Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | முன்னோடி | சமயம் | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | அஞ்சலி
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
சிறுகதை
ஏடெல்வைஸ் என்றொரு பூ
முக்கியமான பேஷண்ட்
- ஜே. ரகுநாதன்|ஜூலை 2020|
Share:
சூரியன் சோம்பேறித்தனமாக மேலேறிக்கொண்டிருந்த, இன்னும் சில்லிப்பு விலகாத அதிசய சென்னைக்காலை எட்டு மணி. எதிரே சென்ட்ரல் ஸ்டேஷன் எப்போதும்போல அவசரப்பரபரப்பு, ஆட்டோக்காரர்களின் அடாவடி, ஓலா, யூபரின் வேறுவிதமான அடாவடி என்று அன்றைய தினத்துக்குத் தயாராகிக் கொண்டிருந்தது. இங்கே கார் பார்க்கில் அவருக்கென ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் அழுக்குப்பச்சை நிற பெரிய வண்டி மரியாதை இன்றி சற்றே கோணலாக நின்றிருப்பதைப்பார்த்து லேசான எரிச்சல் கொண்டார்.

"ஹூ தெ ஹெல்…." ஆரம்பித்தவர் அது ராணுவ வண்டி என்பதையும் அதில் யூனிஃபார்ம் அணிந்த டிரைவர் பல் குத்திக்கொண்டு இருப்பதையும் பார்த்து நிறுத்தி, அவனருகில் போனார்.

"வண்டிய எடுக்கறியா? இது என்னோட பார்க்கிங் எடம்!"

இவரின் உடை, மிடுக்கு அதிகார தோரணையைக் கண்ட ராணுவ டிரைவர் கொஞ்சம் பரபரத்து "அபி நிக்லேங்கே சாப்" என்று வண்டியை நகர்த்தி இடம் தர, இவரின் ஹோண்டா சிடி சல்லென்று நுழைந்து நின்றது.

பின் சீட்டிலிருந்து கைப்பையை எடுத்துக்கொண்டு விறுவிறு நடையில் வாசலை அடைந்தபோது சவரி ரெடியாக இருந்தான்.

"குட் மார்னிங் சார்!"

"ம்!"

முதல் மாடியேறி லேண்டிங்கில் திரும்பி இன்னும் பத்து படிகள் மேலே போய் காரிடாரில்…..

சட்டென்று கோபம் கொண்டார்.

ஒழுங்கில்லாமல் கூட்டம் அங்குமிங்கும் நகர்ந்தவாறு அல்லாடிக்கொண்டிருக்க உரத்த குரலில் இடி முழங்கியது.

'யார் இங்க அட்டெண்டண்ட்?"

இரண்டு நர்ஸ்கள், ஒரு டியூட்டி டாக்டர் இரண்டு ஆர்வக்கோளாறு பேஷண்ட் எல்லோரும் இவரிடம் நெருங்கினர்.

டீயைக் குடித்துக்கொண்டிருந்த அட்டெண்டர் செபாஸ்டியன் அதை மேலே கொட்டிக்கொண்டு அரக்கப்பரக்க ஓடிவந்தான்.

"என்ன பண்ற காலங்கார்த்தால? வர்ர பேஷண்ட்ஸ ஒழுங்கா வரிசையா அனுப்பறதில்லையா?"

இதற்குள் அங்கே உட்கார்ந்திருந்த ஒரு ராணுவ சோல்ஜர் விறைப்புடன் எழுந்து, நோயாளிகளை வரிசைக்கிரமமாக நிற்க வைத்தான். ஒரு வயதானவரை அப்படியே உட்கார்ந்து கொள்ளச்செய்தான். கைக்குழந்தை பெண்களை சாய்ந்துகொள்ள இடமளித்தான். பிறகு மெதுவாகப் போய் வயதான ஆசாமியின் - மூக்கும் மோவாயும் அவன் ஜாடை - பக்கத்தில் அமைதியாக நின்றுகொண்டு இவரைப்பார்த்து மரியாதை கலந்த புன்னகை அளித்தான்.

இவர் செபாஸ்டியனைப் பார்த்து இன்னொரு உறுமல். இப்போது அந்த சோல்ஜரிடம் சென்றார்.

"யாரு பேஷண்ட், அப்பாவா?"

இவரே எதிர்பார்க்காமல் ஒரு சல்யூட் அடித்து ராணுவக் குரலில் "யெஸ் ஸார்" என, சிலர் சிரித்தார்கள்.

