Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
பொது
லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்
காதில் விழுந்தது...
அமெரிக்காவில் அமைச்சர் அன்புமணி
- மணி மு.மணிவண்ணன்|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeஇந்தியக் குடியரசின் அமைச்சரவையில் தமிழர்கள் மிக முக்கியப் பொறுப்புகள் ஏற்பது என்பது கூட்டணி அரசியலின் ஒரு நல்ல விளைவு. இளமைத் துடிப்பும், சாதனை படைக்க வேண்டும் என்ற பேரார்வமும் கொண்ட புதுமுகங்கள் அமைச்சரவையில் இடம் பெற்றிருக்கின்றனர். இந்தப் புதுமுகங்களில் ஒருவரான மாண்புமிகு சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர் திரு. அன்புமணி பணித் தொடர்பாக அமெரிக்கா வந்திருந்தார். தொற்றுநோய் மற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாடு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம், ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் பங்கேற்க புகழ் பெற்ற சான் ·பிரான்சிஸ்கோ கலி·போர்னியா பல்கலையுடன் பேச்சுவார்த்தை போன்ற நோக்கங்களுடன் வந்திருந்த அமைச்சர் ஆங்காங்கே தமிழ்ச் சங்கங்களின் வரவேற்பு களிலும் பங்கேற்றார்.

ஜூன் 8ம் தேதி மில்பிடாஸ் நகரில் சரோவர் உணவகத்தில் அமெரிக்கவாழ் இந்திய மருத்துவர்கள் சங்கம் (AIPO) மற்றும் வளைகுடாப் பகுதி தமிழ் மன்றமும் கலி·போர்னியா தமிழ்க் கழகமும் இணைந்து அளித்த இரண்டு வரவேற்புகளில் கலந்து கொண்டார். சான் ·பிரான்சிஸ்கோ பல்கலையிலிருந்து நிகழ்ச்சிக்கு வருகையில் போக்குவரத்து நெருக்கடியால் காலம் தாழ்த்தி வந்த அமைச்சர், இரண்டு கூட்டங்களிலும் தன் தாமதத்துக்கு வருத்தம் தெரிவித்துத் தன் உரையைத் தொடங்கினார். மன்றத் தலைவர் தில்லை குமரனும், கழகத் துணைத்தலைவர் குமார் குமரப்பனும், அமைச்சரை வரவேற்றுச் சிறப்பு விருந்தினர்களை அறிமுகப்படுத்தினர். மில்பிடாஸ் நகர மேயர் ஓசே எஸ்டிராடா தனது சிறிய நகரத்துக்கு ஒரு பெரிய அமைச்சர் வருகைக்கு மகிழ்ச்சி தெரிவித்து ஓர் அலங்கார நகரச் சாவியைப் பரிசளித்தார். ·ப்ரீமாண்ட் நகர்மன்ற உறுப்பினர் திருமதி அனு நடராஜன் அடுத்த முறை அமைச்சர் ·ப்ரீமாண்ட் நகருக்கு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மருத்துவர் கூட்டத்தில் சரளமாக ஆங்கிலத்தில் உரையாற்றிய அமைச்சர் தமிழர்கள் கூட்டத்தில் இயல்பான தமிழில் உரையாற்றினார்.

முப்பத்தாறு வயதில் இந்திய அமைச்சரவையிலேயே இளமையான அமைச்சர் என்றாலும் பெரும் பொறுப்புடன் சுகாதாரத் துறையில் பல முக்கிய முயற்சிகளைத் துவக்கியுள்ளதில் பெருமை கொள்கிறார் அமைச்சர் அன்புமணி. அவர் சிலிகன் வேல்லியின் பெருநிறுவனத் தலைவர்கள் பலரைப்போல் விரல் நுனியில் பல செய்திகளுடன் குறிக்கோள்களையும், சாதனைகளையும், பட்டியலிட்டு அடுக்கிக் கொண்டே போனது பார்வையாளர்களை வியக்க வைத்தது. வாஷிங்டன் டிசி நகரத்தில் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையத்துடன் (CDC) கலந்தாலோசித்து இந்தியாவிலும் மருந்துக் கட்டுப்பாட்டுத் துறையை அதே போல் வலுவுல்லதொரு அமைப்பாக மாற்றும் முயற்சியில் அமெரிக்காவுடனான ஒப்பந்தங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். தலைநகரில் உள்ள தேசியச் சுகாதார நிலையத்தில் (NIH) சென்று முக்கியமான சுகாதாரப் பிரச்சினைகளைப் பற்றி கலந்தாலோசித்துள்ளார். அட்லாண்டா நகரில் நீரிழிவு நோய்த் தடுப்பு மாநாட்டில் கலந்து கொண்டிருக்கிறார். ஐ.நா. பொதுச் செயலாளர் கோ·பி அன்னானைச் சந்தித்த பொழுது எயிட்ஸ் நோய் கட்டுப்பாட்டில் இந்தியாவின் பங்கை மிகவும் பாராட்டியதாகக் குறிப்பிட்டார்.

