|
பூர்ணம் சோமசுந்தரம் |
   |
- அரவிந்த் | செப்டம்பர் 2025 |![]() |
|
|
|
 |
பூர்ணம் சோமசுந்தரம் என்னும் பூ. சோமசுந்தரம், எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், இதழாளராகச் செயல்பட்டவர். சுதந்திரப் போராட்ட வீரரும்கூட. 1918-ல் மதுரையில் பூர்ண கிருபேஸ்வர ஐயர் - உமா பார்வதி இணையருக்குப் பிறந்தார். பூர்ணம் ராமச்சந்திரன் என்னும் உமாசந்திரன், பூர்ணம் விஸ்வநாதன், பூர்ணம் பாலகிருஷ்ணன் ஆகியோர் இவரது சகோதரர்கள். சோமசுந்தரம் பாளையங்கோட்டையில் கல்வி கற்றார். ஆங்கிலம், ஹிந்தி, சம்ஸ்கிருத மொழிகளில் தேர்ச்சி பெற்றார்.
தேசிய அரசியலில் ஆர்வம் கொண்டிருந்த பூ. சோமசுந்தரம், இந்திய ராணுவத்தில் சேர்ந்து பணியாற்றினார். இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் சோமசுந்தரத்தின் ராணுவப் பிரிவு சிங்கப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கே ஜப்பானியர்களால் குழுவினருடன் சிறைபிடிக்கப்பட்டார். சில காலத்திற்குப் பின் நண்பர்களுடன் சிறையிலிருந்து தப்பிய சோமசுந்தரம், மாறுவேடத்தில் பினாங்குக்குச் சென்று வாழ்ந்தார். நேதாஜியின் ஐ.என்.ஏ. எனப்படும் இந்திய தேசியப் படையில் இணைந்தார். இயக்கத்தின் சார்பில் பல பணிகளை முன்னெடுத்தார். இந்திய தேசியப்படை (ஐ.என்.ஏ) நடத்தும் ஆசாத் ஹிந்து வானொலியில் ஒலிபரப்பாளராகவும் அறிவிப்பாளராகவும் சில ஆண்டுகள் பணியாற்றினார். பாரத விடுதலைக்குப் பின் இந்தியா திரும்பினார்.

சோமசுந்தரம் டில்லியில் வசித்த காலத்தில் சுதந்திர எழுத்தாளராகச் செயல்பட்டார். தமிழ், ஹிந்தி, ஆங்கில இதழ்கள் சிலவற்றுக்குக் கட்டுரைகள் எழுதினார். 'காவேரி', 'ராமேஸ்வரம்' போன்றவை பற்றி ஹிந்தி இதழ்களில் விரிவான கட்டுரைகளை எழுதினார். திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றை ஹிந்தியில் எழுதி வெளியிட்டார். ஹிந்தியிலிருந்து தமிழுக்கும், தமிழிலிருந்து ஹிந்திக்கும் சில நூல்களை மொழியாக்கம் செய்தார். அவற்றுள் அவர் ஹிந்தியில் மொழிபெயர்த்த ராஜாஜியின் 'வியாசர் விருந்து', கல்கியின் 'கள்வனின் காதலி' போன்றவை குறிப்பிடத்தக்கன.
சோமசுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆதரவாளராகச் செயல்பட்டார். கட்சி சார்பாக ரஷ்யாவுக்கு மொழிபெயர்ப்புக்காக அனுப்பப்பட்டார். ரஷ்ய மொழியில் தேர்ச்சி பெற்றிருந்த சோமசுந்தரம், மாஸ்கோ வானொலியின் தமிழ்ப் பிரிவில் பணியாற்ற அழைக்கப்பட்டார். ரேடியோ மாஸ்கோ தமிழ்ப் பிரிவின் தலைவராகப் பணிபுரிந்தார். தமிழ் நிகழ்ச்சிகள் பலவற்றைத் தொகுத்தளித்தார். ரஷ்ய மாணவர்கள் பலருக்குத் தமிழ் கற்பித்தார். பல தமிழார்வலர்களையும், ஆய்வாளர்களையும் உருவாக்கினார். அலெக்சாண்டர் பியாடிகோர்ஸ்கி உள்ளிட்ட பலருக்கு ஆசிரியராக இருந்து அவர்களுக்கு நல்லவண்ணம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்பித்தார். பியாடிகோர்ஸ்கியை ஒரு தமிழ் அறிஞராக உருவாக்கினார். மாணவர்களுக்குத் தேவாரம், திருவாசகம் பற்றிய அறிமுகங்களை ஏற்படுத்தினார். சங்க இலக்கியம் தொடங்கி பாரதிவரை அவர்களுக்குக் கற்பித்தார். ரஷ்யப் பெண்மணி ஒருவரைக் காதலித்து மணம் செய்துகொண்டார்.

சோவியத் ரஷ்யாவின் அயல்மொழிப் பதிப்பகத் துறை, மார்க்சிய நூல்களோடு, ரஷ்ய நாவல்கள், சிறுகதைகளையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட எண்ணியது. அதற்காக ராதுகா பதிப்பகம், முன்னேற்றப் பதிப்பகம் ஆகியவற்றைத் தொடங்கியது. அப்பதிப்பகங்களின் மொழிபெயர்ப்புப் பிரிவில் சோமசுந்தரம் பணியாற்றினார். ஹிந்தி, சம்ஸ்கிருதம், ரஷ்ய மொழிகளிலிருந்து பல நூல்களை மொழிபெயர்த்தார். ரஷ்ய எழுத்தாளர்கள் பலரைத் தமிழுக்கு அறிமுகம் செய்தார்.
தனது மொழிபெயர்ப்பின் மூலம் ஆன்டன் செகாவ், புஷ்கின், மிகெய்ல் ஷோலகவ், பரீஸ் வஸீலியெவ், சிங்கிஸ் ஐத்மாத்தவ், ரைஸ் வில்லியம்ஸ், பாஸூ அலீயெவா, ஹெர்மன் ஸ்தெபானவிச் தித்தோவ், ஏ. வெல்தீஸ்தவ், எம். பரானவா, பெய்ஷெனாலீயென், மரியா பிரிலெழாயெவா போன்றோரின் நூல்களைத் தமிழுக்குக் கொண்டு வந்தார். ஏற்கனவே அறிமுகமாகியிருந்த மாக்ஸிம் கார்க்கி, டால்ஸ்டாய், தஸ்தாயெவ்ஸ்கி உள்ளிட்டோரின் பல படைப்புகளை மொழிபெயர்த்தார். சிறாருக்கான பல படைப்புகளையும் மொழிபெயர்த்தார். பல நூல்களுக்குப் பதிப்பாசிரியராகச் செயல்பட்டார்.
நூல்கள் ரஷ்ய மொழிபெயர்ப்புகள்: லெனினின் வாழ்க்கை வரலாறு (மூலம்: மரியா பிரிலெழாயெவா); ருஷ்யன் தமிழ் அகராதி (பொறுப்பாசிரியர்); வாழ விருப்பம் முதலிய கதைகள் (மூலம்: வசீலி சீக்ஷின்); மனித இனங்கள் (மூலம்: மிஹயீல் நெஸ்தூர்ஹ்); கம்யூனிஸ்டு அகிலம் சுருக்கமான வரலாறு (மூலம்: பலர்); இவர்தான் லெனின் கட்டுரைகள், கதைகள், குறிப்புகள் (மூலம்: பலர்); ஜமீலா: சோவியத் சிறுகதைகள் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்); முதல் ஆசிரியர் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்); அன்னை வயல் (மூலம்: சிங்கிஸ் ஜத்மாத்தவ்); இந்தியாவின் வரலாறு - இரண்டு பாகங்கள் (மூலம்: கொ.அ. அந்தோனவா, கி.ம. போன்காரத்-லேவின், கி.கி. கத்தோவ்ஸ்கி); தத்துவம்: தொடக்கப் பயிற்சி நூல் (மூலம்: பல ஆசிரியர்கள்); சோவியத் இனமொழிச் சிறுகதைகள் (மூலம்: பல ஆசிரியர்கள்); மதம் மாறியவன் (மூலம்: அந்திரேய் ஊப்பித்) சைபீரியா ஓட்டம் – காத்தியா (மூலம்: கியோர்கி மார்க்கவ்); மண் கட்டியைக் காற்று அடித்துப் போகாது (மூலம்: பாஸூ அலீயெவா); விஞ்ஞானக் கம்யூனிசத்தின் அடிப்படைகள் (வி.கி. அபானிசியெவ்); மிகெய்ல் ஷோலகவ் கதைகள்;
1960-ல், அ. பியாதிகோர்ஸ்கி, செம்யோன் ருதின் ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரத்தைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு தமிழ்-ருஷ்ய அகராதி வெளியிடப்பட்டது. இந்த அகராதியில் ஏறத்தாழ 38,000 சொற்கள் தொகுக்கப்பட்டிருந்தன. 1965-ல், மிஹையில் அந்திரோனவ், அ. இப்ராஹிமோவ், திருமதி நி.யுகனோவா ஆகியோரைத் தொகுப்பாசிரியர்களாகவும் பூர்ணம் சோமசுந்தரத்தைப் பொறுப்பாசிரியராகவும் கொண்டு ருஷ்யன்-தமிழ் அகராதி வெளியிடப்பட்டது. சோவியத் கலைக்களஞ்சியப் பதிப்பகம் இதனை வெளியிட்டது. இதில் ஏறக்குறைய 24,000 சொற்கள் இடம்பெற்றிருந்தன.
ரஷ்ய எழுத்தாளர்கள் பலரைத் தமிழுக்கு அறிமுகப்படுத்தியதோடு, தாமே குறிப்பிடத்தக்க எழுத்தாளராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் அறியப்பட்ட பூர்ணம் சோமசுந்தரம் 1981-ல் காலமானார். |
|
அரவிந்த் |
|
|
|
|
|
|
|