Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர் - சிறுகதை
சிலையும் சிந்தனையும்
- சுகி சுப்பிரமணியன்|ஜூலை 2017|
Share:
நகராட்சி மன்ற உறுப்பினர் திருவாளர் இராமாமிர்தம் காய்கறி வாங்குவதற்குப் பையும் கையுமாக வந்தார்.

தெருவிலுள்ள அசுத்தங்களைப் பார்த்ததும் பதவிக்கு வந்த மனம் ஒருமாத காலம் நைந்து வருந்திற்று. அவரது அதிகாரத் தொல்லைக்குப் பயந்து ஒருசில சமயம் நகரசுத்திகள் ஒடோடி வந்து சுத்தம் செய்தனர். நாளானதும் அவர் சொல்லும்போது முகம் சுளிக்க ஆரம்பித்தனர்.

"என்ன சாமி, உங்கள் தெருவையே பார்த்துக் கொண்டிருந்தால் மற்றத் தெருக்கள் கதி என்னாகும்?"

"நியாயமான பேச்சு" என்று அவர் பதவி மனம் பேசிற்று.

பழைய குருடியாக மாறி நின்றது அவரது தெரு. அத்தெருவைத் தாண்டிப் போவதற்குச் சாமர்த்தியம் வேண்டும், கொஞ்சம் சர்க்கஸ் வித்தையும் தெரிய வேண்டும். குடும்பக் கட்டுப்பாடு என்ற சர்க்கார் முரசம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே அந்தத் தெருவுக்குள் முழங்க வேண்டும், படை படையாகக் குழந்தைகளைப் பல்லாண்டு பல்லாண்டுகளாக வளர்த்து வரும் தெரு. குழந்தைகளின் விளையாட்டுப்பூமியும், தனித்து ஒதுங்கும் பூமியும், கடற்கரை, ஆற்றங்கரை என்ற மாலைப் பொழுதுபோக்கு நந்தவனமும் ஒன்றே. நகராட்சி மன்ற உறுப்பினர் பயின்ற தாண்டல், குதித்தல், எம்புதல் என்ற வித்தைகள் செய்து தமது தெருவைக் கடந்து அடுத்த எல்லைக்குள் வந்தார்.

அவருடைய தாத்தாவின் பக்தி முதிர்ந்து, விளைவித்த பிள்ளையார் கோவில் நின்றது. கண்டதும் இராமாமிர்தத்துக்கு எல்லையில்லாத வெறுப்பு. காரணம் கோவில் தர்மகர்த்தா பதவி அவரை விட்டு விடைபெற்றுவிட்டது. மண்டிக்கடை மான்முண்டியாப்பிள்ளை பணத்தாலும், ஆள்கட்டுப் பலத்தாலும் அந்தப் பதவியைப் பிடுங்கிக் கொண்டார். பழக்கம் பெரிய விலங்கு. பிள்ளையார் கோவில் கண்ணில் பட்டதும், அவர் செருப்பு காலைவிட்டுக் கழன்றது. கை மேல்துண்டைத் தோளுக்கு இறக்கிற்று. உடல் வளைந்து, தோப்புக்கரணத்துக்குத் தயாராகிறது.

இன்றும் அப்படித்தான் நிகழ்ச்சிகள் ஆரம்பித்தன. யாரும் தம்மைக் கவனிக்கவில்லை என்பதை அறிந்து பிள்ளையார் முன் மூன்று தோப்புக்கரணத்தோடு தாடையில் போட்டுக்கொண்டார். பிறர் கண்காணிக்காத போது அவர் செய்கிற காரியம். மேலும் "அப்பனே கணேசமூர்த்தி, உன் தயவுதான் வேண்டும். நானோ என் பிள்ளையோ உன் கோவிலுக்கு மீண்டும் தர்மகர்த்தாவாக இருக்க அருள் புரியப்பா, படுபாவி மான்முண்டி ஒழியட்டும்" என்று எண்ணினார். கோவில் மணியடித்தது. 'கணீர் கணீர்' என்று கேட்டதும் "அப்பன் உத்தரவு தந்து விட்டான்" என்று சிரித்தார். ஒரு கணம் அவர் மனம் வானளாவப் பறந்தது.

மறுகணம், "சை! அந்தத் துரோகி மான்முண்டி வாங்கி வைத்த வெண்கல மணியின் ஒசை ஆயிற்றே. நமக்கு நல்ல சகுனம் அதுவா உத்தரவு சொல்லும்?" என்றபடியே கோபத்துடன் காந்தி மார்க்கெட்டுக்குள் வேகமாக நடைபோட்டார்.

நகரசபைச் சேவகன், காண்டிராக்டர் கண்ணுசாமி, இருவரும் கூழைக்கும்பிடு போட்டனர். சிறிது குசலப்பிரச்சனம். விலைவாசித் தொல்லைகள் பற்றி மேல்போக்கு விசாரணை நடைபெற்றது.

"ஐயாதான் நகரசபை மன்றத்திலே அடித்துப் பேசி காந்தி சிலையைக் கொண்டு வந்தாங்க. பெருமை இவீங்களுக்குத்தான்" நகராட்சிச் சேவகன் இதுவரை லட்சம் தடவை இராமாமிர்தம் பிள்ளையைக் காணும்போதெல்லாம், சொல்லிவிட்ட பழைய பல்லவி, காந்தி சிலைக்குக் காரணம் இராமாமிர்தம் ஆனாலும் அதை லட்சார்ச்சனையாகக் கேட்பதிலும் நகரமன்ற உறுப்பினர்க்குப் பரம திருப்தி,

"ஐயா பாடுபட்டதினாலே தான் காந்திக்கு மார்க்கெட்டுக்குள் சிறந்த இடம் கிடச்சுது!" என்று அனுபல்லவி பாடினார் காண்டிராக்டர்.

இராமாமிர்தம் உடல் உள்ளம் இரண்டும் சில்லிட்டது. புகழ்ச்சிக்கு இருக்கும் விறுவிறுப்பு புதுப்பெண்ணின் கரத்தைப் பிடிக்கும் ஆணுக்கு இருக்குமோ இருக்காதோ? இராமாமிர்தம் முகம் குப்பென்று சிவந்து சிலிர்ததது. முத்துமுத்தான வியர்வைத் துளிகள். காந்திக்கு உரிய இடமல்லவா? பெருமை இருக்காதா? மயிர்க்கால்கள் குத்திட்டன, பகீரதப் பிரயத்தன செய்கையைத் தாம் செய்துவிட்டது போல் உணர்ந்தார். இராமாமிர்தம் இத்தனைக்கும் வெள்ளைக்கார சார்ஜெண்டு பூட்சு காலில் உதைபட்டவர். மறியல் செய்த தேசபக்தர். அன்று வெள்ளையன் காலால் அடிபட்டபோது எத்தனை ஆனந்தமாக அகிம்சாவாதியாகப் பட்டுக்கொண்டு உடலையும் உள்ளத்தையும் ஒடுக்கினாரோ அதுபோல அவர் இப்போது ஒடுங்கவில்லை. உள்ளம், உடல், இரண்டும் விசுவரூபம் எடுக்கிறது.

"காந்தியின் அருமை எந்தப் பயலுக்கு நம்மூரில் தெரியும்? கொள்ளை அடிக்கத்தான் தெரியும். கறுப்பு மார்க்கெட்டு, வெள்ளை மார்க்கெட்டு இரண்டையும் எவன் விட்டான்?"

அவர் குத்திக் காட்டியது மான்முண்டியாப்பிள்ளையை.

"ஆமாம் ஐயா. கொள்ளையடிக்கிறது கோடி கோடியாக. சந்நிதிக்கு சரவிளக்குப் போடுகிறேன், கோவிலுக்குக் கும்பாபிஷேகம் செய்கிறேன், தானதர்மம் செய்கிறேன் என்பார்கள்."

இராமாமிர்தத்தின் உடல் பனிமலைக்குள் புதைந்ததுபோன்ற உணர்ச்சி. ஆனலும் வாய்விட்டு மான்முண்டிப்பயல் செய்துவிட்ட அக்கிரமம் எதையும் காண்டிராக்டர் சொல்லவில்லையே.

அப்போது கார் வேகமாகத் தூசியை அள்ளி நிற்பவர்கள் முகத்தில் திணித்துவிட்டுப் பாய்ந்தது. அது மான்முண்டியா பிள்ளையின் கார்.

"அது யார் கார்?"

காரோடும் திசைக்குத் திரும்பி கோடாலிக் கும்பிடாக வணக்கம் போட்ட காண்டிராக்டர் பாம்புக்கு வாலும், மீனுக்குத் தலையும் காட்டிக் கொண்டிருந்த விலாங்கு.

"அட போகிற ஜோரைப் பாருங்கள். தர்மகர்த்தா போகிறார்" என்று கேலியாகச் சொன்னார் காண்டிராக்டர்.

"இவனைப்போல் தர்மகர்த்தா இருந்தால் கோவிலில் கடவுள் இருப்பாரா? ஊர் உருப்படுமா? எனக்கே தோன்றுகிறது, கோவில் குளங்களைத் தூர்த்துவிட்டால் இவனைப் போன்ற அயோக்கியன் பதவிக்கு வரமுடியாது. கோவில் மரியாதை கொடுக்க வேண்டாம். சின்ன மனிதர்களின் பெரிய தனத்திற்காக கடவுள் கைகொடுக்க வேண்டுமா?"

"ஆமாம்" பாட்டுப் பாடினர் உடன் இருந்த இருவரும்.

"தெய்வீகமான கோவிலை நிர்வாகம் செய்யவேண்டியவன் யார்? துறவிபோல் வாழும், கிடைப்பதை நியாய வழியில் சம்பாதிக்கும் யோக்கியன் அங்கே இருக்க வேண்டும்."

இராமாமிர்தம் சொல்லுக்குக் கண்ணுசாமி பேசுகிறார்,

"நீங்கள் சொல்லுகிற ஆளால் கோவிலுக்குப் புகழ் வராதே, மான்முண்டியார் வெள்ளி அங்கி சாத்தப் போகிறதாகக் கேள்வி. ரூபாய் பதினாயிரம் மதிப்புப் பெறுமாம்"

"தள்ளு குப்பையில், காந்தி சிலைக்கு வெள்ளிக்கிழமையாவது மாலை போடுகிறார்களா?"
"போடுகிறாங்க பூ, பூக்கடை வாடிக்கை. அல்லாபிச்சை ராவுத்தர் நாலு ஊதுவத்தி கொடுக்கிறார். சாமுவேல் கடையில் சந்தனம் வாங்கிக் கொள்கிறாங்க."

"அதுதான் சரி."

இராமாமிர்தம் நகர்ந்தார். அவருக்கு வணக்கம் செலுத்தினர் பேசிய நபர்கள். பிரதான வாயிலைக் கடந்து உள்ளே வந்தார். அவருடைய தெருக்களில் இல்லாத புதுவிதமான அசங்கியங்கள் அவர் காலில் மிதிபட்டன. அத்தனையும் மார்க்கெட்டில் விலை போகாத எச்சங்கள். மிச்சங்கள். எங்கும் ஈ மொய்க்கும் ஈரச் சதசதப்பு, அவர் மனம், அடுத்த ஆண்டுக்குள் "நீ இங்கே செமிட்டி பாவியாக வேண்டும்" என்று கட்டளையிட்டது. நகரமன்ற உறுப்பினர் மனம், சாதாரண மனிதனைக் கட்டளை இடுகிறது.

பலசரக்குக் கடை, தேங்காய்க் கடைப் பகுதிகள் சுத்தமான பகுதிகள் . மார்க்கெட்டுக்குள் நரகம் என்ற உரிமை கொண்டாடும் காய்கறி விற்பனைப் பகுதிக்குள், வித்தூன்றி விதை தெளிக்கலாம். சேறும் சகதியும் முட்டளவு ஆழம் காண்பிக்கும். இராமாமிர்தம் மனம் வழக்கம்போல் திட்டமிட்டது. அந்தப் பகுதியும், செமிட்டிக்குள் வந்தாக வேண்டும். செமிட்டி போடுவது பணமா? மனந்தானே. விஸ்தாரமாகப் போட்டது.

மேலே நகர்ந்தார். யாரோ ஒரு சில கடைக்காரர்கள் யந்திர கதியில் வணக்கம் செலுத்தினார்கள் . பதில் வணக்கம் போட்டுக்கொண்டு போனார். வாழைக்காய் விற்கும் பகுதிக்குள் வந்தபோது இரண்டு சோதாப் பயல்கள் பேசும் குரல் கேட்டது.

"கடையிலே ஆள் இல்லையே, உள்ளே காரியமாக இருக்கிறாரா கடைக்காரர்?"

"டேய் அந்தப்பக்கம் ஓடிப்போய் நில்லு"

"அணாவுக்கு எத்தனை வாழைக்காய் விற்பது?"

"மூன்று காய் விற்கலாம்"

இராமாமிர்தம் மனதில் வாழைக்காய் மலிவாக விற்குமிடத்தைத் தெரிய ஆசை. எங்கும் அணாவிற்கு இரண்டு காய்க்குமேல் கிடைக்காதபோது மூன்று என்றால் ஆசை பிறக்காதா? அவரும் ஆசைக்கு அடிமையான மனிதர்.

குனிந்து பார்த்தார். கடைக்குப் பின்னால் நின்ற வாழைக்காய் ஏற்றிய பார வண்டியில் இரண்டு பயல்கள் காய் பிய்த்து, தூக்கிக் கட்டிய வேட்டியின் பின்பக்கம் போட்டுக் கொண்டிருந்தார்கள். அதாவது அவர்கள் பாரவண்டியில் திருடி, திருடிய காய்களை அணாவிற்கு மூன்று விற்கிறார்கள். முதல் போடாத முதலாளிகள் என்பதை அறிந்தார்.

"சை! திருட்டுப் பயல்கள்" என்று காறி உமிழ்ந்தார். இன்னும் கடைக்காரர் வெளியே வரக்காணோம். அதனால் அடுத்த கடைக்கு நகர்ந்தார்.

பின்பக்கமிருந்து சோதாக்களின் குரல் வந்தது.

"டேய் விற்கிற காசை எங்கே வைக்க? அந்தப் படுபாவி ரத்தினம் வந்தால் பிடுங்கிக் கொள்ளுவானே?"

"ஆமாடா! விற்க விற்கக் காசைக் கொண்டுபோய் காந்தி சிலை இருக்கிறதே, அதன் வலது தோளில் வைத்துவிடு. நான் வந்து செளகரியம்போல் எடுத்துக்கொள்ளுகிறேன்." என்றான் மற்றவன்.

இருப்பு முறம் நிறைய நெருப்பை அள்ளி இராமாமிர்தம் நெஞ்சைத் திறந்து கணகணவெனக் கொட்டியது போல இருந்தது. காந்திஜி சிலையின் வலது தோள், காத்திரஜ் பெட்டி. திருடும் சிறுவர்களுக்குப் பணப்பெட்டி காந்திஜி சிலையா? இராமாமிர்தம் திடுக்கிட்டுப் பார்க்கவும் இரு பயல்களும் ஓடிவிட்டார்கள். அவர்கள் வேட்டிக்கட்டு மடிப்போடு முழங்காலுக்கு மேலாக இருந்தது. பை போன்ற அதில் வாழைக்காய்கள் கனத்துக் கிடப்பது தெரிந்தது. நகர மன்ற உறுப்பினர் யோசித்தபடி நடந்தார். காய்கறி வாங்க வந்த காரியம் சிறிதாகப்பட்டது. அவர் நினைப்பு காந்திஜி சிலைமீது பதிந்தது.

அப்பக்கமாக வந்துகொண்டு இருந்தார். அழுக்குத் துணி கட்டிய சிறுவன் அந்தச் சிலைக்கு அருகாக வாழைக்காய்க் கடை போட்டிருந்தான். அத்தனையும் சிதறிய காய்கள் ஒன்றுகூட சீப்பாக இல்லை. எதிர்க்கடையில் அமர்ந்து இராமாமிர்தம் பையன் வியாபாரத்தைக் கவனித்தார். அந்தப் பையன் கொண்டுவரும் காய்களுக்கு முன்கூட்டியே கிராக்கி நின்று கொண்டிருந்தது. அவன் வருகைக்காகப் பலர் காசும் கையுமாக நிற்கிறார்கள். பையன் ஐந்து விநாடிக்கு ஒருமுறை எழுந்துபோய் காந்திஜி சிலையைத் தொட்டுவிட்டு வந்தான்.

இராமாமிர்தத்திற்குச் சிரிக்கவா அழவா என்று தெரியவில்லை.

பத்து நிமிடம் சென்றதும் சாயவேட்டி கட்டிய முரட்டு உருவம் (ரெளடி ரத்தினம்) வந்து, "திருட்டுப் பயலே என்னடா வியாபாரம் ஆச்சுது?" என்று கேட்டபோது சின்னப் பையன் கையை விரித்தான். இன்னும் ‘போணியே’ ஆகவில்லையாம்,

பெரிய சோதாவிடம் பயந்து பொய் சொல்லுகிறான் என்பதை அறிந்துகொண்ட இராமாமிர்தம் இன்னும் சிறிது வேடிக்கை பார்க்க இருந்தார். ரெளடி ரத்தினம் போய்விட்ட பின்னர், சின்னப்பயல் ஒருவன் வந்தான். அவன் குரலைத்தான் கேட்டிருக்கிறாரே!

"பெரிய அண்ணே, ரத்தினம் வந்தார். ரப்பா பேசினார்."

"காசைப் பிடுங்கிப் போயிட்டுதா?" ஏக்கம் ஏற்றமாகத் துடித்தது.

"இல்லை காந்தி சிலையிலே வலது தோள்பக்கம் காசு இருக்குது. போய் எடுத்துக்கோ. நமக்கு இன்னிக்கு ராவுலே ஏக ஜல்சா. பிரியாணியும், சினிமாவும் மறந்துவிடாதே."

"மறப்பேனா?" என்றபடியே வந்த பயல் காந்தி சிலையை நெருங்கினான்.

அவர் உள்ளம் கொதித்தது. காந்திஜியின் சிலை, இவர்கள் திருட்டுக்கு ‘திருட்டுக்காய்’ விற்ற காசுக்கு இருப்புப் பெட்டியாகப் பயன்படவா, நகராட்சியில் கரடியாகக் கத்தி காந்தி சிலை வேண்டுமென்று. அவர் கேட்டார், கிளர்ச்சி செய்தார், பிரதிஷ்டை பண்ணினார்?

"சை! முட்டாள்கள் நிறைந்த உலகம்" என்று கத்தினார் இராமாமிர்தம்.

"என்னங்க. கௌன்சிலர் ஐயா திட்டுறீங்க?" என்றார் பலசரக்குக் கடை முதலாளி.

"பாருங்கள், திருட்டுப் பயல்கள், பொறுக்கிப் பயல்கள், வாழைக்காய் திருடி விற்ற காசை எங்கே ஒளித்து வைக்கிறார்கள்" என்று காட்டினார்.

"சின்னப் பயல்கள் அப்படித்தான் செய்வார்கள். வேறு என்ன செய்ய? லட்சம் லட்சமாகக் காந்திஜி பேரைச் சொல்லிப் பணத்தை ஒதுக்கிவிட்டு வசதியாக இருக்கிறவர்கள் நம் ஊரில் இல்லையா? இவங்க என்ன நாலணா, எட்டணா பசங்கள். காந்திஜி இலட்சியத்திற்கும் பயன்பட்டார் இரண்டணாவுக்கும் பயன்படுகிறார்"

அரசியல் வாடை அவர்கள் தர்க்கத்துள் இடம் பெற்றது. இருவரது காரசாரமான பேச்சு அரைமணி கட்டிப் புரண்டது.

"நீங்கள் நல்ல எண்ணம் பரவ வேண்டும். காந்திஜி சிலையைக் கண்டால் அன்பு கருணையாகப் பெருகி ஆத்மீகம், பொதுநலம் எழவேண்டும். இதற்காக நடுச் சந்தியில் மார்க்கெட்டு வழியில் நகரசபையாரைச் சிலை வைக்கச் சொன்னீங்க."

"ஆமாம் இப்போது திருட்டுக்காகக் காசு ஒளித்து வைக்க அது பயன்படலாமா?"

"காலம் போகப்போக எந்தக் காரியமும் மாறுவது இப்படித்தான் மாறும். என்ன நோக்கத்தோடு, செய்யப்பட்டதோ அதற்கு மாறான திசையில் கவிழ்ந்து விடுகிறது. நீங்கள் வைத்த காந்திஜி சிலையாக இருப்பதால் உங்கள் மனம் நோகிறது. எங்களுக்கு இதுவெல்லாம் சகஜம்."

அப்போதுதான் இரண்டணாவோ ஒரு அணாவோ கொண்டு போய் சிலையின் வலது தோள்பக்கம் பதுக்கினான் சோதாப் பயல்.

"சை! என்ன உலகம். புனித நோக்கத்திற்குக் காரண காரியம் அறியாத முட்டாள் உலகம்."

அன்று அவர் வீசின கையும் வெறும் கையுமாக வீடு நோக்கி வந்தார். வருகிற வழியில் தாத்தா பிரதிஷ்டை செய்த பிள்ளையார் கோவில் குறுக்கிட்டது. பிள்ளையார் கோவிலை நோக்கிப் போனார். எந்தவிதமான ஒளிப்பும் மறைப்பும் இல்லாமல் பிரகாரம் சுற்றி வந்து சந்நிதியில் சாஷ்டாங்கமாக வெட்கம்விட்டு விழுந்து வணங்கிணார்.

"அப்பனே கணேசமூர்த்தி! நல்ல நோக்கத்தோடு பிரதிஷ்டை செய்யப்பட்டவர். மான்முண்டி தர்மகர்த்தாவாக இருந்தால் என்ன? என் முயற்சியால் நாட்டச் சொன்ன சிலையால் என் மனம் உண்மை அறிந்தது. நோக்கங்கள் மீது குறையில்லை. காலமும் அறிவற்ற மக்களும் கருணையற்றுக் கொடிய விலங்குகளாக மாறியிருக்கிறார்கள்" என்று வணங்கினார்,

சுகி சுப்பிரமணியன்
Share: 
© Copyright 2020 Tamilonline