Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
சமயம்
சிங்கர்குடி, பூவரசங்குப்பம் லக்ஷ்மி நரசிம்மர் ஆலயங்கள்
- சீதா துரைராஜ்|ஜனவரி 2016|
Share:
சிங்கர்குடி

புதுவையிலிருந்து கடலூர் செல்லும் வழியில் 11 கி.மீ. தொலைவிலும், புதுவைக்குச் செல்லும் வழியில் தவளகுப்பம் வழியாக மேற்கே 1 கி.மீ. தூரத்திலும் அபிஷேகப்பாக்கம் என்னும் ஊரில் சிங்கர்குடி ஸ்ரீலக்ஷ்மி நரசிம்மரைத் தரிசிக்கலாம். இத்தலம் சிங்கர்கோயில் என நரசிம்மர் பெயராலேயே அழைக்கப்படுகிறது. புராதனப்பெயர் கிருஷ்ணாரண்ய க்ஷேத்திரம். இது ஒரு பிரார்த்தனைத் தலம். நவக்கிரக தோஷங்கள் யாவற்றையும் நீக்கக் கூடியது. இந்தியாவிலேயே இரண்டு இடங்களில் மட்டுமே நரசிம்மர் பதினாறு கைகளுடன் காட்சி அளிக்கிறார். ஒன்று ராஜஸ்தானில் உள்ளது. மற்றொன்று சிங்கர் கோயில். லக்ஷ்மி நரசிம்மர் உக்கிரநரசிம்மராக இங்கே எழுந்தருளியுள்ளார். தாயாரின் பெயர் கனகவல்லித் தாயார்.

தீர்த்தங்கள்: ஜமதக்னி தீர்த்தம், இந்திர தீர்த்தம், பிருகு தீர்த்தம், வாமன தீர்த்தம், கருட தீர்த்தம். மூலாலயத்தில் பெரிய வடிவில் 16 கைகளுடன், இரண்யனை சம்ஹாரம் செய்பவராக எழுந்தருளி உள்ளார் ஸ்ரீ நரசிம்மர். கீழே இடப்புறம் இரணியனின் மனைவி லீலாவதி, வலப்புறம் மூன்று அசுரர்கள், பிரகலாதன், வசிட்டர், சுக்கிராச்சாரியார் ஆகியோர் உள்ளனர். வடக்கு நோக்கியவாறு சிறிய வடிவில் யோகநரசிம்மர், பாலநரசிம்மர் உள்ளனர். ஆலயத்தின் பின்புறம் உள்ள மண்டபத்தில் தாயாருக்கு ஊஞ்சல் நடைபெறும். தாயார் சன்னிதி எதிரில் உள்ள விநாயகரை, கோபுர நுழைவாயில் அருகே வைப்பதற்காக எடுத்தபோது ஊரில் தீவிபத்து ஏற்பட்டதால், பழைய இடத்திலேயே வைத்துவிட்டதாக வரலாறு கூறுகிறது. தாயார் சன்னிதி, ஆண்டாள் சன்னிதி பிற்காலத்தில் கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆற்காடு நவாப், ஃப்ரெஞ்சுக்காரர்கள் நரசிம்மருக்குத் திருவாபரணம் சமர்ப்பித்துள்ளனர்.

Click Here Enlarge<ஆறாம் நூற்றாண்டில் பல்லவ அரசர்களால் இத்திருக்கோயில் கட்டப்பட்டது. கிருஷ்ணதேவராயர், ராஜராஜ சோழன் ஆகியோர் கோவிலுக்கு கைங்கரியங்கள் செய்துள்ளனர். கோவிலுக்குப் பின்புறம் ஸ்ரீமத் அஹோபில மடம் ஜீயர் சுவாமிகள் பிருந்தாவனம் அமைந்துள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் தாயாருக்கு மாலைவேளையில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுகிறது. ஆண்டுதோறும் நரசிம்ம ஜயந்திக்குப் பின் ரதோற்சவம் நடைபெறுகிறது. சுவாதி நட்சத்திரத்திலும், செவ்வாய்க்கிழமையிலும், பிரதோஷத்திலும் இம்மூர்த்தியை தரிசித்தால் மிகவும் நல்லது.

சிங்கர்கோயில், பூவரசங்குப்பம், பரிக்கல் ஆகிய மூன்று நரசிம்மரையும் ஒரே நாளில் தரிசித்தால் தீராத கஷ்டங்கள் யாவும் தீரும். இம்மூன்று நரசிம்மர் தலங்கள் ஒரே நேர்க்கோட்டில் அமைந்துள்ளதால் ஒரேநாளில் தரிசிப்பது மிகவும் விசேஷம். சிங்கர்கோயில் ஸ்ரீ நரசிம்ம அனுஷ்டிப்பு மந்திரம் சில எழுத்துக்களை மட்டுமே கொண்டது என்பது விசேஷமான அம்சம். கோயில் புதுவை அரசு மற்றும் தமிழக அரசால் நியமிக்கப்பட்ட அறங்காவலர்கள் ஆட்சிக்குட்பட்டது.
பூவரசங்குப்பம்

ஸ்ரீ நரசிம்மர் இரண்யாசுரனை வதம் செய்தபின், தன்னைக் காண்பதற்காகத் தவம் செய்துவந்த முனிவர்களின் வேண்டுகோளை ஏற்று சோளிங்கரில் யோகநரசிம்மராக மலைமேல் காட்சியளித்தார். பின் நரஹரி முனிவர் கடுந்தவம் செய்து நரசிம்மரிடம் தாங்களும், மஹாலக்ஷ்மியும் சாந்தமாக ஒருவரை ஒருவர் பார்க்கும் காட்சியை நான் கண்குளிரக் காணவேண்டும் என்று வேண்ட, தாயாரைத் தன் மடியில் அமர்த்திக்கொண்டு, தாயார் தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும்படி மிக அற்புதமாகக் காட்சி அளித்தார். அதுவே பூவரசங்குப்பம் தலமாகும். இந்தியாவிலேயே இங்கு மட்டுமே தாயார், நரசிம்மரைப் பார்த்தபடி அமர்ந்துள்ளார். அஷ்டநரசிம்மர் தலங்களில் பூவரசங்குப்பம் மையமாக அமைந்துள்ளது. கிழக்கே சிங்கர்கோயில், மேற்கே அந்திலி, பரிக்கல், வடக்கே சோளிங்கர், சிங்கப்பெருமாள் கோவில், சிந்தலவாடி ஆகிய தலங்கள் அமைந்துள்ளன. பூவரசங்குப்பம் சிறந்த பரிகாரத்தலம். சுவாதி நட்சத்திரத்தில் 15 மாதம் சேவித்தால் சகல தோஷங்களும் நீங்கும் என்பது ஐதீகம்.

இத்தலம் 'தென் அஹோபிலம்' என்றும் அழைக்கப்படுகிறது. சப்தரிஷிகளுக்காக நரசிம்மர் தாயாருடன் சாந்தமாகக் காட்சியளிக்கும் இக்கோயில் தென்பெண்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. 5000 ஆண்டுகளுக்கு முன் இங்கு ஒரு ஸ்தம்பம் மட்டுமே சன்னிதியில் அமைந்திருந்தது. அதையே நரசிம்மராக வழிபட்டு வந்தனர். பின் பல்லவர் ஆட்சியில் நரசிம்மருக்கு மூலவிக்ரகம் அமைக்கப்பட்டது. மூலவர் பின் இருகைகளில் சங்கு, சக்கரம் ஏந்தி, இடதுகையில் தாயாரை அணைத்து, வலதுகரத்தால் பக்தர்களுக்கு அபயம் தந்து இடதுகாலை மடக்கி அதன்மீது தாயாரை அமர்த்திக்கொண்டு வலதுகாலைத் தொங்கவிட்டு, அதைக் கமலமலர்மீது வைத்தவாறு காட்சியளிக்கிறார். தாயார் பெருமாளைப் பார்த்தவாறே, வலது கரத்தால் பெருமாளை அணைத்துக்கொண்டு, இடதுகரத்தில் பத்மத்தைத் தாங்கி அமர்ந்துள்ளார். அமிர்தத்திற்கு இணையான பலனைக் கொடுக்க வல்லவள் என்பதால் அமிர்தபலவள்ளி என்று தாயார் அழைக்கப்படுகிறார். கோவிலில் பல இடங்களில் தெய்வப் புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன.

ஐந்தாம் நூற்றாண்டில் சமண மதத்தைச் சேர்ந்த மன்னன், முனிவர்களையும், அடியாரையும் அடித்துத் துன்புறுத்தி, கோவில்களை இடித்துத் தரை மட்டமாக்கியதால் சாபம் ஏற்பட்டு பலவிதத் துன்பங்களை அனுபவித்தான். பின் நரசிம்மரைப் பூஜை செய்ய வந்தபோது, இறைவன் அசரீரியாக, "முனிவர்கள், மக்களைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரமாக இந்தக் கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்தால் சாபம் நீங்கும்" என்று சொல்ல, மன்னனும் அவ்வாறே செய்து சாபம் நீங்கப் பெற்றான் என்கிறது தலபுராணம்.

பூவரசன் என்ற விஜயநகர மன்னன் அடிக்கடி பகைவர்களது படையெடுப்பால் துன்புற்றான். அதனால் வருந்திய அவன் நரசிம்மரை நோக்கித் தவமிருந்தான். நரசிம்மர் கனவில் தோன்றி, "விரைவில் கவலை தீரும்; கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்குச் செய்வாயாக" எனக் கூறி மறைந்தார்.

அவ்வாறே பகைவர்களுடன் நடந்த போரில் வெற்றி பெற்ற பூவரசன், கோயிலைப் புதுப்பித்து குடமுழுக்கு செய்ததாக ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

நரசிம்மரின் திருமுகம் சிங்கம் போன்று இருந்தாலும், உள்ளம் முழுவதும் கருணைதான். இரண்யனை வதம்செய்த நரசிம்மரை, குழந்தை பிரகலாதன் கூப்பிய கரங்களுடன் சென்று வணங்கியபோது, குழந்தையை வாரியெடுத்து மடியில் அமர்த்திக்கொண்டு மகிழ்ந்தாராம். பக்தர்மீது அத்தனை கருணை அவருக்கு. அதனால்தான் 'பக்தவத்சலன்' என்ற திருநாமத்தைப் பெற்றிருக்கிறார். ஸ்ரீ நரசிம்மரை பக்தியோடு தொழுதுவர தீராத நோய்கள், செய்வினை, ஏவல், பில்லி, சூனியம், தோஷங்கள், பாவங்கள் என அனைத்தும் நீங்கிவிடும் என்பது உண்மை.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே, கலிஃபோர்னியா

*****


திருத்தம் நவம்பர் 2015 இதழில் 'ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி ஆலயம்' கட்டுரையில் இக்கோவில் "108 வைஷ்ணவ திவ்யதேசங்களில் முக்கியமான 8 கோவில்களில் ஒன்று" என்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை "108 ஸ்வயம் வ்யக்த தேசங்களில் முக்கியமான 8 கோவில்களில் ஒன்று" என்று வாசிக்கவும். எமது கவனத்துக்கு இதனைக் கொண்டுவந்த வாசகர் வித்யா ராகவன் அவர்களுக்கு நன்றி. தவறுக்கு வருந்துகிறோம்.

- ஆசிரியர்
Share: 




© Copyright 2020 Tamilonline