Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி விவேகானந்தர்
- பா.சு. ரமணன்|ஜூன் 2020|
Share:
(பகுதி - 4)

கேளாரும் வேட்ப...
அமெரிக்க இதழ்கள் சுவாமி விவேகானந்தரைக் கொண்டாடின. எங்கு திரும்பினாலும் விவேகானந்தரின் புகழ்தான். நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும் அவரது புகைப்படங்கள், பேட்டிகள் வெளிவரத் தொடங்கின. இதனால் பிற நாடுகளிலும் விவேகானந்தரின் புகழ் பரவத் தொடங்கியது. சொற்பொழிவுக் குழு ஒன்றின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட சுவாமிகள், பாஸ்டன், புரூக்லின், மின்யாபொலீஸ், டெட்ராய்ட், பால்டிமோர், மேடிசன், அயோவா, கேம்ப்ரிட்ஜ், வாஷிங்டன், நியூ யார்க் எனப் பல இடங்களுக்கும் பயணம் செய்து, இந்து மதத்தின் தத்துவங்களையும், பெருமையையும் பரப்பினார். அவரைக் கற்றோரும் மற்றோரும் தேடிவந்தனர். வேதாந்த உண்மையினை விளக்கவும், அதன் தத்துவத்தை அமெரிக்காவில் பரப்பவும் விவேகானந்தர் அமெரிக்கா முழுவதும் சுற்றுப் பயணங்களை மேற்கொண்டார். 'இந்திய வேதாந்த சங்கம்' என்ற அமைப்பை நிறுவினார். அடுத்து ஐரோப்பாவுக்கும் பயணம் சென்றார். லண்டன், பாரிஸ், இங்கிலாந்து, ஜெர்மனி, ஸ்விட்சர்லாந்து எனப் பல நாடுகளுக்கும் சென்று சொற்பொழிவாற்றினார். இவ்வாறாகப் வெற்றிகரமாகத் தனது சொற்பொழிவுகளை நிகழ்த்தியவர், இந்தியா திரும்பும் நோக்கில் 1896 டிசம்பர் 30 அன்று நேப்பிள்ஸ் நகரிலிருந்து கொழும்பு நோக்கிக் கப்பலில் புறப்பட்டார்.

கொழும்பு மாநகரில் சுவாமி விவேகானந்தர்
ஜனவரி 15 அன்று கொழும்பு நகரை அடைந்தார் சுவாமி விவேகானந்தர். அது இலங்கைத் தமிழர்களுக்குப் பொங்கல் வாழ்த்தாக அமைந்தது. ஏனெனில் அன்றுதான் பொங்கல் திருவிழா. சுவாமிகளை வரவேற்கச் சகோதர சீடரான நிரஞ்சனானந்தர் இந்தியாவிலிருந்து வந்திருந்தார். சுவாமிகளுக்கு மிகச்சிறந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அவர் ஊர்வலமாக விழா மேடைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கௌரவிக்கப்பட்டார். தன்னைப் போன்ற ஒரு சாதாரண சந்நியாசிக்கு மக்கள் அளித்த மகத்தான வரவேற்பு அவரது உள்ளத்தை உருக்கியது. இலங்கையில் சில நாட்கள் தங்கிய அவர் கண்டி, யாழ்ப்பாணம், அனுராதபுரம் உட்படப் பல பகுதிகளுக்கும் சென்று சிறப்புரையாற்றினார். மக்களுக்கு காலத்துக்கு அப்பாற்பட்ட வேதாந்த உண்மைகளை போதித்தார். ஊக்கத்துடன் செயலாற்றும்படி அறிவுரை கூறினார். பின் இந்தியா புறப்பட்டார்.

