| பிரணவ் கல்யாண் 
 | 
											
	|  | 
											
												| 
                                                        
	                                                        | திருக்குறள் திலீபன் |    |  
	                                                        | - அரவிந்த் ![]() | ![]() பிப்ரவரி 2013 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
	|  | 
											
	|  | 
											
												| பார்க்க எந்த ஒரு சாதாரண இளைஞரையும் போலவே இருக்கிறார். இவரிடம் குறளின் எண்ணை அல்லது முதல் சீரைச் சொல்லுங்கள், குறளை உடனடியாகச் சொல்கிறார். எழுத்து, எண், ஆண்டு, மாயச்சதுரம், வண்ணம், தொடுகை, ஒலி, நூல், பெயர் என்று பலவற்றை நினைவில் நிறுத்திக்கொண்டு பின்னர் அதே வரிசையில் கூறியும் உங்களை அசத்துவார். கி.பி. 1 தொடங்கி 10000 ஆண்டுவரை எந்தவொரு நாளின் மாதம், தேதி சொன்னாலும் அதன் கிழமையைச் சொல்லித் திகைக்க வைப்பார். அவர்தான் காரைக்குடியைச் சேர்ந்த திலீபன். இவர் ஒரு பதினாறு கவனகர் (ஷோடசாவதானி). இவரது கவனகம் வள்ளுவத்தை மையமாகக் கொண்டிருப்பதால் இவரை, மிகப்பொருத்தமாகவே, திருக்குறள் திலீபன் என்று அழைக்கிறார்கள். 
 திலீபன் பிறந்தது திருவாடானை அருகே உள்ள ஒரு கிராமத்தில். காரைக்குடியில் ஸ்ரீமீனாட்சி சுந்தரேஸ்வரர் வித்யாசாலையில் படிக்கையில் தமிழாசிரியர் ரவிச்சந்திரன் மூலம் குறளில் ஆர்வம் ஏற்பட்டது. மூன்றாம் வகுப்பில் குறள் பயில ஆரம்பித்து, ஐந்தாம் வகுப்பு படிக்கும்போது 1330 குறள்களையும் எப்படிக் கேட்டாலும் ஒப்பிக்கும் ஆற்றல் பெற்றுவிட்டார். நினைவாற்றல் பயிற்சியை முறையாகப் பெற்று, பதினான்காம் வயதில் பதின்கவனகர் (தசாவதானி) ஆனார்.
 
 திருக்குறள் கழகம், காரைக்குடி தமிழ்ச் சங்கம், அழகப்பா பல்கலைக்கழகம், உரத்த சிந்தனை, பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் தனது திறமையைக் காட்டிப் பாராட்டும் பரிசுகளும் பெற்றார். 1330 குறட்பாக்களையும் முற்றோதல் செய்தமைக்காகத் தமிழக அரசின் குறள் பரிசு 10,000 ரூபாய் கிடைத்தது.'திருக்குறளரசன்', 'குறள் மணி' போன்ற பட்டங்களும் கிடைத்தன. பலரும் குறளில் ஈடுபாடு கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் 'குறள்மணிகள் திருக்குறள் பயிற்சிப்பள்ளி' தொடங்கி இளையோருக்குக் குறள் கற்றுத்தருகிறார். பல தொலைக்காட்சிகளிலும் இவரது கவனக நிகழ்ச்சிகள், நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளன. அத்தோடு பேச்சு, எழுத்து ஆகியவற்றிலும் ஆர்வம் கொண்டிருக்கிறார். சுட்டி விகடன் இவரை 'இளம் ஸ்டார்' என்று அடையாளப்படுத்தியது. அந்த இதழில் நிறையக் கட்டுரைகள், துணுக்குகள் எழுதியிருக்கிறார். கி.பி 1 முதல் 10000 ஆண்டு வரைக்குமான நாள்காட்டியையும் தன் சகோதரர் சரவணனுடன் இணைந்து தயாரித்திருக்கிறார்.
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| "திருக்குறள் கனகசுப்புரத்தினம் அவர்களே எனது மானசீக குரு, வழிகாட்டி. அவரை மூன்று முறை சந்தித்து ஆசி பெற்றிருக்கிறேன்" என்று கூறும் திலீபன், "நான் இந்தக் கலையைக் கற்க வழிகாட்டி, சில கவனகங்களையும் கற்றுக்கொடுத்த ஆசான் செங்கல்பட்டு கவனகர் எல்லப்பன் அவர்களை மறக்க முடியாது" என்கிறார். திலீபனின் சாதனையை முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் உட்படப் பல பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். 
 சென்னை லயோலா கல்லூரியில் இளங்கலை தமிழ் பயின்று வருகிறார் திலீபன். ஓய்வு நேரத்தில் சென்னையில் கவனக நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இதுவரை எண்பதிற்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தியிருக்கிறார். திருக்குறளைப் பரப்புவது, கவனகக் கலையை உலகறியச் செய்வது, இந்தியஆட்சிப் பணித் தேர்வில் (ஐ.ஏ.எஸ்.) வெற்றி பெற்று மக்கள் பணி ஆற்றுவது இவையே தனது லட்சியம் என்கிறார். தந்தை ம. தங்கசாமி அரசுப் போக்குவரத்தில் நடத்துனர். தாய் சுமதி ஓர் இல்லத்தரசி. உடன் பிறந்தவர்கள் இரு சகோதரிகள், ஒரு சகோதரன். இவரது வலைமனை: thirukkuraldhileeban.in
 
 அரவிந்த்
 | 
											
												|  | 
											
	|  | 
											
												| More 
 பிரணவ் கல்யாண்
 
 | 
											
	|  | 
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |