Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
March 2019 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | அன்புள்ள சிநேகிதியே | பொது | சிறப்புப் பார்வை
சூர்யா துப்பறிகிறார் | Events Calendar | அஞ்சலி | மேலோர் வாழ்வில் | ஹரிமொழி | முன்னோடி | சிறுகதை | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
பாசத்தின் நிறம்
- ராஜேஷ் லாவண்யா|மார்ச் 2019|
Share:
பாசத்தின் நிறம் -1
சுளீரென வீசிய கதிரவனின் ஒளி முகத்தில் பட்டதும் ஏற்கனவே சுருக்கங்கள் நிறைந்த முகத்தை இன்னும் சுருக்கிக் கொண்டாள் வள்ளியம்மை ஆச்சி. "யப்பா எம்புட்டு வெய்யிலு. சூட்டத்தணிக்க இன்னிக்காச்சும் மழை வந்தா தேவலை. ஹ்ம்ம்.. ஏ இவளே செம்பகம் இங்க வா புள்ள. மொளகா காய வைச்சு எம்புட்டு நேரமாச்சு. ஹ்ம்ம் எல்லாத்தையும் அந்த ஜாடில அடுக்கி ஸ்டோர் ரூமுல கொண்டு வை. எங்க உம் புருசன் முனியன்?"

"ஆச்சி நம்ம செவல கொஞ்சம் மக்கர் பண்ணிச்சு அதான் வைத்தியர கூட்டியார போயிருக்காக." "சரி சரி. நீ போய்ச் சோலிய கவனி."

"என்னாங்க. அட எங்கிட்டு இருக்கீக" எனக் கேட்டபடி உள்ளே வந்தாள் வள்ளியம்மை ஆச்சி. "எதுக்கு இப்ப ஸ்பீக்கர் கணக்கா கத்துத. இங்கனக்குள்ளதான் இருக்கேன். என்னத்துக்கு கூப்ட?" "அட என்ன ரொம்பத்தான் சலிச்சுக்குரீக… அடுத்த வாரம் திருவிழாவுக்கு நம்ம மகன் மருமக, பொண்ணு, மாப்பிள்ள பேரன் பேத்தியெல்லாம் வர்றாக. நெனப்பு இருக்குல்ல?" என இழுத்தாள். "இல்லாம, என்ன அதுக்கு என்ன இப்ப?"

"என்னவா எம்புட்டு வருசம் கழிச்சு புள்ளைங்க வருது. நானு என்னல்லாம் செய்யணும்னு நினைச்சுருக்கேன் நீங்க என்னடான்னா…"

"என்ன செய்யணும்ங்கற?"

"ஹ்ம்ம்ம்ம்ம் சட்டியும் பானையும். அந்த ஏசி ரூமுல ஏசி சரியா வேலை செய்யல. அதச் சரி செய்யணும். அப்புறம் ஜோசியர வரச்சொல்லி குலதெய்வம் கோவிலுக்குப் போறதுக்கு நாள் பாக்கணும். அப்பறம்..."

"இந்தா, நிறுத்து. மொதல்ல அவுக எல்லாம் வரட்டும். 10 வருசமா இந்த வரோம் அந்தா வரோம் சொல்லிகிட்டுத்தான் இருக்காக. வந்தாகளா?"

"அது என்னமோ அந்த மகமாயி இந்த வாட்டி கண்ண தொறந்துட்டான்னு மனசு சொல்லுது அவக எல்லாம் வருவாக. நம்ம மணிகண்டன 3 மாச கொழந்தையா பாத்தது. கண்ணுக்குள்ளையே இருக்கான். இப்ப என்னமா வளந்துருப்பான். அதுக்கப்புறம் பேரன் பேத்தி பொறப்பு எல்லாம் கடிதத்துலையும் போன்லேயுந்தான்."

"அடி போடி இவளே. அவக வரட்டும், பாக்கலாம்" எனச் சொல்லிவிட்டு சுப்பைய்யா பிள்ளை உள்ளே போய்விட்டார்.

"சே என்ன ஆச்சு இந்த மனுசனுக்கு. நல்லதாத்தேன் நெனச்சா என்ன? இந்த வயசான காலத்துல அம்புட்டு பேரையும் ஒட்டுக்கப் பாத்துர மாட்டோமான்ற ஏக்கந்தேன். இத புரிஞ்சுக்குறாகளா!" என்று சலித்துக்கொண்ட வள்ளியம்மை, செம்பகம் செம்பகம் எனக் கூவிக்கொண்டே அடுக்குள்ளிற்கு சென்றாள்

ஈஸிச்சேரில் உடகார்ந்த சுப்பைய்யா பிள்ளை கண்களை மூடிக்கொண்டார். நினைவுகள் 15, 20 வருடங்கள் பின்னோக்கி ஓடின. ராஜாவுக்கும் சுபாஷினிக்கும் 2 வயசு வித்தியாசம். படிப்பு விளையாட்டு எல்லாவற்றிலும் இருவரும் கெட்டி. பரிசுகளை வாங்கிக் குவித்தனர். கேட்டதை வாங்கிக் கொடுக்க அப்பா. "கேக்குறதெல்லாம் வாங்கித் தராதீக. இம்புட்டுச் செல்லம் ஆவாது" என வள்ளி சொன்னாலும் காதில் வாங்கவில்லை சுப்பைய்யா. இருவரும் காரைக்குடியில் இருந்து மதுரை சென்று கல்லூரிப் படிப்பை முடிக்க ராஜா கல்லூரியில் தன்னோடு படித்த உமாவையே கல்யாணம் செய்துகொள்ள விருப்பம் தெரிவிக்க, வீட்டில் ரகளை. பின் அம்மாவின் கண்ணீரில் மங்கியவன்தான். மீண்டும் 2 வருடம் கழித்துத்தான் வந்தான்.

மகள் சுபாஷினிக்கு இவர்கள் டாக்டர் மாப்பிள்ளை பார்த்துத் திருமணம் முடிக்க அவளும் சென்னை சென்றுவிட்டாள். மணிகண்டன் பிரசவத்திற்கு மட்டும் வந்தாள். அப்புறம் இங்கே வசதி இல்லை என்று சொல்லிச் சென்னையிலே தங்கிவிட்டாள். அண்ணனுடன் ரொம்பப் பாசம். அவன் சொல்வதை அப்படியே கேட்பவள், அதனால் அவளும் வருவதை நிறுத்திக்கொண்டாள். போனில் பேசுவாள், அதுவும் வள்ளியம்மை போன் போட்டால்.

சுப்பைய்யாவின் நினைவைக் கலைத்தது ஆச்சியின் குரல் "இந்தாங்க. எங்க இருக்கீக. சாப்ட வாரீயளா" என்று கேட்டுக்கொண்டே வந்தவள் அவர் கண்களில் நீர்த்துளியைக் கண்டவுடன் "என்ன ஆச்சுங்க" என்று கலங்க. "ஒண்ணுமில்ல வள்ளி. நாம நம்ம புள்ளைங்கள நல்லா வளர்த்தோம், படிக்க வெச்சோம், கேட்டதெல்லாம் செஞ்சோம். ஆனா நம்மமேல அதுகளுக்கு ஏன் பாசமில்லாம போச்சு?" என்றார்.

"அப்டியெல்லாம் சொல்லாதீக. ஏதோ இந்தக் காலத்து புள்ளைங்க. பாசத்த வெளிக்காட்டத் தெரியாம இருக்குக. விடுங்க. சாப்ட வாங்க"

சாப்பிட்டு முடித்து, செம்பகத்திடம் வேலை சொல்லிவிட்டு ஆச்சியும் ஐயாவும் அறைக்கு வரவும் போன் வரவும் சரியாக இருந்தது. ஆச்சி போன் எடுத்தாள், பேசியது சுபாஷினி. "அம்மா அவருக்கு நேத்துதான் லீவு அப்ரூவ் ஆச்சு. சொன்னபடி அடுத்த வாரம் வந்துருவோம். உடம்பு எப்படி இருக்கு. மணிகண்டனுக்கு உங்களப் பாக்க ரொம்ப ஆசை. சரிம்மா, அடுத்த வாரம் பாக்கலாம்."

"என்னங்க என்னமோ சொன்னீயளே. சுபாதான் போன் செஞ்சா. கண்டிப்பா அடுத்த வாரம் வாராகளாம். நீங்க எதையோ நெனச்சிகிட்டு! பலகாரம் செய்யணும். நிறைய வேலை இருக்கு. சரி, இப்போ தூங்குங்க. சாயந்தரம் காபித் தண்ணியோட எழுப்பறேன்."

பாசத்தின் நிறம் -2
உச்சி வெய்யில். வயலில் வேலை செய்பவர்களுக்கு அது மணி 12 என்று சொல்லாமல் சொல்லிற்று. வேலையை நிறுத்திவிட்டு களத்துமேட்டுக்கு வந்தனர். "என்ன செம்பகம் ஐயா வூட்டுல அல்லாரும் வாரகளாம்ல?" எனக் கேட்டபடி மோர் குடித்தனர்.

கொஞ்ச நேரத்தில் கதர் வேட்டி சட்டை சகிதம் சுப்பைய்யா பிள்ளை வயல் பக்கம் வந்தார். எல்லோரும் "வணக்கங்க ஐயா" எனக் கும்பிட்டனர். "ஏ முனியா, பம்புசெட்டு மக்கர் பண்ணிச்சே. பிளம்பர் வந்து பாத்தானா?" எனக் கேட்டபடி நடந்தார் பிள்ளை. நடந்தவரின் கண்ணில் காமாட்சி பட்டாள். "என்ன காமாட்சி, பய என்ன சொல்றான்?" எனக் கேட்டார், அவள் கொஞ்சிக்கொண்டிருந்த குழந்தையைப் பார்த்து. "உம் புருசனுக்கு இப்ப தேவலையா?"

"நல்லா இருக்காரு சாமி. நீங்க மட்டும் டவுன் ஆஸ்பத்ரில சேக்கலைன்னா..." என இழுத்தவளை, "அதெல்லாம் எதுக்கு இப்போ. எல்லாம் முருகன் செயல். சரி பொறவு போய் ஆச்சியப் பாரு" எனச் சொல்லிவிட்டு நடந்தார்.

ஆற்றங்கரை அருகில் அந்தப் பூங்கா போன்ற இடத்திற்கு வந்த அவரை "வணக்கம் ஐயா" என பிஞ்சுக் குரல்கள் வரவேற்றன. அவர் நுழைந்த இடம் வள்ளுவர் கல்விப் பூங்கா. ஆம், பிள்ளை ஏற்பாடு செய்திருக்கும் கல்வி நிலையம்.

உள்ளே வந்தவருக்கு ஒரு மழலை வணக்கம் சொல்ல, அந்தக் குழந்தையைத் தூக்கிக்கொண்டார் பிள்ளை. அதன் ஒழுகும் மூக்கைக் கைக்குட்டையால் துடைத்தார். பின் முனியனைப் பார்த்து "ராஜாத்தி அம்மாவ வரச் சொல்லு" என்றார். ராஜாத்தி அம்மாவிடம், "தாயி, இவக அம்மாக்கள்ளெல்லாம் வயல்ல கெடந்து அல்லாடுறாக. அதுக்குத்தான் உன்ன வேலைக்கு வெச்சிருக்கோம். சுத்த பத்தமா குளிப்பாட்டி பகிடர் எல்லம் போட்டு இங்க கூட்டியார. இந்த பாப்பாவுக்கு மூக்கு ஒழுகுது பாரு. அப்பப்ப கவனிச்சுகணும் சரியா. இதுக எல்லாம் வியாதி வெக்கை இல்லாம இருந்தாத்தானே படிப்பு நல்லா ஏறும். ஏதாவது வேணும்னா என்னண்ட வந்து சொல்லு கேளு சரியா. சரி நீ போ" என்றார்.

பிள்ளை ஏற்பாடு செய்திருந்த கோமதி டீச்சர் பிள்ளைகளுக்கு பாடல் சொல்லிக் கொடுத்துக்கொண்டிருந்தார். அதை அவர் பார்த்துக் கொண்டிருந்த போது பைக்கில் ஓர் இளைஞன் வந்து இறங்கினான். "வாங்க டாக்டரே, எப்படி இருக்கீங்க?" என்றார் பிள்ளை.

"என்ன ஐயா, டாக்டர்னெல்லாம் கூப்டுறீங்க. வழக்கம்போல கருப்பான்னே கூப்டுங்க. உங்க தயவுலதேன் படிச்சேன். இப்போ டாக்டராயிருக்கேன். நம்ம ஊருக்கே சேவை செய்யணும்னு சொன்னேன். நீங்களும் ஆஸ்பத்திரி வெச்சு தாரேன்னு சொல்லிருக்கீக. அதுவரைக்கும் இப்படி ஒவ்வொரு எடத்துக்கும் போயி பாத்துட்டு இருக்கேன்" என்றான். "சரி. போயி பாரு. ரெண்டு பிள்ளைகளுக்கு சளி நிக்கவே இல்ல" எனச் சொல்லி அனுப்பினார் பிள்ளை.

முனியன் வந்து "ஐயா, நம்ம வக்கீலு ஐயா வந்துருக்காரு" என்று சொன்னான். "வாங்க வக்கீலய்யா சவுரியமா இருக்கீயளா" என்றபடி நுழைந்தார் பிள்ளை. எழுந்து நின்று வணக்கம் சொன்னார் வக்கீல் பரமானந்தம்.

"ஐயா நல்லா இருக்கேன். போன வருசம் பாத்தது. ஆச்சி சுகமா இருக்காங்களா. என்ன திடீர்னு கூப்டனுப்சிருக்கீங்க. அதுவும் நல்ல நிலப் பத்திரத்த எல்லாம் எடுத்துகிட்டு வரச்சொன்னீங்கன்னு முனியன் சொன்னான்."

"ஆமா வக்கீல் ஐயா. எனக்கு இருக்குற நிலபுலம் எல்லாம் என் பிள்ளைகளுக்குத்தான். ஆனாலும் இந்த பள்ளிக்கூடம் ஏதோ ஓட்டு வீட்டுல நடக்குது. இப்போ கருப்பன் வேற டாக்டர் படிப்பு முடிச்சுபோட்டு இங்கனயே சேவ செய்யணுங்கறான். உமக்குத் தெரியுமே நம்ம ஆச்சி பரம்பரை பரம்பரையா கை வைத்தியம் செய்யுறவக. இந்த இரண்டும் ஒண்ணாச் சேர்ந்து கிராமத்துக்குச் சேவை செஞ்சா என்னன்னு யோசிச்சேன். அதான். உங்கள கூட்டியாறச் சொன்னேன்.

"இப்ப ஸ்கூல் இருக்குறது என் மவனுக்கு எழுதின நிலத்துல ஒரு பகுதி. அதே மாதிரி அந்தப் பக்கம் என் மவ நிலத்துல ஒரு பகுதியையும் சேத்து இந்த ஸ்கூலும் ஆஸ்பத்திரியும் கட்டலாம்னு பாக்கேன்."

"ஐயா அது உங்க பிள்ளைங்க சொத்து" என வக்கீல் இழுக்க "அட நான் சம்பாதிச்சதும் அவங்க பாட்டன் சொத்தும் சேந்துதான இவ்ளோ ஆச்சு. அவக வந்து கேட்டா பாத்துக்கலாம். ஏதோ ஒரு பகுதிதான. நான் சொன்னாப்பல மாத்தி நாளைக்கி பத்திரத்தப் பதிஞ்சுடுங்க.

பிள்ளைகளுக்கு மதிய உணவு நேரம். வாங்களேன் நீங்களும் சாப்டுப் போங்க. ஓ மறந்துட்டேன், நீங்க ஐயமாரு. இங்க எல்லாம்" என இழுத்த பிள்ளையைப் பார்த்து "ஐயா நான் பொறப்புலதான் ஐயரு ஆனா நம்ம கிராமத்துல ஒருத்தன். வாங்க பசங்ககூட சேர்ந்து சாப்பிடுவோம்" எனச் சொல்லி பிள்ளையுடன் உணவுக்கூடத்திற்கு சென்றார் பரமானந்தம்
பாசத்தின் நிறம் -3
"வந்துட்டீயளா. நீங்க இல்லாதப்போ நம்ம மவன் பேசுனான். என்னவாம். அவனுக்கும் லீவு கெடச்சுருச்சாம். அவனும் வாரானாம் குடும்பத்தோட. பேரப்புள்ளைகளப் பாக்க இப்பவே மனசு அடிச்சுக்குது. நீங்க ஸ்கூல்லேயே சாப்டீயளாம்ல முனியன் சொன்னான்… சரி இருங்க புது வெத்தலக் கட்டு வந்துருக்கு எடுத்தாறேன்."

"வள்ளி கொஞ்சம் இரு புள்ள. என்ன இப்ப வள்ளிக்கு. அட என்ன புதுசா பாக்குறீய!"

"உன் அழக ரசிக்கேன்."

"அட இதென்ன. கிழவன் துள்ளி விளையாடுறது கணக்கா."

"இல்ல இந்த அகலமான குங்குமப்பொட்டும் சரிப்புமா உம் முகத்தப் பாக்கையில எம்பூட்டு அழகா இருக்க தெரியுமா." என்ன வந்துருச்சு இந்த மனுசனுக்கு. எதனாச்சும் காரியம் ஆகணுமா?

"வள்ளி நான் எது செஞ்சாலும் நியாயமாத்தேன் செய்வேன்னு உனக்கு தெரியும்ல."

"தெரியும் சொல்லுங்க."

"நம்ம பள்ளிக்கூடத்து நிலத்தையும் அதுக்கு அந்தாண்ட இருக்குற மவளோட நிலத்துல பாதியையும் பெரிய பள்ளிக்கூடமும் ஆஸ்பத்திரியும் கட்டறதுக்கு..." அவர் சொல்லி முடிக்குமுன், "தாராளமா எழுதி வைங்க. உங்க மனசு எனக்கு தெரியாதா. இதயெல்லாம் என்னாண்ட சொல்லணுமா என்ன."

"அதுமட்டுமில்ல வள்ளி. உன் கை வைத்தியம் உன்னோட போயிறக் கூடாது. இந்த காலத்துல எல்லாத்துக்கும் இங்கிலீஸ் வைத்தியத்துக்கு ஓடுறாங்க. எம்பூட்டு பணம் செலவாகுது. ஆனா உங்க பரம்பரைக் கை வைத்தியம் எவ்ளோ பேரக் குணப்படுத்தியிருக்குன்னு எனக்குத் தெரியும்.

அதனால உன் வைத்தியம் பலருக்கும் பயன்படணும். அதேமாதிரி கருப்பனும் டாக்டராயிட்டான். அவன் வைத்தியமும் சேந்து நம்ம கிராமத்துக்கு பயன்படுமே அதான். என்ன சொல்லுத?"

"சரிங்க நீங்க எத செஞ்சாலும் நான் கூட நிப்பேனுங்க. தைரியமா செய்யுங்க. மகமாயி பாத்துப்பா. இருங்க வெத்தலையும் மோரும் கொண்டாரேன்.

*****


"செம்பகம் அந்தத் திப்பிலியை இடிச்சியா, முனியா அந்தக் காயவெச்ச தூதுவளை எலைங்கள இங்கன கொண்டா." முனியன், செம்பகம் இன்னும் புதிதாக வேலைக்குச் சேர்ந்தவர்கள் எல்லாம் வேலை செய்து கொண்டிருக்க கருப்பனின் தங்கை பொன்னி ஒரு பேனா புத்தகம் சகிதம் வள்ளியம்மை அருகில் உடகார்ந்திருந்தாள்.

"ஏ பொன்னி. சொல்றத ஒழுங்கா புரியற மாதிரி எழுதுறியா. இருமலுக்கு தூதுவளைப் பொடியும், திப்பிலிப் பொடியும் தேனில் குழைத்து..." என வள்ளியம்மை சொன்னதை எழுதினாள் பொன்னி. "ஆச்சி" என்ற குரல் கேட்டு பேச்சை நிறுத்தினாள் வள்ளியம்மை. "கருப்பா, வா வா. நல்லாருக்கியா."

"ஐயா 2 லெட்சம் வாங்கியாரச் சொன்னாக."

"அதுக்கு உன்ன அனுப்சாகளா! நீ டாக்டரு" எனச் சொல்ல "இல்ல ஆச்சி கணக்குப் புள்ளதான் கிளம்பினாரு நாந்தேன் பைக்ல போய் வாங்கியாரேன்னு வந்தேன். அப்படியே பொன்னி ஒழுங்கா எழுதுறாளான்னும் தெரிஞ்சுக்க வந்தேன். அவ எழுதறத எல்லாம் கம்ப்யூட்டர்ல ஏத்தணும் அதெல்லாம் செய்யத்தான் ஐயா ரெண்டு லெட்சம் வாங்கியாரச் சொன்னாக."

"சரி இரு. ஏ செம்பகம் தம்பிக்கு இளனி கொடு. நீ இளனி குடி நான் போய் பணம் கொண்டாரேன்." திரும்பி வந்த வள்ளி "இந்தா பணம். இது உனக்கு." ஆச்சி எனக்கு எதுக்கு எனத் தடுமாறினான் கருப்பன்.

அது பொன்னி வயசுக்கு வந்து 2 வருசமாச்சு கழுத்துல காதுல ஒண்ணையும் காணோம். நம்ம ஆசாரிய அனுப்புறேன். எதனாச்சும் செஞ்சு போடு. நானே போட்ருவேன். ஆனா அண்ணன் போட்டானு அது சந்தோசப்படும்ல. அதான். சரியா போ" எனச் சொன்ன ஆச்சியைக் கண்ணீர் மல்கப் பார்த்தான் கருப்பன்.

*****


பணத்துடன் வந்த கருப்பனிடம் "என்ன கருப்பா, பொன்னி ஒழுங்கா வேலை செய்றாளா?" எனச் சிரித்தபடி கேட்டார் பிள்ளை. "அதப் பாக்கத்தான போன. அதெல்லாம் ஆச்சி பாத்துக்குவா கவலப்படாத.

சரி, கம்புயூட்டர் ஏதோ சொன்னியே அதுக்கெல்லாம் இந்தப் பணத்த வெச்சுக்கோ. நாளைக்கு பாங்க் மானேஜர் வர்ராரு. அவர் கட்டடம் கட்ட லோன் பத்தி சொல்லுவாரு. நீ கம்புயூட்டர் அப்புறம் மருத்துவ சாமான் எல்லாத்துக்கும் இந்தப் பணத்த வெச்சுக்க. அப்புறம் முனியனோட போயி பிளாஸ்டிக் டப்பா நிறைய வாங்கிட்டு வந்துரு. ஆச்சி மருந்தெல்லாம் போட்டு வைச்சுக்க வசதியா இருக்கும்."

கணக்குப் பிள்ளை சிவராமன் அங்கே நின்றிருந்தார். "கணக்கு, நீங்க பேப்பர்ல டீச்சர், நர்சு வேலைக்கு ஆள் தேவைன்னு சொல்லி இந்த ஆபீஸ் அட்ரெஸ் கொடுத்து விளம்பரம் கொடுத்துறுங்க. நம்ம ஸ்கூலுக்கும் டீச்சர் வேணும், ஆஸ்பத்திரிக்கும் நர்சு தேவை."

உடனே கணக்குப்பிள்ளை. "ஆஸ்பத்திரி இன்னும் கட்ட ஆரம்பிக்கவே..." எனச் சொல்ல, "தெரியும் கணக்கு. மொதல்ல இங்கேயே சின்னதா வெச்சுக்கட்டும் கட்டடம் பாதி முடியும்போது அங்க மாத்திக்கட்டும். சரியா?" என்றார். சரி என்ற கணக்கு அங்கேயே நின்றிருந்தார்.

என்ன கணக்கு என கேட்ட பிள்ளையைக் கண்ணீருடன் கட்டிக்கொண்டர் கணக்கு.

"என்னாச்சு கணக்கு?"

"உங்க நல்ல மனசு யாருக்கு வரும். இந்த கிராமத்துல முக்கால்வாசி நிலம் உங்களுது. ஏதோ தடபுடலா வாழாம இப்படி மக்களுக்குச் சேவை செய்யணும்னு நினைச்சு அதைச் செய்யவும் செய்றீகளே."

"செய்ய முடியறபடி அந்த ஆண்டவன் வெச்சுருக்கான், செய்றோம் அவ்ளோதான் கணக்கு. நம்ம ஊர்ல இல்லாதத நாமதான் கொண்டாரணும்." என்று முடித்துவிட்டார் பிள்ளை.

பாசத்தின் நிறம் - 4
காரிலிருந்து இறங்கிய தன் பிள்ளைகளைப் பார்த்ததில் வள்ளியம்மைக்குச் சந்தோஷம் தாளவில்லை. ஓடிச்சென்று ராஜாவைக் கட்டிக்கொண்டு, பின் உமாவை, சுபாஷினியை என அரவணைப்பு தொடர்ந்தது. வாசற்படியில் நின்றிருந்தார் பிள்ளை. மணிகண்டன் பெரியவனாக வளர்ந்திருந்தான். அவன் பிள்ளையிடம் வந்து ஹலோ தாத்தா என்றான். அவரும் ஹலோ ஹவ் ஆர் யூ என்றார். ஃபைன். என்று சொல்லிக் காரிலிருந்து சாமான் எடுக்கச் சென்றான்.

ஆச்சி ஒவ்வொரு பேரப்பிள்ளையாகக் கொஞ்சி முடித்துத் திரும்பினாள். வாசலில் நின்றிருந்த கணவரைப் பார்த்தாள் உடனே தன் மகனிடமும் மகளிடமும் ஏ ராஜா, சுபா போய் அய்யாவப் பாருங்க என்று ஜாடையாகச் சொன்னாள்.

அப்பா நல்லாருக்கீங்களா என்று கேட்டுப் பிள்ளையிடம் வந்தனர் இருவரும். நல்லாருக்கேன். இதுதான் உங்க பேரனும் பேத்தியும் என ராஜா தன் பிள்ளைகளைக் காட்டினான். மணி உங்ககிட்ட பேசிருப்பானே எனச் சுபா கேட்டாள்.

பின்னால் வந்த மாப்பிள்ளை பிள்ளையின் காலில் விழ என்ன மாப்ள இதெல்லாம் எதுக்கு எனக் கட்டிக்கொண்டார் பிள்ளை. மருமகள் உமாவும் வள்ளியும் பேசியபடி வீட்டினுள் வந்தனர். உமா பிள்ளையிடம் குசலம் விசாரித்தாள்.

எல்லோரும் குளித்து, டிபன் சாப்பிட்டு முடித்தபின் வழக்கம்போல் பிள்ளை ஸ்கூலுக்கு கிளம்ப ரெடியானார். முனியன் வந்து நம்ம டாக்டரு அந்த கம்பீட்டர் எல்லாம் வெச்சுட்டாராம் சொல்லச் சொன்னாரு என்றான். அது கம்பீட்டரு இல்லடா கம்ப்யூட்டர். சரி வா போகலாம் என்றவரிடம் "என்ன கம்ப்யூட்டர்?" எனக் கேட்டபடி வந்தான் ராஜா. உடனே முனியன் "ஐயா நடத்துற பள்ளிக்கூடத்துல..." என இழுக்க ராஜா, "என்னது! ஸ்கூலா. ஓ மை காட். சரி நானும் வரேன். ஹே மணி வா தாத்தாவோட போய்ட்டு வருவோம்" என்று சொல்லித் தன் மருமகனையும் சேர்த்துக்கொண்டான்.

ஸ்கூலுக்குள் நுழைந்ததும் "நைஸ் லோகேஷன்" என்றான் ராஜா.

"இது ஸ்கூலா! என்னது ஓட்டு வீடு மாதிரி இருக்கு" எனச் சிரித்தான் மணி. உள்ளே வந்ததும் குழந்தைகள் எல்லாம் எழுந்து வணக்கம் சொன்ன பின் படித்துக் கொண்டிருந்த திருக்குறளைத் தொடர்ந்தார்கள். "தீயினாற் சுட்ட புண் உள்ளாறும், ஆறாதே நாவினால் சுட்ட வடு"

பிள்ளை ராஜாவைப் பார்க்க, ராஜா வேறு பக்கம் பார்த்தான். ராஜாத்தி அம்மாள் வந்து வேண்டியவற்றுக்கான லிஸ்ட்டைக் கொடுத்துவிட்டுப் போனாள். கருப்பன் வந்து "ஐயா சொன்ன மாதிரி கம்ப்யூட்டர் எல்லாம் செட்டப் பண்ணியாச்சு. அத்தியாவசியமான மெடிக்கல் சாமான்கள் எல்லாம் வாங்கியாச்சு. இதுவரைக்கும் பொன்னி எழுதனத கம்ப்யூட்டர்ல ஸ்கேன் பண்ணி ஏத்தியாச்சு" என்று அடுக்கிக்கொண்டே போக வியப்பாகப் பார்த்தான் ராஜா.

பிள்ளை குறுக்கிட்டு "சரி டாக்டர், வீட்லேர்ந்து அந்த மருந்துப் பொடி எல்லாம் கொண்டுவந்து அடுக்கிக்கோங்க. பேங்க் மானேஜர் வர்ர நேரம் கணக்கையும் வக்கீலையும் வரச் சொல்லு" என்றார். நடப்பது ஒன்றும் புரியவில்லை ராஜாவுக்கு. சரி கொஞ்சம் சுத்திப் பார்த்துவிட்டு வருவோம் என்று மணியையும் கூட்டிக்கொண்டு போனான். உள்ளே குழந்தைகள் படிப்பதையும், பின்னால் ராஜாத்தி அம்மாளும் சில பெண்களும் சமைப்பதையும் பார்த்துவிட்டு வெளியே வந்தான்.

"இந்த இடம் ரொம்ப அழகா இருக்கு மாமா" என்றான் மணி. "ஆமாண்டா. இந்த ஆத்துல எப்பவும் தண்ணி இருக்கும். அதான் இந்த ஊரு பச்சப்பசேல்னு இருக்கு" என்றான் ராஜா. "நீ இங்கதான் பொறந்தியா மாமா?" என்ற மணியின் கேள்விக்கு ’ஆம்’ என்று பெருமிதமாகத் தலை ஆட்டினான். "இப்ப இங்க இருக்க உனக்குப் புடிக்கலையா?" எனக் கேட்ட மணிக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் பேச்சை மாற்றினான். இருவரும் ஸ்கூலுக்கு ஒட்டி இருந்த இன்னொரு பகுதிக்கு சென்றனர்.

அங்கே மேசைக் கணினி மற்றும் கண்ணாடி அலமாரிகளில் மருத்துவ சாமான்கள் இருந்தன. கணினி அருகே இருந்த ஒரு நோட்டுப்புத்தகத்தைத் திறந்தான் ராஜா. அதில் இருமலுக்கு திப்பிலி ஒரு ஸ்பூன், தூதுவளை ஒரு ஸ்பூன் தேனில் குழைத்து என இருந்தது.

ஆஸ்பத்திரில இது எதுக்கு என யோசித்தபடியே மீண்டும் அப்பா இருந்த அறைக்கு வர அங்கே கணக்கும் வக்கீலும் இருந்தனர். கணக்கு கொஞ்சம் சத்தமாகவே "ராசா எம்பூட்டு நாளாச்சு உன்னையப் பாத்து. எப்படி இருக்கீக. 8 வருசமிருக்கும்ல. எப்ப வந்தீய. பொஞ்சாதி புள்ளெயெல்லாம் வந்திருக்காகளா? இது ஆரு அம்ப பையனா?" என்றதும் "இல்ல கணக்கு இது சுபாவோட பையன் மணிகண்டன். ஆத்தி நம்ம சின்னம்மா பையனா! ஹ்ம்ம்ம் வருசம் ஓடுது. உங்களப் பாத்தது ரொம்ப சந்தோசம் தம்பி" என்றார்.

வக்கீல் பரமானந்தம் குசலம் விசாரித்த பின் ராஜா, அவரை ஒரு ஓரமாக இழுத்துக்கொண்டு போனான். "என்ன நடக்குது வக்கீல் சார். ஆமா அப்பா எப்போ ஸ்கூல் ஆரம்பிச்சார்?" எனக் கேட்ட ராஜாவை ஏற இறங்கப் பார்த்தார்.

"ஆமா நீ கல்யாணம் செஞ்சுகிட்டு போய்ட்ட. இந்த பக்கம் தலவெச்சு படுக்கல. என்னதான் பெரிய மனுஷர்னாலும் சும்மாவே எப்படி இருப்பார். ஒருநாள் என்கிட்ட வயல்ல வேலை செய்ற பொம்பளைங்க பசங்களுக்கு ஒரு ஸ்கூல் அமைச்சு கொடுக்கணும்னார் அப்படி ஆரம்பிச்சதுதான். ஏற்கனவே ஊர்ல பாதிப்பேர் உங்க அப்பா பணத்துலதான் படிக்கிறாங்க. அதுல ஒருத்தன்தான் கருப்பன். அவன் டாக்டருக்கு முடிச்சுட்டு மதுரைலேயே டாக்டர் வேலைல சேராம இங்க வரணும்னு பிடிவாதம் செஞ்சான். அதான் ஐயா இந்த ஆஸ்பத்திரி எல்லாம். உங்க அம்மா எப்பேர்ப்பட்ட மருத்துவப் பரம்பரை தெரியுமா. அவங்க முப்பாட்டனாரெல்லாம் சித்தர்கூடச் சேர்ந்து மருத்துவம் கத்துகிட்டவங்களாம். அதான் அதையும் இங்கிலீஷ் மருத்துவத்தையும் சேர்த்து இந்த ஊருக்குச் சேவை செய்யலாம்னு இதெல்லாம் பண்றார்.

சரி சரி, உங்களுக்கு எதுக்கு. நீங்க பத்து நாள் இருந்துட்டுப் போகப் போறீங்க. அப்புறம் உங்க நிலத்துல பாதியும் உங்க தங்கை நிலத்துல பாதியும் இந்த வேலைக்கு எழுதி வெச்சுருக்காரு என்றதும் ராஜா அப்படியா என கொஞ்சம் குரலை உயர்த்த, உடனே "ராஜா இது பட்ணம் இல்ல, எல்லாத்துக்கும் குரல் ஒசத்தறதுக்கு. அந்த நிலத்துக்கு ஈடா அவர் நிலத்துலேர்ந்து மாத்தி எழுதி வெச்சுட்டாரு. உங்க ஐயாவப் பத்தி அவ்ளொதான் தெரிஞ்சு வெச்சுருக்க நீ. சரி சரி வா உள்ள போவோம்" என்றார்.

உள்ளே வந்தவர்களைப் பார்த்து பேங்க் மேனேஜர், "ஓ வக்கீல் சாரா. ஐயாகிட்ட எல்லாம் பேசிட்டேன். அந்தப் பத்திரத்த கொடுங்க" எனக் கேட்க, உடனே தன் பையிலிருந்து அந்தப் பத்திரங்களைக் கொடுத்தார்.

"சரிங்க ஐயா நாளைக்கு பேங்கிலேர்ந்து செக் பாஸாயிடும்" என்று சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

கருப்பன் பிள்ளையிடம் "ஐயா மதுரைல ஒரு ஆஸ்பத்திரில பேசுதேன்னு சொல்லியிருந்தீயளே" என ஏதோ சொல்ல, "ஆமாம்ல, இதோ இப்பமே பேசிறலாம்" என எழுந்தார். கணக்கு எதோ யோசனையுடன் பிள்ளைக்குப் பின்னாலே சென்றுவிட்டார்.

வக்கீல் ராஜாவிடம் "வீட்டுக்குத்தான போற, வா காலாற நடந்து போவோம்" எனச் சொல்லி ராஜாவையும் மணியையும் அழைத்து வந்தார். வழியில் மீண்டும் பாடசாலையில் குழந்தைகள் படிக்கும் சத்தம். ஒரு குழந்தை மட்டும் ஸ்லேட்டுக் குச்சியுடன் சும்மா இருக்க மணி அதனருகே போய் கையைப் பிடித்து எழுத வைத்தான். மணி அங்கிருக்க ஆற்றங்கரைப் பக்கம் இருந்த அந்தப் பாதையில் வக்கீலும் ராஜாவும் நடந்தனர்.

"பேங்க் மானேஜர்..." என ராஜா கேட்கும் முன் வக்கீல் சொன்னார், "ஐயா தன் நிலப்பத்திரத்த வைச்சு பேங்க் லோன் வாங்குறாரு. இந்த இடத்துல ஒரு ஸ்கூலும் ஒரு மீடியம் ஆஸ்பத்திரியும் கட்டுறதுக்கு. ஸ்கூல் எல்லாம் நீங்க போனப்புறம் ஆரம்பிச்சது. ஆனா இந்த ஊரு இவ்வளவு நல்லருக்குன்னா அதுக்கு உங்க அப்பாதான் காரணம். அவரும் அவங்க அப்பாவும் தரிசா இருந்த பூமியப் பொன்னா மாத்துனாங்க. ராப்பகலா வேர்வை சிந்தி உழைச்சாங்க. நீங்க படிக்குற காலத்துலகூட உங்களுக்கு இதப்பத்தியெல்லாம் தெரியாம வளத்தாங்க. ஆச்சி மகராசி ஐயாவுக்கு பலமா வந்து சேந்தாங்க. ஊர்ல கரண்ட்லேர்ந்து ஒவ்வொண்ணுக்கும் ஐயாதான் காரணம்.

"இங்க மெடிக்கல் வசதி ரொம்பக் கம்மி. எல்லாத்துக்கும் மதுரைக்குத்தான் போகணும். நடுவுல ரெண்டு உசிரு போயிடுச்சு. ஐயாவும் பல டாக்டர்களை கொண்டாந்து பாத்தாரு. ஆனா வசதி பத்தாது அது இதுன்னு ஏதாவது சொல்லிட்டு போயிருவாங்க. ஓட்டு கேட்க வர அரசியல்வாதிகள் எல்லாம் வாக்குறுதியோட சரி. அதான் ஐயாவே ஒரு ஆஸ்பத்திரி கட்டலாம்னு. அதான் மதுரைல ஒரு ஆஸ்பத்திரியோட பேசுராரு. நீ பெரிய படிப்பு படிச்ச, உங்க வீட்டு மாப்பிள்ளையோ டாக்டரு. என்ன பிரயோசனம் நீங்க என்ன இங்கேயேவா இருக்கப் போறீங்க.

"ஆனா ஒன்னு நம்ம ஐயாவப்பத்தி உங்களுக்கு தெரிஞ்சதவிட இந்த ஊருக்குத் தெரிஞ்சது ரொம்ப அதிகம். சரி தம்பி, சாயந்தரம் திருவிழாவுல பாக்கலாம்" என்று சொல்லிப் புறப்பட்டார் வக்கீல்.

*****


மணியுடன் வீட்டில் நுழைந்தான் ராஜா. அங்கே சுபா, உமா, அம்மா, பேரன், பேத்திகள் எல்லோரும் வீட்டின் முற்றத்தில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். ராஜாவைப் பார்த்ததும் சுபா "அண்ணே விசயம் தெரியுமா அம்மா கல்யாணம் கட்டிகிட்டு வந்தப்ப இந்த ஊருல ரெண்டு வீட்டுலதான் கரண்ட் இருந்துச்சாம். நம்ம ஐயாதான் ஊருக்கே கரண்ட் கொண்டாந்தாராம். இன்னும் நிறைய விஷயங்கள் இருக்குண்ணே" எனப் பேசிக்கொண்டே போனாள்.

அப்பா வந்தார். இருவரும் சாப்பிட்ட பின் சிறிய ஓய்வுக்குப் பிறகு எல்லோரும் திருவிழாவுக்குத் தயாரானார்கள். வேட்டி, சட்டை சகிதம் வெளியே வந்தார்கள் ராஜாவும் மாப்பிள்ளையும்.

இவர்கள் வரவுக்காக கோயிலில் ஊரே காத்திருக்க, பெண்கள் கொண்டு வந்த வாழைப்பூ விளக்குகளைச் சாமி முன்னாடி வைத்து, திரி போட்டு நெய் ஊற்றி விளக்கேற்றினார்கள். பெண்கள் ஆற்றில் தீபங்களை விட, தலைப்பாகை கட்டிப் பிள்ளைக்கு முதல்மரியாதை செய்தனர்.

ஆச்சியும் பிள்ளையும் பிரசாதம் வாங்கிக்கொண்டனர். ராஜா கோயிலைச் சுற்றிக்கொண்டிருந்த குடும்பத்தைப் பார்த்தான். மாப்பிள்ளையின் கையைப் பிடித்து இழுத்து கண்ஜாடை செய்ய, இருவரும் கோவில் வடக்குக் கோபுரம் பக்கம் நின்று பேச ஆரம்பித்தனர்.

பாசத்தின் நிறம் – 5
திருவிழா முடிந்து வீடு திரும்பியவர்களுக்கு தடபுடலான விருந்து. செம்பகம் பார்த்துப் பார்த்துப் பரிமாறினாள். சாப்பாடு முடிந்ததும் எல்லோரும் கூடியிருக்க ராஜா உள்ளிருந்து பழைய போட்டோ ஆல்பங்களைக் கொண்டு வந்தான். ஒவ்வொரு படமாகப் பார்த்து அதைப் பற்றிய கதைகளைப் பேசி மகிழ்ந்தனர். பிள்ளை, வள்ளியம்மை கல்யாண ஆல்பத்தைப் பார்த்ததும் ஆச்சிக்கு வெட்கம்.

"அத்தை, நீங்க எவ்ளோ அழகா இருக்கீங்க அந்த காலத்து சரோஜாதேவி மாதிரி" என்ற உமாவைப் பார்த்து "போடி இவளே" எனச் சொல்ல, "அட எங்கப்பாருக்கு என்ன குறைச்சல்? அவரும் எம்.ஜி.ஆர். மாதிரிதான் இருக்காரு" என்றாள் சுபா. தாத்தா மெதுவாகச் சிரித்தார்.

செம்பகம் பால் கொண்டு வர எல்லோரும் பால் குடித்து அப்படியே தூங்கிய பிள்ளைகளை ராஜாவும் மாப்பிள்ளையும் படுக்கை அறையில் போட்டுவிட்டு வர. ஆச்சியும் பெண்களும் உள்வேலையாக அடுக்குளுக்கு போனார்கள்.

ராஜாவும் மாப்பும் மட்டும் பிள்ளை பக்கத்தில் நின்றிருக்க, "என்ன மாப்ள. ஊர் சுத்திப் பாத்தீங்களா. புடிச்சுருக்கா?" எனக் கேட்ட பிள்ளையிடம் "ரொம்பப் புடிச்சிருக்கு மாமா. அதவிட அத்தையையும் உங்களையும் ரொம்பப் புடிச்சுருக்கு" என்ற அவரை, தலையைத் தூக்கிப் பார்த்தார் பிள்ளை.

"அப்பா" என்றான் ராஜா. வந்ததிலிருந்து ஓரிரு வார்த்தைக்குக் மேல் பேசிக் கொள்ளவில்லை அப்பாவும் மகனும். "இப்போ அப்பா" என்றதும் நிமிர்ந்தார். "நாங்க ரெண்டு பேரும் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்" என்றதும் பிள்ளை ஏதோ புரிந்தமாதிரி "என்ன உங்க நிலம் பத்தியா?" எனக் கேட்க "இல்லப்பா உங்க நிலம் பத்தி." "ஹ்ம்ம்..." என வியந்தார் பிள்ளை. "இந்த ஊர இவ்ளோ செழிப்பா ஆக்குனது நீங்களும் தாத்தாவும். அது மட்டுமில்லாம சத்தமில்லாம பல வேலைகள் பாத்திருக்கீங்க. இப்போ ஸ்கூலும் ஹாஸ்பிட்டலும் கட்டறீங்க. அதுக்கு உங்க நிலத்த வெச்சு லோன் வாங்கப் போறீங்க."

"வக்கீல்ட பேசினியா?" எனக் கேட்டவரை "யாரோ சொன்னாங்க, அத விடுங்க. நாங்க ஏதோ ஒரு வேகத்துல ஊரவிட்டுப் போயிட்டோம். ஆனா நீங்க எங்களுக்கு மட்டுமில்லாம ஊருக்கும் சேர்த்து உழைச்சுருக்கீங்க. இப்பவும் ஒழைக்குறீங்க, நாங்க இருக்குற சென்னைல 55 வயசுலேயே வாசல்ல ஈசிச்சேர்ல பேப்பர் படிக்குறதுதான் ரிட்டையர்மென்டுன்னு சொல்லிகிட்டு இருக்குறவங்கதான் ஜாஸ்தி. ஆனா நீங்க இப்பவும்..." எனச் சொல்லிக் கொண்டிருந்தவனைத் தடுத்தார் பிள்ளை.

"என்ன சொல்ல வர்ர?"

"நானும் மாப்ளையும் பேசி ஒரு முடிவு பண்ணிருக்கோம். நீங்க பேங்குல லோன் வாங்கவேண்டாம். அந்தப் பணத்தை நானும் மாப்ளையும் தர்ரோம். அதுமட்டுமில்ல மாப்ள சென்னைல பெரிய டாக்டர். அதனால, அவர் மாசத்துல 15 நாள் இங்கயும் மீதி நாள் சென்னையிலேயும் இருக்கப்போறதா முடிவு பண்ணிருக்காரு, கருப்பன் இப்பத்தானே டாக்டர் முடிச்சிருக்கான். மதுரை ஆஸ்பத்திரில மாப்ளையோட ஃப்ரெண்ட் இருக்காரம். அவர் இங்க வந்து வேலை பார்க்க ரெடின்னு சொல்லிருக்கார். நாளைக்கு நானும் மாப்பிளையும் போய்ப் பார்த்துட்டு அந்த ஆஸ்பத்திரியோட ஒரு காண்ட்ராக்ட் போட்டுக்கலாம். அதேபோல ஆம்புலன்ஸ் வாங்குறது எல்லாத்தைப் பத்தியும் பேசிட்டு வர்ரோம்..."

தான் காண்பது கனவா நனவா என்று நினைத்தார் பிள்ளை. "அது மட்டுமில்லப்பா. நான் பிரெஸ்தான வெச்சுருக்கேன். இனிமே ஸ்கூல் புக்ஸ், டாக்டர் பிரிஸ்கிரிப்ஷன் பேடு எல்லாமே நம்ம பிரிண்டிங்க்தான். உமாவும் சுபாவும் ஸ்கூல் ஆரம்பிச்சு ஒரு ஃபார்மட்ல வர்ற வரைக்கும் இங்கு அடிக்கடி வந்து பாத்துப்பாங்க. நீங்க செய்ற இந்த சேவைல எங்களுக்கும் ஒரு பங்கு கொடுங்கப்பா."

"ஆமா மாமா. யூ ஆர் ரியலி க்ரேட். இனிமே என் மெடிசின் இந்த ஊருக்குப் பயன்படும். ராஜா வாஸ் வெரி இமோஷனல் டுடே. என்கிட்ட ரொம்ப நேரம் பேசினாரு. சைனீஸ் வைத்தியத்துல அக்கு ப்ரெஷர், அக்கு பங்க்சர் இதெல்லாம் கூட ஆஸ்பத்திரியிலே பயன்படுத்த ஆரம்பிச்சுட்டாங்க. அதுமாதிரி அத்தையோட கை வைத்தியமும் சேர்த்துச் செய்யணும்னு நீங்க நினைச்சது பிரில்லியண்ட் ஐடியா. ஹேட்ஸ் ஆஃப் மாமா."

வீடு என்பது ஆலயமாவது ஒவ்வொருவரின் எண்ணத்தை வைத்துத்தான் என்று எப்போதோ படித்ததை நினைத்து ஆனந்தமாகச் சிரித்தார் பிள்ளை. ரொம்ப நாளுக்குப்பின் மனம்விட்டுச் சிரிக்கும் கணவரை வைத்த கண் வாங்காமல் பார்த்தாள் வள்ளியம்மை ஆச்சி.

ராஜேஷ் லாவண்யா,
ஹூஸ்டன், டெக்சஸ்
Share: 




© Copyright 2020 Tamilonline