Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சர்மிஷ்ட்டா
- கே.வி.ஷைலஜா, என்.எஸ். மாதவன்|மார்ச் 2019|
Share:
அப்படித்தானே மன்னவரே! உங்கள் முகத்தில் முகப்பரு தோன்றுவது போல திடீரென ஏற்பட்ட சுருக்கங்களை விட, உங்கள் தலையில் வஜ்ராயுதம் போல வந்து பதிந்த நரையை விட, உங்களுடைய கண்களின் அருகேயுள்ள சுருக்கங்களின் இருள் முனையில் தெரியும் பால்திரையைவிட, உங்கள் விரல்களைச் சொடுக்கு எடுக்கும்போது ஏற்படும் சப்தத்தை நான் - சர்மிஷ்ட்டா - எதிர்பார்க்கவேயில்லை. அதிகமாக ஏற்படும் அந்த சப்தம் என்னை முதலில் திடுக்கிடச் செய்தது. பிறகு அது வெறும் சொடுக்கெடுக்கும் சப்தம்தான் என்று உணர்ந்தபோது என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. அதனால்தான் புராதன அஸ்திகளின் தீனக்குரல்களுக்காய் வருத்தப்பட எனக்குச் சிறிது நேரம் தேவைப்பட்டது. முதுமை மனிதனின் மீது வரையும் கேலிச் சித்திரங்கள் நம் எதிர்பார்ப்புக்கு அப்பாற்பட்டதுதானே.

ஏ மன்னா! உன் உடலின் நெருக்கடி என்னவென்று எனக்கு நன்றாகத் தெரியும். முதியவர்களின் காமம் மிருகங்களின் சினை மாதிரியானது. பூர்த்தியாகவில்லையெனில் அது வேதனை தரக்கூடியது. இணை கிடைத்தவுடன் மிருகங்களின் பிரச்சனை தீர்ந்துவிடுமென்றால், முதியவர்களின் பிரச்சனை அங்கேதான் தொடங்குகிறது. அவர்கள் ஸ்திரீகளிடமிருந்து கேட்க மிகவும் பயப்படுவது உடனே கிடைக்கும் சம்மதத்தைத்தான்.

கொடுக்கல், வாங்கல் ஒரு சந்தை நாளில் நிகழ்ந்தது. வானம் மேகங்களை முயல் குட்டிகளைப்போல பெரிது பெரிதாகக் காட்டிய ஐப்பசி மாதத்தில் ஒரு வெள்ளிக்கிழமை, தர்பார் அறையை ஒட்டிய ரகசிய அறையில் யயாதி தன்னுடைய புதல்வர்களைக் காணக் காத்திருந்தார்.

சூரியனின் வெளிச்சம் அதீதமாய்ப் பதிந்ததினால், அவருடைய பார்வை மங்கியபடியிருந்தது. தன் பேச்சின் வழியாய் புதல்வர்களின் முகங்களில் ஏற்படும் உணர்வுபூர்வ மாற்றங்கள் தனக்குத் தெரியாமல் போகுமே என்பதில் யயாதிக்கு நிம்மதியும் ஏற்பட்டது.

முதலில் யயாதி அழைத்தது, தன் பட்டத்துராணியான தேவயானியின் வயிற்றில் பிறந்த மூத்த புதல்வன் யதுவைத்தான். பழைய புராணங்களில் சொல்லப்படுகிற இடுங்கிய கண்களையுடைய பெண்கள் முதல், கிழக்கு காந்தாரத்தின் கம்பீரத் தோற்றம் கொண்ட இளம் பெண்கள்வரை, யது தன் அந்தப்புரத்தில் சேகரித்து வைத்திருந்தான். அதனால் அவன் சம்மதிக்கப் போவதில்லை என நான் முன்கூட்டியே யூகித்தேன்.

"மகனே, யது" மூச்சு வாங்கியபடி யயாதி பேசத் தொடங்கினான்.

"சுக்கிர மகரிஷி எனக்குக் கொடுத்த சாபத்தினால், இளைஞனாயிருந்த நான், நரையோடிய இந்த முதுமையை அடைய நேர்ந்தது. ஆனாலும் என்னைச் சபித்த அந்த மகரிஷி எனக்குக் கொடுத்த சாப விமோசனம், இந்த வயோதிகத்தை என் பிள்ளைகளில் யாரேனும் ஒருவருக்கு மாற்றிக்கொடுத்து அவர்களின் இளமையை நான் அடையலாம் என்பதுதான்."

"என் மகனே! என் முதுமையை நீ ஏற்றுக் கொள்வாயா?"

"ஒரு தகப்பன் தன் மகனுக்குத் தர வேண்டிய சொத்து இதில்லை என்று எனக்குத் தெரியும். பரிபூரணமாக இந்த உலகத்தை இளமையோடு அனுபவிக்க வேண்டும் என்று எல்லோரையும் போல எனக்கும் மோகமுண்டு. கொஞ்ச காலத்திற்குள்ளாகவே நான் இந்த முதுமையைத் திரும்பி வாங்கிக் கொள்கிறேன். நீ செய்யப்போகும் இந்தப் பேருதவிக்காக என் அரசாங்கத்தின் செங்கோலையும் உனக்குத் தருகிறேன்."

"என்னால் முடியாது."

தீர்மானமாய் யது மறுத்தான். "லௌகீக வாழ்க்கையில் காமபோகங்களில் எனக்குள்ள ஆர்வம் நீங்கள் அறியாததில்லை. அது எவ்வளவு சுவாரஸ்யமானதென்று உங்களுக்கே தெரியும். உங்கள் வேண்டுகோளை ஏற்றுக்கொள்ள முடியாததற்கு என்னை மன்னிக்க வேண்டும்." யது அவசரமாக வெளியேறினான்.

அதன் பின்பு அறைக்கு அழைக்கப்பட்ட தேவயானியின் இரண்டாவது மகன் துர்வசுவின் நிராகரிப்பும் உடனே முடிந்தது.

என் மூத்த மகன் த்ருஹியூவுக்கு அவன் தந்தையின் மீதான வெறுப்பு எல்லோருக்கும் தெரிந்தே இருந்தது. வேலைக்காரியான என் அவஸ்தை, யயாதிக்கு தேவயானியின் மீதான பயம், எங்கள் தாம்பத்திய உறவில் இருக்கும் சத்தியமின்மை, கடைசியாக மோக வெறியால் உந்தப்பட்டு தன் பிள்ளைகளிடம் யௌவனத்திற்காக மேற்கொண்ட யாசிப்பு இவையெல்லாம் வெகுளியான என் மூத்த மகனுக்குத் தெரியாதது இல்லை .

"தாதா" த்ருஹு வெறுப்புடன் கேட்டான்.

"இந்த 'தாதா' என்ற வார்த்தையின் அர்த்தம் தா, தா என்று கெஞ்சுவதா?"

"வேண்டாம். நீ எதுவும் பேச வேண்டாம். அர்த்தம் இல்லாமல் பேசும் உன்னுடைய கிண்டல் பேச்சுகளைக் கேட்க எனக்குப் பிடிக்கவில்லை."

"இந்த இரட்டை அர்த்த வார்த்தைகளைப் பயன்படுத்தியதன் விளைவுதானே அப்பா உங்களை இந்த நிலைக்கு கொண்டு வந்தது?"

"புரியவில்லை" - யயாதி பாவமாய் கேட்டார்.

"என் அம்மாவை ஜாதியைச் சொல்லி ராணி தேவயானி கிண்டல் செய்தது நினைவில்லையா உங்களுக்கு? அம்மா நீஜ யோனியிலிருந்து பிறந்தவள். அவள் பிரம்ம குலத்தின் முதன்மையான ப்ருஹு வம்சத்தைச் சார்ந்தவள். இப்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பிரச்சனைக்கு மூலம் என்ன? தேவயானியின் ஒரு சேலையை என் அம்மா அறியாமல் மாற்றிக் கட்டிக் கொண்டதுதானே?"

"அதற்காகக் தேவயானியைக் கிணற்றில் தள்ளிவிட வேண்டுமா என்ன?"

"அதனால் தானே அந்த வழியாகப் போன யயாதி ராஜா தேவயானியைக் கைப்பிடித்து கிணற்றிலிருந்து ஏற்றிக் காப்பாற்றியதும், பிறகு கையைப் பிடித்துவிட்டார் என்பதினாலேயே சுக்கிர மகரிஷி பிராமணக் கன்னியான தன் மகளைச் க்ஷத்ரியனான உங்களுக்கே. திருமணம் முடித்துத் தந்ததும் நடந்தது. எல்லாவற்றையும் மறந்து விட்டீர்களா?"

கோபத்துடன் த்ருஹு அறையை விட்டு வெளியேறினான்.

என் இரண்டாவது மகன் அனுத்ருஹு யயாதியின் முன்னால் நின்றவுடனேயே மறுத்தபடி தலையசைத்துப் பின் வாங்கினான்.

புருவுக்கு யயாதியை அடையாளமே தெரியவில்லை. "முதியவரே நீங்கள் யார்? ராஜா மாதிரி வேடமணிந்து என்ன செய்கிறீர்கள் இங்கே?" என்று கேட்டான்.

"மகனே, புரு, நான் உன் தந்தை யயாதிதான். உன் தாய் சர்மிஷ்ட்டாவிற்கு புத்ர பாக்யம் கொடுத்ததினால் பட்டத்துராணி தேவயானியுடைய தகப்பனார் சுக்கிரன் தந்த சாபம்தான் இந்த வயோதிகம். இனியும் நான் யெளவனம் அனுபவித்துத் தீரவில்லையென்றும், என் வயோதிகம் உங்கள் மகளுக்கும் பிரச்சினையாகும் என்றும் நான் அவரிடம் சொன்னேன். அதற்குச் சுக்கிரன், உன் பிள்ளைகளில் யாராவது ஒருவர், உன்னுடைய இந்த வயோதிகத்தை மாற்றிக் கொள்ளலாம் என்ற சாப விமோசனத்தையும் நல்கினார். உன் மூத்த அண்ணன்கள் நால்வருமே அதற்குத் தயாராக இல்லை. என் அரசாட்சியைத் தருவதாகச் சொல்லியும்கூட அவர்கள் மறுத்து விட்டார்கள். இளைஞர்கள் அப்படித்தான். வயோதிகம் முதியவர்களிடம் மட்டுமே இருக்கும் என்று அவர்கள் நினைக்கிறார்கள்."

பதினாறே வயது நிரம்பிய புருவிற்கு எல்லா பாலகர்களையும் போல் சீக்கிரமே பெரிய ஆளாக வேண்டுமென்ற ஆசையிருந்தது. பிரம்மச்சாரியாயிருந்ததால் அவனுக்கு யௌவனத்தின் சுகந்தங்கள் குறித்து பெரிய புரிதல்கள் இல்லாமல் இருந்தது. அரசனாகப் பட்டமேற்பது ஒரு நல்ல காரியம் தானே! பெரிய விஷயம் தானே! என்றும் அவனுக்குத் தோன்றியது. நினைவுகளின் ஒழுகல்களினூடே புரு சொன்னான். "சரி"

அந்த நிமிடத்தில் என் பாலகன் முதியவனானான்.

அவனுடைய கண்களைக் கூசி வலியுண்டாக்க வேண்டி சூரியன் பிரகாசமாக உதித்தான். அவன் எப்போதும் அரண்மனையின் படிகளில் கண்மூடிப் படுத்துக் கிடக்கலானான். யாகசாலைகளில் தூணில் சாய்ந்தபடி புரோகிதர்கள் மந்திர உச்சாடணம் செய்தபோது அவனும் முணுமுணுத்தபடியிருந்தான். வில்போல முன்னால் சாய்ந்த முதுகெலும்பு அவனுடைய கண்களை பூமிக்கருகில் சமீபித்திருந்தது. மிகச்சமீபமாய் காணக்கிடைத்த கற்களும், புல், புழுக்களும் யயாதி வம்சத்திற்கு உரிமையுள்ளது என்பதை புரு புரிந்துகொண்டான். இப்போது சரித்திரம், சில கவிஞர்களும், அயல்நாடுகளிலிருந்து வந்த யாத்ரீகர்களும் சொல்வதை நம்புவதற்கு முடியாததாக இருந்தது. அதனால் பூமிசாஸ்திரம் பயில புரு தீவிரமாகத் தன் முதுகெலும்பை வளைக்கலானான்.

புருவின் முதுமையினூடே ஊர்ந்து சென்றிருந்த மெல்லிய சப்தங்களில் ஒன்று தேவயானியுடையதாக இருந்தது. அவள் எப்போதும் உச்சஸ்தாயியில் புருவிடம் அவனுடைய மரணத்தைப் பற்றி மட்டுமே பேசியபடியிருந்தாள்.

"ஒரு ஜுரம், தும்மல், இல்லையென்றால் ஒரு மழை, ஒருமுறை மேற்கில் வீசும் குளிர்ந்த காற்று, அதோடு முடிந்து போகும் உன் கதை. வேலைக்காரியின் மகனான உனக்கு ராஜாவாக வேண்டும் என்ற ஆசையிருந்திருக்கிறது இல்லையா. முதுமையின் தொடக்கம் மரணம் என்று தெரியுமா உனக்கு? வர்ணாஸ்ரமங்களை கீழ்மேலாகப் புரட்டிப்போட முடியாது கிழவனே!"

இது போன்ற நிமிடங்களில் புருவின் அருகில் நிற்கும் நான் சிரிப்பேன். சிரித்தவுடன் என் முகம் சாந்தமாகும். அதைப் பார்த்த தேவயானி கழுத்தை வெட்டியபடி திரும்பி நடப்பாள். போகும்போது ஒருமுறை திரும்பி என்னைப் பார்ப்பாள். அந்தப் பார்வைதான் அவளுடைய தோல்வி.

தேவயானிக்கும் எனக்கும் உரையாடல்கள் மிகவும் குறைவாகவே இருந்தது. அசுரர்களின் ராஜாவாயிருந்த என் தந்தையின் குருவான சுக்கிர மகரிஷி, என் சம வயதுடையவளான அவருடைய மகள் தேவயானியுடன் அரண்மனையில் வசிக்க வந்த நாள் முதல், எங்களுடைய பால்யம் ஒன்றாகவே இருந்தது.

ஒரு பார்வை, ஒரு தீண்டல், ஒரு புருவம் உயர்த்தல் என்று எங்களுக்குள்ளான உணர்வுப் பரிமாற்றங்கள் இவை மட்டுமாகவே இருந்தன.
தேவயானிதான் எனக்குக் காதலைக் கற்றுக் கொடுத்தவள். காதல் கற்றுக் கொடுக்கப்பட வேண்டிய உணர்வு தானே! கசனுடனான நிறைவேறாத காதலின் ஆரம்ப நாட்களில் அவள் இரவு முழுவதும் என் கைகளைப் பற்றியபடி பேசாமல் படுத்துக் கிடப்பாள். சில நேரங்களில் தேவயானி என் கையை இறுக்கி பிடிப்பாள். அப்போது நான் அவளுடைய நெற்றியைப் பிரியத்தோடு தடவிக் கொடுப்பேன்.

எல்லா விதமான உறவையும் பிரிக்கும் அதிகாரம் என்ற விஷவேர் எங்கள் நட்பிலும் உள்ளேறி வர ஆரம்பித்தது. நான் இந்த அசுர சாம்ராஜ்யத்தின் ராஜகுமாரி, தேவயானியின் தந்தை எங்கள் குரு. அப்பாவும் மகளும் ராஜாவான என் தந்தையின் செல்வத்தில் வாழ்கிறார்கள். ஆனால் தேவயானியோ பிரம்ம குலத்தில் பிறந்தவள். நானோ அசுர குலத்தில் பிறந்தவள். சமூகம் தேவயானியின் ரத்தத்திற்குத் தேவைக்கும் அதிகமாக அதிகாரத்தைக் கொடுத்திருந்தது.

எங்களுடைய முதல் பிரச்சினையின்போதே இதெல்லாம் வெளியில் வந்தது. அவளுடைய சேலையை நான் தெரியாமல் எடுத்து உடுத்தியபோது தேவயானி அதில் தீட்டுப் பட்டுவிட்டதென்று வெகுண்டாள். அப்போது நான், சுக்கிரனும் மகளும் தானப்பிரபுவான என் தந்தையிடம் இரந்து வாழும் வாழ்க்கையை ஞாபகப்படுத்தினேன். இருந்தும் என் ஆத்திரம் தீரவில்லை. மறுநாள் கண்ணாடியில் என் முகத்தை நான் பார்க்க வேண்டுமென்றால் என்னை 'நீச ஜாதி' என்று சொன்ன அவளைக் கொன்றே ஆக வேண்டும் என்ற ஆத்திரத்தில், அவளைப் பக்கத்திலிருக்கும் கிணற்றில் தள்ளிவிட்டேன்.

அதனால் எனக்கு இரண்டு தண்டனைகள் கிடைத்தன. முதலாவதாக, யயாதி ராஜாவைத் திருமணம் கொள்ளவிருக்கும் தேவயானியின் பணிப்பெண்ணாக இருக்க வேண்டும். இரண்டாவதாக, எனக்கு அருவெறுப்பு தரும், என் தோல் கூசி உரிந்து போகும் அந்தத் தண்டனையை ஸம்ஸ்கிருதத்தில்தான் சொல்ல வேண்டும்.

"சர்மிஷ்ட்டா, மாதாஸ்தல்பே ம கர்ஹியத்."

முதல் முதலாக நான் யயாதியை என் வயப்படுத்தத் திட்டமிட்டது, அந்த படுக்கையறையை கைவசப்படுத்த நான் உபயோகித்த தந்திரம்தான். இந்தக் காலத்தில் பெண் பிள்ளைகள் தாராளமாக உபயோகிக்கும் ஒரு சூத்திரம். ஒரு காலில் நின்று கொண்டு, இன்னொரு காலில் குத்தாத முள்ளை எடுக்கும் தருணத்தில் தன் இஷ்ட புருஷனைப் பார்ப்பது. நானும் ஒரு முறை அதைப் பிரயோகித்தேன். யயாதி உலா வரும் சமயம் பார்த்து அருவியில் குளிக்கப்போன நான், மாற்றுத்துணி கொண்டு உடல் மறைக்கச் சிரமப்படுவது போலவும் நடித்தேன்.

கள்ளத்தனங்கள் நிறைவு பெற்றது, ஒரு பௌர்ணமி நாளில், மேகங்கள் இல்லாத வானத்தில் களங்கமற்றுப் பொழிந்திருந்த நிலாவைப்பார்த்துக் கொண்டிருந்த யயாதியைப் பார்த்த போதுதான். மன்னர் ஏதோ சிந்தனையில் லயித்து மிக உன்னத நிலையில் இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவருடைய முகத்தில் அவமானத்தின் சாயல் படிந்து கிடந்தது. சட்டென அந்த சுருண்ட முடிகளின் ஊடாகக் கைகளை அளைந்து பார்க்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது. தொடர்ந்து அந்தக் கிளி இதழ் மூக்கின்மேல் ஒரு முத்தமும் கொடுக்க ஆசை வந்தது. யயாதியின் விரிந்த கண்களில் சின்னக் குழந்தையின் பய ரேகைகளை நான் தரிசித்தபோது, பெண்களின் அன்பு தொடங்குவது தாய்மையில் இருந்துதான் என்று எனக்குப் புரிந்தது.

தேவயானி இரண்டாம் பிரசவத்துக்காகத் தாய்வீடு சென்றபோதுதான் நான் யயாதியின் முன்னால் போய் நின்றேன்.

"மன்னவரே, என்னை ஏற்றுக் கொள்வீர்களா?"

"உனக்கு விலக்கப்பட்ட இந்தப் படுக்கை அறையிலா?"

"பல நாட்கள் இந்தப் படுக்கையறையில் உன்னோடு சுகித்திருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய மோகம். ஆனால் இந்த ஒரு முறையாவது உன்னோடு இருந்தால் போதும்." ஏதோ நினைவிலிருப்பவள் போல நான் மேலும் கேட்டேன், "உங்களை நீ என்று கூப்பிடலாமா?"

யயாதி தலையாட்டியபோது நான் இன்னும் அவரோடு நெருங்கினேன். யயாதியின் இதயம் பயத்தினால் அதிவேகமாகத் துடித்த சப்தம் கேட்டு நான் சிரித்தேன்.

"எதற்குச் சிரிக்கிறாய்?"

"அது... பிறகு சொல்கிறேன்." அந்த நொடிகளில் உட்புகுந்து மெளனம் எங்கள் உறவில் பலப்பல அர்த்தங்களின் ஆரம்பமாக இருந்தது.

கோடை தொடங்கிய போது புருவின் அவஸ்தை அதிகமானது. அவனுடைய கட்டிலில் அமர்ந்து, நெற்றியில் அரும்பும் வியர்வையை வெட்டிவேர் விசிறியால் விசிறியபடி நான் அமர்ந்திருந்தேன். புரு காணும் கனவுகள் இப்போதும் பதினாறு வயசு வாலிபனுடையதுதானா? அவனுடைய சரீரத்திற்கு மாறான கனவுகள் அவனை அடைவதற்காக நரைத்த இமைகள் கொண்ட மூடிய கண்களை நான் அழுத்தி முத்தமிட்டேன்.

புறக்கண் திறந்து சிறிது நேரம் என்னை உற்றுப் பார்த்த பிறகு கேட்டான்.

"பெண்ணே நீ எனக்கு யார்?"

கண்கள் நிறைந்து மனம் விம்மியபடி நான் படுக்கையறைக்குப் போனபோது யெளவனம் திரும்பக் கிடைத்தபின் முதல் முதலாய் என் படுக்கை அறைக்கு வந்த யயாதியைப் பார்த்தேன். அவர் தன் நீண்ட விரல்களினால் விளக்கின் திரியை மட்டுப்படுத்தத் தயாராகிக் கொண்டிருந்தார்.

"நில்லுங்கள்"

யயாதி தலையுயர்த்தி என்னைப் பார்த்துச் சிரித்தபடி சொன்னார், "நான் மீண்டும் துளிர்த்தபின் வசந்தத்தின் சரம் என்னில் மணம் வீசத் தொடங்கியதிலிருந்து உன்னிடம் வராமலிருக்க என்னையே கடிவாளமிடப் பிரயத்தனப் பட்டுக்கொண்டிருக்கிறேன். ஆனால், இன்றைக்கு எனக்கு நீ முழுமையாய் வேண்டும். காட்டுமல்லியைப் போல நீ என் இண்டு இடுக்குகளில் எல்லாம் படர்ந்து சுற்றிக்கொள்."

"நீ யார்?" மன்னரிடம் கேட்ட நான், அவர் முன்னால் நின்று என் கச்சையை விலக்கி முலைகளைக் காட்டினேன்.

"இந்த முலைப்பாலின் ருசியை நீ மறந்துவிட்டாயா? உன்னுடைய ஆறு வயதில் கசப்பு மருந்து தடவி மறக்கடித்த முலைப்பாலின் ருசி உனக்கு நினைவிருக்கிறதா?" - பொங்கிய அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு நான் தொடர்ந்தேன். "உன் வாழ்வில் நேர்ந்த அந்த முதல் நம்பிக்கை துரோகம், என்னால் நிகழ்த்தப்பட்டதில் நான் எவ்வளவு துக்கப்பட்டேன் என்பது உனக்குத் தெரியுமா?"

"சர்மிஷ்ட்டா " - யயாதியின் கைகள் என் தோள்களுக்கு நீண்டது.

பின்வாங்கியபடி நான் உரக்க சொன்னேன், "போடா, உனக்கு நான் வேண்டும். அப்படித்தானே? புத்தி பேதலித்துப் பாவம் செய்ய முயலாதே. இதற்குத்தானா உன் வளர்ச்சியை நொடி நொடியாய்ப் பார்த்துப் பரவசப்பட்டுக் காத்திருந்தேன்?"

"நீ என்ன புலம்புகிறாய்?" யயாதி கேட்டார்.

அவர் என்னை முத்தமிட நெருங்கிவந்த போது நான் கன்னத்தில் அறைந்தே விட்டேன்.

"இனி நீ என் கால் தொட்டு வணங்கி நல்ல பிள்ளையாய் திரும்பிப் போக வேண்டியவன், போ... போய்விடு."

சர்மிஷ்ட்டாவை ஒருபோதும் படுக்கையறையில் மட்டும் உள்ளே விடக்கூடாது - பாகவதம்
(நன்றி: சர்மிஷ்டா, சிறுகதைத் தொகுப்பு.)

மலையாள மூலம்: என்.எஸ். மாதவன்
தமிழில்: கே.வி. ஷைலஜா
Share: 
© Copyright 2020 Tamilonline