|
|
 |
'மண், மொழி, மனிதம்' என்பதை மூச்சாகக் கொண்டு ஐந்து கிராமங்களை 'வளர் கிராமங்களாக' (Smart Village) உயர்த்த உழைத்து வருபவர் கவிஞர் விஜயகிருஷ்ணன். சமூகப் பணியாளர், எழுத்தாளர், வங்கியாளர் மற்றும் ஊடகவியலாளர் என இவரால் ஒரே நேரத்தில் பல தளங்களில் பணியாற்ற முடிகிறது. சென்னை தொலைக்காட்சியில் பல ஆண்டுகளாக இணை செய்தி வாசிப்பாளர். விண்வெளி ஆய்வில் இந்தியாவின் சாதனைப் பயணம், மாமல்லபுரத்தில் மாண்புமிகு பாரதப் பிரதமரும் சீன அதிபரும் சந்தித்து உரையாடிய நாட்களின் எட்டு மணிநேர நேரலை வர்ணனை, அயோத்தி கோவில் ப்ராணப்ரதிஷ்டை தின நேரலை வர்ணனை என்று எத்தனையோ நிகழ்ச்சிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் வழங்கியுள்ளார்.
தூர்தர்ஷன் பொதிகையில் 'மங்கையர் சோலை' நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பாளராகவும், தொகுப்பாளராகவும் வழங்கினார். அயலகத் தமிழர்களின் சாதனைகளைப் பாராட்டி வாரந்தோறும் தூர்தர்ஷன் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'தமிழ்ப் பாலம்' நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளரும் தொகுப்பாளரும் இவர்தான். அமெரிக்காவுக்கு வந்திருந்த திரு. விஜயகிருஷ்ணனைச் சந்தித்து உரையாடினோம். வாருங்கள் பேசிக்கொண்டே சேர்ந்து நடக்கலாம்…
★★★★★
தென்றல்: வணக்கம். கவிஞர், எழுத்தாளர், பட்டிமன்ற, கருத்தரங்க, தன்னம்பிக்கைப் பேச்சாளர், வங்கியாளர், வளர்கிராமப் பணியாளர், தொலைக்காட்சி ஊடகவியலாளர் – பட்டியல் மலைக்க வைக்கிறதே! எதில் உங்கள் தொடக்கம்? விஜயகிருஷ்ணன்: கிராமமே கவிதைதான். அதிகாலை இளங்குளிர், அழகான பனிமலர், அரசமர ஊஞ்சல், ஆலம்பொரடை கிணத்துக் குளியல், பனங்கா வண்டி ஓட்டம், ஒளிஞ்சு பிடிக்கும் விளையாட்டு இதையெல்லாம் அனுபவித்துக்கொண்டே வயல்களின் பக்கம் சுற்றும்போதே ஏற்றம் இரைப்பவர் பாடிய பாட்டு, மார்கழி அதிகாலையில் சங்கு ஊதி கைமணி தட்டி தேவாரம் இசைக்கும் திரு. சண்முகம், திரு. வையாபுரி ஆகியோர் பாடிய பாட்டு. இவையெல்லாம் என்னுள் செதுக்கிய நாட்கள் என்னைக் கவிஞனாக்கின. கிணற்றில் ஊறும் தண்ணீர் போலத்தான் கவிதையின் ஊற்றும். வயலுக்கு நீர் ஆதாரம்போல சிறுவயதிலேயே தந்தையை இழந்த சோகத்தை மறைக்கக் கவிதை எனக்கு ஆதாரமானது. கவிதைதான் தொடக்கம்.
 DD மங்கையர் சோலையில் பி.சுசீலா மற்றும் பிறருடன்
கே: முதல் கவிதை எது?
ப: முதல் கவிதை எங்கள் கிராமத்தினர் பற்றித்தான்.
படிக்காதவன் யாருமில்லை பாரப்பா அடிக்கணக்கு தெரிஞ்சுதானே நாத்துநடுது அஞ்சல அது அஞ்சாம் வகுப்பு பக்கம்கூட போகல புளியமர நெழலவச்சு பொழுதுசொல்லும் பொன்னையா நீ புதுசா கண்டுபிடிச்ச கடிகாரந்தான் எங்கையா!
இப்படிப் போகும் அந்தக் கவிதை.
