Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில் | வாசகர் கடிதம்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள்
Tamil Unicode / English Search
மேலோர் வாழ்வில்
சுவாமி சிவானந்த சரஸ்வதி (பாகம்-1)
- பா.சு. ரமணன்|மே 2026|
Share:
தோற்றம்
மகான்களின் அவதாரம் பக்தர்களின் இடைவிடாத பிரார்த்தனையாலும் இறைவன் மீதான அளவற்ற அன்பாலும் நிகழ்கிறது. அவ்வாறு பாரதபூமியில் அவதரித்த மகான்களுள் ஒருவர் சுவாமி சிவானந்த சரஸ்வதி. இவர், செப்டம்பர் 08, 1887 அன்று திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடையில் அப்பய்ய தீக்ஷிதர் பரம்பரையில், வெங்கு ஐயர் - பார்வதி அம்மாள் தம்பதியினருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். இயற்பெயர் குப்புசுவாமி. ஆன்மிகத்தில் ஊறித் திளைத்த குடும்பம். பூஜை, வேத வழிபாடு, பாராயணம் என பக்தி மற்றும் ஆன்மிகச் சூழலில் குப்புசுவாமியின் குழந்தைப் பருவம் அமிழ்ந்திருந்தது.

தந்தையின் பூஜைக்கு உதவுவதும், வழிபாட்டுப் பணிகளில் உதவியாக இருப்பதும் குழந்தையின் வழக்கமானது. சிவ வழிபாட்டிற்காகத் தோட்டத்திற்குச் சென்று பூக்களையும் வில்வ இலைகளையும் பறித்து வருவான் குப்புசுவாமி. தந்தை பூஜை செய்வதை உற்றுக் கவனிப்பான். அவர் வேத பாராயணம் செய்யும்போது தானும் கூடவே மந்திரம் சொல்வான். பூஜையில் தாய் பக்திப் பாடல்களைப் பாடும்போது இவனும் கூடவே பாடுவான்.

பள்ளி வாழ்க்கை
வெங்கு ஐயர் எட்டையபுரம் சமஸ்தானத்தில் வருமான வரி அதிகாரியாகப் பணியாற்றினார். பணி நிமித்தம் குடும்பத்துடன் எட்டையபுரத்திற்குச் சென்று வசித்தார். அங்குள்ள ராஜா உயர்நிலைப் பள்ளியில் குப்புசுவாமி பயின்றான். குழந்தைப் பருவம் முதலே மிகுந்த இரக்கமும், அன்பும், கருணையும் கொண்டவனாக வளர்ந்தான். தன்னிடம் இருக்கும் உணவு, தின்பண்டம் போன்றவற்றை நண்பர்களுக்குப் பகிர்ந்து கொடுக்கும் குணம் அவனுக்கு இருந்தது. மனிதர்கள்தான் என்றில்லை பறவைகளுக்கும், மிருகங்களுக்கும் கூட அளிக்கும் குணம் அவனிடம் இருந்தது. சாதுக்கள், யாசகர்களைக் கண்டால் மன்மிரங்கி, அவர்களை வீட்டிற்கு அழைத்து வந்து, அம்மாவிடம் அவர்களுக்கு உணவளிக்குமாறு வேண்டிக் கொள்வான்.

உடல் நலத்திலும் மிகுந்த அக்கறை கொண்டிருந்தான். பாரதியின் மாமாவான சாம்பசிவ ஐயரிடம் உடற்கல்வி பயின்றான். கல்வியைப் போல விளையாட்டிலும் முதலாவதாகத் திகழ்ந்தான். சிறுவயதிலேயே ஆன்மிக வேட்கையும், தயவும், அன்பும் கொண்டவனாகக் குப்புசுவாமி இருந்தான்.

இளமைப் பருவம்
குப்புசுவாமி, பள்ளிக்கல்விக்குப் பின் திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் இடைநிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரியில் பயின்றார். பாடப் புத்தகங்களை மட்டுமல்லாமல், அனைத்து வகை மருத்துவப் புத்தகங்களையும் படித்தார். இரண்டாம் ஆண்டிலேயே அவர் ஐந்தாம் ஆண்டு மருத்துவக் கல்லூரி மாணவர் பெற்றிருக்கும் திறமையையும், அறிவையும் பெற்றிருந்தார். அதனால் பேராசிரியர்களின் நன்மதிப்பைப் பெற்றார். அறுவை சிகிச்சை அரங்கம் மற்றும் உடற்கூறு ஆய்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டார். பேராசிரியர்களின் மனம் கவர்ந்த மாணவராக இருந்தார். பேராசிரியர்களுக்கு மருத்துவ சிகிச்சையின் போது உதவியாளராகப் பணியாற்றினார். அதனால் மருத்துவம், சிகிச்சை குறித்த நுணுக்கமான அனுபவங்கள் கைவரப் பெற்றார்.

குப்புசுவாமி மருத்துவக் கல்வி பயின்ற காலத்தில் திடீரெனத் தந்தையை இழந்தார். தாயும் நோய்வாய்ப்பட்டார். அதனால் பல்வேறு சிக்கல்களை குப்புசுவாமி எதிர்கொள்ள நேர்ந்தது. எல்லாவற்றையும் மன உறுதியுடன் எதிர்கொண்டு பட்டப்படிப்பை நிறைவு செய்தார்.

இதழ்
தனது மருத்துவ அறிவைப் பிறருடன் பகிர்ந்துகொள்ளும் எண்ணத்திலும், மக்கள் சேவைக்காகவும் 'அம்ப்ரோசியா' என்ற மருத்துவ இதழைத் தொடங்கினார். அந்த இதழின் நிர்வாகியாகவும், ஆசிரியராகவும் பணியாற்றினார். இதழ், 1909ல் 32 பக்கங்கள் கொண்ட மாத இதழாக வெளிவந்தது. 'அம்ப்ரோசியா' என்றால் 'அமிர்தம்'. நோயுற்றவர்களுக்கு குணமளிக்கும் நல்ல பல கருத்துக்களைக் கொண்ட அமிர்தமாக அந்த இதழ் இருந்தது. அவ்விதழில் இயற்பெயரிலும், பல்வேறு புனை பெயர்களிலும் குப்புசுவாமி பல கட்டுரைகளை எழுதினார். நண்பர்கள், மருத்துவர்கள், பேராசிரியர்கள் பலரை அவ்விதழில் எழுதச் செய்தார். புகழ்பெற்ற பல மருத்துவர்களிடமிருந்து கட்டுரைகளை வாங்கி அவ்விதழில் வெளியிட்டார். ஆங்கில இதழானாலும், தமிழிலும் அவ்விதழில் பல கட்டுரைகள் வெளியாகின. ஆயுர்வேதம், சித்தமருத்துவத் துறைகள் சார்ந்த கருத்துக்களுக்கும் அவ்விதழ் இடமளித்தது.

தனது பத்திரிகை வாயிலாக, குப்புசுவாமி தனிநபர் சுகாதாரம் மற்றும் பொது சுகாதாரம் தொடர்பான விஷயங்களில் மக்களின் அறியாமையைப் போக்க முயன்றார். உடல்நல மேம்பாடு மற்றும் நோய்த் தடுப்புக்கு முக்கியத்துவம் அளித்தார். உடல்நலம், சுகாதாரம் மற்றும் உணவுமுறைக்குச் சிறப்பு கவனமளித்து பல கட்டுரைகளை எழுதினார். மக்களுக்குப் பயன்தரும் வழிகாட்டி இதழாக 'அம்ப்ரோசியா' செயல்பட்டது. உதவியாளர், பணியாளர் என்று யார் உதவியும் இல்லாமல் தானே அனைத்துப் பொறுப்புக்களையும் ஏற்று அவ்விதழை வெளியிட்டார் குப்புசுவாமி. நான்கு ஆண்டுகள் வெளிவந்த அவ்விதழ் பின் பொருளதாரச் சிக்கலால் நின்றுபோனது. குப்புசுவாமி பணி வாய்ப்புத் தேடி சென்னை சென்றார்.



மலேசியப் பயணம்
சென்னையில் வசித்தபோது நண்பர் ஒருவர் மூலம் மலேசியாவில் வேலைவாய்ப்பு இருப்பதாகக் கேள்வியுற்றார். மலேசிய ரப்பர் தோட்டங்களில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கான இந்தியத் தொழிலாளர்கள், போதிய மருத்துவ கவனிப்பின்றி மிகவும் மோசமான நிலையில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்குச் சிகிச்சை செய்யவும், வழிகாட்டவும் இந்திய மருத்துவர் ஒருவர் தேவைப்பட்டார். அந்த வாய்ப்பைக் குப்புசுவாமி ஏற்றுக் கொண்டார்.

கப்பலில் மலேசியா சென்றடைந்த டாக்டர் குப்புசுவாமி, மருத்துவ நண்பர் ஐயங்காரைச் சந்தித்தார். அவர் தனது நண்பர் டாக்டர் ஹெரால்ட் பாரிஸினைச் சந்திக்கும்படிக் கூறி அறிமுகக் கடிதம் கொடுத்தார். ஆனால், அந்த முகவரியில் டாக்டர் இல்லை. என்ன செய்வதென அறியாத குப்புசுவாமி, அங்குள்ள கோயில் ஒன்றுக்குச் சென்றார். பசியில் மயங்கி விழுந்தார். ஆலய அர்ச்சகர் உணவு கொடுத்துப் பரமாரிர்த்தார். பின் டாக்டரின் முகவரியைத் தேடிக் கண்டுபிடித்தார். அவர்மூலம், டாக்டர் ராபின்ஸனைச் சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

மலேசியாவில்
டாக்டர் ராபின்ஸன் சொந்த மருத்துவமனை வைத்திருந்தார். அவர் குப்புசுவாமியிடம், "உங்களால் தனியாக ஒரு மருத்துவமனையை நிர்வகிக்க முடியுமா?" என்று கேட்டார். அதற்கு குப்புசுவாமி, "ஆம், என்னால் மூன்று மருத்துவமனைகளைக் கூட நிர்வகிக்க முடியும்" என்று பதிலளித்தார். உடனடியாக செனாவாங் தோட்ட மருத்துவமனையில் குப்புசுவாமி மருத்துவராக நியமிக்கப்பட்டார்.

அங்கு டாக்டர் குப்புசுவாமி நோயாளிகளைச் சந்தித்தல், மருந்து வழங்குதல், கணக்குகளைப் பராமரித்தல், உள்நோயாளிகளைக் கவனித்தல் போன்ற பணிகளை அர்ப்பணிப்போடு செய்தார். அவரது கனிவான பேச்சு, நடத்தை, கண்ணியம் ஆகியவை நோயாளிகளைக் கவர்ந்தன. டாக்டர் ராபின்ஸனும் குப்புசுவாமியின் பணிகளால் ஈர்க்கப்பட்டார்.

டாக்டர் குப்புசாமி, தனது சேவை மிகவும் தேவைப்பட்ட ஏழைகளைத் தேடிச் சென்றார். மற்ற மருத்துவர்கள் வெறும் ஆலோசனைக்குக் கூடக் கட்டணம் வசூலித்தனர். ஆனால் குப்புசுவாமி கட்டணம் வாங்காமல் மருத்துவம் பார்த்தார். நோயாளிகள் மருத்துவமனையிலிருந்து வெளியேறும்போது ஏற்படும் உடனடிச் செலவுகளைச் சமாளிக்கத் தனது கைப்பணத்திலிருந்து அளித்து உதவினார். அவர்களைக் கருணையுடன் அணுகினார். டாக்டர் குப்புசாமி நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்கும்போது எப்போதும் பிரார்த்தனை செய்வார். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மருத்துவமனையில் ஒரு பிரார்த்தனைக் கூட்டத்தை நடத்தினார், முடிவில் அவர் பிரசாதம் விநியோகிப்பதை வழக்கமாக வைத்திருந்தார். பின்னர் வார்டுகளுக்குச் சென்று, பிரார்த்தனையில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு நோய்வாய்ப் பட்டிருந்தவர்களின் படுக்கையருகே நின்று, அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வார். தன் கையால் சிறிதளவு பிரசாதத்தை அவர்கள் வாயில் ஊட்டுவார். இதனால் மக்களிடையே நன்மதிப்பைப் பெற்றார்.

ஆன்மிகத் தேடல்
குப்புசுவாமி மருத்துவப் பணியில் கர்மயோகி போல் அர்ப்பணிப்புடன் உழைத்தாலும், நோய், வறுமை, மரணம் போன்றவை அவரை வெகுவாகப் பாதித்தன. வாழ்க்கையின் நிலையாமையை உணர்ந்துகொண்டார். ஆன்மிகத் தேடல் நாளுக்கு நாள் அதிகரித்தது.

ஒருசமயம், துறவி ஒருவருக்குக் குப்புசுவாமி சிகிச்சை அளிக்க வேண்டி வந்தது. குப்புசுவாமியின் அன்பான உபசரிப்பால் மனம் மகிழ்ந்த துறவி, குப்புசுவாமிக்கு தன்னிடமிருந்த மதிப்புமிக்க ஆன்மிகப் புத்தகங்கள் சிலவற்றை அன்பளிப்பாகத் தந்தார். அவற்றுள் ஒன்று, கடப்பா சச்சிதானந்த சுவாமிகள் எழுதிய 'ஜீவ-பிரம்ம ஐக்கிய வேதாந்த ரகசியம்'. அந்த நூல் குப்புசுவாமியின் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்படக் காரணமாக அமைந்தது.

(தொடரும்)
பா.சு. ரமணன்
Share: 




© Copyright 2020 Tamilonline