Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
Tamil Unicode / English Search
அலமாரி
பழைய நினைவுகள்
- அரவிந்த்|ஆகஸ்டு 2026|
Share:
(பாஸ்கரத்தொண்டைமான் எழுதிய 'ரஸிகமணி டி.கே.சி.' நூலில் இருந்து)

ஒருவருக்கு வாழ்க்கையில்‌ ரஸமான சம்பவங்கள்‌ பல நடப்பது சகஜம்‌. ஆனால்‌ அந்தப்‌ பழைய நினைவுகளை எண்ணியெண்ணி ௮திலேயே ஒரு ஆனந்தம்‌ அடைவது எல்லோருக்‌கும்‌ சாத்தியமானதல்ல. கலையுணர்ச்சி நிரம்பிய மனம்‌ படைத்த ஒருவருக்கே அது சாலும்‌. ரஸமான அனுபவங்கள்‌ பல இருந்தாலும்‌ அதை ரஸமாகச்‌ சொல்லத்‌ தெரியவேண்டாமா? அப்‌படிப்‌ பழைய நினைவுகளை மற்றவர்கள்‌ ரஸிக்கத்‌தக்க முறையில்‌ சொல்லும்‌ சக்திவாய்ந்தவர்‌ டி. கே. சி. சில நினைவுகளைப்‌ பார்க்கலாம்‌.

விளாத்திகுளம்‌ திருநெல்வேலி ஜில்லாவின்‌ வடகீழ்க்‌ கோடியில்‌ உள்ள ஒரு சிறு கிராமம்‌, 1939ல்‌ நான்‌ அங்கு உத்தியோகம்‌ பார்த்தேன்‌. அப்போது டி.கே.சி. சென்னையில்‌ இருந்தார்‌. நான்‌ விளாத்திகுளம்‌ சென்று சேர்ந்ததைக்‌ குறித்துக்‌ கடிதம்‌ எழுதினேன்‌. அவருக்கு அக்‌கடிதம்‌ அவருடைய பழைய பால்ய நினைவுகளைத்‌ தூண்டியிருக்கிறது - வந்தது கடிதம் மறு தபாலில்‌ - அவருடைய நினைவுகளைத் தாங்கி.

"விளாத்திகுளம்‌ ஒரு அந்தமான்‌ தீவு என்று உத்தியோகஸ்தர்கள்‌ சொல்வதுண்டு, ஆனால், எனக்கு அந்த ஊரினிடத்தில்‌ ஒரு பிரியம்‌. எனக்குக்‌ கல்யாணமான 1908-ம்‌ வருஷம்‌ ஒரு மாசகாலம்‌, பலவிதமான உபசாரங்களுக்கெல்‌லாம்‌ உள்ளாகி வசித்த இடம்‌ அது. என்னுடைய அம்மான்‌, தாங்கள்‌ பார்க்கும்‌ டிப்டி தாசில்தார்‌ வேலையை அப்போது பார்த்து வந்தார்கள்‌. ஏதோ கிடையாத மாப்பிள்ள கிடைத்துவிட்டதுபோல்‌ எண்ணி இல்லாத மாப்பிள்ளை உபசாரமெல்லாம்‌ செய்து புரட்டி எடுத்துவிட்டார்கள்‌ என்னை, அதை எப்படி மறக்கமுடியும்‌?

மேலும்‌, மாப்பிள்ளை ஏதோ தீவாந்தரத்துக்‌குள்‌ அகப்பட்டுவிட்டதாக எண்ண ஆரம்பித்து விடக்கூடாதென்று எண்ணி அங்குள்ள புஸ்தக சாலையை அநேகமாக என்‌ வசமே ஒப்புவித்து விட்டார்கள்‌ என்று சொல்லலாம்‌. சாப்பிடுகிற நேரம்‌ போக, காலை எட்டு மணிமுதல்‌ சாயங்‌காலம் காப்பி சாப்பிடுகிற நாலரை மணிவரையும்‌ புஸ்தக சாலையிலே இருந்துகொண்டு ஆங்கில ஆசிரியர்கள், தமிழ்‌ ஆசிரியர்களோடு அளவளாவிக் கொண்டே யிருந்தேன்‌. அவைகளில்‌ பிற்‌காலத்திலும்‌ நின்று உதவும்படி படித்த புஸ்தகங்கள்‌ இரண்டு. பாஸ்வெல்‌ எழுதிய ஜான்ஸன்‌ வரலாறு ஒன்று. ஆற அமர இரண்டு காண்டங்களையும்‌ படித்தேன்‌. அதிலிருந்து ஆங்கில இலக்‌கியங்களைக்‌ கருத்தூன்றிப்‌ படிக்கும்படியான முறை ஏற்பட்டது. மற்றப்‌ புஸ்தகம்‌ எது என்‌றால்‌ அது தண்டியலங்காரம்‌. விளாத்திகுளத்தில்‌ தண்டியலங்காரம்‌ இருந்தது 1908-ம்‌ வருஷத்‌தில்‌ என்றால்‌ வியப்பாய்‌ இருக்கும்‌. தண்டியலங்‌காரத்தைப் பற்றித்‌ தமிழ்‌ ஆசிரியர்கள்‌ பலவாகப்‌ பேசியதைக்‌ கேட்டதுண்டு. ஆனால்‌ புஸ்தகத்‌தைப்‌ பார்த்ததில்லை. அங்கேதான்‌ முதன்முதலாகப்‌ பார்த்தேன்‌. அப்போதே மூலத்தில்‌ விஷயம்‌ இல்லை. உரையிலும்‌ விஷயம்‌ இல்லை என்று தெரிந்துகொண்டேன்‌. ஆகவே மேற்கோள்‌ செய்யுள்களை மட்டும்‌ படித்தேன்‌. தமிழ்‌ இன்‌னது என்று தெரியவந்தது. தமிழ்‌ பாஷையின்‌ அழகையும்‌, தூய்மையையும்‌ வளத்தையும்‌ கண்டபோது, பாணதீர்த்தத்திற்குப்‌ போயிருந்த போது தெள்ளத்‌ தெளிந்த தண்ணீர்ப்‌ பெருக்கும்‌ பாறைகளுக்கடையே தாவியும், வட்டமிட்டும்‌ வலசாரி இடசாரி பாய்ந்தும்‌ போகிற அழகெல்லாம்‌ மனசுக்கு முன்‌ வந்தது. இருபது முப்பது கவிகளை அப்போதே மனப்‌பாடம்‌ பண்ணிக்கொண்டேன்‌. தமிழ்க்‌ கவியை உய்த்துணர்வதற்கு ௮ந்தக்‌ கவிகள்‌ இன்றைக்‌கும் உபயோகப்படுகின்றன. அடிக்கடி மேற்கோள்‌ செய்யுள்களை வாசித்து அனுபவிப்பதுண்டு,

தாதளவி வண்டு தடுமாறுந் தாமரைகொல்
மாதர் விழி யுலவு வாண்முகங்கொல் - யாதென்று
இருபாற்‌ கவருற்‌(று) இடையூசல்‌ ஆடி
ஒருபாற்‌ படாதென்‌ உளம்‌


என்ற பாட்டு அவைகளில்‌ ஒன்று. நான்‌ வாசித்து அனுபவித்த புஸ்தகம்‌ புஸ்தகசாலையில்‌ இன்னும்‌ இருக்கும்‌ என்று நம்புகிறேன்‌. பிறகு ஒரு புஸ்தகம்‌ எனக்கு வாங்கினேன்‌. அது எப்‌படியோ எங்கேயோ போய்விட்டது. தொலைப்‌பதற்குக்‌ காரணம்‌ நானாகவே இருந்திருக்க வேண்டும்‌. யாருக்காவது ஒன்‌றிரண்டு செய்யுள்‌களை வாசித்துக்‌ காட்டியிருப்பேன்‌. அவர்‌ புஸ்‌தகத்தைப்‌ படிக்க வாங்கிக்கொண்டு போயிருப்‌பார்‌. அவ்வளவுதான்‌, அதற்குச்‌ சிறகு முளைத்‌திருக்கும்‌. புஸ்தகம்‌ வேறொன்‌று விலைக்கு வாங்க வேண்டும்‌ என்று எண்ணியது பலதடவை. ஆனால்‌ காலம்‌ கடந்துகொண்டே வந்தது, கடைசியாக இரண்டு மாதத்திற்குமுன்‌ இங்கே வந்திருந்தபோது மனசைத்‌ திடப்படுத்திக்‌ கொண்டு சைவசித்தாந்த நூற்பதிப்புக்‌ கழகத்‌திற்குப்‌ போய்‌ ரூ 1-14-0-க்கு தண்டியலங்காரம்‌ ஒன்றை வாங்கிவிட்டேன்‌. மேற்கோள்‌ செய்‌யுள்களை அடிக்கடி படித்துக்‌ கொண்டிருக்கிறேன். படிக்கும்‌ போதெல்லாம்‌, விளாத்திகுளம்‌ புஸ்தகசாலை, தெரு, வேப்பமரம்‌, மணல்‌ வளம்‌ பொருந்திய ஆறு, ஒரு கரையிலிருந்து எதிர்க்கரைக்குப் பெரிய பருத்தி மாற்றுக்கட்டு ஒன்றை உருட்டிக்கொண்டே வந்த சண்டமாருதம்‌ எல்லாம்‌ கண்முன்‌ வந்து நிற்கிறது. ஆகவே விளாத்திகுளத்தினிடம்‌ எனக்கு ஒரு பிரியம்‌ உண்டென்பது விளங்குகிறதல்லவா" என்பதுதான்‌ டி.கே.சி.யின்‌ பழைய நினைவு.

எவ்வளவு ரஸமான அனுபவம்‌. அவருடைய 'ஹனிமூன்'தான்‌ எவ்வளவு ரஸமாகத்‌ தண்டியலங்காரத்துடன்‌ நடைபெற்றிருக்கிறது! நான்‌ விளாத்திகுளத்திலிருந்த ஒரு வருஷமும்‌ அது தீவாந்தரமாக இருக்கவில்லை. காரணம்‌ விளாத்திகுளம்‌ புஸ்தகசாலையும்‌ தண்டியலங்காரமும்‌ அல்ல. ரஸமான அனுபவங்களை அழகாகத்‌ தாங்கி வந்த டி.கே.சி.யின்‌ கடிதங்கள்தான் அந்தப்‌ பாலைவனத்தையும்‌ சோலை வனமாக்கிக்‌ கொண்டிருந்தன.

'ஒரு மரம்‌ தோப்பாகாது' என்பது பழமொழி. ஆதலால்‌, டி.கே.சி.யின்‌ இன்னொரு பழைய நினைவையும்‌ தரலாம்‌ என எண்ணுகிறேன்‌. சுமார்‌ ஏழு எட்டு வருஷங்களுக்கு முன்‌ - ஒரு ஊரில்‌ நடந்த சைவ சபை ஆண்டு விழாவிற்கு என்னைப்‌ பேசக்‌ கூப்பிட்டிருந்தார்கள்‌. (பேரைச்‌ சொன்னாலும்‌ ஊரைச்சொல்லக்‌ கூடாது என்பதுதானே சம்பிரதாயம்‌). ஆனால்‌ நிபந்தனை ஒன்றையும்‌ பலமாகவே போட்டார்கள். 'தாங்கள்‌ கம்பனைத்‌ தவிர, வேறு ஏதாவது பொருள்‌ குறித்துப்‌ பேசவேண்டும்‌' என்பதுதான்‌ அவர்கள்‌ வேண்டுகோள்‌. அந்த வேண்டுகோளுக்குள்ளேயே அடங்கிக்‌ கிடந்தது நிபந்தனையும்‌. 'சரி' என்று ஏற்றுக்கொண்டேன்‌. விழாவிற்குச்‌ சென்றேன்‌. "திருநெல்வேலித்‌ தமிழ்‌" என்னும்‌ பொருள்பற்றிப்‌ பேசினேன்‌. காரியதரிசியின்‌ வேண்டுகோளையும்‌ சபையினர்க்கு அறிவித்துவிட்டு மூச்சுக்கு முன்னூறு தடவை கம்பன்‌ கவிகளையே 'கோட்‌' செய்தேன்‌.

திருநெல்வேலித்‌ தமிழுக்குள்‌ ஒளிந்துகொண்டு கம்பனும்‌ சைவசபை விழாவிலே கலந்துகொண்டான்‌. பல காலங்களில்‌ தமிழ்‌ வளர்ச்சியைப்‌ பற்றிக்‌ குறிப்பிடும்போது, மடத்தார்‌ வளர்த்த தமிழையும்‌ பற்றிக்‌ குறிப்பிட்டேன்‌. பேச்சு முடிந்து வீட்டிற்கு வந்ததும்‌ "விறுவிறு' என்று ஒரு கடிதம்‌ எழுதினேன்‌ டி.கே.சி.க்கு. விவரங்‌களையெல்லாம்‌ விவரமாகவே தெரியப்படுத்தி. கடிதம்‌ சென்னை சென்றது. அது டி.கே.சி.யின்‌ பழைய சிந்தனைகளைத்‌ தூண்டியது. அந்தத்‌ தூண்டுதலின்‌ பலன்‌ அவரால்‌ அந்த நினைவுகள் பற்றி ரஸமாக ஒரு குறிப்பு எழுதியனுப்ப முடிந்தது.