கிராமத்தில் பயின்ற என்னை சென்னைப் பள்ளியில் எட்டாம் வகுப்பில் சேர்த்துப் படிக்க வைக்கும் முயற்சியில் என் அம்மாவோடு திண்டிவனத்துக்கு முன் உள்ள ஒலக்கூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பயணித்தோம். எவரும் எங்களுக்கு உதவிசெய்ய முன்வராத சூழல். ஜன்னலோரம் அமர்ந்து வெளியில் பார்த்துக்கொண்டு பயணித்தபோது கண்ணில்பட்டு நகர்ந்தது ஓர் ஓலைகள் உதிர்ந்த பட்டுப்போன பனைமரம்.
என் கவிதைப் பயணம் தொடங்கியது அப்போது:
ஒற்றைப் பனைமரமென வெட்டித் தொலைக்காதீர்; அது ஒற்றைக் குருவியின் சிம்மாசனம்.
எங்களின் அப்போதைய நிலையும் அதுதான்.
தொடர்ந்து சிறுசிறு கவிதைகள். செங்கற்பட்டு நகராட்சிப் பள்ளியில் இடம் கிடைத்துப் படித்தபோது எழுதிய கவிதை,
'கங்கைமுடி உடையவனே. காட்சிக்கு நீ எளியவனே; செங்கையில் வாழும் நின் சேவகன் உரைப்பேன் கேட்பாயோ. எங்கையால் மலர்கள் அள்ளி எம்பிரான் நின்மேல் தூவி பொங்கி வரும் உவகையாலே பூசனைகள் செய்வேன் ஏற்பாயோ'
சோகத்தில் பிறந்த ஆன்மிகம். விடாமல் எழுதுவது ஒரு தவம் என்று உணர்ந்தேன். 'சிரசாசனம் செய்யும் எழுதுகோலால் சிம்மாசனம் பெறுவான் எழுத்தாளன்' என்பது உண்மையாச்சு!.
கே: அச்சேறிய முதல் எழுத்து கவிதையா, கதையா? ப: 1993 செப்டம்பர் மாதம் வெளியானது 'கரையேறும் கனவுகள்' என்னும் என் முதல் கவிதை நூல். திரு. காசிராஜன், IAS தலைமையில் நடந்த விழாவில் புலவர் புலமைப்பித்தன் அந்த நூலை வெளியிட்டார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்கம் 'கவிதை மாலை' என்ற கவியரங்க நிகழ்ச்சியில் திரு. புதுகை மு தருமராசன், கலைமாமணி ஏர்வாடி எஸ். ராதாகிருஷ்ணன் ஆகியோரின் வழிகாட்டுதலால் அந்த நூல் வெளியிடப்பட்டது. அதன் அட்டைப்படத்தைப் பிரபல ஓவியர் மணியம் செல்வன் வரைந்திருந்தார். நான் ஒரு பாறைமேல் அமர்ந்து கவிதை படிப்பதுபோல அழகான படம் அது.
பிரபல எழுத்தாளர் திரு. சுஜாதா அந்த நூலைப் படித்து அதில் "80 பெர்சென்ட் குப்பை" என்று விமர்சித்து "அரைத்த மாவையே அரைக்கிறாய்" என்றார். அவரது வீட்டில் காபி சாப்பிட்டுக்கொண்டே இதைக் கேட்ட நான் நொந்து போனேன். என் முகவாட்டத்தை உணர்ந்து, "நிறையப் படி, தெனம் படி, எழுதியெழுதி தூக்கிப்போடு. அதுக்குள்ளே தேடு. உனக்கு உன்னிடமே கிடைக்கும் பொக்கிஷம்" என்றார். அதோடு விடவில்லை "நீ அந்த 80 பெர்சென்ட்டையே நெனைக்கிறே. 20 பெர்சென்ட் மிச்சம் இருக்கே. அதை டெவலப் பண்ணு .கவிஞனா.எழுத்தாளனா. பேர் வாங்குவ". இது முதல் அனுபவம். அதன் பிறகு, கவிதை, கட்டுரை நூல்கள். தனுஷ்கோடி புயலில் அழிந்த சம்பவத்தை நான் பாம்பன், ராமேஸ்வரம் பகுதிக்குச் சென்று தங்கி ஆராய்ச்சி செய்து எழுதிய 'கடல் நிலம்' என்ற நாவலை விகடன் 2006ஆம் ஆண்டு வெளியிட்டது. வெளியாவதற்கு முன் அதன் கதைப் பிரதியைப் படித்துப் பாராட்டிய சுஜாதா எனக்கு 100 மார்க் தந்ததை மறக்க முடியாது. அதைத் திரைப்படமாக எடுக்கலாம் என்றும் அன்றே சொன்னார். பல ஆண்டுகளுக்குப் பிறகு 'பாகுபலி' கதாசிரியர் என் 'கடல் நிலம்' நாவலைப் படித்தபின் அதைத் திரைப்படமாக எடுக்கக் கேட்டுள்ளார் என்பதையும் நான் கூறவேண்டும்.
 கம்பன் விழாவில் ரஜனிகாந்த் அவர்களுடன்
கே: எழுதுவது வேறு, பேச்சாற்றல் வேறு. மேடையேறிப் பேசிய முதல் அனுபவத்தை நினைவுகூருங்கள். ப: எழுதுவது அமைதியான சிந்தனையின் செயலாக்கம். நாம் சொற்களைத் தேர்வு செய்து, வாக்கியங்களை உருவாக்கி, கருத்துக்களை ஒழுங்குபடுத்த நேரம் எடுத்துக் கொள்கிறோம். திருத்தங்கள் செய்ய முடியும், சொற்களின் வலிமையைப் பலமுறை பரிசோதிக்க முடியும். ஆனால் பேச்சாற்றல் நேரடியானது, உடனடியானது. எதிரே உட்கார்ந்து கேட்பவரின் எதிர்பார்ப்பை நாம் பூர்த்தி செய்ய வேண்டும். குரலின் ஏற்றத்தாழ்வுகள், உடல்மொழி எனப் பல விஷயங்கள் இதில் அடங்கும். பள்ளி, கல்லூரி நாட்களில் தொடர்ந்து பேச்சுப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றிருக்கிறேன். அது அவையச்சத்தை வேண்டுமானால் போக்கி இருக்கலாம். ஆனால் எந்தத் தயாரிப்பும் இல்லாமல் ஒரு தலைப்பில் அல்லது தலைப்பில்லாமலேயே பேசத் தயார்படுத்திக் கொள்வது அவசியம்.
முதல் அனுபவம் என்றால் மதுராந்தகம் ஸ்டேட் வங்கி கிளையில் பணிபுரிந்தபோது எங்கள் மேலாளர் லயன்ஸ் கிளப்புடன் இணைந்து ரத்ததான முகாம் நடத்தினார். அப்பொழுது லயன்ஸ் கிளப் தலைவர் திரு. பி.எம். முத்துகுமரப்பா என்னை மேடைக்கு இழுத்துவிட்டார். அவரிடம் என்னைப்பற்றிச் சொல்லி மேடைக்கு இழுத்தவர் எனது இலக்கிய வளர்ச்சியில் பெரும்பங்கு வகித்த 'இலக்கிய வீதி' இனியவன். கவிஞாயிறு தாராபாரதி எனக்கு இன்னோர் ஆசான். நான் நமது உடலின் முக்கியமான ரத்தவோட்ட பாகங்களின் செயல்பாடும், ஒரு வங்கியின் செயல்பாடும் ஒன்று என்று ஒப்பிட்டுப் பேச அந்தப் பேசினால் ஈர்க்கப்பட்டு தனக்குப் போட்ட மாலையைக் கழற்றி எனக்குப் போட்டுப் பாராட்டினார் திரு. முத்துகுமரப்பா. இந்த மூவரிடமும், இளையோரை நாமும் வழிகாட்டி வளர்க்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொண்டேன்.
