Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
July 2017 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | மேலோர் வாழ்வில் | முன்னோடி
கதிரவனை கேளுங்கள் | மாயாபஜார் | சிறுகதை | Events Calendar | எனக்குப் பிடித்தது | அஞ்சலி | சமயம் | பொது | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
நேர்காணல்
பி.டி. ராமச்சந்திர பட்
- காந்தி சுந்தர்|ஜூலை 2017||(2 Comments)
Share:
"நாவில் வேதம், கையில் வேளாண்மை" என்றுதான் பி.டி. ராமச்சந்திர பட் அவர்களை வர்ணிக்க முடியும். ஃப்ளாரிடாவில், வெஸ்ட் பாம்பீச்சின் லாக்ஸஹாட்சி (Loxahatchee) நகரில் வசிப்பவர் பட். இவர் ஒரு வேதவிற்பன்னர். 'பட்ஜி' என்று அன்போடு அழைக்கப்படுபவர். பல ஆண்டுகள் மிச்சிகனின் ட்ராய் பாரதீய ஆலயத்தில் வேதபண்டிதராகப் பணிபுரிந்த இவர், கடந்த ஐந்தாண்டுகளாக லாக்ஸஹாட்சியில் Vedic Farms என்ற பெயரில் பண்ணை ஒன்றைத் தொடங்கி நடத்திவருகிறார். இந்துமத மற்றும் இந்திய கலாசார விழாக்களுக்குத் தேவையான கனி மற்றும் மலர் வகைகளைத் தமது பண்ணையில் பயிர்செய்கிறார். ஐந்து மாடுகளைப் பராமரித்து வருகிறார். நன்றாகத் தமிழ் பேசும் பட்ஜி அவர்களுடன் நேரிலும், தொலைபேசியிலும் உரையாடியதில் இருந்து...

*****


தென்றல்: தங்கள் இளமைப்பருவம் பற்றிச் சொல்ல முடியுமா?
பட்ஜி: மங்களூரிலிருந்து தர்மஸ்தலா செல்லும் வழியிலுள்ள மிட்டூரில் 1964ல் பிறந்தேன். தந்தை மஹாபல பட் வேதவிற்பன்னர். தாயார் தேவகி அம்மாள். நான் ஐந்தாவது குழந்தை. எனக்கு ஒரு மூத்த சகோதரர், மூன்று மூத்த சகோதரிகள், ஒரு தம்பி, ஒரு தங்கை ஆகியோர் உடன்பிறந்தவர்கள்.

மைசூர் மஹாராஜா செய்த பூமி தானத்தினால் பாட்டன், முப்பாட்டன் காலத்திலிருந்தே விவசாயம் செய்துவந்தோம். என் தந்தையாருக்கு நான் விவசாயத்தில் உதவி செய்திருக்கிறேன். அங்கு பாக்கு, தென்னை, மிளகு, முந்திரி கொண்ட தோப்பைத் தவிர மாடுகளையும் பராமரிக்கக் கற்றுக்கொண்டேன்.



தென்றல்: ஓ, அப்படித்தான் விவசாய ஆர்வம் ஏற்பட்டதோ! நல்லது, மிச்சிகனில் இருந்து ஃப்ளாரிடாவுக்கு இடம்பெயர்ந்தது ஏன்?
பட்ஜி: நான் குடும்பத்துடன் ஒருமுறை ஃப்ளாரிடா சென்றிருந்த போது அங்குள்ள சீதோஷ்ண நிலை மிகவும் பிடித்துவிட்டது. அங்கே நிலம் வாங்க முடிவுசெய்து, ஆறுமாத காலம் பல இடங்களைப் பார்வையிட்டேன். எனது மகள் தீபா "தெற்கு ஃப்ளாரிடாவில் பழங்கள் நன்கு விளையும், அங்கும் நிலம் தேடுங்கள்" என்று சொன்னாள். 2013ம் ஆண்டில், லாக்ஸஹாட்சியில் ஏறத்தாழ பத்து ஏக்கர் நிலம் வாங்கினேன். நான் வாங்கியபோது இங்கே எந்தப் பழமரமும் இல்லை. 40, 50 பைன் மரம், 10 பனைமரம் இவற்றுடன் புதர் மண்டிய காட்டுநிலமாக இருந்தது. பூமி சமதளமாக இல்லை. கிட்டத்தட்ட 100 டிரக் மண்ணைக் கொண்டுவந்து இறக்கி, பூமியைச் சுத்தம்செய்து சமப்படுத்தினேன். இந்த ஊர்க்காரர் ஒருவரை உதவியாளராக வைத்துக்கொண்டு, எல்லாவற்றையும் நானே என் கையால் செய்தேன்.

ஒரு பிக்கப் ட்ரக். ஒரு குபோடொ ட்ராக்டர், ஒரு ரைடிங் லான் மோவர் ஆகியவற்றை முதலில் வாங்கினேன். இந்நிலத்துடன் இங்கிருந்த 300 ச.அடி வீட்டையும் வாங்கினேன். வீட்டின் தரை மற்றும் அறைகளைச் சரி செய்தேன். நண்பர் ஒருவரின் ஆலோசனைப்படி 'வேதிக் ஃபார்ம்' என்று பெயர்சூட்டினேன்.

ஃப்ளாரிடாவில் மூன்றடி ஆழத்தில் நிலத்தடி நீர் கிடைக்கும். இது பழம் மற்றும் தென்னை வகைகளுக்குப் போதுமானதாகும். சொட்டுநீர்ப் பாசனம் செய்கிறேன். குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களில் மட்டுமே அதிகம் நீர் பாய்ச்சவேண்டும். மீதி மாதங்களில் அவ்வப்போது பெய்யும் மழைநீரே போதுமானது.



தென்றல்: உங்கள் தோப்பைப் பற்றிச் சொல்லுங்கள்.
பட்ஜி: என் தோப்பு மையநகரத்தின் ஒரு சாலையில் அமைந்துள்ளது. நுழைந்ததும் சிறிது தூரத்தில் தென்னை மரங்களும் வில்வ மரங்களும் உள்ளன. கேரளாவைப்போல் ஆங்காங்கே வெற்றிலைக் கொடிகளைப் பார்க்கலாம். மா, சப்போட்டா, கொய்யா, பப்பாளி எல்லாம் உண்டு. நடுவில் எங்கள் வீடு. அதைச் சுற்றி துளசி, ஜாதிமல்லி, சங்குபுஷ்பம், நந்தியாவட்டை, செம்பருத்தி போன்றவை உண்டு. வீட்டின் ஒருபுறம் நீச்சல்குளம். வீட்டைத் தாண்டிப் பின்புறம் போனால் வெண்டை, சௌசௌ, சீதாப்பழம், நெல்லிமரம் எல்லாம் பார்க்கலாம். மறுபுறம் கரும்புத் தோட்டம். பின்புறம் கோசாலை உள்ளது.

தென்றல்: ஓ! கோசாலையா? அதை அமைக்கக் காரணம் என்ன?
பட்ஜி: என் பெற்றோர் வீட்டில் 15 பசுமாடுகள் இருந்தன. நான் பாடசாலையில் தங்கி வேதம் படித்த காலத்தில் அங்கிருந்த மாடுகளைப் பராமரிக்க உதவியதுண்டு. மாடுகள் என்றால் எனக்குக் கொள்ளைப் பிரியம். வேதவிற்பன்னராக இருந்தபோது பசுக்களைப் பராமரிக்கும் வாய்ப்புக் கிட்டியது. அதைத் தொடர்ந்து செய்ய முடிவுகட்டினேன். நான் தெய்வமாக வணங்கும் காஞ்சி மகாபெரியவர் கோசம்ரட்சணம் மிகப்பெரிய புண்ணியம் என்று சொல்வார். ஃப்ளாரிடாவில் நான்கு பசுக்களும் ஒரு காளையும் வாங்கினேன். என் கையாலேயே வேலிபோட்டு, கூரைகட்டிக் கொட்டகை அமைத்தேன்.

தென்றல்: பசுக்களை எப்படிப் பராமரிக்கிறீர்கள்?
பட்ஜி: பசுக்களுக்குக் கொட்டகை மட்டுமல்லாமல் குட்டை ஒன்றை வெட்டி அதில் அவை நீர் பருக வசதி செய்திருக்கிறேன். அவற்றின் உணவுக்காக அருகிலேயே சர்க்கரைவள்ளிக் கிழங்கு பயிரிட்டுள்ளேன். அதன் இலை, கிழங்கு, பரங்கி, வாழையிலை, புண்ணாக்கு எல்லாவற்றையும் உணவாக அளிக்கிறேன். மாடுகளின் உடல்நலப் பராமரிப்புக்கு என்று மருத்துவர் அவ்வப்போது வந்து பார்வையிடுவார்.



தென்றல்: 2013ம் ஆண்டு பண்ணையைத் தொடங்கினீர்கள். அது எப்படி வளர்ச்சி அடைந்திருக்கிறது?
பட்ஜி: முதலில் கூறிய மரம், செடி, கொடிகளுடன், கறிவேப்பிலை, நெல்லிக்காய், புளி, கரும்பு, நாகப்பழம், சீதாப்பழம், லிச்சி, லோங்கன், அன்னாசி, கொய்யா, காப்பிச்செடி, முந்திரி, சௌசௌ, கத்திரி, கோவைக்காய், புடலங்காய், பீர்க்கங்காய், காராமணி, பாகற்காய், அவகேடோ எல்லாம் இப்போது உள்ளன. தவிர, அருகம்புல், கோங்குரா கீரை, பசலைக்கீரை, வல்லாரை வகைகளையும் பயிரிட்டுள்ளேன். இங்கே கிட்டத்தட்ட 250 மாமரங்கள் உள்ளன. கேசர், அல்ஃபோன்ஸா, வேலென்சியா பிரைட், கீத், பினா கொலாடா போன்ற ரகங்களை வளர்த்து வருகிறேன்.

தென்றல்: இவற்றுக்கு எவ்வகை உரங்களைப் பயன்படுத்துகிறீர்கள்?
பட்ஜி: நான் கூடியமட்டும் இயற்கை முறைகளையே கடைப்பிடிக்கிறேன். சொட்டுநீர்ப் பாசனம் செய்கிறேன். பசுஞ்சாணத்தை நீரில் கரைத்து, ட்ராக்டரில் கொண்டு சென்று உரமாகப் பண்ணை முழுதும் தெளிப்பேன். தவிர வேப்பெண்ணையுடன் சோப்புக் கரைசலை வாரமொரு தடவை பூச்சிக்கொல்லியாகப் பயிர்களுக்குத் தெளிப்பேன்.

தென்றல்: தாங்கள் காய், கனிகளை எப்படி விநியோகம் செய்து வருகிறீர்கள்?
பட்ஜி: எனது வீட்டருகில் உள்ள அமெரிக்க மற்றும் இந்திய மக்கள் காய், கனிகளை என்னிடம் வாங்குகின்றனர். அருகிலுள்ள மொத்த விற்பனைக் கடைகளுக்கு விற்கிறேன். சமீப காலமாக அமெரிக்காவிலுள்ள இந்துக் கோவில் திருவிழாக்களுக்கும், இந்தியர்களின் வீட்டு விசேஷங்களுக்கும் வாழையிலை, தொன்னை, வெற்றிலை போன்ற சிலவற்றை விற்கத் தொடங்கியுள்ளேன். வாஷிங்டன், மிச்சிகன், ஃபீனிக்ஸ், டெக்சஸ் போன்ற இடங்களில் எனக்கு வாடிக்கையாளர்கள் உள்ளனர். வெளியூர்களுக்கு அனுப்பும் பொருட்களை அழகாகப் பேக் செய்து தபால்மூலம் அனுப்புவேன்.
தென்றல்: வைதீகத்தொழில் என்னவாயிற்று?
பட்ஜி: நான் வைதீகத்தை நிறுத்தவில்லை. சுயேச்சையாகச் செய்து வருகிறேன். உள்ளூர் மற்றும் வெளியூர்க் கோவில்கள், பொதுமக்கள் அழைப்பின் பேரில் சென்று வைதீகம் செய்துவருகிறேன். தோட்டவேலை செய்யும்பொழுதும் மந்திரங்களைச் செபித்தவாறே வேலை செய்கிறேன். குறிப்பாக மா, தென்னை போன்றவற்றை நடும்பொழுது 'ஓஷதீ சூக்தம்' செபித்தபடி நடுவேன்.

தென்றல்: குடும்பத்தைப் பற்றிச் சொல்லுங்கள்..
பட்ஜி: என் மனைவி நாகலக்ஷ்மி. எனது முயற்சி எல்லாவற்றிற்கும் இவரே முழுத்துணை. மகள் தீபா இல்லினாய்ஸ் சிகாகோ மருத்துவப் பல்கலையில், (UIC) அறுவை சிகிச்சை மருத்துவம் பயில்கிறார். மகன் பிரதீப் மிச்சிகனில் சுயமாகக் கணினித்துறை ஆலோசகராக இருந்தபடியே நிறுவனம் ஒன்றிலும் பணிபுரிகிறார்.



தென்றல்: ஆர்வமுள்ளவர்களுக்கு நீங்கள் இதுபோன்ற பண்ணை வைக்க உதவுவீர்களா?
பட்ஜி: நிச்சயம். நான் இவற்றைச் செய்வதன் மூலமே புதிய யுக்திகளைக் கற்றுவருகிறேன். யார் வேண்டுமானாலும் என்னை அணுகலாம். எனக்குத் தெரிந்த தொழில் நுணுக்கங்களைக் கற்றுத் தரவும், இதேபோல் ஒரு பண்ணை அமைக்கவும் என்னாலானதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

தென்றல்: காலைமுதல் இரவுவரை உங்களுடைய ஒருநாளை விவரியுங்கள்....
பட்ஜி: காலை 7:30 மணிக்குத் தோட்டத்திற்குக் கிளம்பிவிடுவேன். தோட்டக்கலையில் ஆர்வமுள்ளவர்கள் செடிகளிடம் பேசவேண்டும். பேசுவது என்றால் வெறும் பேச்சு மட்டுமல்ல; சரியான சமயத்தில் நீர் பாய்ச்ச வேண்டும்; களை வெட்டவேண்டும். காய்களை அழுகிவிடாமல் உரிய நேரத்தில் பறிக்கவேண்டும். பசுமாடு வளர்த்தால் சரியான வேளையில் தீனி போட்டு, குளிப்பாட்டி, மேயவிடுவது அவசியம். இதெல்லாம் செய்வேன்.



காலை பத்து மணியளவில் காலை உணவுக்கு வீட்டுக்கு வந்து உடனே திரும்பிவிடுவேன். மதியம் 2.00 மணிவரை வேலை, பிறகு சற்று ஓய்வு. மதியம் 3.00 மணி அளவில் தோட்டத்திற்குச் சென்று மாலை 7.00 மணிக்கு வீடு திரும்புவேன். இதற்கிடையே ட்ராக்டருக்கு கேஸ் நிரப்புவது, தபால் நிலையம் சென்று பொருட்களை அனுப்புவது, தேவையானால் செடிகள் வாங்கச் செல்வது போன்றவற்றையும் செய்வேன். நான் வைதீகத்திற்குச் சென்றால் என் மனைவி எல்லா வேலையையும் பார்த்துக்கொள்வார்.

தென்றல்: அடுக்குமாடிக் குடியிருப்பில் வாழும் மக்களுக்குச் செடி வளர்ப்பதற்கான சிறு உத்திகளைக் கூறுங்களேன்!
பட்ஜி: அமெரிக்கா வந்ததும் நாம் பெரும்பாலும் அபார்ட்மெண்டில்தான் வாழ்க்கையைத் துவங்குவோம். இங்கும் அழகாகச் செடிகள் வளர்க்கலாம். தொட்டிகளில் செடியை நட்டு Potting Soil & Miracle GRO கலந்த மண்ணை உபயோகிக்க வேண்டும். தொட்டி வறண்டு போகாத அளவு தண்ணீர் விட்டால் போதும். செடி வளர, வளரப் பெரிய தொட்டிக்கு மாற்றிவர வேண்டும்.

பட்ஜியின் பசுமைப்புரட்சி தொடரட்டும் எனக்கூறி விடைபெற்றோம்.

உரையாடல்: காந்தி சுந்தர்,
டெட்ராய்ட், மிச்சிகன்

*****


தமிழ்த் தொடர்பு
ராமச்சந்திர பட் தமிழ் நாட்டின் 6 ஆண்டுக்காலம் குருகுல வாசம் செய்தார். "நண்பர்களின் சவாலை ஏற்றி நன்றாகத் தமிழ் கற்றுக்கொண்டேன்" என்கிறார். அவருடைய மனைவி தெலுங்குக் குடும்பத்தைச் சேர்ந்தவரானாலும் சென்னை ராயப்பேட்டையில் பிறந்து வளர்ந்தவரென்பதால் நன்றாகத் தமிழ் எழுத, படிக்க, பேசத் தெரிந்தவர். அதை விடுங்கள், அவர் தம் மாடுகளுடன் பேசுவது தமிழில்தான். அவையும் அவர் கூறுவதைப் புரிந்துகொள்ளுமாம்!

*****


காரியம் யாவினும் கைகொடுத்து....
பட்ஜியின் பசுமைப்புரட்சியில் அவரது மனைவி புவனா என்ற நாகலக்ஷ்மிதான் வலது கரம். ஃப்ளாரிடாவில் 2013ம் ஆண்டு நிலத்தை வாங்கிய பின், மனைவி மற்றும் மாமியாரை ஃப்ளாரிடாவிற்கு அனுப்பிவிட்டு, தான் மட்டும் மிச்சிகனில் தங்கி வைதீகத் தொழிலைச் செய்துவந்திருக்கிறார் பட்ஜி. புவனா ஃபளாரிடாவிற்குக் குடிபெயர்ந்து, தொலைபேசியில் பட்ஜி கூறும் ஆலோசனைகளைக் கேட்டு, செய்து தாமே பண்னையை நடத்தி வந்திருக்கிறார். செடிகளைத் தேர்ந்தெடுத்து வாங்குவது, நடுவது, குழாய் வழியே நீர் ஊற்றுவது எனத் தொடங்கி, டிராக்டர் ஓட்டுவது வரை அனைத்தையும் கற்றுக்கொண்டார். யோகாசனங்கள் மூலம் நீண்டநேரம் ஃப்ளாரிடா வெயிலைத் தாக்குப்பிடிக்கவும், கடுமையாகத் தோட்ட வேலை செய்யவும் தம்மைத் தயார் செய்துகொண்டார். தனது சுய ஆர்வத்தினால் தேன்கூடு வைத்து, மருத்துவ குணம் கொண்ட வேப்பந்தேன் சேகரிக்கிறார்.

மாடுகளை மேய்ப்பதுடன், பிரசவ நேரத்தில் பசுக்களுடன் இருந்து கவனிப்பது வரை எல்லாம் இவருக்கு அத்துப்படி. அங்கு வளரும் நெல்லிக்காய், கரிசலாங்கண்ணி, செம்பருத்தி, கறிவேப்பிலை, ஆகியவற்றைக் கொண்டு கூந்தலைப் பராமரிக்கும் எண்ணெய் காய்ச்சும் முயற்சியை மேற்கொண்டுள்ளார். பசுமைக் கழிவுகளை வீணாக்காமல் பெரிய தொட்டி ஒன்றில் சேர்த்து வைத்து, அதைக் கம்போஸ்ட் உரமாக இடுகிறார். பண்ணையைப் பார்வையிட வரும் நண்பர்களுக்குச் சிறப்பாக விருந்தோம்பல் செய்வதில் இவருக்கு அலாதிப் பிரியம். தோட்டத்தில் விளையும் காய்கறி வகைகளைப் பறித்து விநியோகம் செய்வது முதல் தபால் அலுவலகம் சென்று அவற்றைப் பிற ஊர்களுக்கு அனுப்புவதுவரை இவருக்கு எல்லாமே கைவந்த கலைகள்தாம்.

*****


எங்கள் குடும்பம் பெரிசு!
பட்ஜியின் குடும்பம் பெரியது. துர்கா, லக்ஷ்மி, கோதாவரி, மேதா, ஜெயலக்ஷ்மி என்ற ஐந்து பசுக்களும் சிவா என்ற காளையும் இதில் சேரும். வீட்டில் 'லட்டு' என்று அழைக்கப்படும் ஜாக்சன் செல்லநாய். அவனுக்கு மாடுகளுடன் விளையாட ரொம்பப் பிடிக்கும். தவிர நோவா, கார்லா என்று இரண்டு பூனைகள். இவர்கள் தரும் பருப்பு சாதத்தை சுவைப்பதற்காகவே தோகை விரித்தபடி மயில்கூட்டம் அவ்வப்போது தோட்டத்தில் வந்திறங்குகிறது.

பட்ஜி வெளியூர் சென்று வீடு திரும்பும்போதெல்லாம் ஆரவாரமான வரவேற்பு காத்திருக்கும். அவரது காரைப் பார்த்தவுடன் லட்டு ஒருபக்கம் ஓடிவரும். குரலைக் கேட்டதும் தொழுவத்திலுள்ள மாடுகள் ஒருசேரக் கத்தத் துவங்கிவிடும். இவர் போய் மாடுகளைப் பார்க்கப் போவதற்குள் அவை ஆவலோடு இவரை நோக்கி ஓடி வருமாம்.
Share: 




© Copyright 2020 Tamilonline