"....... சைவ சித்தாந்த சபையில்‌ தாங்‌கள்‌ கலந்துகொண்டது ரொம்பவும்‌ சந்தோஷமான செய்தி. நாலைந்து வருஷங்களுக்கு முன்‌ தலைமை வகித்த முறையில்‌ நானும்‌ கலந்து கொண்டேன்‌. அப்போது 'நான்‌ சைவத்துக்குப்‌ புறம்பல்ல, கம்பராமாயணம்‌ படித்த குற்றம்‌ உண்டானாலும்‌, சைவத்தைவிட்டு வேறொரு சமயத்துக்குப்‌ போனவன்‌ அல்ல' என்று ரொம்பத்‌ தடபுடலாய்‌ விளம்பரப்‌ படுத்திக்கொண்டேன்‌. இந்த நையாண்டிக்கெல்லாம்‌, அங்குள்ள சைவ நன்‌மக்கள்‌ சிரித்து விடுகிறவர்களா? அல்ல. 'சரி' என்று ஒப்புக்கொண்டு சந்தோஷப்‌ பட்டார்கள்‌. யாரோ ஒருவர்‌, இருவர்‌ உள்ளுக்‌குள்ளேயே சிரித்துக்‌ கொண்டார்கள்‌

தாங்கள்‌ இவ்வருஷம்‌ போட்டதே ஜப்பான்‌ வெடிகுண்டு. ரொம்ப ரொம்ப சமாஜத்தைக்‌ குலுக்கியிருக்கும்‌. தலைவராவது கம்ப துவேஷியா யில்லாமற்போனது கொண்டாடத்தகுந்த விஷயம்‌. திருநெல்வேலித்‌ தமிழ்‌ பயப்படவேண்‌டிய காரியந்தான்‌ என்று எண்ணுவதற்குத்‌ தாங்கள்‌ மடத்தார்‌ வளர்‌த்த தமிழைக்‌ குறிப்பிட்‌டதும்‌ ஒருவகையில்‌ பொருத்தம்தான்‌. இருபது வருஷங்களுக்கு முன்‌ 'திராவிட மகாபாஷ்யம்' என்று ஒரு பொக்கிஷம்‌ திருவாவடுதுறை மடத்தார்‌ ஒளித்துவைத்துக்‌ கொண்டிருக்கிறார்‌கள்‌. 'ஏண்டா? மடத்தார்‌ இப்படி வைக்கோல்‌ படப்பு வைரவனாய்‌ இருக்கிறார்கள், அப்படி அருமையான நூலை வெளியிட்டால்‌ அவர்களுக்கு என்ன குறைந்துபோய்விடும்‌!' என்றெல்லாம் சைவ பக்தர்கள்‌ புகார்‌ சொல்லிக்கொண்டிருந்தார்கள்‌. கடைசியாக வந்ததையா திராவிட மகாபாஷ்யம்‌. சைவப்புலவர்கள்‌ கிடைத்ததடா வேட்டை என்று அதை வாசிக்க ஆரம்பித்‌தார்கள்‌. 'தமிழ்‌ வசனத்துக்கு எடுத்துக்காட்டு', 'உரைகல்' என்று பலவாறாகவும்‌ புகழவும்‌ ஆரம்‌பித்து விட்டார்கள்‌. அவ்வளவுதான்‌. திருநெல்‌வேலித்‌ தமிழ்‌ எழுத்தாளர்கள்‌ எல்லாரும்‌ சேர்ந்து 'பேபல்‌' கோபுரமே கட்ட ஆரம்பித்து விட்டார்கள்‌. ஆகையால்‌ தாங்கள்‌சொன்னது உண்மையே. பூசி மெழுகுகிறதற்கும்‌ பொய்‌ சொல்லிக்‌ கொண்டிருப்பதற்கும்‌ காலாவதியாகி விட்டது. இனிமேல்‌ வெட்டொன்று துண்‌டிரண்டு என்று விஷயம்‌ விழவேணும்‌. தாங்கள்‌ பேசியது ரொம்பவும்‌ சரி.

"கொஞ்சம்‌ இந்த முறையிலேதானே கல்கியின்‌ கதைக்கொத்து முகவுரையில்‌ எழுதிவிட்‌டேன்‌. அரும்பத அகராதிக்குள்‌ ஊசி போய்க்‌ குத்தத்தான்‌ செய்யும்‌. என்ன ஆகிறது என்று தான்‌ பார்ப்போமே. தாங்கள்‌ எழுதிய கடிதத்தை ரொம்பவும்‌ அனுபவித்தேன்‌."

இப்படியெல்லாம்‌ இன்னும்‌ எத்தனை எத்தனையோ நினைவுகளை அவர்‌ கடிதமூலமாக நண்பர்களுக்கு எழுதி வைத்திருக்கிறார்‌. இதையெல்லாம்‌ தொகுத்தாலே ஒரு நல்ல அழகான சுயசரிதம்‌ ஆகிவிடும்‌.
தொகுப்பு: அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline