Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
அலமாரி
ஓ! மாம்பழமே!
- அரவிந்த்|நவம்பர் 2026|
Share:
(கல்கி எழுதிய 'ஓ! மாம்பழமே!' நூலில் இருந்து)

லண்டன், மே 4
"நேற்று மாலை ஸவுதாம்டன் துறைமுகம் வந்துசேர்ந்த 'விக்டோரியா' என்னும் கப்பலில் இந்திய தேசத்து மாம்பழங்கள் வந்து இறங்கின."
-அயல்நாட்டுத் தந்தி

மேற்படி செய்தி இந்திய தினசரிப் பத்திரிகைகளில் சின்ன எழுத்துத் தலைப்புடன் மூலையில் பிரசுரிக்கப்பட்டிருந்தது. ஆனால், அதனுடைய பின்விளைவுகள் என்ன ஆகப் போகின்றன என்பதுமட்டும் தெரிந்திருந்தால் உபபத்திராதிபர்கள் அச்செய்தியை அவ்வளவு அலட்சியம் செய்திருக்கமாட்டார்கள். அந்தப் பின்விளைவுகள் என்னவென்பதைக் கேளுங்கள்:

மறுநாள் சாயங்காலம் லண்டனிலுள்ள இந்திய மந்திரி காரியாலயத்தில் இந்திய மந்திரிக்கும் அவருடைய சகாக்களுக்கும் இந்தியாவின் ஹைகமிஷனரால் ஒரு விருந்து நடத்தப்பெற்றது. முதன் மந்திரியும், மிஸ்டர் பால்ட்வினும் உள்படப் பிரமுகர்கள் அநேகர் விஜயம் செய்திருந்தார்கள்.

அடுத்த நாள் காலையில் வெளியான லார்ட் ராதர்மியரின் 'டெயிலி மெயில்' பத்திரிகையில் கொட்டை எழுத்தில் கட்டம் கட்டிப் பின்வரும் கேள்வி பிரசுரிக்கப்பட்டிருந்தது: "நேற்று இரவு இந்திய மந்திரி காரியாலயத்தில் ஒரு விருந்து நடந்தது. அந்த விருந்தைப்பற்றிய ஒரு வதந்தி பிரிட்டிஷ் பொதுமக்களின் மனத்தைக் கலக்கி வருகிறது. அந்த வதந்தியைப்பற்றிய உண்மை என்ன? மிஸ்டர் பால்ட்வின் பதில் சொல்வாரா?"

அன்று சாயங்காலம் வெளியான லார்ட் பீவர்புரூக்கின் 'ஈவினிங் ஸ்டாண்டர்டு' பத்திரிகையில், 'மேற்படி விருந்தில் ஒரு புதிய வகைப் பழம் பரிமாறப்பட்டதென்றும், அந்தப் பழம் இந்தியாவிலிருந்து வந்ததென்றும் நம்புவதற்குப் போதிய ஆதாரங்கள் நமக்குக் கிடைத்திருக்கின்றன. கூடிய சீக்கிரம் இதைப்பற்றிய முழு உண்மையையும் வெளிப்படுத்தியே தீர்வோம்' என்று பிரசுரிக்கப்பட்டது.

மறுநாள் காலையில் 'டெய்லி மெயில்' பத்திரிகையில் காணப்பட்ட விவரமாவது: 'உண்மை வெளியாகிவிட்டது. இந்திய மந்திரி காரியாலயத்தில் நடந்த விருந்தின்போது பரிமாறப்பட்ட புதிய பழம் இந்தியாவிலிருந்து வந்த மாம்பழம் என்று திட்டமாகத் தெரிந்து போயிற்று. ஸர் ஸாமுவேல் ஹோர் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்? அவர் உண்மையை மறுக்க மாட்டார் என்று நம்புகிறோம். ஏனெனில் மறுக்க முடியாத சாட்சியம் நம் வசம் இருக்கிறது. பின்னர், வேறு என்ன சமாதானம் சொல்லப்போகிறார் என்று பார்ப்போம்.'

மறுநாள் 'டெய்லி எக்ஸ்பிரஸ்' பத்திரிகையில், மிஸ்டர் வின்ஸ்டன் சர்ச்சில் அவர்களின் விசேஷக் கட்டுரை ஒன்றுடன் வெளிவந்தது. (அந்தக் கட்டுரைக்கு அவருக்கு ஆயிரம் பவுன் சன்மானம் அளிக்கப் பெற்றதென்று எழுத்தாளர் கூட்டங்களில் வதந்தி உலாவிற்று.)

"பிரிட்டிஷ் ராஜ்யத்தின் பெருமைக்கு அழியாத அவமானம் உண்டாகிவிட்டது. கேவலம், இந்தியாவிலிருந்து வந்த மாம்பழங்களை பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மந்திரிகள் சாப்பிடும்படியான நிலைமைக்கு நாம் தாழ்ந்துவிட்டோம். என்ன அவமானம்! இந்தியர்களுக்கு நம்மிடமுள்ள மதிப்பில் அரைப்பங்கு இச்சம்பவத்தினால் போயிருக்குமென்பது திண்ணம். முதுகெலும்பில்லாத இந்த மந்திரிசபையை இன்னும் எத்தனை நாளைக்குப் பிரிட்டிஷ் பொதுஜனங்கள் அதிகாரத்தில் வைத்திருக்கப் போகிறார்கள்?" என்பது சர்ச்சில் கட்டுரையின் சாராம்சம்.

'மார்னிங் போஸ்ட்' பத்திரிகையில் அடுத்த நாள் வெளியான செய்தி எல்லாரையும் தூக்கிவாரிப் போட்டுவிட்டது. மேற்படி விருந்தில் மாம்பழம் என்று வைக்கப்பட்ட ஒவ்வொன்றும் உண்மையில் ஒரு வெடிகுண்டு என்பதாகவும், விருந்தினரில் ஒருவர் ஒரு மாம்பழத்தை விழுங்கி அவருடைய வயிற்றில் அது வெடித்த பின்னர் உண்மை தெரிந்து மற்றவர்கள் தப்பித்துக்கொண்டார்களென்றும், விஷயம் இப்போது ஸ்காட்லண்டு யார்டு துப்பறியும் நிபுணர்கள் கையில் இருக்கிறதென்றும் அந்த விவரம் சொல்லிற்று. "இதெல்லாம் சுத்தக் கட்டுக்கதை" என்பதாக ஓர் உத்தியோகமுறை அறிக்கை மறுதளித்தது.

இதற்கிடையில், லார்ட் ராதர்மியர் தமது சொந்தக் கையெழுத்துடன் 'டெயிலி மெயில்' பத்திரிகையில் ஒரு கட்டுரை எழுதினார். அதன் சுருக்கம் ராய்ட்டரால் உலகமெல்லாம் அறிவிக்கப்பட்டது. "பிரிட்டிஷார் இந்தியா தேசத்தை ஏன் இழந்துவிடக் கூடாது என்பதற்கு ஒரு புதிய காரணம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் இந்திய மாம்பழம். நேற்று மாலைச் சாப்பாட்டின் போது அந்தப் பழத்தில் ஒன்று நான் சாப்பிட்டுப் பார்த்தேன். அதைப்போன்ற ருசியை என் வாழ்க்கையில் இதுவரையில் கண்டதுமில்லை, கேட்டதுமில்லை. இவ்வளவு ருசியுள்ள பழத்தைக் கொடுக்கும் தேசத்தையா சில முட்டாள் மந்திரிகளின் முழு மூடத்தனத்தினால் நாம் இழந்துவிடுவது? பிரிட்டிஷ் பொதுமக்களே! எழுந்திருங்கள், வெள்ளைக் காகிதத்தைக் கிழித்தெறியுங்கள்"

மேற்படி சுட்டுரையின் கருத்தைப் பலமாகத் தாக்கி 'டெயிலி ஹெரால்டு' தலையங்கம் எழுதிற்று. இந்திய மாம்பழம் இங்கிலாந்துக்கு வரத் தொடங்கினால், பிரிட்டிஷ் ஆப்பிள்களுக்குக் கிராக்கி குறைந்துவிடுமென்றும், இதனால் பிரிட்டிஷ் குடியானவர்கள் நஷ்டமடைவார்களென்றும், இந்தியாவுக்குச் சுயராஜ்யம் கொடுக்கும் நாளை ஏன் துரிதப்படுத்த வேண்டுமென்பதற்கு இதுவும் ஒரு காரணமாகும் என்றும் அது அபிப்பிராயம் தெரிவித்தது.

லான்ஸ்பரி தாத்தா 'ஹிந்து' பத்திரிகையின் நிருபர் மூலமாக இந்தியாவுக்குப் பின்வரும் தந்தியை அனுப்பினார்.

"இந்த மாம்பழப் பிரச்னையைப்பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். எங்கள் தொழிற்கட்சி அதிகாரத்துக்கு வந்ததும் திருப்திகரமாகத் தீர்த்து வைத்து விடுகிறோம். அதுவரையில் ஒற்றுமையைக் கைவிடாதிருங்கள்."

'லண்டன் டைம்ஸ்' பத்திரிகையில் மாம்பழத்தில் என்னென்ன வகை விடமின்கள் உண்டு என்பதைப்பற்றியும் அது உடம்புக்கு நல்லதா இல்லையா என்பதைப்பற்றியும் விவாதம் நடந்துவந்தது. டாக்டர்களும், விஞ்ஞானப் புலவர்களும் தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை வெளியிட்டு வந்தனர்.

'பஞ்ச்' பத்திரிகையில், மிஸ்டர் ஜான் புல் கையில் ஒரு மாம்பழத்தை வைத்துக்கொண்டு, "தின்பதா; வேண்டாமா?" என்று யோசிப்பதுபோல் ஒரு கார்ட்டூன் படம் வெளியாயிற்று, அதைப் பார்த்துவிட்டு 60,000 வாசகர்கள் சிரித்தார்கள். "ஏன் சிரிக்கிறீர்கள்?" என்றதற்கு, "என்னவோ சிரித்தோம்" என்று பதில் சொன்னார்கள்.

இந்த விவாதத்தைப்பற்றி ஆசிரியர் பெர்னார்ட் ஷா அவர்களுடைய அபிப்பிராயத்தைத் தெரிந்துகொள்ளச் சில பத்திரிகை நிருபர்கள் சென்றார்கள். அவர் தம் அபிப்பிராயத்தை இரண்டே வார்த்தையில் தெரிவித்துவிட்டார். அதாவது, 'செத்துப்போங்கள்!' என்று சொன்னார்.

இங்கிலாந்தின் நிலைமை இவ்வாறிருக்க, இனி இந்தியாவில் இது சம்பந்தமாக நிகழ்ந்த சம்பவங்களைச் சற்றுக் கவனிப்போம்.

இந்தியாவிலுள்ள தினசரிப் பத்திரிகைகள் எல்லாவற்றிலும், இங்கிலாந்தில் நடந்த மேற்படி விவாதத்தைப் பற்றிய சகல விவரங்களும் தந்தியில் வந்து பிரசுரமாயின. ஆனால் அவைகளுக்கு இந்த விவாதத்தைப்பற்றி அபிப்பிராயம் எழுதுவதில் மிக்க தொல்லை ஏற்பட்டது. முதலில் மிதவாதப் பத்திரிகைகள் சர்ச்சிலின் கூற்றைப் பலமாகக் கண்டித்துப் பிரிட்டிஷ் மந்திரிகள் இந்திய மாம்பழம் சாப்பிட்டது அவர்களுடைய சமரச நோக்கத்தைக் காட்டுகிறது என்று பாராட்டி எழுதின. பின்னால், ராதர்மியர் பிரபுவின் கட்டுரை வெளியானபோது தேசியப் பத்திரிகைகளுக்கு ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது. அவை, இனிமேல் ஒரு மாம்பழங் கூட இந்தியாவை விட்டுப் போகாமல் தீவிரப் பிரசாரம் செய்ய வேண்டுமென்று வற்புறுத்தின.

அந்த மாதம் வெளியான கலைமகள் பத்திரிகையில் மாம்பழக் கவிராயரைப்பற்றி ஒரு கட்டுரையும், கலா நிலயம் பத்திரிகையில் “முக்கனியில் மாங்கனி சேர்ந்ததா?" என்பதைப்பற்றி ஓர் ஆராய்ச்சியும் வெளியாயின.

ஸ்ரீமதி காசினி அம்மாள் மாதர் பக்கத்தில் மாங்காய் ஊறுகாய்களைப்பற்றி நாக்கில் ஜலம் ஊறும்படி எழுதியிருந்தார்.

“மாம்பழங்களுக்கே இந்தப் பாடுபடுகிறார்களே! வடுமாங்காயின் ருசியை பார்த்துவிட்டால் என்னதான் சொல்வார்களோ?" என்று விகடன் ஹாஸ்ய ரசத்துடன் எழுதினான்.

பிரிட்டிஷ் மக்களை இந்திய மாம்பழங்கள் அதிகமாகச் சாப்பிடும்படி தூண்டி இந்தியாவினிடம் சிநேகப்பான்மையை வளர்ப்பதற்காக ஒரு தூதுக் கூட்டத்தை அனுப்ப வேண்டுமென்று மிதவாதப் பிரமுகர்கள் கூறினார்கள்.

திடீரென்று இந்தப் பிரச்னையில் வகுப்புவாத வாசனை வீசலாயிற்று. மேன்மை தங்கிய ஆகாகான் சாகிப் லண்டனிலிருந்து, “இந்த நெருக்கடியான சமயத்தில் எனது முஸ்லிம் சகோதரர்கள் ஒற்றுமையைக் கடைப்பிடிப்பார்களென்றும், அதே சமயம் ஹிந்துக்களிடம் நேசப்பான்மையுடன் இருப்பார்களென்றும் நம்புகிறேன்" என்று ஒரு செய்தி அனுப்பினார்.

மௌலானா ஷவுகத் அலி சாகிப் அவர்கள் கிலாபத் கமிட்டியைப் புனருத்தாரணம் செய்து, முஸ்லிம் தொண்டர் படை திரட்டுவதின் அவசியத்தை வற்புறுத்தினார்.

“இந்தியாவில் பழுக்கும் மாம்பழங்களில் 100க்கு 40 வீதம் எங்களுக்குக் கொடுத்தாலன்றி. இந்த ஹிந்துக்கள் சுயராஜ்யம் அடைவதைப் பார்த்துவிடுகிறேன்" என்று கர்ஜித்தார் டாக்டர் ஷாபத் ஆமத்கான்; இதைக் கேட்ட டாக்டர் மூஞ்சி அவர்கள் தாடியை ஒரு கையால் உருவிக்கொண்டு மற்றொரு கையால் கைப் பிரம்பைச் சுழற்றினார் என்று முஸ்லிம் பத்திரிகைகள் வெளியிட்டன.

ஆதித் திராவிட சமூகத்திலும் கிளர்ச்சி உண்டாயிற்று. டாக்டர் அம்பேத்கரும், எம்.சி. ராஜாவும் ஒருவர் வாய் திறப்பதை இன்னொருவர் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். முதலில் பேசுகிறவர் எது சொன்னாலும், அதற்கு எதிராக மற்றொருவர் பேசுவதென்று அவர்கள் தீர்மானித்திருந்தனர். அவர்களுடைய சிஷ்யகோடிகள் அதிருப்தியுற்று, "கொண்டுவா மாம்பழம்!'' என்று கூச்சலிட்டார்கள்.

டாக்டர் முத்துலட்சுமி அம்மாள் முன்வந்து, எல்லா விஷயங்களிலும் போல இதிலும் ஸ்திரீகள் அலட்சியம் செய்யப்படுவதைக் கண்டித்தார். விசேஷ மாதர் மகாநாடு ஒன்று கூட்டி அதில், "ஸ்திரீகள் என்றால் என்ன? அவர்களுக்கு வாய் கிடையாதா? ருசி கிடையாதா? மாம்பழம் சாப்பிட முடியாதா?" என்று உருக்கமாகப் பேசி, தாமே ஒரு பழத்தைப் பிரத்தியட்சமாய்ச் சாப்பிட்டுக் காட்டினார்.

பண்டித மதன்மோகன் மாளவியா பத்திரிகைகளுக்கு ஒரு நீண்ட அறிக்கை விடுத்தார். பிரம்மா ஜகத்தைச் சிருஷ்டி செய்ததிலிருந்து தொடங்கி மாம்பழம் இந்தியாவுக்கே உரியது என்று ஸ்தாபித்தார். கிழக்கிந்தியக் கம்பெனியார் வந்ததிலிருந்து, சீமைக்குச் சென்றிருக்கும் இந்தியாவின் செல்வங்களுக்கெல்லாம் ஜாப்தா கொடுத்து, மாம்பழத்தையும் அவ்வாறு போகவிடக்கூடாதென்றும், அதற்காகத் தமது உயிரை வேண்டுமானாலும் கொடுக்கத் தயாராயிருப்பதாகவும் கூறினார்.

விஞ்ஞான மேதாவியாகிய ஸர் சி.வி. ராமன் ஒரு சர்வகலாசாலைப் பிரசங்கத்தில் இதைப்பற்றிக் குறிப்பிட்டு, "ஆகையால் மாணாக்கர்களே! புத்தகங்களை வீசி எறிந்துவிட்டு மாம்பழம் சாப்பிடுங்கள்" என்று கூறினார்.

டாக்டர் நாகராஜ சர்மா, ஸர் சி.வி. ராமன் சொல்வது சுத்த அபத்தமென்று நிரூபித்து 'ஹிந்து' பத்திரிகையில் மூன்று பத்தி எழுதினார்.

வங்காளத்தில் ஒரு விஞ்ஞானப் புலவர் கிளம்பி, ஸர் சி.வி. ராமன் சொன்னதைத் தாம் மூன்று வருஷத்துக்கு முன் சொன்னதாகவும், தம்மை அவர் காப்பியடித்துவிட்டதாகவும் முறையிட்டார். 'மாடர்ன் ரிவியூ' அவர் கட்சியை ஏற்று, ஸர் சி.வி. ராமனுடைய யோக்கியதையை வெளிப்படுத்த ஆரம்பித்தது!

கவி ரவீந்திரநாத தாகூர் அவர்களிடம் இந்த விவாதத்தைப்பற்றிப் பிரஸ்தாபிக்கப்பட்டபோது அவர், "ஓ மாங்கனியே! நீ நாவிற்கு எவ்வளவு இனிப்பாயிருக்கிறாய்? ஆயினும் உன்னுடைய பெயரால் உலகில் எவ்வளவு அநீதிகள் இழைக்கப்படுகின்றன!" என்று தெரிவித்தார்.

டேராடூன் சிறைச்சாலைக்குள்ளிருந்து ஒரு மெல்லிய குரல் கேட்டதாக ஒரு வதந்தி பரவியது. அந்தக் குரல், "மாம்பழம் யாருக்குச் சொந்தம்? மாமரம் வைத்துப் பயிராக்கித் தண்ணீர் ஊற்றி வளர்த்தவனுக்கல்லவா? அவன் சும்மா இருக்க, இவர்கள் அடித்துக்கொள்கிறார்களே! அடா! இதென்ன அநியாய உலகம்?" என்று சொல்லிற்றாம்.

சேலம் ஒட்டு மாம்பழ வியாபாரிகள் பத்திரிகைகளின் முதல் பக்கங்களில் பெரிய பெரிய விளம்பரங்கள் செய்தார்கள்.

அவர்களில் கெட்டிக்காரரான ஒருவர் அச்சமயம் டெல்லியில் தங்கியிருந்த மகாத்மா காந்தியின் பெயருக்கு ஒரு கூடை ஒட்டு மாம்பழம் ரயில் பார்ஸலில் அனுப்பினார். மாம்பழக் கூடையைக் 'கிராண்ட் டிரங்க் எக்ஸ்பிரஸ்' அதிவேகமாய்க் கொண்டு சேர்த்தது.

இரண்டு நாளைக்கெல்லாம் "மகாத்மா ஏழுநாள் உபவாச விரதம் தொடங்கியிருக்கிறார்" என்னும் பயங்கரமான செய்தி தேசமெங்கும் பரவியது. விசாரித்ததில், மகாத்மா சேலம் ஒட்டு மாம்பழம் ஒன்றின் ரஸத்தைச் சாப்பிட்டுவிட்டு அதன் ருசியைப் பற்றி வெகுநேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும், இவ்வாறு நாவின் ருசிக்கு இடங்கொடுத்துவிட்டது தவறு என்று பின்னால் உணர்ந்து பிராயச்சித்த உபவாசம் தொடங்கியிருப்பதாகவும் தெரியவந்தன

"உலகப் பெரியாரையே மயக்கி உபவாசம் இருக்கச் செய்த ஒப்பற்ற ஒட்டு மாம்பழம்" என்று எங்கெங்கும் விளம்பரங்கள் காணப்பட்டன.

நிற்க, சக்கரவர்த்தி இராஜகோபாலாச்சாரியாரின் வேண்டுகோளின்படி தேசத்தின் நானாபாகங்களிலிருந்தும் மகாத்மாவுக்குத் தந்திகள் பறந்தன.

"மாம்பழம் சாப்பிட நாங்கள் இருக்கிறோம். தாங்கள் கவலைப்படவேண்டாம். உபவாசத்தை நிறுத்தவும்" என்று இந்திய மக்கள் ஒரு முகமாய் மகாத்மாவை வேண்டிக்கொண்டார்கள்.

இப்படி வேண்டிக்கொண்டவர்களில் நானும் ஒருவனாதலால், இதோ ஒரு மாம்பழத்தைச் சாப்பிட்டுத் தொலைக்கிறேன்.

நன்றி:
'ஓ! மாம்பழமே!', ஆசிரியர்: கல்கி,
தமிழ் மின் நூலகம்
தொகுப்பு: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline