|  | 
											
											
												| 
                                                        
	                                                        | கத்தி கூர்மையால் விழும் தலைகள் |    |  
	                                                        | - வாஞ்சிநாதன் ![]() | ![]() பிப்ரவரி 2004 ![]() | ![]() |  |  
	                                                        |  |  | 
                                            
											
											
												| இரத்தம் சிந்தாமல் புத்திக் கூர்மை யுடன் குறுக்கெழுத்துப் புதிர் களுக்குத் தீர்வுகாணச் சில தந்திரங்களை ஜனவரி, 2004 தென்றலில் விவரித்திருந்தேன். அக்கட்டுரையைப் படித்து விட்டு, இலக்கியத்தை விவாதிக்கும் இணையக்குழுவான ராயர் காபி கிளப்பை நடத்தும் (RaayarKaapiKlub என்ற yahoo groups) எழுத்தாளர் இரா.முருகன் ஒரு நகைச்சுவைத் துணுக்கை வெளியிட்டார். ஒரு புதிர் ஆர்வலர் மனைவி இரவில் கணவனை எழுப்பி, "தோட்டத்தில் ஏதேதோ சத்தம், அது என்ன?" என்று கேட்டாராம். அதற்குப் புதிர் ஆர்வலர் மனைவியிடம் சொன்னது: "அதற்கு எத்தனை எழுத்து?" 
 எனவே, நம்முடைய முன்னோர்கள் "எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்று கூறியதற்கு வேறுவிதமான பொருள் உங்களுக்குத் தென்பட்டால் நீங்கள் தேறிவிட்டீர்களென்று கொள்ளலாம்!
 
 சரி. இன்னும் சில உத்திகளை இப்பொழுது காண்போம்.
 
 விலாவாரி விவரணை வகை:
 
 இவ்வகையில் விடையைப் பல பாகங்களாகப் பிரித்து ஒவ்வொரு அங்கமும் விவரிக்கப் பட்டிருக்கும். இது கொஞ்சம் சிரமமானதுதான். ஏனெனில் எதுவரை ஒரு பாகத்தைக் குறுக்கும் என்பது தெரியாமற் போவதால்.
 
 உதாரணம்:
 
 பட்டணத்துக்காரன் ஒரு கனி அசையப் படி (6)
 விடை: மாநகரவாசி (மா+நகர+வாசி)
 மா = மாங்கனி; நகர= அசைய;
 வாசி = படி
 
 இதில் தொல்லை என்னவென்றால் 'படி' மாடிப்படியா, அல்லது அரிசியை அளக்கும் படியா என்றெல்லாம் நாம் அல்லாடிக் கொண்டிருப்போம்.
 
 மற்றோர் உதாரணம்:
 
 ஒளி குன்ற, பாளம் சிதற, கடைசிச் சீட்டு கச்சேரியில் விடைபெறு (5,2)
 விடை: மங்களம் பாடு (இசைக் கச்சேரி களில் விடைபெறும் விதமாகக் கடைசியாகப் பாடுவது மங்களம்)
 
 மங்க = ஒளிகுன்ற; ளம்பா = பாளம் (சிதறிய வடிவில்); டு = சீட்டு என்பதன் கடைசி எழுத்து.
 சில குறிப்புகள் பழமொழியை அடிப்படை யாகக் கொண்டவை:
 
 திறமையான வேலைக்காரன் கொண்டு வராத தானியம் (2)
 
 விடை: எள் (எள்ளென்றால் எண்ணெ யுடன் வந்து நிற்பான் என்று திறமையான ஆட்களைக் குறிப்பிடுவர்)
 
 காட்டில் இட நெருக்கடி தோன்றும்படி மிரள்பவர் (2)
 
 விடை: சாது (மிரண்டால் காடு கொள்ளாது)
 
 பொதுவான உதாரணங்கள்:
 
 புத்தர் தலை வைத்த விகாரம் இந்துக் கோவிலுக்குயர்வு (4)
 
 விடை: கோபுரம்;
 
 புத்தர் தலை = பு; விகாரம் = கோரம்; எனவே "பு" வைக்கப்பட்ட "கோரம்"
 
 கோபுரம் கோவிலின் உயரத்தைக் காட்டும்.
 
 ஒரு செய்யுள் இலக்கியம் மாலையில் தா(4)
 
 விடை: அந்தாதி (இலக்கியவகை)
 
 மாலை = அந்தி; இதிலே தா சேர்க்க அந்தாதி.
 | 
											
												|  | 
											
											
												| கத்தி கூர்மையால் விழும் தலைகள் (2) 
 விடை: கூவி;
 
 கத்து = கூவு; கத்தி = கூவி;
 
 'கூர்மையால்', 'விழும்' என்ற சொற்களின் தலைகள், அதாவது முதலெழுத்துகள் அடுத்தடுத்து வந்து 'கூவி' என்ற விடையைத் தரும்.
 
 இருட்டத் தொடங்கியவுடன் புயல் சுழலும் சுபாவம் (4)
 
 விடை: இயல்பு (சுபாவம்);
 
 'இருட்ட' என்பதன் தொடக்கம் 'இ'; 'புயல்' சுழல 'யல்பு' ஆகும்; இ+யல்பு = இயல்பு.
 கவிஞர் கவிதையுடன் கூடவே அழகி யையும் தருவார் (3)
 
 விடை: பாரதி (பா = கவிதை; ரதி = அழகி)
 
 இரு சுரங்களுக்குள் ராக அமைப்பா? ஏற்றுக் கொள்ளாதே (4)
 
 விடை: நிராகரி (ஏற்றுக்கொள்ளாதே)
 
 சரிகமபதநியில் வரும் நி, ரி என்ற இரண்டு சுரங்களுக்குள் "ராக" என்ற சொல் அமைக்கப் பட்டுள்ளது.
 
 என்ன இப்போது நீங்கள் முழுப்புதிரையும் தீர்ப்பதற்குத் தயாரா?
 
 உலகப்போர் சமயத்தில் இத்தகைய உத்திகளால் சங்கேதச் செய்திகளை அனுப்ப வல்லுநர் குழு அமைத்திருந்தனர் என்று சென்ற இதழில் சொன்னேன். அவர்களை cryptologist என்று சொல்வார்கள். அதுபற்றி வரும் இதழ்களில் பேசுவோம்.
 
 வாஞ்சிநாதன்
 | 
											
												|  | 
											
											
												|  | 
											
											
												|  | 
                                            
												|  | 
                                            
											
											
                                            
												|  | 
											
												|  | 
											
												|  |