|
எழுத்தாளர் ராம் தங்கம் |
   |
- தென்றல் | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
 |
தமிழின் தனித்துவமிக்க எழுத்தாளர்களில் ஒருவர் ராம் தங்கம். மாறுபட்ட பல்வேறு களங்களை மையமாக வைத்துத் தனது படைப்புகளை முன்வைப்பவர். பல்வேறு தரப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையைக் கூறும் படைப்புகள் ஒருபுறம்; காடுகள், மலைகள், மிருகங்கள் ஒருபுறம் என்று வாசித்தபின் யோசிக்க வைக்கும் பல படைப்புகளைத் தந்து கொண்டிருப்பவர். 2023ம் ஆண்டின் சாகித்ய அகாதமி 'யுவ புரஸ்கார்' விருது பெற்றவர். அவரது எழுத்துப் பயணம் பற்றி அறிந்துகொள்வோமா?
ராம் தங்கத்தின் இயற்பெயர் த. ராமு. இவர் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், பிப்ரவரி 28, 1988ஆம் நாள் பிறந்தார். சமாதானபுரம் அரசு தொடக்கப் பள்ளியிலும், அகஸ்தீஸ்வரம் அரசு மேல்நிலைப் பள்ளியிலும் கற்றார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் மூலம் இளங்கலை வரலாறு பட்டமும், டிப்ளமோ இன் மீடியா ஆர்ட் பட்டமும் பெற்றார். தொடர் வாசிப்பின் காரணமாக இலக்கிய ஆர்வம் பெற்றார். தற்போது முழுநேர எழுத்தாளர்.
ராம் தங்கத்தின் முதல் நூல் 'காந்திராமன்' 2015-ல் வெளிவந்தது. அந்தப் புத்தகத்திற்குச் சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான 'தெற்கு எழுத்தாளர் இயக்க விருது' கிடைத்தது. அந்தப் புத்தகத்தின் மூலம் கிடைத்த பத்திரிகையாளர் ப. திருமாவேலனின் அறிமுகத்தால் விகடனில் நிருபராகச் சேர்ந்தார். அங்கு பணியாற்றியபோது த. ராம் என்கிற பெயரில் எழுதினார். சிறுகதைகளை 'ராம் தங்கம்' என்ற பெயரில் எழுதத் தொடங்கினார்.

2015ல் 'ஊர்சுற்றிப் பறவை' நூல் வெளியானது. காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன் நாகர்கோவிலில் இந்நூலை வெளியிட்டார். இந்நூல் கன்னியாகுமரி மாவட்டத்தின் வரலாறு, கலாசாரம், பண்பாடு, அவ்வூரில் வாழ்ந்த தியாகிகள், எழுத்தாளர்கள் பற்றிய அரிய ஆவணத் தொகுப்பாகும். 2016ல் 'மீனவ வீரனுக்கு ஒரு கோவில்' என்ற நூல் வெளிவந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தின் நாட்டார் வழக்காறு தெய்வங்களைப் பற்றிய ஆய்வுநூல் இது. இவ்விரு நூல்களுக்கும் வரலாற்று ஆய்வாளர் அ.கா. பெருமாள் அணிந்துரை அளித்து ஊக்குவித்தார். ராம் தங்கத்தின் எழுத்துப் பயணம் தீவிரமானது. பல களங்களில் பயணப்பட்டார்.
சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர்கள் நாஞ்சில் நாடன் மற்றும் மொழிபெயர்ப்பாளர் கே.வி. ஜெயஸ்ரீ ஆகியோர் ஊக்குவிக்க ராம் தங்கம் கதைகள் எழுதத் தொடங்கினார். 2017 டிசம்பர் மாதம் ஆனந்தவிகடனில் ராம் தங்கத்தின் 'திருக்கார்த்தியல்' என்ற முதல் சிறுகதை வெளியானது. அது பரவலான வாசக கவனம் பெற்றது. சிறுகதைக்குக் கோலம் அறக்கட்டளையின் 'அசோகமித்திரன்' விருது கிடைத்தது. தொடர்ந்து 2018 டிசம்பரில் 'திருக்கார்த்தியல்' சிறுகதைத் தொகுப்பு வம்சி புக்ஸ் வெளியீடாக வந்தது அத்தொகுப்புக்கு 2019ம் ஆண்டுக்கான 'சுஜாதா விருது' கிடைத்தது. அதற்கு 'வடசென்னை தமிழ் இலக்கிய விருது', 'சௌமா இலக்கிய விருது', 'படைப்பு இலக்கிய விருது', 'அன்றில் இலக்கிய விருது' எனப் பல்வேறு கௌரவங்கள் கிடைத்தன. தமிழ் இலக்கிய உலகில் 'ராம் தங்கம்' பரவலாக அறியப்பட அத்தொகுப்பு காரணமானது.
இலக்கியப் பணிகளோடு பல்வேறு சமூகம் சார்ந்த பணிகளையும் ராம் தங்கம் மேற்கொண்டார். நண்பர்களுடன் இணைந்து 'திரிவேணி இலக்கியச் சங்கமம்' என்கிற அமைப்பை 2016-17 காலக்கட்டத்தில் நடத்தினார். அதன்மூலம் நாகர்கோயிலில் புத்தகக் கண்காட்சிகளையும், எழுத்தாளர்களின் படைப்புலகம் குறித்து கருத்தரங்குகளையும் ஒருங்கிணைத்தார். நாகர்கோவிலில் தமிழின் மூத்த எழுத்தாளரான பொன்னீலன் அவர்களுக்குப் பொன்னீலன்-80 விழாவைத் தமிழ் இலக்கிய ஆளுமைகள், வாசகர்கள் என அனைவரையும் அழைத்துப் பெருவிழாவாகக் கொண்டாடினார். விழாவில் 'பொன்னீலன்-80' என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டார்.

2020ம் ஆண்டு சிங்கப்பூர் 'மாயா இலக்கிய வட்டம்' நடத்திய குறுநாவல் போட்டியில் ராம் தங்கம் எழுதிய 'ராஜவனம்' குறுநாவல் முதல்பரிசு பெற்றது. விருதுக்கு அந்நூலைத் தேர்ந்தெடுத்தவர் சாரு நிவேதிதா. வம்சி புக்ஸ் வெளியீடாக வந்த அந்நூலுக்குப் படைப்பு இலக்கிய விருதும், விஜயா வாசகர் வட்டம் வழங்கிய கவிஞர் மீரா விருதும் கிடைத்தன. ராம் தங்கத்தின் 'ராஜ வனம்' மலையாளத்தில் ஷைலஜா ரவீந்திரனால் மொழிபெயர்க்கப்பட்டது. ராம் தங்கத்தின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'புலிக்குத்தி'யையும் வம்சி புக்ஸ் வெளியிட்டது.
தனது கேரளப் பயண அனுபவங்களை மையமாக வைத்து 'கடவுளின் தேசத்தில்' என்ற தலைப்பில் நூல் ஒன்றை எழுதினார் ராம் தங்கம். அதற்கு படைப்பு இலக்கியக் குழுமத்தின் 2023ம் ஆண்டிற்கான சிறந்த கட்டுரை நூலுக்கான விருது கிடைத்தது. இந்நூல் இரண்டு பாகங்களாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. 'சூரியனை எட்ட ஏழு படிகள்', 'காட்டிலே ஆனந்தம்', 'ஒரு சுண்டெலியின் கதை' ஆகிய சிறுவர் கதைகளை, நேஷனல் புக் ட்ரஸ்ட்டுக்காக ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு ராம் தங்கம் மொழி பெயர்த்துள்ளார். ராம் தங்கம் எழுதிய குமரிமாவட்டம் சார்ந்த வரலாற்றுக் கட்டுரைகள் 'சிதறால்' என்ற பெயரில் நூலாக வெளிவந்துள்ளது. குமரி மாவட்டத்தின் அதிகம் அறியப்படாத, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோயில்களை, அவற்றின் வரலாறுகளை குறித்து இந்நூல் பேசுகிறது.
ராம் தங்கம், சாகித்ய அகாடமியின் யுவ புரஸ்கார் விருதினைப் பெறக் கொல்கத்தாவிற்குச் சென்று, அங்கிருந்து அருணாசலப் பிரதேசத்திற்குப் பயணித்த தனது அனுபவங்களை 'சூரியன் உதிக்கும் நிலத்தில்' என்ற தலைப்பில் நூலாக எழுதினார். இந்நூலை வானவில் புத்தகாலயம் வெளியிட்டது.
விருதுகள் சிறந்த வரலாற்றுப் புத்தகத்திற்கான 'தெற்கு எழுத்தாளர் இயக்க விருது' - (காந்திராமன் நூலுக்காக) கோலம் அறக்கட்டளையின் 'அசோகமித்திரன்' விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைக்காக) சுஜாதா விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) அசோகமித்திரன் விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) படைப்பு இலக்கிய விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) வடசென்னை தமிழ்ச்சங்கம் இலக்கிய விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) சௌமா இலக்கிய விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) அன்றில் வளர் தமிழ் சிறுகதையாளர் விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) 2023ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமியின் யுவபுரஸ்கார் விருது - (திருக்கார்த்தியல் சிறுகதைத் தொகுப்புக்காக) சிங்கப்பூர் மாயா இலக்கிய வட்டக் குறுநாவல் போட்டியில் முதல் பரிசு - (ராஜவனம் குறுநாவலுக்காக) படைப்பு இலக்கிய விருது - (ராஜவனம் குறுநாவலுக்காக) விஜயா வாசகர் வட்டம் வழங்கும் கவிஞர் மீரா விருது - (ராஜவனம் குறுநாவலுக்காக) வாரணம் நாவல், படைப்பு குழுமத்தின் 2024ம் ஆண்டின் சிறந்த நாவலுக்கான விருது பெற்றது. ராம் தங்கத்திற்கு, நாமக்கல் பாவை கல்வி நிறுவனங்கள் அளித்த 'தமிழ் இலக்கியச் செம்மல்' விருது – 2024.
நூல்கள் நாவல்: ராஜவனம் (குறுநாவல்), வாரணம். சிறுகதைத் தொகுப்புகள்: திருக்கார்த்தியல், புலிக்குத்தி. கட்டுரைத்தொகுப்புகள்: சிதறால், பொன்னீலன் 80, சூரியன் உதிக்கும் நிலத்தில், கதகளி. வரலாற்று நூல்கள்: காந்திராமன், ஊர்சுற்றிப் பறவை, மீனவ வீரனுக்கு ஒரு கோவில். பயண நூல்கள்: கடவுளின் தேசத்தில் – இரண்டு பாகங்கள் மொழி பெயர்ப்பு நூல்கள்: சூரியனை எட்ட ஏழு படிகள், காட்டிலே ஆனந்தம், ஒரு சுண்டெலியின் கதை
தகவல் உதவி: ராம் தங்கம் இணையதளம் ramthangam.com
ராம் தங்கத்தின் 'வாரணம்' நாவல் குறிப்பிடத்தக்கது. ராஜ வனம் குறுநாவலின் தொடர்ச்சியாக இந்நாவல் உருவானது. இந்நாவலில், கன்னியாகுமரி நிலப்பரப்பில் மக்களுடைய வாழ்வியல் சார்ந்து நிகழ்ந்த மாற்றங்களையும், வனத்தையும் மையப்படுத்தி எழுதியிருக்கிறார், ராம் தங்கம்.
2024ம் ஆண்டு ராம் தங்கத்தின் கேரளப் பயண அனுபவங்களும், மலையாளத்தில் வெளிவந்த இரண்டு நேர்காணல்களும் 'கதகளி' என்ற தலைப்பில் நூலாக வெளிவந்தது. வானவில் புத்தகாலயம் இதனை வெளியிட்டது.
சாகித்ய அகாடமி வெளியீடாக எழுத்தாளர் பாரதிபாலன் தொகுத்த தமிழ்ச் சிறுகதைகள் 2000-2020 தொகுப்புக்கு 'திருக்கார்த்தியல்' தொகுப்பில் உள்ள 'கடந்து போகும்' என்ற சிறுகதை தேர்ந்தெடுக்கப்பட்டது. அச்சிறுகதை மொழிபெயர்ப்பாளர் ரகுராம் மஞ்சேரியால் 'கடந்நு போகும்' என்கிற தலைப்பில் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 'தேசாபிமானி' வார இதழில் 2023 ஜூன் மாதம் வெளியானது. 'மாத்யமம்' மலையாள வார இதழில் 'திருக்கார்த்தியல்' சிறுகதை, ஷாபி செறுமாவிளையால் மொழிபெயர்க்கப்பட்டு 'திருக்கார்த்திகா' என்கிற தலைப்பில் வெளிவந்தது.
ராம் தங்கத்தின் திருக்கார்த்தியல் தொகுப்பில் உள்ள 'வெளிச்சம்' என்ற சிறுகதை நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கப்பட்டது. இவரது நூல்களை மையமாக வைத்துப் பல கல்லூரி மாணவர்கள் முனைவர் பட்ட ஆய்வு மேற்கொண்டுள்ளனர். |
|
தென்றல் |
|
|
|
|
|
|
|