Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
June 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | நலம்வாழ | சாதனையாளர் | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | சமயம் | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
சூர்யா துப்பறிகிறார்
ரோபாட் ரகளையின் ரகசியம் - பாகம் 5
- கதிரவன் எழில்மன்னன்|ஜூன் 2005|
Share:
Click Here Enlargeமுன் கதை:

சிலிக்கன் பள்ளத்தாக்கின் தொழில் நுட்பத் துப்பறிவாளர் சூர்யா. அவரது நண்பர் சுமிடோமோ, தன் ரோபாட் ஆய்வுக் கூடத்தில் ஒரு முக்கியப் பிரச்சினையைத் தீர்க்க அவரது உதவியை நாடுகிறார். சூர்யாவும் கிரணும் சுமிடோமோவைச் சந்திக்க அங்கே செல்கின்றனர். அங்கு ஆங்கிலேய பட்லரைப் போலவே நடந்து கொண்ட ஜீவ்ஸ் என்ற ஒரு ரோபாட்டைப் பார்த்து கிரண் ஏமாந்தே போனான். பிறகு சுமிடோ மோவின் கூட்டாளி ராபர்ட்டைப் பார்த்து அவரும் ஒரு ரோபாட் என்று ஏமாந்து போனான். சுமிடோ மோவும், ராபர்ட்டும் ரோபாட்கள் முன்னேறிய சரித்திரத்தைப் பற்றியும் கூறினர். பிறகு தமது முயற்சி வயதானவர்களுக்கும் நோயாளிகளுக்கும் எப்படி உதவும் என்று விளக்க ஆரம்பித்தனர்...

வயதானாலோ, உடல் நலம் சரியில்லா விட்டாலோ என்ன, உதவியாளர்களை வைத்துக் கொண்டோ அல்லது முதியோர் அல்லது மருத்துவ இல்லங்களில் இருந்து கொண்டே சமாளித்துக் கொள்ளலாமே என்று கிரண் கேட்டதற்கு, ராபர்ட் அதுதான் பிரச்சனையே, அதற்கு நிவாரண மாகத்தான் தங்களது ரோபாட்கள் இருக்கும் என்றார்.

அதற்கு சுமிடோமோவும் அதிகமாக தலையாட்டி அழுத்தமாக ஆமோதித்தார். "கிரண், நீ சொல்றபடியே இருக்கலாம். அப்படித்தான் இப்ப நடந்துக்கிட்டிருக்கு. ஆனா அதுல பல விதப் பிரச்சனைகள் இருக்கு. முதலாவது, வீட்டுல உதவியாளர்களை வச்சுக்கிறது மிகமிகச் செலவு அதிகம். எல்லாராலும் முடியாது. இரண்டாவது, முதியோர் இல்லம் போன்ற இடங்கள் ஹோட்டல், ஹாஸ்பிடல் மாதிரிதானே தவிர அவர்களோட வீடு மாதிரி செளகர்யமோ, நல்லாப் பழகி, தங்களோட வாழ்க்கையில ஊறின இடமோ இல்லை. உதாரணமா, அவர்களோட குழந்தைகள் விளையாடின இடங்களையெல்லாம் நினைவு கூர்ந்து மகிழ முடியாது. அது தவிர அதுவும் செலவு அதிகமாகிக்கிட்டிருக்கு. மேலும்..."

ராபர்ட் முடித்தார். "அந்த மாதிரி இல்லங்களில் அவங்களுக்குன்னு தனிப்பட்ட மாதிரி, அவங்களோட நிலைமைக்கும் குணாதிசயத்துக்கும் ஒத்துப் போறா மாதிரியான உதவி கிடைக்கிறதில்லை. பத்தோட பதினொண்ணா ஏனோதானோங்கற மாதிரியான பணிவிடைதான் கிடைக்குது."

சூர்யா ஒத்துக் கொண்டார். "அது சரிதான். நீங்க அதை எப்படி மாத்தப் போறீங்க?"

