|
தமிழ் அன்பர் மகாநாடு |
   |
- அரவிந்த் | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
 |
(கி.வா. ஜகந்நாதன் எழுதிய 'என் ஆசிரியப்பிரான்' நூலிலிருந்து)
அக்காலத்தில் சென்னை சிண்டிகேட் உறுப்பினராக இருந்த கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் தமிழ் அன்பர்கள் மகாநாடு ஒன்றைக் கூட்டுவதற்கு ஏற்பாடு செய்தார். எந்தக் காரியத்தையும் முறையாகவும், திறமையாகவும் செய்யும் ஆற்றல் பெற்ற அவர் அந்த மகாநாட்டைப் பெரிய அளவில் நடத்த வேண்டுமென்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்திருந்தார். அந்த மாநாட்டுக்குப் பிறகு நிலையாகவே ஒரு தமிழ்ச்சங்கத்தை நிறுவித் தமிழ்ப் பணிகளைச் செய்துவர ஏற்பாடு செய்ய வேண்டுமென்பது அவர் எண்ணம். மகாநாட்டில் வரவேற்புக் குழுவிற்குத் தலைவராக ஆசிரியப் பெருமானையே இருக்கச் செய்தார். தமிழன்பர்களின் மகாநாட்டின் சார்பாக ஒரு புத்தகக் கண்காட்சி நடந்தது. அந்தக் கண்காட்சியை மகாகனம் சீநிவாச சாஸ்திரியார் தலைமையில் இராமநாதபுரம் சேதுபதி மன்னர் ஸ்ரீசண்முக இராஜேசுவர சேதுபதி திறந்து வைத்தார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் அந்த விழா நடந்தது. அப்போது பச்சையப்பன் கல்லூரி சென்னை ஜார்ஜ் டவுனில் இருந்தது. அந்த மகாநாடு 1933-ஆம் வருஷம் டிசம்பர் 23-ஆம் தேதி காலையில் ஆரம்பமாகியது. மகாநாட்டுக்கு அப்போது கல்வி மந்திரியாக இருந்த திரு குமாரசுவாமி ரெட்டியார் தலைமை தாங்கினார். வரவேற்புச்சொற்பொழிவை ஆசிரியப் பெருமான் நிகழ்த்தினார்.
முதல்நாள் மகாநாடு நன்றாக நடந்தது. மறுநாள் சுயமரியாதைக்காரர்கள் சிலர் வந்து குழப்பம் விளைவித்தார்கள். இதனால் பலருக்கு வெறுப்பு உண்டாயிற்று. அதனால் தமிழன்பர்கள் மகாநாடு நிறைவேறிய பிறகு தமிழ் ஆராய்ச்சி நிலையம் ஒன்றை அமைக்க, கே.வி. கிருஷ்ணசாமி ஐயர் எண்ணியிருந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டார். பலர் சேர்ந்து செய்கிற நல்ல காரியங்களைக் கூடப் பாராட்டாமல் இப்படித் தடை விளைவிக்கிறார்களே என்று அவர் மனம் வருந்தியது. மிகவும் ஊக்கத்தோடு இருந்த அவருக்கு இனி எதுவும் செய்து பயனில்லை என்ற எண்ணம் உண்டாயிற்று. அதனால் வேறு முயற்சி எதுவும் செய்யவில்லை.
தக்கயாகப் பரணி ஒருநாள் இரவு பன்னிரண்டு மணி இருக்கும். தக்கயாகப் பரணியை ஆராய்ச்சி பண்ணிக்கொண்டிருந்தோம். உரையாசிரியர்
பெயர் இன்னதென்று தெரியவில்லை. அவர் வடமொழி, தென்மொழி ஆகிய இரண்டிலும் நல்ல புலமை உடையவராக இருக்கவேண்டுமென்பது அவரது உரையினால் நன்கு தெரிந்துகொள்ள முடிந்தது. தக்கயாகப் பரணிக்கு வேறு சுவடி எதுவும் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் ஆசிரியப்பெருமானுக்கு இருந்தது.
௮ன்று இரவு ஏதோ ஒரு சுவடியை நான் எடுக்கும்போது அதன் அடியில் தக்கயாகப் பரணியின் மூலம் ஒன்று இருந்தது, ஏதோ புதையல் கிடைத்த மாதிரி ஆசிரியப் பெருமானுக்கு மிக்க மகிழ்ச்சி உண்டாயிற்று, அதற்குப் பிறகு நெடுநேரம் வரைக்கும் அந்தச்சுவடியை அவர் ஆராய்ந்து அதிலுள்ளவற்றையெல்லாம் குறித்துக் கொள்ளச் சொன்னார் .
தக்கயாகப் பரணியின் முதல் பதிப்பு 1930-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வெளியாயிற்று, பல அன்பர்கள் அதைக் கண்டு வியந்தார்கள். ஒரு சிறிய பிரபந்ததத்திற்கு இத்தனை வகையான ஆராய்ச்சி அமைந்ததைக் கண்டு தமிழ்ப் பெரும்புலவர்கள் இது நல்ல பயனுடைய வேலை என்று பாராட்டினார்கள்.
காந்தி தரிசனம் 1937-ஆம் ஆண்டு சென்னையில் பாரதீய சாகித்திய பரிஷத்தின் மகாநாடு நடந்தது. அதற்கு மகாத்மா காந்தி தலைமை வகித்தார். வரவேற்புக் குழுவின் தலைவராக யாரை நியமிப்பது என்ற யோசனை நடத்துபவர்களுக்கு உண்டாயிற்று. ஆசிரியப் பெருமானை அழைத்து அவரையே வரவேற்புரையையும் நிகழ்த்தச் சொன்னால் மகாநாடு சிறப்பாக நடைபெறும் என்று சபையைக் கூட்டியவர்கள் எண்ணினார்கள். இந்தக் கருத்தை நிர்வாகக் குழுவைச் சேர்ந்த ஹரிஹர சர்மா ஆசிரியப்பெருமானிடம் வந்து சொன்னார். “மகாத்மா காந்தி அவர்கள் இம் மகாநாட்டிற்குத் தலைமை தாங்க இருப்பதனால், அவரைத் தரிசனம் செய்யும் வாய்ப்புக் இடைக்கும் என்பதனால் இதனை ஒப்புக் கொள்கிறேன்” என்றார் ஆசிரியப்பிரான்.
அப்படியே அந்தக் கூட்டத்திற்குச் சென்றார். முதலில் மகாத்மா காந்தியைத் தரிசித்து வரவேண்டுமென்ற ஆவல் உண்டாயிற்று. ராஜாஜி ஆசிரியப் பெருமானை அழைத்துச் சென்றார். போகும்போது நானும் உடன் சென்றேன். அப்போது மகாதேவதேசாய் வந்திருந்தார். அவரும் உடன் வந்தார். அவரது வடிவம் மனத்தைக் கவர்வதாக இருந்தது. அவரைச் சுட்டிக் காட்டி ஆசிரியப் பெருமான், “இவர் யார்?” என்று ராஜாஜியிடம் கேட்டார். ராஜாஜி என்னைச் சுட்டிக்காட்டி, “இவர் உங்களுக்கு எப்படியோ, அப்படி மகாத்மா காந்திக்கு அவர்” என்று சொன்னார். அப்போது ஆசிரியப் பெருமானின் முகம் மலர்ந்தது. மகாதேவ தேசாயைத் தரிசித்துக் கொண்டது மாத்திரம் அல்ல; தமக்கு என்னிடத்திலுள்ள பேரன்பை ராஜாஜி அறிந்திருக்கிறாரே என்ற எண்ணந்தான் அந்த மலர்ச்சிக்கு காரணம்.
மகாத்மா காந்தி அவர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு நாங்கள் போனோம். போனவுடன் ஆசிரியப்பெருமானை நோக்கி காந்தி அவர்கள், கையை அமர்த்திக் காட்டி, “உட்காருங்கள் ஐயா” என்று தமிழிலே சொன்னார். ஆசிரியப் பெருமான் காந்தியின் முன் உட்கார்ந்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு மகாசபை கூடும் இடத்திற்கு வந்தார்கள்.
தமிழின் பெருமையும், தமிழர்களின் பெருமையும் ஆசிரியர் சங்க நூல்களில் எவ்வாறு வருணிக்கப் பெற்றுள்ளன என்பதைத் தாம் எழுதிய வரவேற்புரையில் எடுத்துக்காட்டி, மகாத்மா காந்தியை வரவேற்பதில் நாம் எவ்வளவு மகிழ்ச்சி அடைகிறோம் என்பதையும் எடுத்துச் சொல்லிச் சபையில் உள்ளவர்களையும் காந்தியையும் மகிழ்வித்தார். அந்த வரவேற்பை ஹிந்தியிலும் மொழிபெயர்த்து வாசித்தார்கள். அதை மொழி பெயர்த்தவர் என் நண்பர் திரு கா.ஸ்ரீ.ஸ்ரீ. அவர்கள்.
அந்த வரவேற்பைக் கேட்டு மகிழ்ந்த காந்தியடிகள், “தமிழின் வடிவமாகவே இருக்கும் இவர்கள் திருவடியில் இருந்து தமிழ் பயில வேண்டுமென்ற ஆசை எனக்கு உண்டாகிறது. பல வேலைகளை உடைய எனக்கு அந்தச் சந்தர்ப்பம் எப்போது கிடைக்கப் போகிறது?” என்று சொன்னார். மகாத்மா காந்தியாகிய தெய்வமும், தமிழ்த்தெய்வமும் சந்தித்த இந்தச் சந்திப்பு என் மனத்தை விட்டு என்றும் அகலாது. இருவரும் சத்திய சோதனை செய்தவர்கள். காந்தியடிகள் தம் வாழ்க்கையில் சத்திய சோதனை செய்தார். ஆசிரியப் பெருமான் தமிழ் நூல்களிற் சத்திய சோதனை செய்தவர். ஆசிரியப் பெருமானின் பேச்சை ஹிந்தியில் கேட்டுத் தமிழ்மொழி இலக்கியச் சுவை மிகுந்தது என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள். பெருங்கூட்டமாக வந்திருந்த காகா காலேல்காரும் பிறரும் தமிழின் பெருமையை உணர்ந்து மகிழ்ந்தனர். |
|
தொகுப்பு: அரவிந்த் |
|
|
|
|
|
|
|