Thendral Audio Advertise About us
New User? | Forgot Password? | Email: Password: Login
Current Issue | Previous Issues | Author Index | Category Index | Organization Index | E-Magazine | Classifieds | Digital Downloads
By Category:
சின்னக்கதை | சமயம் | சினிமா சினிமா | இளந்தென்றல் | கதிரவனை கேளுங்கள் | ஹரிமொழி | நிகழ்வுகள் | மேலோர் வாழ்வில் | மேலும்
Current Issue
தென்றல் பேசுகிறது | சிறப்புப் பார்வை | சிறுகதை | கதிரவனைக் கேளுங்கள் | அலமாரி | சின்ன கதை | மேலோர் வாழ்வில்
எழுத்தாளர் | Events Calendar | நிகழ்வுகள் | முன்னோடி
சிறுகதை
Tamil Unicode / English Search
எழுத்தாளர்
பால்யூ
- அரவிந்த்|ஆகஸ்டு 2026|
Share:
என்.பி., ஜடாதரன், துருவன், மங்களம் ஆத்ரேயி எனப் பல புனைபெயர்களில் எழுத்துலகில் இயங்கியவர், என். பாலசுப்ரமணியன். ஆனால், அந்தப் பெயரில் அவரை அதிகம் பேருக்குத் தெரியாது. 'பால்யூ' என்றவுடன் உடனடியாக நினைவு கூர்வார்கள். 'பால்யூ' என்ற புகழ்பெற்ற தனது புனைபெயர் பற்றி அவர், “ஆங்கிலத்தில் Balu வை Bal-u ஆக்கிவிட்டேன். அதுதான் தமிழில் பால்யூ” என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

பால்யூ என்று அழைக்கப்பட்ட என். பாலசுப்ரமணியன், அக்டோபர் 19, 1926ல், திருவாரூரில், நாகநாதன்-சம்பூர்ணம் இணையருக்குப் பிறந்தார். திருவாரூர் ஆரம்பப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். மயிலாடுதுறையில் உயர்நிலைக் கல்வி கற்றார். அப்போது இவருடன் படித்தவர் எம்.எஸ். உதயமூர்த்தி. பள்ளிக் கல்விக்குப் பின் சென்னையில் அஞ்சல் பணித் தணிக்கை அலுவலகத்தில்' (போஸ்டல் ஆடிட்) பணியாற்றினார். பல்வேறு பத்திரிகைகளை வாசித்ததால் இலக்கிய ஆர்வம் சுடர் விட்டது. 'பாலு' என்ற பெயரில் சிறுகதைகள் எழுதத் தொடங்கினார். 'நடக்காத கல்யாணம்' என்ற இவரது முதல் சிறுகதை 1948ல் கல்கியில் வெளியானது. தொடர்ந்து கல்கியிலும், வெள்ளிமணியிலும் கதைகள் வெளியாகின. 'பாலு' என்ற பெயரில் பலர் எழுதிக் கொண்டிருந்ததால் அவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்ட 'பால்யூ' சூட்டிக் கொண்ட புனைபெயர் 'ஜடாதரன்'. 'கா.சி. வேங்கடரமணி' எழுதிய 'ஜடாதரன்' சிறுகதைத் தொடரால் ஈர்க்கப்பட்டு, அப்பெயரையே புனைபெயராகச் சூட்டிக் கொண்டார்.



'ஜடாதரன்' என்ற புனைபெயரில் எழுதிய 'அன்பு மலர்ந்தது' என்ற தலைப்பிலான சிறுகதை கல்கி, ஏப்ரல் 21, 1951 இதழில் வெளியானது. தொடர்ந்து அந்தப் பெயரிலேயே பல சிறுகதைகளை எழுதினார். கல்கியில் உதவி ஆசிரியராகப் பணியாற்றிய விந்தன், ஜடாதரனைத் தொடர்ந்து எழுத ஊக்குவித்தார். எழுத்தாளர் ரஸவாதியும், ஜடாதரனும் நெருங்கிய நண்பர்களாக இருந்தனர்.

'குமுதம்' இதழிலும் ஜடாதரனின் சில சிறுகதைகள் வெளியாகின. குமுதம் உதவி ஆசிரியர் ஜ.ரா. சுந்தரேசன், ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலையிடம் ஜடாதரனை அறிமுகப்படுத்தினார். எஸ்.ஏ.பி.யின் ஊக்குவிக்க, ஜடாதரன் குமுதம் நிருபர் குழுவில் சேர்ந்தார். அதுவரை சிறுகதைகளை மட்டுமே எழுதிக் கொண்டிருந்த 'ஜடாதரன்', 'பால்யூ'வாகப் பரிணாம வளர்ச்சி அடைந்தார். அவருடைய பல்துறைத் திறனும் ஆற்றலும் வெளிப்படக் குமுதம் பல வாசல்களைத் திறந்துவிட்டது.

1965ல் இருந்து 1999 வரை 'குமுதம்' சார்பாக பால்யூ சந்திக்காதவர்களே இல்லை என்னுமளவிற்கு அரசியல்வாதிகள், ஆன்மிகவாதிகள், இலக்கியவாதிகள், சாதாரணர்கள், ராணுவ வீரர்கள், கவிஞர்கள் எனப் பல நூற்றுக்கணக்கானோரைச் சந்தித்து, பேட்டிகளை வெளியிட்டார். தவிர, செய்திக் குறிப்புகள், சுவையான துணுக்குச் செய்திகள், கட்டுரைகள் என்று பல செய்திகளை மனிதன், ராஜ்பால், வம்பானந்தா தொடங்கி பல்வேறு புனைபெயர்களில் எழுதினார். 'பால்யூ பார்த்தது' என்ற தலைப்பில் தான் கண்ட செய்திகளைச் சுவையாகக் காட்சிப்படுத்தினார்.



தனது நிருபர் பணி மூலம் அரசியல், இலக்கியம், பத்திரிகை, சமூக சேவை, சட்டம், நீதித்துறை சார்ந்த பலரை நண்பர்களாகப் பெற்றார். மு. கருணாநிதி தொடங்கிப் பலரும் இதில் அடக்கம். பால்யூ, மாநில முதலமைச்சர்களை மட்டுமல்ல; இந்திய குடியரசுத் தலைவர்களையும் நேர்காணல் செய்துள்ளார். இளம் நிருபர்களையும் எழுத்தாளர்களையும் தொடர்ந்து ஊக்குவித்து வந்தார். 'பாலகுமாரன்' குமுதத்தில் எழுத 'பால்யூ'வே காரணமாக அமைந்தார். ஏவி. மெய்யப்ப செட்டியாரை நேர்காணல் செய்து, அவரது வாழ்க்கை அனுபவங்களை, 'திரையுலக அனுபவங்கள்' என்ற பெயரில் தொடராக எழுதினார். பின்னர் அது நூலாக வெளிவந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. கலைஞரின் 'ரோமாபுரிப் பாண்டியன்' தொடரும், அதனைத் தொடர்ந்து அவரது கேள்வி-பதிலும் குமுதத்தில் வெளியாக பால்யூவே பின்னணியில் இருந்து செயல்பட்டார்.

'இவர்கள் சந்தித்தால்..' என்ற தலைப்பில் குமுதத்தில் வெளியான சந்திப்புக்களின் பின்னணியில் இருந்து உழைத்தவர்களில் பால்யூ முக்கியமானவர். ஆசிரியர் எஸ்.ஏ.பி. மறைவுக்குப் பிறகு பொறுப்பேற்ற சுஜாதா, மாலன் ஆகியோருடனும் நல்ல நட்பில் இருந்தார். ஜெயகாந்தனால் மிகவும் மதிக்கப்பட்டவர் பால்யூ. இவரது சிறுகதைகள் தொகுக்கப்பட்டு, 'பத்திரிகையாளர் பால்யூ சிறுகதைகள்' என்ற தலைப்பில் ஜீயே பப்ளிகேஷன்ஸால் ஜனவரி 2002-ல் வெளியிடப்பட்டது.

பால்யூ என்னும் என்.பாலசுப்ரமணியன் நவம்பர் 22, 2007ல் காலமானார். இவரது மனைவி பெயர் மங்களம். இவர்களுக்கு மூன்று மகன்கள், நான்கு மகள்கள். தமிழின் குறிப்பிடத்தகுந்த பத்திரிகையாளர்களுள் ஒருவர் பால்யூ.
-அரவிந்த்
Share: 




© Copyright 2020 Tamilonline