மீண்டும் தாயகம்
ஜனவரி 20ம் நாளன்று ராமேஸ்வரத்தில் உள்ள பாம்பன் துறைமுகத்தை வந்தடைந்தார் சுவாமி விவேகானந்தர். அவரை ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார். சுவாமிகளை ஒரு ரதத்தில் அமரவைத்து, குதிரைகளுக்குப் பதிலாக தானே தன் அதிகாரிகளுடன் சேர்ந்து அரண்மனைவரை வண்டியை இழுத்துச் சென்றார் மன்னர். மன்னர் மாளிகையில் மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அனைத்தும் தன் குருநாதரின் அருளே என்றும், வலிமைமிக்க ஒன்றுபட்ட இந்தியாவை உருவாக்குவதே தனது லட்சியம் என்றும் சுவாமிகள் தனது ஏற்புரையில் கூறினார். பாஸ்கர சேதுபதி மன்னருடன் அரண்மனையில் தங்கினார். அதன் பின் ராமேஸ்வரம் சென்று ராமநாதரை வழிபட்டார். அங்கு சில நாட்கள் வரை மன்னரின் விருந்தினராக இருந்த விவேகானந்தர், பின் பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, மதுரை, கும்பகோணம் எனப் பல இடங்களுக்கும் பயணம் செய்து, சொற்பொழிவுகள் செய்து, இறுதியில் 1897 பிப்ரவரி மாதம் 6ம் தேதி சென்னையை வந்தடைந்தார்.

சென்னையில்...
சென்னை அன்பர்கள் அவருக்கு மிகச் சிறந்த வரவேற்பு அளித்தனர். அதற்குமுன் யாருக்குமே அளித்திடாத வரவேற்பாக அது அமைந்தது. எழும்பூர் ரயில் நிலையம் முதல் சுவாமிகள் தங்க இருந்த கேஸில் கெர்னன் மாளிகை வரை தோரணங்கள், அழகு வளைவுகள், மலர் அலங்காரம் எனக் கோலாகலமாக இருந்தது. எழும்பூர் ரயில் நிலையத்தில் பாண்டு வாத்தியம் முழங்க, வாழ்த்துக் குரல் எழுப்பி, மலர்மாலை அணிவித்து, பூக்கள் தூவி மக்கள் மிகச்சிறந்த வரவேற்பு அளித்தனர். பின்னர் வெண்ணிறக் குதிரைகள் பூட்டிய சாரட் வண்டியில் சுவாமிகள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டார். வழியெங்கும் சுவாமிகளைப் பலர் தெய்வ அவதாரமாகவும், மகானாகவும் வழிபட்டனர். பல இடங்களில் அவர் தடுத்தும் கேளாமல் அவருக்குக் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. மாலைகள் சூட்டப்பட்டன. ஊர்வலம் கடற்கரைச் சாலையை அடைந்த போது ஆர்வமிக்க இளைஞர்களும் மக்களும் குதிரைகளை அவிழ்த்துவிட்டுத் தாமே ரதத்தை இழுத்துச் சென்றனர். ஊர்வலம் தற்போது விவேகானந்தர் இல்லம் என அழைக்கப்படும் அப்போதைய கேஸில் கெர்னன் மாளிகையை அடைந்தது.

அங்கு சுவாமிகளை வரவேற்க அளசிங்கர், பாலாஜி ராவ், சிங்காரவேலு முதலியார் ஆகியோருடன் சென்னையின் முக்கிய மனிதர்களாக விளங்கிய கிருஷ்ணசாமி ஐயர், பாஷ்யம் ஐயங்கார், பேராசிரியர் ரங்காச்சாரி, சேஷாச்சாரி, டாக்டர் நஞ்சுண்ட ராவ், பி.ஆர். சுந்தரம் ஐயர் ஆகியோரும் காத்திருந்தனர். அனைவரும் சுவாமிகளை வரவேற்றனர். நீதிபதி சுப்ரமண்ய ஐயர் வரவேற்புக் குழுவின் தலைவராக இருந்தார். கர்னல் ஆல்காட், பரோஸ் போன்றவரும் வரவேற்புக் குழுவில் அங்கம் வகித்தனர். கிட்டத்தட்ட ஒன்பது நாட்கள் சுவாமிகள் அம்மாளிகையில் தங்கியிருந்தார்.
சென்னையில் பல முக்கியமான சொற்பொழிவுகளை விக்டோரியா ஹால், பச்சையப்பர் ஹால் போன்ற இடங்களில் நிகழ்த்தினார். குறிப்பாக 'எனது பிரசாரத்தின் திட்டம்', 'இந்தியாவின் ரிஷிகள்', 'இந்திய வாழ்க்கையில் வேதாந்தத்தின் பயன்பாடு', 'இந்தியாவின் எதிர்காலம்', 'நம் முன்னே இருக்கும் பணி' போன்ற அவரது சொற்பொழிவுகள் பெருத்த வரவேற்பைப் பெற்றன. திருவல்லிக்கேணியில் புகழ்பெற்று விளங்கும் பார்த்தசாரதிப் பெருமாள் ஆலயத்திற்குச் சென்று வழிபட்ட சுவாமி விவேகானந்தர், பிப்ரவரி மாதம் 18ம் தேதி கல்கத்தாவிற்குப் புறப்பட்டார்.



