Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப்பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி | பொது
Tamil Unicode / English Search
சிறப்புப் பார்வை
டாக்டர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன்
- அரவிந்த்|அக்டோபர் 2026|
Share:
நாட்டுப்புறப் பாடல்களை, கலை வடிவமாக மக்களிடம் கொண்டு செல்வதில், கணவர் டாக்டர் எம். நவநீதகிருஷ்ணனுடன் இணைந்து முக்கியப் பங்காற்றியவர் டாக்டர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன். நாட்டுப்புறப் பாடகர், நாட்டுப்புறப் பாடல் தொகுப்பாளர், நாட்டுப்புறப் பாடல் ஆய்வாளர் எனப் பல திறக்குகளில் செயலாற்றி வருபவர் இவர். மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நாட்டுப்புறக் கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் பேராசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழக அரசின் கலைமாமணி, இந்திய அரசின் பத்மஸ்ரீ ஆகியவற்றைப் பெற்றுள்ளார். அவரது வாழ்க்கைப் பக்கங்களை அறிந்துகொள்வோமா?

விஜயலக்ஷ்மி, ஜனவரி 27, 1946 அன்று விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையத்தில் உள்ள சின்னசுரைக்காய்ப்பட்டியில், பொன்னுச்சாமி - மூக்கம்மாள் இணையருக்குப் பிறந்தார். மதுரையில் பள்ளி மற்றும் கல்லூரிக் கல்வி கற்றார். மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில், 'ஆழ்வார் பாடல்களில் நாயக நாயகி பாவனை' என்னும் தலைப்பில் ஆய்வுசெய்து முனைவர் பட்டம் பெற்றார். நாட்டுப்புறக் கலைத் துறையில் தனது புலமைப் பணிக்காக முனைவர் பட்டம் பெற்ற தமிழ்நாட்டின் முதல் நாட்டுப்புறக் கலைஞர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் தான். கல்விக்குப் பின் மதுரை மீனாட்சி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றினார். தொடர்ந்து மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அங்கு நாட்டுப்புறக் கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் பேராசிரியராக 25 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றி ஓய்வுபெற்றார். கணவர் டாக்டர் எம். நவநீதகிருஷ்ணன், அதே மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் நாட்டுப்புறக் கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். இருவரும் நாட்டுப்புறவியல் ஆய்வுகளை மேற்கொண்டே முனைவர் பட்டங்களைப் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



இருவரது வாழ்க்கையும் நாட்டுப்புறக் கலையால் ஒருங்கிணைந்தது. இருவரும் இணைந்தே பல நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்தினர். விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் ஆழ்வார்கள் மீதும், ஆண்டாள் மீதும் மிகுந்த பற்றுக் கொண்டவராக இருந்தார். குறிப்பாக ஆண்டாளைத் தனது மானசீக குருவாகக் கொண்டு இயங்கினார். ஆண்டாள் தன் கனவில் வந்து கூறியதற்கேற்ப நாட்டுப்புறவியல் சார்ந்ததாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். நாட்டுப்புறப் பாடல்களைப் பற்றி ஆராய்வதும், சேகரிப்பதும், தொகுப்பதும், பதிவு செய்வதும், ஒலிப்பேழைகளாக வெளியிடுவதும் முக்கியப் பணிகளாகின. கணவர் நவநீதகிருஷ்ணன் அதற்கு உறுதுணையாக இருந்தார். இருவரும் இணைந்தே அனைத்துப் பணிகளையும் மேற்கொண்டனர்.

விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன், கிராமியக் கலைகளை முறையாக ஆவணப்படுத்த வேண்டுமென்ற எண்ணத்துடன் கணவருடன் இணைந்து பல்வேறு கிராமங்களுக்குப் பயணப்பட்டார். பலரைச் சந்தித்தும், நேர்காணல் செய்தும் கிராமப்புறங்களில் வாய்மொழியாக மட்டுமே இருந்த பல பாடல்களைச் சேகரித்தார். அந்தப் பாடல்களுடன், கணவருடனும் தன் மாணவிகளுடனும் இணைந்து தமிழ் நாட்டுப்புறப் பாடல்கள் பற்றிய பல்வேறு இசைத்தொகுப்புகளைத் தேடித் தொகுத்துப் பதிவு செய்து வெளியிட்டார்.



நாட்டுப்புற இசைப் பாடல்கள், நாட்டுப்புறக் கலைகள், கூத்துகள், நாடகவியல் போன்ற கலைகளை மாணவர்களுக்குப் பயிற்றுவித்தார். பல இளங்கலைஞர்களை உருவாக்கினார். தன் மாணவர்களைக் கொண்டு பல நாட்டுப்புற ஆடல், பாடல் நிகழ்ச்சிகளை இந்தியாவின் பல மாநிலங்களிலும், வெளிநாடுகளிலும் நடத்திப் புகழ்பெற்றார். தமிழ்நாட்டின் ஆலயத் திருவிழாக்கள் பலவற்றில் நாட்டுப்புறப் பாடல், ஆடல், கிராமியக் கலை நிகழ்ச்சிகளை நடத்தினார். தமிழ் நாட்டில் மட்டுமின்றி, அமெரிக்கா உட்பட உலகின் பல நாடுகளிலும் இவர் நிகழ்ச்சிகளை வழங்கி மகிழ்வித்திருக்கிறார். ராமாயணத்தின் கிராமியக் கலை சார்ந்த பல்வேறு வடிவங்களைத் தொகுத்து ஒரே வடிவில், 'கிராமிய ராமாயணம்' என்ற தலைப்பில் மேடையேற்றினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் 'சூழ்நிலை பாரதம்' என்ற தெருக்கூத்தை நடத்தினார். நீர்ச் சிக்கனத்தை வலியுறுத்தி 'பச்சைக்கோயில்' என்ற தலைப்பில் ஒலிநாடா ஒன்றை வெளியிட்டார்.

பணிஓய்வு பெற்ற பின்னரும், தமிழ் நாட்டுப்புறக் கலையைப் புத்துயிர் பெறச் செய்யும் தனது முயற்சிகளைக் கணவருடன் இணைந்து தொடர்ந்தார், விஜயலக்ஷ்மி. நாட்டுப்புறக் கலை பற்றிய கலைக்களஞ்சியத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். சென்னைத் தொலைக்காட்சியிலும் அகில இந்திய வானொலியிலும் நாட்டுப்புறக் கலை தொடர்பான பல நிகழ்ச்சிகளை நடத்திப் புகழ்பெற்றார். இவர் சேகரித்த நாட்டுப்புறப் பாடல்கள் பல திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டன. 'புதுப்புது ராகங்கள்' என்ற திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார். அப்படத்தில் இவர் பாடிய நாட்டுப்புறப் பாடல்கள் மிகவும் பிரபலமாகின.



விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் இலக்கியத்திலும் ஆர்வமுடையவர். நா. பார்த்தசாரதி, இவருக்குப் பிடித்த எழுத்தாளர்களுள் ஒருவர். தொடக்க காலத்தில் இதழ்களில் சிறுகதைகள் சிலவற்றை எழுதினார். நாட்டுப்புறம் சார்ந்த பாடல்களை எழுதினார். கவிதை, நாடகம், சிறுகதைத் தொகுப்பு என 15-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலை குறித்து இருபதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். நாட்டுப்புறப் பாடல்கள், கிராமியக் கலைகள் சார்ந்து கணவர் எம். நவநீதகிருஷ்ணனுடன் இணைந்து நூற்றுக்கணக்கான ஒலிநாடாக்களை வெளியிட்டுள்ளார்.

ஆண்டாள் குறித்து கவிஞர் வைரமுத்து பேசிய கருத்துள் சர்ச்சைக்கு உள்ளானபோது, அவரது கருத்துகளை எதிர்த்து விஜயலக்ஷ்மியும், நவநீதகிருஷ்ணனும் எதிர்க்கருத்து தெரிவித்ததுடன், ஒருநாள் உண்ணாவிரதமும் இருந்தனர். 'ஆண்டாளைப் பழித்த நாவுக்குப் பேசமுடியாமல் போகும்' என்று விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன், வைரமுத்துவுக்குக் கடும் சாபமிட்டு கண்ணீருடன் தன் கண்டனங்களைத் தெரிவித்தார்.



நாட்டுப்புறப் பாடல்கள் மீது பலரது கவனம் குவியக் காரணமாக இருந்தவர் விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன். அவற்றை ஒலிநாடாவில் பதிவு செய்து அவற்றுக்கு மிகப்பெரிய வணிகச் சந்தையை உருவாக்கினார்.

தமிழ் நாட்டுப்புறப் பாடல்களின் களத்தை மாற்றியமைத்த முன்னோடிகளுள் ஒருவர். நாட்டுப்புறவியல் சார்ந்து பல முக்கியமான பங்களிப்புகளைத் தந்த ஆளுமைகளில் ஒருவராக விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் மதிப்பிடத்தக்கவர்.
விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணனின் புகழ்பெற்ற நாட்டுப்புறப் பாடல்களில் சில:

ஒண்ணாம் படி எடுத்து....


தோட்டுக்கடை ஓரத்திலே…


எங்க கருப்பசாமி...


எத்தனை இருக்கு சாமி...


ஓராங் கரகம்


ஆசக்கொல்லை


அன்னீனி தன்னானே...


கத்திரிக்காய் கூடைக்காரி...


அந்தப்பட்டீ இந்தப்பட்டீ


ஒரு மஞ்சள்....


விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடல்கள் தொகுப்பு - 1 youtube.com

விஜயலக்ஷ்மி நவநீதகிருஷ்ணன் பாடல்கள் தொகுப்பு - 2


அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline