|
| கண்டேன் சீதையை |
   |
- தென்றல் | ஜனவரி 2026 |![]() |
|
|
|
|
 |
சீதையைத் தேடத் தென்திசைக்கு அனுமானை அனுப்பினான் ராமன். சிலகாலம் சென்றபின் மற்ற திசைகளுக்குச் சென்றவர்களெல்லாம் திரும்பிவந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிட்டார்கள். தென்திசைக்குப் போன அனுமான் மட்டும் இன்னும் வரவில்லை. அந்த அனுமானும் திரும்பி வந்து சீதையைக் காணவில்லை என்று சொல்லிவிடுவானோ என்று ராமன் கலங்கிக்கொண்டிருந்தான். வந்தான் அனுமான். வந்தவன் ராமனுடைய திருவடிகளை வணங்காமல் சீதாதேவி இருந்த தென்திசையை நோக்கித் தலையில் தன் கைகளைக் கூப்பி வைத்துக்கொண்டு தொழுது, தரையில் படுத்து வணங்கி அவளை நெடுநேரம் வாழ்த்தினான். புலன்களை வென்றவனாகிய அனுமான் வழக்கம்போல் தன்னை வணங்காமல் தென்திசையை வணங்கி வாழ்த்திய செய்கையைப் பார்த்துக் குறிப்பினாலேயே எதையும் அறிந்துகொள்ளும் கொள்கையுள்ளவனாகிய ராமன் 'சீதை நலமாக இருக்கிறாள். அனுமான் அவளைக் கண்டுதான் வந்திருக்கிறான். அவளுடைய கற்புக்கும் குறைவில்லை' என்று நிச்சயித்தான்.
"கற்புக்கரசியை என் கண்ணாரக் கண்டேன், அலைகடல் சூழ்ந்த இலங்கை என்னும் தென்நகரில். ஆகையால், தேவதேவா! இனிமேல் ஐயத்தையும் இதுவரை அடைந்திருந்த கவலையையும் விட்டொழியுங்கள்" என்று அனுமான் மேலும் சொல்லுவான்:
"தேவா! உன்னுடைய மனைவி என்று நீ சொல்லிக்கொள்வதற்கும், உன் தந்தையாகிய தசரத மன்னனுக்கு மருமகள் என்பதற்கும், மிதிலை மன்னனாகிய ஜனகன் என்னுடைய மகள் சீதை என்று பெருமையடைவதற்கும், தகுதிக்குமேல் தகுதியுடைய மிக உயர்ந்த சான்றாண்மை உள்ளவள். எனக்கோ சீதைதான் ஒப்பரிய தெய்வம். இன்னமும் கேள். பொன்னுக்குச் சமானம் பொன்தான். பொறுமையிலே சீதைக்கு நிகர் சீதைதான். அப்படிப்பட்ட உத்தமியை மனைவியாக அடைந்த உனக்கு நிகர் நீதான். அவளைத் தெய்வமாகப் பெற்றுவிட்ட எனக்கு நிகர் எவருமே இல்லை. மேலும் உன்னுடைய பரம்பரையின் பெருமை கெடாதபடி உனக்குப் பெருமை உண்டாக்கி, தான் பிறந்த ஜனகன் குலத்துக்கும் புகழுண்டாக்கி, தன்னைச் சிறைப்படுத்திய கொடியவர் குலத்தை அழிக்கக்கூடிய அறத்தைக் காத்து, அக் கொடியோர்களால் இதுவரை துன்பமுற்ற தேவர்களுக்கு இனி நல்வாழ்வைத் தந்து, என்னுடைய குலப் பெருமையையும் எனக்குத் தந்தாள். இதைக்காட்டிலும் அவள் செய்யவேண்டியது என்ன இருக்கிறது?'' இத்தனையும் சொல்லிவிட்டு அனுமான் திடீரென்று ஒரு வெடிகுண்டை வீசுகின்றான். அது என்ன? "ஸ்ரீராமா! உன்னைப் பிரிந்துவிட்டதால் உனக்காகத் தவம் செய்து கொண்டிருக்கிற ஒரு பெண்ணைப் பார்த்தேன் என்றா எண்ணுகிறாய்? இல்லையில்லை. நான் பெண் யாரையும் பார்க்கவில்லை" என்றான் அனுமான்.
அதைக் கேட்டு ராமன் "ஐயோ! ஒரு பெண்ணைப் பார்க்கவில்லையா? அப்படியானால் சீதையைக் காணவில்லையா?'' என்று திடுக்கிட்டுத் திகைப்பது போன்ற நிலைமை உண்டாகி, "சீதை என்ற பெண்ணைப் பார்க்கவில்லையானால் பின் யாரைக் கண்டதாகச் சொன்னாய்?" என்று ராமன் கவலையிலாழ்கின்றான்.
அனுமான் சொல்லுகிறான்: விற்பெரும் தடந்தோள் வீர! வீங்கு நீர் இலங்கை வெற்பின் நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பு எனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்
"ராமா! வில்லேந்திய விசாலமான தோள்களையுடைய பரந்த கடல் சூழ்ந்த இலங்கையின் மலையில் உனக்காகத் தவம் செய்துகொண்டிருக்கும் சீதை என்ற ஒரு பெண் உருவத்தை நான் பார்க்கவில்லை. ஆனால் 'குடிப்பிறப்பு' என்று சொல்லப்படுற ஒன்றும், 'பெரும் பொறுமை' என்ற ஒன்றும், 'கற்பு' என்று கருதப்படுகிற ஒன்றும், ஆகிய இந்த மூன்றும் சேர்ந்து அங்கே ஆனந்தத் தாண்டவம் ஆடுவதைத்தான் கண்டேன்" என்றான் அனுமான். அதைக் கேட்டு ராமனுடைய திகைப்புக் குறைந்தது. போன உயிர் வந்ததுபோலக் களிப்பினால் பூரிக்கலானான். அதன்பிறகு அனுமான் முறையாக தான் அசோக வனத்தில் மரத்தின் மீது மறைந்திருந்து சீதையைக் கண்டதும், அந்த சமயத்தில் ராவணன் அங்கு வந்து காமப் பேச்சுக்களைப் பேசினதும், சீதை கடிந்ததும், பிறகு ராவணன் சென்றதும், சீதை தற்கொலை செய்துகொள்ளத் தீர்மானித்து ஒரு மறைவான இடத்தில் கழுத்துக்குச் சுருக்குப்போட கொடி ஒன்றைக் கழுத்தில் சுற்றினதும் அதைக் கண்டவுடன் மரத்தைவிட்டுக் குதித்து ராமநாமம் சொல்லிக் கணையாழி கொடுத்ததும், அதற்குப் பதிலாகச் சீதை சூடாமணியைத் தந்து விடை கொடுத்ததும் ஆகிய எல்லாவற்றையும் சொல்லி சூடாமணியைத் தருகின்றான் அனுமான்.
இனி நான் கண்ட சீதையைப் பாருங்கள். 1946-ல் இலங்கைக்குச் சென்றிருந்த சமயம் இலங்கையின் மத்ய பாகத்தில் மலைநாட்டில் 'குவின்ஸ்பரி' என்ற இடத்தில் நான் தங்கியிருந்தேன். அப்போது என்னைப் பார்க்க யாரோ வந்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இனிய பார்வையும் கவர்ச்சி மிக்க தோற்றமும் உடைய அந்த கனவான் வந்தார். அவர் பெயர் திரு. ஆறுமுகம் என்றும், இலங்கையிலுள்ள பல நாட்டுப் பகுதிக்கு அவர் நீர்ப்பாசன தலைமை எஞ்சினீயர் என்றும் தெரிய வந்தது. அவர் ஒரு யாழ்ப்பாணத் தமிழர். இலங்கை முழுவதிலும் யாழ்ப்பாணத் தமிழர்கள் மிக உயர்ந்த அரசாங்கப் பதவிகளில் இருக்கிறார்கள்.
எஞ்சினீயர் ஸ்ரீ ஆறுமுகம் அவர்கள் சொன்னார்கள்: "தங்களுடைய 'என் கதை' என்ற நூலையும் 'அவளும் அவனும்' என்ற காவியத்தையும் படித்ததுமுதல் என் மனைவியும் மக்ககளும் தங்களைப் பார்க்க வேண்டுமென்று பலமுறை பேசிக்கொண்டார்கள். தாங்கள் இலங்கைக்கு வந்திருப்பதைச் சஞ்சிகைகளில் படித்த நிமிஷம் முதல் தங்களை அழைத்துவர என்னைப் புறப்படச் சொல்லி அவசரப்படுத்துகிறார்கள். எனக்கும் அதே ஆசைதான். நானும் 'அவளும் அவனும்' என்ற நூலைப் பலமுறைப் படித்துப் பாடம்கூட செய்துவிட்டேன். நான் வசிப்பது பண்டாரவளையில். அங்கே தங்களுக்கு வரவேற்பும், விழாவும் ஏற்பாடு செய்திருக்கிறோம். அந்த விழா இன்னும் நான்கு நாட்களுக்குப் பிறகே நடக்கிறது என்றாலும் இப்போதே தங்களை அழைத்துச் சென்று எங்கள் வீட்டில் விருந்தினராக நாலைந்து நாள் வைத்துக்கொள்ள வேண்டுமென்பது எங்கள் விருப்பம்" என்று கூறினார்.
அடுத்த இரண்டு நாட்களில் வேறு இரண்டு இடங்களில் விழாக்கள் ஏற்பாடாகி இருந்ததால் ஸ்ரீ ஆறுமுகம் அவர்களுடைய விருப்பத்தை உடனே பூர்த்தி செய்ய முடியவில்லை. இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் ஸ்ரீ ஆறுமுகம் தம்முடைய மோட்டார் காருடன் வந்து என்னைப் பண்டாரவளைக்கு அழைத்துச் சென்றார். போகும் வழியில் அவர் அந்த மலைநாட்டில் நான் பார்க்க வேண்டிய பல இடங்களில் வண்டியை நிறுத்தி, அந்தந்த இடங்களைப்பற்றிய வரலாறு, புராண சம்பந்தமான கதைகளைச் சொன்னார். பண்டாரவளைக்குப் போகுமுன்னால் இலங்கையிலுள்ள மலைப்பிரதேசங்களின் சிகரமாகிய நூவாரா எலியா என்னும் ஊரையும் அதிலுள்ள சிறப்புகளையும் காட்டினார். அந்த வழியில் பாதைக்குப் பக்கமாக ஒரு பள்ளத்தில் இருந்த சிறு தடாகத்தைச் சுட்டிக்காட்டி இது 'சீதைத் தடாகம்' என்றார். அந்தத் தடாகத்திலிருந்து ஒரு சிறு ஓடை அந்த மலைச்சாரலில் சலசலத்துக் கீழே ஓடிக்கொண்டிருந்தது. அதை 'சீதை ஓடை' என்றார். மேற்படித் தடாகத்திற்கு எதிரில் பாதைக்கு அப்பால் இருந்த மலையைக் காட்டி அங்கேதான் 'அசோகவனம்' இருந்தது என்றும், அந்தக் குன்றின் ஓரத்திலிருந்த ஒரு குகையைக் காட்டி அதிலேதான் சீதை சிறையிருந்தது என்றும் கூறினார். அதன்பின் மோட்டாரை ஓட்டினார். அதே பாதையில் தடாகத்தை விட்டு சுமார் இரண்டு பர்லாங்கு தூரம் இறங்கி வந்தபின் அங்கே ஒரு சிறு நீர்நிலை இருந்தது. அதுதான் சீதை தினந்தோறும் நீராடின துறை என்றார். அந்த நீர்நிலைக்கு அடுத்தாற்போல் ஒரு சிறு கோயில் இருந்தது. அங்கேதான் சீதை ஒவ்வொரு நாளும் ராமனைப் பூசை செய்தது என்றார். நாங்கள் போனபோது ஐந்தாறு மோட்டார் வண்டிகள் அந்தக் கோயிலின் அருகில் நின்றுகொண்டிருந்தன. அவற்றின் பக்கத்திலும் அக்கோயிலின் உள்ளும் புறமும் பல யாத்ரீகர்கள் இருந்தார். அவர்களில் சிலர் சிங்களவர்களாகவும் இருக்கக்கண்டு நான் வியப்படைந்து, "இந்தக் கோயிலைச் சிங்களவர்களும் வணங்குகின்றார்களா?" என்று கேட்டேன். "ஆம், இதை எல்லா மக்களும் வணங்குகிறார்கள். சில சிங்களவர்கள் இதற்கு மிகவும் பக்தி செலுத்துகிறார்கள். திருவிழாக் காலங்களில் ஏராளமான சிங்களவர்கள் நம்முடன் கலந்துகொள்கிறார்கள். ஏன்? கதிர்வேலன் தலமாகிய கதிர்காமத்தில் சிங்களவர்கள்தானே பூசாரிகள்" என்றார். நான் மிகவும் வியப்படைந்தேன். தமிழ் மக்கள் மிகச் சிறந்த தலமாகக் கருதி, கணக்கில்லாத பக்தர்கள் ஆண்டு தோறும் காட்டுத்தடத்தின் கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் தரிசித்து வருகிற கோயிலான கதிர்காம முருகக் கடவுளுக்குப் பூசாரிகள் சிங்களவர்கள் என்பதை அப்போதுதான் முதல் முதல் அறிந்தேன்.
இனி சீதையைப் பார்ப்போம். அந்த சீதை கோயிலுக்கு அருகில் அங்குமிங்கும் முளைத்திருந்த ஒரு செடியைக் காட்டி அதிலிருந்த, வாசனையிலும், வடிவத்திலும் வசீகரமில்லாத புஷ்பத்தைக் காட்டி "இதுதான் சீதைப்பூ, இந்தப் பூதான் இந்த இடத்தில் கிடைக்கும். இதைக்கொண்டுதான் சீதை ராமனுக்கு அர்ச்சனை செய்தாள். இந்தப் பூ இந்த இடத்தில் தவிர இலங்கையின் வேறு எந்தப் பகுதியிலும் கிடையாது" என்றார் ஸ்ரீ ஆறுமுகம். அங்கே நின்று இவைகளையெல்லாம் கேட்டபிறகு சிறிது நேரம் என்னுடைய புறக்கண் புலனிழந்து மனக்கண் மலர்ந்தது. எதிரே இருந்த குன்றை நினைத்து, அதில் சீதை சிறையிருந்த குகையை நினைத்து, அச்சிறு கோயிலையும் நினைத்து, அதை தரிசிக்க வந்திருந்த பக்தர்களையும் நினைத்தபோது அக்குன்றிலிருந்த குகையைவிட்டு யாரோ ஒரு பெண் இறங்கிவந்து, நீர்நிலையில் குளித்து, பக்கத்திலிருந்த அந்த மணமற்ற மலரைப் பறித்து அந்தச் சிறு குடிசை போன்ற கோயிலில் பூசை செய்வதுபோலப் புலப்பட்டது. ஆம், அங்கே அப்போதுதான் சீதையைக் கண்டேன். எந்த சீதையை? உடலும் உருவமுமான சீதை என்ற பெண்ணையா? அல்ல. பின் எதைக் கண்டேன்?
இற்பிறப்பென்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக் கண்டேன்
அந்த மலையில் குடிப்பிறப்பு, எல்லையற்ற பொறுமை, கற்பு என்ற மூன்றும் கலந்த சூட்சும வடிவமான சீதையைக் கண்டேன். எந்த மலையில் கண்டேன்? கம்பன் சொன்ன அதே மலையில்தான். கம்பன் எந்த மலையைச் சொன்னான்?
விற்பெரும் தடந்தோள் வீர! வீங்குநீர் இலங்கை வெற்பின் நற்பெரும் தவத்தளாய நங்கையைக் கண்டேனல்லேன் இற்பிறப்பு என்பது ஒன்றும் இரும்பொறை என்பது ஒன்றும் கற்பெனும் பெயரது ஒன்றும் களிநடம் புரியக்கண்டேன்.
இந்த மலையில் கம்பன் சொன்ன களிநடம் புரிந்த உருவத்தை நான் என் மனக்கண்ணில் கண்டபிறகுதான் இந்தக் கம்பன் பாட்டிலுள்ள 'இலங்கை வெற்பின்' என்ற தொடருக்கு எனக்குப் பொருள் புரிந்தது. 'வெற்பு' என்றால் 'மலை' என்பது பொருள். 'இலங்கை வெற்பின்' என்றால் 'இலங்கை மலையில்' என்பது பொருள். இதுவரையில் நானும் என்னைப் போலவே எண்ணியிருந்த பலரும் சீதையை இராவணன் இலங்கைக்குக் கொண்டுபோய் அங்கே அசோக வனம் என்ற ஒரு சோலையில் சிறைவைத்தான் என்றும், அந்த சோலை சாதாரணமாக நம் தமிழ்நாட்டில் சமநிலங்களில் பார்க்கிற சோலை போலத்தான் இருக்கும் என்றும் எண்ணியிருந்தோம். கம்பன் பாட்டிலுள்ள 'இலங்கை வெற்பு' என்ற பதங்களுக்கு சிறப்பான பொருள் ஏதும் இருப்பதாகவும் எண்ணியதில்லை. இப்போதுதான் கம்பன் கவிதையின் அற்புதப் பெருமை இன்னும் அதிகமாகத் தெரிகிறது.
கம்பன் இந்த மலையைப் பார்த்துவிட்டுப் பாடினானா? அல்லது கம்பன் பாடின 'இலங்கை வெற்பு' என்பதைப் படித்துவிட்டுத்தான் இந்த மலையில் சீதை இருப்பதாக இலங்கை மக்கள் சொல்லத் தொடங்கினார்களா என்பது புரியாத விந்தை. அது போகட்டும். இந்த ஆள் நடமாட்டமில்லாத பிரதேசத்தில் உள்ள சின்னஞ்சிறு குடிசையிலும் சிறிதான இந்த கோயிலைத் தரிசிக்க கோடிக் கணக்கான மக்கள் வந்து போவதின் மர்மம் என்ன? இந்தக் கோயிலை வணங்கும் தமிழர்களையாவது அவர்கள் தமிழ்நாட்டிலிருந்து குடியேறினவர்கள்; அவர்கள் கம்பராமாயணத்தைப் படித்தோ கேட்டோ இருக்கலாம் என்று கூறலாம். ஆனால், தமிழே இன்னதென்று தெரியாத சிங்களவர்கள் இதற்கு பக்தி செலுத்துவானேன்? அதற்கு ஒரே ஒரு காரணம்தான். எல்லா பக்தர்களும் இந்தக் கோயிலுக்கருகில் 'இற்பிறப்பு' என்பதொன்றும், 'இரும்பொறை' என்பதொன்றும், கற்பெனப்படுவது ஒன்றும் சேர்ந்து களிநடம் புரியக் காண்கிறார்கள். யார் வேண்டுமானாலும் அதை இலங்கைக்குப் போகாமலும் காணலாம். ஆம், இந்த இற்பிறப்பின் தீபத்தை, இரும்பொறையின் ஒளியை, கற்பின் ஜோதியை நான் கண்டேன் என் மனக்கண்களால். |
|
|
நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (நாமக்கல் கவிஞர் எழுதிய ஒரு கட்டுரையிலிருந்து....) |
|
|
|
|
|
|
|
|
|
|