|
| தென்றல் பேசுகிறது |
   |
- | ஆகஸ்டு 2026 |![]() |
|
|
|
|
 |
மீண்டும் பல நாடுகளிலிருந்து வருவனவற்றுக்கு இறக்குமதி வரிகளை விதித்திருக்கிறார் ட்ரம்ப். இந்தியாவுக்கு 10% என்று தொடங்கிக் கனடாவுக்கு அநியாயமான 50% என்று போகிறது அது. கட்டாயப்படுத்தி வேலை வாங்குதல், சிறார் தொழிலாளிகள் என்று ஏதேதோ காரணம் சொல்லப்படுகிறது. அமெரிக்க உழைப்பாளிகள் ஏராளமானோர் விமான நிலையங்கள், தொழிற்சாலைகள், கல்லூரிகள் இவற்றில் காவலாளிகளாகவும், முதியோரைக் கவனித்துக் கொள்ளும் பணியிலும் இருக்கிறார்கள். மிதமிஞ்சிய விசா கட்டுப்பாடுகளால் நாட்டுக்குக் குடிவருவோர் எண்ணிக்கை குறைந்து போனதோடு, இங்கிருப்போரை நாடுகடத்துவதும் அதிகமாகிவிட்ட நிலையில், அமெரிக்காவில் தொழிலாளர் கிடைப்பதே அரிதாகி, சம்பளங்கள் கூரையைப் பிய்த்துக் கொண்டு போகின்றன. இந்நிலையில், புத்தாக்கங்கள்,தொழிற்சாலை மற்றும் வேளாண் உற்பத்தி, கருவிகள், கட்டடங்கள், சாலைகள், வாகனங்களைச் செப்பனிடுதல் போன்ற அத்தியாவசியப் பணிகளுக்கு ஆளே கிடைப்பதில்லை.
அதுவும் தவிர, போர்க்காலப் பொருளாதாரம் என்று ஒன்று உள்ளது. மற்ற நாடுகள் போரிட்டால் அவர்களுக்குத் தளவாடங்களை விற்று அமெரிக்கா செழித்த காலம் ஒன்று உண்டு. இன்றைக்கோ அமெரிக்காவே போரில் காலை வைத்துவிட்டு, மீள முடியாமல் ஆழ்ந்துள்ளது. உலகின் பல நாடுகளிலும் அமெரிக்கச் சொத்துகள் தாக்கப்படுகின்றன. நட்பு நாடுகளும் காலைப் பின்னுக்கு இழுத்துக் கொள்கின்றன. அமெரிக்காவின் பொருளாதாரம் பெருத்த சரிவின் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கிறது. இதில் சிக்கி மக்கள் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். பூனைக்கு யார் மணி கட்டுவது?
★★★★★
ஒரு பக்கம் அன்னியப் பணத்தால் ஊட்டம் பெறும் கரப்பான் பூச்சிகள் ஆட்டம் போட்டாலும், மறுபக்கம் பாரத விளையாட்டு வீரர்கள் செஸ், தடகளப் போட்டிகள், ஸ்குவாஷ், பளு தூக்குதல், வில்வித்தை, துப்பாக்கி சுடுதல், பாட்மின்டன் முதலிய பல்வேறு துறைகளில் உலகில் பல்வேறு மட்டங்களில் பெருத்த வெற்றிகளைச் சாதித்து வருகிறார்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, இயற்பியல் ஒலிம்பியடில் (Physics Olympiad) இந்திய மாணவர்கள் ஐவர் ஐந்து தங்கப் பதக்கங்களை வென்று முதலாம் இடத்தைப் பிடித்துச் சாதனை படைத்துள்ளனர். விண்வெளித் துறை, கணினிச் சில் மேம்படுத்தல், செயற்கை நுண்ணறிவு உட்பட்ட அறிவியல்சார் துறைகளிலும் உலக அளவில் கவனிக்கத்தக்க முன்னேற்றங்கள் அன்றாடம் காணக் கிடைக்கின்றன. எதிர்மறை எண்ணங்களை ஒதுக்கிப் பீடுநடை போடுகிறது பாரதம்.
★★★★★
கவிஞர் சினேகன் பற்றிய அட்டைப்படக் கட்டுரை, சுவாமி சிவானந்தரின் ஆன்மிக வாழ்க்கை வரலாறு, எழுத்தாளர் பால்யூ குறித்த கட்டுரை எனப் பல்வேறு சுவையான அம்சங்களுடன் மீண்டும் தென்றல் உங்களை வந்தடைகிறது. |
|
|
வாசகர்களுக்கு ஆடிப்பெருக்கு, இந்திய சுதந்திர நாள் வாழ்த்துகள்.
தென்றல் ஆகஸ்டு 2026 |
|
|
|
|
|
|
|
|
|
|