Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
புதினம்
ஆத்ம சாந்தி (அத்தியாயம் 21)
- சந்திரமௌலி|ஜனவரி 2016|
Share:
Click Here Enlargeராமசாமியின் தியாகம்

வள்ளியம்மை தன் கதையைத் தொடர்ந்தாள். இப்போது அவள் முகம் அமைதியாகவும், வெட்கம் கலந்த புன்னகையோடும் காணப்பட்டது. தன் காதல் கதையைச் சொல்ல ஆரம்பிக்குமுன்பே அவள் அந்த நாட்களுக்கு டைம்மெஷின் இல்லாமலே மானசிகமாகப் பயணப்பட்டு விட்டதைப்போல் தோன்றியது. பாட்டியின் கதையைக் கேட்க ஒரு குழந்தைபோல இன்னும் உற்சாகமானான் பரத்.

"1942ல உன் தாத்தா நாங்க இருந்த தீவுக்கு வந்தாரு. ஒலகப் போர் ஆரம்பிச்சு மூணு வருஷமாயிருந்தது. எல்லாரும் எல்லாத்தையும் அழிக்கத் துடிச்சிட்டிருந்தாங்கனு செய்தி வந்துட்டேயிருந்தது. ஃபிஜிலயும் ஜப்பானும், ஜெர்மனியும் எப்பவும் தாக்கலாம்னு சனங்க பயந்து பயந்து செத்துக்கிட்டிருந்துச்சு. அமெரிக்காவை ஜப்பான் தாக்கினதும், பசிஃபிக் சமுத்திரத்துல எல்லா எடத்துக்கும் யுத்தத்தீ பரவிடுச்சு. ஃபிஜி முக்கியமான யுத்த கேந்திரமா ஆயிடுச்சு. நேசநாட்டுப் படைங்க வரதும், தளவாடங்கள் குவிக்கிறதும் சர்வ சாதாரணமாயிடுச்சு. அப்படி ஒரு கட்டத்துலதான் உங்க தாத்தா அந்தத் தீவுக்கு வந்தாரு. அவருக்கு அப்ப உன் வயசு இருக்கும், ஆனா அதுக்குள்ளயே உலகம் சுத்தணும், நிறயக் கத்துக்கணும்ங்கிற ஆர்வத்துல கட்டுப்பாடா வளந்த குடும்பம், பழக்கவழக்கம் எல்லாத்தையும் ஒதறிட்டு அப்பா, அம்மாவோட எதிர்ப்பெல்லாம் மீறி பிரிட்டிஷ் படைல சேந்திட்டாரு. கிராப் வெக்கிறதே அன்னியமாயிருந்த சூழ்நிலைல, குழாய் சட்டை, டவுசரு போட்டு, கிராப் அடிச்சு, மீசை வச்சு பட்டாளத்துலயும் சேந்து கடல் கடந்தும் பல எடத்துக்கு அந்தச் சின்னவயசுலயே புரட்சி பண்ணாரு உங்க தாத்தா.

"அப்ப நான் ஊர்ல சொல்லிக்காம கிராமத்துக்கு உன்னைத் தேடி வந்ததுக்கு பெருசா திட்டின? பெருசோட ரத்தம்தானே நான், இதுகூட செய்யலைன்னா?"

"ஊடால பிரேக் போடாதீங்க தம்பி. உங்க சண்டைய அப்புறம் பைசல் பண்ணிக்கலாம். இப்ப உலகச்சண்டை நடந்த சமயம் என்ன ஆச்சு? மேல சொல்லுங்க ஆத்தா" கதிரேசன் இப்போது பரத்தைவிட அதிக ஆர்வத்தோடு கேட்டார்.

"ஆஸ்த்ரேலியா, நியூசிலாந்துலெயெல்லாம் பிரிட்டிஷ் படைங்களுக்கு பயிற்சி குடுக்கவும், யுத்தத்துல துணை இருக்கவும் ஃபிஜில நிறைய பிரிட்டிஷ் காலனிப் படைகள எறக்கினாங்க. அதுமட்டுமில்லாம ஃபிஜிலயும் ஒரு படைய உருவாக்கி, பயிற்சி குடுத்தாங்க. எதிரிங்க தாக்குதல் நடந்தா என்ன செய்யிறது, எப்படி தற்காத்துக்கறதுன்னு சனங்களுக்கும் பயிற்சி குடுத்தாங்க. நல்ல சிவப்பு நிறம். நீள்வட்டமுகம், எடுப்பான நாசி. ஒட்டவெட்டி, படியவாரின மிலிட்டரி கிராப். மெல்லிசான அரும்பு மீசை. ஆயிரம் மிலிட்டரி ஆட்கள் நிறைஞ்சு நின்னாலும், துடிப்பா தனியா தெரிவாரு உங்க தாத்தா. காக்கி யூனிஃபார்ம், டக்டக்னு லாடம் சப்தம் கேக்குற பளபள ஷூ, அதவிடப் பளபளக்கற மெடல்னு கம்பீரமா இருப்பாரு. தாக்குதல் நடந்தா எப்படி எங்களை தற்காத்துக்கறது, என்ன முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யிறதுனெல்லாம் எங்களுக்கு அடிக்கடி வகுப்பு நடக்கும். அவரும் தமிழ்நாடு, அதுவும் தஞ்சை மண்ணுன்னு தெரிஞ்சதும் எங்க மக்கள் அவர்மேலே தனிப்பாசம் காட்ட ஆரம்பிச்சாங்க. அங்க இருந்த இந்திய வம்சாவளில, தமிழ் மக்களுக்கு பயிற்சி குடுத்தது உங்க தாத்தா.

"கொஞ்ச நாள்லயே எங்கள்ல ஒருத்தரா, எங்க கஷ்ட நஷ்டமெல்லாம் புரிஞ்சுக்கிட்டாரு. யுத்தத்துக்காக எங்களுக்கு பயிற்சி குடுக்கறதோட நிக்காம, எங்களுக்கு சுயமரியாதைன்னா என்னனு புரிய வெச்சாரு. சொரணையெல்லாம் செத்து, செக்குமாடு மாதிரி கங்காணிங்க சொன்ன வேலையையும், குடுக்கறது கூலியோ, தண்டனையோ அப்படியே வாங்கிக்கிட்டு பிரக்ஞையே இல்லாம திரிஞ்சிட்டிருந்த நாங்க முளிச்சிக்கிட்டோம். கம்பெனி கங்காணிங்களுக்கு இது பிடிக்கலை. உங்க தாத்தாவைப் பத்தி புகார் பண்ணி, கலகத்தைத் தூண்டுறார்னு சொல்லி மிலிட்டரி உயரதிகாரிகள்கிட்ட போனாங்க. யுத்த நேரத்துல எந்த மக்களையும் பகைச்சுக்க விரும்பாத ராணுவ அதிகாரிங்க கங்காணிகளை வாயைப் பொத்திட்டு போகச் சொல்லிட்டாங்க. அது மட்டுமில்லாம, உங்க தாத்தா ஒரு திறமைசாலியான போராளியா இருந்ததாலயும், சனங்கள ரொம்ப குறைஞ்ச காலத்துல அந்த இக்கட்டான நேரத்துல யுத்தத்தை எதிர்கொள்ளத் தயார்படுத்துனதாலயும், அவருக்கு எதிரா எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

"பிரிட்டிஷ் அதிகாரிகளோட பேசி எங்களுக்கு நல்ல மருத்துவ வசதி, சுகாதாரமெல்லாம் ஏற்படுத்திக் குடுத்தாரு. அவருக்கு மிலிட்டரி கேன்டீன் சாப்பாடு பிடிக்காதுனு தெரிஞ்சுக்கிட்ட நான், தினமும் என் வீட்லேருந்து சாப்பாடு என் கையாலயே செய்து எடுத்துப்போய் குடுக்க ஆரம்பிச்சேன். சாப்பாடோட என் மனசையும் சேத்து குடுத்துட்டேன். உங்க தாத்தாவுக்கு என் மனசு புரிஞ்சாலும் அவருக்கும் என்மேல ஒரு காதல் இருந்தாலும் யுத்த நேரத்துப் பொறுப்பு அவரை எதையும் வெளிக்காட்டிக்க விடவேயில்லை. கிட்டத்தட்ட மூணு வருஷம் கண்ணாமூச்சி ஆடிக்கிட்டிருந்தோம்."

பரத்துக்குச் சட்டென்று இப்போது கேந்திராவின் நினைப்பும் அவள் காதலும் நினைவுக்கு வந்தது. சே அவளும் இப்படித் தன் காதலை வெளிப்படுத்தியும் நாம கடமையை முடிக்கணும்னு அவளை விலக்கினதுனால தானோ என்னவோ அவள் வினய்யைக் கல்யாணம் செய்துக்க முடிவெடுத்துட்டாளோ? ஒருவேளை அவளை வேற ஏதாவது நிர்பந்தப்படுத்தி, பிளாக்மெயில் பண்ணி இதுக்குச் சம்மதிக்க வச்சிருப்பாங்களோ? அவகிட்ட ஒரு வார்த்தைகூட பேசி என்ன ஏதுனு தெரிஞ்சிக்காம நாமதான் அவசரப்பட்டுட்டமோ? குழப்பத்தோடு கதையைத் தொடர்ந்து கேட்டான்.

"ஓயாம எப்பவும் வேலை, சரியான தூக்கம் இல்லாம அவர் காய்ச்சல்ல விழுந்தபோது நான்தான் கூடவே இருந்து அவருக்கு உதவுவேன்னு அடம்புடிச்சு, ஸ்பெஷல் பர்மிஷன்ல ராணுவ மருத்துவமனையில ரெண்டு வாரம் பாத்துக்கிட்டேன். அவரப்பத்தி அப்ப என்னாலே நெறய தெரிஞ்சுக்க முடிஞ்சது. உலக விஷயங்களெல்லாம் நேரம் போறதே தெரியாம பேசுவோம். அவர் எனக்கு பாரதியார் கவிதைகள் படிச்சுக்காட்டுவாரு. இந்தியாவுல சுதந்திரப் போராட்டம் எப்படி நடக்குதுனு உணர்ச்சிகரமா சொல்லுவாரு. தான் பார்த்த உலக நாடுகள்ல எல்லாம் எப்படி மக்கள் சர்வாதிகாரத்தை எதுத்து சம உரிமைக்குப் போராடுறாங்கனு கதை கதையா சொல்லுவாரு. அவர்மேல எனக்கு இன்னும் மதிப்பு கூடுச்சு. என் காதலை இதுக்கு மேலயும் மறைக்கக்கூடாதுன்னு அவர்கிட்ட ஒருநாள் வெளிப்படையா சொல்லிட்டேன். அவருக்கு அது ஆச்சர்யமே தரலை.

"அவர் சொன்னாரு, 'வள்ளி என்னை முந்திக்கிட்ட. எனக்குக் கல்யாணம்னு ஒண்ணு நடந்தா, குடும்பம்னு ஒண்ணு இருந்தா அது உன்னோடதான். ஆனா, அதுக்கு நீ காத்திருக்கணும். நான் முரண்பாடுகள் நெறஞ்சவன். கட்டுப்பாடான குடும்பத்துல பொறந்தவன். கட்டுப்பாடுகளையும், பத்தாம்பசலித்தனத்தையும் வெறுத்தவன். இந்தியா வெளிநாட்டு சக்திகள் கிட்டயிருந்து சுதந்திரம் அடையணும்னு ஆசைப்பட்டவன். ஒரு தென்கோடி குக்கிராமத்துல கிடைச்ச குறைஞ்ச அறிவை வச்சு ஒண்ணும் கிழிக்கமுடியாதுன்னு புரிஞ்சிக்கிட்டு, உலக அறிவும், போராட்ட யுக்திகளையும் கத்துக்க கட்டுப்பாடுகள் அதிகம் நிறைஞ்ச பட்டாளத்துல அதுவும் நான் வெறுக்கற பிரிட்டிஷ் சர்க்கார் படைல சேந்தேன். அசன்சால் மெட்ராஸ் ரெஜிமெண்ட், அப்புறம் கிழக்கு ஆஃப்ரிக்கா, ஐரோப்பா, சிங்கப்பூர், மலேயா, கடைசில ஃபிஜி. நிறைய கத்துக்கிட்டேன், ஆனா என் வாழ்க்கையோட லட்சியம் என்னனு தெரியாமலேயே இருந்தேன். இங்க வந்து, உங்ககூட இருந்த இந்த மூணு வருஷத்துல என் லட்சியம் என்னனு புரிஞ்சிடுச்சு. மூணு தலைமுறையா இங்க இருக்கிற நீங்க விருப்பப்பட்டா இங்கியே தொடர்ந்து இருக்கலாம். ஆனா, உங்களுக்கு சம உரிமை கிடைக்க நாம போராடுவோம். இல்லை, எல்லாரும் இந்தியா திரும்ப நான் வழி பண்றேன். உங்களுக்கு சேரவேண்டிய எல்லா சொத்துக்களும் கிடைக்க வழி பண்ணி நம்ம தாய்நாட்டுக்கு திரும்ப ஏற்பாடு செய்யறேன்' அப்படீன்னாரு.

நான் "இந்தியா திரும்பணும்னு எனக்கும், இங்க இருக்கிறவங்களுக்கும் ஆசைதான். ஆனா இந்தியாவிலேயும் நிலைமை ஒண்ணும் நல்லா இல்லையே. அங்கியும் பிரிட்டிஷ் ஆட்சிதானே?" அப்படீன்னு கேட்டேன்.

"இல்லை வள்ளி, மகாத்மா காந்தி அங்க பெரிய இயக்கமே நடத்திட்டிருக்காரு. ஒரு தனிமனுஷன் நெனச்சா முப்பது கோடி ஜனங்களை வழிநடத்தி, எந்த எதேச்சாதிகாரத்தையும் அடிபணிய வெக்கமுடியும்னு நிரூபிச்சிட்டிருக்காரு. யுத்தம் முடிஞ்சதும் நிச்சயம் இந்தியாவுக்கு மட்டுமில்ல, காலனி ஆதிக்கத்துலேருந்து நிறைய நாடுகள் விடுதலை அடையும். அதுவரை நீ பொறுத்திருக்கணும்" அப்படீன்னாரு அவரு.

"நான் தலை ஆட்டினாலும் காலமெல்லாம் காத்திருக்கணுமோன்னு ஒரு ஏக்கம் மனசுக்குள்ள இருந்துச்சு. அதுக்கும் ஒரு விடை சீக்கிரமே கெடச்சுது. 1945ல உலக யுத்தம் முடிஞ்சது. பட்டாளமெல்லாம் ஊரப்பாக்க போக ஆரம்பிச்சாங்க. யுத்தம் முடிஞ்சதும் அவர் நினச்சமாதிரி பிரிட்டிஷ் சர்க்கார் இந்தியாவுக்கு சுதந்திரத்தை தூக்கிக் குடுத்துடலை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பிச்சு, சுதந்திரப் போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்காருன்னு கேள்விப்பட்டோம். ஃபிஜில எங்க நெலமை ஒண்ணும் சீராகலை. சண்டை முடிஞ்சு பட்டாளம் ஊர் திரும்பறதாலே அவரும் கிளம்பணும்னு ஆயிருச்சு. அவரு அதிகாரிங்ககிட்ட பேசி எங்ககூடவே இருக்க அனுமதி வாங்கிட்டாரு.
"ஆனா, யுத்தம் முடிஞ்சுட்டதாலே அவராலே எங்க எஸ்டேட்டுக்குள்ளயோ, குடியிருப்புக்குள்ளயோ முன்னமாதிரி வரமுடியலை. கங்காணிங்களும், எஸ்டேட் மேனேஜர்களும் அவரை உள்ள வரக்கூடாதுனு தடை பண்ணிட்டாங்க. நானும் வெளியே போகமுடியாத சூழல், போகணும்னா ஆயிரம் கெடுபிடி. அவர் அந்த ஊர்ல தங்குற நோக்கமே அடிபடும்போல ஆயிருச்சு. இதை முறியடிக்க, அவரே ஒரு காரியம் பண்ணாரு. ஆமாம்,., ஒருநாள் அத்திபூத்தாப்போல பரோல்ல அவரைப் பாக்க நான் போயிருந்தேன். பொசுக்குனு, பக்கத்துல இருந்த ஒரு கோவிலுக்கு கூட்டிப்போயி, கல்யாணத்தை முடிச்சிட்டாரு. ஜீப்புல என்னை ராணி மாதிரி உக்காரவச்சு தீவையும், கடற்கரையையும் சந்தோஷமா சுத்திக்காட்டிட்டு, எஸ்டேட்டுக்குள்ள தைரியமா நுழைஞ்சாரு. "இப்ப நான் வேத்து ஆள் இல்லை, இந்தப் பொண்ணோட புருஷன். இங்க இருக்க எனக்கு அதிகாரம் இருக்குனு" பொட்டுல அடிச்சாமாதிரி சொல்லிட்டு வீட்டுக்கு கூட்டிப்போனாரு.

"அந்த அதிர்ச்சி பத்தாதுனு, "ஏய் வள்ளி இன்னைலேருந்து என்னைப் பேரை சொல்லித்தான் கூப்புடுற. ஆணும் பொண்ணும் சரிசமம்,. நான் உன்னை பேரை சொல்லிக் கூப்பிடலை. இனிமே என்னை தொரை கிரைனெல்லாம் கூப்பிடாதே. எங்க கூப்பிடு. ராமுனு" அப்படீன்னு சொல்லி ஜப்பான்ல விழுந்த குண்டைவிடப் பெரிய குண்ட என் தலைல போட்டாரு. ரொம்ப போராட்டத்துக்கப்புறம், வேணும்னா உங்களை "சாமி"னு கூப்பிடுறேன்னு சொன்னேன். அது எங்கள காப்பாத்தி கரைசேக்க வந்த சாமிதானே? எங்கியோ பொறந்து எங்கியோ வளந்து, கஷ்டப்படுற ஜனங்களை கைதூக்கி உடணும்னு எங்ககூடவே இருந்துட்ட அந்த அய்யா உன் தாத்தா எங்களுக்கெல்லா சாமிதானே?"

இப்போது சுருக்கம் நிறைந்த அவள் முகத்தில் கண்ணிர் தளும்பி வழிந்தது. வேகமாகத் துடைத்துக்கொண்டு, "உடனே உன் தாத்தா என்ன சொன்னாரு தெரியுமா? வள்ளி, ஒரு விதத்துல நீ என்னை சாமினு கூப்பிடுறது சரிதான். தென் ஆஃப்ரிக்காவுலயும், மேற்கிந்திய தீவுகள்லயும் நம்ம தமிழ்க்கூலித் தொழிலாளர்களை சாமின்னு கூப்பிடுவாங்க. அது ஒரு கெட்டவார்த்தையாவே ஆயிடுச்சு. நீங்க எல்லாம் என்னிக்கு சுதந்திரமா நடமாடுறீங்களோ அதுவரைக்கும் நானும் ஒரு கூலி, அடிமைதான். என்னை நீ ஒவ்வொரு தடவையும் சாமின்னு கூப்பிடும்போதும் என் லட்சியத்தை அது நினைவு படுத்திட்டே இருக்கும்.

"நாங்க வேற வழியில்லாம கல்யாணத்தை முடிச்சிக்கிடாலும், அவருக்கு எப்பவும்போல கடமை பிரதானமா இருந்தது. எஸ்டேட் சொந்தக்காரங்ககிட்டயும், பிரிட்டிஷ் எஜமானர்கள்கிட்டயும் சட்டப்படியும் நியாயப்படியும் போராடி கொஞ்சம் கொஞ்சமா அங்க இருந்த 500 குடும்பங்கள்ல முக்கால்வாசிப்பேரை அவங்களுக்குச் சேரவேண்டிய எல்லா சொத்துக்களையும் காசாக்கி சந்தோஷமா தாய்நாட்டுக்கு கப்பல் ஏத்தி அனுப்பிட்டாரு. 1947ம் வருஷம் அது., இன்னும் 50 பேர் கிட்டதட்ட இருக்கோம். கைநிறைய எங்களோட மூணு தலைமுறைக்கு பாடுபட்டதோட நியாயமான பணம், மனசு நிறைய சந்தோஷம். மறுநாள் எங்க அடிமை வாழ்க்கைக்கு உண்மையான விடுதலை. இந்தியாவுக்கு திரும்பப் போயி, சொந்த மண்ணுல நம்மநிலத்தை மீட்டு மறுபடி விவசாயம் பண்ணி சுதந்திரமா வாழப்போறோம்னு ரெக்கை கட்டிப்பறக்குறோம்.

"அதுக்கு ஒரு ரெண்டு நாள் முன்ன எனக்கு ஒரே வாந்தி, மயக்கம். ஊருக்கு கெளம்புறப்ப என்னடா இது சோதனைனு நெனச்சா, நான் கர்ப்பமாயிருக்கேன்னு நல்ல சேதி சொன்னாங்க டாக்டரம்மா. உன் தாத்தா மட்டும்தான் என்னை காக்க வெக்கலாமா? நானும் அவருக்கு இந்த விஷயத்தை உடனே சொல்லக்கூடாது இந்தியா போகும்போது யாருக்குமே சொந்தமில்லாத நடுகடல்ல சொல்லணும்னு தீர்மானம் செஞ்சுக்கிட்டேன்."

"தாத்தாகிட்ட சொன்னியா? நீங்க இந்தியா வந்து அவர் நினச்சமாதிரி சந்தோஷமா இருந்தீங்களா?" சஸ்பென்ஸ் தாங்கலை.

"நாங்க எல்லாம் ஊர் திரும்பறதை நினைச்சு சந்தோஷமா இருந்தாலும், அவர் ஏதோ யோசனைலயே கவலயோட இருந்தாரு. ஏங்க கவலையோட இருக்கீங்க? நீங்க பட்டபாடுக்கெல்லாம் விடிவு வந்துருச்சே அப்படீன்னு கேட்டேன். அவர் சொன்னாரு, இல்லை வள்ளி, நாம கெளம்பறவரைக்கும் கொஞ்சம் எச்சரிக்கையா இருக்கணும். நாம இப்ப மொத்தமே 50 பேர்தான். இதுல வலுவான ஆட்கள் பத்துப்பேர் கூட தேறமாட்டாங்க. எஸ்டேட் மொதலாளிகளும், கங்காணிகளும் நம்ம மேல ரொம்ப கோவமா இருக்காங்க. எல்லாரையும் தூண்டிவிட்டு, இப்ப மொத்தமா நமக்குச் சேரவேண்டியதை எடுத்துப்போறது அவங்களுக்குப் பொறுக்கலை. இப்ப அவங்க ஆட்கள் பலம் அதிகம். ஏதாவது ஆபத்து விளைவிக்கலாம்.

"மூணு தலைமுறையா சுரண்டியும் ஆசை விடலையா? இப்ப அவங்க தாக்கினா என்ன பண்றது?"

"இப்ப எதுவும் செய்யமாட்டாங்க. இருட்டினதுக்குப் பிறகு தாக்கலாம். அதுக்குமுன்ன நான் கொஞ்சம் முன்னேற்பாடு செய்யணும். அதுதான் யோசிச்சிட்டிருந்தேன். இரு ஆர்மி பேரக்ஸ்வரை போய் 20 சென்ட்ரி ஏற்பாடு செய்யச்சொல்றேன். நீ பத்திரமா தாள் போட்டுக்க"ன்னு சொல்லிட்டுக் கெளம்பினாரு. பத்திரமா போங்கனு சொல்லிமுடிக்கறதுக்குள அவரு இருட்டுல மறைஞ்சிட்டாரு."

"அப்புறம் என்னாச்சு பாட்டி?"

"நள்ளிரவை நெருங்கிட்டிருந்தது. அவரு வந்தபாட்டைக் காணோம். சென்ட்ரிங்க வந்து பாதுகாப்பு குடுத்தாங்க. மத்த சனமெல்லாம் நிம்மதியா தூங்கிட்டிருந்தது. இதுக்கு மேலேயும் நிதானிக்கமுடியாதுனு, நான் தைரியமா அந்த ராத்திரியில அவரைத் தேடி கெளம்புனேன். மனசு ஓரத்துல அவருக்கு ஏதோ ஆயிருக்குமோனு ஒரு பதட்டம். வழக்கமா அவர் வர்ற பாதை வழியா போயி, கரும்புக்காட்டு வரப்புல நடக்கும்போது கால்ல பிசுபிசுனு ஏதோ தட்டுப்படுது. இருட்டுல ஒண்ணும் தெரியலை. என்னனு தொட்டுப்பாத்துட்டு லாந்தர்ல கிட்டப்பாத்தா ரத்தம்! பக்கத்துல ஈனசுவரத்துல ஒரு முனகல். கிட்ட போகபோக எனக்கு ரொம்ப பழக்கப்பட்ட குரல்.

வெளக்க இன்னும் தூண்டி வெறிச்சுப்பாத்தா ஈரக்கொலையே நடுங்குச்சு."

"என்ன பாத்த பாட்டி அப்படி? யாரோட ரத்தம்?"

"உன் தாத்தாவை சாய்ச்சுப்புட்டாங்க அந்தப் பாவிங்க. அவரோட ரத்தம்தான் அது. அந்த பச்சை மரகதம் மாதிரி மின்னுற அந்தத் தீவுல, ரத்தம்சிந்தக் கெடந்த அந்த மனுஷனை என் மடில கெடத்திக்கிட்டேன்.

"வள்ளி இனிமே இந்த ஊர்ல நீ இருக்கிறது உனக்கு ஆபத்து. இன்னைக்கு ஆகஸ்ட் 2ம் தேதி. இன்னும் ரெண்டு வாரத்துல தேசம் விடுதலையாயிடும். நம்ம தாய்மண்ணுக்குப் போகணும், நம்ம தேசம் அன்னியசக்திகள் கிட்டேயிருந்து விடுதலை அடையறதை பாக்கணும்ங்கிற என் ஆசை நிராசையாயிடுச்சு. நாளைக்கு காலையில 'எம்.வி.ஓர்னா'ங்கிற கப்பல் இங்கிருந்து இந்தியா போகுது. நம்ம ஊர் ஆட்கள் எல்லாரும் ஊருக்குத் திரும்பிறலாம். என்னைத் தவிர...."

(தொடரும்)

சந்திரமௌலி,
ஹூஸ்டன்
Share: 
© Copyright 2020 Tamilonline