Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2020 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | சமயம் | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | பொது | சிறுகதை | வாசகர்கடிதம்
Tamil Unicode / English Search
அன்புள்ள சிநேகிதியே
இந்த நாள் இனிய நாள்!
- சித்ரா வைத்தீஸ்வரன்|ஜூன் 2020|
Share:
அன்புள்ள சிநேகிதியே,
(தொலைபேசி வழியாக ஒரு சிநேகிதி தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் கவலைபற்றிப் பேசினார். நீண்ட உரையாடல் என்பதால் சுருக்கிச் சொல்கிறேன். ஒரு பகுதியை அப்படியே உரையாடலாகக் கொடுத்திருக்கிறேன்.)

சிநேகிதி சமீபத்தில் ஓய்வுபெற்றவர். கணவர் இன்னும் வேலைக்குப் போய்க்கொண்டிருக்கிறார். இரண்டு பேரும் ப்ரொஃபஷனல்ஸ் அல்ல. நடுத்தர வர்க்கம். கஷ்டப்பட்டு ஒரு வீடு வாங்கியிருக்கிறார்கள். வீட்டுக்கடன் இன்னமும் பாக்கி இருக்கிறது. பெண் பெரியவள். அவளுக்குத் திருமணமாகி இரண்டு வருடம் ஆகிறது. தனக்குப் பிடித்தவன். வெள்ளை அமெரிக்கன். கல்லூரிக் காதல். இங்கேயே வேறு மாநிலத்தில் வசிக்கிறார்கள். பெண்ணின் திருமணத்தில் அவ்வளவு திருப்தியில்லை. மாப்பிள்ளை கொஞ்சம் கோபக்காரர் என்று நினைக்கிறார். பிள்ளை கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு வேறு மாநிலத்தில் இருக்கிறான். இப்போதுதான் வேலை பார்க்கப் போயிருக்கிறான். கோரோனா சூழலில் யாரும் யாரையும் பார்த்துக்கொள்ளவில்லை. பல மாதங்களாக.

கவலை: பெண் கருவுற்றிருக்கிறாள். ஆனால், அவள் குரலில் சந்தோஷம் தெரியவில்லை. அவளுக்கோ அல்லது அவள் கணவருக்கோ வேலை போயிருக்கலாம் என்று இவர்கள் கவலைப்படுகிறார்கள். இரண்டாவது, அந்தக் கணவன் தங்கள் பெண்ணைச் சரியாக நடத்தவில்லை என்று பயப்படுகிறார்கள். அவன் பண விஷயத்தில் மிகவும் சிக்கனமாம். இந்த கோவிட் நேரத்தில் இவர்களால் அங்கு போகமுடியவில்லை. பெண்ணுக்கு உதவுமளவுக்குப் பணமும் இல்லை. தவறான முடிவை எடுத்துவிட்டாள் என்ற வருத்தம். கணவருக்கு நீரிழிவு. கொரோனா வந்துவிடுமோ என்ற பயம். பையன் அடிக்கடி தொடர்பு கொள்வதில்லை. கேட்டால் 'பிஸி' என்கிறான். கேர்ள் ஃப்ரெண்ட் இருக்கிறாள் என்று சந்தேகம். வாழ்க்கையே பிரச்சனையாக இருக்கிறது.

நான்: மகனுடன் எப்போது பேசினீர்கள், நன்றாக இருக்கிறானா?

சிநேகிதி: போன திங்கட்கிழமை. அங்கு அதிகம் பிரச்சனை இல்லை என்றான்.

நான்: பெண் நன்றாக இருக்கிறாளா, எத்தனை மாதம்?

சிநேகிதி: தினமும் கூப்பிடுகிறேன். நன்றாக இருக்கிறாள். டாக்டரிடம் போய்விட்டு வந்தாள். டெஸ்ட் ரிசல்ட்ஸ் நன்றாக வந்தது.

நான்: வெரிகுட் நேற்று பேசினீர்களா?

சிநேகிதி: பேசினேன். கொஞ்ச நேரம்தான். அவன் ஏதோ கூப்பிட்டான் என்று பேச்சை கட் பண்ணிவிட்டாள். அப்பா, அம்மாவுடன் பேசக்கூட அவளுக்கு உரிமை இல்லை.

நான்: இங்கேதானே பிறந்து வளர்ந்தாள்? எத்தனை வயதில் கல்யாணம்?

சிநேகிதி: இப்போது அவளுக்கு 27 மூன்று வருஷம் முன்பு 24 வயதில்.

நான்: நீங்களும் உங்கள் கணவரும் நன்றாக இருக்கிறீர்களா?

சிநேகிதி: இதுவரை ஒன்றுமில்லை. வெளியில் போவதில்லை. ஜாக்கிரதையாக இருக்கிறோம்.

நான்: உங்களுக்கு பென்ஷன் வருகிறதா. Stimulus check வந்ததா?

சிநேகிதி: வந்தது
நான்: உங்கள் கணவர் சம்பளம்?

சிநேகிதி: வருகிறது

நான்: நாளைக்கு சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்ற பயம்?

சிநேகிதி: இல்லை.

நான்: பெரிய வீடா, அபார்ட்மெண்ட்டா?

சிநேகிதி: வீடுதான். ஆசைப்பட்டு பெரிதாய் வாங்கிவிட்டு, இன்னமும் மோர்ட்கேஜ் கட்டிக் கொண்டிருக்கிறோம்.

நான்: எப்படிப் பொழுதுபோகிறது?

சிநேகிதி: தோட்டத்தில் நிறைய பூச்செடி, காய்கறி போட்டிருக்கிறோம். டி.வி. பார்ப்போம். வாக் போவோம்.

நான்: டயாபடீஸ் தவிர வேறு ஏதாவது நோய் இருக்கிறதா?

சிநேகிதி: பெரிதாக ஒன்றும் இல்லை. வயதாகிவிட்டது. கால் வலி, மூட்டு வலி அதிகம். சொல்ல மறந்துவிட்டேன். எனக்கு பிரஷர் கொஞ்சம் உண்டு. மாத்திரை சாப்பிடுகிறேன்.

நான்: இந்தக் கோவிட் நிலைமையில் நான் உங்களுக்கு இருக்கும் நல்ல நிலைமையை எடுத்துச் சொல்கிறேன். ஏதாவது சரியில்லையென்றால் என்னை இடைமறியுங்கள். சரியா?

* இன்றைக்கு நீங்கள் சாப்பாடைப்பற்றிக் கவலைப்படவில்லை.
* இன்றைக்குப் பெரிய வீட்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்.
* இன்றைக்கு உங்கள் தோட்டம் பூத்துக் குலுங்குகிறது.
* இன்றைக்கு நீங்கள் நலமாக இருக்கிறீர்கள்.
* இன்றைக்கு இந்த நிலையில் உங்கள் மகனுக்கு வேலை கிடைத்து, உங்களை அண்டாமல் இருக்கிறான்.
* இன்றைக்கு உங்களுக்குப் பென்ஷனும் உங்கள் கணவருக்குச் சம்பளமும் வருகிறது.
* இன்றைக்கு நீங்கள் தனிமையில் இல்லாமல் உங்கள் கணவருடன் இருந்து கொண்டிருக்கிறீர்கள்.
* இன்றைக்கு உங்கள் வாழ்க்கை அதிகம் பிரச்சனை இல்லாமல் இருக்கிறது.
* இன்றைக்குப் பொழுதை நன்றாக கழித்திருக்கிறீர்கள்.
* இன்றைக்கு ஒரு பேரக்குழந்தையை எதிர்நோக்கும் ஆவலில் இருக்கிறீர்கள்.
* இன்றைக்கும் உங்கள் பெண் உங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறாள். கல்லூரிக் காதல் என்றால் ஒரு 6-7 வருடம் பழகிவிட்டு, அவனை நன்றாகப் புரிந்துகொண்டு, திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். வேலை இருந்தாலும் இல்லாவிட்டாலும் இங்கே பிறந்து வளர்ந்த பெண்ணுக்குத் தன்னம்பிக்கையும் முதிர்ச்சியும் கண்டிப்பாக இருக்கும். தன்னை கவனித்துக்கொள்ள நன்றாகத் தெரிந்திருக்கும். எல்லா விஷயங்களையும் ஒரு திருமணமான மகள், பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ளாமல் இருப்பதற்குக் காரணம் இருக்கலாம். தினமும் உங்களுடன் அவள் பேசுகிறாள். அவள் நன்றாக இருக்கிறாள்.

How fortunate you are? நாளைக்கு நாள் நன்றாக மலரும். இன்றைய கவலையை நாளைக்கு ஒத்திப் போடுங்கள். தினமும் இந்த மந்திரத்தைச் சொல்லிப் பாருங்கள்

மீண்டும் சந்திப்போம்.

வாழ்த்துக்கள்,
டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன்
Personal Queries: drcv.listens2u@gmail.com
Share: 




© Copyright 2020 Tamilonline