Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
ரோபாட் ரகளையின் ரகசியம் (பாகம் - 7)
- கதிரவன் எழில்மன்னன்|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeமுன் கதை: சிலிக்கன் வேல்லி தொழில் நுட்ப நிபுணர் சூர்யா, முழு நேரத் தொழில்நுட்பத் துப்பறிவாளராகி விட்டார். அவரது நண்பர் மகன் கிரணும் மகள் ஷாலினியும் ஆர்வத்துடன் அவருக்கு உதவி புரிகின்றனர். தன் தொழில் பங்கு-வர்த்தகமானாலும், சூர்யாவுடனேயே நிறைய நேரம் செலவிடுகிறான். சூர்யாவும் கிரணும் சூர்யாவின் நண்பர் சுமிடோமோவின் ரோபாட் ஆராய்ச்சி சாலையில் ஒரு பிரச்சனையைத் தீர்க்க வந்தனர். அங்கு ஆங்கில பட்லரைப் போலவே நடந்து கொண்ட ஜீவ்ஸ் என்ற ஒரு ரோபாட்டைப் பார்த்து கிரண் ஏமாந்தே போனான்! சுமிடோமோவும், அவரது கூட்டாளர் ராபர்ட்டும் தமது முயற்சி வயதானவர் களுக்கும் நோயாளிகளுக்கும் எப்படி உதவும் என்று விளக்கினர். பிறகு, தங்கள் ரோபாட்கள் வெளி உலகில் தவறுகள் செய்கின்றன என்றும் அவற்றின் செயல்நிரல் மாற்றப் பட்டிருந்ததாகவும் கூறினர். அந்த ரோபாட்கள் சாதாரணக் கணினிகள் போலல்லாமல் செயற்கை மூளையால் இயங்குவதாகவும் வெளி உலகில் அந்தச் செயல்நிரலை மாற்ற முடியாதென்றும் தெரிவித்தனர். பிறகு...

ரோபாட்களின் செயற்கை மூளையைப் பற்றியும் அதை எப்படிப் ப்ரோக்ராம் செய்வது என்பதைப் பற்றியும், அதை வெளி உலகில் செய்யவோ மாற்றவோ வாய்ப்பே இல்லை என்பதையும் அறிந்து கொண்ட சூர்யா, ப்ரோக்ராம்கள் ஆராய்ச்சிச் சாலையில் தான் வேண்டு மென்றே மாற்றப் பட்டிருக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார்; அத்தகைய ப்ரோக்ராம் எழுதக் கூடியவர்களைச் சந்திக்க விரும்பினார்.

சூர்யா சுமிடோமோவுக்கும் ராபர்ட்டுக்கும் தன் சந்தேகத்தை விளக்கினார். "இந்த செயற்கை மூளையின் ப்ரோக்ராமை மாற்ற சாதாரண ப்ரோக்ராமர்களால் இயலாது. அது இயங்கும் விதத்தை சர்வமும் கரைத்துக் குடித்திருக்கும் அசாதாரண ப்ரோக்ராமர் களால்தான் முடியும். அதனால், உங்கள் ப்ரோக்ராம் குழுவிலேயே மிகத் திறமை வாய்ந்த ஒரு ப்ரோக்ராமர்தான் இதைச் செய்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அந்த அளவு திறமையுள்ள ப்ரோக்ராமர்களை எனக்கு அறிமுகம் செய்யுங்கள். அவர்களில் யார், எதற்காக, எப்படிச் செய்திருக்க முடியும் என்று விசாரித்து அறிய முயற்சிக்கிறேன்."

சுமிடோமோ வேகமாகத் தலையசைத்து சூர்யாவின் சந்தேகத்தை மறுத்தார். "சே, சே, அப்படி இருக்கவே முடியாது சூர்யா. என் குழுவிலுள்ள ப்ரோக்ராமர்கள் அனைவரும் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர்கள். அவர்கள் ரோபாட் இயலில் நாங்கள் முயல்வதைச் சாதிக்கவே வெகு நாட்களாகப் பாடுபட்டு வருபவர்கள். அவர்களில் யாரும் இப்படிப் பட்ட துரோகத்தைக் கனவிலும் நினைக்க மாட்டார்கள். இருந்தாலும் நான் அறிமுகம் செய்து வைக்கிறேன். விசாரிச்சதும், நான் சொல்வது பரிபூர்ணமாக சரின்னு நீங்களே தெரிஞ்சுக்குவீங்க."

கிரண் நக்கலாக, "அப்படியே இருக்கலாம், சுமிடோமோ-ஸான். ஆனா, இது வரைக்கும் நாங்க விசாரிச்ச கேஸ் ஒவ்வொண்ணுலயும் மாட்டிக்கிட்டவங்களை ஆரம்பத்துல துளிக் கூட சந்தேகப்பட்டிருக்க முடியாது! எந்தப் புத்துல எந்தப் பாம்பு இருக்கும்னு சொல்லவே முடியாதுன்னு எங்க அம்மா சொல்லுவா. போன கேஸ்ல என்னடான்னா இதோ இருக்காரே ராபர்ட் அவரை மாதிரியான ஆயுள் கூட்டாளியே குழி பறிச்சுட்டார். ஒரு வேளை..." என்று கூறிக் கொண்டே ராபர்ட்டை ஓரக் கண்ணால் பார்த்தான்.

ராபர்ட்டின் முகம் சிவந்தது. எரிமலை போல் வெடிக்கத் தயாரானார். கிரண் இரண்டு கைகளையும் உயர்த்திக் காட்டி சரணாகதி அடைந்தான்! "சும்மா உதாரணத் துக்குத்தான் சொன்னேன் ராபர்ட். நீங்கதான் செஞ்சீங்கன்னு சொல்லலை. உங்களை மாதிரி சந்தேகத்துக்கப்பாற்பட்ட, நெருங்கியவர்களே செஞ்சிருக்கக் கூடும்னு தான் சொல்ல வந்தேன்."

சூர்யாவும் புகுந்து அமைதிப் படுத்தினார். "கோபம் வேண்டாம் ராபர்ட். கிரண் ஒரு தமாஷ் பேர்வழி. ஆனா, சில சமயம் எதுல விளையாடறதுங்கறதுன்னு தெரியாம எதாவது ஏடாகூடமா சொல்லி மாட்டிக்குவான். விட்டுடுங்க", என்று சொல்லி விட்டு சுமிடோமோவிடம் தொடர்ந்தார். "ஆனா, கிரண் சொன்னதுலயும் ஒரு சரியான விஷயம் இருக்கு. ஆரம்பத்துலயே சந்தேகப் பட முடியாதுன்னு விசாரிக்காம விட்டுட்டா உண்மைக் குற்றவாளியைப் பிடிக்க முடியாமப் போயிடும். மேலும், அந்தப் ப்ரோக்ராமர்கள் செய்யலைன்னாலும் கூட, அவங்களோடப் பேசிப் பாத்தா வேற யாருக்கு இந்தத் தொழில் நுட்பம் தெரியும், யார் செஞ்சிருக்கக் கூடும்னு சில தடயங்கள் கிடைக்கலாம்" என்றார்.

சுமிடோமோவுக்குத் தயக்கம் முழுவதும் போகாவிட்டாலும் சரியென்று ஒப்புக் கொண்டு வேண்டா வெறுப்பாக நான்கு ப்ரோக்ராமர்களை ·போனில் அழைத்தார். இதுவரை அவர்களுடன் வெறுமனே நின்று கொண்டிருந்த பட்லர் ரோபாட்டான ஜீவ்ஸ் அவர்களுடைய காலிக் கோப்பைகளை எடுத்துக் கொண்டு போய்விட்டு அவர் களுக்கும், புதிதாக சேர்ந்து கொண்ட நான்கு ப்ரோக்ராமர்களுக்கும் புதிதாகப் பானங்களைக் கொண்டு வந்து லாவகமாக ரஜினி ஸ்டைலில் வினியோகித்தது. கிரண் அதனுடன் ஹை-·பைவாகக் கை தட்டிப் பாராட்டினான். ஜீவ்ஸ் பவ்யமாகக் குனிந்து பாராட்டை ஏற்றுக் கொண்டு ஒரு பக்கமாகத் தள்ளி நின்று கொண்டது.

அதற்குள் சுமிடோமோ அழைத்த நான்கு ப்ரோக்ராமர்களும் வந்து சேர்ந்து கொண்டார்கள். ராபர்ட் அவர்களை அறிமுகம் செய்து வைத்தார். "சூர்யா, கிரண் - இந்த நாலு பேர்தான் எங்க அறிவியல் மூளை கஜானா! இது மார்க் பீட்டர்ஸன். MIT-இல் ஆராய்ச்சிப் பட்டம் பெற்று பல விதமான ரோபாட்களை செய்து சாதனை புரிந்தவர். அடுத்தது சப்ரமேன்யன் (அதாவது, சுப்ரமண்யன் என்ற அழகான பெயரை அவ்வளவு லட்சணமாக உச்சரித்தார்!) இவர் CMU-விலும் JPL-இலும் ரோபாடிக்ஸில் மிகச் சிறந்த ஆராய்ச்சி செய்து பல விருதுகள் பெற்றவர்: என்று கூறிவிட்டு சுமிடோமோவைப் பார்த்தார். சுப்ரமண்யன் எல்லாருக் கும் எளிதாகும் வகையில், "என்னை சுப்புன்னு கூப்பிட்டாப் போதும்" என்று ராபர்ட்டைக் காப்பாற்றினார்!

சுமிடோமோ மற்ற இருவரையும் அறிமுகப்படுத்தினார். "இவர் யமாடா-ஸான். டோக்யோ பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவர். ஹாண்டாவின் ரோபாட் துறையில் மிக முக்கியத்துவம் பெற்றிருந்தவர். அடுத்தவர் டனாகா-ஸான். அவரும் டோக்யோ பல்கலைக் கழக முனைவர்தான். ஸோனியின் ரோபாட் துறையில் பல சாதனைகளைப் புரிந்தவர். இவர்கள் நாலு பேர்தான் எங்க ரோபாட் ப்ரோக்ராம் துறையின் நான்கு பெரும் தூண்கள். இந்தக் குழுவை விட ரோபாட் ப்ரோக்ராமிங்கில் திறன் பெற்றவர்கள் உலகத்திலேயே யாரும் இல்லை என்று சொல்லலாம்" என்று, ஒரு தந்தை உலகப் புகழ் பெற்ற தன் மைந்தர் களைப் பற்றி பேசுவது போல மனம் நிரம்பிய பெருமிதத்துடன் கூறினார். அவர்களிடம் "இவர் சூர்யா. அவர் கிரண். இவங்க நம்ம ரோபாட்கள் வெளி உலகுல ஏன் தவறா நடக்குதுன்னு கண்டு பிடிக்க உதவ வந்திருக்காங்க" என்று மேலாக அறிமுகம் செய்து வைத்தார்.

கிரண் "ரோபாடிக்ஸோட ட்ரீம் டீம்! ஒலிம்பிக்ஸ்ல வச்சு மீதி நாடுகளையெல்லாம் ஒழிச்சுக் கட்டிடலாமா?! ஹையா!" என்று ஒரு கராத்தே போஸ் கொடுத்தான். ப்ரோக்ராமர்கள் நால்வரும் "யார் இந்தக் கிறுக்கன்?!" என்ற கேள்விக் குறியுடன் அவனை நோட்டம் விட்டனர்!

சூர்யா அவர்களுடன் கை குலுக்கிக் கொண்டே இரண்டு வெடிகளை எடுத்து வீசினார்! முதலாவதாக சுப்புவிடம், "என்ன ஸார், வீட்டுல இட்லி சாம்பார் ப்ரெக் ·பாஸ்ட் பிரமாதம் போலிருக்கே, பலே! அதுவும் என்ன மனைவிக்கு பிறந்த நாளா? இல்லைன்னா உங்க கல்யாண நாள் போலிருக்கு? வாழ்த்துக்கள்!" என்றார். பிறகு டனாகாவை நோக்கி குனிந்து வணங்கி விட்டு "இந்த செயற்கையான அறிவியல் சூழ்நிலையிலயும், விடாம புத்த பிரானின் போதனைகளை நினைவில் வைத்துக் கொண்டிருக்கும் உங்களுக்கு என் பாராட்டுக்கள்!" என்றார்.

சுப்பு, டனாகா இருவரின் வாய்களும் ஆவேன்று பிளந்து கண்கள் அகலமாக விரிந்து சூர்யாவை ஒரு திகைப்பு கலந்த வியப்புடன் பார்த்தனர். மற்ற இரு ப்ரோக் ராமர்களும் கூட சூர்யாவை வியப்புடன் பார்த்தனர். அவர்களின் முகம் போன போக்கைப் பார்த்து சுமிடோமோ அடக்க முடியாமல் சிரித்தே விட்டார். சூர்யாவின் யூகத்தை முதலிலேயே கண்டிருந்த ராபர்ட்டின் முகத்திலும் புன்னகை தவழ்ந்தது.

அவர்களின் சிரிப்பைக் கண்டு இன்னும் குழப்பமடைந்த சுப்பு தடுமாற்றத்துடன், ஏன் சற்று கோபத்துடன் கூட, "எ...எ...எப்படித் தெரியும் உங்களுக்கு? சுமிடோமோ-ஸான், என்ன என்னையே சந்தேகிச்சு இவரை வச்சு என் பின்னாடியே வந்து கவனிக்க வச்சீங்களா? என் மேல அவ்வளவுதானா உங்க நம்பிக்கை?!" என்றார்.

கூடவே டனாகாவும், "என் மத நம்பிக்கை என் சொந்த வாழ்க்கைக்குரியது. அதை இங்க வேலை செய்யறச்சே என்னைக் கண்காணிச்சு கண்டு பிடிக்க வேண்டிய அவசியமில்லையே. சந்தேகிச்சு இங்கயும் எங்களைக் கண்காணிக்கறீங்கங்கறது எனக்கு ரொம்ப வருத்தம் தருது..." என்றார்.

சுமிடோமோ தன் சிரிப்பைப் படக்கென்று அடக்கிக் கொண்டு, "சே, சே, நீங்க ரொம்பத் தப்பாப் புரிஞ்சுக்கிட்டிருக்கீங்க. எனக்கு உங்க மேலத் துளிக் கூட சந்தேகமே கிடையாது. இப்பத்தான் சூர்யா கிட்ட அதைத்தான் பலமா அழுத்திச் சொல்லிக் கிட்டிருந்தேன். அவர் உங்க கூடப் பேசினாலே நீங்க அப்படி வருத்தப் படுவீங்கன்னுதான் நான் நினைச்சேன். ஆனா சூர்யா உங்க கூட பேசினா இந்த விஷயத்தைப் பத்தி இன்னும் நல்லாத் தெரிஞ்சுக்கலாம், அப்ப இன்னும் சீக்கிரமா கண்டுபிடிக்க முடியும்னார். அதுக்குத்தான் உங்களைக் கூப்பிட்டனுப்பிச்சேன். மேலும், நாங்க யாரையும் கண்காணிக்கலை, கவலையோ வருத்தமோ கோபமோ வேண்டாம். சூர்யா மிகச் சிறந்த யூகிப்பாளர். ஒண்ணையும் ஒண்ணையும் சேர்த்து ரெண்டுங்காம பதினொண்ணாக்கிடுவார். அப்படித்தான் உங்களைப் பாத்தவுடனே எதையோ வச்சு யூகிச்சிருக்கணும். சின்ன விஷயங்களைத் தொகுத்து ஜீவ்ஸ் ஒரு ரோபாட்டுன்னு ஒரு நொடியில கண்டு பிடிச்சு எங்களைக் கூட அசத்திட்டார். சூர்யா நீங்களே விளக்குங்க!" தன்னை சுமிடோமா சுட்டிக் காட்டியதால், ஜீவ்ஸ் பெருமையுடன் அவர்களுக்கு எல்லாம் குனிந்து வணங்கியது!

சூர்யா விளக்கினார். "கரெக்ட். வெறும் யூகங்கள்தான். நல்லவேளை சரியா இருந்திருக்கு. முதலாவது சுப்பு. அவர் சட்டையில முதல் பட்டன் கீழே ஒரு சின்னக் கறையும், பருப்பு மற்றும் அரிசித் துகள் இருக்கு பாருங்க. அதை வச்சுத்தான் இட்லி சாம்பார் பத்தி யூகிச்சேன். அவர் பாக்கெட்ல நகைக்கடை ரசீது தெரியுது. அதுவும் ரொம்ப சமீப தேதி. அதை வச்சு அவருடைய மனைவிக்கு அன்புப்பரிசா வாங்கியிருக் கணும்னு யூகம். அவ்வளவுதான்."

சுப்புவின் முகம் மீண்டும் மலர்ந்தது! "ஓ, அப்படியா?! பிரமாதம். நீங்க நிஜமாவே சிறந்த துப்பறிவாளர்தான். உங்க யூகம் ரெண்டுமே கரெக்ட். அப்ப டனாகா-ஸான் பற்றி சொன்னது?"

சூர்யா மேலும் விளக்கினார். "அதுவும் யூகந்தான். டனாகா-ஸான் ஒரு வெள்ளை லேப் கோட் போட்டிருக்கார். அதோட பாக்கெட் துணி ரொம்ப மெல்லியது. அதன் மூலமா அதுக்குள்ள இருக்கறதைப் பார்க்க முடியுது. அங்கே நான் அவரோட புத்த மதப் பிரார்த்தனைப் புத்தகத்தைப் பார்த்தேன். நான் புத்த மடங்களில் பிட்சுக்கள் அதைப் படித்துக் கொண்டு தியானிக்கறதைப் பாத்திருக்கேன். இந்த செயற்கை அறிவியல் சூழ்நிலையிலயும் அவர் அதைக் கடைப் பிடிக்கிறார்ங்கறது எனக்கு ரொம்ப வியப்பையும் மரியாதையும் விளைவிச்சுது. அதனாலதான் அவரைப் பாராட்டினேன்."

டனாகா வாயின் நீண்ட பற்களையெல்லாம் காட்டி பெரிதாகப் புன்னகைத்தார். "அட்டகாசம், சூர்யா-ஸான். உங்க பார்வை மேலும் அறிவின் கூர்மையை நான் பதிலுக்குப் பாராட்டியே ஆகணும்!"

ராபர்ட் எல்லாரையும் மீண்டும் வேலைக்கு இழுத்தார். "சரி, சரி, இந்த பரஸ்பர பாராட்டு சங்கம் இன்னும் கொஞ்ச காலம் கழிச்சு வச்சுக்கலாம்! இப்ப இந்த ரோபாட் ரகளையை எப்படி நிவர்த்திக்கறதுன்னு பாக்கலாம் வாங்க. சூர்யா நீங்க இவங்களோட எப்படி பேச விரும்பறீங்க? ஒண்ணா சேர்ந்தா இல்லை தனித் தனியாவா?"

சூர்யா சில நொடிகள் யோசித்து விட்டு, "முதல்ல இப்ப நாம எல்லாரும் சேர்ந்தே பேசலாம். அதுக்கப்புறம் வேணும்னா நானே தனியா யாரோட பேசணுமோ அவங்களை அணுகறேன். என்றார். அனைவரும் அங்கிருந்த ஒரு நீள மேஜையைச் சுற்றி அமர்ந்தனர். ஜீவ்ஸ் அவசரமாகச் சென்று எல்லாருக்கும் பாட்டில் குடிநீர் கொண்டு வந்து வைத்தது. சுமிடோமோ "சபாஷ், ஜீவ்ஸ், யாரும் சொல்லாமலேயே சரியா புரிஞ்சுகிட்டு நீயே செஞ்சுட்டயே, அபாரம்!" என்றார். ஜீவ்ஸ் பெருமிதமாக தலையாட்டி விட்டு அருகில் ஒரு பக்கமாக நின்று கொண்டது.

கிரண்தான் முதலில் ஆரம்பித்தான். "எனக்கு ஒரு சந்தேகம். நான் என் நண்பர்கள் ப்ரோக்ராம் செய்யறப்போ பார்த்திருக்கேன். எங்க பங்கு வர்த்தக நிறுவனத்துல நடந்த கம்ப்யூட்டர் ப்ரோக்ராம் சம்பந்தப் பட்ட ஊழல் விவகாரத்துலயும் பார்த்திருக்கேன். அவங்க எதாவது சரியா வேலை செய்யலைன்னா அதுல பக் கண்டுபிடிக்க டீபக்கர்னு ஒண்ணு பயன் படுத்துவாங்க. இந்த ப்ரோக்ராம் அது மாதிரி கம்ப்யூட்டர் மொழியில இல்லையே, எதோ காரே மோரேன்னுன்னா இருக்கு?! எப்படி டீபக் பண்ணுவீங்க?!" என்றான்.

ப்ரோக்ராமர்கள் நால்வரில் ஒருவரான மார்க் பீட்டர்ஸன் சிரித்து விட்டு பெரு மிதத்துடன் பதிலளித்தார். "நல்ல கேள்வி. நான் சொல்றேன். கிரண், நீ சொல்றா மாதிரி, இந்த மாதிரி புது விதத்துல ப்ரோக்ராம் செய்யணும்னா புது விதத்துல தான் பழுது பார்க்கவும் கருவிகளும் டீபக் ப்ரோக்ராம்களும் ஏற்படுத்தணும். அதுவே ஒரு பெரிய புது தொழில்நுட்பம்னே கூட சொல்லலாம். சுமிடோமோ-ஸான், நீங்க இவங்களுக்கு நாம எப்படி ப்ரோக்ராம் செய்யறோம்னு விளக்கிட்டீங்களா?"

சுமிடோமோ, "ரொம்ப மேலாத்தான் சொன்னேன். இந்தக் கேள்விக்கு பதில் சொல்லணும்னா இன்னும் கொஞ்சம் விளக்கணும்னு நினைக்கிறேன்." என்றார்.

சுப்பு புகுந்து ஊக்கத்துடன் தொடர்ந்தார். "சரி, நான் விளக்கறேன். மார்க் MIT-யில ஆரம்பிச்ச ஆராய்ச்சிதான் அதுக்கு அடிப்படை. அவரோட நானும் சேர்ந்து ஆராய்ச்சி செஞ்சேன். இந்தச் செயற்கை மூளையின் நியூரான்கள் ஒண்ணுக்கொண்ணு பிணைஞ்சு ஸிக்னல் அனுப்பறதுதான் ப்ரோக்ராம்னு சுமிடோமோ-ஸான் சொல்லி யிருப்பார். முதல்ல, எந்தக் காரியத்துக்கு எந்தெந்த நியூரான்கள் எதெதோட பிணைப்பு வச்சு, எப்பப்போ எவ்வளவு பலமான ஸிக்னல் அனுப்பணும்னு செஞ்சு பார்க்க நாங்க ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வச்சிருக்கோம். அதுல ஸிமுலேட் செஞ்சு சரியான விதத்துல வேலை செஞ்சாத்தான் அந்த நியூரான் நெட்வொர்க் ப்ரோக்ராமை செயற்கை மூளைக்கு ட்ரான்ஸ்·பர் செய்யறோம்."

கிரண், "ஓ, அப்படின்னா உங்க ப்ரோக்ராம் முதல்ல உங்க கம்ப்யூட்டர் ஸிமுலேட்டர்ல ஓடுது. அப்புறம் அப்படியே எடுத்து ரோபாட் மூளைக்கு பதிச்சிடறீங்க. சரி, அப்புறம் சரியா வேலை செய்யலைன்னா?" என்றான்.

டனாகா தொடர்ந்து விளக்கினார். "எவ்வளவு ஸிமுலேட் செஞ்சாலும் ரோபாட்ல முதல்ல சோதிக்கறப்ப பல பழுதுகள் இருக்கத்தான் செய்யுது. ஏன் அப்படி ஆகுதுன்னு பார்க்க நாங்க ஒவ்வொரு நியூரானும் எந்த மாதிரி ஸிக்னல் எங்க அனுப்பிச்சுதுன்னு பதிவு செய்ய ஒரு ஸ்கேன்னர் வச்சிருக்கோம். அது ஒரு நொடியில பல கிகாபைட்கள் அளவுக்கு ட்ரேஸ் எடுத்துடும். அதை அப்புறம் கம்ப்யூட்டருக்கு அனுப்பி, எங்க ஸிமுலேட்டர்ல மீண்டும் ஓட்டி ஒவ்வொரு ஸ்டெப்பா முன்னாலயும் பின்னாலயும் போக வச்சு எது தப்பான பிணைப்பு, எது சரியான பலமில்லாத ஸிக்னல், எந்த நியூரான் தேவையில்லை இல்லைன்ன அதிகமா வேணும்னு கண்டு பிடிக்கறோம்."
சூர்யா புகுந்து வினாவினார். "எதாவது சரியில்லைன்னா டீபக்கர்லயே மாத்தி சரியா ஓடுதான்னு பார்ப்பீங்க இல்லையா?"

யமாடா தலையாட்டி ஆமோதித்தார். "ஆமாம். சின்ன சின்ன மாற்றங்கள் எதாவதுன்னா டீபக்கர்லயே ரோபாட் மூளையிலையே மாத்தி சோதிச்சுடுவோம். ஆனா பெரிய மாற்றம் தேவைன்னா திரும்பி ப்ரோக்ராம் கம்பைல் செய்யற கம்ப்யூட்டர்ல செஞ்சு மொத்த ப்ரோக்ராமையும் மூளைக்கு திரும்ப அனுப்பித்தான் மாத்த முடியும்."

சூர்யா தொடர்ந்தார். "சில ரோபாட்களோட ப்ரோக்ராம் வெளி உலகில மாறியிருக்குன்னு சொல்றாங்களே. இந்த டீபக்கர் மூலமா மாத்தியிருக்க முடியுமா, இல்லைன்னா அது ரொம்பப் பெரிய மாற்றமா?"

ரோபாட் விஞ்ஞானிகள் அனைவரும் சூர்யாவின் கூர்மையான அறிவைக் கண்டு பெரும் வியப்படைந்தனர். சுப்புதான் வெளிப்படையாகக் கூவினார். "பிரமாதமான கேள்வி சூர்யா! இதையேத்தான் நாங்களும் முதலில் சந்தேகப்பட்டோம். எங்க துறையைப் பத்தி ஒண்ணுமே தெரியாம படக்குன்னு உடனே அங்கே தாவிட்டீங்களே, சபாஷ்! ஆனா அந்த ரோபாட்களின் மூளையில செய்யப்பட்டிருந்த மாற்றம் டீபக்கர்ல செஞ்சிருக்க முடியாது. அந்த முடிவுக்கு வரத்துக்கு இரண்டு பெரிய காரணங்கள். ஒண்ணு, உங்க சந்தேகப்படியே அந்த மாற்றங்கள் டீபக்கர்ல செய்ய முடியறதை விட ரொம்பப் பெரிசு; இன்னொண்ணு, வெளி உலகில எங்கயுமே டீபக்கர் கிடையாது. ஆக மொத்தம் அந்த மாற்றம் இங்க இருக்கற ப்ரோக்ராமிங் கம்ப்யூட்டர் ஒண்ணுலதான் செய்யப் பட்டிருக்க முடியும்."

கிரண் ஆவலுடன் இடையில் தாவிக் குதித்தான்! "ஓ! ஓ! அப்ப இந்தக் கம்ப்யூட்டர்ல அந்த மாற்றங்கள் பதிவாயிருக் கணுமே?! அதைப் பார்த்தா யார் எப்ப மாத்தினாங்கன்னு தெரியணுமே, அலசினீங்களா?!"

ராபர்ட் சோகமாக மெல்லத் தலையசைத்து மறுத்தார். "அவ்வளவு சுலபம் இல்லை கிரண். அலசிப் பார்த்துட்டோம். ஆனா அந்த மாதிரி மாற்றம் எதுவும் எங்க ஸோர்ஸ் கோட்ல இல்லவே இல்லை. மாத்தி டவுன் லோட் பண்ணிட்டுத் திருப்பி மாத்தியிருப் பாங்களோன்னும் பாத்தோம். எந்த விதமான மாற்றமும் வெர்ஷன் கன்ட்ரோல் ஸிஸ்டத்துல பதிவாகலை. ஏன், அந்த மாதிரி மாற்றம் செஞ்ச மாதிரி எந்த ப்ரோக்ராமிங் கம்ப்யூட்டர் லாக் ·பைல்லயும் கூட பதிவாயில்லை."

சூர்யா யோசனையுடன் வினாவினார். "ஹ்ம்ம்ம்ம்... யாரோ ரொம்பக் கவனமாத் தான் தடயங்களை மறைச்சிருக்கறா மாதிரியிருக்கு. லாக் ·பைல் குறிப்பீடு களையும் மாற்றங்களுக்கானக் குறிப்பீடு களையும் கூட அழிச்சிருக்கலாம் இல்லையா?"

கிரணும் ஆமோதித்தான். "ஆமாமாம். எங்கக் கம்பனியில நடந்த ஊழல் விவகாரத்தை சூர்யா விசாரிக்கறச்சேக் கூட அப்படித்தான் நடந்தது. எல்லாத்தையும் அழிச்சிட்டாங்க. ஆனாலும் சூர்யா என்னமோ சூட்சுமமா செஞ்சு ஆசாமியைக் கண்டு பிடிச்சார். இங்கயும் அப்படித்தானோ என்னமோ?!"

சுமிடோமோ பலமாகத் தலையசைத்து மறுத்தார். "இருக்கவே முடியாது. மாற்றங் களும் லாக் ·பைல்களும் நிமிஷத்துக்கு நிமிஷமா இன்னொரு கம்ப்யூட்டருக்கு அனுப்பப் பட்டு அழிக்கப் பட முடியாத, பதிவு மட்டுமே செய்யக் கூடிய தட்டுக்களில் சேமிக்கப் படுகின்றன. அந்த வரிசையில வர கம்ப்யூட்டர்கள் வேற வேற ஆட்களால் மட்டுமே பயன் படுத்த முடியும். அது எல்லாவற்றுக்கும் அனுமதியுள்ளவர்கள் யாருமே இல்லை. நான் கூட இல்லை. நாங்க கம்ப்யூட்டர் மற்றும் டேட்டா பாதுகாப்பைப் ரொம்ப முக்கியமா வச்சு இந்த மாதிரி செஞ்சிருக்கோம்."

சூர்யா சில நொடிகள் மௌனமாக சிந்தித்தார். பிறகு பெருமூச்சுடன் தொடர்ந்தார். "இது ரொம்பவே சிக்கலா இருக்கே. வெளி உலகில மாத்தியிருக்கவே முடியாது. இங்கயும் மாத்தின மாதிரியான ஒரு தடயம் கூட இல்லை. ஆக மொத்தம் இது செய்யப்பட்டிருக்கவே முடியாதுன்னுதானே புலப்படுது!" என்றவர் திடீரென ஒரு எண்ணம் தோன்றவே கையைச் சொடுக்கி விட்டு "ஒரு வேளை இப்படி இருக்கலாமோ?!" என்றார்.

கூடியிருந்த மற்ற அனைவரும் ஆர்வத்துடன் சூர்யாவின் கருத்தை எதிர்பார்த்தனர். கிரணும் சுமிடோமோவும் குதித்தனர். "என்ன, என்ன? எப்படி இருக்கலாங்கறீங்க?!"

சூர்யாவின் சிந்தனை சென்ற திசை அவர்கள் யாருமே நினைத்திருக்க முடியாதபடி திகைக்க வைத்தது!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline