Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சாதனையாளர் | சமயம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | தமிழக அரசியல்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | புழக்கடைப்பக்கம் | வார்த்தை சிறகினிலே | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம்-6)
- கதிரவன் எழில்மன்னன்|ஜூலை 2005|
Share:
Click Here Enlargeமுன் கதை

சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யாவும் கிரணும் சுமிடோமோவைச் சந்திக்க அங்கே செல்கின்றனர். ரோபோட்கள் பற்றிய விரிவான அறிமுகத்திற்குப் பிறகு விஷயத்துக்கு வருகிறார் சுமிடோமோ வின் கூட்டாளி ராபர்ட்.

எல்லா வகையிலும் சோதித்தபின் விற்கப்படும் ரோபோட்கள் வெளியே போய்த் தவறுகள் செய்கின்றன. மிகக் கடுமையான தவறுகள்! அவற்றின் மென்பொருள் நிரலிலேயே மாற்றம் செய்திருந்தாலொழிய அப்படி நிகழ வாய்ப்பில்லை. மாற்றம் செய்வது எளிதல்ல. எப்படி நடந்தது?

ரோபாட்களின் உள்ளே இருக்கும் ப்ரோக்ராமை ஆராய்ச்சிக் கூடத்துக்கு வெளியில் மாற்ற முடியாது என்று சுமிடோமோ கூறியதும், அப்படியானால் அவை உள்ளேயே மாற்றப்பட்டிருக்க வேண்டும், ப்ரோக்ராம் செய்யுமிடத்தைப் பார்க்க வேண்டும் என்று சூர்யா கோரினார். சுமிடோமோ அவர்களை ஆராய்ச்சிக் கூடத்தின் ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார்.

கிரண், சூர்யா இருவருக்குமே கம்ப்யூட்டர் ப்ரோக்ராமிங் துறை புதிதல்ல. கிரணின் அலுவலகத்தில் ஏற்பட்ட 'பங்குகள் படுத்திய பாடு' அவர்களுக்கு அதைப் பற்றி நன்கு பரிச்சயம் இருந்தது. மேலும் கிரண் கம்யூட்டர் மற்றும் வீடியோ விளையாட்டுக்களில் மிகவும் ஆர்வம் பெற்றிருந்ததால், தானே சிறு ப்ரோக்ராம்களை விளையாட்டாக உருவாக்கியதுண்டு.

ஆனால் சுமிடோமோவின் ரோபாட் ப்ரோக்ராம் உருவாக்கும் இடத்தில் அவர்கள் கண்டது கம்ப்யூட்டர் துறையில் இதுவரை கண்டிராததாக இருந்தது. கிரண் கணினிகள் முன்னால் உட்கார்ந்த சிலர் ப்ரோக்ராம் எழுதி ரோபாட்டுக்குள் பொதியப்பட்டிருக்கும் கம்ப்யூட்டர்களுக்கு நகல் அனுப்பி விடுவார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தான். ஆனால் இங்கு நடந்தது அதை விட மிகவும் வியப்பளிக்கும் களேபரமாக இருந்தது.

அங்கு மேஜைமேல் சில கம்ப்யூட்டர்கள் இருக்கத்தான் செய்தன. அவற்றில் சிலர் மென்பொருள் நிரல் எழுதிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆனால் அது ஓர் ஆரம்பம் தான். கணினிகளில் இருந்து பல மின் கம்பிகள் மேஜைமேல் இருந்த ஒரு ரோபாட்டின் தலைக் குழிக்குள் செருகப் பட்டிருந்தன. அங்கு இருந்த கம்ப்யூட்டர் ·ப்ரைஸ் எலக்ட்ரானிக்ஸில் வாங்கும் வின்டெல் கம்ப்யூட்டர் அல்ல. பல மின்சிப்கள் மேல் ஒட்டப் பட்ட ஒரு பந்து போல் இருந்தது. அதன் மேல் பல இடங்களில் மின்கம்பிகள் ஒட்டப்பட்டிருந்தன.

