Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | சமயம் | இலக்கியம் | அமெரிக்க அனுபவம் | அன்புள்ள சிநேகிதியே | சிறப்புப் பார்வை | புழக்கடைப்பக்கம்
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | நலம்வாழ | வார்த்தை சிறகினிலே | தமிழக அரசியல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | நேர்காணல் | வாசகர் கடிதம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
தீவிரவாதமும் குண்டு வெடிப்புகளும்
- மணி மு.மணிவண்ணன்|ஆகஸ்டு 2005|
Share:
Click Here Enlargeலண்டன் பொதுப்போக்குவரத்து வண்டிகளில் வெடித்த குண்டுகள் நாகரீக நாட்டு மக்கள் அனைவரையும் அதிர வைத்திருக்கிறது. பல்வேறு இனமக்கள் கலந்து வாழும் லண்டன் மாநகரில் மக்கள் ஒரு சிலரை மட்டும் சந்தேகக் கண்ணோடு பார்க்க வைத்திருக்கிறது இந்தக் குண்டு வெடிப்பு.

அப்பாவி மனிதன் ஒருவனை சீருடை அணியாத லண்டன் காவல்துறையினர் சுட்டுக் கொன்றதில் வெற்றி பெற்றது தீவிரவாதம் தான். லண்டன் குண்டு வெடிப்பால் இங்கிலாந்தை விட அமெரிக்கா கூடுதலாக அதிர்ந்து போயிருக்கிறது. நியூயார்க் தரைவண்டி நிலையங்களிலும் பயணிகளை எதேச்சையாய் சோதிக்கத் தொடங்கி விட்டார்கள். "குண்டு வெடிப்பவர்கள் பெரும்பாலும் முஸ்லிம்கள்தாம், அதிலும் தெற்காசிய முஸ்லிம்கள்தாம். எனவே எல்லா முஸ்லிம்களையும், தெற்காசியர்களையும் சோதிக்கலாமா" என்று காரசாரமாக விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. ஊடகங்களில் "தீவிரவாத நிபுணர்கள்" குடிபுகல் கட்டுப்பாட்டை (immigration control) வலியுறுத்துவது மட்டுமல்லாமல் கதம்பப் பண்பாட்டுக் கொள்கைக்கும் (multiculturalism) ஒரு முற்றுப்புள்ளி வைக்கச் சொல்கிறார்கள்.

ஓக்லஹோமா அரசுக் கட்டிடக் குண்டு வெடிப்பு, கொலம்பைன் பள்ளியில் துப்பாக்கிச் சூடு, யூனபாம்பர் கடிதக் குண்டுகள், கருச்சிதைப்பு மையங்களில் குண்டுவீச்சு இவற்றுக்கெல்லாம் காரணம் வெள்ளை அமெரிக்கர்கள். இவற்றைத் தொடர்ந்து வெள்ளைக் கிறித்தவர்களைப் பரிசோதிக்க வேண்டும் என்று எந்த நிபுணரும் சொன்னதாக நினைவில்லை. அமெரிக்க அரசு, நீதிமன்றம், மருத்துவ அமைப்புகளை எதிர்த்து வன்முறை பேசிhiiவரும் வலதுசாரிக் கிறித்தவ மத போதகர்களைக் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த நிபுணர்கள் சொன்னதில்லை. ஏன், ஆந்திராக்ஸ் கடிதங்களை அனுப்பியவர் யார் என்று இன்று வரை அறிவிக்கவும் இல்லை.

போதாதற்கு, சில இந்திய அமெரிக்கர்களே நியூயார்க் தரைவண்டி நிலையங்களில் தெற்காசியர்களைச் சோதிப்பது சரி என்று ஆசிரியருக்குக் கடிதங்கள் எழுதுகிறார்கள்! போக்குவரத்து நிலையங்களைக் கண்காணித்தால் பயங்கரவாதிகள் வேறு இடங்களைத் தாக்க மாட்டார்களா? பள்ளிகள், அலுவலகங்கள், கடைத்தெரு, விளையாட்டு மைதானங்கள் என்று மக்கள் கூடுமிடமெல்லாம் இந்தக் கோழைகளின் இலக்காகுமே! எல்லா இடங்களிலும் தெற்காசியர்களைச் சோதிப்போம் என்ற கொள்கை பரவினால், ஒவ்வொரு பள்ளியிலும், இந்தியக் குழந்தைகளை மட்டும் தனியே நிறுத்திச் சோதிப்பது அவர்கள் மனதை எப்படிப் பாதிக்கும் என்று தெரியுமா? இந்திய அமெரிக்கர்கள் செல்லும் இடமெல்லாம் குற்றவாளிகளைப் போல் நடத்தப்பட வேண்டுமா? இந்தியாவில் ஆங்கிலேயர் சில சாதியினரை மட்டும் குற்றப் பரம்பரை என்று அடையாளம் காட்டிக் கட்டுப்படுத்தியது போன்ற காட்டுமிராண்டித்தனத்தை இங்கேயும் கொண்டுவர வேண்டுமா? இது வெறும் வெட்டிப் பேச்சல்ல.

குறிப்பிட்ட இனத்தவரையோ, மதத்தவரையோ குற்றவாளிகள் என்று இனம் காட்டுதல் அரசியல் சாசனத்தின் நான்காவது திருத்தத்தின்படி தவறு. பயங்கரவாதிகள் நோக்கம் யாரை வேண்டுமானாலும் கொன்று பயத்தைப் பரப்புவது. பயங்கரவாதத்தை எதிர்கொள்ளும் அரசுகளும் அதே போல் நடந்து கொண்டால் அவர் களுக்கும் பயங்கரவாதிகளுக்கும் என்ன வேறுபாடு? லண்டன் தரைவண்டி நிலையத்தில் ஒரு அப்பாவி மனிதனைச் சுட்டுக்கொன்றனர் சீருடையற்ற காவல்துறையினர். காஷ்மீரில் அப்பாவிக் குழந்தைகளைக் கொன்றனர் இந்தியப் படையினர். நம் சுதந்திரத்தைக் காப்பாற்ற இன்னும் எவ்வளவு சுதந்திரங்களை இழக்க வேண்டும்?

லண்டன் குண்டு வெடிப்புக்குப் பிறகு அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் ஒரு பெரிய வேறுபாடு புலப்பட்டது. கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் தலைசிறந்தவர்கள் தாங்கள்தாம் என்று அமெரிக்கர்கள் பெருமை கொண்டாடினாலும், அரசின் குறைகளை இந்த சமயத்தில் சுட்டிக் காட்டுவதை அமெரிக்கர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. இராக் போருக்குக் காட்டிய அடிப்படையான காரணங்கள் பொய் மட்டுமல்ல, அது தெரிந்தே சொன்ன பொய் என்பதையும் இதுவரை பெருவாரியான மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக, லண்டன் வெடிகுண்டுப் புகை கலைவதற்கு முன்னரே அரசின் குறைபாடுகளை முக்கிய அரசியல்வாதிகள் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல், ஊடகங்களும் அவற்றைத் தயங்காமல் வெளியிட்டன. இது நாகரீகமான அரசியல் மட்டுமல்ல, பிரச்சினைகளுக்குத் தீர்வு காணத் தேவையான கருத்துப் பரிமாற்றத்தை வளர்ப்பதும்கூட.

லண்டன், மாட்ரிட், டெல் அவிவ் நகரங்களில் நடந்த பயங்கரவாத நிகழ்ச்சிகளைப் பரபரப்பான செய்தியாகக் காட்டும் ஊடகங்கள், மும்பைப் பங்குச் சந்தை குண்டு வெடிப்பு, புது டெல்லி நாடாளுமன்றத் தாக்குதல், கோவை குண்டு வீச்சு, மற்றும் அன்றாடம் நடக்கும் காஷ்மீரத் தீவிரவாதத் தாக்குதல்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏனோ? அங்கே பயிற்சி பெற்றவர்கள்தாமே இப்போது மேலை நாட்டு நகரங்களைத் தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்?
இருபது ஆண்டுகளுக்கு முன்பு ஏர் இந்தியாவின் "கனிஷ்கா" விமானத்தைக் குண்டு வைத்துத் தகர்த்து 329 அப்பாவி மக்களைக் கொன்றவர்களை இதுவரை கனடா தண்டிக்கவில்லையே! தண்டித்திருந்தால், அல் கொய்தாவுக்குக் கனடாவிலிருந்து லாஸ் ஏஞ்சலஸைத் தாக்கப் பயங்கரவாத ஊடுருவல் நடத்தத் துணிச்சல் வந்திருக்குமா?

வட அயர்லாந்தின் தீவிரவாதிகளான ஐரிஷ் குடியரசுப்படை தன் தீவிரவாதப் போர் முறைகளைக் கைவிடுவதாக அறிவித்திருப்பது வரவேற்கத் தக்கது. பயங்கரவாதத்தின் மூலம் பிரிட்டனைத் துரத்தும் முயற்சியில் இந்த 36 ஆண்டு காலத்தில் மவுண்ட் பேட்டன் பிரபு முதல் சாதாரணக் காவல்வீரன் வரை 2000 பேர் உயிர் துறந்தது மட்டும்தான் பலன். ஆனால், இனிமேலாவது பேச்சு வார்த்தைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ள முடியும் என நம்புவோம். இதே போல் ஈழத்தமிழர்களுக்கும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் காலம் நெருங்கி விட்டது.

மும்பையில் வரலாறு காணாத மழை, பெருவெள்ளம். தமிழ்நாட்டில் வறட்சி. பனிமலைகள் உருகுகின்றன. உலக வெம்பலின் விளைவுகளோ இவை? உலகத்தின் தட்ப வெப்ப நிலையில் பெருத்த மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. உலகின் கடற்கரையோரப் பகுதிகள் பல இன்னும் சில பத்தாண்டுகளில் கடலில் அமிழ்ந்து போகும் ஆபத்து தெளிவாகிக் கொண்டிருக்கிறது. நாம் என்ன செய்தாலும் அதைத் தடுக்க முடியாது, எனவே நாம் செய்வதைத் தொடர்ந்து செய்வோம் என்ற மனப்பான்மை பொறுப் பற்றது. உலக வானிலை மாற்றத்தைக் கணக்கில் எடுத்துக் கொண்டு சூழல் மாசுக் கட்டுப்பாடுகளை நிர்ணயிக்கும் கியோட்டோ ஒப்பந்தத்தைக் கிழித்துப் போடும் வல்லரசு, கண் திறந்து பார்க்குமா?

சேது சமுத்திரத் திட்டத்தை பல எதிர்ப்புகளுக்கு நடுவே தொடங்கி விட்டார்கள். 150 ஆண்டுக் கனவு உண்மையிலேயே கெட்ட கனவாக இருந்தால் அதையும் நிறைவேற்றத் தான் வேண்டுமா? ஒரு குறுகிய கால நன்மைக்காக நிரந்தரமான அழிவை மேற்கொள்ளத்தான் வேண்டுமா? தி.மு.க. கூட்டணியின் வலியுறுத்தலால் மட்டுமே இந்தத் திட்டம் தொடங்கியிருக்கிறது. நேற்று வரை மாநில சுயாட்சி பேசிய அதே கட்சி, இன்று மத்திய அரசுக்கட்டிலில் அமர்ந்து, தமிழக அரசுக்கு சேது சமுத்திரத் திட்டத்தின் சூழல் மாசுக்கட்டுப்பாட்டைத் தீர்மானிக்க உரிமை யில்லை என்று சொல்வது அரசியல் நேர்மையாகாது. மீனவர்கள் குரல்கள் கேட்கப்படவேண்டும்.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline