Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2018 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | மாயாபஜார் | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | பொது | சாதனையாளர் | கவிதைப்பந்தல் | சமயம்
சூர்யா துப்பறிகிறார் | சிறுகதை | Events Calendar | மேலோர் வாழ்வில் | அன்புள்ள சிநேகிதியே | எனக்குப் பிடித்தது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சிறுகதை
மனம் படைத்தவர்கள்
- குறிஞ்சி சுரேஷ்|ஜூலை 2018|
Share:
"பாரு முத்து, யாரு பணம் கட்டறாங்களோ அவங்கதான் நம்ம துறை சார்பாக இந்த அகில இந்திய கலைஞான பட்டறை மற்றும் போட்டியில் கலந்துக்க முடியும். இந்த நிகழ்ச்சி மத்திய அரசாங்கம் மூலம் நடக்கறதனாலே, இவ்வளோ குறைந்த கட்டணம். ஒரு வாரத்திற்கான சாப்பாடு, தங்கும் செலவு, பயணச்செலவு, வகுப்பு எடுக்கும் வல்லுனர்களுக்காம செலவு எல்லாம் கணக்கிட்டால் இது குறைவு" என்றார் மாரிச்சாமி.

"நாங்க எல்லாம் ஏழைங்க ஐயா! எங்க அப்பா எனக்கு இந்த சட்டை பேண்ட் வாங்கவே ரொம்ப சிரமப்படுறார். இந்தக் கட்டணத்தொகை அதிகம்" என்றான் முத்து.

"ஆமாய்யா, பணம் இருந்தாதான் கலை கொலை எல்லாம், ஏழைங்களுக்கெல்லாம் கலைத்தாகம் இல்லாம இருந்தாலே நல்லதுபோல" சத்தமாய் இரைந்து பேசிய தனது துறைத் தலைவரைக் கலவரமாய்ப் பார்த்தான் முத்து. 'எப்போதுமே அதிர்ந்து பேசாத மாரிச்சாமி ஐயாவா இப்படி கத்துறார்' என்று நினைத்தான்.

"நீங்க சொல்லறது சரிதான்! ஆனா நான் பலநாள் அரைப் பட்டினியாகூட இருந்திருக்கேன். அப்பகூட வரையாம இருக்க முடியல ஐயா! கரியால, மண்ணால, நான் சின்ன வயசிலிருந்தே வரஞ்சிக்கிட்டேதான் இருப்பேன். சாப்பாடு தண்ணியெல்லாம் உயிர்வாழத் தேவை. ஆனா படம்வரைதல் என் உயிர்! இத உங்களுக்கு சொல்லிட்டு, நம்ம துறைமூலமா ஏதாவது உதவமுடியுமான்னு கேக்கவந்தேன்" என்றான் முத்து.

"உன் சிரமம் எனக்குப் புரியுது! நான் நடுநிலைமை மாறாம இருக்கணும்னு கல்லூரி முதல்வர் சொல்லிட்டாரு. நான் ஏழைங்களுக்கு கரிசனம் காட்றதா புகார் வந்திருக்காம். அப்ப பணம் படைத்த திறமையாளர்களை உங்க துறை பின்னுக்குத் தள்ளுமானு கேட்கறார். சிலர் நான் சாதி மதம் பார்ப்பதாகவும், எனக்கு தேவையான மாணவர்களுக்கு என்கைக்காசைப் போட்டு உதவி செய்வதும் ஒருசார்புநிலை என பல விமர்சனத்திற்கு உட்படுத்தபட்டுள்ளதால் நான் யாரையும் சிபாரிசு பண்ணமுடியாதுன்னு சொல்லிட்டார்" என்றார் மாரிச்சாமி.

"ம்ம்.. இவ்ளோ சிக்கல் இருக்கும்னு நான் நினைக்கல. தயவுசெய்து எனக்காகப் பேசி நீங்க சிரமப்பட வேண்டாம்" முத்து சொன்னான்.

"நான் ஏழைங்களுக்கெல்லாம் கலைத்தாகம் இல்லாம இருந்தாலே நல்லதுன்னு முன்னாடி சொன்னத்துக்குக் காரணம் இதுதான்" சொன்னார் மாரிச்சாமி.

"புரியுது ஐயா! நான் பன்னிரெண்டாவதுல எடுத்த மதிப்பெண்ணுக்கு பொறியியல் படிப்பை எடுத்திருக்கலாம். என்னோட வரையும் ஆர்வம், இங்க இருக்குற குறைந்த கட்டணம், இதெல்லாம்தான் நான் நம்ம துறையில் சேரக் காரணம். எங்க வீட்டுல இருக்குற வறுமைக்கு நான் வேலைக்குப் போயிருக்கணும். எங்க குடும்பத்துல என் திறமைய வறுமை தின்னுடக் கூடாதுன்னு எல்லோரும் ரொம்ப உறுதியா இருந்து இங்க சேரச் சொன்னாங்க. என் திறமைக்கு மேலும் மெருகு சேர்க்க இந்தப் பட்டறை ஒரு சிறந்த வாய்ப்பா இருக்கும். மேலும் முதல் பரிசு பெற்றால் ஒரு லட்சம் ரூபாய் கிடைக்கும். என் ஓவியங்களை இந்தியா முழுதும் சந்தைப்படுத்துவார்கள் என்பதால்தான் இவ்வளோ ஆர்வம் காட்டுறேன். என் படங்களே என் வறுமையைப் போக்கினால் நான் ரொம்ப பெருமைப்படுவேன், மகிழ்வேன் அதான்" முத்து சொல்லிமுடித்தான்.

"ம்ம். நீ சொல்றது எனக்கு நல்லா புரியுது. முடிந்த அளவு முயற்சிசெய், தெரிஞ்சவங்ககிட்ட கேளு, ஒரு மாசத்தில திருப்பிக் கொடுக்கறேன்னு சொல்லு" என்றார்மாரிச்சாமி.

"யாருகிட்ட கேக்கறதுன்னுகூட தெரியல ஐயா, என்னச் சுத்தி இருக்குறவங்க எல்லாம் அன்றாடம் பாட்டுக்கே அல்லாடறவங்க. அவங்ககிட்ட கலை, பட்டறை, போட்டின்னு எல்லாம் சொன்னா ஒண்ணுமே தெரியாது. அவங்களுக்கெல்லாம் கலை இல்லாம வாழறதெல்லாம் ஒரு பொருட்டே இல்ல. என் மனசுதான் இதில் கலந்துக்கிட்டா நல்லதுன்னு சொல்லுது. எனக்கு ஒரு திருப்புமுனையா இருக்கும்னு நினைக்கிறேன். ஓவியத்துல பல புது முயற்சிகள் செய்யணும், ஏழை பசங்களுக்கு ஒரு இலவச கலைக்கூடம் திறக்கணும்னு நிறய கனவுகளுக்கு இது ஒரு திறவுகோலா இருக்கும்னு நினைக்கிறேன்" முத்து சொன்னான்.

"கண்டிப்பா, உன் திறமை ஆர்வத்துக்கு நீ கலந்துக்கிட்டு வெற்றி பெறுவாய். என் பிரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கள்!" என்றார் மாரிச்சாமி.

"நன்றி ஐயா, உங்க ஆசிர்வாதம்தான் ரொம்பமுக்கியம். நான் என்னால முடிந்த அளவுக்குப் பணம் புரட்டப் பார்க்கிறேன். நான் வருகிறேன். என்னுடன் பேச நேரம் ஒதுக்கியதற்கும் நன்றி" என்று கூறிப் புறப்பட்டான் முத்து.

கல்லூரியை விட்டு வெளியில் வந்தவனுக்கு ஒரே வெறுமையாய் இருந்தது. மணி நான்கு ஆகிவிட்டது. காலையிலிருந்து சாப்பிடாமல் இருந்ததால் வயிற்றுப்பசி கிள்ளியது. அருகிலிருந்த அய்யாத்துரை டீக்கடைக்குச் சென்று அமர்ந்தான். ஏதோ வந்து உட்கார்ந்துவிட்டானே தவிர, இந்த மாதக் கடனை அடைக்காதது நினைவுக்கு வர உடனே எழ எத்தனித்தான்.

"தம்பி முத்து, இன்னாப்பா டீ குடிக்க வந்துட்டு எழுந்து போற! கடனை நெனச்சிக்கினியா? அப்புறமா குடு! நான் கணக்கில வச்சிக்கிறேன். மதியானமே பட்டினிதான் போல! ஒருவடைதரவா?" என்றார் அய்யாத்துரை.

"அப்படி இல்ல, சீக்கிரம் வீட்டுக்குப் போலாம்னு நினைச்சேன். அதான் எழுந்தேன்" என்று முத்து சொன்னான்.

"அட ஒரு வட தின்னுடா ராசா!" என்று வலிந்து கொடுத்துவிட்டு "சாப்பாடெல்லாம் கூட பார்க்காம வரையற, உன் திறமைக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சி பெரிய ஆளானா நல்லா இருக்கும்" என்று அய்யாத்துரை கூறினார்.

"எங்கண்ணே! பணம் இல்லாம ஒரு பெரிய்ய வாய்ப்பை இழந்துடுவேன் போல" விரக்தியாய் சொன்னான் முத்து.

"என்னப்பா சொல்ற? என் மண்டைக்கு உரைக்கிற மாதிரி சொல்லு" என்றார் அய்யாத்துரை.

"எங்கதுறையிலிருந்து ஒரு மாணவன ஆக்ராவில் நடக்கற ஒரு போட்டிக்கு அனுப்பப் போறாங்க. அதுக்காக மூணு பேர் கொண்ட ஒரு பட்டியலை தயார் செஞ்சுருக்காங்க. என் பேருதான் முதல்ல இருக்கு. ஆனா 5000 ரூபா கட்டணும். அப்பதான் போகலாம். அதுல கலந்துக்கிட்டா இன்னும் நிறய கத்துக்கலாம் என்னோட படமெல்லாம் இந்தியா முழுக்க விக்கறதுக்கு வழி செய்வாங்களாம்" முத்து சொன்னான்.

"பணம் கட்ட எத்தனை நாள் இருக்கு?" கேட்டார் அய்யாத்துரை.

"ஒரு வாரம்."

"ஒரு வாரம்தானா, சரி என்னால முடிஞ்ச அளவு உனக்கு பணம் ஏற்பாடு பண்ண பாக்கிறேன்."

"நீ எதுக்குண்ணா இதெல்லாம் பத்தி கவலை பட்டுக்கிட்டு. ஏற்கனவே உங்க வீட்டுப்பாடே பெருசா இருக்குமே, சரிண்ணா, நான் கிளம்புறேன்" முத்து நகர்ந்தான்.
மறுநாள், அய்யாத்துரை ஒரு பெட்டியை வைத்து அதன்மேல் 'ஒரு ஏழை மாணவனின் வேலைக்கு உதவ விரும்புபவர்கள் இதில் போடுங்கள். எவ்வளவு பணம் போடுகிறார்கள் என்பதை இந்த துண்டுச் சீட்டில் எழுதி உங்கள் தொலைபேசி எண்ணுடன் போடுங்கள். வேலை கிடைத்தால் இன்னும் ஒரு மாதத்தில் இந்தப் பணம் உங்கள் கைக்கு திரும்பக் கிடைக்கும்' என்று எழுதியிருந்தார்.

மூன்று நாட்கள் கழிந்த நிலையில் ஒருசிலர் மட்டுமே பணம் போட்டிருந்தார்கள். 500 ரூபாய்கூடத் தேறவில்லை.

அன்று அய்யாத்துரையின் மனைவி தவமணி கடைக்கு வந்தபோது இதைப் பார்த்துக் கடுப்பாகிச் சத்தம் போட ஆரம்பித்தாள் "நம்ம கடனே தலைக்கு மேல இருக்குது. இதுல யாருக்கோ உதவி பண்ணச் சொல்லி கடைக்கு வரவங்ககிட்ட தொல்லை கொடுத்தா, வேற கடையப் பாத்து போய்டுவாங்க. முதல்ல அத எடுங்க."

"அடியேய். சத்தம் போடதே! ஏதோ நம்மளால முடிஞ்ச சின்ன உதவி! நம்ம கைக்காசையா போடுறோம். யாரையும் கட்டாயப்படுத்தவும் இல்ல. மனசு இருந்தா போடப் போறாங்க. அவ்வளவுதான்! அந்தப் பையன் திறமைசாலி அவனுக்கு நாம கொஞ்சம் கைகொடுத்தா நல்லா வளருவான்" அய்யாதுரை பரிந்து பேசினார்.

அங்கே டீ வாங்க வந்திருந்த கல்லூரியை கூட்டிப் பெருக்கும் மங்கம்மா கேட்டார் "அய்யாவு, யாரு அந்தப் பையன்? நம்ம கல்லூரியிலா படிக்கிறார்?"

"ஆமாக்கா, படம் நல்லா வரைவானே, வண்ணாரப் பேட்டையிலிருந்து வருவானே முத்து, அவனுக்குதான்."

"முத்து தம்பியா? அது ரொம்ப நல்லமாதிரி! எனக்கு பெருக்க வசதியா மேசை நாற்காலி எல்லாம் நகர்த்திப் போடும். எப்பவுமே படிச்சிக்குனு, படம் வரைஞ்சிகுனுதான் இருக்கும். அது வேலைக்கு போகுதா?"

"இல்லக்கா, டெல்லிகிட்ட ஏதோ போட்டியாம், அதுல கலந்துக்கிட்டா நிறைய கத்துக்கலாமாம். மொத எடம் வந்தா அவன் வரைஞ்ச படத்தையெல்லாம் அவங்களே வித்துத் தருவாங்களாம்"

"நம்ம தண்டலு கட்டவும் ஒரு நகைநட்டு வாங்கவும் உனக்கு வருமானம் வரலை. இதுல ஊருல இருக்கறவனுக்கெல்லாம் நீ உபகாரம் பண்ண நிக்கிற" என்று தவமணி கோபப்பட்டாள்.

"நாம இந்தப் புள்ளைக்கு உதவினதால நமக்கு ஒரு நஷ்டமும் இல்ல" என்றார் அய்யாத்துரை.

"ஏதோ பண்ணு, இப்ப அவனுக்கு மொத எடம் கிடைக்கலன்னா, நீ என்ன பண்ணுவ? பணம் கொடுத்தவனுக்கெல்லாம் பதில் சொல்லவேண்டாமா?" தவமணி கேட்டாள்.

"அவனுக்கு கண்டிப்பா கிடைக்கும். கிடைச்சாதான் பணம் திருப்பி கொடுப்பேன்னு போட்டிருக்கேன்" என்று அய்யாத்துரை சொன்னார்.

"அம்மா, நம்மள மாதிரி ஏழைக்கெல்லாம் உதவிசெய்ய ஏழைங்கதான் வருவாங்க, ஏதோ அய்யாவு அவரால முடிஞ்ச உதவி பண்றார். தடை சொல்லாதம்மா, நல்லது செஞ்சா புண்ணியம்தான் சேரும்" மங்கம்மா சொன்னாள்.

"முதல்ல நாம நல்ல நிலைமையில் இருந்தாதான் அடுத்தவங்களுக்கு உதவணும். நம்ம பொழப்பே பெரும்பாடு. அதாங்க்கா அப்படி சொன்னேன். நான் நினைச்சதை அவருகிட்ட சொல்லிட்டேன். கடைக்கு வர்றவங்க ஏதும் கடுப்பாகிடாம இருக்கணும். நல்லது நடந்தா சரி, நான் கிளம்பறேன்" என்று தவமணி சொல்லிவிட்டுச் சென்றாள்.

"அய்யாவு, இந்த இடதுபக்க மூக்குத்தியை கழட்டித் தரேன், இது அரைப்பவுனு தேறும். அடகு வச்சா நாலாயிரமாவது கிடைக்குமா?" மங்கம்மா கேட்டாள்.

இதைக் கேட்டவுடன் பதறி "வேண்டாம், உங்க வீட்டுக்காரர் திட்டப்போறார்" என்றார்அய்யாத்துரை.

"அவருக்கு ஒண்ணும் தெரியாது அய்யாவு, மாசத்துல இருபது நாளு அது ஊர்லே இருக்காது. வண்டி ஓட்டிட்டு வரும். வீட்டுக்கு வந்தா பிறகு தூங்கும், இதெல்லாம் கவனிக்காது. நீ இத நல்ல கடையா பாத்து அடகு வச்சி அந்தப் புள்ளைக்கு கொடுத்திடு. நாந்தான் கொடுத்தேன்னு இப்ப சொல்லாதே! அது ஜெயிச்ச பிறகு சொல்லு" என்று மங்கம்மா சொன்னாள்.

"உனக்கு பெரிய்ய மனசுதான் மங்கம்மாக்கா" என்றார் அய்யாத்துரை.

"அந்த முத்து தம்பி நல்லமாதிரி, என்புள்ள உயிரோடு இருந்தா இந்நேரம் கல்யாணம் கட்டி புள்ள பெத்துருப்பான். அவங்கப்பாகூட ஒருதரம் வண்டில போறப்ப கீழ உழுந்தவன் ஒரு ராத்திரியோட போய் சேர்ந்துட்டான். அவன்இருந்தா ஒரு சரக்குவண்டி வாங்க பணம் ஏற்பாடு பண்ணலாம்னு நினைச்சுகிட்டு இருந்தோம். அப்படியே ஜெயிக்கலைன்னாலும் எம்புள்ளையா அந்த முத்து தம்பிய நினைச்சிக்கிறேன்."

அடுத்தநாள் முத்துவைக் கடைக்கு வரச்சொல்லி ஃபோன் பண்ணினார் அய்யாத்துரை. "முத்து, இந்தா பிடி, நீ கேட்ட ஐயாயிரம்" என்று பணத்தை முத்துவின் கையில் வைத்தார்.

"ரொம்ப நன்றி அண்ணா, இந்த உதவிய மறக்கமாட்டேன்" அய்யாதுரையின் கையைப் பிடித்து உணர்ச்சிவசப்பட்டு சொன்னான்.

"இருக்கட்டும் முத்து, இந்தப் பணத்தை முதலில் கட்டு, போய் ஜெயிச்சிட்டு வா" என்றார் அய்யாத்துரை.

"சரிண்ணா, உங்க வாய்வார்த்தை அப்படியே பலிக்கட்டும். யாருகிட்டயாவது கடன் வாங்கினீங்களா" முத்து கேட்டான்.

"அதைப்பத்தியெல்லாம் நீ கவலைபடாதே முத்து, ஜெய்ச்சிட்டு வந்து பணத்தைத் திருப்பிக் கொடு."

"கட்டாயம் செய்வேன் அய்யாவு அண்ணா, யாரு உதவி செஞ்சிருந்தாலும் அவங்க நல்ல மனசுக்கு என்னோட மனமார்ந்த நன்றி" என்று சொல்லிவிட்டு உற்சாகத்துடன் சென்றான் முத்து.

முத்து வெற்றிபெற நீங்களும் கண்டிப்பாக வாழ்த்துவீர்கள் தானே!

குறிஞ்சி சுரேஷ்
Share: 
© Copyright 2020 Tamilonline