கல்கத்தாவில்...
அங்கும் அவருக்குச் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு நடந்த நிகழ்ச்சி ஒன்றில் சுவாமி விவேகானந்தர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு உரை நிகழ்த்தினார். அவர் தன் உரையில், “என் சகோதரர்களே! உங்கள் முன் நிற்கும் நான் ஒரு மதபோதகனோ துறவியோ அல்ல. நீங்கள் எப்பொழுதும் அறிந்திருந்த அதே கல்கத்தா நகரத்தின் சிறுவன்தான் நான். இந்த அளவிற்கு நீங்கள் பாராட்டுவதற்கெல்லாம் காரணம் என் ஆசான், என் எஜமானர், என் குருநாதர், என் தெய்வம் ராமகிருஷ்ண பரமஹம்சர்தான்” என்று நன்றியுடன் புகழ்ந்துரைத்தார். பின் இளைஞர்களை நோக்கி, “என் பாரத தேசத்து இளைஞர்களே, நாம் வாழ்வதன் அடையாளம் விரிவடைவதே! நாம் வெளியுலகில் சென்று, விரிந்து, வாழ்ந்து காட்ட வேண்டும். அல்லது தாழ்ந்து, புரையோடி மடிய வேண்டும். எழுமின், விழிமின், வெற்றிக்கான தருணம் இதுவே!” என்று அறைகூவல் விடுத்தார். “துணிந்து நில்லுங்கள், எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் உங்களிடம் இருக்கிறது, அஞ்சாதீர்கள், நீங்கள் வெறும் மனிதர்கள் அல்ல. சாதிக்கப் பிறந்தவர்கள். செயலாற்றப் பிறந்தவர்கள். ஆகவே எதுவுமே செய்யாமல் சோம்பி இருக்காதீர்கள். நீங்கள் வளர வேண்டியவர்கள். தெய்வீகத் தன்மை உடையவர்கள். அதை மறவாமல் செயல்படுங்கள்” என இளைஞர்களுக்கு அறைகூவல் விடுத்தார்.

சகோதரி நிவேதிதா
விவேகானந்தரின் பேச்சால் ஈர்க்கப்பட்ட சகோதரி நிவேதிதா அவரை நாடி வந்து சரணடைந்து அவரது முக்கியச் சீடர்களுள் ஒருவரானார். அக்காலகட்டத்தில் விவேகானந்தர், சக சீடர்களுடன் பேலூர் மடத்தில் தங்கி இருந்தார். வாரம் ஒருமுறை அவரைச் சென்று சந்திப்பார் நிவேதிதை. தாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிப்பார். திட்ட முன்வரைவைத் தயாரிப்பார். பின் வேதாந்த, ஞான நூல்கள், தர்க்க சாஸ்திரம் ஆகியவற்றை விவேகானந்தரிடம் கற்பார். பின் தானறிந்த விஞ்ஞான, பௌதீக நூல்கள் பற்றி மற்ற இளந்துறவியருக்கும் சீடர்களுக்கும் பாடம் நடத்துவார். மடத்திற்குத் தேவையான பல பணிகளை மேற்கொள்வார். இப்படியாக அவரது வாழ்க்கை கழிந்து கொண்டிருந்தது.

அந்தச் சமயத்தில் கல்கத்தாவில் மிகக் கொடுமையான பிளேக் நோய் பரவியது. மக்கள் ஏராளமாக மடிந்தனர். இந்த நோய் நீங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெறவும், சக சீடர்களும் நிவேதிதையும் மிகக் கடுமையாக உழைத்தனர். சுவாமி விவேகானந்தரும் களப்பணியாற்றினார். சீடர் குழுவினருக்கு நிவேதிதையே தலைமையேற்று வழி நடத்தினார். அதிகாலையில் எழுந்து, நள்ளிரவுவரை, ஓயாமல் சிறப்பான முறையில் சேவை செய்து அனைவது பாராட்டையும் பெற்றார். அது கண்டு மகிழ்ந்த விவேகானந்தர், “சக்திகள் அனைத்தும் உன்னிடம் வந்து சேரட்டும்! ஜகன்மாதாவே உனது கைகளும் மனதும் ஆகட்டும்! உனக்காக நான் வேண்டுவது அளப்பறிய, யாராலும், எதனாலும் எதிர்க்க இயலாத பேராற்றல் - அத்துடன் பேரமைதி. என்னை வழி நடத்தியது போல குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உன்னையும் வழி நடத்தட்டும். இல்லை... ஆயிரம் முறை அதனினும் மேலாக அருள் புரியட்டும்!” என்று வாழ்த்தி ஆசிகூறினார்.

மீண்டும் மேலை நாடுகளில்...
உலகத்தின் மிக உயரிய உண்மைகளைத் தன்னுள் அடக்கிய வேதாந்தத்தை மேலும் உலகறியச் செய்யும் நோக்கில் சுவாமிகள் மீண்டும் லண்டன் சென்றார். அங்கு பல சொற்பொழிவுகள் ஆற்றினார். மீண்டும் அமெரிக்காவில் இருந்து அழைப்பு வரவே அங்கு சென்றார். பிரபலமானவர்கள் பலர் விவேகானந்தரைத் தேடி வந்து சந்தித்தினர். அவரது அறிவுத்திறன் கண்டு வியந்தனர். பல இடங்களிலும் சொற்பொழிவாற்றினார் சுவாமி விவேகானந்தர். ஆனால், ஓய்வற்ற உழைப்பின் காரணமாக அவருக்குத் திடீரென்று உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மெல்ல மெல்ல அதிலிருந்து மீண்டார். தான் நிறுவிய வேதாந்த சங்கத்தின் செயல்பாட்டைக் கண்டும், அதன் வளர்ச்சியைக் கண்டும் மிக்க மகிழ்ச்சி அடைந்தார். தினந்தோறும் அங்கு சொற்பொழிவாற்றினார். மாலை நேரத்தில் மாணவர்களின் கேள்விகளுக்குப் பதில் அளித்தார்.

அங்கிருந்தபோது ஒருநாள் தியானத்தில் அவருக்குச் சில உண்மைகள் உணர்த்தப்பட்டன. தான் வெகுநாள் இந்த உலகில் இருக்கப் போவதில்லை என்பதையும், சில ஆண்டுகளில் மரணம் தன்னைத் தழுவிக் கொள்ளும் என்பதையும் அவர் உணர்ந்தார். அதனைத் தன்னுடன் வந்திருந்த சக சீடரான அபிதானந்தரிடம் தெரிவித்தார். தான் ஆற்றவேண்டிய பணிகள் நிறைய உள்ளன என்றும், அதனை வெகு சீக்கிரமாக முடிக்கவேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். “நாளுக்கு நாள் பிரம்மாண்டமாக விரிவடைந்துகொண்டு வரும் என் ஆன்மாவை என்னால் வெகு நாட்களுக்கு இந்த உடற்சிறையில் தங்கவைக்க முடியாது” என்றும் அவர் தெரிவித்தார்.

பின் அன்பர்களின் அழைப்பை ஏற்று பிரான்ஸ், பாரிஸ், வியன்னா, கான்ஸ்டான்டிநோபிள், ஏதென்ஸ், எகிப்து போன்ற நாடுகளுக்குச் சென்று சொற்பொழிவாற்றினார். பாரதத்தின் பண்டைச் சிறப்பை, கிரேக்கத்தைவிடப் பழமையானதான சம்ஸ்கிருத இலக்கியங்களின் மேன்மையை அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

அதே சமயம் இந்தியாவிற்குத் திரும்ப வேண்டுமென்ற உள்ளுணர்வு அவருக்குத் தோன்றிக்கொண்டே இருந்தது. இறுதியில் இந்தியா திரும்புவதே சிறந்ததென்று தீர்மானித்து, நண்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு, 1900 நவம்பர் 26ம் நாள், எஸ்.எஸ். ரப்பாடினோ என்ற இத்தாலியக் கப்பலில் இந்தியாவிற்குப் புறப்பட்டார்.

(தொடரும்)

பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline