இந்தியாவில் மார்கரெட் 1898ம் வருடம் ஜனவரி மாதம் மார்கரெட்டைச் சுமந்து வந்த கப்பல் கல்கத்தா துறைமுகத்தை அடைந்தது. சுவாமி விவேகானந்தரே துறைமுகத்திற்குச் சென்று அவளை வரவேற்றார். மார்கரெட், விவேகனந்தர் மற்றும் சீடர் குழுவினருடன் தன் வருகை, நோக்கம், லட்சியம் பற்றி உரையாடினாள்.
சுவாமி விவேகானந்தரிடம் தீட்சை அளிக்குமாறும், தானும் சகோதர சீடர்களுடன் சேர்ந்து சேவை செய்ய முழுமனதுடன் சம்மதிப்பதாகவும் மார்கரெட் தெரிவித்தாள். சுவாமிகளுக்கு அதில் ஒரு சிறு தயக்கம் இருந்தது. காரணம், மார்கரெட்டின் வருகைபற்றி அன்னை சாரதா தேவி என்ன சொல்வாரோ என்பதுதான். எனவே. மார்கரெட், ஸ்ரீ சாரதா தேவியை முதலில் சந்திப்பது அவசியம் எனக் கருதினார். ஒரு சுபநாளில் மார்கரெட்டை, அன்னை சாரதா தேவியிடம் அழைத்துச் சென்றார். ஆனால் அன்னை, மார்கரெட்டை ஏற்பாரா, மாட்டாரா என்று உள்ளூறத் தயக்கமாகத்தான் இருந்தது.
அன்னை சாரதாதேவியுடன் மார்கரெட் அன்னை சாரதா தேவியைக் கண்டாள் மார்கரெட். அவரது தூய தோற்றமும், ஞானப் பொலிவும் மார்கரெட்டிற்கு மிகுந்த தயக்கத்தை ஏற்படுத்தின. தயங்கியபடியே அன்னையின் குடிலுக்கு வெளியில் நின்று கொண்டிருந்தாள். அதைக் கண்ட சாரதாதேவி, அன்பு பொங்கும் குரலில் "மகளே அருகே வா!" என்று அழைத்தார். அருகே சென்றாள் மார்கரெட். அவளைத் தன்னருகில் அமரவைத்து, அன்புடன் தலையைத் தடவிக் கொடுத்தார் அன்னை. தனக்குள் ஏதோ ஆற்றல் இறங்குவதையும், ஒருவிதமான பரவச உணர்வு ஊடுருவதையும் மார்கரெட் உணர்ந்தாள். அன்னை வங்க மொழியில் கேட்ட கேள்விகளைப் புரிந்துகொண்டு, ஆங்கிலத்தில் அதற்குப் பணிவுடன் விடை அளித்தாள். அது கண்ட விவேகானந்தர் மகிழ்ச்சி அடைந்தார். சாரதாதேவியின் ஆசி கிடைத்ததன் மூலம், சிஷ்யையாகும் தகுதியை மார்கரெட் பெற்று விட்டாள் என்பதை உணர்ந்து மகிழ்ந்தார்.
பணிகள் மார்ச் 11, 1898-ல், ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்து கல்கத்தா மக்களுக்கு மார்கரெட்டை அறிமுகப்படுத்தினார். அவளது வருகையின் நோக்கத்தை, சேவை மனப்பான்மையை மக்களுக்குத் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து சக சீடர்களோடு இணைந்து பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட ஆரம்பித்தாள் மார்கரெட். ஓர் வெளிநாட்டுப்பெண் என்பதை முற்றிலும் மறந்து, இந்தியப் பெண்ணாகவே வாழ்க்கை நடத்த ஆரம்பித்தாள். ஏழை எளியவர் என அனைவரிடமும் அன்பைப் பொழிந்தாள். விவேகானந்தரும் அவளுக்கு கீதை, வேதாந்தம், சமயம், தத்துவம் போன்றவற்றைப் பயிற்றுவித்தார்.
தீக்ஷை 1898ம் ஆண்டு மார்ச் 29ம் நாள் மார்கரெட் நோபிளுக்கு, பல்வேறு சடங்குகள் செய்யப்பட்டு இந்திய சாஸ்திர முறைப்படி தீக்ஷை வழங்கப்பட்டது. 'இறைவனுக்கு நிவேதனமாகப் படைக்கப்பட்டவள்' என்னும் பொருள்படும் படியாக சுவாமி விவேகானந்தர் 'நிவேதிதா' என்ற பெயரைச் சூட்டினார். அன்றுமுதல் சீடர்களாலும் மற்றவர்களாலும் 'சிஸ்டர் நிவேதிதா' என்றும் 'சகோதரி நிவேதிதை' என்றும் அன்புடன் மார்கரெட் நோபிள் அழைக்கப்படலானார். இந்து சமயத்தில் தீட்சை பெற்ற முதல் மேற்கத்தியப் பெண்ணாக நிவேதிதா அறியப்படுகிறார்.
விவேகானந்தரின் ஆசி சுவாமி விவேகானந்தர், "தாயின் உள்ளம்; வீரனின் உறுதி; தென்றலின் இனிமை; ஆலயங்களில் ஓயாது திகழ்கின்ற இறையருள், ஆற்றல் - ஆகிய இவை, முன்னாளைய மனிதன் கனவிலும் கண்டிராத, இவை யாவினும் மேம்பட்ட பண்புகள் பலவும் உனக்கு உரியனவாகுக; இந்தியாவின் சக்திக்குத் தலைவியாகவும், திருத்தொண்டு புரிபவளாகவும், தோழியாகவும் நீ இருப்பாயாக" என்று ஆசிர்வதித்தார்.
சமூகசேவை அதன்பின் பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு நிவேதிதா சிறப்புரையாற்றினார். பணிவான பேச்சினாலும், அன்பாலும் மக்களைக் கவர்ந்தார். சீடர்களோடு நட்பு முறையில் பழகினார். நிவேதிதா மிகுந்த அறிவுத் திறமை படைத்திருந்தார். பலரும் அவரது தொண்டு உள்ளத்தினால் ஈர்க்கப்பட்டனர். நிவேதிதா தன்னலமற்ற சேவை புரிந்தார். தியாக வாழ்வு வாழ்ந்தார். அனைத்து வெளிநாட்டுச் சகோதரர்களும் காஷ்மீருக்கும், அமர்நாத்திற்கும் யாத்திரை மேற்கொண்டனர். சுவாமி விவேகானந்தர் அதற்குத் தலைமை தாங்கினார். பல நாட்கள் பயணம் செய்து அவர்கள் அப்பகுதியை அடைந்தனர். பல அனுபவங்களை அந்தப் பயணம் நிவேதிதாவிற்குப் பெற்றுத் தந்தது. பின் கல்கத்தா நகரை அடைந்த நிவேதிதா, அன்னை சாரதா தேவியுடன் வசித்து வரலானார். ஆனால் அந்த வீடு மிகவும் வசதிக் குறைவாக இருந்ததால், விரைவிலேயே அருகாமையிலே இருந்த வேறு வீட்டிற்கு நிவேதிதா குடிபோக நேர்ந்தது. அங்கு சென்று குடிபுகுந்து அவர் தனிமையில் வசித்து வரலானார்.
விவேகானந்தர் சீடர்களுடன் பேலூர் மடத்தில் தங்கி இருந்தார். வாரம் ஒருமுறை சென்று அவரைச் சந்திப்பார் நிவேதிதா. தாம் செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிப்பார். திட்ட முன்வரைவைத் தயாரிப்பார். பின் வேதாந்த, ஞான நூல்கள், தர்க்க சாஸ்திரம் பற்றி விவேகானந்தரிடமிருந்து கற்றுக் கொள்வார். தான் அறிந்த விஞ்ஞான, பௌதிக நூல்கள் பற்றி மற்ற இளந்துறவிகளுக்கும் சீடர்களுக்கும் பாடம் நடத்துவார். மடத்திற்குத் தேவையான பல பணிகளைச் செய்வார்.

பிளேக் நோய் அக்காலகட்டத்தில் கல்கத்தாவில் மீண்டும் மிகக் கொடுமையான பிளேக் நோய் பரவியது. மக்கள் நிறைய மடிந்தனர். பலர் இருப்பிடம் விட்டு வேறு பகுதிக்குச் செல்ல நேர்ந்தது. இந்த நோய் நீங்கவும், பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரணம் பெறவும், சக சீடர்களும் நிவேதிதாவும் மிகக் கடுமையாக உழைத்தனர். சீடர் குழுவினருக்கு நிவேதிதாவே தலைமையேற்று வழி நடத்தினார். அதிகாலையில் எழுந்து, நள்ளிரவுவரை, ஓயாமல் முறையில் சேவை செய்து அனைவரது பாராட்டையும் பெற்றார். அது கண்டு விவேகானந்தர் மிக்க மகிழ்வுற்றார். "சக்திகள் அனைத்தும் உன்னிடம் வந்து சேரட்டும்! ஜகன்மாதாவே உனது கைகளும் மனதும் ஆகட்டும்! உனக்காக நான் வேண்டுவது அளப்பரிய, யாராலும், எதனாலும் எதிர்க்க இயலாத பேராற்றல்; அத்துடன் பேரமைதி. என்னை வழி நடத்தியதுபோல குருதேவர் ஸ்ரீ ராமகிருஷ்ணர் உன்னையும் வழி நடத்தட்டும். இல்லை... ஆயிரம் முறை அதனினும் மேலாக அருள் புரியட்டும்!" என்று ஆசி கூறினார் விவேகானந்தர்.
அந்த ஆசியின் விளைவால் நிவேதிதா முன்னிலும் உறுதியுடனும் வேகத்துடனும் பல சேவைப்பணிகளை மேற்கொண்டார்.
பள்ளி பெண்கள் கல்வியில் மேம்பட வேண்டும் என்பதற்காக கல்கத்தாவில் பள்ளி ஒன்றை நிறுவினார் நிவேதிதா. நவம்பர் 13, 1898-ல், காளி பூஜைக்கான நன்னாளில் அப்பள்ளியை அன்னை ஸ்ரீ சாரதாதேவி தொடங்கி வைத்தார். காஷ்மீர் மன்னர் கொடுத்த மூலதனத்தில் அந்தப் பள்ளி ஆரம்பிக்கப்பட்டது. அப்பள்ளியை நிவேதிதா தலைமைப் பொறுப்பேற்று நடத்தினார். சாரதா தேவியும் அவ்வப்பொழுது சென்று குழந்தைகளுக்குத் தின்பண்டம் முதலியன கொடுத்து உற்சாகப்படுத்தினார். இப்பள்ளியில் சிறுமிகளுக்கு எழுதப் படிக்கச் சொல்லித் தந்ததுடன், ஓவியம், மண்பொம்மை செய்தல், துணி தைத்தல் முதலானவற்றையும் கற்பித்தார். மாணவிகள் பாடங்களையும் நுண்கலை உள்ளிட்ட பிறவற்றையும் கற்க சகோதரி கிறிஸ்டைன் உதவியாக இருந்தார். இங்கிலாந்து மற்றும் அமெரிக்க நண்பர்கள் பலர் பள்ளியின் வளர்ச்சிக்கு உதவினர். 'வந்தே மாதரம்' பாடலைப் பாடுவது அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில், அப்பாடலைத் தனது பள்ளியின் பிரார்த்தனைப் பாடலாக வைத்து, தினந்தோறும் மாணவர்களைப் பாடச் செய்தார். நூறாண்டுகள் கடந்து இன்றும் அப்பள்ளி, 'ராமகிருஷ்ணா சாரதா மிஷன் சகோதரி நிவேதிதா பெண்கள் பள்ளி' என்ற பெயரில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
சேவைப் பணிகள் ரவீந்திரநாத் தாகூர், சுரேந்திரநாத் தாகூர் போன்ற சான்றோர்களைச் சந்தித்து நிவேதிதா உரையாடினார். தேவேந்திர நாத் தாகூரின் ஆசியைப் பெற்றார். ஜகதீஷ் சந்திர போஸைச் சந்தித்தார். அவரது ஆராய்ச்சிக்கு உதவியதுடன் அதற்கு உலக அளவில் அங்கீகாரம் கிடைக்கப் பல முயற்சிகளை மேற்கொண்டார். அது இறுதியில் வெற்றி பெற்றது. வெளிநாட்டு விஞ்ஞானிகள் ஜகதீஷ் சந்திர போஸின் ஆராய்ச்சியை ஏற்றுக் கொண்டனர். அவருக்குப் பிற்காலத்தில் அதனால் 'ஸர்' பட்டம் கிடைத்தது. இதற்கெல்லாம் மூலகாரணமாக சகோதரி நிவேதிதா இருந்தார்.
நிவேதிதா நாடெங்கும் சென்று சொற்பொழிவாற்றினார். சுவாமி விவேகானந்தரின் செய்திகளைப் பரப்பினார். நிவேதிதாவின் சொற்பொழிவுகள் மற்றும் உரைகள் வங்காள இளைஞர்களிடம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின.
சுதந்திரப் போராட்டம் சுவாமி விவேகானந்தரின் மறைவுக்குப் பின், ராமகிருஷ்ண மடத்தின் சார்பில் தீவிரத் தொண்டாற்றி வந்தார். நிவேதிதா. பிபின் சந்திரபால் மற்றும் அரவிந்த கோஷுடன் இணைந்து சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். தன் விடுதலைப் பணிகளால் ராமகிருஷ்ண இயக்கத்துக்கு எதுவும் சிக்கல் வந்துவிடக் கூடாது எனக் கருதி, அவ்வியக்கத்தில் இருந்து வெளியேறினார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வங்கப் பிரிவினையை எதிர்த்துப் போராடினார். பல்வேறு கட்டுரைகளை இதழ்களில் எழுதினார். 'காளி தி மதர்' என்பது 1900-ம் ஆண்டில் வெளியான நிவேதிதாவின் முதல் புத்தகம். தொடர்ந்து விவேகானந்தர் பற்றிய நூல்களையும், சமயம், தத்துவம், ஆன்மிகம் பற்றிய நூல்களையும் எழுதினார். பாட்னா, லக்னோ, காசி, மும்பை, நாக்பூர், சென்னை என்று பல இடங்களுக்கும் சென்று விடுதலை உரையாற்றினார். வங்காளத்தில் சதீஷ் சந்திர முகர்ஜி நிறுவிய 'விடியல் சங்கம்' மற்றும் சதீஷ் சந்திர போஸ் நிறுவிய 'அனுசீலன் சமிதி' முதலான புரட்சி இயக்கங்களுடன் தொடர்பிலிருந்தார். அரவிந்தர் பிரிட்டிஷாரின் அடக்குமுறையில் இருந்து விடுபட்டு ஆன்மிகப் பணிகளைத் தொடர சந்திர நாகூருக்குச் செல்லுமாறு அவரை வழிநடத்தினார்.
நிவேதிதாவும் பாரதியாரும் மகாகவி பாரதியார் போன்ற மகாகவிகளையும் தன்பால் ஈர்க்கும் அளவிற்கு தேசப்பற்று மிக்கவராக இருந்தார் சகோதரி நிவேதிதா. பாரதியாருக்குப் பெண் உரிமை பற்றிய சிந்தனையைத் தூண்டினார். பெண்களின் சம உரிமை பற்றி, உண்மையான விடுதலை பற்றி அறிவுறுத்தினார். அதுவே பாரதியாருக்குப் பெண்களைப் பற்றிய சிந்தனையை மாற்றி, பெண்ணுரிமைக்காகப் போராடத் தூண்டுகோலாக அமைந்தது. நிவேதிதாவை தனது குருவாக ஏற்றுக் கொண்டது மட்டுமல்லாமல், அவரைத் தன் தாய் போலவும், வழிகாட்டும் உற்ற சகோதரியாகவும் கருதினார் பாரதியார்.
அருளுக்கு நிவேதனமாய், அன்பினுக்கோர் கோயிலாய், அடியேன் நெஞ்சில் இருளுக்கு ஞாயிறாய் எமதுயர்நாடாம் பயிர்க்கு மழையாய், இங்கு பொருளுக்கு வழியறியா வறிஞர்க்குப் பெரும்பொருளாய்ப் புன்மைத் தாதச் சுருளுக்கு நெருப்பாகி விளங்கிய தாய் நிவேதிதையைத் தொழுது நிற்பேன்!
என்று பாரதி நிவேதிதாவைப் புகழ்ந்து பாடினார். மேலும் தனது குருவுக்கு நன்றி செலுத்தும் விதமாக, "ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று 1908ம் ஆண்டு எழுதி வெளியிட்ட 'ஸ்வதேச கீதங்கள்' நூலின் முதல் பகுதியில் குறிப்பிட்டார். 1909ல் வெளியான அதன் அடுத்த தொகுதியில், "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த்தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.
மறைவு தன் வாழ்நாளின் இறுதிவரை இந்தியாவின் உயர்வுக்கும், வளர்ச்சிக்கும், சேவைக்கும் தன்னை அர்ப்பணித்து வாழ்ந்த சகோதரி நிவேதிதா, அக்டோபர் 13, 1911 அன்று டார்ஜிலிங்கில் காலமானார். அங்கு அவருக்கு ஒரு நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
வெளிநாட்டில் பிறந்து, சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டு இந்தியாவுக்கு வந்து, இந்தியராகவே வாழ்ந்து மறைந்தவர் சகோதரி நிவேதிதா. பெண் கல்வியிலும், பெண்கள் வளர்ச்சியிலும் மிகுந்த அக்கறை கொண்டு செயல்பட்டவர். பாரத நாட்டின் வளர்ச்சிக்காகத் தன் வாழ்நாள் இறுதிவரை உழைத்த மேலோர். இந்தியர்கள் என்றும் மறக்காமல் நினைவில் நிறுத்த வேண்டிய சாதனைப் பெண்மணி சகோதரி நிவேதிதா.
(முற்றும்) |