அவரது உரையில் குறிப்பிட்ட பல்வேறு புள்ளி விபரங்களின் சுருக்கம்:

இந்தியாவில் 5.1 மில்லியன் எயிட்ஸ் நோயாளிகள் உள்ளனர். ஆனால் அதன் வளர்ச்சி கட்டுக்குள் உள்ளது. கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவில் நீரிழிவு நோய் (diabetes) பெருமளவில் உள்ளது, அதையும் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். நீரிழிவு நோய் இந்தியாவின் மிகப் பெரும் ஆபத்தான நோயாக உருவெடுத்து வருகிறது.

42 லட்ச கண் அறுவைச் சிகிச்சைகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. 2020க்குள் இந்தியாவின் கண்பார்வைக் குறைவை தீர்க்க விஷன் 2020 என்ற திட்டம் தீட்டப்பட்டுள்ளது.

மன நோய் இந்தியாவின் மற்றொரு பெரிய பிரச்சினை, இதைத் தீர்ப்பதற்கு போதுமான மனநோய் மருத்துவர்கள் கிடைப்பதில்லை என்பது பெரிய சவாலாக அமைந்துள்ளது. மனநோய் மருத்துவர்களுக்குப் பிற நாடுகளில் அதிக தேவை இருப்பதால் இந்தியாவில் பற்றாக்குறை.

உப்பில் அயோடின் சேர்ப்பையும், இரும்பு அயோடின் சேர்ப்பையும் கட்டாயமாகக் கலக்க சட்டத் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகின்றன.

நாட்டில் 235 மருத்துவக் கல்லூரிகளும், 210 பல் மருத்துவக் கல்லூரிகளும் 410 இந்திய மருத்துவக் கல்லூரிகளும், வருடத்திற்கு 2500 வெளிவரும் புதிய மருத்துவர்களும் 12000 சுகாதார நிலையங்களும் இருப்பதாகக் குறிப்பிடார்.

இந்திய மருத்துவர்கள் ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கும் ஒரு தரச்சான்று தேர்வுக்கு உள்ளாக வேண்டும் என்று ஒரு மசோதா கொண்டு வரப் போவதாக அறிவித்தார். ஆனால் இதற்கு மருத்துவர்களிடம் கடும் எதிர்ப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

அது போல் மருத்துவ மேற்படிப்பிற்கும், பிற சலுகைகளுக்கும் முன் தகுதிகளாக குறைந்தது 2 ஆண்டுகளாவது கிராமங்களில் பணியாற்றி இருக்க வேண்டும் என்ற சட்டமும் அமுலாக்கப்படும் என்று தெரிவித்தார்.

தனியார் மருந்தகங்கள், சிறு மருத்துவமனைகள், அனைத்தும் அரசாங்கத்திடம் உரிய முறையில் பதிவு செய்யவும், அதை மக்களுக்கு வெளிப்படுத்தவும், அதன் குறைந்தபட்ச தர நிர்ணயங்களை அமுல்படுத்தவும் சட்டங்கள் கொணரப் போவதாகக் குறிப்பிட்டார். இந்தியாவில் யார் வேண்டுமானாலும் மருத்துவர் என்று சொல்லிக் கொண்டு மக்களை ஏமாற்றுவது தடுக்கப்படும் என்று அறிவித்தார்.

பிரான்ஸ், ஜெர்மனி, சிலி, அர்ஜென்டினா, போன்று ஒரு ஆறு நாடுகளின் அதிபர்கள் தங்கள் நாட்டுக்கு இந்தியப் பாரம்பரிய மருத்துவ முறைகளை முறையாக அறிமுகப்படுத்துமாறு தன்னைக் கேட்டிருப்பதாகவும், இந்திய பாரம்பரிய மருத்துவங்களை உலக நாடுகளுக்கு எடுத்துச் செல்ல முயற்சிகள் நடந்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வந்து மருத்துவ வசதிகளும், அறுவைச் சிகிச்சைகளும் பெற்றுக் கொண்டு திரும்புவது அதிகரித்து வருவதாகவும் அவ்வாறு சிகிச்சைக்காக வரும் வெளிநாட்டினருக்கு உரிய பாதுகாப்பும், வசதிகளும் செய்து அந்தத் திறக்கில் அதிக முதலீடுகள் செய்ய தனியார் மருத்துவமனைகளை ஊக்குவிப்பதாகவும் குறிப்பிட்டார்.

இந்திய மருத்துவ முறைகளில் பயன்படுத்தப்படும் மூலிகைகள், உணவு வகைகள், சித்த, ஆயுர்வேத, யுனானி, ஹோமியோபதி மருத்துவத் துறைகளில் மிகுந்த வளர்ச்சியையும் பரப்புதலும் செய்யப்பட்டு வருகின்றன என்று குறிப்பிட்டார். இந்திய மருத்துவ முறைகள் இந்தியாவிலும் உலகெங்கிலும் எடுத்துச் செல்லப்படுவதின் அவசியத்தையும் முக்கியத்துவத்தையும் அரசு உணர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இந்தியாவின் மிகப் பெரும் சுகாதாரச் சவால் அதன் வளர்ந்து வரும் மக்கள் தொகை என்றும் அதைக் கட்டுப் படுத்துவது தனது முதன்மைப் பணிகளில் ஒன்று என்றும் குறிப்பிட்டார். முதியோர் மருத்துவம், பெண்களுக்கான சிறப்பு மருத்துவம் போன்றவற்றின் தேவையையும் வலியுறுத்தினார். ஆனால், நாட்டுப்புற மக்களுக்கு மருத்துவ வசதியளிப்பதே முதன்மைப் பணிகளுக்குள்ளும் தமது தலையாய பணி என்றார் அவர்.

ஆஷா என்று ஒரு திட்டத்தின் மூலம் ஒவ்வொரு கிராமத்திலும் துணை மருத்துவப் பயிற்சி பெற்ற ஒரு பெண் அமர்த்தப்படுவார் என்றும் அவர் அந்த கிராமத்தினரின் மருத்துவத் தேவையினைக் கண்டு பிடித்து அருகில் உள்ள மருத்துவ நிலையங்களுக்கு அனுப்புவார் என்றும் அவர் அந்த கிராமத்தின் மருமகள் போல் அங்கேயே தங்கி செயல்படுவார் என்றும் அந்த ஊழியருக்கு அவர் செய்யும் சேவையின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும் என்றும் அறிவித்தார். இது போன்ற பல திட்டங்களை கிட்டத்தட்ட 100,000 கோடி ரூபாய்களில் வரும் ஆண்டுகளில் நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மலேரியா தடுப்புக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். நவீன கொசு வலைகள் இலவசமாக மக்களுக்கு வழங்கப்படும். மக்களிடம் அடிப்படை சுத்தம் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பெருமளவில் எடுத்துச் செல்லப்படும். அப்படி அடிப்படை சுகாதார அறிவு பெற்றால் அரசின் 60 சதவிகித பொறுப்புக் குறைந்து விடும் என்று கூறினார்.

கலி·போர்னியாவின் ஸ்டெம் செல் ஆராய்ச்சியில் இந்தியா எந்த அளவிற்கு கலந்து கொள்ளலாம் என்பது குறித்து சான் ·பிரான்சிஸ்கோ பல்ககலைக் கழக மருத்துவ ஆராய்ச்சியாளர்களுடனும், ஆராய்ச்சி அமைப்பின் அதிகாரிகளுடனும் தொடர் கூட்டங்கள் நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இந்தியாவை எதிர் நோக்கியுள்ள பெரும் சவால்கள். அதை அரசாங்கம் எதிர் கொள்ளப் போகும் திட்டங்கள் என்று பல்வேறு விபரங்களைத் தொகுத்தளித்தார் அமைச்சர் அன்புமணி.

சினிமாக்களில் புகைப் பிடிப்பதாக வரும் காட்சிகளை தடை செய்யும் ஒரு பழைய சட்டத்தை அமுல் படுத்தப் போவதாகவும் அது கடும் எதிர்ப்பைக் கிளப்பியிருப்பதாகவும் தெரிவித்தார். ஆசியாவிலேயே தமிழ் நாட்டில்தான் சினிமா இளைஞர்களை பெரிதும் பாதிப்பதாகவும் ஆகவே சினிமாக்கள் ஒரு முன்னோடியாக இருக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார்.

பேச்சுக்குப் பிறகு எழுந்த சரமாரியான வினாக்களுக்குச் சற்றும் தயங்காமல் நேரடியாக விடையளித்தார். சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கையில் தனது தந்தையும் பா. ம. க. கட்சித் தலைவருமான மருத்துவர் ராமதாஸ் அவர்களின் பசுமைத் தாயகம் என்ற இயக்கத்தின் போராட்டங்களைப் பற்றிக் குறிப்பிட்டார். எதிரணியிலிருந்து போராடியவர்கள் இன்று ஆளும் அணியிலிருந்து கடமைகளை நிறைவேற்றும் பொறுப்பில் உள்ளோம் என்று குறிப்பிட்ட இவர், சுற்றுப்புறச் சூழல் தொடர்பான மனுவொன்றை ஏற்றுத் தோழமை அமைச்சரின் கவனத்துக்குக் கொண்டு வருவதாக உறுதியளித்தார்.

இந்தியாவின் சுகாதார நிலைமை குறித்து அதன் அமைச்சரிடம் நேரடித் தகவல்கள் பெற முடிந்த ஒரு பயனுள்ள கூட்டமாக அமைந்திருந்தது நிறைவளித்தது. தமிழ் கலாச்சார மையம் சார்பாக திரு. சிவா சேஷப்பன் நன்றியுரை நவில நிகழ்ச்சி நிறைவெய்தியது.

*****


கூட்டத்தின் இறுதியில் விருந்தின்போது தென்றல் ஆசிரியருடன் உரையாடினார் அமைச்சர் அன்புமணி. அதன் சுருக்கம் பின் வருமாறு:

வட அமெரிக்கத் தமிழர்களுக்காக உங்கள் சிறப்புச் செய்தி என்ன?

தமிழர்கள் என்றால் உலகம் எங்கும் இலங்கைத் தமிழர்கள் என்று நினைக்கும் அளவுக்கு உலகெங்கும் தமிழையும், தமிழர் பற்றிய உணர்வையும் பரப்பியிருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள். ஈழத்தமிழர்கள் மட்டுமல்லாமல், வட அமெரிக்கத்தமிழர்கள், ஏன் உலகத்தமிழர்கள் எல்லோருக்கும் எங்கள் செய்தி இதுதான். என்ன பிரச்சினை என்றாலும் எங்களை அணுகுங்கள். ஒரு காலத்தில் மற்றவர்களை எதிர்பார்த்திருந்த நாங்களே இன்று உதவி செய்யும் பொறுப்பில் இருக்கிறோம். உங்கள் உரிமைகளைக் காப்பாற்ற முயற்சி எடுப்போம்.

12 தமிழ் அமைச்சர்கள் மத்திய அரசில் இருக்கும்போது மத்திய அரசும் தமிழக அரசும் இணைந்து செயல்பட்டால் தமிழ்நாடு இன்னும் வேகமாக முன்னேறுமே! ஏன் இரண்டு அரசுகளிடமும் ஒத்துழைப்பு குறைந்திருக்கிறது?

தமிழக மக்களுக்கு உதவி செய்ய நாங்கள் (மத்திய அமைச்சர்கள்) தயார். எங்களால் இயன்றவற்றைச் செய்தும் வருகிறோம். இது அரசியலுக்கு அப்பாற்பட்டது. முதலமைச்சர் அழைத்தால் நாங்கள் வருகிறோம். இதில் அரசியலோ, அகங்காரமோ எங்களுக்கு இல்லை. ஏனைய பல மாநில முதல்வர்களோடு நாங்கள் இணைந்து செயலாற்றுகிறோம். முதலமைச்சர் என்றால் ஒரு நல்ல அணுகுமுறை வேண்டும். மாநிலத்துக்குச் சேவை செய்ய எல்லா நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும். சுகாதாரத்துறையை விடுங்கள். இது வரை தமிழக முதல்வர் நிதி அமைச்சரைச் சந்தித்துப் பேசியதில்லை. 15 முதல்வர்கள் என்னை அவர்கள் மாநிலத்துக்கு அழைத்துப் பேசியிருக்கிறார்கள். தமிழக முதல்வரைத் தவிர. ஏன் கடந்த ஆண்டுகளில் இந்தியா வந்திருக்கும் உலக அரசியல் மற்றும் வணிகத் தலைவர்களான பில் கிளின்டன், பில் கேட்ஸ், விளாடிமிர் பூடின், வென் ஜியாபோ போன்றவர்கள் பெங்களூர், ஹைதராபாத், மும்பை, டெல்லிக்கு மட்டுமே போகிறார்கள். உள்ளூர்த் தலைவர்களை மட்டுமல்ல, உலகத்தலைவர்களையும் தமிழ்நாட்டுக்கு வரவேற்பதில்லை. இதனால்தான் ஒத்துழைப்பு குறைந்திருக்கிறது.


மணி மு. மணிவண்ணன், ச. திருமலைராஜன்
More

லண்டன் பத்மநாப ஐயருக்கு கனடாவில் இயல் விருது
பத்து டாலர் செலவில் இந்தியாவுக்குப் பணம் அனுப்பலாம்
காதில் விழுந்தது...
Share: 




© Copyright 2020 Tamilonline