இன்னொரு உறுமல் அனைவரும் அடங்கினர்.

தளர்ந்து கிட்டத்தட்ட அரைக்கண் மூடிய நிலையில் தன் மகன் மேல் சாய்ந்திருந்த பெரியவரைப் பார்த்தார்.

செபஸ்டியனிடம் "இவரை அந்த நாற்காலியில் உட்கார வை. நீ பக்கத்திலேயே இரு!"

சோல்ஜரிடம் பேசினார்.

"வாங்க என்னோட!"

இரண்டாம் மாடியில் தன் அறையில் சோல்ஜருடன் நுழைந்தபோது பியூலா கம்ப்யூட்டரில் ஏதோ நிரடிக்கொண்டிருந்தாள்.

"பியூலா! முதல் மாடியில செபாஸ்டியனோட பெரியவர் ஒருத்தர் நிக்கறார். அவினாஷ்ட்ட சொல்லி அவர அட்டெண்ட் பண்ணச்சொல்லு! வாங்க சோல்ஜர்!"

அறைக்குள் நுழைந்து பையை சைடுடேபிள் மேல் வைத்து, பின்பக்கம் திரும்பி ஸ்ரீரங்கநாதர் படத்தைச் சேவிப்பதுபோல ஒரு சைகை காட்டிவிட்டுச் சுழல் நாற்காலியில் உட்கார்ந்தார்.

"உக்காருங்க!"

"சார் எம்பேரு சரவணன்! ASI-CRPF சார்! த்ரீ ராங்க் ஷெவ்ரான் ஹவில்தாருக்கு சமம்!"

"என்ன கம்ப்ளெயிண்ட் அப்பாவுக்கு?"

"நான் செங்கல்பட்டுலேர்ந்து வரேன் சார்! அப்பாவுக்கு லிவர் ஃபெய்ல்யூர்னு அங்கித்து டாக்டருங்க சொன்னாங்க! இங்க ஜி ஹெச்சுக்கு வரச்சொன்னாங்க! லெட்டர் குடுத்துவுட்ருக்காய்ங்க!"

"கொண்டாங்க!"

வாங்கிப் படித்தார்.

"க்ரானிக் லிவர் ஃபெய்ல்யூர்!"

"என்னங்க?"

"அப்பாவோட லிவர் மொத்தமா டேமேஜ் ஆகியிருக்கே! என்ன வேலை செஞ்சார்? அதிகம் குடிப்பாரோ?"

"இல்லீங்க! குடிப்பழக்கமெல்லாம் கிடையாது! அவர் வெவசாய நெலத்துல வேலை செய்வார். செங்கல்பட்டு டாக்டருங்க சொன்னாங்க! அதான் இங்க வந்தேன்!"

"சரி, இருப்பா! பியூலா?"

"எஸ் புரொஃபசர்?"

"ஹெபடாலஜிஸ்ட் இன்னிக்கு ட்யூட்டி யாருன்னு பாரு! வரச்சொல்லு! ரைட் நௌ! அண்ட் பியூலா, நம்ம சரவணனுக்கு ஒரு டீ சொல்லு!"

"இல்லீங்க டாக்டர்! நான் டீ காபி சாப்டறதில்ல!"

"குட்! ஆமா எங்க டியூட்டி? இப்ப அப்பா உடம்புக்காக லீவுல வந்தீங்களா?"

"ஆமா! இல்லைங்க!"

என்னப்பா சொல்றே ஆமாவா இல்லியா?"

மோகனமாகச் சிரித்தார்.

"சாரிங்க! எனக்கு டியூட்டி காஷ்மீர்ல கங்கன்னு ஒரு எடம். கிராமம்தான் சார், புல்வாமா டிஸ்ரிக்ட்டுல எனக்கு ரெகுலர் டியூட்டி. ஆனால் ரெண்டாயிரத்துப் பதினாறுல புர்ஹான் வாலி செத்தாருங்களே அந்த ஆபரேஷன் கால்ம் டவுன்னுட்டு அதுக்கு போயிருந்தேங்க!"

"நெறைய சேதமோ?"

"ஆமாங்க! தொண்ணூறு சிவிலியன் செத்தாங்க, பல செக்யூரிட்டி போலீஸுங்களும் எறந்தாங்க. மூணு மாசம் அந்தப்பகுதியே ரொம்ப பதட்டமா இருந்ததுங்க! நீங்கள்ளாம் பேப்பருல படிச்சிருப்பீங்க."

"அடேயப்பா! ரொம்ப ஆபத்தில்லையோ?"

"நம்ம நாடாச்சுங்களே, பாதுக்காக வாணாவா? ஆபத்தெல்லாம் பார்த்தா உள்ள பூந்துடுவாங்க சார்! அப்ப எங்க நிம்மதியா வாழ முடியும்!"

பெரியவரின் முகத்தில் உண்மையான பாராட்டு தெரிந்தது.

"யெஸ், யூ ஆர் ரைட். அப்பாவுக்காக லீவுல வந்தியா?"

"ஒரு மாசம் ரெகுலர் லீவுல வந்தேங்க! போன வாரம்தான் அப்பா வலி வலின்னு துடிச்சாரு! அதான் செங்கல்பட்டு ஆஸ்பத்திரிக்கு இட்டுட்டு போனேன். டெஸ்டெல்லாம் எடுத்தாங்க! லிவர் ரொம்ப டேமேஜ் ஆயிடுச்சுப்பா, நீ சென்னையில ஜிஹெச்சுக்குப் போன்னுட்டு லெட்டர்லாம் தந்தாங்க!"
"படிச்சேன் படிச்சேன்!"

அவினாஷும் ஹெபடாலஜிஸ்ட் அரவிந்தும் வந்துவிட்டனர்.

"இந்த பேப்பர்ஸ், ரிப்போர்ட்ஸ் படிங்க!"

இருவரும் படிக்க, பெரியவர் கண்களை மூடிக்கொண்டிருக்க, சரவணன் ஒருவித கலக்கத்துடன் பார்த்துக்கொண்டிருந்தான்.

"என்ன ப்ரோக்னோஸிஸ்?"

அரவிந்த தயக்கமில்லாமல் சொன்னார்.

"அப்டமினல் பெயின், அரிப்பு, டார்க் யூரின் கலர், மஞ்சள் ஸ்கின்… சிம்ப்டம்ஸ் ரொம்ப தெளிவா இருக்கே புரொஃபசர்!"

அவினாஷ் புகுந்தான்.

"லிவர் ஃபெயில்யுர்! அக்யூட்டா இல்ல க்ரோனிக்கான்னு பாக்கணும்!"

"க்ரோனிக்தான்! லிவர்ல ஸ்காரிங்குன்னு ரிப்போர்ட் சொல்றதே! அரவிந்த்?"

"சாராயமா புரொஃபசர்?"

"இல்ல இல்ல! விவசாயி! அதனால கெமிக்கல்ஸ் சுவாசிச்சதுனால இருக்கலாம்!

"பல வருஷங்களா உள்ள போயிருக்கணும்! லெவல் ஆஃப் க்ரானிக் ஸ்டேட் பாரு! பைல் டக்ட் சுத்தமா பாதிச்சிருக்கு!"

"பைலரி சிர்ரோஸிஸ்!"

"வயசு வேற அறுவத்தஞ்சு! டிரான்ஸ்ப்ளாண்ட் பண்ணியாகணும் புரொஃபசர்!"

பெரியவர் சரவனணனிடம் ஆதுரத்துடன் பேசினார்.

"த பாருங்க சரவணன்! உங்கப்பாவுக்கு கல்லீரல் முழுசுமா பாதிச்சிருக்கு. அதனால வேற லிவர் வெக்கணூம்! அதான் லிவர் டிரான்ஸ்ப்ளாண்ட்ன்னுவாங்களே!"

"அய்யோ செலவாகுங்களா ரொம்ப?"

"சரவணன்! இல்ல இல்ல நீ ஆர்மிப்பா! உனக்கு நாங்க செலவு வைப்போமா? ஒரு செலவும் ஆகாது!"

"அப்பாவோட உயிருக்கு ஆபத்துங்களா?"

"இப்படியே விட்டா ரொம்ப நாள் தாங்காதுப்பா. டிரான்ஸ்ப்ளாண்ட் பண்ணித்தான் ஆகணும்!"

"எனக்கு இன்னும் ஒரு வாரந்தானே லீவ் பாக்கி இருக்கு! இப்ப இருக்கற நெலமையில லீவ் கெடைக்காதுங்களே!"

"அதெல்லாம் நீ ஏன் கவலைப்படறே? நாங்க எல்லாத்தையும் பாத்துக்கறோம். நீ கவலைப்படாம ஊருக்குப்போ. நா உனக்கு செய்தி அனுப்பறேன்! ஆமா, இங்க யார்னா உறவுக்காரங்க இருக்காங்களா?"

"அப்பாரோட தங்கச்சி, அதான் என் அத்தை இங்க சென்னையில இருக்காங்க டாக்டர்!"

"நாளைக்கு அவங்கள அழைச்சிட்டு வா. அப்பாவை இன்னிக்கே அட்மிட் பண்ணிக்கறேன்! ஆமா அவங்க வீடு எங்க சென்னையில?"

"வால்டாக்ஸ் ரோடுங்க!"

"நல்லது! பக்கத்துலதான்! நீ தைரியமாப்போ சரவணா! நீ எங்களுக்காக அங்க பார்டர்ல கஷ்டப்படறே! உனக்காக நாங்க இதக்கூட செய்ய மாட்டோமா?"

"டாக்டர்! நான் டியூட்டில இருக்கற எடம் ரொம்ப தொலவுங்க! ஒரு அவசரத்துக்கு என்னை காண்டாக்ட் பண்ணக்கூட முடியாதுங்களே! அதான் கவலையா இருக்கு?"

"அதெல்லாம் நா பாத்துக்கறேன்! நீ கவலையே படாத போய் வா!"

சரவணன் நன்றியுடன் டாக்டரை வணங்கிவிட்டு எழுந்து போக பெரியவர் வாத்ஸல்யத்துடன் சொன்னார்.

"போய் அப்பாவைப்பார்த்து பேசிட்டு போ சரவணா!"

அடுத்த நிமிடம் இங்கே பெரியவரின் தோரணையே ஸ்விட்ச் போட்டாற்போல் மாறியது.

பியூலா! டிபார்ட்மெண்ட் ஹெட்ஸ் எல்லாரையும் கூப்பிடு! கான்ஃபரன்ஸ் ரூமுக்கு வரச்சொல்லு."

"எத்தனை லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் கேஸ் வெய்ட்டிங்?"

ஹெப்பாட்டைடிஸ் தலைவர் பேசினார்

"மூணு பேர் புரொஃபசர்!"

"டோனார்ஸ்?"

"ஒர்த்தர்கூட இல்ல!"

"மத்த ஹாஸ்பிட்டல்ல நெலமை?"

"திருச்சில ஒண்ணு வெய்ட்டிங், மதுரைல ஒண்ணு! ஆனா எங்கியும் டோனர்ஸ் இல்ல!"

"டோமினோ லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் சான்ஸ் இருக்கா?"

"சாரி புரொஃபசர்! அமிலாய்டோஸிஸ் கேஸும் இல்லியே!"

"ஓகே! லெட் மீ ஸீ! அரவிந்த்! பெரியவர ட்ரான்ஸ்ப்ளாண்ட்டுக்கு ரெடி பண்ணு!"

மீண்டும் அறைக்குள் வந்தவுடன் பியூலாவைக்கூப்பிட்டார்.

"சீஃப் மினிஸ்டர் ஆஃபீஸுக்கு ஃபோன் பண்ணு!"

"வணக்கம் மாணிக்கம்! நா……!"

"தெரியும் புரொஃபசர் சொல்லுங்க! தலைவர்ட்ட பேசணுமா?"

"நோ நோ! அவர தொந்தரவு பண்ண வேண்டாம்!"

"தொந்தரவா? நீங்க ஃபோன் பண்றீங்கன்னா ஏன் என்கிட்ட கொடுக்கலைன்னு என்னைச் சாடுவாரு."

"எனக்கு உங்ககிட்டதான் ஒரு ஹெல்ப் வேணும்!"

"சொல்லுங்க புரொஃபசர்!"

"அர்ஜெண்ட்டா ஒரு லிவர் டோனர் வேணும்! என் கேஸோட MELD ஸ்கோர் கிட்டத்தட்ட 36. நம்ம கவர்ன்மெண்ட் ஆஸ்பிட்டல்ல டோனரே இல்ல! அதனால நீங்க மெர்க்குரி இல்லைன்னா காஸ்மோ ஹாஸ்பிட்டல்ல பேசி லிவர் டோனர் எனக்கு ப்ரியாரிட்டில கொடுக்கச் சொல்லணும்."

"உடனே பேசறேன் புரொஃபசர். போன வாரங்கூட மெர்க்குரி சேர்மன் நம்ம சியெம்மப் பார்க்க வந்திருந்தாரு. ஏதோ ஹெல்த் இன்ஷூரன்ஸ் பத்தி கேட்டாரு."

"தேங்க் யூ மாணிக்கம்!"

"அய்யோ நீங்க போய் தாங்க்ஸெல்லாம் சொல்லிட்டு... இவளோ அர்ஜெண்ட்டா கேக்கறீங்கன்னா யாரோ பெரிய விஐபியாத்தான் இருக்கணும்."

"ஆமா முக்கியமான ஆசாமிதான்! நாட்டுக்கு முக்கியமான ஆசாமி."

மெர்க்குரி ஹாஸ்பிட்டல்ல டோனர் இல்லாததும் காஸ்மோவில் ஒரு டோனர் இருந்ததும் ஆனால் அவர் ஒரு அரபு நாட்டு ஷேக்கிற்காக ரிசர்வ் செய்யப்பட்டிருந்ததும், அவரின் MELD ஸ்கோர் இருபதுகூட இல்லை என்பதாலும் முதன்மந்திரி ஆஃபீசிலிருந்து வந்த ஆர்டரினாலும் அந்த டோனர் ஜிஹெச்சுக்கு அனுப்பப்பட்டதும் வெறும் விவரங்கள்.

இன்னொரு காலை.

"அரவிந்த்! பேஷண்ட் எப்படி இருக்காரு?"

"நல்லா இருக்காரு புரொஃபசர்! அபார முன்னேற்றம்!"

"என்ன இம்யுனோ சப்ரெஸண்ட்ஸ் குடுத்திருக்கீங்க?"

"ஸைக்ளோஸ்பிரின் புரொஃபசர்!"

"நோ! டாக்ரோலிமஸ் போடுங்க! அதுதான் பெட்டெர்னு ப்ரூவ் ஆயிருக்கு! டையட் சொல்லிட்டீங்களா? சக்கரை, உப்பு எல்லாம் குறச்சலா இருக்கணூம்! லோ கொலஸ்ட்ரால். திராட்சைப்பழமே கூடாதுன்னு சொல்லு. கால்ஷியம் அண்ட் பாஸ்ஃபரஸ் நெறைய குடுக்கணூம்."

"சரி புரொஃபசர்!"

"குட்! போஸ்ட் ஆபரேடிவ் இன்ஸ்டிரக்‌ஷன்ஸ் எல்லாம் குடுத்தாச்சா?"

"நீங்க சொன்னா மாதிரி முழுநேர நர்ஸ் போட்டாச்சு. கூட இருக்கற அவரோட தங்கைக்கு எப்படியெல்லாம் பாத்துக்கணும்னு டிரெய்னிங் தர்ராங்க."

"அது மட்டும் போறாது! வீடு இங்க வால்டாக்ஸ் ரோடுலதான்! அவர் டிஸ்சார்ஜ் ஆனதும் ரெண்டு வாரத்துக்கு மூணு வேளையும் நர்சிங் அட்டெண்டர் அனுப்பிடு, அதுக்கான சார்ஜ் நானே தரேன்!"

"டாக்டர்! எல்லா நல்ல காரியங்களும் நீங்க மட்டுமே செய்யணுமா? நாங்களூம் சேர்ந்துக்கறோமே?"

"ஓகே! மோர் தி மெர்ரியர்!"

இப்போது பியூலா பெரியவரை நெருங்கினாள்.

"என்ன பியூலா? என்ன கவர்?"

"என்னோட காண்ட்ரிப்யூஷன் புரொஃபசர்!"

ஒரு கணம், ஒரே ஒரு கணம் பெரியவர் முகத்தில் இளகின பார்வை. அடுத்த கணம் கூர்மை.

"பியூலா! எனக்கு டெல்லியில சேனா பவன்னு ராஜாஜி ரோடுல ஆஃபீஸ் இருக்கே அங்க லைன் போட்டுத் தா!"

"இண்டியன் ஆர்மி ஹெட்குவார்ட்டர்ஸ்! சேனா பவன்?"

"மேஜர் ஜெனெரல் ஷெகாவத்துடன் பேச முடியுமா?"

"எம்ஜி இப்போதுதான் கேம்ப்பிலிருந்து திரும்பினார். முக்கிய மீட்டிங்கில் இருக்கிறார்!"

"நான் டாக்டர் வைகுண்டம் சென்னையிலிருந்து என்று சொல்லுங்கள்!"

"டாக்டர் வேகுண்ட…"

"வைகுண்டம்! டாக்டர் வைகுண்டம்!"

"டீக் ஹை ஜி!"

இந்திய நாட்டின் பாதுகாப்பையே நிர்ணயிக்கும் பல பெரிய தலைகள் மிக முக்கியமாகப் பேசிக்கொண்டிருந்த அறைக்கதவைத் தயங்கினபடி திறந்து ஒரு ஆர்டர்லி உள்ளே நுழைய, தலைமை நாற்காலி ஷேகாவத் பேசுவதை நிறுத்தினார். முகத்தில் கடுகடுப்பு.

"க்யா ஹை? க்யோன் இத்னா ஜல்தி? மீட்டிங் சல் ரஹா ஹை நா! குப்தா! அவனை வெளியே போகச்சொல்!"

அதற்குள் அந்த ஆர்டர்லி குப்தாவை நெருங்கிக் காதில் சொன்னான்.

"மேஜர் ஜெனெரல்! யாரோ டாக்டர் வைகுண்டமாம். உங்களுக்கு கால். சென்னையிலிருந்து?"

"ஓ டாக்டர் வைகுண்டம்?சென்னை? அவர் எனக்கு யாரோ இல்லை! கனெக்ட் ஹிம் க்விக்! சாரி ஜெண்டில்மென்! இந்த ஃபோன் நான் பேசியே ஆகவேண்டும்!"

"ஹலோ டாக்டர்ஜி! ஆப் கைஸே ஹைன்?"

"……………………"

"ஹான்! மாஜி ஈஸ் ஃபைன்! வெரி ஃபைன்! எல்லாம் உங்களுடைய மருத்துவத்தால்தானே!"

"…………………………"

அடுத்த சில நிமிடங்களுக்கு அந்தப்பக்க பேச்சை உன்னிப்பாகக் கேட்டார். முன் இருந்த பேப்பரில் ஏதோ எழுதிக்கொண்டார். ஃபோனை வைத்தவுடன் தனக்கு அடுத்திருந்த பிரிகேடியரிடம் பேசினார்.

"இப்போது புல்வாமா பேஸ் CRPFF யாரு?"

"ஸ்பெஷல் டைரக்டர் ஜெனெரல் ராஜிவ் ராய் பட்நாகர்!"

"ஓகே! பட்நாகர் கோ ஃபோன் மெ கனெக்ட் கர்தீஜியே! அபி!"

"பட்நாகர்! நான் மேஜர் ஜெனரல் ஷெகாவத் நீங்கள் எனக்கு ஒரு உபகாரம் செய்யவேண்டும். உங்களின் ஆஃபீசர் ஒருவரை கங்கன் கிராமத்துக்கு அனுப்பி அங்கே போஸ்டிங்கில் இருக்கும் ASI சர்ரவண..ம்..யெஸ்.. சரவணனுக்கு ஒரு மெசேஜ் சொல்லணும்! அவனுடைய அப்பாவுக்கு லிவர் ட்ரான்ஸ்ப்ளாண்ட் வெற்றிகரமாக முடிந்துவிட்டது. அவர் நலமாக இருக்கிறார். இன்னும் ஐந்து வருடம் அவரின் உயிருக்கு உத்திரவாதம் உண்டு. இதுதான் மெசேஜ். உங்களின் ஆஃபீசர் இந்த மெசேஜைத் தனிப்பட்ட முறையில் சரவணனுக்கு தெரிவிக்க வேண்டும். அவர் திரும்பி வந்ததும் எனக்கு ஃபோன் செய்து விடுங்கள்!"

"டாக்டர் வைகுண்டம்! இன்க்ரெடிபிள்!"

மேஜர் ஜெனெரல் ஷெக்காவத் முணுமுணுத்துவிட்டு உடனே உறுமினார்.

"சைலன்ஸ் பாய்ஸ்! கெட் பேக் டு தி மீட்டிங்!"

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் புல்வாமா பிளாக்கில் தரைக்கு 1588 அடி உயரத்தில் இருக்கும் கங்கன் கிராமத்தில் மைனஸ் 3.6 டிகிரி குளிரில் அந்த மத்தியான வேளையில் டியூட்டி பார்த்துக்கொண்டிருந்த CRPF அஸிஸ்டண்ட் சப் இன்ஸ்பெக்டர் சரவணன், ஒரு பெரிய வண்டி வந்து நிற்பதையும் அதிலிருந்து அவனைவிடப் பல ராங்குகள் உயர்ந்த ஆஃபீசர் ஒருவர் தன்னை நோக்கி வருவதையும் சற்றே திகிலுடன் பார்த்தான்.

ஜெ. ரகுநாதன்,
சென்னை
More

ஏடெல்வைஸ் என்றொரு பூ
Share: 




© Copyright 2020 Tamilonline