Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
January 2016 Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | அன்புள்ள சிநேகிதியே | சினிமா சினிமா | சின்னக்கதை | ஹரிமொழி | சிறப்புப்பார்வை | சமயம் | வாசகர் கடிதம்
அஞ்சலி | சூர்யா துப்பறிகிறார் | மாயாபஜார் | சிறுகதை | புதினம் | Events Calendar | பொது | நலம்வாழ | கவிதைப்பந்தல் | ஜோக்ஸ்
எழுத்தாளர் | இளந்தென்றல் | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
ஹரிமொழி
மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்: பிரமாத்திரம் என்னும் பிரமசூக்குமம்
- ஹரி கிருஷ்ணன்|ஜனவரி 2016|
Share:
இப்போது கர்ணனைப்பற்றிய விவரங்களை நாமும், கதையில் பாண்டவர்களும் அறிந்துகொள்ளப் போகும் கட்டம்; துயரம் நிறைந்த ஒன்று. கர்ணன் தங்களுக்கு இழைத்த கொடுமைகளையெல்லாம் ஒருவினாடியில் மறந்துவிட தர்மபுத்திரனுக்கு 'அவன் தங்கள் ஐவருக்கும் அண்ணன், குந்திக்குப் பிறந்தவன்' என்ற உண்மையே போதுமானதாக இருந்தது. இந்தக் கட்டத்தில் அவன் துயரத்தால் பேசும் வார்த்தைகளை மட்டும் தனியே எடுத்து (out of context) பேசினால், பல உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியும். 'தர்மபுத்திரனே இப்படிச் சொல்லிவிட்டான்' என்று கோணத்தை மாற்றிக்காட்ட முடியும். அப்படித்தான் செய்துகொண்டும் இருக்கிறார்கள். 'இவனா, நமக்கு அண்ணனா, இவனையா நாம் கொன்றுவிட்டோம்' என்று மனத்தில் குற்ற உணர்வு குறுகுறுக்கும் நிலையில் தர்மபுத்திரன் பேசும் சொற்களை மட்டும் தனியே எடுத்துவைத்துக் கொண்டு பேசுவது, இதற்கு முன்னால் நடந்திருக்கும் கிட்டத்தட்ட நூறு வருடங்களாய் நடந்துவந்திருக்கும் கொடுமைகளுக்குப் புனுகு பூசுவதாகத்தான் இருக்கும்.

யுத்தத்துக்கான முயற்சிகள் தொடங்கப்பட்ட உத்தியோக பர்வத்திலிருந்து கர்ணனிடம் பெரிய அளவில் மாறுதல்கள் தென்படுகின்றன. கவச குண்டலத்தை இந்திரன் யாசித்தபோதே தென்படத் தொடங்கிவிட்டதே எனலாம். அதை ஓரளவுக்கு ஏற்கவும் முடியும். 'கேட்டவர்களுக்குக் கேட்டதைக் கொடுக்காமல் இருக்க மாட்டேன்' என்று தான் - தன் தந்தையென்று அறியாமலேயே - அன்றாடம் வணங்கிவந்த சூரியனே கனவில் வந்து எச்சரித்தபோதும் உறுதியாக மறுத்தவன்தான் கர்ணன். ஆனால் கொடையாளி என்ற இந்தப் பேச்சு, அவன் செய்த கொடுமைகளிலிருந்து விடுபடப் போதுமானதன்று. 'போரில் அர்ச்சுனன் இறந்தால் என்னோடு ஐவர்; நான் இறந்தால் அர்ச்சுனனோடு ஐவர்' என்று குந்திக்கு வரம் கொடுத்தவன்தான். எப்படிப்பட்ட கடினமான இதயத்தையும் கலங்கச் செய்யும் அந்தக் கட்டத்தைத் தனியாகப் பார்ப்போம்.

இப்படி என்ன வகையில் எப்படியெல்லாம் சமாதானம் சொல்லி நியாயப்படுத்தினாலும், "என்னைப் பணயமாக வைத்ததே தவறு" என்று பாஞ்சாலி பேசிய சமயத்தில், "மாட்டை வாங்கினால், கன்றையும் சேர்த்து வாங்கியாகிவிட்டது என்றுதான் பொருள்" என்று பேசியவனும் கர்ணன்தான் என்பதை மறக்கமுடியவில்லை. "அப்படிப்பட்ட நியாயம் உண்மையானால், தம்பியரையும் தன்னையும் தர்மன் வைத்திழந்த ஒன்றே போதுமானதாயிற்றே, அடிமையாகிவிட்ட தர்மனிடம் என்னை வைத்தாடும்படிச் சொல்லத் தேவையே இல்லையே, ஏன் அப்படிச் செய்ய வைத்தீர்கள்?" என்று பாஞ்சாலி திரும்பக் கேட்டபோது பதில் சொல்லமுடியாமல் நின்றவனும் கர்ணன்தான். இதையும் மறக்கமுடியவில்லை. அவ்வளவு பெரிய சபையில் துணையற்றவளாய் ஆதரவற்றவளாய் நின்று தவித்த ஒரு பெண்ணை - அவளை ஆட்டத்தில் இழந்தது தர்மனே என்றாலும் - அத்தனை பேர் முன்னிலையில் அவளுடைய சேலையைக் களையுமாறு ஏவியவன் கர்ணன்தான் என்பதை அவ்வளவு எளிதில் மறந்துவிட என்னால் முடியவில்லை.

இதை நினைத்துக் கர்ணன் வருந்துவதாகச் சில தொடர்களில் காட்டப்படும் சம்பவம் எதுவும் வியாச பாரதத்தில் இல்லை, வில்லியிலும் இல்லை. இப்போது நாம் சம்பவங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். பாத்திரப் படைப்புகளை ஆயவில்லை. எனவே இதற்குள் விரிவாகப் போவதைத் தவிர்க்கிறேன். பாத்திரப் படைப்புகளைப் பற்றி நாம் பேசும்போது, முதல் பாத்திரமாக நான் எடுத்துக்கொள்வது கர்ணனாகத்தான் இருக்கும். முன்னோட்டமாக ஒன்றே ஒன்றுமட்டும் சொல்லிவிடுகிறேன். கர்ணனிடத்திலே நல்ல தன்மைகள் எதுவுமே இல்லை என்று நான் சொல்லவில்லை. பார்க்கப்போனால், துரியோதனனிடத்தில்கூட நல்ல தன்மைகள் பல சமயங்களில் பளிச்சிடுகின்றன. ஒரு பாத்திரத்தை வகைப்படுத்துவதற்கு இவை போதா.

பிரமாணகோடியில் (Pramanakoti) பீமனுக்கு நஞ்சு வைத்த சமயத்தில் கர்ணன் எவ்வாறு அங்கே இருந்தான் என்பதைப்பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். அதற்கான விடைதான் இங்கே சாந்தி பர்வத்தில் கிடைக்கிறது. இந்தச் சந்தர்ப்பத்தில் தர்மபுத்திரன் துயரத்தின் எல்லையில் இருந்தான். 'அண்ணனைக் கொன்றுவிட்டோம்' என்ற உணர்வு மட்டுமே அவனைப் பொசுக்கிக் கொண்டிருந்தது. அந்தச் சமயத்தில்தான் 'உண்மையை எங்களிடமிருந்து எங்கள் தாய் மறைத்துவிட்டாளே, எங்கள் யாருக்குமே கர்ணன் எங்களுடைய அண்ணன் என்னும் உண்மை தெரியாமல் போய்விட்டதே, இதனால்தானே அர்ச்சுனன் கர்ணனைக் கொல்ல நேர்ந்தது' என்றெல்லாம் யுதிஷ்டிரன் புலம்புகிறான். 'கர்ணனுடைய பாதத்தைப் பார்க்கும்போதெல்லாம் அவையும் என் தாயின் பாதங்களும் ஒன்றுபோல இருப்பதைப் பற்றி நினைத்திருக்கிறேனே, என்னால் உண்மையை உணரமுடியாமல் போய்விட்டதே, யுத்த சமயத்தில் அவனுடைய தேர்ச்சக்கரத்தை பூமி எப்படி விழுங்கியது' என்றெல்லாம் நாரதரைக் கேட்க, அவர் மிகப்பழைய நிகழ்வுகளைச் சொல்லத் தொடங்குகிறார். அவர் சொல்வதில் முதற்காரணம் இது:

"நீ சொல்வது சரிதான். கர்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் யுத்தத்தில் ஜயிக்க முடியாது ஒன்றுமிராது. ஓ அரசனே! தேவரஹஸ்யமான இதனை உனக்குச் சொல்லுகிறேன். ஓ புஜபலமுள்ளவனே! முன்பு இஃது எப்படி நடந்ததென்பதைத் தெரிந்துகொள். ஓ பிரபுவே! க்ஷத்திரிய ஜாதியானது ஆயுதங்களால் பரிசுத்தியடைந்து எவ்விதம் ஸ்வர்க்கத்தையடையுமென்று ஆலோசித்து அந்தக் காரணத்துக்காகக் கன்னிகையாகிய குந்தியினிடத்தில், வைரத்தை உண்டுபண்ணத்தக்க கர்ப்பமானது உண்டுபண்ணப்பட்டது. அந்தக் கர்ப்பத்தில் உண்டான குழந்தையானவன் பராக்ரமத்துடன் கூடியவனாகவும் ஸாரதிக்குப் பிள்ளையாகவும் ஆனான்" (மஹாபாரதம் தொகுதி: 7; சாந்தி பர்வம்; அத். 2; பக். 5). இந்தப் பகுதியை கிஸாரி மோகன் கங்கூலி பின்வருமாறு மொழிபெயர்க்கிறார்: Narada said, "It is even so, O mighty armed one, as thou sayest, O Bharata! Nothing could resist Karna and Arjuna in battle. This, O sinless one, that I am about to tell thee is unknown to the very gods. Listen to me, O mighty-armed one, as it befell in former days. How all the Kshatriyas, cleansed by weapons should attain to regions of bliss, was the question. For this, a child was conceived by Kunti in her maidenhood, capable of provoking a general war." (Book 12, Section II). "க்ஷத்திரியர்களுக்குள் பெரும்போரை மூளச்செய்து, அனைவரும் போரில் மாண்டு வீரசொர்க்கத்தை அடையவைப்பதற்கான மூலக்கூறாகவே கர்ணன் படைக்கப்பட்டான்; குந்தி அவனைக் கர்ப்பத்தில் தரித்தபோதே இது நிச்சயிக்கப்பட்டுவிட்ட ஒன்று. இது தேவர்களும் அறியாத ரகசியம்" என்று நாரதர் சொன்னாலும் இது சம்பிரதாயமான 'விதி' முடிச்சாகக் கொள்ளக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது. இதை மறுக்கமுடியாது.
நாரதர் இதனையடுத்து ஒன்றைச் சொல்கிறார்: "அவனுக்கு பீமனுடைய பலத்தின் பேரிலும், அர்ச்சுனனுடைய வில்வித்தையின் பேரிலும், உன்னுடைய (தர்மனுடைய) புத்திக்கூர்மையின் பேரிலும் நகுல-சகதேவர்களுடைய வினயத்தின் பேரிலும், அர்ச்சுனனுக்கும் கண்ணனுக்கும் இளமைப் பருவத்திலேயே தொடங்கிவிட்ட நட்பின் பேரிலும் அளவற்ற பொறாமையிருந்தது. சுபாவமாகவே அவனுக்கு உங்களிடத்தில் பகைமையிருந்தது; வெறுப்பிருந்தது. ஏதோ தற்செயலாக துரியோதனனுடன் நட்பு பூண்டான். அவன் உங்களிடம் விரோதம் பாராட்டியது இதற்குக் காரணமாக இருந்தது." இப்படியெல்லாம் நாரதர் சொல்வதின் ஆங்கில மொழிபெயர்ப்பு இது: Thinking of the might of Bhimasena, the quickness of Arjuna in the use of weapons, the intelligence of thyself, O king, the humility of the twins, the friendship, from earliest years, between Vasudeva and the wielder of Gandiva, and the affection of the people for you all, that young man burnt with envy. In early age he made friends with king Duryodhana, led by an accident and his own nature and the hate he bore towards you all . (Book 12, Section II)

இப்படி இளமைக் காலத்திலேயே கர்ணனுக்கு இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெறுப்பும் பகைமையுணர்ச்சியும் அவனை துரியோதனனிடத்திலே நட்பு பாராட்ட வைத்தன. துரியோதனனுக்கும் - கதாயுதப் பயிற்சியில் பீமனைத் தன்னால் சமாளித்துவிட முடியும் என்ற நிலையில் - வில்வித்தையில் தேர்ந்தவனாக ஒருவன் தேவைப்பட்டான். இப்படித்தான் இருவரும் சிறுவயதிலேயே நெருங்கினார்கள். சிறுவயது என்றாலும் கர்ணனுக்கும் துரியோதனனுக்கும் வயது வித்தியாசம் பதினேழு என்பதை நினைவில் கொள்ளவேண்டும். இப்படித்தான் பீமனுக்கு பிரமாணகோடியில் நஞ்சூட்டிய சதியில் கர்ணனைப் பார்க்கிறோம்.

வில்வித்தையில் அர்ச்சுனன் அடைந்த தேர்ச்சியைப் பார்த்த கர்ணனால் அதைப் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. ஒருவருக்கும் தெரியாமல் துரோணரைத் தனியாக அணுகினான். தனக்கும் பிரம்மாஸ்திரப் பயிற்சியை அளிக்க வேண்டும் என்று அவரிடத்தில் தன் கோரிக்கையை வைத்தான். எதற்காக இந்தப் பயிற்சியாம்? "யுத்தத்தில் அர்ஜுனனோடு ஸமமாக இருத்தல் வேண்டுமென்பது என் விருப்பம்." (சாந்தி பர்வம், அத். 2). ஆங்கில மொழிபெயர்ப்பைப் பாருங்கள்: "I desire to be acquainted with the Brahma weapon, with all its mantras and the power of withdrawing it, for I desire to fight Arjuna. Without doubt, the affection thou bearest to every one of thy pupils is equal to what thou bearest to thy own son. I pray that all the masters of the science of weapons may, through thy grace, regard me as one accomplished in weapons!".

நான் அர்ச்சுனனோடு போரிட விரும்புகிறேன். போரில் அவனுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதால் எனக்கும் பிரம்மாத்திரப் பயிற்சியை அளிக்க வேண்டும். ஏன்? பயிற்சியே இன்னமும் முடியாத இந்த ஆரம்பக்கட்டத்தில் போரைப்பற்றி, அதுவும் அர்ச்சுனனோடு தொடுக்கப்போகும் போரைப்பற்றி எதற்காகப் பேசவேண்டும்? இயற்கையான பகையுணர்ச்சி என்பதைத் தவிர வேறு விடையில்லை.

(தொடரும்)

ஹரி கிருஷ்ணன்
Share: 
© Copyright 2020 Tamilonline