Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
September 2005 Issue
ஆசிரியர் பக்கம் | நேர்காணல் | மாயாபஜார் | நிதி அறிவோம் | இலக்கியம் | முன்னோடி | அன்புள்ள சிநேகிதியே | தமிழக அரசியல் | நலம்வாழ
குறுக்கெழுத்துப்புதிர் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | அஞ்சலி | சமயம் | கவிதைப்பந்தல் | பொது | சினிமா சினிமா | Events Calendar
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | வார்த்தை சிறகினிலே | புழக்கடைப்பக்கம்
Tamil Unicode / English Search
புழக்கடைப்பக்கம்
மகாத்மா காந்தியின் அறப்போர்
- மணி மு.மணிவண்ணன்|செப்டம்பர் 2005|
Share:
Click Here Enlarge1963, ஆகஸ்ட் 28ம் தேதி வாஷிங்டன் மாநகரில் ஒரு பேரணி திரண்டது. நாடெங்கிலும் இருந்து வந்த 200,000 பேர் மக்களாட்சிக்கு இலக்கணம் வகுத்த லிங்கன் நினைவாலயம் முன்னர் அமைதியாகக் குழுமினர். கருப்பின மக்களின் குடியுரிமைகளை வலியுறுத்து வதற்காகக் கூடிய இந்தப் பேரணி ஒரு கலகமும் இல்லாமல், சொல்லப்போனால் திருவிழாக் கொண்டாட்டம் போல அமைதியாக நடந்தது. வெள்ளையருக்கு ஒரு நீதி, மற்றவர்களுக்கு வேறொரு நீதி என்று வகுத்து வைத்திருந்த காலமது. மேடையில் காந்தி குல்லாய்களுடன் தொண்டர்கள் பரபரக்க, பொது நீதி கேட்டு வந்தவர்களிடம் பேச எழுந்தார் ரெவரண்ட் மார்ட்டின் லூதர் கிங் ஜூனியர். "நான் ஒரு கனவு காண்கிறேன்" என்னும் பேச்சு இன்று கேட்டாலும் மெய்சிலிர்க்கும்.

உயர்ந்தவர், தாழ்ந்தவர், மேற்குலத்தோர், இழி குலத்தோர், என்று மக்களைப் பாகுபடுத்தி வைத்திருந்த நாட்டைத் தான் கண்ட கனவின் நேர்மையினால் ஒன்று கூட வைக்கும் முயற்சியைத் தொடங்குகிறார். விடுதலை, விடுதலை, விடுதலை என்று பாடிய பாரதியின் கனவையும் விட ஒரு படி மேல் நின்று கனாக் கண்டார் மார்ட்டின் லூதர் கிங். கடவுளின் எல்லாக் குழந்தைகளும், கருப்பர்களும் வெள்ளையர்களும், யூதர்களும், ஜெண்டைல் களும், புராட்டஸ்டண்டுகளும், கத்தோலிக்கர் களும், ஒன்று கூடிக் கை கோர்த்து, விடுதலை, விடுதலை என்று பாடி இறைவனுக்கு நன்றி செலுத்துவோம் என்று முடித்தார் அவர். (www.americanrhetoric.com/speeches/Ihaveadream.htm)

மகாத்மா காந்தியின் அறப்போர் முறையினால் கவரப்பட்ட மார்ட்டின் லூதர் கிங், காந்தி குல்லாய்களை மட்டுமல்ல, வன்முறை மறுப்பையும், சத்தியாக்கிரக நெறிமுறைகளையும் தம் குடியுரிமைப் போராட்டத்தின் நெறிமுறைகளாக மேற்கொண்டார். காந்தி மகானைப் போலவே அவரும் ஒரு வெறியனின் துப்பாக்கிக் குண்டுக்குப் பலியாயிருந்த போதிலும், இந்தியாவைப் போலவே இங்கும் இனக் கலவரங்கள் தலை விரித்தாடியிருந்தாலும் கூட, அசைக்க முடியாத இனவழி நீதிகள் தளரத் தான் செய்தன. அதைக் காட்டிலும் அவரது ஒப்பற்ற சாதனை என்னவென்றால், காந்தியடி களைப் போலவே அவரும் அநீதியைத்தான் எதிர்க்கக் கற்றுக் கொடுத்தார்; தம்மை எதிர்ப்பவர்களை வெறுக்கக் கற்பிக்கவில்லை.

அநீதியை எதிர்க்க வேறு வழிமுறைகளும் உள்ளன. ஆனால், இவற்றில் பலவற்றால் நிரந்தரப் பிளவுகள் ஏற்படும் ஆபத்து இருக்கிறது. அதைக்காட்டிலும் கொடுமை என்னவென்றால், தம் எதிரிகளை அறவே வெறுப்பதன் மூலம், தம் மனிதாபிமானத் தன்மையையும் இழந்து விலங்கைப் போல் வெறி கொள்ள வைக்கின்றன மற்ற வழி முறைகள். கண்ணுக்குக் கண் என்ற பழி வாங்கும் முறை உலகையே குருடாக்கி விடும் என்று காந்தியடிகள் எச்சரித்தார். தன் நாட்டுக்காக, உரிமைகளுக்காக உயிரையும் துறக்கத் தயாரான போராளிகளைப் போற்றுகிறேன் என்று சொன்ன காந்தி, ஆனால் அதற்காகக் கொலை செய்வதை வன்மையாகக் கண்டித்தார். காந்தியடிகள் கற்றுக் கொடுத்த பாடம் முன்னெப்போதையும் விட இப்போது கட்டாயம் தேவைப்படுகிறது.

"எல்லாக் கலாச்சாரங்களும் சமமல்ல. மேற்கத்திய நாகரீகத்தின் உயர்வோடு ஒப்பிடும்போது, ஏனைய நாகரீகங்கள், குறிப்பாக இஸ்லாமிய கலாச்சாரம் கொலை வெறி பிடித்தது" என்று முழங்குபவர்கள் முகத்தில் கரி பூசி விட்டார் முன்னாள் அமெரிக்க அதிபர் வேட்பாளர் பேட் ராபர்ட்சன். கொலை வெறி என்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, மேற்கத்திய நாகரீகத்துக்கும் உள்ள குறைபாடு; இஸ்லாமியப் போதகர்கள் மட்டுமல்ல, கிறித்தவப் போதகர் களும் கொலையைத் தூண்டி விடலாம் என்பதற்கு அவரே அடையாளம்.

அமெரிக்காவோடு கருத்து வேற்றுமையுள்ள வெனிசுவேலாவின் அதிபர் ஹ¤யூகோ சாவெஸைப் பற்றிப் பேசும்போது போர் தொடுத்து அவரை ஒழித்துக் கட்டுவதை விட உளவாளிகள் வழியாக அவரைக் கொலை செய்வதே மலிவானது என்றார் பேட் ராபர்ட்சன். தன் கிறித்தவ ஒலிபரப்பு வலையத்தின் "700 கிளப்" நிகழ்ச்சியில் கொலை போதனை செய்த இவர் இதற்கு முன்னர் ஏனைய மதங்களை, குறிப்பாக இந்து, முஸ்லிம் சமயங்களைக் கடுமையாகத் தாக்கிய பண்பாளர்.

1984ல் டெல்லியில் நடந்த சீக்கிய எதிர்ப்புக் கலவரங்களைப் பற்றிய பத்தாவது கமிஷனின் அறிக்கையும் வந்து விட்டது. 20 ஆண்டுகள் கழித்தும் திட்டமிட்டுச் சீக்கியர்களை வேட்டையாடிய காங்கிரஸ் கட்சித் தலைவர் களையும், அவர்களோடு ஒத்துழைத்த காவல் அதிகாரிகளையும், இதைக் கண்டும் காணாமல் இருந்து காங்கிரஸ் அமைச்சர்களையும் சட்டம் ஒன்றும் செய்யவில்லை. இந்தியாவைக் காக்கும் படைவீரர்கள் அணியில் மட்டுமல்ல, விவசாயம், தொழில் நுட்பம், வணிகம், என்று பல துறைகளிலும் இந்தியாவிற்குப் பணி செய்பவர் களில் முன்னணியில் நிற்கும் சீக்கியர்களுக்கே இந்தக் கதி என்றால் இந்தியாவின் ஏனைய மொழி, இன, சமயச் சிறுபான்மையர்களின் கதி என்ன? இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங் நெகிழ்ச்சியுடன் மன்னிப்புக் கேட்டது மனதைத் தொட்டாலும், உண்மையான குற்றவாளிகள் இன்னும் நடமாடுவது நாட்டுக்கே அவமானமில்லையா?
டெல்லி கலவரக் குற்றவாளிகளும் குஜராத் கலவரக் குற்றவாளிகளும் அரசியல் போர்வை யில் நடமாடிக் கொண்டிருக்கும்போது மன்னிப்பு என்பது வெறும் வெட்டிப் பேச்சாகத் தான் தோன்றும்.

சென்ற ஆண்டு மார்ச் மாதப் புழைக்கடைப் பக்கத்தில், பேராசிரியர் மர்ரே எமனோவின் நூறாவது பிறந்த நாள் விழாவில் பங்கேற்றது பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். அப்போது அவருக்குக் காது சரியாகக் கேட்கவில்லை. சந்திக்கும் புதிய மனிதர்களை நினைவில் வைத்துக் கொள்ள முடியவில்லை. அவரால் புதிய உச்சரிப்புகளைப் புரிந்து கொள்ளத் தடுமாறினார். இருந்தாலும், அவரது மொழி யியல் புலமையும், அறிவியல் ரீதியான அணுகுமுறையும், புதுமையான கண்ணோட்டமும் தற்கால மொழியியலாளர்ளையும் திகைக்க வைத்தன. அந்த விழாவின் இரண்டு நிகழ்ச்சிகள் எனது நினைவில் என்றும் நிற்கும்.

அமெரிக்க இந்தியர்களின் வாய்மொழி களிலும் ஆராய்ச்சி செய்திருக்கும் அவர், ஓர் அமெரிக்க இந்திய மொழியியல் ஆராய்ச்சியாளர் வாழ்நாள் முழுதும் அரும்பாடுபட்டுத் திரட்டிய ஆராய்ச்சிக் குறிப்புகளை அவர் குடி மரபுப்படி அவரது இறுதிச் சடங்கில் எரித்த கதையைச் சொல்லி நொந்தார். நம்மோடு வாழ்ந்த சில மனித இனங்களின் எண்ணங்கள் இருந்த சுவடு இல்லாமல் மறைந்து விட்டனவே என்று எப்போதோ நடந்த அந்த நிகழ்ச்சியை அன்றும் எண்ணித் துடித்தார்.

நிகழ்ச்சியின் நிறைவில் பிறந்த நாள் கேக் வெட்ட அவரை அழைத்த போது, அவர் கேக்கின் முன்னே கை கூப்பித் தொழுது, கண்ணை மூடிக் கொண்டு ஏதோ முணு முணுத்தார். அந்த முணுமுணுப்பு ஒரு சமஸ்கிருத மந்திரம் போன்று ஒலித்தது. கேக்கின் மேல் ஏற்றியிருந்த மெழுகுவர்த்தியை மற்றவர்கள் வற்புறுத்தியும் அணைக்காமல் அங்கிருந்து விலகி விட்டார். விளக்கை ஏற்றுவதுதான் இந்திய மரபு, அணைப்பதல்ல என்பதால் சமஸ்கிருதப் பெரும்புலவரும், திராவிட மொழியியல் பேரறிஞருமான அவர் விளக்கை அணைக்க மறுத்துவிட்டார் என்ற எண்ணம் நெஞ்சுக்கு இதமாக இருக்கிறது.

மணி மு. மணிவண்ணன்
Share: 




© Copyright 2020 Tamilonline