குழப்பமடைந்த கிரண், "இது என்ன இது?! கம்ப்யூட்டர்னு சொன்னீங்க? எதோ காரேமோரேன்னு நிறைய சிப்களை கோந்து போட்டு ஒட்டி ஒரு பந்தா உருட்டிச் சொருகிட்டீங்க போலிருக்கே!" என்றான்.

ராபர்ட்டுக்கு உர்ரென்று கோபம் வந்து முகம் கடுப்படைந்தது. ஆனால் சுமிடோமோ சிரித்தேவிட்டார். "நீ சொல்றதுலயும் ஒரு நியாயம் இருக்கு கிரண். இது சாதாரணக் கம்ப்யூட்டரே இல்லை. செயற்கை மூளைன்னு சொல்றதுதான் இன்னும் சரியாக இருக்கும். அதுனாலதான் இப்படி இருக்கு."

கிரண் ஆச்சர்யத்துடன், "வாவ்! செயற்கை மூளையா! கேட்க ரொம்ப சுவாரஸ்யமாத்தான் இருக்கு. எப்படி செஞ்சிருக்கீங்க? இதை எப்படி ப்ரோக்ராம் செய்யறீங்க?" என்றான்.

கோபம் தணிந்த ராபர்ட், "கம்ப்யூட்டர் செய்யறோம்ங்கறதை விட அது வளருதுன்னே சொல்லலாம். ப்ரோக்ராம் செய்யறோம்னு சொல்றதை விட, கத்துக் கொடுக்கறோம்னு கூடச் சொல்லலாம்" என்றார்.

சூர்யா ஆவலுடன், "எப்படி அது, இன்னும் விளக்கமா சொல்லுங்க" என்றார்.

சுமிடோமோ விவரித்தார். "சாதாரணமா நீங்க பயன்படுத்தற கம்ப்யூட்டர்ல ஒரே ஒரு மைக்ரோ ப்ராஸஸர்தான் இருக்கு. அது படு வேகமா பல்லாயிரக் கணக்கான சின்னச் சின்ன வேலைகளை ஒரு நொடிக்குள்ள செய்யுது. ஆனா, அந்த மாதிரி ப்ரோக்ராம்னால மனுஷங்க மாதிரி பார்க்க, கேட்க, நடக்கறா மாதிரி இன்னும் செய்ய முடியலை. ஏன், ஒரு சின்ன பூச்சி தன்னிச்சையா செய்யற அளவுக்குக் கூட செய்ய முடியலை. ஏன்னா, சாதாரண ப்ராஸஸர் ஒரே வரிசையில அந்த சின்னச் சின்ன வேலைகளை செய்யுது. இந்த மாதிரி ரோபாட்டை நடத்த செய்ய வேண்டியதை அந்த மாதிரி செய்யணும்னா ஒவ்வொரு சின்ன வேலைக்கும் வேண்டிய அளவுக்குக் கணிக்க பல மாசங்களாகும். மேலும், சுற்றுப்புறத்தைக் கவனிச்சு பொருட்களை அறிஞ்சுக்கறது போன்ற சில திறன்களை அந்த மாதிரி ப்ரோக்ராம்களால இன்னும் கூட முழுசா செய்ய முடியலை. அதுக்கான அல்கரிதம் தொழில் நுட்பம் கூட விஞ்ஞானிகள் இன்னும் கண்டு பிடிக்கலை."

கிரண் ஆட்சேபித்தான். "ஆனா, இப்ப ரொம்ப நிறைய ப்ராஸஸர்களை வச்சு க்ளஸ்டர்னு சேத்து செய்யறாங்க போலிருக்கே. அதால செய்ய முடியாதா என்ன? எதுக்குப் புது மாதிரி வேணும்?!"

ராபர்ட் விளக்கினார். "ரொம்ப நல்ல கேள்வி கிரண். முதல்ல ரோபாட் விஞ்ஞானிகள் அப்படித்தான் நினைச்சாங்க. ஆனா அந்த வழி சரிப்பட்டு வரலை. சுமிடோமோ சொன்னா மாதிரி இப்ப இருக்கற மரபுப்படி இருக்கற ப்ரோக்ராம்களால, பல்லாயிரக்கணக்கான ப்ராஸஸர்கள் வச்சாக் கூட மனுஷங்களுக்கு இருக்கற பல திறன்களுக்கான வேலைகளையும் ஒரே சமயத்துல செஞ்சு முடிக்க முடியாது. அதுக்குப் பல மில்லியன் இல்லைன்னா பில்லியன் கணக்கான ப்ராஸஸர்கள் தேவைப் படலாம். அந்த சூட்டுல ரோபாட் உருகியே போயிடும்! அவ்வளவு ப்ராஸஸர்கள் இருந்தாலும் செய்ய முடியுமாங்கறது இன்னும் சந்தேகமாத் தான் இருக்கு."

சூர்யா, "சரி, அப்ப நீங்க செஞ்சிருக்கற கம்ப்யூட்டர் எப்படி வித்தியாசமானது? அதால மட்டும் எப்படி மனுஷங்க மாதிரி நடந்துக்க முடியுது?" என்று கேட்டார்.

சுமிடோமோ பெருமிதத்துடன் தொடர்ந்தார். "ஆ, அங்கதான் விஷயமே இருக்கு. மனுஷங்க மூளை, கம்ப்யூட்டர் மாதிரி 1 மற்றும் 0 வச்சு டிஜிடலா பல்லாயிரக்கணக்கான நம்பர்களை வச்சு கணிச்சு வேலை செய்யறதில்லை. நம்ம மூளையில பல பில்லியன் கணக்குல நியூரான் எனப்படும் கணிக்கும் ஸெல் இருக்கு. அந்த நியூரான்கள் ஒவ்வொண்ணும் அண்மையில இருக்கற மற்ற பத்து, நூறு இல்லைன்னா ஆயிரக்கணக்கான மற்ற நியூரான்களோட நரம்புகள் மூலமா இணைக்கப்பட்டிருக்கு. அதுல எதாவது கணிக்கணும்னா, உதாரணமா நம்ம கண் ரெடினாவில விழற பிம்பத்துல என்னென்ன பொருட்கள் இருக்குன்னு உணரணும்னா மூளையின் ஒரு பாகத்துல இருக்கற பல லட்சக் கணக்கான நியூரான்கள் அனலாக் மின்-ஸிக்னல்களைத் தங்களுக்குள் பலமுறை அனுப்புது. நாம பொருட்கள்னு உணரறது எந்தெந்த நியூரான்கள் எவ்வளவு அளவுக்கு ஸிக்னல் அனுப்பிப் பெறுதுங்கற ஒருமித்த உணர்வுதான்-தனிப்பட்ட ஒரு கணித விளைவு இல்லை. அதே மாதிரி ஒவ்வொரு மூளை வேலையும் எந்த நியூரான்கள் எங்கே எவ்வளவு ஸிக்னல் அனுப்புதுங்கறதுதான்."

சூர்யா யோசித்து விட்டு, "சரி, ஒரு விதமாப் புரியுது. ஆனா ஏன் சாதாரண கம்ப்யூட்டர் களால அந்த வேலை செய்ய முடியலை?" என்றார்.

ராபர்ட் விளக்கினார். "சூர்யா, அந்த மாதிரி ஒரு நியூரான், ஒரு ஸிக்னல் அனுப்பற அளவுக்கு சாதாரண கம்ப்யூட்டர் டிஜிடல் முறையில கணிக்கணும்னாலே பல பில்லியன் மெமரி பைட்களை பல மில்லியன் ஆணைகளால கணிக்கணும். மூளை ஒரு நொடிக்குள்ள செய்யற ஒவ்வொரு வேலைக்கும் பல லட்சக் கணக்கான நியூரான்கள் கூட்டமா சேர்ந்து, ஒவ்வொண்ணுக்கும் அனலாக் ஸிக்னல் அனுப்புதுன்னு சொன்னார் இல்லயா? சுமிடோமோ சொன்ன கண் பார்க்கும் வேலை ஒரு உதாரணம் தான். மனுஷங்க ஒரே சமயத்துல அந்த மாதிரி பலப்பல வேலைகள் செய்யறாங்க. பாக்கறாங்க, கேட்கறாங்க, நடக்கறாங்க, பேசறாங்க, மூச்சு விடறாங்க! அப்படின்னா..."

கிரண் பரபரத்தான், "ஓ! ஆமாம், ஆமாம்! நான் கூடப் படிச்சிருக்கேன். டெலவிஷன் லயும் பார்த்திருக்கேன். அந்த மாதிரி கம்ப்யூட்டர்ல செய்யணும்னா எத்தனை ப்ரும்மாண்டமான கம்ப்யூட்டர்கள் நாள் கணக்குல கணிக்க வேண்டியிருக்கும்னு சொன்னாங்க."

சுமிடோமோ புன்னகைத்தார். "அது மட்டுமில்லை. பார்க்கறது, பேசறது எல்லாத்துக்கும் டிஜிடல் முறையில எப்படிக் கணிக்கற துங்கறதைக் கூட இன்னும் சரியா ப்ரோக்ராம் எழுத முடியலை. இன்னும் ஆராய்ச்சி செஞ்சுக்கிட்டிருக்காங்க. அதுனாலதான் நாங்க டிஜிடல் முறையில போகாம, மூளை எப்படி வேலை செய்யுதோ அதே முறைப்படி செயற்கை மூளை செஞ்சிருக்கோம்."

கிரண் வாய் பிளந்தான். "வாவ்! செயற்கை மூளை! ஷாலினி கிட்ட குடுத்துட்டா ஹாஸ்பிடல்ல வர மடப் பசங்களுக்கெல்லாம் மூளையை மாத்தி வச்சுடலாம். என் ஆ·பீஸ்ல கூட இருக்கானுங்க ரெண்டு சுத்த வடி கட்டின முட்டாளுங்க. இங்க அனுப்பட்டுமா?"

சுமிடோமோ பலமாகச் சிரித்தார். "இப்ப இதயத்தை மாத்தி செயற்கை இதயம் வைக்கிறாங்களே, அந்த மாதிரி மூளையையும் மாத்தற நாள் வந்தாலும் வரலாம். அப்ப 'கிரண் - மூளை மாற்றத்தின் முன்னோடி' அப்படின்னு அறிவிச்சுடலாம்."

சூர்யா யோசனையிலிருந்து விடுபடாமல், "சரி, இந்த செயற்கை மூளையை எப்படி ப்ரோக்ராம் செய்யறீங்க? புரியலையே?" என்றார்.

ராபர்ட் பாராட்டினார். "ரொம்ப நல்ல கேள்வி சூர்யா. மூளை மாதிரின்னு சொல்லிட்டமே ஒழிய இது எப்படி வேலை செய்யுதுன்னு இன்னும் சொல்லலை. மனித மூளை வேலை செய்யறது அதன் நியூரான் கள் பக்கத்து நியூரான்களோட நரம்புத் தொடர்பு மூலம் ஸிக்னல் அனுப்பறதுனா லன்னு சொன்னோம் இல்லையா? அந்த நரம்புத் தொடர்புகள் உருவாகறதுதான் மூளை வெவ்வேறு வேலைகளைக் கத்துக்கறதுக்கும், வெவ்வேறு விஷயங்களை ஞாபகம் வச்சுக்கறதுக்கும் காரணம். புதுப்புது நியூரான்களும் உருவாக்கப்பட்டு, புதுப் புதுத் தொடர்புகளும் உருவாக்கப் படுது. நமக்கு வயசானப்பறம் புது ஸெல்கள் உருவாகறதை விட, இருக்கற ஸெல்களுக்குப் புது நரம்புத் தொடர்புகள் ஏற்படறது மூலந்தான் நிறைய விஷயங்களைக் கத்துக்கறோம்னு சொல்லலாம்."

அவர் மூச்சு விட ஒரு நொடி நிறுத்தவும், கிரண் பரபரப்புடன் "அப்போ? இந்த மூளையில புது ஸெல்களை உருவாக்கி அதுக்கு நரம்புத் தொடர்புகள் ஏற்படுத் தறீங்களா? எப்படி?" என்று கேட்டான்.

சுமிடோமோ விளக்கினார். "ஒரு விதத்துல அப்படித்தான் கிரண். ஆனா மூளை ஸெல்களைப் புதிதாகப் படைக்கும் சக்தி இன்னும் நமக்கில்லை. புது நரம்புகளையும் உருவாக்க முடியலை. ஆனா நல்லவேளையா, கிட்டத்தட்ட அதுக்கு சமானமான மின்னியல் தொழில்நுட்பம் இருக்கு! FPGA-ன்னு பேர். Field Programmable Gate Arrays. இது ரொம்ப பழைய தொழில்நுட்பந்தான். பல கம்ப்யூட்டர்களில பல வருஷங்களா பயன் படுத்தப் பட்டதுதான். ஆனா நாங்க புது விதமான விதத்துல பயன்படுத்தி இந்த செயற்கை மூளை செஞ்சிருக்கோம்."

சூர்யா இடை புகுந்து, "ஓ! FPGA! எங்க தொழிற்சாலையில கூட உற்பத்தி செஞ்சிருக்கோமே. புதுவிதம்னா எப்படி?" என்று வினவினார்.

ராபர்ட் மேற்கொண்டு விளக்கினார். "புதுசா ஸெல்களும், நரம்புகளும் உருவாக் கறத்துப் பதிலா, FPGA-ல ஸெல்கள் எப்படி கணிக்கணுமோ அந்த மாதிரியான ஒரு மாடலை ட்ரான்ஸிஸ்டர்களால செஞ்சு, ஒரு புது ஸெல் வேணும்னா இன்னொரு ஸெல் மாடலை சேத்துக்கறா மாதிரி செஞ்சிருக்கோம். இந்த மூளை பல ஆயிரம் FPGA சிப்கள் அடங்கிய உருண்டை. அதுல பல பில்லியன் ஸெல்களுக்குத் தேவையான ட்ரான்ஸிஸ்டர்கள் இருக்கு."

கிரண் ஆவலுடன் மேலும் வினாவினான். "பிரமாதம்! சரி அப்ப நரம்புகள்? அதை எப்படி உருவாக்கறீங்க? மூளையில அதுக்கு அளவிருக்காதே. இதுல ஒவ்வொரு ஸெல்லுக்கும் ஓரளவு மின்கம்பிகள்தானே இருக்கும்?"

சுமிடோமோ அவன் முதுகில் ஒரு பலத்த ஷொட்டு விட்டார், "சபாஷ் கிரண்! நல்ல பாயின்ட். ஸெல்லுக்கும் ஸெல்லுக்கும் இடையில வேண்டிய ஒவ்வொரு தொடர்புக் கும் ஒரு மின்கம்பி வேணும்னா இதைச் செய்யவே முடியாது. இந்தச் செயற்கை மூளையில நாங்க கொஞ்சம் வேற மாதிரி செஞ்சிருக்கோம். ஒவ்வொரு ஸெல்லும் பக்கத்து ஸெல்களோட ஆயிரக் கணக்கான மிகக் குட்டையான மின்கம்பிகளால பிணைக்கப்பட்டிருக்கு. ஆனா, ஒரு ஸெல் எவ்வளவு தூரத்துல இருக்கற ஸெல் கூடவும் தொடர்பு ஏற்படுத்த முடியும். ஏன்னா, ஸெல்கள் தங்களுக்கு வரவேண்டிய சமிக்ஞையைக் கணிக்கறது மட்டுமில்லாம, மத்த ஸெல்களுக்கு அதை அனுப்பவும் செய்யுது."

ராபர்ட் இன்னும் உற்சாகத்துடன் தொடர்ந்தார். "இந்தச் செயற்கை மூளை நிஜ மூளையைவிட ஒரு விதத்துல இன்னும் அதிக சக்தி வாய்ந்தது. மனித மூளையில ஸெல் களும், தொடர்புகளும் உருவாகறதும் அழியறதும் மிக மிக நிதானமாக நடக்கும் விஷயங்கள். பல நாட்கள், மாதங்கள், வருடங்கள் கூட ஆகலாம். ஆனா எங்க செயற்கை மூளையில ஒரு நொடிக்குள்ள பல மில்லியன் ஸெல்களைச் சேர்க்கலாம், அழிக்கலாம், இல்லை மின்கம்பிகள் மூலம் பிணைக்கலாம். அதுனால எங்க ரோபாட்கள் மிக வேகமாப் புது விஷயங்களைக் கத்துக்க முடியுது."

சூர்யா தலையாட்டினார். "ஓ, புரியுது. அப்ப உங்க ப்ரோக்ராமிங் இந்த செயற்கை மூளையில ஒரு குறிப்பிட்ட மாதிரி ஸெல்களையும் அவற்றோட தொடர்புகளையும் உருவாக்கறது, அப்படித்தானே?"

ராபர்ட் ஆமோதித்தார். "அப்படியேதான். அதைத்தான் இங்க செஞ்சுக்கிட்டிருக்காங்க."
கிரண் இடை புகுந்தான். "என் PDA ·போனே கொஞ்சம் தொடர்ந்து வேலை செஞ்சா சூடாயிடுதே. இவ்வளவு சிப் இருக்கே, உருகிடாது?"

சுமிடோமோ சிரித்தார். "முதல்ல செஞ்ச சில மூளைகள் உருகி, இல்லன்னா எரிஞ்சு புகைவிட்டது உண்மைதான்! ஆனா இப்ப மிகக் குறைஞ்ச பவர்ல வேலை செய்யறா மாதிரிச் செஞ்சிருக்கோம். மேலும் ரோபாட்டின் உடம்புல ரத்தத்துக்குப் பதிலா கூலன்ட் ஓடுது. அது மூளையைத் தொடர்ந்து குளிர்விக்குது. அதுக்கும் மேல மண்டையில பல மிகத் துல்லியமான ஓட்டைகள் காத்தோட்டம் குடுக்குது."

கிரண், "ஹை! ஏர் கண்டிஷன் மூளை, நான் பாக்கணுமே" என்று குதூகலத்துடன் ரோபாட்டின் மண்டை ஓட்டையும் மூளையையும் கூர்ந்து பார்க்க ஆரம்பித்தான்.

சூர்யா யோசனையுடன் மேலும் வினவினார், "சரி, எப்படி ப்ரோக்ராம் செய்யறீங்கன்னு புரியுது. ஆனா இங்க மட்டுந்தான் செய்ய முடியும்னு சொன்னீங்களே அது எப்படி?"

சுமிடோமோ விளக்கினார். "மூளையில பல பில்லியன் ஸெல்கள் இருந்தாலும், அவை எந்தத் தொடர்புகளில என்ன ஸிக்னலை அனுப்பணுங்கறதுதான் ப்ரோக்ராம். அதை மாத்தறத்துக்குத் தேவையான கன்ட்ரோல் சிப்பை ரோபாட்கள் இந்த ஆராய்ச்சி சாலையில மட்டுந்தான், ஏன் இந்த ப்ரோக்ராமிங் கூடத்துல இருக்கறப்போ மட்டுந்தான் பொருத்தறோம். ப்ரோக்ராம் ஆனதும் அந்த சிப்பை எடுத்துடறோம்."