 புதுப்பிக்கப்பட்ட சிறுதாமூர் கோவில் கே: வங்கியில் பணியாற்றிய போது நடந்த நெஞ்சைத் தொட்ட நினைவு உண்டா? ப: நிறைய உண்டு. அதே மதுராந்தகம் வங்கிக் கிளையில் நான் விவசாய அலுவலருக்கு (Field Officer) உதவியாளராகப் பணிசெய்த சமயம் எங்கள் அதிகாரி விவசாயி ஒருவரை மிகவும் கோபமாகக் கடினமான வார்த்தைகளினால் திட்டிக்கொண்டிருந்தார். வந்த விவசாயி கிணறு வெட்ட வங்கியில் கடன் வாங்கி, தவணைத் தொகையைப் பல மாதங்கள் திருப்பச் செலுத்தவில்லை. ''நீயெல்லாம் ஏமாத்தவே பொறந்தவன். இது யார் வீட்டுக் காசு?. கடன வாங்க எத்தனை முறை நடந்தே. .உண்மையிலே கிணறு வெட்டினியா, இல்ல, பணத்தை சாப்டியா?" இப்படியாக அந்த அர்ச்சனை போய்க்கொண்டிருந்தது. சட்டைகூட அணியாத அந்த விவசாயி பரிதாபமாக கைகளைக் கட்டிக்கொண்டு சொன்ன பதில் எனக்கு வங்கியில் உயர்பொறுப்பில் வரும்போது எப்படி மக்களிடம் நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு வழிகாட்டியது. அவர் சொன்ன பதில்."ஐயா, கெணறு வெட்டினேனுங்க. நீங்கவேணா வந்து பாருங்க. உங்கள ஏமாத்த மாட்டேங்க. உங்களுக்கு நாமம் போடலாம்னா. நாமக்கட்டி கொழைக்கக்கூட ஒரு சொட்டுத் தண்ணி வரலீங்க." அவரின் உழைப்பை, ஏழ்மையை உணர்ந்தேன்.
 சிறுதாமூரில் தேசியக் கொடியேற்றி நாட்டுப்பண் இசைத்தல்
கே: தமிழகத்தில் கலைஞர், எம்ஜியார், ஜெயலலிதா தொடங்கி மோதிஜி வரை பல பிரபலங்களையும் சந்தித்திருக்கிறீர்கள். ஓரிரு சுவையான சம்பவங்களைச் சொல்லுங்கள். ப: திரு. எம்.ஜி.,ஆர் அவர்கள் முதன்முதலாக முதல்வர் பதவியில் அமர்ந்தவுடன் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவில் அவரிடம் முதலில் பரிசுபெற்ற கல்லூரி மாணவன் நான். பரிசு வழங்கும்போது என் தோள்மீது அன்புடன் கை வைத்து, தன் அருகில் நகர்த்தி நிற்கவைத்துப் பாராட்டி, திரைப்படத்துறை செய்திப் படத்திற்கு 'போஸ்' கொடுக்கச் சொன்னார். அவரின் 'அன்னமிட்ட கை' என்மீது பட்ட 'நல்ல நேரம்', அவர் 'பல்லாண்டு வாழ்க' என வாழ்த்தியது எல்லாம் எனக்கு கிடைத்த 'பரிசு'.
நான் தூர்தர்ஷன் சென்னைத் தொலைக்காட்சியில் காலை ஏழுமணி செய்தி வாசித்து அரங்கிலிருந்து வெளியே வந்தபின் செய்தித் தயாரிப்பு அறைக்குச் சென்றேன். அப்போது தொலைபேசி மணி ஒலித்தது. அங்கு யாரும் இல்லை. சாப்பிடச் சென்றுவிட்டனர். தொலைபேசியை எடுத்துப் பேசினேன். மறுமுனையில் குரல் "நான் கருணாநிதி பேசறேன். யார் செய்தி ஆசிரியர்?" ஒரு நிமிடம் அப்படியே உறைந்து போனேன், மகிழ்ச்சித் துள்ளல். வணக்கம் சொல்லி "நான் விஜயகிருஷ்ணன் ஐயா, செய்தி வாசிப்பாளர்" என்றவுடன் ''தெரியும், நியூஸ் பார்த்தேன். தமிழ் உச்சரிப்பு நல்ல செய்யறீங்க'' எனக்கு உலக விருது கிடைத்த மகிழ்ச்சி. உடனே செய்தி ஆசிரியர் வர அவர்கள் பேசிக்கொண்டனர். கலைஞரின் சட்டமன்றப் பொன்விழாவிலும், கவிஞர் பா விஜய் நூல்கள் வெளியீட்டு நிகழ்ச்சியிலும் கலைஞரிடம் பாராட்டுப் பெற்றதை 'மறக்க முடியுமா'. கோபாலபுரம் ஸ்டேட் வங்கிக் கிளையில் மேலாளராகப் பணியாற்றியபோது கலைஞரை அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற இனிமையான பொழுதுகளும் என் வாழ்க்கையில் கிடைத்த 'பாசமழை'.
சிறுதிருப்பதி சிறுதாமூர் ஸ்ரீ ஸ்ரீனிவாசர் வெற்றி வழங்கும் பெருமாள் கோவிலின் கும்பாபிஷேகம் என்னும் சம்ப்ரோக்ஷணம் நிறைவடைந்தவுடன் கோவில் உற்சவர் படத்தைப் போயஸ் கார்டன் இல்லத்துக்குச் சென்று அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்து வழங்கி வாழ்த்துப் பெற்றேன். அவர் சிறுதாமூருக்கு வருவதாகச் சொன்னார். ஆனால் அவரால் வர இயலவில்லை. எனது பூர்வீகம் வேலாமூர் வங்கிபுரம் என்று சொன்னபோது உன்னிப்பாகக் கேட்டு மகிழ்ந்தார். 'வங்கிபுரம்' அவரது மூதாதையர் இடம்.
 சிறுதாமூர் குளம் புனரமைப்பு கே: கிராம வளர்ச்சிக்காக உழைத்து வருகிறீர்கள். அந்த எளிய மக்களிடம் நீங்கள் பார்க்கும் உயரிய பண்பு எது? ப: கிராமம் என்றாலே உயரிய பண்புகளின் உறைவிடம்தான் - அன்பு, விருந்தோம்பல். வெள்ளந்தியாக என்ன உதவி வேண்டும் என்று நாம் பேசத் தொடங்கும் முன்பே கேட்பர். கவுரவம் பார்க்க மாட்டார்கள். அடுத்தவருக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம்தான் எனக்கு கிராமங்களின்பால் ஏற்பட்ட ஈர்ப்பு. விவசாயம் பொய்த்துப் போகும்போது புதிய தொழில் முயற்சிகளிலும் ஈடுபட நாட்டமுடன் கிராம மக்கள் இப்போதெல்லாம் முன்வருவது அவர்கள் பழமையில் ஊறியுள்ளனர் என்ற கருத்தை மாற்றுகிறது.
கே: "யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன்போல் இளங்கோவைப்போல் பூமிதனிலே யாங்கணுமே கண்டதில்லை" என்று பறை சாற்றினான் பாரதி. கம்பன் கழகத்திற்கு உங்கள் குறிப்பிடத் தக்க பங்களிப்பு என்ன? ப: புதுச்சேரி கம்பன் கழகத்தில் 1996ஆம் ஆண்டுமுதல் 2002ஆம் ஆண்டுவரை உதவியாளராகப் பணியாற்றினேன். பிறகு சென்னை கம்பன் கழகப் பணிகளில் இணைந்து, முதலில் செயற்குழு உறுப்பினராகவும், தற்போது துணைச்செயலாராகவும் பணி செய்கிறேன். மாணவர்களுக்கு கம்பராமாயண நூல்களை வழங்குவது, கம்பனின் அறநெறிக் கதையைப் பள்ளி மாணவர்களுக்குச் சொல்வது, ஆறு இலக்கியங்களில் பேச்சு, கவிதை, கட்டுரை மற்றும் ஒப்புவித்தல் போட்டிகளை மாணவர்களிடையே நடத்துவது ஆகிய பணிகளை நாங்கள் குழுவாகச் செய்கிறோம். கம்பராமாயண மாத உரைக்கூட்டங்கள், ஆண்டு விழா ஆகியவற்றுக்கான தொடர்பணிகள் என்னை மெருகேற்றுகின்றன. தொடர்ந்து கற்பதற்கான வாய்ப்பாக அமைகிறது. சமூக ஊடகங்கள் மற்றும் இணையம் மூலம் 'அறம் வெல்லும், பாவம் தோற்கும்' என்னும் கம்பநெறியைப் பரப்புகின்றோம்.
 விரிகுடாப் பகுதி பாரதி தமிழ்ச் சங்க நிகழ்ச்சியில் கே: 20 வார்த்தைகளுக்கு மேல் இருக்கும் எதையும் படிப்பத்தில்லை என்பதாக ஒரு தலைமுறை உண்டாகி வருகிறதே, என்ன செய்யலாம்? ப: இப்படி ஒரு தலைமுறை உருவாகி வருவது கவலை அளிக்கிறது. ஆழமான புரிதலுக்குத் தடையாக இருக்கும். இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். இன்றைய டிஜிட்டல் உலகத்தின் சில சவுகரியங்கள் இதற்குக் காரணம். இந்த நிலையைச் சரிசெய்யச் சில உத்திகளை மேற்கொள்ளவேண்டும். நீண்ட உரைகளை ஒலி வடிவாக்கித் தரும் வசதி (Text-to-Speech) போன்ற தொழில்நுட்பங்களை பயன்படுத்தலாம். வாசிப்பை மேலும் ஊடாடும் (Interactive) வகையில் மாற்றும் செயலிகளை உருவாக்கலாம். பெற்றோர் குழந்தைகளுக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும். அவர்கள் புத்தகம் படிப்பதை, வாசிப்பின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தால் குழந்தைகளுக்கும் ஆர்வம் ஏற்பட வாய்ப்புள்ளது.
 அயல்நாடு வாழ் தமிழருக்கான DD தமிழ்ப்பாலம்
கே: தொலக்காட்சித் தொடர்கள் உட்பட எல்லாவற்றிலும் 'தமிங்கிலம்' கோலோச்சி வருகிறது. தமிழர் நாவுகளில் மீண்டும் நல்ல தமிழ் நடமாடுமா? ப: முதலில், வீட்டில் பெற்றோர் குழந்தைகளிடம் தமிழில் பேசவேண்டும். பள்ளிகளில் தமிழுக்கு முக்கியத்துவம் வழங்கவேண்டும். தமிழ் இலக்கியம் மற்றும் இலக்கணத்தை முறையாக, சுவைபடக் கற்பிக்க வேண்டும். தொலைக்காட்சி, வானொலி மற்றும் திரைப்படங்களில் தமிழ்ச் சொற்களை அதிகம் பயன்படுத்த வேண்டும். சமூக ஊடகங்களில் இளைஞர்கள் தமிழில் உரையாட ஊக்குவிக்க வேண்டும். தமிழ் அமைப்புகள் தமிழ் பேசுவது மற்றும் எழுதுவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும். அரசு தமிழ் பயன்பாட்டை ஊக்குவிக்கச் சட்டங்கள் மற்றும் திட்டங்களை இயற்ற வேண்டும். இந்த முயற்சிகள் மூலம் தமிழர் நாவுகளில் மீண்டும் தமிழ் நடமாடும் என்று நம்பலாம்.
 விஜயகிருஷ்ணன் எழுதிய சில நூல்கள் கே: உங்கள் எதிர்காலத் திட்டங்கள் என்னென்ன? ப: நான் பயணிக்கும் தளங்களை மேலும் மெருகேற்றி, மற்றவர்களையும், குறிப்பாக இளைஞர்களை நற்பணிகளில் ஈடுபட வைப்பது என் குறிக்கோள். ஐந்து கிராமங்களின் வளர்ச்சியில் ஈடுபடும் இந்த நேரத்தில் இதன் திட்ட வரைவை பிற கிராமங்களுக்கும் கொண்டு செல்ல அங்குள்ளோரை ஊக்குவித்து, உதவி செய்து, தனிநபர் பொருளாதார வளர்ச்சிக்கும், அருளாதார வளர்ச்சி (ஆன்மிக வளர்ச்சி) தினம் உழைப்பது; நிறைய மாணவர்களைத் தரமான, பயனுள்ள நூல்கள் எழுதி வெளியிட வைப்பது, தமிழ் பேசவைப்பது , 'மண், மொழி, மனிதம்' என்னும் எனது இன்னோர் அமைப்பின் மூலம் நற்பணிகள் இந்த மண்ணுக்காக, மொழிக்காக மனித நேய வளர்ச்சிக்காகச் செய்வது ஆகியவை தொடரும் திட்டத் செயலாக்கங்களாகும். திரு. முருகுவேலு வைத்தியநாதன் அவர்கள் துவங்கியுள்ள வடஅமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் கூட்டமைப்பின் உலக தூதராக இந்தியாவிற்கு நியமிக்கப்பட்டுள்ள எனது பணி தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவிப்பதாகும். அதற்கென உழைப்பேன்.
 விஜயகிருஷ்ணன் எழுதிய சில நூல்கள்
ஊடகத்தின் வாயிலாக அயலகத் தமிழ் சாதனையாளர்களைத் தொடர்ந்து தொடர்புகொண்டு அவர்களைப் பாராட்டி, அவர்களின் பணிகள் மேலும் மெருகேற உழைப்பது என் தன்னார்வலப் பணியாகும். சிறுதாமூர் மற்றும் செனையனேரி கிராமங்களில் இயங்கும் பள்ளிகளில் வகுப்பறைகளுக்குப் பிள்ளைகள் எழுத, உட்கார பெஞ்சுகள் செய்து வழங்கி, தூய குடிநீர் கிடைக்க அதற்குரிய வடிகட்டி இயந்திரம் பொருத்தவேண்டும். மாணவர்களின் எழுத்தாற்றலை மேம்படுத்த அவர்களுக்குப் பயிற்சி வழங்கி நூலாசிரியர்களாக உயர்த்த வேண்டும். உயர்கல்வி தொடராத மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு வழிகாட்டி, கல்லூரியில் கற்க உதவவேண்டும்.
இளஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க மூன்று ஊர்களுக்கு இடையில் சிறுதொழிற்பேட்டை அரசின்மூலம் அமைக்க முயற்சி மேற்கொள்ளவேண்டும். விக்ரம சோழன் 1000 ஆண்டுகளுக்குமுன் கட்டிச் சென்ற நூறாண்டில் பூமிக்குள் புதையுண்ட சிறுதாமூர் அகத்தீஸ்வரமுடைய மகாதேவர் கோவிலைப் புனரமைக்க வேண்டும்.
உரையாடல்: மதுரபாரதி |
|
மறக்காதவர், மறக்க முடியாத நிகழ்ச்சி நான் ஸ்டேட் வங்கி மேலாளராக புதுச்சேரி கரிக்கலாம்பாக்கம் கிளையில் பணியாற்றியபோது வில்லியனூரில் ஒரு குடிசையில் டெரகோட்டா பொம்மை செய்த கலைஞரை நானே நேரில் சென்று அவரது திறமையை வியந்து பார்த்து வங்கியின் கடனுதவித் திட்டத்தை விளக்கி, முதன் முறையாக அவருக்குக் கணக்குத் தொடங்கி, ₹25000 வங்கிக்கடன் வழங்கினேன். ஒவ்வொரு வருடமும் உரிய நேரத்தில் திரும்பச் செலுத்தி மேலும் கடனை உயர்த்திப் பெற்று வணிகத்தையும் உயர்த்தினார் திரு. வி.கே.முனுசாமி.
சில ஆண்டுகளுக்கு முன் இந்தியாவின் விஸ்வகர்மா திட்டத்தை பாரதப் பிரதமர் மாண்புமிகு திரு நரேந்திர மோடி அவர்கள் வடிவமைக்கக் காரணமானவர், அந்தக் குழுவின் உறுப்பினர். அவர் 'பத்மஸ்ரீ' வி.கே. முனுசாமியாக தேசிய அங்கீகாரம் பெற்றபோது நடைபெற்ற பாராட்டு விழாவில் என் பெயரை - முதன்முதலில் வங்கியின் மூலம் உதவிக்கரம் தந்த என் பெயரை - நன்றியுடன் உச்சரித்ததை மறக்கமுடியாது. - கவிஞர் விஜயகிருஷ்ணன்
பிரதமர் மோதியின் புன்னகை நான் மிகப்பெரும் பாக்கியமாகக் கருதுவது உலகத் தலைவர்களில் முதன்மையான பாரதப் பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களைச் சந்தித்த நிகழ்ச்சியாகும். 2024 ஜனவரி 20ஆம் தேதி ராமேஸ்வரம் கோவிலுக்குப் பிரதமர் வருகை புரிந்தபோது, கம்பன் கழகப் பணியாளர் என்ற அங்கீகாரத்தின்படி நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். பிரதமரின் அருகில் நின்று சற்றேறக்குறைய நான்கு நிமிடங்கள் அவருடன் பேசினேன். தொலைக்காட்சியில் அவரின் உரைகளுக்குத் தமிழில் பின்னணிக்குரல் வழங்கியது, 250 மாணவர்களை ஆளுக்கொரு புத்தகம் எழுதி வெளியிட வைத்தது, கிராமங்களில் சமுதாயப்பணி செய்வது, குறிப்பாக அப்போது ஆறு ஆண்டுகளாகச் சிறுதாமூரில் தினமும் தேசியக்கொடி ஏற்றி தமிழ்த்தாய் வாழ்த்து, தேசியகீதம் பாடி தேசத்தை மக்கள் வணங்கப் பின்புலமாக உழைப்பது என்று அனைத்தையும் சொன்னபோது மனமுவந்து புன்னகையோடு பாராட்டினார். கிராமத்திற்கு வருமாறு அவரை அழைத்தேன். புன்னகைத்தார். அதன் அர்த்தம் கண்டிப்பாக வருகின்றேன் என்பதாகும். - கவிஞர் விஜயகிருஷ்ணன்
கவிஞர் விஜயகிருஷ்ணன் – சில குறிப்புகள் தமிழ்நாட்டின் செங்கற்பட்டு மாவட்டம் சிறுதாமூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகிருஷ்ணன் சிறுவயதிலேயே தன் தந்தை கல்வி வள்ளல்' திரு எஸ்.வி. சேஷாத்திரி ஐயங்கார் அவர்களை இழந்தார். அன்னை 'கல்விக் கொடையாளர்' சீத்தா அம்மாள் வாழ்க்கைப் புயலில் உழன்று உழைத்து இவரை வளர்த்தார். கல்லூரிக் கல்வியை முடித்தவுடன் பாரத ஸ்டேட் வங்கிப் பணியில் சேர்ந்து தலைமை மேலாளர் பொறுப்புவரை உயர்ந்து, முப்பது ஆண்டுகள் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றார்.
சாதனைப் பட்டியலில் சிறு பகுதி! கல்லூரி நாட்களில் எழுதி, இயக்கி, நடித்த 'கிச்சாமியும் கிரக மனிதனும்' என்னும் நகைச்சுவை நாடகம் அனைத்துக் கல்லூரி நாடக விழாவில் முதற்பரிசு பெற்றது.
செங்கற்பட்டு ராஜேஸ்வரி வேதாசலம் அரசினர் கலைக் கல்லூரியில் படித்தபோது அனைத்துக் கல்லூரி மாணவர்களுக்கான கவிதை, கட்டுரை ஆகிய இரண்டு போட்டிகளிலும் வென்று முன்னாள் முதல்வர் திரு எம்.ஜி.ஆர். அவர்களின் கரங்களினால் முதல் பரிசு பெற்றார். 140 சிறுகதைகள் 35 கட்டுரைகள் 1 புதினம் மற்றும் எண்ணற்ற கவிதைகளைப் படைத்துள்ளார்.
புதுச்சேரி கம்பன் கழகத்தின் ஆயுள் உறுப்பினராகவும், சென்னை கம்பன் கழகத்தின் துனைச் செயலராகவும் பணியாற்றுகின்றார்.
திருப்பூர் தமிழ்ச் சங்கம், சேலம் தமிழ்ச் சங்கம், செஞ்சி மற்றும் அகமதாபாத் தமிழ்ச் சங்கம் போன்ற பல்வேறு அமைப்புகளிலும் அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் நடைபெற்ற கலை, இலக்கிய விழாக்களிலும் உரையாற்றியுள்ளார்.
ஏ.டி.எம். திரையில் தமிழ்ச் சொற்களை அறிமுகப்படுத்தினார்.
சுவையரசி கவிஞரின் மனைவி 'சுவையரசி' திருமதி சாந்தி விஜயகிருஷ்ணன் தமிழகத்தின் முதல்நிலை சமையற்கலை வல்லுனர்களில் ஒருவர். 'விஜய்' தொலைக்காட்சியின் 'கிச்சன் கில்லாடிகள்' என்னும் சமையற்கலை நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வெற்றியாளர்.
விருதுகள் * சிவநேயப்பேரவையின் 'இறைதொண்டு மாமணி' * பாரதியார் சங்கத்தின் 'தகைசால் கவிஞர்' விருது * கவிதை உறவின் 'விக்ரமன்' விருது, 'எழுத்துச் செம்மல்' விருது * இலக்கிய வீதியின் 'அன்னம் விருது' * எழுத்தாளர் சுஜாதாவின் 'புதிய தலைமுறை கவி' விருது * சங்கரதாஸ் சுவாமிகள் மன்றத்தின் 'தமிழ்ப்பணிச் செம்மல்' விருது * புதுக்கோட்டை இலக்கியப் பேரவையின் 'பல்கலைக் செம்மல்' விருது * 'ஸ்டேட் வங்கி இலக்கிய விருது', * 'சிறுகதை சிற்பி', 'கவிச்செம்மல்', 'ஊடகப்பணி வெள்ளிவிழா' விருது * பாரதீய வித்யா பவன், ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், உறவுச்சுரங்க 'தமிழ் விருது', * 'தமிழன்னை இலக்கிய விருது' உள்ளிட்ட பல விருதுகள் |
|
|
|
|
|
|
|
|