சுமிடோமோ உணர்ச்சிப் பிழம்பாக விளக்கினார். "1940-ல கம்ப்யூட்டர்கள் வரப்போ IBM-இன் அதிபர் தாமஸ் வாட்ஸன், அந்த மாதிரி இயந்திரங்கள் உலகத்துல ஐந்து இருந்தா போதும்னு சொன்னார். இப்போ? இதோ கிரணோட இடுப்புல தொங்கற PDAகூட அந்தக் கம்ப்யூட்டரை விடப் பல மடங்கு அதிகச் சக்தி வாய்ந்ததாயிடுச்சு. அதே போல தொழிற்சாலைகளில் மட்டும் பயன்படுத்தப்படற ரோபாட்களை ஒவ்வொரு தனி மனிதருக்கும் பல ரோபாட்கள் சேவகம் செய்யக் கூடிய அளவில் விலை குறைச்சு, அவங்கவங்களுக்கு ஏத்தா மாதிரி பணி விடை செய்யவும் வைக்கப் போறோம். மருந்து மாத்திரை, சமையல், வீட்டை சுத்தம் செய்யறது, நடமாட முடியலைன்னா உதவறது, அது போல."

ராபர்ட்டும் உற்சாகத்துடன் தொடர்ந்தார். "சூர்யா, இது ஒண்ணும் வெறும் பகல் கனவு இல்லை. ஏற்கனவே நாங்க சொல்ற மாதிரி ஓரளவுக்கு நடக்குது. லாஸ் ஏஞ்சலஸ்ல சில்வராடோங்கற முதியோர் இல்லத்துல ரோபாட்டுக்குக் காமிரா வச்சு, அதன் மூலம் தூரத்திலேந்தே அங்க வசிக்கறவங்களோட மருத்துவர்கள் பேசறாங்க. MIT-ல ஒரு ரோபாட் கை செஞ்சிருக்காங்க. அது உடல் ஊனமுற்றவங்களுக்கு ·பிஸிகல் தெரபி செய்யுது - ஒரே மாதிரி மீண்டும் மீண்டும் கையைக் கால நகர்த்தி பயிற்சி கொடுத்து திரும்பவும் மூளைக்கும் தசைக்கும் நரம்புக் கும் தொடர்புகள் ஏற்படுத்தறா மாதிரி செய்யுது."

சுமிடோமோ மேலும் விவரித்தார். "ஜப்பான்ல கூட வயசானவங்களைப் பராமரிக்க வாகமாரு (wakamaru) என்கிற ரோபாட்டை மிட்ஸ¤பிஷி நிறுவனம் செஞ்சிருக்கு. அதுக்கு ஆண், பெண் எந்தக் குரல் வேணா குடுக்கறாங்க. அது வேளா வேளைக்கு மருந்து சாப்பிட ஞாபகப் படுத்துது. மேலும், பராமரிக்கப் படறவங்க எதாவது உபாதைப் படறா மாதிரி இருந்தா தன்கிட்ட இருக்கற செல்·போன் மூலம் மருத்துவரையும் கூப்பிடுது."

ராபர்ட் மீண்டும் தொடர்ந்தார். "அது மட்டுமில்லை. தாங்க பராமரிக்கறவங்களோட உடல் நலம் மட்டுமில்லாம, மனோ நிலையும் எப்படி இருக்குன்னு யூகிச்சு அதுக்கு ஏத்தா மாதிரிச் செய்ய வாண்டர் பில்ட் பல்கலைக் கழகத்துல ஒரு ரோபாட் செஞ்சிருக்காங்க."

கிரண் களுக்கென்று சிரித்தான். "கூல்! ஆடிப் பாடி, ஜோக் சொல்லி கலாய்க்குமா! எனக்கு ஒண்ணு வாங்கிக் குடுங்க! என் ஸ்டாக் ஒண்ணு விலை சரிஞ்சதுன்னா ஒரே டல்லுதான். இது இருந்தா கொஞ்சம் சமாளிச்சுக்கலாம்."

சுமிடோமோ புன்னகைத்தார். "பார்க்கப் போனா கிரண், நீ எங்க நோக்கத்துக்கு ரொம்பக் கிட்ட வந்துட்டே. மனிதர்களைப் போலவே இருக்கறா மாதிரி நாங்க ரோபாட் உருவாக்க முயற்சிக்கறத்துக்கு அதுவும் ஒரு காரணம். பொதுவா வயசானவங்க பலருக்குத் துணையா யாரும் இருக்கறதில்லை. அவங்க பிள்ளை பெண்களுக்கு அவங்கவங்க வாழ்க்கைப் பிரச்சனை. எங்கெங்கயோ இருக்காங்க. பலருக்கு முதியோர் இல்லத்துல இருக்கவும் பிடிக்கற தில்லை. வீட்டுல யாராவது இருந்தாலும், அவங்க பகல் வேளையில வேலை வெட்டின்னு வெளியில போக வேண்டியிருக்கு; இவங்க ஒண்டியா அல்லாடறாங்க. பல நோயாளி களுக்கும் வயசு ஆகாட்டாலும் இதே பிரச்சனைதான். அதுனால அவங்களுக்கு நல்ல துணையா, அவங்களோட குணாதி சயத்துக்கு ஏத்தா மாதிரி பழகி மகிழ்விக்கறா மாதிரி செய்யணும்னு முயற்சிக்கறோம்."

ராபர்ட் முத்தாய்ப்பு வைத்தார். "சீட்டு விளையாடறது, செஸ் விளையாடறது, ஜோக் சொல்றது மாதிரி பலது செய்யலாம். ஆனா ஆடிப் பாடாது. அதுக்கு தான் டெலிவிஷன், DVD எல்லாம் இருக்கே. இதோ ஜீவ்ஸ் இருக்கானே, பிரமாதமா செஸ் விளையாடுவான். எதிராளியோட லெவலுக்கு ஏத்தா மாதிரி சுலபமாவோ, இல்லைன்னா ரொம்ப திறமையோடவோ அட்ஜஸ்ட் பண்ணி ஆடுவான். ஆடிப் பாக்கறயா?"

கிரண் முகம் சுளித்தான். "அய்யே, செஸ்ஸா! விர்ச்சுவல் ரியாலிட்டி வீடியோ கேம் வேணா என்னோட வந்து ஆடச் சொல்லுங்க, பின்னிக் கட்டிடறேன்" என்றான்.

சுமிடோமோ சிரித்தார். "அது சரிதான். இப்ப இளைஞர்களா இருக்கறவங்களைப் பராமரிக்க செஸ் வேண்டாம் ராபர்ட். ஜீவ்ஸ¤க்கு நாம வீடியோ கேம் கத்துக் கொடுக்கணும்" என்றார்.

சூர்யா முறுவலுடன், "வேண்டாம், கிரண் தான் உருப்படாம வீடியோ கேம் பித்தனாயாச்சு, ஜீவ்ஸையாவது உருப்படியா வளர்த்து ஆளாக்குங்க, செஸ் போதும்!" என்றார்.

கிரண் பதிலுக்குப் பழித்துக் காட்டினான். "அய்யோ பாவம் ஜீவ்ஸ். பிறந்த உடனேயே கிழவனாக்கிடறீங்க. பாவம் குழந்தை. கொஞ்ச நாளாவது சந்தோஷமா இருந்துட்டுப் போகட்டுமே!"

சுமிடோமோ, ராபர்ட் இருவரும் சிரித்தனர். சூர்யா எல்லோரையும் மீண்டும் தற்போதைய பிரச்சனைக்கு இழுத்தார். "சரி, உங்க குறிக்கோளை அடைய நல்ல ஆரம்பமிருக்குன்னு இந்த ஆய்வுக்கூடம் சொல்லுது. ஆனா எதோ தடங்கல் இருக்கு போலிருக்கு? அதுக்குத்தானே என்னைக் கூப்பிட்டீங்க? என்ன விஷயம்?"

சுமிடோமோ, ராபர்ட் இருவர் முகத்திலும் புன்னகை வறண்டு வருத்தமும் கவலையும் குடியேறின. சில நொடிகள் மெளனம் நிலவியது. ராபர்ட் தான் முதலில் கலைத்தார். "நீங்க சொல்றா மாதிரி ரொம்ப நல்ல ஆரம்பந்தான் சூர்யா. ஜீவ்ஸ் அளவு இல்லாட்டாலும், கொஞ்சம் ரோபாட்டாத் தெரியற மாதிரி ரோஸி, ரானல்ட்டுன்னு அதுபோலப் பல வீட்டுவேலை செய்யக் கூடிய ரோபாட்கள் உருவாக்கியிருக்கோம். அதுல பலவற்றை வெளி உலகத்துலயும் நடமாடவிட்டு, பேட்டா சோதனைக்கு சிலர் வீடுகளிலயும் பழக விட்டிருக்கோம். முதல்ல எல்லாம் நல்லாவே நடந்துக்கிட்டிருந்தது. பராமரிக்கப்பட்ட வயசானவங்களும் உடல் நலமில்லாதவர்களும் ஆரம்பத்துல பிடிக்கலைன்னாலும் போகப் போக ரொம்பவே விரும்பிப் பழக ஆரம்பிச்சாங்க. மொத்தமா மனிதத் தனமில்லைன்னாலும் தங்களுக்குன்னு ஒரு தனிப்பட்ட உதவியாளாகவும் தோழன் தோழியாகவும் ஒரு ரோபாட் இருக்கறது அவங்களுக்கு ரொம்பப் பிடிச்சிருந்தது. வீட்டில நாய், பூனை பெட்களா துணை இல்லையா? அதை விடப் பல மடங்கு நல்லதா, பயனுள்ளதா இருக்கற பெட் மாதிரி வச்சுக்கிட்டாங்க. ஆனா..."

ராபர்ட்டின் குரல் தேய்ந்து மறைந்தது. அவர் சுமிடோமோவைப் பார்த்து மேலே சொல்வதா என்று தயங்கினார். சுமிடோமோ ஆழ்ந்த பெருமூச்சு விட்டுத் தலையசைத்து விட்டுத் தொடர்ந்தார். "பரவாயில்லை ராபர்ட். நம்ம பிரச்சனை தீரணும்னா சொல்லித்தானே ஆகணும். சொல்றேன். சூர்யா, நல்லாப் போயிக்கிட்டிருந்த வெளி உலக சோதனைகளில் திடீர்னு சில சிக்கல்கள் வர ஆரம்பிச்சுது..."

சுமிடோமோ நிறுத்திவிட்டு சொல்லவே முடியாத உள்வலி போல் தலையை அழுத்திவிட்டுக் கொண்டார். சூர்யா அவரை ஊக்குவித்தார். "உம், மேலே சொல்லுங்க."

சுமிடோமோ சிலிர்த்துக் கொண்டு மனக்கசப்பை விழுங்கிக் கொண்டு மேலும் கூறினார். "ஒரு வீட்டுல ஒரு வயசான கிழவிக்கு கால் கை பிடிச்சு விடும்போது ரொம்ப அழுத்தி எலும்பு உடைஞ்சு போச்சு..."

கிரண் தனக்கே உடைந்தது போல், "அவுச்!" என்று கத்தி கையைப் பிடித்து விட்டுக் கொண்டான். சுமிடோமோ அவனை முறைத்துப் பார்த்தார்.

சூர்யா குழப்பத்துடன் கேட்டார். "அப்படியா? புதிரா இருக்கே! தொழிற்சாலை ரோபாட்களில் கூட கேள்விப்பட்டிருக்கேன், ஓரளவுக்கு மேல அழுத்தாம வேலை செய்ய ப்ரோக்ராம் செஞ்சிருப்பாங்க. அப்படி யில்லையா?"

ராபர்ட் உள்மனதில் வளரும் மதிப்புடன் பதிலளித்தார், "ரொம்ப சரி சூர்யா. அப்படித்தான். பார்க்கப் போனா, அதை விட இன்னும் பல மடங்கு மேலானதுன்னு சொல்லணும். மனிதர்களைப் பராமரிக்கறதுனால அவங்களோட உடல் பாங்கு எப்படி இருக்கு, அவங்களுக்கு அழுத்தி விடும்போது எப்படி ·பீல் பண்றாங்க, எப்படி காட்டிக் கறாங்கங்கறதையெல்லாம் வச்சு கணிச்சு அதுக்குத் தகுந்தா மாதிரி மென்மையா அழுத்தற மாதிரிதான் ரோபாட்டுக்கு ப்ரோக்ராம் செஞ்சிருக்கோம். ஆனா இந்த ரோபாட்டுக்கு எதோ தவறிடுச்சு. நோயாளியோட வலிக்கற முக பாவனைகள், சைகைகள், வெளிப்படையான சொற்கள் எல்லாத்தையும் கவனிக்காம ஓரளவுக்கு மேல அழுத்தி உடைச்சிடுச்சு."

சூர்யா யோசனையுடன் வினாவினார். "அப்புறம் அந்த ரோபாட்டை நீங்க சோதனை செஞ்சு பார்த்திருக்கணுமே? நடந்ததுக்கு காரணம் எதாவது தெரிஞ்சுதா?"

சுமிடோமோ பதிலளித்தார். "உடனடியான காரணம் தெரிஞ்சுது. ரோபாட்டோட ப்ரோக்ராம் நாங்க வழக்கமா செய்யறபடியா இல்லாம கொஞ்சம் மாறியிருந்தது. சில நிலைமைகளில அழுத்தத்தைக் குறைக்கறத்துப் பதிலா அதிகமாக்கிடறா மாதிரி புதுசா இருந்தது. ஆனா அதுக்கான மூல காரணம் விளங்கலை. இதெல்லாம் ரொம்ப சோதனை செஞ்சுத்தான் வெளியில அனுப்பறோம். அந்த மாதிரியான மாற்றம் எங்க சோதனைச் சாலையில எங்கயும் இல்லை. ரோபாட்டுக்கு ப்ரோக்ராம் செஞ்சப்புறம் மாற்றவும் முடியாது. எங்க ஆராய்ச்சி சாலைக்குக் கொண்டு வந்துதான் மாத்தறா மாதிரி வச்சிருக்கோம்."

கிரண் வியப்புடனும் குழப்பத்துடனும் கேட்டான். "ஏன் அப்படி? ப்ரோக்ராமை ரோபாட் இருக்கற இடத்துலயே மின்வலை மூலமா மாத்த முடியாதா என்ன? என் செல் ·போனைக் கூட மாத்த முடியுது!"

சுமிடோமோ தலையாட்டி ஆமோதித்தார். "நீ சொல்றது சரிதான் கிரண். வேணும்னா சுலபமா அப்படிச் செய்யலாம். எங்க ரோபாட் நல்லாப் பழகி முழு விற்பனைக்கு வரும்போது அப்படித்தான் செய்யறதா இருக்கோம். ஆனா இப்ப சோதனைப் பருவத்துல இருக்கறதுனால எதாவது தகராறுன்னா, முழுப் பரிசீலனை செய்யறத் துக்காகத் திரும்ப ஆராய்ச்சி சாலைக்குக் கொண்டு வந்துடறோம். மேலும், இந்த நிலையில, எதாவது அசம்பாவிதமா அல்லது தன்னிச்சையா ப்ரோக்ராம் மாறிடக் கூடாதுங்கறத்துக்காக மாத்த முடியாத மெமரி சிப்ல ப்ரோக்ராம் போட்டு வச்சிருக்கோம்" என்றார்.

அதுவரை யோசனையில் ஆழ்ந்திருந்த சூர்யா, "அப்போ நம்ம வேலை பல மடங்கு எளிதாயிடுச்சு! அந்த ரோபாட் தவறா நடந்துக்கிட்டதுக்கு வெளி உலகுல எதுவும் அல்லது யாரும் காரணமில்லை. உங்க ஆராய்ச்சி சாலை தான் காரணம் போலிருக்கு" என்றார்.

ராபர்ட் சூடாக, "ஏன் அப்படி சொல்றீங்க? வார்த்தையை அளந்து பேசுங்க. நாங்க எவ்வளவு கவனமா சோதனை செஞ்சு அனுப்பறோம் தெரியுமா? எப்படி நாங்க காரணமாயிருக்க முடியும்?" என்றார்.
சூர்யா சமாதானம் செய்தார். "நீங்களே காரணமாவோ, கவனக் குறைவாகவோ செஞ்சதா சொல்லலை ராபர்ட். சுமிடோமோ சொன்னதையே வச்சுப் பாருங்க. ரோபாட்டோட ப்ரோக்ராமை வெளியுலகத்துல மாத்த வழியில்லை. மாற்ற முடியாத சிப்லதான் ப்ரோக்ராம் இருக்கு. தவறிருந்தாக் கூட ஆராய்ச்சி சாலைக்குக் கொண்டு வந்துதான் மாத்த முடியும்னு சொன்னார். அதுனால தான், அந்தப் ப்ரோக்ராம் இங்கதான் மாத்தப்பட்டிருக்கணும்னு. என்ன சரிதானே?"

ராபர்ட் வேண்டா வெறுப்பாக ஒத்துக் கொள்ள வேண்டியதாயிற்று. "உம்ம்... சரிதான். அப்படித்தான் நடந்திருக்கணும்." என்றார். உள்ளுக்குள் அவருக்கு சூர்யா மேலிருந்த மரியாதை மேலும் வளர்ந்தது.

சூர்யா சுமிடோமோவை மேலும் தொடருமாறு தூண்டினார், "இன்னும் என்ன தவறாச்சு சொல்லுங்க."

சுமிடோமோ தலையாட்டி விட்டு கசப்புடன் தொடர்ந்தார். "இன்னொரு இடத்துல எங்க ரோபாட் சமைக்கறப்போ துடைக்கற துணியைக் கொளுத்தி தீவிபத்து ஏற்படுத்திடுச்சு."

கிரண், "அதனாலென்ன? நான் ரொம்ப சகஜமா பண்ற வேலைதானே இது? ரோபாட்டுக்கு இந்த மாதிரி எப்பவோ அசம்பாவிதமா நடந்துட்டா துரதிர்ஷ்டம்னு விட்டுட்டு நடக்கற கதையைப் பாக்க வேண்டியதுதானே!" என்றான்.

ராபர்ட் பதிலளித்தார். "அதென்னவோ வாஸ்தவந்தான். ஒரு முறை நடந்துட்டா விட்டுடலாம். ஆனா இந்த ரோபாட் ஒரு வாரத்துக்குள்ள ரெண்டு மூணு தடவை இந்த மாதிரி செஞ்சுடுச்சு. அதை அப்படி சும்மா விட்டுட முடியாது."

கிரண் சுட்டு விரலால் கழுத்தில் கோடு போட்டுக் காட்டினான். "அப்ப அவ்வளவு தான். ரோபாட் அவுட்!"

சூர்யா விளக்கம் கேட்டார். "அந்த ரோபாட்டையும் நீங்க ஆராய்ச்சி சாலைக்குக் கொண்டு வந்து சோதிச்சுப் பாத்தீங்களா? என்ன தெரிஞ்சுது?"

சுமிடோமோ மெல்ல தலையாட்டினார். "சோதிச்சோம். சமைக்கறப்போ அந்த மாதிரி விபத்து நடக்காம கவனமா நடந்துக்கறா மாதிரி இருக்க அதுக்கு ஒரு ப்ரோக்ராம் இருந்திருக்கணும். சோதனைச் சாலையில எல்லா ரோபாட்டுக்கும் அந்த மாதிரி ப்ரோக்ராம் இருக்கு. ஆனா இந்த ரோபாட்டோட ப்ரோக்ராம்ல அந்தப் பகுதியில ஒரு சின்ன மாற்றம் இருந்தது?"

கிரண் கிண்டலாக, "என்ன மாற்றம்? சாப்பாட்டைச் சுட வைக்கறத்துக்குப் பதிலா துணியைச் சுட வைக்கறா மாதிரியா?" என்றான்.

சுமிடோமோ அவனை உஷ்ணத்துடன் முறைத்துப் பார்க்கவே, சூர்யா முந்திக் கொண்டார். "கிண்டல் வேண்டாம் கிரண். ரொம்ப சீரியஸான விஷயம். மேல சொல்லுங்க. பாதுகாப்புன்னா ஒரு குறிப்பிட்ட செயலைச் செய்யக் கூடாதுன்னு தானே. இந்த விஷயத்துல அது என்ன?" என்றார்.

ராபர்ட் விளக்கினார், "இங்கயும் அது குறிப்பிட்ட செயல்தான். சமையல்னா சூடு இருக்கத்தானே செய்யும்? அதுனால, எந்த மாதிரி சங்கதிகளை அடுப்புக் கிட்ட வைக்கலாம், எதை ஜாக்கிரதையா நெருப்பு மேல படாம வச்சுக்கணும்னு கவனமா இருக்க ப்ரோக்ராம் செஞ்சிருந்தோம்."

சூர்யா, "சரியாத்தானே இருக்கு, அப்ப என்ன மாறுதலாச்சு?" என்று கேட்டார்.

சுமிடோமோ தொடர்ந்தார். "நெருப்பு கிட்டே எதெது வைக்கக் கூடாதுங்கற பட்டியலில மாற்றம் இருந்தது. துடைக்கற துணி அபாயகரப் பட்டியலிலிருந்து பாதுகாப்பானதுங்கற பட்டியலுக்கு மாறிடுச்சு!" என்றார்.

சூர்யா குழப்பத்துடன் மேலும் கேட்டார். "ஹ¥ம்... ஆனா அது பழகிப் புரிஞ்சுக்கற மாதிரி ஸிஸ்டம் இல்லையா? அப்படி இருந்தா ஒரு தடவை தவறிப் போன உடனே திருப்பி அபாயப் பட்டியலில போட்டிருக்கணுமே?"

கிரணும் வினாவினான். "இன்னும் பாக்கப் போனா எதாவது தவறிப் போனா fail-safe-ஆ நிறுத்திட்டுச் செய்தி அனுப்பியிருக்கணும் இல்லையா? அந்த மாதிரிச் செய்யாம மேல மேல தவறியிருக்கே?"

ராபர்ட்டுக்கு சூர்யா, கிரண் இருவரின் மேலிருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது. "கிரண், சூர்யா நீங்க ரெண்டு பேர் சொல்றதும் மிகவும் சரிதான். ஆனா நாங்க சோதிச்சுப் பாத்ததுல தீப்பிடிச்சு எரிஞ்சது ஒரு தவறாவே இல்லை. அதுவும் அபாய நிலைகளிருந்து நீக்கப்பட்டிருந்தது. அந்த ரோபாட் அதை ஒரு தவறுன்னு நோக்காததுனால நிறுத்தவும் இல்லை, செய்தி அனுப்பவுமில்லை. அதைப் பொறுத்த வரை, துணி தீப்பிடிச்சு எரிஞ்சது ஒரு சாதாரணமான சம்பவமாயிடுச்சு!"

சூர்யா சில நொடிகள் மெளனமாக யோசனையில் ஆழ்ந்தார். பிறகு தொடர்ந்தார். "இந்த மாதிரி நடந்த இடங்களிலெல்லாம் ரோபாட்டோட ப்ரோக்ராம் மாற்றப்பட்டிருக்கு. ஆனா அந்த மாதிரி ப்ரோக்ராமை இந்த ஆராய்ச்சி சாலையில தான் மாத்த முடியும். ஆக, நாம ஏற்கனவே பேசினபடி இங்கேதான் எதோ கோளாறு இருக்கணும். குடைஞ்சு பாத்துட வேண்டியது தான். நீங்க ப்ரோக்ராம் செய்யற இடத்தை யெல்லாம் காட்டுங்க."

சுமிடோமோ வழி காட்ட, அனைவரும் ஆராய்ச்சி சாலையின் ஒரு மூலைக்கு விரைந்தனர். அங்கு அவர் விவரித்தது கிரணுக்கும் சூர்யாவுக்கும் மிக வியப்புடன் பெரும் குழப்பத்தையும் விளைவித்தன!

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்
Share: 
© Copyright 2020 Tamilonline