சூர்யா விடாமல் மேலும் அழுத்திக் கேட்டார். "தற்செயலாவோ, இல்லை வேணும்னோ, அந்தத் தவறி நடந்த ரோபாட்களுக்கு வெளி உலகுல அந்த ப்ரோக்ராமிங் சிப்பைப் பொருத்தி மாத்தியிருக்க முடியாதா?"

ராபர்ட் சிலாகித்தார். "நல்ல கேள்வி சூர்யா. நானும் அதையேதான் யோசிச்சுப் பார்த்தேன். ஆனா அப்படி நடந்திருக்க முடியாது. ஏன்னா ப்ரோக்ராம் செய்ய அந்த சிப் மட்டும் இருந்தாப் போதாது. அதைப் பிணைக்க இந்தத் தனிமாதிரியான கேபிளும், ப்ரோக்ராம் செய்யற கம்ப்யூட்டரும் வேணும். அதெல்லாம் இங்கேதான் இருக்கு."

சூர்யா சில நொடிகள் மெளனமாக யோசித்துக் கொண்டிருந்தார். ரோபாட்டின் தலையைக் குடைந்து பார்த்துக் கொண்டிருந்த கிரண் நிமிர்ந்து, "கம்ப்யூட்டர் இந்த இடத்துல மட்டும் இருந்தா என்ன? சிப்பும் கேபிளும் மட்டும் பொருத்திட்டு இன்டெர் நெட் மூலமா கம்ப்யூட்டர்லேந்து ப்ரோக்ராம் செஞ்சிருக்க முடியாதா என்ன?" என்று வினாவினான்.

சுமிடோமோ சிரித்தார். "பிரமாதமான கேள்வி கிரண். ஆனா அந்த தியரில ஒரே ஒரு பலவீனந்தான் இருக்கு. இந்தக் கம்ப்யூட்டருக்கு இன்டர்நெட்டோட பிணைப்பே கிடையாது. சொல்லப் போனா உள்ள மட்டும் இருக்கற LAN நெட்வொர்க் பிணைப்புக் கூட அதுல வைக்கலை. அதுல நேரடியா மட்டுந்தான் வேலை செய்ய முடியும். நெட்வொர்க் வசதியே கிடையாது." என்றார்.

கிரண் உதட்டைப் பிதுக்கிப் பழித்துக் காட்டினான். "அய்யே, நெட்வொர்க்கே இல்லாத கம்ப்யூட்டரா? கற்கால மனுஷன் மாதிரிதான் இருக்கு!"

சாதாரணமாகக் கடுகடுவென இருக்கும் ராபர்ட்டின் முகத்திலும் புன்னகை மலர்ந்தது. "அந்தக் கம்ப்யூட்டர் புராதனமில்லை கிரண். வருங்காலம். அதுல இருக்கும் அளவு கணிப்புத் திறன் வெளியில எங்கயும் பார்க்க முடியாது. நெட்வொர்க் வைக்காதது பாதுகாப்புக்காக. எடுத்துட்டோம்."

சூர்யா யோசனையிலிருந்து மீண்டார். "நீங்க சொல்றதெல்லாம் வச்சுப் பார்த்தா நிச்சயமா இந்த ஆராய்ச்சி சாலையிலதான் அந்த ரோபாட்களோட ப்ரோக்ராமிங் மாத்தப்பட்டிருக்கணும். தற்செயலா நடந்த ப்ரோக்ராமிங் தவறாவும் தோணலை. ரோபாட்களை வெளியில அனுப்பற வரைக்கும் சரியா நடந்தது, வெளியிலும் கொஞ்ச நாள் சரியா நடந்தது, திடீர்னு மாறியிருக்கு. நிச்சயமா யாரோ வேணும்னே மாத்தியிருக்காங்க. யார் மாத்தினாங்கங்கறதை விட எதுக்காக மாத்தினாங்கங்கறது தான் முக்கியம்னு தோணுது. சுமிடோமோ-ஸான், உங்களுக்கு எதாவது காரணங்கள் தோணுதா? யாராவது உங்களுக்கோ, இல்லை இந்த ஆய்வுச்சாலைக்கோ தீங்கு செய்யற நோக்கமுள்ள எதிரிகள் இருக்காங்களா?"

சுமிடோமோ நிலைகுலைந்து ஆடிப் போய்விட்டார். நீண்ட மயான மெளனத்துக்குப் பின் தட்டுத் தடுமாறிக் கொண்டு, பொங்கி வந்த துக்க உணர்ச்சியால் குரல் தழுதழுக்க பதிலளித்தார். "எனக்கு எந்தக் காரணமும் தோணலை சூர்யா. நான் யாருக்கும் எந்தத் தீங்கும் நினைச்சதில்லை, செஞ்சதில்லை. நான் உண்டு, என் ஆராய்ச்சி உண்டுன்னு இவ்வளவு நாள் என் மனம், உடல், உயிர் எல்லாத்தையுமே இதுலதான் செலுத்தியிருக்கேன். எனக்கேன் யாராவது கெடுதல் செய்ய நினைக்கணும்னு புரியவே இல்லையே! இதைச் சரி செய்யலைன்னா என் வாழ்க்கை அர்ப்பணிப்புக்கே அர்த்தமில்லாம போயிடும். கண்டு பிடிச்சு நிவர்த்திச்சுக் குடுங்க சூர்யா!" என்று சூர்யாவின் கையைப் பிடித்துக் கொண்டுக் கெஞ்சினார்.

சூர்யா சுமிடோமோவின் தோளைத் தட்டிக் கொடுத்து ஆறுதல் கூறினார். "சுமிடோமோ-ஸான், நீங்க எனக்கு வெகு நாளாக நெருங்கிய நண்பர். நிச்சயமா என்னால ஆன வரை முயற்சிக்கறேன். கவலைப்படாதீங்க, கண்டு பிடிச்சிடலாம். ராபர்ட், உங்களுக்கு எதாவது தோணுதா, யார் எதுக்காக செய்யறாங்கன்னு?"

ராப்ர்ட் மெல்ல சோகமாகத் தலையசைத்தார். "நானும் வேண்டா வெறுப்பா உங்க முடிவுக்குத்தான் வந்தேன். ஆனா எவ்வளவு தீவிரமா என் மூளையைக் கசக்கிப் பார்த்தாலும் யாருன்னோ, எதுக்குன்னோ ஒண்ணும் தோணலை." ஒரு நொடி நிறுத்தியவர், திடீர் ஆத்திரத்துடன் தொடர்ந்தார். "ஆனா செஞ்சவங்க மட்டும் என் கையில கிடைக்கட்டும், பாருங்க..." என்றவர் தன் இரு கைகளையும் கழுத்தைப் பிடித்து நெறிப்பது போல் செய்து கொண்டு ஆவேசமாகக் கத்தினார்.

சூர்யா அவரையும் சமாதானப்படுத்தினார். "அந்த அளவுக்குப் போயிட வேண்டாம் ராபர்ட். நிவர்த்திச்சுடலாம். முதல்ல ஆக வேண்டிய காரியத்தைப் பார்ப்போம். இந்தப் ப்ரோக்ராமிங் யார் செய்யறாங்க, அதை மாத்த யார் யாருக்கு வாய்ப்பிருக்குன்னு சொல்லுங்க."

ஆசுவாசப் படுத்திக் கொண்ட ராபர்ட் ப்ரோக்ராமிங் குழுவைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தார்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 




© Copyright 2020 Tamilonline