடியுமா என்று கேட்டார். ஒப்புக்கொண்டேன், சிறுகதைகளுக்குப் படங்கள் வரைந்தேன்.

பின்னர் கல்கியிலேயே 'கூடலழகி' எனும் சரித்திரத் தொடருக்கு வரையும் வாய்ப்பு வந்தது. அதற்கு நல்ல வரவேற்பும் கிடைத்தது. அதன் பின்னர்தான் என்னைப் பலரும் அறிந்து கொண்டனர். தொடர்ந்து 'மங்கையர் மலர்', 'காமதேனு' போன்ற இதழ்களுக்கு வரைந்தேன். இந்தச் சூழலில்தான், கோவிட்-19 தொற்று காரணமாக, பத்திரிகைகள் அச்சில் வருவதை நிறுத்திவிட்டு டிஜிட்டலாக வெளிவந்தன. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் பத்திரிகைகளுக்கும் தொடர்களுக்கும் அதிகமாகப் படங்களை வரைந்தேன். தற்போது இதழ்களுக்கும், தனிநபர்கள் எழுதும் நாவல்களுக்கும், பதிப்பகத்தார் வெளியிடும் புத்தகங்களுக்கும் அட்டை ஓவியம் வரைகிறேன்.



கே: ஆசிரியராகப் பணிபுரிந்துகொண்டே இத்தனை ஓவியங்கள் வரைய உங்களுக்கு எப்படி நேரம் கிடைக்கிறது?
ப: பள்ளி நாட்களில், வேலை முடித்த பின்னர் இரவில் இரண்டு மணி நேரம் வேலை செய்வேன். பின்னர் சனி, ஞாயிறுகளில் முழுக்க வேலை செய்வேன். எனக்கு ஓய்வு என்பது ஓவியம் வரைவது மட்டுமே.



கே: தமிழ்நாட்டு பாடப்புத்தகங்களுக்காக நிறைய ஓவியங்கள் வரைந்துள்ளீர்கள் அல்லவா?
ப: ஆம். தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனத்திற்கு ஓவியம் வரையும் வாய்ப்பு எனக்கு 2019-ல் வந்தது. 6, 7, 8, 10, 12ம் வகுப்புப் பாட நூல்களுக்குப் படம் வரைந்திருக்கிறேன். சென்னைக்குச் சென்று சில மாதங்கள் அங்கேயே தங்கி வரைந்தேன். அது ஒரு நல்ல அனுபவம்.

ஒண்டிவீரன் ஓவியமும் அஞ்சல் தலையும்



கே: மதுரை சிலப்பதிகாரப் பூங்காவிற்காக வரைந்த ஓவியங்கள் பற்றி...
ப: மதுரை மாநகரக் காவல் துறையிடமிருந்து 'சிலப்பதிகாரப் பூங்கா'விற்கு வரைவதற்கான ஒரு வாய்ப்பு எனக்கு வந்தது. சிலப்பதிகாரக் கதாபாத்திரங்கள் ஒருபுறமும், மதுரை மாநகரக் காட்சி ஒருபுறமும், மாதவி அரங்கேற்றம் ஒருபுறமுமாக வரைந்தேன். இவை அனைத்தும் டிஜிட்டலில் வரையப்பட்டன.

ஒண்டிவீரன் சிலை உருவாகிறது | ஒண்டிவீரன் சிலை



கே: ஓவியம் பற்றிய உங்கள் வரையறை என்ன?
ப: ஓவியர் ஒருவருக்கு உண்மையான ஒரு பொருள் அல்லது ஒரு வடிவத்தை முழுமையாக வரையத் தெரிந்திருக்க வேண்டும். அதன் பின்னர் நாம் விரும்பிய பாணியைக் கடைப்பிடிக்கலாம். உள்ளதை உள்ளபடி வரைவது முதல் படி. முதல் படியில் ஏறாமல் மூன்றாம் படி ஏறுவது சரியாகாது. முதலில் எனக்கு நான் என்ன வரைகிறேன் என்று தெரியவேண்டும். பின்னர் மற்றவர்களுக்கு அது புரியவேண்டும். அது அவர்களை மகிழ்ச்சிப்படுத்த வேண்டும். அதைத்தான் நான் செய்து கொண்டிருக்கிறேன்.

ஓவியர் மணியம் செல்வனுடன்



கே: உங்களைக் கவர்ந்த ஓவியர்கள் யார், யார்?
ப: எனது ஓவிய ஆசிரியர் திரு பாண்டி, ஓவியர்கள் திரு மாருதி, திரு மணியன் செல்வன், திரு ஷ்யாம். இன்னும் பலரும் உண்டு.

நடிகர் திலகம் சிவாஜி



கே: உங்கள் ஓவியங்களுக்குக் கிடைத்த பாராட்டுகள் குறித்து...
ப: எனது ஓவியங்களைப் பார்த்து விட்டுச் சிலர் கண்ணீர் சிந்தியிருக்க்கிறார்கள். சிலர், 'உங்கள் ஓவியங்கள் என்னைத் தூங்க விடவில்லை' என்று கூறியிருக்கின்றனர். சிலர், 'நான் அந்தச் சிறு வயதுக்கே சென்றுவிட்டேன்' என்று கூறியுள்ளனர். நகரம் முதல் கிராமத்தின் மூலை முடுக்கு, மேலைநாடுகள் வரை எனது ஓவியங்கள் சமூக வலைதளங்களின் வழியே செல்கின்றன. அவற்றைப் பார்த்துப் பரவசமாகி என்னை வாழ்த்தியவர்கள் பலர் உண்டு. என்னைக் கவர்ந்தவற்றை, எனக்குப் பிடித்தவற்றை ஓவியமாக வரைந்ததைத் தவிர, இவர்களுக்கு நான் என்ன செய்துவிட்டேன் என்று என் மனம் நெகிழும். இதுபோன்ற படங்களைத் தொடர்ந்து வரைய வேண்டும் என்று உறுதி பூண்டு செயல்பட்டு வருகிறேன். இதைவிட எனக்கு வேறென்ன வேண்டும்?



கே: நவீன தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்தக் காலத்தில் ஓவியர்களுக்கு இத்துறையில் நல்ல எதிர்காலம் உள்ளதா?
நிச்சயம் உள்ளது. எப்பொழுதும் ஓவியர்களுக்குத் தனி மரியாதை உண்டு. ஓவியர் ஒருவர் தனது கற்பனை வளத்தைப் பெருக்கிக்கொள்ள வேண்டும். காலத்துக்கு ஏற்பத் தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். எப்பொழுதும் நவீனத்துடன் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். நவீனங்களைப் பயன்படுத்தும் பொழுதுதான் நமது முன்னேற்றத்திற்கான வழி விரைவாகிறது. சிறந்த ஓவியர்களுக்கு நல்ல எதிர்காலம் எப்பொழுதும் உண்டு.



கே: உங்கள் குடும்பம் பற்றி...
ப: எனது தாய் படிக்காதவர். எனது தந்தை ஐந்தாவது வரை மட்டுமே படித்தவர். எங்கள் தொழில் விவசாயம். எனது மனைவி வீட்டில் இருந்தே தையல் தொழில் செய்கிறார். எனது மகன் மெக்கானிகல் எஞ்சினியரிங் முடித்துவிட்டு, ஓவிய ஆர்வத்தின் காரணமாகச் சென்னையில் கிராஃபிக் டிசைனருக்குப் படித்துக் கொண்டிருக்கிறார்.

"ஒவ்வொரு மனிதரும் ஏதாவது ஒரு வகையில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ள முயற்சி செய்கிறார்கள். அந்த வகையில் நான் ஓவியத்தின் மூலம் என்னை வெளிப்படுத்திக் கொண்டேன். வாழ்க்கையில் பிடித்ததே எனக்குத் தொழிலாக அமைந்தது. மற்றவர்களுக்கு மகிழ்ச்சியும் எனது வாழ்க்கைக்கான திருப்தியும் ஓவியம் வரைவதில் எனக்குக் கிடைக்கிறது.” என்று நிறைவோடு சொல்கிறார் தெய்வா.

★★★★★
கூடலழகி
'கூடலழகி' என்பது, 'கல்கி' இதழில், காலச்சக்கரம் நரசிம்மா அவர்கள் எழுதிய வரலாற்றுத் தொடர்கதை. அந்தத் தொடருக்கு வரைவதற்கு எனக்கு வாய்ப்பு வந்தபொழுது நான் மிகவும் மகிழ்ந்தேன். கதையை முழுக்கப் படித்து, எந்தக் காட்சிக்கு எப்படி ஓவியம் அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று சிந்தித்து, அதற்கேற்பப் படம் வரைந்தேன். ஒவ்வொரு அத்தியாயத்திற்கும். காட்சியமைப்பு வெவ்வேறு விதமாக இருக்க வேண்டுமென்று திட்டமிட்டு வரைந்தேன். சவாலான விஷயங்களைக் கூட எளிமையாக எடுத்துக்கொண்டு வரைந்தேன். அந்த ஓவியங்கள் பலராலும் பாராட்டப்பட்டன.

- ஓவியர் தெய்வா


★★★★★


மன்னர்களும் நானும்
நான் சிறுவயது முதலே பழைய திரைப்படங்களை நிறையப் பார்ப்பேன். புராணப் படங்களும், வரலாற்றுப் படங்களும் எனக்கு மிகவும் பிடிக்கும். அதில் நடிப்பவர்கள் உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். நமது தமிழ் மன்னர்களுக்கும், தமிழ் வீரர்களுக்கும் உருவம் இல்லாமல் இருந்தது. அவர்களுக்கு நான் உருவங்கள் கொடுக்க முற்பட்டேன். அப்பொழுதுதான் பல சமூகத்தினருக்கும் என்னைத் தெரிய ஆரம்பித்தது. அவர்கள் மனதில், எண்ணத்தில் இருந்ததைவிடச் சிறப்பாக நான் செய்யும் பொழுது அவர்கள் உற்சாகம் அடைகின்றனா். பாராட்டுகின்றனர்.

நம் சிற்பங்களில் இடம் பெற்றிருக்கும் பழமையான உடை, அலங்காரம், நகை போன்றவற்றை நான் கூர்ந்து கவனிப்ப்பேன். அனைத்து ஓவியங்களிலும் தமிழ்ச் சாயல் இருக்க வேண்டும்; தமிழ் மண் சார்ந்து இருக்க வேண்டும் என்று நினைப்பேன். ஒவ்வொரு ஓவியத்திலும் மண்ணின் மணத்தை வெளிப்படுத்தி வருகிறேன்.

- ஓவியர் தெய்வா


★★★★★


ஒண்டிவீரன் படமும் சிலையும்
ஒண்டிவீரன் ஓவியத்தை வரைந்த பின்னர், அதனுடைய சிலையையும் செய்தேன். இந்தச் சிலையை வைத்து ஆர்ப்பாட்டமும் செய்தாா்கள் அதன்பின் தமிழக அரசு இதேபோல், திருநெல்வேலியில், 'நெல்கட்டும்செவல்' என்னுமிடத்தில் மணிமண்டபத்தினுள் வெண்கலைச் சிலை அமைத்தது.

இப்பொழுது நான் வரைந்த 'ஒண்டிவீரன்' ஓவியமே தபால் தலையாகவும் வெளிவந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், நிறைவையும் தருகிறது.

- ஓவியர் தெய்வா


★★★★★



முகநூல் பக்கம் | ட்விட்டர் | இன்ஸ்டக்ராம் | வலைதளம்


உரையாடல்: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline