Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
August 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | முன்னோடி | சமயம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள் | சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | பயணம்
Tamil Unicode / English Search
சிறுகதை
சுமைகூலி
பத்துநிமிட பயம்
- அப்துல்லா ஜெகபர்தீன்|ஆகஸ்டு 2018|
Share:
"என்னடா சொல்ற?" ஆச்சரியமாகவும், அதிர்ச்சியாகவும் கேட்டான் பிரபு

"ஆமாண்டா, இது எனக்கு ரொம்பப் பிரச்சனையா இருக்கு" என்றான் கார்த்திக்.

இருவரும் இஞ்சினியரிங் இறுதியாண்டு மாணவர்கள்.

"எத்தனை நாளா இப்படி இருக்கு?"

"மூணு, நாலு மாசமா. இப்போ கொஞ்ச நாளா ரொம்ப பயப்படும்படியா சில விஷயங்கள் நடக்குது, அதான் உன்கிட்ட சொல்றேன்."

"அது எப்படிடா, கரெக்டா பத்து நிமிஷத்துக்குப் பிறகு நடக்கப்போற ஒரு விஷயம் ஒண்ணு உனக்கு முன்னாடியே மனசுல தோணும்? தினமுமா, எப்போதாவதுதானா?"

"எப்போதாவதுதான், ஆனா எப்பவேனும்னாலும் தோன்றும். நினைவிருக்கா? அன்னைக்கு இந்தியா-ஆஸ்திரேலியா மேட்ச், நாம சுரேஷ் வீட்டுல பார்த்தோம். இந்தியா 397ஐ சேஸ் பண்ணிட்டு இருந்துச்சு. தோனி சூப்பரா விளையாடிகிட்டு இருந்தார். நாம எப்படியும் ஜெயிச்சுடுவோம்னு நினைச்சோம். அப்போ திடீர்னு எனக்கு தோனி 85 ரன்னுல அவுட் ஆறமாதிரி தோணிச்சு. நான் உடனே சொன்னேன். நான் சொன்ன பத்து நிமிசத்துல தோனி 85 ரன்னுல அவுட் ஆய்ட்டார்."

"ஆமா சொன்னே, ஆனா அது சாதாரணமா நாம மேட்ச் பாக்கும்போது பேசிக்கிறதுதான். யாரும் சீரியஸா எடுத்துக்கலே."

"ஆமா, ஆனா போனமாதம் நாம ரெண்டுபேரும் உன் அண்ணன் பைக்க எடுத்துக்கிட்டு போய் சின்ன ஆக்சிடென்ட்ல மாட்டினோமே, நினைவிருக்கா? அதுவும் எனக்கு பத்து நிமிடம் முன்னாடியே தோணிச்சு. நான்கூட உன்னை மெதுவாப் போ, பாத்துப் போன்னு சொல்லிகிட்டே இருந்தேன்."

பிரபு சற்று மிரட்சியுடன் கார்த்திக்கைப் பார்த்தான். "ம், நினைவிருக்கு, அன்னைக்கு நான்கூட கொஞ்சம் எரிச்சல்பட்டேன்... என்னடா தொணதொணங்கிறான்னு."

"போனவாரம்கூட லேப்ல, நம்ம கிளாஸ்மேட் காயத்ரி முகத்துல ஆசிட் பட்டுதே, அதுகூட எனக்கு 10 நிமிடம் முன்னாடியே தோணிச்சு. இந்தமாதிரி நிறையச் சொல்லலாம். இதில நான் கவனிச்சது என்னன்னா, எனக்கு மனசுல தோணுவது என்னைச் சுற்றியேதான் நடக்குது."

"என்னால நம்பவும் முடியல, நம்பாம இருக்கவும் முடியல கார்த்திக். உன் மனசுல தோணுறது, நடக்கிறது ஒரு தற்செயலாக்கூட இருக்கலாம். ஒண்ணு பண்ணுவோம், வர்ற ஞாயித்துக் கிழமை நான் உன்கூடவே இருக்கேன், உனக்கு எதாவது தோணினா என்கிட்ட சொல்லு, நடக்குதான்னு பார்க்கலாம். இதன்மூலம் இன்னொண்ணையும் நாம கிளியர் பண்ணிக்கலாம். பொதுவாக இந்தமாதிரி அமானுஷ்ய விசயங்கள் வெளியில் சொன்னா நடக்காது என்பார்கள். நீ என்கிட்ட சொல்லி, அது நடக்கலைன்னா இந்தப் பிரச்சனைக்கு அது ஒரு தீர்வாக்கூட இருக்கலாம். சரியா?"

"சரிடா, ஆனா எனக்கு என்னமோ பயமாயிருக்கு."

-------------------

ஞாயிற்றுக்கிழமை. பிரபு, கார்த்திக்குடனே இருந்தான். இருவரும் ஒன்றாகவே டீ குடிக்கச் சென்றனர், ஒன்றாகவே டிஃபன் சாப்பிட, தம்மடிக்க, சாப்பிட எல்லாவற்றுக்கும் சென்றார்கள். மணிக்கொருதரம், பிரபு, கார்த்திக்கிடம் "என்னடா, எதாவது தோணுதா" என்று கேட்டுக்கொண்டே இருந்தான்.

"டேய் அப்படியெல்லாம் வராதுடா. சும்மா நச்சரிக்காத. தோணினா கண்டிப்பா சொல்றேன். இப்ப வா, எதாவது படத்துக்கு போகலாம்."

ஞாயிறு மாலை மந்தமாக மங்கிக்கொண்டிருந்தது. கார்த்திக்கும், பிரபுவும் சினிமா பார்த்துவிட்டு பஸ்ஸில் வந்துக்கொண்டிருந்தனர். கார்த்திக் எங்கோ வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தான்.

"மச்சான், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே. நீ ரொம்ப இங்கிலீஷ் படம், அதுவும் பேய்ப்படம், திகில் படமா பார்க்கிறதுனால வர்ற விளைவுடா இது. நான் ஏற்கனவே சொன்னமாதிரி, இது ஒரு தற்செயல்தான். தேவையில்லாம மனசை குழப்பிக்காதே...." என்று பிரபு சொல்லிக்கொண்டிருக்கும்பொது, பிரபுவின் தோளை அவசரமாக உலுக்கினான் கார்த்திக்.

"என்னடா?"

"அந்...அந்த நீலச் சட்டைக்காரன் இன்னும் பத்து நிமிசத்துல சாகப்போறான்."

கார்த்திக் காட்டிய நீலக்கலர் சட்டை போட்டவனைப் பிரபு பார்த்தான். அவன், கல்லூரி முதலாண்டு மாணவனைப் போலிருந்தான். அவனும், அவன்கூடச் சிலரும் பஸ்ஸின் படிக்கட்டில் நின்று கொண்டிருந்தார்கள்.

டேய், அவன் படிக்கெட் பக்கத்துல நின்றாலும், பஸ் உள்ளே, கொஞ்சம் பாதுகாப்பான இடத்திலத்தான் இருக்கான், அவன் எப்படிடா? அந்த ரெட் சர்ட்தான் கீழ்ப்படியில கொஞ்சம் டேஞ்சரான இடத்தில் இருக்கான்."
"அதெல்லாம் எனக்கு தெரியாது. அவனுக்கு எதுவும் ஆகிடக்கூடாதுன்னு கடவுளை வேண்டிக்குவோம்."

நிமிடங்கள் கரைந்தன, பஸ் ஏதோ ஒரு நிறுத்தத்துக்கு அருகே சற்று வேகத்தைக் குறைத்தது. திடீரென்று படிக்கட்டில் நின்றுகொண்டிருந்த பசங்களிடையே சலசலப்பு.

"மச்சான் செக்கிங்குடா, மாட்டுனோம் ஃபைன் தீட்டிடுவான், எஸ்கேப்..." என்று சொல்லிக்கொண்டே கீழ்ப்படியில் நின்றுக்கொண்டிருந்தவன் ஓடும் பஸ்ஸிலிருந்து குதித்தான். தொடர்ந்து மற்றவர்களும் குதிக்க, அவர்கள்மேல் சாய்ந்து நின்றுகொண்டிருந்த நீலச் சட்டைக்காரன், நிலைமையை உணருமுன்பே நிலைகுலைந்து, படிகளில் உருண்டு, வேகமாக சாலையில் விழுந்து, தலையில் அடிப்பட்டு இறந்து போனான். எல்லாம் கண்ணிமைக்கும் நேரத்தில் முடிந்துவிட்டது.

பார்த்த கார்த்திக்கும், பிரபுவும் உறைந்துபோனார்கள்.

*****


அந்தக் குளிரூட்டப்பட்ட அறையிலும் குப்பென்று வியர்த்தது குமரேசனுக்கு. அது சுவாமி சுக்ரானந்தா ஆசிரமத்தில் சுவாமிகளின் பிரத்யேக அறை. குமரேசன் மாநில அமைச்சர். கட்சியிலும், தொகுதியிலும் செல்வாக்கு மிகுந்தவர். அவருக்கு சுக்ரானந்தாவின் ஒவ்வொரு சொல்லும் வேதவாக்கு. சுவாமி சுக்ரானந்தா அவரிடம் சொன்னதின் சாரம்சம் இதுதான்:

"உன் உயிருக்கு இன்னும் ஒரு மாதத்தில் ஆபத்து வரலாம்."

இதைக் கேட்டவுடன் குமரேசனின் சப்தநாடியும் சில கணம் அடங்கி, எழுந்தது.

குமரேசனுக்குச் சுக்ரானந்தாவுடன் 14 வருடப் பழக்கம். சுவாமி சொன்னது எதுவும் அவருக்குத் தவறியதில்லை. அதுவும், கடந்த தேர்தலில் சுக்ரானந்தா, குமரேசனைப் போட்டியிடவேண்டாம், தோற்றுப் போவாய் என்று எச்சரித்தார். ஆனால், அப்போது ஆளுங்கட்சிக்கு எதிராகவும், அவர் சார்ந்திருந்த கட்சிக்கு ஆதரவாகவும் பலமான அலை வீசியது. பல சர்வேக்களும் அவரது கட்சிதான் ஆட்சி அமைக்கும் என்று கணித்திருந்தன. கட்சித் தலைமையும் அவரை நிற்கச் சொல்லிக் கட்டளையிட்டது. சுக்ரானந்தாவின் சொல்லைமீறித் தேர்தலில் நின்றார்.

அவரது கட்சி வெற்றிபெற்றது. ஆனால், குமரேசன் 34 வாக்கு வித்தியாசத்தில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தார். கோர்ட், கேஸ், மறுவாக்கு எண்ணிக்கை என்று பல முயற்சிகள் எடுத்தும் தோல்வி தோல்விதான்.

அதன்பிறகு அவர் சுக்ரானந்தாவைக் கேட்காமல் எதுவும் செய்வதில்லை. அவர் சொன்னால் வேதவாக்கு. அதனால், இன்று சுவாமி அவர் உயிர் பற்றிச் சொல்லியது அவரை ரொம்பப் பாதித்தது. சமீபத்தில் உளவுத்துறையும் அவரது உயிருக்கு ஆபத்து என்று குறிப்பு அனுப்பி இருந்தது. பலவருடப் போராட்டத்துக்குப் பிறகு இப்போதுதான் இடைத்தேர்தலில் வென்று அமைச்சராகி இருக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல், தளர்ந்த நடையுடன் ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.

"அண்ணே, எனக்கு அந்தச் சண்முகம் மேலதான் சந்தேகம். இடைத்தேர்தலில் அவனுக்கு சீட் கொடுக்காமல் தலைவர் உங்களுக்குக் கொடுத்தார், அதிலிருந்து அவன் சரியில்லை, தேர்தலில் உங்களுக்கு எதிராகவும் சைலன்ட்டா வேலைப்பார்த்தான், அவனைத் தூக்கினால் எல்லாம் சரியாயிடும். சொல்லுங்க தலைவா அவனுக்கு ஸ்பாட் வச்சிடுவோம்" அவரின் ஒரு அடிப்பொடி எகிறினான்.

"டேய், சும்மாயிரு. பார்க்கலாம்...." என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கும்போது, செல்ஃபோன் ஒலி எழுப்பியது. எடுத்துப் பார்த்தார் "ஃபேமிலி டாக்டர்" என்றது, சலிப்புடன் எடுத்துப் பேசினார். பேசப்பேச அவர் முகம் மலர்ந்தது.

"அப்படியா, அந்தப் பையனை உடனே நம்ம தோட்ட பங்களாவுக்கு வரச்சொல்லுங்க" என்றபடி ஃபோனை வைத்தவர் "டேய் வண்டிய தோட்ட பங்களாவுக்கு விடுடா" என்றார்.

*****


அந்தத் தோட்ட பங்களா பல கோடிகளை விழுங்கி, பளபளவென்று காட்சி அளித்தது. குமரேசனுக்கு முன் கார்த்திக் பயங்கலந்த பவ்யத்துடன் நின்றிருந்தான்.

"தம்பி, டாக்டர் உன்னைப்பற்றியும், உன் பிரச்சனைபற்றியும் விவரமாச் சொன்னார். உன்னோட இந்த பிரச்சனை என்னோட ஒரு பிரச்சனையைச் சரிசெய்யும்னு நினைக்கிறேன்."

கார்த்திக் சற்றுக் குழப்பத்துடன் அவரைப் பார்த்தான். குமரேசன் தொடர்ந்தார்

"தம்பி, உனக்கு என்னைத் தெரியும்னு நினைக்கிறேன். இன்னைக்கு தமிழ்நாட்டு அரசியலில் நான் ஒரு தவிர்க்கமுடியாத ஆள். அமைச்சர். பல ட்ரஸ்ட்டுகள் ஆரம்பிச்சு பல நல்ல காரியங்களைச் சமுதாயத்துக்கு செஞ்சுகிட்டு இருக்கேன். என் தொகுதியில் போய்க் கேட்டுப்பார் எவ்வளவு நல்ல திட்டங்களை செயல்படுத்தியிருக்கேன்னு தெரியும். ஆனால், என்ன செய்து என்ன? மனநிம்மதி இல்லாம இருக்கேன். இந்தக் காலத்துல யாரு நல்லது செய்யவிடுறாங்க? எங்க பார்த்தாலும் போட்டி, பொறாமை, காலைவாரி விடுறதுன்னு சொல்லிகிட்டே போகலாம். இப்பகூட பாரு என் கட்சியிலேயே எனக்கு எதிர்ப்பு, என்னை எப்படியாவது கவிழ்க்கணும்னு சிலபேர் முயற்சி பண்ணுறாங்க. ஏன்? என்னைக் கொல்லக்கூட முயற்சி நடந்தது. கடவுள் அருளால எப்படியோ தப்பிகிட்டு வர்றேன். இங்கதான் தம்பி உன் உதவி தேவைபடுது."

"சார், புரியல. நான் இதுல... உங்களுக்கு என்ன மாதிரி உதவி..."

குமரேசன் புன்னைகையுடன் தொடர்ந்தார். "தம்பி, எனக்கு ஜாதகத்துமேல அசைக்கமுடியாத நம்பிக்கை. என் ஜாதகப்படி அடுத்த மூணுமாசத்துக்கு எனக்கு மிகப்பெரிய கண்டம் இருக்கு, என் உயிருக்கே ஆபத்து வரலாம்னு என் சுவாமிஜி சொல்லியிருக்கார். இப்போ இருக்குற சூழ்நிலையில் அந்தமாதிரி ஒரு ஆபத்து என் அரசியல் எதிரிகளால்தான் வரும்னு நினைக்கிறேன். பத்து நிமிடத்துக்கு அப்புறம் நடக்கப் போறதை கணிக்கிற சக்தி உன்கிட்ட இருக்கு. அத வெச்சு இந்தக் கண்டத்துலேயிருந்து எப்படியாவது தப்பிடணும்னு நினைக்கிறேன்."

சற்று மிரட்சியுடன் குமரேசனைப் பார்த்தான் கார்த்திக்.

"சார்...."

"ஒன்னும் பயப்படாதே. எங்கூடவே மூணுமாசம் இரு. உனக்குத் தேவையான எல்லா வசதியையும் நான் செய்து தர்றேன். என்னை யாராவது தாக்கவோ, கொல்லவோ வருகிற மாதிரி உனக்குத் தோன்றினால் உடனே சொல்லு. நாம அலர்ட் ஆகி அதிலிருந்து தப்பிச்சிரலாம். இதான் பிளான். இதை நீ சும்மா செய்யவேண்டாம். உனக்குக் கணிசமான தொகை நான் தர்றேன்".

"சார், எனக்கு காலேஜ் இருக்கு, என் குடும்பம் இருக்கு. தவிர, இது என் சக்தி கிடையாது. இது ஒரு நோய். எனக்கு சில சமயம் எதுவும் தோன்றாமலே கூடச் சில விசயங்கள் நடந்திருக்கு. அதனால், உங்க பாதுகாப்புக்கு இதை நீங்க நம்பறது எனக்கு சரியாப்படலை."

"உனக்கு யாரு குடும்பம்? ஒரு வயசான அம்மாதானே? அவங்களுக்குதான் யாரோ ஒரு அக்கா துணை இருக்காங்களே. அப்புறம் என்ன பிரச்சனை? நான் எல்லாம் விசாரிச்சிட்டேன் தம்பி. எனக்குப் போலீஸ் பாதுகாப்பு இருக்கு. அதுக்கும்மேல என் ஆளுங்க, தொண்டர்கள் பாதுகாப்பும் இருக்கு. என்கிட்ட துப்பாக்கியும் இருக்கு. அதனால நான் தைரியமாத்தான் இருக்கேன். ஆனாலும் மனதுக்குள் ஏதோ குறுகுறுன்னு இருக்கு. அதான் உன்னோட இந்த சக்தியும் ஏதாவது ஒரு வகையில் உதவினா நான் இன்னும் கொஞ்ச தெம்பாக இருப்பேன். நீ, உன் காலேஜ், படிப்பைப்பற்றி கவலையே படவேண்டாம், அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். நீ உடனே உன் வீட்டுக்குப் போய், எதாவது காரணத்தைச் சொல்லிட்டு, உனக்கு தேவையானதை எடுத்துக்கிட்டு இங்க வந்திடு" என்று சற்றுக் கண்டிப்புடன் சொல்லி முடித்தார் குமரேசன்.

கார்த்திக் வேறு வழியில்லாததால், அரைமனதுடன் தலையாட்டினான்.

*****

ஒரு மாதம் உருண்டோடி இருந்தது. குமாரசாமியின் தொப்பைபோல, அவருடனே எப்போதும் ஒட்டிக்கொண்டு இருந்தான் கார்த்திக். அவருடைய அன்றாட அடாவடி நடவடிக்கைகளைப் பார்த்து பயந்து, தன்னுடைய நோயைப்பற்றிய நினைப்பே இல்லாமலிருந்தான்.

அது ஒரு திங்கள்கிழமை காலை. பிரதமருடனான ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக குமரேசன் அதிகாலையிலேயே எழுந்து குளிக்க பாத்ரூம் சென்றார். கார்த்திக் ஏற்கனவே தயாராகி, பேப்பர் படித்துக்கொண்டிருந்தான். குமரேசன் குளித்து, அவசரமாகத் தலை துவட்டியபடி, வேட்டிமட்டும் கட்டி, திறந்த உடம்புடன் பாத்ரூமிலிருந்து வெளிப்பட்டார். அவரின் மார்புப் பகுதியை ஏதேச்சையாகப் பார்த்த கார்த்திக், அதில் ஏதோ பச்சை குத்தியதுபோன்று எழுதி இருக்க, ஆச்சரியத்துடன் குமரேசனிடம் அதைப்பற்றிக் கேட்டான்.

குமரேசன் முகத்தில் திடீரென்று ஒரு வெட்கம் வந்தது. "அது 'வேணி', நான் மதுரையில் கவுன்சிலராக இருந்தபோது காதலிச்ச பொண்ணு. ரெண்டுபேரும் சின்சியரா காதலித்தோம். ஆனால், சூழ்நிலை எங்களைப் பிரிச்சிட்டது. ரொம்ப நல்ல பொண்ணு, நல்லா பாடுவா, கொடிகுளம் கிராமத்தில பாடகி வேணின்னா எல்லாருக்கும் தெரியும் அந்தக் காலத்தில். இப்போ எங்கே, எப்படி இருக்காளோ..." என்று குமரேசன் சொல்லிக் கொண்டிருக்கும் போதே 'டுமீல்' என்ற சத்தத்துடன் துப்பாக்கித் தோட்டா அவர் நெஞ்சில் பாய்த்தது.

ரத்தம் பெருகும் மார்புடன் தரையில் சாய்ந்தார் குமரேசன். அதிர்ச்சியுடன் கார்த்திக்கைப் பார்த்தார். கார்த்திக் கையில் துப்பாக்கியுடனும், கண்ணில் கோபத்துடனும் ஆக்ரோஷமாக மீண்டும் குமாரசாமியைச் சுட்டான்.

"உன்னைத்தான் இத்தனை நாளா தேடிக்கிட்டுருந்தேன். எங்கம்மாவை காதலித்து, கர்ப்பமாக்கி, அரசியலில் கொஞ்சம் வளர்ந்தவுடன் அவங்களை கழட்டிவிட்டுட்டு ஓடின ஆளுதானே நீ? ஆனா, அவங்க உன்னை உண்மையிலேயே காதலிச்சாங்க. அதனால்தான், இதுநாள்வரை உன்னைப்பற்றி, உன் பேரைக்கூட யார்கிட்டேயும் சொன்னதில்லை. இன்னைக்கிக் கடவுள் உன் வாயாலேயே அவங்களைப் பற்றி என்கிட்டேயே சொல்லவச்சுட்டான். அவங்க என்னைப் பெற்று, வளர்க்க எவ்வளவு கஷ்டமும் அவமானமும் பட்டாங்கன்னு எனக்குத்தான் தெரியும். ஆனால், நீ இங்க சொகுசு வாழ்க்கை வாழ்ந்துகிட்டு இருக்க!"

"நீ துப்பாக்கியால் சுடப்பட்டு சாகப்போறேன்னு எனக்கு பத்து நிமிடம் முன்னாடியே தோன்றியது, ஆனால் ஏதோ ஒண்ணு அதை உன்னிடம் சொல்லவிடாமல் தடுத்துவிட்டது. அது என்னோட 22 வருச கோவம்னு இப்போ புரியுது. சாரி சார்... சாரி அப்பா!"

அப்துல்லா ஜெகபர்தீன்,
ஃப்ரீமான்ட், கலிஃபோர்னியா
More

சுமைகூலி
Share: 




© Copyright 2020 Tamilonline