Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | நேர்காணல் | முன்னோடி | சூர்யா துப்பறிகிறார் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | வாசகர் கடிதம் | பொது
Tamil Unicode / English Search
நேர்காணல்
கேத்தரைன் குஞ்ஞிராமன்
அறிவியல் புனைவெழுத்தாளர் ராம்பிரசாத்
- அரவிந்த்|ஜூலை 2025|
Share:
ராம்பிரசாத், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த சிறுகதை நூல் விருது பெற்ற அறிவியல் புனைவெழுத்தாளர். இவருடைய 'வாவ் சிக்னல்' நூல், தமிழ்நாடு அரசு விருது பெறும் முதல் அறிவியல் புனைவுச் சிறுகதைத் தொகுப்பு நூல் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடன் ஒரு நேர்காணல்.

★★★★★


தென்றல்: உங்கள் இளமைப்பருவம், கல்வி, குடும்பம் குறித்துச் சொல்லுங்கள்.
ராம்பிரசாத்: நான் பிறந்தது மயிலாடுதுறையில். அப்பா பெயர் ரங்கசாமி. அம்மா, பத்மாவதி. அப்பா, தமிழ்நாடு அரசின் பொதுப்பணித் துறையில் கட்டடப் பொறியாளராக இருந்தார். எனது மூன்றாவது வயதில், அப்பாவின் பணிமாற்றம் காரணமாகச் சென்னை சைதாப்பேட்டைக்குக் குடிபெயர்ந்தோம். தி. நகர் ராமகிருஷ்ணா மிஷன் பள்ளியில் பள்ளிப் படிப்பையும், ஜெரூசலேம் பொறியியல் கல்லூரியில் கல்லூரிப் படிப்பையும் முடித்தேன். பின்னர் WIPRO, TCS, Computer Sciences Corporation, Capgemini ஆகிய நிறுவனங்களில் பணி அனுபவம் பெற்று அமெரிக்காவிற்குக் குடிபெயர்ந்தேன்.

கேள்வி: உங்களுக்குள் இருந்த எழுத்தாளன் எப்போது குறுகுறுத்தான்?
பதில்: TCS நிறுவனத்திற்காக லண்டனில் இரண்டு வருடங்கள் (2008-2010) வேலை பார்த்தேன். அதுதான் என் முதல் வெளிநாட்டுப் பயணம். புதிய சூழல். வெளியே குளிர். பெரும்பான்மை நேரம் அறைக்குள்ளே முடங்கிக் கிடக்கும் சூழல். பள்ளி, கல்லூரிக் காலங்களில் (1996-2002) கிறுக்கியவற்றை முறையாகப் பத்திரிக்கைகளுக்கு அனுப்பிப் பார்க்கும் எண்ணம் எழுந்தது. விகடனின் யூத்ஃபுல் விகடனில் சில கவிதைகள் வெளியானது உற்சாகமூட்டியது. அதன்பிறகு, உயிர்மையின் உயிரோசை, கணையாழி போன்ற இதழ்களில் வெளியானதைத் தொடர்ந்து ராணி, தேவி, குங்குமம், குமுதம், ஆனந்த விகடன், தேவியின் கண்மணி, கல்கி, பாக்யா என்று விரிவடைந்தது.



கே: முதலில் அச்சான படைப்பு எது? அதை அச்சில் பார்த்தபோது ஏற்பட்ட உணர்வு பற்றிச் சொல்லுங்கள்.
ப: 2009லேயே என் படைப்புகள் இணைய இதழ்களில் வெளியாகத் தொடங்கிவிட்டன என்றாலும், முதலில் அச்சிதழில் இடம்பெற்றது 2012ல், 'ராணி' இதழில் வெளியானது. கதையின் தலைப்பு 'அம்மி அம்மா'. அது ஒரு பரவசமான உணர்வு. முதல் அச்சு என்பதால், கண்ணில் பட்ட கடைகளிலிருந்தெல்லாம் அந்த வார இதழை வாங்கி ஒரே இதழை மீண்டும் மீண்டும் காசு கொடுத்து வாங்கிச் சேர்த்ததற்காய் வீட்டில் திட்டு வாங்கியது இன்னமும் நினைவிருக்கிறது.

கே: சுவையான நினவு. கவிதை மனம் எப்போது அறிவியல் புனைகதைக்குத் திரும்பியது?
ப: 2009களின் தொடக்கத்தில் தான் எனது கவிதைகள் பரவலாக இணைய இதழ்களில் வெளியாகின. 2009 செப்டம்பர் மாதத்தில் எனது முதல் சிறுகதை 'கீற்று' இதழில் வெளியானது. அதுமுதல் பல சமூகக் கதைகள் எழுதி அவை ராணி, ராணிமுத்து, தேவியின் கண்மணி, குங்குமம், குமுதம் என்று வெளியானது.

ஒரு கட்டத்தில், சில சமூகக் கதைகளை எழுத எத்தனிக்கையிலேயே, இதை அறிவியல் புனைவில் இன்னும் சிறப்பாகச் சொல்ல முடியுமே. இதை ஏன் சமூகக் கதையாக எழுதுகிறோம் என்று தோன்றியதே அறிவியல் புனைகதையை நோக்கி நான் திரும்புவதற்கான காரணங்களுள் ஒன்றானது.

இன்னொரு காரணம், ஆங்கிலத்தில் 'When science changes its opinion, it knows better' என்றொரு புகழ்பெற்ற வாசகம் உண்டு. அதுவும் அறிவியல் புனைவுக்கு என்னைத் திருப்பியது.

கே: தமிழில் அறிவியல் புனைவு எழுதுவதில் உள்ள சவால்கள் என்னென்ன?
ப: தமிழில் அறிவியல் புனைவு முயற்சிகள் சொற்பமாகவே நிகழ்கின்றன. அதை எழுதுவதில் உள்ள சவால்களாக நான் பார்ப்பது:
ஒன்று, ஆங்கில வார்த்தைகளுக்கு இணையான தமிழ்ச் சொற்கள், மக்களின் தினசரிப் பயன்பாட்டில் இல்லை. இதனால், தமிழ்ச் சொற்களைக் கதைகளில் பயன்படுத்துகையில் உடன் ஆங்கிலப் பதத்தையும் பயன்படுத்த வேண்டி இருக்கிறது.

இரண்டாவது, வெகுஜனங்கள் தங்கள் பிரச்சனைகளை அரசியல் பிரச்சனையாக, ஆன்மீகப் பிரச்சனையாக, சமூகப் பிரச்சனையாக, மொழி-இன ரீதியிலான பிரச்சனையாக மட்டுமே பெரும்பாலும் அணுகப் பழகியுள்ளனர். அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறை தமிழில் மிகக் குறைவாகவே காணப்படுவது மற்றொரு சவால்.

அடுத்து, அமெரிக்கா போன்ற, அறிவியலுக்கும் ஆராய்ச்சிகளுக்கும் பெயர்பெற்ற நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்களுக்கிடையே கூட அறிவியல் புனைவுகள் வாசிப்பின்மை, நம் கல்வித்தரத்தைக் கேள்விக்கு உட்படுத்தவே செய்கின்றன.



கே: மென்பொருள் பின்னணி உங்கள் படைப்புகளுக்கு உந்து சக்தியா?
ப: உலகம் மடிக்கணிணிக்குள் சுருங்கிவிட்டது. இப்போது நான் எழுதும் அறிவியல் சிறுகதைகளை, ஒருக்கால், மென்பொருள் துறைக்கு வராமல், கட்டுமானத் துறைக்கோ, வேறு ஏதாவதொரு துறைக்கோ சென்றிருந்தாலும் எழுதியிருப்பேன் என்றுதான் நினைக்கிறேன். எழுத்தில் சமரசம் செய்யாமல் எழுத மென்பொருள் துறையில் கிடைக்கும் ஊதியம் ஏதுவாகிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கே: தமிழின் முதல் கணிதவியல் சார்ந்த நாவலைப் படைத்தவர் நீங்கள். எந்த விதத்தில் கணிதக் கோட்பாடுகள் அந்நாவலின் பின்னணியாக அமைந்தன?
ப: இன்றைக்கு வழக்கில் இருக்கும் Dating Trend-ஐ அடிப்படையாக வைத்து ஒரு நாவல் எழுத எத்தனிக்கையில், முன்னர் சொன்னபடி, “இதை அறிபுனையாகவே சிறப்பாகக் கையாள முடியுமே? இதை ஏன் சமூகக் கதையாக எழுதுகிறோம்?” என்ற கேள்வி எழுந்ததன் விளைவுதான் அந்த நாவல். கணிதத்தில் Logarithm கணக்கிடப் பயன்படும் Clark's Table, நாவலுக்கு நெருக்கமாக வரும் கணிதக் கோட்பாடு எனலாம்.

கே: உங்களைக் கவர்ந்த பிற அறிவியல் புனைகதையாளர் யார்?
ப: அறிவியல் புனைகதையாளரில், தமிழில் எனக்குப் பிடித்தமானவர் எழுத்தாளர் சுஜாதா. ஆங்கிலத்தில் Ted Chiang-ஐச் சொல்லலாம்.

கே: மிகைக் கற்பனை அறிவியல் புனைவாகுமா? இல்லை, அதில் எதார்த்தத்தின் அடிப்படை இருக்க வேண்டுமா?
ப: அறிவியல் முகாந்திரம் ஒன்று இருக்குமென்றால், மிகைக்கற்பனை அறிவியல் புனைவாகும்தான். ஆக, முகாந்திரம் இருக்க வேண்டும். முகாந்திரமே இல்லாமல் எழுதப்படும் மிகைக்கற்பனைகள், அடிப்படையற்ற வெறும் கற்பனை என்பதைவிட ஏமாற்று வேலை எனலாம்.



கே: ஓர் அறிவியல் புனைகதையாளர் என்ற முறையில், செயற்கை நுண்ணறிவு (AI) குறித்த உங்கள் பார்வை என்ன?
ப: மேற்குலகில் அறிவியல் புனைவு எழுத்துலகில், செயற்கை நுண்ணறிவு முழுமையாக மறுக்கப்படுகிறது. தணிக்கை செய்யப்படுகிறது. எழுத்தாளர்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தாமல் எழுதும்படி கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள். மீறி எழுதினால், எழுத்துலகின் எல்லா தளங்களிலிருந்தும் Blacklist செய்யப்படுகிறார்கள்.

எழுத்துலகு போலவே மற்ற துறைகளிலும் செயற்கை நுண்ணறிவு மறுக்கப்பட்டால், எதிர்கால உலகிற்கு நன்மை பயக்கும் என்றே நினைக்கிறேன்.

கே: உங்கள் குடும்பப் பின்னணி?
பதில்: எனக்கு உடன்பிறந்தோர் இருவர். அண்ணன் பிரேம்குமார், தங்கை காயத்ரி. எனக்கு 2019ல் திருமணமானது. என் மனைவி பெயர் தீபலட்சுமி. ஆங்கில அறிவியல் புனைவெழுத்துக்களைத் தமிழ் வாசகர்களுக்குக் கொணரும் நோக்கில் மொழிபெயர்க்கிறார். சொல்வனம் இதழில் இவரது மொழிபெயர்ப்புகள் வெளியாகின்றன. எங்களுக்கு ஐந்து வயதில் ஒரு மகள் இருக்கிறாள். பெயர் வர்ஷா.
நேர்காணல்: அரவிந்த்
More

கேத்தரைன் குஞ்ஞிராமன்
Share: 




© Copyright 2020 Tamilonline